பிபூதிபூஷண் பந்த்யோபாத்யாய்
(வங்காள மொழி நாவலின் தமிழாக்கம்: சேதுபதி அருணாசலம்)

பக்கத்து கிராமத்துக்குப் பெயரெதுவுமில்லை. மக்கள் அதை ‘பஸ்சிம் பாரா’ (மேற்கு கிராமம்) என்று அழைத்தார்கள். அதுவும் சில வருடங்களுக்கு முன் புதிதாக உருவாகிய கிராமம்தான். இந்தப் பக்கத்து நிலங்களெல்லாம் முன்பு தரிசாகக் கிடந்தன. எல்லோரிடமும் நல்ல விவசாய நிலங்கள் இருந்ததால், பண்படாமல் களையோடிக் கிடந்த இந்த நிலங்களை சீர்திருத்தி விருத்தியாக்க யாரும் முன்வரவில்லை. பிற பகுதிகளிலிருந்து குடி பெயர்ந்த காபாலி ஜாதி வேளாளர்கள், இந்த நிலங்களை உரிமையாக்கிக்கொண்டு, சீராக்கி, நன்றாக விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கிராமத்தை உருவாக்கியதும் அவர்கள்தான். இன்னும் பெயர்தான் வைக்கவில்லை.
அந்த கிராமத்து எல்லையிலேயே ஒரு மண்டபம் இருந்தது. அதில் நான்கைந்து பேர் உட்கார்ந்து புகைபிடிப்பது வழக்கம். அவர்களில் ஒருவன் கங்காசரணை அடையாளம் கண்டுகொண்டான். “வாங்க வாங்க தாதா-தாகுர். எங்கே இவ்வளவு தூரம்?” என்றான்.
அவர்களிடம் சற்று தோரணையைக் காட்டவேண்டும் என்று நினைத்தான் கங்காசரண். சட்டைக்குள்ளிருந்து பூணூலை விரலால் தூக்கிக்காட்டி, “ஜயஸ்து! அனைவருக்கும் ஆசிர்வாதம்!” என்றான்.
பிறகு சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, “இந்தப்பக்கம் வீடெல்லாம் நல்லா கட்டீருக்கீங்களே? பூஜையெல்லாம் செஞ்சிக்கிட்டு இருக்கீங்களா?” என்றான்.
ஒருவன் பிராமண விருந்தினருக்கு புகையிலை மடித்துத்தர வாழையிலை நறுக்கு எடுத்து வருவதற்காக எழுந்து ஓடினான். இன்னொருவன் சொன்னான், “இன்னும் செய்யலை தாதா-தாகுர். அடுத்த வருஷத்திலேருந்து செய்யலாம்னு இருக்கோம். உங்களால பூஜை செய்ய முடியுமா?”
கங்காசரண் இளக்காரமாகப் புன்னகைத்தான். அவன் அவர்களுக்கு அவ்வளவு சுலபமாக வளைந்து கொடுக்கப்போவதில்லை.
மூன்றாமவன் கேட்டவனைத் திட்டினான். “பெரியவங்ககிட்ட இப்படித்தான் பேசறதா? ஒரு முறை இல்ல? ஒண்ணும் தெரியாது ஆனா வாய மட்டும் தொறக்கற. அவருக்கு நிச்சயமா பூஜை செய்யத் தெரியும். அவரு படிச்ச பண்டிதர்.”
கங்காசரண் தாராளமனதோடு சொன்னான், “இருக்கட்டும், இருக்கட்டும், பரவால்ல. இளம் வயசு. தெரியல…”
இதற்குள் முதலாமவன் வாழையிலையோடு வந்தான். அவர்களுக்குப் பொதுவான ஹூக்காவை கங்காசரண் புகைபிடிப்பதற்காகக் கொடுத்தான்.
கங்காசரண் அதிர்ச்சியாக, “என்ன இது?” என்றான்.
”நீங்க புகை பிடிக்கறதுக்காக…”
”நீ வச்ச மிச்சத்த உன் ஹூக்காவுல நான் பிடிக்கனுமா?!”
கொடுத்தவன் அசிங்கப்பட்டு விலகினான்.
ஏற்கனவே விவரமாகப் பேசிய இரண்டாமவன், “நீ என்ன அவரை உன்னோட பாஞ்சு-தாகுர் மாதிரி நினைச்சியா? உங்க யாருக்கும் ஒரு மட்டு மரியாதையே தெரியல. நீங்க இருங்க தாதா-தாகுர். என் வீட்ல சுத்தமான புது ஹூக்கா இருக்கு. அதைக் கொண்டு வரேன்.”
கங்காசரண் விறைப்பாக, “கையக் கழுவிட்டு எடுத்துக்கிட்டு வா” என்றான்.
அவர்கள் அதற்கு முன் புதிய சுத்தமான ஹூக்காவைக் கேட்கும், கையைக் கழுவிவிட்டு வரச்சொல்லும் தீவிரமான பிராமணனைக் கண்டதில்லை. அவர்கள் வியந்துபோனார்கள்.
புதிய ஹூக்காவும், புதிய சுத்தமான வாழையிலையும் வந்தது. புகையிலையை பணிவோடு கங்காசரணிடம் கொடுத்தார்கள்.
கங்காசரண், “பேச்சுவார்த்தைங்கறது மரியாதையாவும், முறையாவும் இருக்கனும். பூஜை செய்யத் தெரியுமான்னு என்னைக் கேட்டீங்களே, பூஜைங்கறது என்னன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.
எல்லாம் தெரிந்தவன் சொன்னான், “ச்சே, முட்டாப்பசங்க!”
”அது போகட்டும், நான் இப்போ இங்கே எதுக்கு வந்துருக்கேன்னு தெரியுமா?”
அவர்களில் யாருக்கும் பதில் சொல்லும் தைரியம் இருக்கவில்லை. எல்லாம் தெரிந்தவனே அதையும் கேட்டான், “தெரியலையே, எதுக்கு தாதா-தாகுர்?”
”நான் என் கிராமத்துல ஒரு புது பள்ளிக்கூடம் ஆரம்பிச்சிருக்கேன். அதுக்கு உங்க பிள்ளைகள அனுப்பி வைக்கனும்.”
”ஆஹா, அருமையான செய்தி தாதா-தாகுர். எங்க பிள்ளைகளுக்காவது கொஞ்சம் படிப்பு வரட்டும்.”
”நல்லது. அதுக்குத்தான் நான் வந்தேன். உங்க கிராமத்தில மத்த எல்லார்க்கிட்டயும் நீங்க இதை சொல்லனும்….”
“தாதா-தாகுர் சொன்னதைக் கேட்டீங்களா?” என்று சொல்லிவிட்டு கங்காசரணிடம், “கொஞ்சம் எங்களுக்குள்ள கலந்துக்கிட்டு வந்துடறோம்” என்று சொல்லிவிட்டு, அருகிலிருந்த பலாமரத்தடிக்கு இடம்பெயர்ந்து பேசிக்கொண்டார்கள்.
அவர்களின் தலைவன் கங்காசரணிடம் வந்து, “சரி தாதா-தாகுர், எல்லாம் முடிவு பண்ணியாச்சு.”
“என்ன முடிவாச்சு?”
“எல்லாரும் பிள்ளைகளைப் பாடங்கத்துக்க உங்ககிட்ட அனுப்பி வைக்கப்போறோம். ஒரேயொரு வேண்டுகோள்…”
“என்ன?”
“நீங்க இந்த ஊர்லயும் ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிச்சீங்கன்னா…”
“அது முடியாது. என்னால் ரெண்டு பள்ளிக்கூடம் ஒரே நேரத்துல நடத்த முடியாது. அதுவும், நான் ஒரு ஊர்ல இருந்துக்கிட்டு இன்னொரு ஊர்ல பள்ளிக்கூடம் நடத்தறது ரொம்ப கஷ்டம்.”
“பள்ளிக்கூடக் கட்டணம் எவ்வளவுன்னு சொல்லீட்டிங்கன்னா…”
“நான் இவ்வளவுதான்னு கட்டணம் எதுவும் வாங்கறதில்ல. ‘வித்யாதானம் மஹாபுண்யம்.’ பாடம் சொல்லிக்குடுக்கறது பெரிய வரம். ஆயிரம் புண்ணியங்களுக்கு சமம். ஆனால் எங்க வயத்துப்பாடும் இருக்கே. நீங்களே எவ்வளவு கொடுக்கறதுன்னு முடிவு செஞ்சு கொடுங்க. நான் கேட்கறது முறையா இருக்காது.”
கங்காசரண் இதுபோன்ற வர்த்தமானங்களில் நிபுணன். இதுபோன்ற மறைமுக உத்தி அதிகம் பயன் தரக்கூடியது என்று அவனுக்குத் தெரியும். அதனால்தான், அனங்கா, “அவங்களே முடிவு செஞ்சுக்கட்டும்னு ஏன் விட்டீங்க?” என்று கேட்டபோது அர்த்தபூர்வமாகப் புன்னகை செய்தபடி, “தெரிஞ்சுதான் சொன்னேன். நானா கேட்டிருந்தா நாலு அணா கேட்டிருப்பேன். இப்போ அவங்களாத் தரும்போது எட்டணா தருவாங்க. பொறுத்திருந்து பார்.” என்றான்.
அடுத்தநாள் பிஸ்வாஸ் மஷாயே தன் வீட்டுக்கு வந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டான் கங்காசரண். மகனைக் கூப்பிட்டு, “பட்லா, போய் ‘டெஸ்கோ’வை எடுத்துட்டு வா” என்றான்.
‘டெஸ்கோ’ ஒரு பழைய மரப்பெட்டி, இப்போது ஆசனமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு ஏன் ‘டெஸ்கோ’ என்ற பெயர் வந்தது என்று யாருக்கும் தெரியாது.
பிஸ்வாஸ் மஷாய் சொன்னார், “இருக்கட்டும், எனக்காக ஏதும் சிரமம் செஞ்சுக்காதீங்க.”
“இல்லை, இல்லை, உக்காருங்க, உக்காருங்க. எங்க நீங்களே இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க?”
”உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கனும். நேத்திக்கு வீட்டுக்கு வந்து ‘ஸமோஸ்க்ரிதோ’ (ஸம்ஸ்கிருதம்) வார்த்தைகளையெல்லாம் சொன்னீங்க. வீட்டுப் பெண்கள்லாம் அதைக் கேட்டாங்க. எங்க வீட்டுக் கறவைப்பசு போன மாசம் ஒரு விபத்துல இறந்திடுச்சு. எல்லாருக்கும் ஒரே துக்கம். பேரனுக்கு அப்போலேருந்து உடம்பே சரியில்லை. சளி, காய்ச்சல், இருமல்… என்ன சொல்லவரேன்னு புரியுதில்லையா?”
’இதெல்லாம் நடக்கக் கூடியதுதான்’ என்று சொல்வது போல ஆமோதிப்பாகத் தலையாட்டினான் கங்காசரண்.
”இப்போ என்ன செய்யறது? ‘அவர் விஷயம் தெரிஞ்ச பண்டிதர். அவர் இதுக்கு ஏதாவது செய்வார், கேட்டுப்பாருங்கன்னு’ உங்ககிட்ட கேக்கச்சொல்லி மனைவி சொன்னா”
கங்காசரண் முன்பு போலவே ஏதும் பதிலளிக்காமல் தீவிர சிந்தனையில் இருப்பவன் போல இருந்தான். வெறுமனே “ம்ம்ம்ம்…” என்றான்.
அதைப் பார்த்த பிஸ்வாஸ் மஷாய் மேலும் கவலையடைந்தார். வீட்டில் மேலும் பல கஷ்டங்கள் உருவாகுமோ? இந்த பிராமணருக்கு எதிர்காலம் தெரியும். ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்.
கொஞ்ச நேரம் கழித்து கங்காசரண் சொன்னான், “கொஞ்சம் செலவு செய்யனும். இது உங்களுக்கு ரொம்ப சோதனையான காலம்.”
”எவ்வளவு செலவாகும்? எவ்வளவு கஷ்டம் வரும்?” பிஸ்வாஸ் மஷாய் கலங்கினார்.
“பசுவைக் கொல்றது கடுமையான பாவம். எவ்வளவுன்னா…”
“ஆனா நாங்க கொல்லலையே. அது ஒரு விபத்து. மூக்கனாங்கயிறு எப்படியோ கழுத்துல விழுந்து இறுகிடிச்சு.”
”ரெண்டும் ஒண்ணுதான். பசு செத்துப் போச்சு. கடுமையான பாவம்.”
”சரி, இப்போ என்ன செய்யனும்?”
“பரிஹார பூஜை செய்யனும். அடுத்த பெளர்ணமில செய்யனும். மொத்தமா பதினஞ்சு – இருபது ரூபாய் செலவாகும்.”
”என்ன பொருள்லாம் வாங்கனும்னு ஒரு பட்டியல் கொடுத்தீங்கன்னா ரொம்ப நல்லது”, மஷாய் கெஞ்சினார்.
“அப்படி பட்டியல் போடறதுக்கு நல்லா யோசிக்கனும். உங்க பேரனுக்கு வேற உடம்பு ரொம்ப ஆபத்தான நிலையில இருக்கு. இது ரொம்ப முக்கியமான விஷயம். நிதானமா யோசிச்சுச் செய்யனும். கொஞ்சம் இருங்க, வரேன்…”
கங்காசரண் எழுந்து உள்ளே போனான். வீட்டுக்குள்ளிருந்து அனங்கா இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். “இவரு யார்? என்ன ஆச்சு?” என்றாள்.
கங்காசரண் அவளை வீட்டின் பின்னறைக்கு அழைத்துச் சென்று, ரகசியமான குரலில், “ரொம்பப் பெரிய ஆள். இவர்தான் பிஸ்வாஸ் மஷாய். உங்கிட்ட எத்தனை புடைவை இருக்கு?”
“என் புடைவையா?”
“சீக்கிரம் சொல்லு, உன்னோடதுதான். வேற யாரோடது?! என்னோடதா?”
“தினமும் கட்டிக்கிறதுக்கு வெளில ரெண்டு புடைவை இருக்கு. பெட்டில மூணு இருக்கு. விசேஷங்களுக்குக் கட்டிக்க ரெண்டு உசத்திப் புடைவை இருக்கு.”
”உனக்கு என்ன வேணும்? தினமும் கட்டிக்கிறதுக்கா? இல்லை உசத்தியா?”
“நல்லதா, சிவப்பு ஜரிகையில ஒண்ணு இருந்தா நல்லா இருக்கும். ஜரிகைய ஒட்டி வெள்ளையில எம்பிராய்டரி வேலைப்பாடு இருந்தா நல்லா இருக்கும். பாஸுதேவ்பூர் சக்கோத்தி மஷாய்க்கிட்ட அப்படி ஒரு புடைவை இருந்தது, பாத்திருக்கேன். அது சரி, யாரு வாங்கப் போறா?”
“மெதுவாப் பேசு. அவரு வெளிலதான் இருக்காரு. அது சரி, வீட்டுல பசு நெய் இருக்கா?”
“பசு நெய்யா? கேலி பண்றீங்களா? வெறும் அரிசிக்கே வழியில்லை, பசு நெய்யாம்”, பழித்துக் காட்டினாள் அனங்கா.
கங்காசரண் வெளியே வந்து சொன்னான், “இப்படிக் காக்க வைக்கிறதுக்கு மன்னிக்கவும் பிஸ்வாஸ் மஷாய். ஆனா இந்த விஷயத்தையெல்லாம் நாம அவசரமா பண்ண முடியாது இல்லையா? இதோ ஞாபகம் வச்சுக்கோங்க – சிவப்பு ஜரிகை புடைவை, அரை சேர் பசு நெய், இல்லை முக்கால் இருக்கட்டும். அஞ்சு படி சர்க்கரை, வாழைப்பழம் ஒரு சீப்பு, அஞ்சு படி சந்தேஷ் (இனிப்பு வகை), ரெண்டு புது ஜமக்காளம், ஒரு வெண்கலத் தாம்பாளம், ஒரு சொம்பு, ஊதுபத்தி… அடடா மறந்தே போனேன் பாருங்க… பஞ்சபாத்திரம், ஒரு பாய்…”
பிஸ்வாஸ் மஷாய் கவனமாகக் கேட்டுக்கொண்டார். “நான் எல்லாமே புதுசா வாங்கிடறேன். ஆனா பாத்திரமெல்லாம் உங்களோடதே இருக்கட்டுமே, அதுக்கு பதிலா பணமா கொடுத்துடறேன்.”
”அப்படியே செஞ்சுக்கலாம். ஆனா எல்லாமே புதுசா இருக்கனும்.”
”சரி, ஒரு நாள் முடிவு செய்ங்க”
”அது ஏற்கனவே செஞ்சாச்சே, அடுத்த பெளர்ணமி. குரு தட்சிணை ரெண்டு ரூபாய்.”
”காசு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, என் பேரனைக் காப்பாத்துங்க”, என்று கெஞ்சினார் பிஸ்வாஸ் மஷாய்.
கங்காசரண் ஆறுதலாகக் கூறினான், “எவ்வளவோ பெரிய பாவங்களுக்குப் பரிகாரம் செஞ்சிருக்கேன். இதெல்லாம் ஒண்ணுமே இல்லை, நீங்க கவலைப் படாதீங்க என்றான்.”
அனங்காவுக்குத் தன் கணவனின் சாமர்த்தியத்தைப் பார்த்துப் பெருமையாக இருந்தது. பரிகார பூஜை முடிந்து நிறைய தட்சிணைகளோடு வந்த கங்காசரணைப் பார்த்து முகம் மலர்ந்து உற்சாகத்தோடு கூறினாள், “புடைவையைக் காட்டுங்க. ஆஹா. அழகு, சிவப்பு ஜரிகை! பசு நெய்? எவ்வளவு கிடைச்சது?”
“கண்டிப்பா மூணு படிக்குக் குறையாது. வீட்டில் செஞ்ச சுத்தமான நெய்.”
”நாம இப்போ பாட்சாலாவுக்குப் போலாமா? என்ன சொல்றீங்க?”
”பிஸ்வாஸ் மஷாய்க்கிட்ட சொல்லிருக்கேன், வண்டி தரேன்னு சொல்லீருக்காரு.”
“நீங்க வர மாட்டீங்களா?”
“என்னால பள்ளிக்கூடத்தை மூட முடியாது. இப்போதான் நம்மகிட்ட கொஞ்சம் காசு இருக்கு. நீ பசங்களக் கூட்டிக்கிட்டு போ. என்கிட்ட ரெண்டு ரூபா இருக்கு. அதிலேருந்து ஒரு ரூபாய் செலவுக்கு எடுத்துக்கோ.”
ஆனால் எல்லாம் திட்டம்போட்டு முடிக்கையில் குளிர்காலம் முடிந்து பங்குனியாகிவிட்டது.
ஒருவழியாக அனங்காவும், மகன்களும், பிஸ்வாஸ் மஷாய் கொடுத்த மாட்டுவண்டியில் பாட்சாலாவுக்குக் கிளம்பினார்கள். நான்கு மைல்கள் கழிந்து, காந்தாலியா நதியை மாட்டுவண்டியோடு சேர்ந்து ஓடத்தில் கடக்க வேண்டியிருந்தது. நதியை அப்படிக் கடந்ததை அனங்கா மிகவும் ரசித்தாள். அக்கரையில் வசந்தகால பெருகிளைப் பூக்கள் மலர்ந்து குலுங்கின, மாம்பூக்களின் மணம் காற்றில் எங்கும் கலந்திருந்தது. இலவ மரங்களின் வளைந்த கிளைகளினூடே கருஞ்சிவப்புப்பூக்கள் செறிந்திருந்தன.
அனங்கா மகன்களை ஏதாவது சாப்பிடுமாறு சொன்னாள். “இந்த நிழல்ல உட்கார்ந்து கொஞ்சம் அவல் சாப்பிடுங்க. பாட்சாலாவுக்கு எப்போ போய் சேருவோமோ தெரியாது.”
மூத்தவன், “ஆஹா! மாம்பூவெல்லாம் பாருமா, எப்படிப் பூத்துக் குலுங்குது! இந்த வருஷம் நல்ல மாம்பழ விளைச்சல் இருக்கும்.” என்றான்.
“சீக்கிரம் சாப்பிட்டு முடி. மாம்பூவைப் பாத்திட்டுருக்க இது நேரமில்லை.”
இரு சிறுவர்கள் நதிக்கரையில், மர நிழலுக்குக் கீழே வெட்டுக்கிளிகளைப் பிடிக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களை மீண்டும் மாட்டுவண்டியில் ஏற வைக்க அனங்கா சத்தம் போட்டுத் திட்டவேண்டியிருந்தது.
வசந்தகாலத்தின் அமைதியான மதிய நேரத்தில் கிராமப்புற மண்சாலையில், மா, நாவல், மூங்கில், இலவ, ஆல மரங்களின் நிழலில் மாட்டுவண்டி ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. அனங்கா கிட்டத்தட்ட கண் அயர்ந்துவிட்டாள். மூத்தவன் சத்தம்போட்டு எழுப்பினான். “எழுந்திரும்மா, நேரா உட்கார முடியாத அளவுக்குத் தூங்கிச் சாயறயே?”
அனங்கா வெட்கப்பட்டாள். “முகத்தைக் கொஞ்சம் அலம்பிக்க முடிஞ்சா நல்லாருக்கும். தூக்கம் தூக்கமா வருது.”
பாட்சாலாவுக்குப் போய்ச் சேர்கையில் அந்தி சாயத் தொடங்கிவிட்டது. “இருட்டாகறத்துக்குள்ள வந்து சேர்ந்துட்டோம் மா-தாகாரேன். நம்ம ஊர்லேருந்து பதினெட்டு மைல் தூரம். காளைங்க இளமையாவும் உறுதியாவும் இருந்ததால நேரத்துக்கு வந்து சேர முடிஞ்சுது.” என்றார் வண்டிக்காரர்.
பாட்சாலாவில் அனங்காவின் வீடு பாக்டி ஜாதியினரின் குடியிருப்பிலிருந்து கொஞ்சம் தள்ளி பெரிய குளத்துக்குப் பக்கத்தில் இருந்தது. ஒரு வசிப்பறையும், சமையலைறையும் கொண்ட சிறிய குடிசை வீடு. சில வருடங்களாக யாரும் வசிக்காததால் பாழடைந்து கிடைந்தது. சில ஓலைகள் பறந்து விட்டிருந்தன. ஆடுமாடுகள் முற்றத்தைப் பாழாக்கியிருந்தன. ஒரு காலத்தில் வீட்டைச் சுற்றி மூங்கிலும், மயிற்கொன்றைச் செடிகளுமான வேலி கட்டப்பட்டிருந்தது. நிறைய மூங்கில் கழிகளை யாரோ திருடிக்கொண்டு போயிருந்தார்கள்.
வண்டியைப் பார்த்துவிட்டு மோத்தி பாக்டினி ஓடோடி வந்தாள். “ஆஹா, என்ன ஆச்சரியம்! நம்ம பாமுன் – தீதி!”
“ஓ மோத்தி, எல்லாம் எப்படி இருக்கீங்க?” என்றாள் அனங்கா.
”இருங்க, காலைத் தொட்டுக்கறேன் (நமஸ்கரிச்சிக்கிறேன்). ஓ, போட்லு-கோக்கா, ரெண்டு பேரும் வளர்ந்துட்டாங்களே?”
”இங்கே எல்லாம் செளக்கியம்தானே?”
“உங்க ஆசியில எல்லாம் நல்லா இருக்கோம் தீதி. எங்கேருந்து வரீங்க?”
“காபாலிகளோட ’நதுனகாவ்ம்’லேருந்து (புது கிராமம்). இங்கேருந்து பதினெட்டு மைல் தூரம்.”
”இனிமே இங்கேதானே இருக்கப்போறீங்க?”
“இல்லை, ரொம்ப நாள்லாம் இல்லை. அங்கே ஊர்ல வீட்டுக்காரர் ஒரு பெரிய பள்ளிக்கூடம் திறந்திருக்கார். நெறைய பசங்க… ரெண்டு நாள் அவரே சமாளிச்சிக்கனும்.”
“சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணட்டுமா?”
“அரிசி, பருப்பெல்லாம் கொண்டு வந்திருக்கோம். கொஞ்சம் விறகு மட்டும் கொண்டு வா.”
’தாமரைக்குளம்’ என்ற பெயர் கொண்ட அந்த குளத்துக்குக் கொஞ்சம் தள்ளி அருந்ததியர்களின் குடியிருப்பு இருந்தது. கிட்டத்தட்ட நூறு குடும்பங்கள் அதில் இருந்தன. அவர்கள் அந்தக் குளத்தில் மீன் பிடித்துப் பிற கிராமங்களில் விற்றார்கள். பிற ஜாதியினரும் சற்றுத் தள்ளி தங்கள் குடியிருப்புகளில் இருந்தார்கள். இந்த ஊரிலும் பிராமணர்கள் இருக்கவில்லை. கங்காசரண் தொழிலுக்குப் போட்டியில்லாத இது போன்ற ஊர்களையே வசிப்பதற்காகத் தேர்ந்தெடுத்தான்.
அனங்கா வந்திருக்கும் செய்தி கேட்டு, கோனார்களின் குடியிருப்பிலிருந்து பல பெண்கள் வந்திருந்தார்கள். ஒருத்தி சொம்பு நிறைய பால் கொண்டுவந்திருந்தாள். இன்னொருத்தி பனை வெல்லமும், இன்னொருத்தி வாழைப்பழங்களும் கொண்டுவந்திருந்தார்கள். இரவு நீண்ட நேரம் உட்கார்ந்து ஊர்க்கதை பேசிக்கொண்டிருந்தார்கள். அனைவருக்கும் அவள் வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. எல்லோரும் அவளை இன்னும் கொஞ்ச நாள் தங்கச் சொல்லி கேட்டார்கள், ஏன், அங்கே நிலையாகவே வந்து தங்கிவிட்டாலும் மகிழ்ச்சிதான். அப்படித் தங்கிவிட்டால், அவர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார்கள்.
அந்தப் பெண்களே வீட்டை சுத்தம் செய்து, அகல் விளக்கை ஏற்றிவைத்தார்கள்.
மோத்தி மாசினி (அருந்ததியப் பெண்) அன்றிரவு அங்கே முற்றத்திலேயே படுத்துக் கொள்வதாகவும், அதற்கு முன் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவதாகவும் சொன்னாள். அனங்கா அவளைப் போகவிடவில்லை. அங்கே சமைத்ததையே எல்லோரும் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாள். வண்டிக்காரரையும் சேர்த்துதான்.
அன்று நல்ல நிலவெரிந்த இரவு. காற்றும் குளிர்ந்திருந்தது. மோத்தி மாசினி ஒரு வாழையிலையில் சாப்பாடு எடுத்துக்கொண்டு குளக்கரையில் புல்வெளியில் அமர்ந்து சாப்பிட்டாள். வண்டிக்காரர் வயிறு சரியில்லாததால் சாப்பிடவில்லை.
அனங்கா நிலவொளி முற்றத்தில் பாய் விரித்து, குளத்தைப் பார்த்தபடி தன் தோழிகளோடு அமர்ந்தாள். ஷ்யாம்சரண் கோஷின் விதவை மகள் தாமதமாக, மண்ணெண்ணெய் விளக்கோடு வந்தாள். அவளும் அவர்களோடு உறங்கும் எண்ணத்தோடு வந்திருந்தாள். அவளுக்கு அனங்கா மீது மிகவும் பிரியம். அவள், பக்கத்து ஊரானா குமூரே கிராமத்திற்குத் திருமணமாகிச் சென்று பதினொன்று வயதிலேயே விதவையாகித் திரும்பி வந்தவள். அவளுக்கு இப்போது இருபத்தியேழு, இருபத்தியெட்டு வயதிருக்கலாம். வாளிப்பான உடல், நல்ல நிறம், அழகான முகமும் கூட.
அனங்கா, “வா காளி, இத்தனை நிலா வெளிச்சத்தில விளக்கு என்னத்துக்கு?” என்று சிரித்தபடியே கேட்டாள்.
காளி, குளத்திலிருந்து வீசும் பலமான காற்றில் விளக்கு அணைந்துவிடாதபடி, முந்தானையில் அதை மூடியபடியே சொன்னாள், “வெளிச்சத்துக்காக இல்லை தீதி. அருந்ததியர் வீட்டுப் பக்கத்துல மூங்கில் காடு இருக்கில்ல? அதைக் கடக்கும்போது எனக்கு எப்பவுமே பயம்.”
”ஏன்? எதாவது பிசாசு வந்து உன் கழுத்தை நெறிச்சிடுமா?”
“ஐயோ, ராத்திரில அது பேரைச் சொல்லாதீங்க. உங்களுக்கு ரொம்பத்தான் தைரியம்” என்று சிரித்தாள் காளி.
”நாங்க பிராமணர்கள் இதுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்.”
”பிசாசுங்க பிராமணனா போஷ்டனான்னு பாக்கறதில்லை தீதி. நிஜமா! ஒரு ராத்திரி என்னாச்சுன்னா…”
மோத்தி மாசினியும் பயந்தபடியே சொன்னாள், “ராத்திரி நேரத்தில அந்தப் பேச்செல்லாம் எதுக்கு? இதோ இந்தப் பனம்பாயை எடுத்துக்கிட்டு, பாமுன் தீதி பக்கத்துல படுத்துக்கோ.”
அனங்கா அன்றிரவு வெகு சந்தோஷமாக இருந்தாள். நீண்ட நாட்கள் கழித்து பழைய வீட்டுப் பிரவேசம், நீண்ட நாட்கள் கழித்து பழைய தோழிகளின் சந்திப்பு. தாமரைக் குளத்தில் நிலவொளியைப் பார்த்து எத்தனை நாட்களாகிவிட்டன! ஆனாலும், அவர்கள் இங்கே வசித்தபோது கஷ்ட ஜீவனம்தான். சில நாட்கள் சாப்பாடு, சில நாட்கள் பட்டினி. எத்தனையோ நாட்கள் அவளுடைய தோழிகள், திருட்டு மாங்காயும், திருட்டுப் பலாவும் கொடுத்து அவளைக் காப்பாற்றியிருக்கிறார்கள். இந்தப் பெண் காளி, எத்தனையோ நாள் அண்ணன், அண்ணிக்குத் தெரியாமல் இடித்த அவலைக் கொண்டு வந்து தந்திருக்கிறாள்.
அனங்கா குளத்து நீரைப் பார்த்தபடியே பேசினாள், “லக்ஷ்மி பூஜையன்னிக்கு ராத்திரி என்ன ஆச்சுன்னு ஞாபகம் இருக்கா காளி?”
காளி பதில் சொல்லாமல் புன்னகைத்தாள். ஒரு பிராமணப் பெண்ணுக்கு உணவிடுவது அவள் கடமை. அதைச் சொல்லிக்காட்டி அவள் பெருமைப்பட்டுக்கொள்ளப் போவதில்லை.
”ஞாபமில்லையா?”
“விடுங்க தீதி.”
”நீ கொடுத்த அந்த இடிச்ச அவல் இல்லாம நாங்கள்லாம் பட்டினி கிடந்திருப்போம்.”
“திரும்பியும் அதே பேச்சா? விடுங்க.”
அனங்கா குளத்தைக் காட்டிக் கேட்டாள், “ஞாபகமிருக்கா மோத்தி? நாம இந்தக் குளத்துல மீன் பிடிச்சோமே?”
மோத்தி சொன்னாள், “துண்டு விரிச்சுப் பிடிச்சோம்! நேத்திக்கு நடந்த மாதிரி இருக்கு, எனக்கு நல்லா ஞாபகம் இருக்கே. நீங்களும் நானும் குளிக்கப் போனோம்.”
”அதுவும் எவ்வளவு பெரிய மீன்!”
”ஆ, இப்போதான் ஞாபகம் வருது… நாளைக்கு என்னோட மச்சான் மீன் பிடிக்கப் போவாரு. நான் பாமுன் தீதிக்கும் ஒண்ணு கொண்டு வரேன். இந்தக் குளத்து மீன் ரொம்ப ருசியா இருக்கும்.”
“நீ என்ன எனக்குப் புதுசா சொல்லித் தர?”
காளி சொன்னாள், “ஓய் மோத்தி! தீதி எதோ இந்த ஊருக்குப் புதுசு மாதிரி பேசறியே? அவங்க கொஞ்சநாள் இந்த ஊர்ல இல்லேங்கறது உண்மைதான். அதனால என்ன? நீங்க திரும்பி இங்கேயே வந்துட மாட்டீங்களா தீதி?”
”கண்டிப்பா வருவேன். இந்தக் குளக்கரைல வீடு கட்டனும்னு எனக்கு ரொம்ப ஆசை.”
“இந்த வீடும் அப்படியொன்னும் தூரம் இல்லையே? அதோ இருக்கு குளம்.”
“இல்லை இல்லை. அதோ தெரியுது பார் மூங்கில் தோப்பு. தண்ணிக்குப் பக்கத்துல. அங்கே இருக்கனும்னும் எனக்கு ஆசை. நல்லா இருக்கும்ல?”
“இப்பவும் நீங்க அந்த வீட்டைக் கட்டலாம். நான் என் அப்பாக்கிட்ட சொல்லி, மூங்கில், வைக்கோல் எல்லாத்துக்கும் ஏற்பாடு செய்யறேன்.”
அன்றிரவு அனங்காவுக்கு வெகு நேரம் உறக்கம் வரவில்லை.
கடந்த கால நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தாள். அவள் பெற்றோர் சத்தோரகாலி கிராமத்தில் வசித்தனர். அவள் அப்பா ஏழை, அவருக்கு நிலத்திலிருந்து சொற்ப வருமானம் கிடைத்துக்கொண்டிருந்தது. ஹரிஹரப்பூருக்கு ஒரு வேலையாகப் போயிருந்தபோது கங்காசரணின் தந்தையின் அறிமுகம் கிடைத்தது. அப்படித்தான் கங்காசரணுக்கும், அனங்காவுக்கும் திருமணம் செய்யும் முடிவானது. ஆனால் திருமணத்துக்கு முன் திடீரென்று அவள் தந்தை தவறிப்போனார். அதனால் ஹரிஹரப்பூரில் அவள் உறவினர்கள் உதவியோடும், கங்காசரண் தந்தையின் உதவியோடு நடந்தது. அனங்காவுக்கு ஒரேயொரு சிவப்பு ஜரிகை போட்ட சேலையும், அவள் அம்மாவின் தங்கமுலாம் பூசிய சங்கு வளையல்களும் கிடைத்தன. அவள் திருமணத்துக்கு சீதனமாகக் கிடைத்த பொருட்கள் அவ்வளவே!
திருமணத்துக்குப் பின் திடீரென்று கங்காசரணின் அப்பாவின் ஒருநாள் இறந்துபோனார். அவர்கள் உறவினர்கள் அவர்களுக்கு எல்லா விதமான தொந்தரவுகளையும் தந்தார்கள். அவர்களுக்கு ஹரிஹரப்பூரில் இருந்ததெல்லாம் ஒரேயொரு செங்கல் வீடும், மாந்தோப்பும் மட்டும்தான். ஆனால் உறவினர்கள் கொடுத்த தொல்லையின் காரணமாக ஒரு மாம்பழம் கூட அந்தத் தோப்பிலிருந்து கிடைக்கவில்லை. குடும்ப வருமானத்துக்கு எந்த வழியும் இருக்கவில்லை. கங்காசரண் வீட்டுப்புழக்கடையிலிருந்து ‘மானகாச்சு’ என்னும் பெரிய கருணைக்கிழங்குகளைத் தோண்டியெடுத்து காமாரகாந்தி சந்தையில் விற்றுக் கிடைக்கும் பணத்தில் அரிசி வாங்கிக்கொண்டு வர வேண்டியிருந்தது. அப்படித்தான் அவர்கள் வயிற்றுப்பாடு நடந்துகொண்டிருந்தது.
ஒருநாள் கடும் மழை பெய்து, கூரையிலிருந்த பொத்தல்கள் வழியே வீட்டுக்குள் வெள்ளமாகிவிட்டது. “இந்த வீட்டை சரி செஞ்சே ஆகனும். நாம இப்படியே வாழ முடியாது…” என்றாள் அனங்கா.
“நான் என்ன செய்யட்டும் பெள? பஸந்த் மேஸ்த்ரிக்கிட்ட கேட்டுப் பார்த்தேன். இருநூறு ரூபாய்க்குக் குறையாம இந்தக் கூரைய சரி செய்ய முடியாதாம்.”
“இருநூறு ரூபாய்க்கு எங்க போறது? உங்ககிட்ட ரெண்டு ரூபாய் கூட இல்லையே…. நான் சொல்றதக் கேளுங்க, நாம வேற எங்கேயாவது போகலாம்.”
”எங்கே? நமக்கு யாரு இடம் தருவா?”
“அது எனக்கெப்படி தெரியும்? நீங்கதான் குடும்பத்தலைவர், நீங்கதான் அதையெல்லாம் தேடனும். இங்கே இருந்து தினமும் உங்க சொந்தக்காரங்க கூட சண்டை போட்டு வாழ்க்கை நடத்தறதெல்லாம் ஆகாத காரியம்.”
அப்படித்தான் அவர்கள் புலம்பெயரத் தொடங்கியது. அடுத்த ஐப்பசியில், துர்கா பூஜை முடிந்தவுடன் வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார்கள். முதலில் பாட்சாலாவுக்கு வந்தார்கள். ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது, ஆனால் போகப்போக கஷ்டமாகிவிட்டது. உள்ளூர் கோனார், அவர்கள் விவசாயம் செய்ய நிலம் தருவதாகச் சொன்னார். ஆனால் இரண்டு வருடம் கழித்தும் அது நடக்கவேயில்லை. மீண்டும் வறுமையில் விழுந்தார்கள். தினமும் ஒருவேளை சாப்பாட்டில் நாளை ஓட்ட வேண்டியிருந்தது. பால்காரி காளி நிறைய உதவிகள் செய்தாள். ஆனால் அங்கிருந்தும் இடம்பெயர்ந்தார்கள். இந்தமுறை வாசுதேவ்பூருக்குச் சென்றார்கள். அங்கேயும் எதுவும் சரியாகயில்லை. அனங்காவுக்கு மலேரியா வந்து கிட்டத்தட்ட செத்துப் பிழைத்தாள். அப்போதுதான் சந்தையில் கங்காசரணுக்கு ’நதுனகிராம’த்தின் காபாலிகளோடு அறிமுகம் கிடைத்தது. அவர்கள் பிள்ளைகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் தேவைப்பட்டது. கங்காசரண் அந்த ஊருக்கு இடம்பெயர ஒத்துக்கொண்டான். அப்போதிலிருந்து அங்கேதான் வசிக்கிறார்கள்.
அனங்கா கூப்பிட்டாள், “தூங்கிட்டியா காளி? நீங்கள்லாம் சரியான தூங்குமூஞ்சிங்க!”
மோத்தி தூக்கக் கலக்கத்திலேயே சொன்னாள், “நீங்க இன்னும் தூங்கலையா பாமுன் தீதி? கொஞ்சம் தூங்குங்க, சீக்கிரம் விடியப்போகுது.”
”ஆமா, உனக்குத்தான் எல்லாம் தெரிஞ்ச மாதிரி.”
அனங்கா அவள் போன ஊர், சந்தித்த மக்களைக் குறித்து அசைபோட்டுக் கொண்டிருந்தாள். அவள் வயதுப் பெண்கள் எத்தனை பேருக்கு இத்தனை அனுபவங்கள் இருக்கும்? ஹரிஹரப்பூரில் அவள் வயதுப்பெண் ஹைமா, அவள் அந்த கிராமத்தை விட்டு எங்கேயும் போனதில்லை.
மேலும் யோசித்தபடியே இருந்தாள் – ஒருவேளை அவளுக்கு நல்ல உடுப்புகளோ, உணவோ இல்லாமலிருக்கலாம். அதனால் என்ன? அவளைப் போல யாரும் பயணப்பட்டதில்லை. எத்தனை ஊர்கள்! சத்தோரகாலியிலிருந்து ஹரிஹர்பூர், அப்புறம் பாட்சாலா, வாசுதேவ்பூர், இப்போது நதுன கிராமம்! எத்தனை பார்த்துவிட்டாள்! திடீரென்று உற்சாகம் வந்து காளியிடம் இதைச் சொல்ல எத்தனித்தாள், “ஓய் காளி! இதைக் கேளேன்….”
மோத்தி அரைத்தூக்கத்தில் முனகினாள், “பாமுன் தீதி, நிஜமாவே இன்னிக்கு நீங்க எங்களைத் தூங்க விடப் போறதில்லையா? காளி அப்போவே தூங்கிட்டா. ராத்திரி முடியவே போகுது.”
அனங்கா புன்னகைத்து அவள் மீது ஒரு வைக்கோலைத் தூக்கிப்போட்டு, “ஒழிஞ்சு போ!” என்றாள்.
அவர்களோடு அனங்கா இருந்த இரண்டு நாட்களும் வெகு மகிழ்ச்சியாகக் கழிந்தன. கிளம்பும் நாளன்று அருந்ததி மோத்தி அழுதபடியே இருந்தாள். அவளும் அனங்காவோடு கிளம்பிவிட வேண்டுமென்று துடித்தாள். பால்காரி காளி, அரை சேர் சுத்தமான பசு நெய்யும், இரண்டு சேப்பங்கிழங்குகளும் கொடுத்தாள். மோத்தி பனை வெல்லக் கட்டிகளை பனையோலையில் பொதிந்து கொடுத்தாள்.
அதையெல்லாம் பெற்றுக்கொண்டு நதுன கிராமத்துக்குத் திரும்பிச் சென்றாள் அனங்கா.
***