எண்ண முடியாத இலைகளின் வெறுமை
பனி குவிந்த
கூரையின் மேல்
புகை எழுப்பி,
எதையோ அரற்றிக்கொண்டு
அவசரமாய்
பறந்து செல்கிறது,
வட துருவத்திலிருந்து
வீசும்
கொடுங்காற்று.
பனி பூத்து
பனி கொழித்து
உப்பளம் போல்
நிறைந்து விட்ட
நடைபாதையை தாண்டி
சாலையின் ஓரத்தில்
தியானித்து நிற்கும்,
பிடுங்கி
தலைகீழாய் நட்டது போல்
இலையின்றி நிற்கும்
பிர்ச் மரம்.
காற்றை வருடி
வானோக்கி நிற்கும்
அதன் விரல்களில்
அசைந்தாடி நிறையும்
நிலவின் ஒளி
மற்றும்
எண்ணமுடியாத இலைகளின்
வெறுமை.

முகமூடித்தொழிற்சாலை
முகமூடித்தொழிற்சாலையின்
முழுநேரப் பணியாளன்
வீட்டுக்குள் வந்ததும்
முதல் வேலையாக
தன் முகமூடியை கழற்றி வைக்கிறான்.
கதவை அறைந்து சாத்தி விட்டு
ஆடையை மாற்றுகிறான்.
ஆயாசம் தீர
தேநீர் தாயாரிக்கிறான்.
மாட்டிய முகமூடியின் கீழ்
சட்டமிட்டு தொங்கும்
வாசகத்தை
வாசித்துக்கொள்கிறான்.
முகமூடிகளின்
கொடிய நினைவுகள் போக
வெண்ணீரில் குளிக்கிறான்.
மறுநாள்
தயாரிக்க வேண்டிய முகமூடிகளை
எண்ணிக்கொள்கிறான்,
ஒவ்வொன்றாக.
அவற்றில் பல
கொடியவை.
முகமூடிகளை எண்ணி
துயரம் கொண்டபடி
உணவு அருந்துகிறான்
துயரம் மறக்க
எதையோ படிக்கிறான்.
படுக்கையை விரித்து
சாய்ந்து கொள்ளும் முன்
எதிர்பாராமல்
மேசைக்கண்ணாடியில்
முகம்பார்த்து
திடுக்கிட்டு திகைக்கிறான் –
இதுவா என் முகம்?
மூகமூடிகள்
தயாரிக்கும் தொழிற்சாலையில்
பணிபுரிவது
மிகவும் ஆபத்தானது.

-வேணுகோபால் தயாநிதி
Very nice!