லய போகம்
சொக்க வைக்கும்
குளிருடன்
அழைக்கும்
ஒரு திண்ணையை
இதோ இன்று
கண்டடைந்து விட்டேன்
கிறங்கும் விழிகளை
திண்ணை குளிருக்கு
முழுதுமாய்
ஒப்பு கொடுத்துவிட்டேன்
இனி என்ன?
இதற்கெனவே
இத்தனை காலமாய்
பறித்தெடுத்து
அடிமடியில்
பொத்தி வைத்த
கொழுந்து வெற்றிலைகளை
அள்ளி எடுத்து
காம்பு நுனி
கிள்ளுகிறேன்
ஈரம் போக
தொடையில் துடைத்து
வாசனை வெஞ்சனங்களை
வகையாய் பதம் சேர்த்து
கருப்பட்டியாய் சுருட்டி
கடைவாயில் அதக்குகிறேன்
அடுத்த கணமே
பிரபஞ்சத்தின் சாறு
எட்டு திக்கிலிருந்தும்
ஊறியெழுகிறது
மண் கனக்கும்
இந்த தேகத்தை விட்டு
கொஞ்சம் வெளியேறி
விலகிக் கொண்டு
அலுப்பு தீர
அசை போடுகிறேன்
அசை போடுகிறேன்
அசை போடுகிறேன்

திருவுரு
இன்று
உன் உளியின்
நுனிக்கூருக்கு
கனிந்து கொடுக்க
கோரி நிற்கிறாய்
நீ கடந்து வந்த
ஆயிரம் பாறைகளில்
ஒன்றென
தருக்குகிறாய்
உனக்கும் முன்னமே
நூறாயிரம் வான்துளிகள்
நூறாயிரம் முறை
கொத்தி கொத்தி
என் உரு செதுக்க
துடி துடிப்பதை
அறியவில்லையா
உன் விழிகள்?
உருவிலிருந்து
இன்னுமொரு
உருவை
எப்படி
உருவியெடுப்பாய்?
மூடனே
வான் துளிகள்
தொடுவதற்கு முன்னும்
நான்
திருவுரு
திகழ்ந்துதான்
இருக்கிறேன்

முடிசூடா புன்னகை
ஆம்
நானே இதை
எதிர்பார்க்கவில்லை
உத்தமர்களே
சிறகு விரித்து
பறந்து வந்த
அந்த நாற்பத்து மூன்றாம்
புன்னகை
என் இதழ்களில்
வக்கணையாய்
அமர்ந்த பிறகே
அது
ஒரு இளவரசனின்
இதழ்களில்
அமர வேண்டிய புன்னகை
என்பதை அறியவந்தேன்
இதழ்களின்
முகவரி
எப்படியோ
தடம் மாறிவிட்டது
அதற்கு முன்னமே
வந்தமர்ந்து
முகம் மொய்த்த
நாற்பத்து இரண்டு
புன்னகைகளும்
புது வரவைக் கண்டு
எழவும் இல்லை
தொழவும் இல்லை
ஆத்திரத்தில்
உளம் கொதித்து
பெருங்குரலெடுத்து
குந்தி அழுவதற்கு
தயாராகிறது
அந்த முடிசூடா
நாற்பத்து மூன்றாம்
புன்னகை
ஈரக்கனா
நுரை பூக்கள்
அலைபுரளும்
என் மாய நதிகளை
மனம் கனிந்து
நான்
உங்களுக்கு தருகிறேன்
உள்ளங்கை குழிகளில்
அள்ளிக் கொள்ளுங்கள்
இல்லாத மிடறுகளை
இதழ் குவித்து
பருகுங்கள்
தீர்க்க இயலா
உங்கள் தாகங்களை
இன்னும் கொஞ்சம்
எரி கூட்டிக் கொள்ளுங்கள்
அனல் எரியும்
கடும் புனலில்
முழுநிலவாய்
எழுந்து வருவது
நானே தான்
அருளாசி
தாழிடப்பட்ட
அறைக் கதவுகள்
திடுமென
தட்டப்படும் ஓசை
முழு பிரபஞ்சத்தையும்
அதிரச் செய்கிறது
யுகமுடிவின் நாளை
இசைக்கிறது
மரணத்தின் குரலில்
பேசுகிறது
மீளா பாதையின்
பாறைகளை
உருட்டுகிறது
கொலை களத்திற்கான
அழைப்பை விடுக்கிறது
திறக்காத வரை
ஓசைகள்
ஓய்வதாயில்லை
நடுங்கும் கரங்களால்
தாழ் திறக்கிறேன்
இத்தனை கோடி
பதர்களில்
நீ
நெல்மணியாய்
ஆசிர்வதிக்கப்பட்டாய்
மகனே
என்றொரு குரல்
கனிய கனிய
என் உச்சி தொட்டு
நின்றிருக்கிறது
அங்கே
புதையல்
உள்ளே
அப்படி என்னதான் இருக்கும்?
ஒரு மலைப் பாறையை
மட்டுமல்ல
ஓர் நீர் துளியைக் கூட
திறந்து பார்க்க
ஆவதில்லை நமக்கு
எத்தனை சிதறடித்தாலும்
இன்னும் இன்னும்
சின்னஞ்சிறு துளிகளாகிறதே
அன்றி
வேறொன்றும்
காணக் கிடைப்பதில்லை
எத்தனை தான்
நுணுகி பிளந்தாலும்
ஓர் மயிரிழையும் கூட
இப்படியே
இப்படியே தான்
தொடு உலகின்
ஒவ்வொரு பருவிலும்
தொட்டறியக் கூடாத
இன்னொரு உலகை
புதைத்து வைத்திருக்கிறதா
அந்த தாழ்திறவா
மணிக்கதவம்?
பிட்சாம் தேஹி
திசையானைகள்
தோள் நழுவி
நகர்ந்து கொண்டால் தான்
என்ன?
அந்தரத்தில் ஊறும்
வெறுங்காற்றில்
மிதந்தாடும் பூப்பந்து
என்னுலகு
ஒவ்வொரு
அதிகாலையிலும்
அதிசுத்தமாய்
கழுவி முடிக்கும்
என் கப்பரைக்கு
ஒவ்வொரு
அதிகாலையிலும்
எங்கோ ஓர் உலை
கொதிக்கிறது
உலை துள்ளும்
ஒவ்வொரு
பருக்கையையும்
அமுதாக்குவது
அத்தனை கடினமா என்ன?
கைக்கெட்டும்
உயரத்திலேயே
காற்றெங்கும்
அரும்பசியை
வாரி வாரி
இறைத்து வைத்திருக்கிறானே
எவனோ
ஓர் கருணைகொள் கரத்தவன்
ருசித்தடம்
ஆயிரம் கால்களில்
நடந்து போகும்
அரசனின் காலடிகள்
ஆயிரத்தொரு கால்களில்
கடந்து போகும்
மரவட்டையின் காலடிகள்
நெடுஞ்சாலையில் பதிந்த
அத்தனை அத்தனை
முத்த தடங்களையும்
ஒரு சேரவே
நக்கி விழுங்குகிறது
இன்று புதிதாய்
புரண்டெழுந்த
பெரு வெள்ளம்
அனல் தீரா
மழையின் நாவிற்க்கு
கரைந்துருகும்
காலடித் தடங்கள்
அத்தனையும்
இனிப்பில்
கொஞ்சமும்
கூடுவதுமில்லை
குறைவதுமில்லை
***
வ. அதியமான்
அற்புதமான கவிதைகள். அற்புத வரிகள் ஒவ்வொன்றும். இனிய வாழ்த்துக்கள்.
அன்புடன் கவிதா அவர்களுக்கு. தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி
தீரா அன்புடன்
வ. அதியமான்
தேடி சேர்த்த வரிகளோ அல்லது கொட்டும் மழை துளிகளை தன் எழுத்துக்களால் நூல் கோர்த்து விட்டார்…. எழுத்தாளர் அருமை அருமை அருமை
அன்புடன் மு. தனஞ்செழியன் அவர்களுக்கு
தங்களின் உற்சாகமான வாழ்த்திற்கு மிக்க நன்றி
தீரா அன்புடன்
வ. அதியமான்
இத்தனை கோடி
பதர்களில்
நீ
நெல்மணியாய்
ஆசிர்வதிக்கப்பட்டாய்
மகனே….
அருமையான வரிகள் கவிஞரே…….நெல்லுக்கு கிடைக்கும் மரியாதை அதை பிரிந்த பதருக்கு கிடைப்பது இல்லை….
இந்த வரிகளுக்கு உவமையாக பலவற்றை கூறலாம்.
அருமை, அருமை, அருமை…..
அன்புடன் திருமதி் இராஜேஸ்வரி சத்தீஷ்குமார் அவர்களுக்கு உங்களின் ஊக்கம் பொழியும் வாழ்த்திற்கு மிக்க நன்றி
தீரா அன்புடன்
வ. அதியமான்