மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 1

This entry is part 19 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

முந்தைய பகுதிகளில், சிகரெட் தொழிலுடன் விஞ்ஞானம் நடத்திய போராட்டத்தைப் பற்றிப் பார்த்தோம். இதனால் பொதுச் சுகாதாரத் துறைக்கு வந்த மிகப் பெரிய தலைவலி, புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களை, அந்தப் பழக்கத்திலிருந்து மீட்கும் பணி. உலகெங்கும், பல deaddiction மையங்கள் உருவாகிப் புகைபிடிக்கும் சிலரை, இந்தப் பழக்கத்திலிருந்து மீட்க முயன்றன. சிலர் இந்த பழக்கத்திலிருந்து விடுபட்டாலும் அது தாற்காலிகமாகவே இருந்தது. இதற்கு முக்கியக் காரணம், நிகோடின். இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், தங்களுடைய சூழலிலிருந்து விலகி மற்றொரு சூழலில், தகுந்த கண்காணிப்பு மற்றும் கண்டிப்புடன் பல மாதங்கள் விடாமுயற்சியில் ஈடுபட்டால் மட்டுமே இந்தப் பழக்கத்திலிருந்து மீளமுடிகிறது.

மேற்சொன்ன முறை எல்லா நாடுகளிலும் சாத்தியம் அன்று. அத்துடன், எல்லாச் சமூகங்களிலும் இந்த மீட்புப் பணிக்குப் பொருளாதார வசதியும் இருப்பதில்லை. குறிப்பாக, ஏழை நாடுகளில், பொதுநல மருத்துவ பட்ஜெட் தொற்றுநோயைத் தீர்ப்பதற்கே சரியாக இருக்கிறது. இது போன்ற விஷயங்கள், ஓர் ஆடம்பர முயற்சியாகிவிடுகிறது. இதனால் ஏழை நாடுகளில், மீள முடியாமல், சிகரெட் நிறுவனங்களின் பிடியில் சிக்கி இறப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிவருகிறது.

இப்படிச் சைனாவில் ஹான் லிக் என்ற மருந்தாளர், தன்னுடைய அப்பா சிகரெட் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய் வந்து இறந்ததைக் கண்டு, இந்தப் பழக்கத்திலிருந்து மீள்வதற்கு ஏதாவது மாற்றுவழி கண்டுபிடிக்க வேண்டும் என்று தீவிரமாகச் செயலில் இறங்கினார். இத்தனைக்கும் ஹானுக்கே சிகரெட் பழக்கமிருந்தது. எங்கு தன் தந்தையைப் போல, தானும் இறந்துவிடுவோமோ என்ற அச்சம் அவரைத் தழுவிக்கொண்டது. இவருடைய கண்டுபிடிப்பே மின் சிகரெட். ‘பற்ற வைக்காத ஒன்றேல்லாம் சிகரெட்டா’ என்று தோன்றும்.

அதாவது, இவருடைய பார்வையில் சிகரெட்டில் உள்ள நிகோடின் தேவை. ஆனால், சிகரெட்டின் ஏனைய ரசாயனங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இந்த மற்ற ரசாயனங்கள் நுரையீரல் புற்றுநோய் விளைவிப்பதால், அவற்றிலிருந்து விடுபடவேண்டும். ஹானின் 2001 புரிதலே, இந்த மின் சிகரெட்டின் உருவாக்கப் பின்னணி. இவர் உருவாக்கிய சில விஷயங்கள் இன்னும் இன்றைய மின் சிகரெட்டிலும் உண்டு:

  1. உயரழுத்த நிகோடின் கலந்த ஒரு திரவம்
  2. திரவத்தைச் சுடேற்ற ஒரு மின் கம்பிச்சுற்று
  3. இந்த மின் கம்பிச்சுற்று, கேளா ஒலி உயர் அதிர்வெண் கதிரை உருவாக்கும் (high frequency ultrasound)
  4. இந்தக் கருவியை இயக்க மின்கலம்

இந்த மின்சுற்று உருவாக்கும் கதிரால், உயரழுத்தத் திரவம் ஒரு புகையாக மாறுகிறது. அதில் நிகோடின் கலந்திருப்பதால் சிகரெட் பிடிக்கும் உணர்வைப் பயனருக்கு உருவாக்குகிறது. ஹான், இதை டிஜிட்டல் காமிரா போன்ற ஒரு பெரிய புரட்சி என்று நினைத்தார். சிகரெட்டை, அவர் ஃபிலிம் காமிரா போன்றது என்று கிண்டலடித்தார்!

ஹான் தன்னுடைய கண்டுபிடிப்பிற்கு, 2004–ல், உரிமைக்காப்பு பெற்றார். அவருடைய தயாரிப்பு நிறுவனம் சைனாவில் புகை பிடிப்பவர்கள், அந்த பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக பெருமளவில் விற்றது. இந்தத் தயாரிப்பு அமெரிக்காவிற்கு, இணைய விற்பனை மூலம் சைனாவிலிருந்து வரத்தொடங்கியது. 2007–ல், சர்வதேச உரிமைக்காப்பும் பெற்றார் ஹான். தன்னுடைய நிறுவனத்திற்கு, ரூயான் (”புகை பிடிப்பதுபோல”) என்று பெயரை மாற்றினார். இப்படிச் சைனாவின் தயாரிப்பான மின் சிகரெட், மெதுவாக மேற்கத்திய உற்பத்திக்கு எப்படி மாறியது என்று பார்ப்போம். மிக முக்கியமாக, மேற்குலகத் தயாரிப்பாளர்கள் கேளா ஒலி சமாசாரத்தைத் துறந்து புதிய மின் முறைகளை உருவாக்கத் தொடங்கினார்கள்.

முதலில், மின் சிகரெட்டுகள் நுகர்வோரின் தேவைகளைச் சரியாகப் பூர்த்தி செய்யவில்லை. 2008–ல், ஒரு பிரிடிஷ் நிறுவனம் கேளா ஒலியைத் துறந்து, சூடேற்றும் மின்சுருள் ஒன்றை உயரழுத்த திரவத்தோடு இணத்து வெற்றி கண்டது. மின் சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படும் மின்கலன்களை அடிக்கடி மின்னேற்றம் செய்வது ஒரு குறையாக இருந்தது. படிப்படியாக, ஒரு மின்னேற்றத்தில் சில மணி நேரங்கள் பயன்படுத்தும் வசதியை தொழில்நுட்ப முன்னேற்றம் நடைமுறையாக்கியது. இதைப் போன்ற பல்வேறு முன்னேற்றங்கள், நுகர்வோரை மின் சிகரெட் பக்கம் இழுக்கத்தொடங்கின. பெரும்பாலும் மின் சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்கள் சிகரெட் பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்கள் என்று இருந்தபடியால், பொதுச் சுகாதார அமைப்புகள் இதை வரவேற்றன.

முதலில், சிகரெட் நிறுவனங்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், மின் சிகரெட்டுகளின் தொடர் வெற்றியைக் கண்டு, கோதாவில் சிகரெட் நிறுவனங்களும் இறங்கின. இதில் ஏராளமான பிராண்டுகள் சந்தைக்கு வந்து, போட்டி போடத் தொடங்கின.

2005–ல், ஆடம் போவன் மற்றும் ஜேம்ஸ் மேன்ஸீஸ் (Adam Bowen & James Manseese) என்ற இருவரும் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சந்தித்தனர். இருவரும் முனைவர் பட்டத்திற்குப் படித்து வந்தனர். கல்லூரி முடிந்து, 2007–ல் ப்ளூம் (Bloom) என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். இவர்கள் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், தங்களது ஆராய்ச்சிக்காக மின் சிகரெட் ஒன்றை வடிவமைத்தனர். இந்த நிறுவனம், பேக்ஸ் லேப் (Pax labs) என்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. முக்கியமாக, 2015–ல் பேக்ஸ் லேப் உருவாக்கிய ஒரு வியாபார மின் சிகரெட் பிராண்டின் பெயர், ஜூல் (Juul.) இன்று கூகிளைப்போல ஜூல், 2017 முதல் ஒரு தனி நிறுவனம் மற்றும் தயாரிப்பின் பெயர்.

2018–ல் உலகின் மிகப் பெரிய மின் சிகரெட் நிறுவனம் ஜூல். அதன் ஆண்டு வியாபாரம் இரண்டு பில்லியன் டாலர்கள். 2018–ல், ஜூலின் 35% பங்குகளை Altria வாங்கியது. யார் இந்த Altria? RJ Reynolds என்ற மிகப் பெரிய சிகரெட் நிறுவனத்தின் அங்கமான Altria, உலகின் மிகப் பெரிய மின் சிகரெட் நிறுவனத்தை வாங்கியது என்று சொல்வதே பொருத்தம். இதைப் பற்றி பின்னால் விரிவாகப் பார்ப்போம். முதலில், ஜூலின் வெற்றி எதனால்? அதில் என்ன வசீகரம்?

ஜூல் மின் சிகரெட்டுகள், வழக்கமான நிகோடினைத் துறந்து நிகோடின் உப்பைப் (nicotine salt or protonated nicotine) பயன்படுத்துகிறது. இந்த நிகோடின் உப்பைக் கண்டுபிடித்ததோடு, அதற்கு உரிமைக்காப்பும் பெற்றது. மற்ற மின் சிகரெட்டுகளைவிட, உண்மையான சிகரெட் பிடிக்கும் உணர்வை ஜூலின் தயாரிப்பு நுகர்வோருக்கு உண்டுபண்ணுகிறது. வெறும் ஐந்து நிமிடத்தில், இந்த நிகோடினின் தாக்கம், நுகர்வோரின் மூளையை அடைகிறது. “களைப்பாக இருக்கிறது. ஒரு சிகரெட் பிடிக்கவேண்டும்” என்று புகைபிடிப்பவர்களுக்கு மிக முக்கியம், இந்த 5 நிமிட நிகோடின் தாக்கம். ஒரு ஜூல் பொதியுறையில் (cartridge called “Juul pod”) ஒரு 20 சிகரெட்டுகள்கொண்ட பாக்கெட் அளவுக்கு நிகோடின் உண்டு. அத்துடன் 200 முறை ஊதலாம் (puffs). அமெரிக்கப் பொதியுறையில் யூரோப்பிய பொதியுறையைவிட மூன்று மடங்கு அதிக நிகோடின் உண்டு. இதில், பலவகை நறுமணம்கொண்ட பொதியுறைகள் உண்டு: வென்னிலா, மாம்பழம், அன்னாசிப்பழம் என்று எட்டு வகைகள் உண்டு. சந்தையில், மேலும் நூற்றுக்கணக்கான நறுமணங்களை வாங்கமுடியும். எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக, இது ஒரு USB குச்சியைப்போல மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதில் உள்ள மின்கலனைச் செல்பேசி போலச் சார்ஜ் செய்துகொள்ளலாம். பெண்கள், சிறுமிகளுக்கு பிடித்தாற்போல, பல வசீகர வண்ணங்களில் விற்கப்படுகிறது.

இன்று, மின் சிகரெட்டுகளின் சந்தையின் மதிப்பு 26 பில்லியன் டாலர்கள்.

அட, ஐஃபோனைப்போல அருமையான இந்த வடிவமைப்பில், என்ன குறை இருக்கப்போகிறது? புகை பிடிப்பவர்கள், அந்தப் பழக்கத்திலிருந்து மீள இத்தனை சேவை செய்யும் ஜூல் போன்ற மின் சிகரெட்டுகள், பொதுச் சுகாதாரத் துறையின் நண்பன் அல்லவா?

அப்படித்தான் விளம்பரம் செய்தார்கள். அப்படித்தான் எல்லாம் ஆரம்பித்தது. ஆனால், ஐஃபோனைப்போல, புகையே பிடிக்காதவர்கள் இதனால் கவரப்பட்டால் என்னவாகும்? மாபெரும் பிரச்சினையாகும்.

டீனேஜ் பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் ஜூல் மிகவும் பிரபலமாகத் தொடங்கியது. இதன் அழகிய வடிவமைப்பில் வசியமான இந்த இளைஞர்கள், எப்படியோ இதைக் கடைகளில் வாங்கி, புகைக்கத் தொடங்கினர். சின்னச் சின்ன வேலைகள் செய்து சம்பாதிப்பது, பாக்கெட் செலவுப்பணம் என்று எல்லாமே ஜூல் வாங்கவே சரியாக இருந்தது இவர்களுக்கு. இது மிகவும் cool ஆக இருக்க, அதுவே ஒரு ஃபேஷன் ஆனது. தன் வகுப்பில் படிக்கும் ஒருவன் புகைக்கிறான் என்று அவன் நண்பனும் புகைக்கத் தொடங்கினான். டீன் ஏஜ் பெண்கள், தங்களுக்குப் பிடித்த ஐஃபோன் உறைக்கு மேட்சிங்காக ஜூல் வாங்கத் தொடங்கினார்கள்!

அமெரிக்க / கனேடியப் பள்ளிகளில் இது ஒரு மிகப் பெரிய பிரச்சினையானது. சட்டப்படி, 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மின் சிகரெட் விற்கக்கூடாது. ஏன், எந்த சிகரெட்டுமே விற்கக்கூடாது. இதெல்லாம் இவர்களுக்கு ஒரு தடையா? ஆயிரம் வழிகளில் ஜூல் வாங்கமுடிகிறது. என்ன 18 வயதிற்கு மேற்பட்ட ஒருவர் நண்பராக இருந்தால் போதுமே!

இன்று இணையத்தில் தேடுவதை googling என்று சொல்லியே, நாம் பழகிவிட்டோம். அத்தனை பரவலாகிவிட்டது கூகிள் நிறுவனத்தின் இணையத் தேடல் சேவை. அதேபோல, டீனேஜ் சமூகத்தினர் புகைபிடிப்பதாய்ச் சொல்வதில்லை. Juuling என்ற வார்த்தை பிரபலமடையும் அளவு இன்றைய திறன்பேசி தலைமுறையை இந்தப் பழக்கம் ஆக்கிரமித்துவிட்டது.

ஒரு கனேடிய சி.பி.ஸி. விவரணப்படத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்தார். பள்ளி நாள்களில், இரு வகுப்புகளுக்கு நடுவே இடைவேளையில் மாணவர்கள் கழிப்பறையில் ஒரே புகை. ஆனால், எந்த மாணவரிடமும் சிகரெட் இல்லை. இந்தப் புகை மாணவிகள் கழிப்பறையிலும் வரத்தொடங்கியது. செயலில் இறங்கிய இவர், தாமே கழிப்பறைக்குள் சென்று ஆண் மாணவர்களைக் கையும் களவுமாகப் பிடித்துக் கண்டிக்கத் தொடங்கினார். அவருக்கு உதவியாக ஓர் ஆசிரியை, பெண்கள் கழிப்பறையில் மாணவிகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்.

கையோடு பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. USB குச்சிகளை எளிதில் மறைக்கமுடியும். மாணவர்கள் பெரும்பாலும் உள்ளாடைக்குள் மறைத்து வைக்கிறார்கள். மேலும், ரகசியமாகத் தன்னுடைய திறன்பேசியிலிருந்து சார்ஜும் செய்துகொள்கிறார்கள். ஒரு சின்னப் பெட்டியில், ஒரு கோப்பிற்கு இடையில், எங்கு வேண்டுமானாலும் இதை மறைக்கமுடியும். அத்துடன் அதில் உள்ள நறுமணம் யாரையும் சந்தேகப்பட வைக்காது.

ஜூலில் உள்ள நிகோடின், டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களை அடிமைப்படுத்தியது. ஜூல், தன்னுடைய தயாரிப்புகள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே என்று சாதித்தது. அத்துடன் தன்னுடைய குறிக்கோள், புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட ஆசைப்படும் நபர்களைக் காப்பாற்றுவதே என்று சொல்லிப் பார்த்தது. அடுத்த பகுதியில் இந்த போராட்டத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஜூல், மிகத் திறமையாக டீனேஜ்காரர்களுக்குப் பிடித்த இணையத் தளங்களான இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் Jooling-ஐ ஸ்டைலான விஷயமாக விளம்பரம் செய்து வெற்றி பெற்றது. இத்தனைக்கும், மிகப் பெரிய சிகரெட் நிறுவனங்கள் செலவிடும் விளம்பர பட்ஜெட்டைப் பார்க்கையில், இது மிகவும் குறைவு.

இந்த மின் சிகரெட் பிடிப்பதை, ஆங்கிலத்தில் vaping என்று கூறுகிறார்கள். ஒருபுறம், சிகரெட் புகைபிடிப்பவர்களுக்கு உதவவே இந்த மின் சிகரெட் என்ற வாதம் இருக்கிறது. இன்னொரு புறம், புகையே பிடிக்காத டீனேஜ் ஆண் / பெண்களைப் புதிதான ஒரு பழக்கத்திற்கு ஆளாக்க வேண்டுமா என்ற வாதமும் எழுகிறது. இன்று நமக்கெல்லாம் திறன்பேசி என்ற கெட்ட பழக்கம் இருப்பதைப் போலத்தானே இது என்று தோன்றலாம். திறன்பேசியை அதிகமாகப் பயன்படுத்துவதால், பொதுச் சுகாதாரப் பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால், மின் சிகரெட் ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சினை என்ற வாதம் உள்ளது. விஞ்ஞானம் இதைப்பற்றி என்ன சொல்கிறது, அரசாங்கங்கள் என்ன மாதிரிச் சட்டங்களை அமல்படுத்துகின்றன, எந்த அளவு இதில் வெற்றி என்று பல்வேறு விஷயங்களை அடுத்த பகுதியில் ஆராய்வோம்.

Series Navigation<< சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 4மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 2 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.