டூரிங் டாக்கிஸ்

ஐ. கிருத்திகா

திருவாரூரில்  ரிலீசாகும்  படம்  ஆறுமாதம்  அல்லது  ஒரு  வருடம்  கழித்தே  எங்கள்  ஊர்  டூரிங்  டாக்கீசுக்கு  வரும். டிக்கெட்  விலை  அறுபது  காசு. மணலில்  உட்கார்ந்து  படம்  பார்க்கவேண்டும். அடுத்து  ஒரு  ரூபாயென்றால்  பெஞ்சு. இரண்டு  ரூபாய்க்கு  சேர். 

கடைசியில்  ஆபரேட்டர்ரூம்  சுவரையொட்டி  நீளமாக  ஒரேயொரு  வரிசை  மட்டுமே  சேர். சேர்  பிரிவின்   மையத்திலிருந்து  ஒரு  கட்டைச்சுவர்  எழும்பி  திரைக்கு  அருகாமை  வரை  நீண்டிருக்கும். வலதுபுறம்  ஆண்களுக்கு, இடதுபுறம்  பெண்களுக்கு. சேருக்கு  அடுத்தது  பெஞ்சு.

நாலு  வரிசைகளில்  பெஞ்சு  போடப்பட்டிருக்கும். ஒரு  பெஞ்சில்  நாலுபேர்  அமரலாம். ஆனால்  ஆறேழு   பேர் அமர்ந்திருப்பார்கள். சாய்ந்து  கொள்ள  பலகையெல்லாம்  கிடையாது. இடுப்பொடிய  அமர்ந்து  படம்  பார்க்க வேண்டியதுதான். 

அடுத்தது  தரை. மண்  தரையில்  ஆற்றுமணலை  கொட்டி  நிரவியிருப்பார்கள். சிலர்  அதைக்  குவித்து  அதன்மேல்  அமர்ந்து  படம்  பார்ப்பார்கள். நாங்கள்  தரை  அல்லது  பெஞ்சுக்கு  டிக்கெட்  எடுப்போம். கூட்டம்  அதிகமாயிருக்கும்போது கொட்டகையின்  வெளியே  பெஞ்சு  போடுவார்கள். 

அதில்  அமர்ந்து  படம்  பார்த்த  அனுபவமும்  உண்டு.  கொட்டகையையொட்டி  தென்னந்தோப்பு. சிலுசிலுவென்று  காற்று  வீசும். சிலநேரம்  மூத்திரவாடையும்  அடிக்கும். திரைக்கு  இரண்டுபுறமும்  தகர  சீட்  வைத்து  தடுத்திருப்பார்கள். சிறுநீர்  கழிக்குமிடம்  அது. படம்  ஆரம்பிக்கும்  முன்  மங்கலஇசை  ஒலிக்க  விடுவார்கள். 

” படம்  ஆரமிக்கப்போவுது. ஓடியா….”

கடைசியாக  வருபவர்கள்  அவசரம், அவசரமாக  ஓடிவருவார்கள். அவர்களை  துரிதப்படுத்த  கொடுக்கும்  சமிக்ஞை  அது. கொட்டகைக்குள்ளேயே  சைக்கிள்  ஸ்டாண்டு  இருந்தது. படம்  ஆரம்பித்து  பத்து  நிமிடங்கள்  கழித்து  முதலாளி  வருவாராம். வரும்போதே  சைக்கிள்  ஸ்டாண்டை   நோட்டமிடுபவர்  அதை  வைத்தே  வசூலைக்  கணித்து  விடுவாராம்.

” கணபதி, பத்துநாள்  தாங்கும்  போல…”

சொல்லும்போதே  கண்கள்  மின்னுமென்று  கணபதியண்ணன்  சொல்லுவார். கணபதியண்ணன்  படத்தை  ஓட்டுபவர். எங்கள்  தெருக்காரர். அவர்  மனைவிக்கு  எங்கள்  தெருவில்   தனி  மரியாதை  இருந்தது. 

மோர்  வாங்க  வருபவளிடம்  என்ன  படமென்று  கேட்டுத்  தெரிந்து  கொள்வோம். அவள்  கொட்டகையின்  முதலாளி  போல  தோரணைக்  காட்டுவாள்.  நல்ல  படம்  வந்தால்  அம்மா  அவளிடம்   பணம்  கொடுத்து  அவள்  கணவனை  டிக்கெட்  எடுத்து  வைக்க  சொல்லுவாள். அதற்கு  லஞ்சமாக  கொல்லையில்  பூக்கும்  டிசம்பர்  பூக்களை  பந்துபோல்  கட்டி  அவள்  வீட்டில்  கொடுத்துவிட்டு  வருவேன். 

” ராமர்  ப்ளூ  தான்  எனக்குப்  புடிச்ச  கலரு. “

ஒருமுறை  எங்கோ  பார்த்துக்கொண்டு  சொன்னாள். மறுநாள்  தருவதாக  வாக்களித்துவிட்டு  வந்தேன். மழைநாட்களில்  கொட்டகை  இயங்காது. காசு  பஞ்சம்  வந்து  சீரழியும்  சனங்களுக்கு  அது  பெரிதாய்  தெரியாது. அறுவடை  நாட்களில்  கொட்டகை  நிரம்பி  வழியும்.

அம்மாதிரி  காலங்களில்  எம். ஜி. ஆர்  படத்தை  முதலாளி  ஓட்டுவார். அவர்  நல்ல  சுதாரிப்பு. சனங்களின்  மனதறிந்தவர். அவர்கள்  கையில்  நாலு  காசு  புழங்கும்  நாட்களில்  புதுப்படங்கள்  பக்கம்  போகமாட்டார். மணல்  குவித்து  அமர்ந்து  படம்  பார்க்கும்  பாமரனுக்கு  எம். ஜி. ஆர்  மீது  தனி  வாஞ்சையுண்டு. அதனால்  ஹிட்  அடித்த  அவரது  படங்களை  திரையிடுவார். திரையில்  எம்.ஜி. ஆர்  அடி  வாங்குவதுபோல்  காட்சி  வந்தால்,

” பாவி  மவன். நீ  நாசமாப்  போவ. ஒங்கையில  புத்து  வைக்க…” என்று  கூட்டத்திலிருந்து  வில்லனைப்  பார்த்து  சாபம்  விடுவதுபோல்  குரல்  வரும். கதாநாயகி  திமிராகப்  பேசினால்,

” ஒனக்கு   காலம்  வரும்டி. அப்ப  தன்னால  அவரு  கால்ல  வுளுவ….”

ஒரு  உருவம்  சொல்லிவிட்டு  ஆடையை  சரிசெய்து  கொண்டு  நிமிர்ந்து  அமர்ந்து  கொள்ளும். எனக்கு  சேரில்  அமர்ந்து  படம்  பார்க்க  ரொம்ப  ஆசை. அம்மா  ஒத்துக்  கொள்ளமாட்டாள்.

” ரெண்டு  ரூவா  குடுத்து  அதுல  ஒக்காந்தாலும்  பாக்குற  படம்  ஒண்ணுதான….” என்று  விடுவாள்.  சேர்  கடைசிவரை  எனது  ஏக்கமாகவே  இருந்தது. இடைவேளையில்  கைமுறுக்கும், கடலை  மிட்டாயும்  வரும். சிறுவர்கள்  அலுமினிய  ட்ரேக்களை  ஏந்திக்கொண்டு  அங்குமிங்கும்  அலைவார்கள். புழுங்கலரிசியில்  செய்த  சுத்துமுறுக்கு  கரகரவென்றிருக்கும். அதில்  ஆளுக்கு  ஒன்றும், கடலை  மிட்டாய்  ஒரு  துண்டும்  வாங்கித்  தின்போம்.  குண்டு  பல்பு  வெளிச்சத்தில்  பல  நாட்களாக  பார்க்காமலிருந்தவர்களை  பார்த்து  கைகள்  பிடித்துக்கொண்டு  பேசுவதும்  உண்டு. 

சுத்துப்பட்டு  கிராமங்களுக்கு  இந்த  ஒரு  கொட்டகைதான். அதனால்   பெரும்பாலும்  கூட்டமிருக்கும். எனக்கு  ஆபரேட்டர்  ரூமிற்குள்  அமர்ந்து  கணபதியண்ணன்  படம்  ஓட்டுவதைப்  பார்க்க  ரொம்ப  நாளாக   ஆசையாக  இருந்தது. அவரைப்  பார்க்கும்போதெல்லாம்  நச்சரித்துக்கொண்டிருந்தேன். 

சதுரத்துளை   வழியாக  புகைபோல  நீண்டு   வரும்  வெளிச்சம்  திரையில்  விழுந்து  காட்சியாகும்  மாயாஜாலம்  எப்படி  நிகழ்கிறது   என்று  தெரிந்துகொள்ள  எனக்குள்  ஆவல்  கிளர்ந்து  கொண்டேயிருந்தது. 

” ஒரேயொரு  தடவ  என்னைய  ரூமுக்குள்ள  அழச்சிட்டுப்போயி  காட்டுங்கண்ணே.”

என்னுடைய  கெஞ்சல்  அவரை  அசைக்கவில்லை. 

” மொதலாளிக்கு  தெரிஞ்சா  என்னைய  வேலைய  வுட்டு   தூக்கிடுவாரு  பாப்பா. ரூமுக்குள்ள  யாரையும்  வுடக்கூடாது. இதான்  ரூலு. இத  நான்  மீற  முடியாது. ” 

அவர்   திட்டவட்டமாக  கூறிவிட்டார். அம்மாவிடம்  சிபாரிசுக்காக  போய்  நின்றபோது  அவள்  என்  தலையில்  கொட்டினாள்.

” படத்த  பாப்பியா, மிசினப்  பாக்கணுங்குற. இதெல்லாம்  தேவையில்லாத  வேல….” என்றதோடு  அப்பாவிடமும்  போட்டுக்  கொடுத்துவிட்டாள். 

” வயசாவுதேயொழிய  புத்தி  வளருதா  பாரு. வாரமானா  ஒரு  சினிமாவுக்குப்  போயிர  வேண்டியது. புத்தகத்த  கையில  எடுத்து  நானறியேன். “

அப்பா  தன்பாட்டுக்கு  திட்டித்  தீர்த்தார்.

என்  ஆசை  தரைமட்டமானது. வெட்டவெளியில்  காற்றில்  ஊடுருவும்  புகையொளியில்  நடிகர்களும், நடிகைகளும்  ஆடிப்பாடி சண்டையிட்டு  கொள்வதன்  அந்தர  ரகசியம்   கடைசிவரை  பிடிபடாமலே  போனது. நான்  ஆபரேட்டர் ரூமில்  நின்றிருப்பதுபோல  ஒருமுறை  கனவு  வந்தது. 

கனவில்  விரியும்  காட்சிப்  படிமங்கள்  சம்மந்தா  சம்மந்தமில்லாமல்  இருந்தன. கணபதியண்ணன்  ஏதோ  கேட்டார். நான்  பதில்  சொன்னேன். பக்கத்தில்  அந்தப்  படத்தின்  கதாநாயகன்  நின்று  கொண்டிருந்தார். நான்  சதுரத்துளை  வழியாக   எட்டிப்  பார்த்தேன். அந்தப்புரம்  வெட்டவெளியாக  இருந்தது. 

வெள்ளைத் துணித்திரை  இருந்த  இடத்தில்  ஆடுகள்  மேய்ந்து  கொண்டிருந்தன. அப்பாவும், அம்மாவும்  தூரத்தில்  நின்று  என்னைக் காட்டி  ஏதோ  பேசிக்கொண்டார்கள். அப்போது  சட்டென  விழிப்பு  வந்துவிட்டது. அதற்குப் பிறகு  அந்தக் கனவு  வரவேயில்லை.  

பொட்டி  சுந்தரம்  தெருவில்  போனால்  சிறுவர்கள்  அவர்  பின்னே  ஓடுவார்கள். சைக்கிள்  கேரியரில்  பொட்டியை  வைத்துக்கொண்டு  அவர்  போவார். உள்ளே  பிலிம்  ரோல்  இருக்கும். சிறுவர்கள்  அவரை  மறித்து  நிறுத்துவார்கள். 

” என்ன  படம்ணே….?”

” எலே, போஸ்டரு  ஒட்டும்போது  தெரிஞ்சிக்குங்கடா….”

மனுசர்  லேசில்  சொல்ல  மாட்டார். சற்று  குள்ளமாக  இருக்கும்  அவர்  சைக்கிளிலிருந்து  இறங்காமல்  சிரமப்பட்டு  காலூன்றி  நின்றிருப்பார். 

” யண்ணே, சொல்லுங்கண்ணே….” 

கெஞ்சுவார்கள். 

” எனக்கே  தெரியாதப்பா…..மொதலாளி  போயி  எடுத்தார  சொன்னாரு. எடுத்தாந்தேன். என்  வேல  அவ்ளோதான். வழிய  வுடுங்க.”

” பொய்  சொல்லாதீங்கண்ணே……சொல்லுங்கண்ணே.”

சைக்கிளை  சுற்றி, சுற்றி  வந்து  கெஞ்சி  வழிவார்கள். பொட்டி  சுந்தரத்தின்  முகத்தில்  வெற்றிப் புன்னகை  சுடர்விடும்.

” சரிடா, படத்தோட  மொத  எழுத்தையும், கடைசி  எழுத்தையும்  சொல்றேன். கண்டுபுடிச்சிக்குங்க.”

முதல், கடைசி  எழுத்துகளை  சொல்லிவிட்டு  சிட்டாகப்  பறந்துவிடுவார். சிறுவர்  பட்டாளம்  தலையைப்  பிய்த்துக்கொள்ளும். 

ஒருமுறை  பள்ளிக்கூடம்  விட்டு  வைத்தியர்  வீட்டு  வழியாக  வந்து  கொண்டிருந்தபோது  பொட்டி  சுந்தரம்  வைத்தியர்  கிளினிக்  வாசலில்  கிடந்த  பெஞ்சில்   படுத்திருந்தார். வைத்தியர்  வீடும், கிளினிக்கும்  எதிரெதிரே  இருக்கும். 

இரண்டையும்  இணைத்து   பெரிய  காற்றுப்  பந்தல்  போட்டிருப்பார்கள். ஊரில்  இங்கிலீஷ்  வைத்தியர்  கிடையாது.  இந்த  சித்த  வைத்தியர்  ஒருவர்  மட்டும்தான். அதனால்  அவர்  கிளினிக்கில்  கூட்டம்  அள்ளும். நான்  பொட்டி  சுந்தரத்தைப்  பார்த்ததும்  நின்றுவிட்டேன்.

” வாந்த…..மணியாச்சின்னா  எங்கம்மா  தேடும்.”

ராணி  பிடித்திழுத்தாள். 

” இந்த  வாரந்த……”

நான்  சுந்தரத்தின்  அருகில்  சென்று  சத்தமாகக்  கூப்பிட்டேன். 

” யண்ணே, ஒடம்பு  சொகமில்லீங்களா…..?”

படுத்திருந்தவர்  மெல்ல  கண்களைத்  திறந்து  பார்த்தார். 

” இப்ப  ஓடுற  படம்  சரியான  அறுவைண்ணே. கொட்டாயி  காத்து  வாங்குது. வேற  படம்  மாத்த  சொல்லுங்கண்ணே.”

” யாத்தா, எனக்கு  காய்ச்சலடிக்கிது. பேசக்கூட  முடியல. நீ  போறியா…..?”

சரிண்ணே. நீங்க  சீக்கிரமே  குணமாயி  பொட்டி  எடுக்கப்போவணும்னு  முனீஸ்வரன்ட்ட  வேண்டிக்கிறேன்.”

நான்  சொல்லிவிட்டு  நடந்தேன்.

”  அவரே  காச்ச  கண்டு  கெடக்குறாரு. அவரப்போயி  கிண்டல்  பண்றியேந்த….”

ராணி  கடிந்து  கொண்டாள். வைத்தியர்  வீட்டை  தாண்டினால்  அரை  கிலோமீட்டர்  தூரத்துக்கு  வீடுகளே  கிடையாது. இரண்டு  புறமும்  தென்னந்தோப்பும், புளியந்தோப்பும்  அடர்ந்திருக்கும். ஈங்குருவி  சத்தமிருக்காது. அந்தப்   பகுதியைக்  கடக்கும்போது  பார்த்த  பேய்ப்  படங்கள்  ஞாபகத்துக்கு  வரும். 

” அங்க  தான்  வைத்தியரோட  தம்பி  மக  பதினஞ்சு  வருஷத்துக்கு  முன்னாடி  தூக்கு  மாட்டிக்கிட்டா. அதனால  அந்த  இடம்  வந்ததும்  ஓட்டமா  ஓடி  வந்துடணும்.”

அம்மா  தினமும்  சொல்லி  அனுப்புவாள். நாங்கள்  படபடக்கும்  இதயத்தோடு  ஓட்டமாய்  ஓடுவோம். மதகடி  தாண்டியபிறகு  சிறு, சிறு  குடிசைகள்  கண்ணுக்குத்  தென்படும். அந்த  இடம்  வந்ததும்  ஓட்டம்  நின்றுபோகும். 

பழையபடி  சினிமா  கதைகள்  தொடரும். பள்ளிக்கூடச்  சுவரில்  சினிமா  போஸ்டர்  ஒட்டக்கூடாதென  ஹெட்மாஸ்டர்  கண்டித்து  சொல்லியிருந்தார். எதிரே  வரிசையாக  வீடுகளிருக்கும். போஸ்டர்  ஒட்டுபவன்  அங்கு  ஒட்டிவிட்டுப்  போவான். 

சைக்கிள்  கேரியரில்  போஸ்டர்களை  சுருட்டி  வைத்திருப்பவன்   ஒரு  பிளாஸ்டிக்  வாளியில்  பசையை  நிரப்பி  ஹேண்ட்பாரில்  மாட்டியிருப்பான். அவன்  கிணிகிணியென்று  மணியடித்தபடியே  வருவான். ‘க்ரிங், கிரிங்’   என்று  அவனுடைய  சைக்கிள் மணி  நடுநடுவே  வித்தியாசமாக  ஒலியெழுப்பும். 

அதை  வைத்து  பள்ளிக்கூடப் பிள்ளைகள்  அவனை  அடையாளம்  கண்டுகொண்டு  அவசரமாய்  சன்னல்  வழியே  எட்டிப் பார்ப்பர். ஒருமுறை  அறிவியல்  வகுப்பு  நடந்து  கொண்டிருந்தது. மரியதாஸ்  சார்  உணவுக்குழாய்  பற்றி  பாடம்  நடத்திக்கொண்டிருந்தார். மதிய உணவு  இடைவேளைக்குப்  பிறகான  வகுப்பு  என்பதால்  எல்லோர்  கண்களிலும்  தூக்கம்  அப்பிக்  கிடந்தது. 

எனக்கும்  மேலிமைகள்  கொக்கிக்  போட்டு  இழுத்தது  போல்  அடிக்கடி  சொருகிக் கொண்டன. மரியதாஸ்  சார்   மும்முரமாக  போர்டில்  உணவுக்குழாய்  படம்  வரைந்து  பாகங்கள்  குறித்தபடியே  அதன்  வேலைகள்  பற்றி  விளக்கிக்  கொண்டிருந்தார். 

அவரை  பேண்ட்  சார்  என்போம்.  பள்ளிக்கூடத்தில்  அவரைத்  தவிர  எல்லோரும்  வேட்டி  கட்டியிருப்பார்கள். அவர்  மட்டுமே  பெல்பாட்டமுள்ள  பேண்ட்  போட்டு  வருவார். 

அதனால்  அந்தப்  பெயர். சார்  உற்சாகமாக  பாடம்  நடத்திக்  கொண்டிருந்தவேளையில்  சாலையில்  ‘க்ரிங், க்ரிங் ‘ சத்தம்  கேட்க, மாணவர்களில்  சிலர்  அனிச்சையாக  எழுந்து  சன்னல்  பக்கம்  ஓடினர். மற்றவர்கள்  திடுக்கிட்ட  தினுசில்  தூக்கம்  கலைந்து  விழிக்க  சார்  திரும்பிப்  பார்த்தார். 

” டேய், களவாணிப்  பயலுங்களா, இங்க  வாங்கடா. “

 சாரின்  உரத்த  குரலில்  கட்டிடம்  அதிர்ந்தது. அடுத்த  அரைநொடியில்   அந்த  நால்வருக்கும்  சரியான  மண்டகப்படி  நடந்தது. அவர்கள்  கதற, கதற  ஸ்கேல்  முறிந்து  விழுந்தது. அதன்பிறகு   ஹெட்மாஸ்டரின்  தனிப்பட்ட  வேண்டுகோளின்  பேரில்  அங்கு  போஸ்டர்  ஓட்டுவது  நிறுத்தப்பட்டது. 

பள்ளிக்கூடம்  கடைத்தெருவிலிருந்தது. இன்டர்வல்  நேரத்தில்  சில  பிள்ளைகள்  உப்பு, புளி, பருப்பு  வாங்கி  வந்து  பைக்குள்  வைத்துக் கொள்வார்கள். நானும்  மிட்டாய்  வாங்க  தாத்தா  கடைக்குப்  போவேன். அப்போது  கடையில்  ஒட்டப்பட்டிருக்கும்  போஸ்டரைப்  பார்த்துவிட்டு  வருவதுண்டு. 

போஸ்டர்  பார்ப்பதென்பது  படத்தின்  ட்ரெய்லர்  பார்ப்பதற்கு  சமம். இப்போது போல்  கண்ணீர்  அஞ்சலி, இமயம்  சரிந்தது, பூ  உதிர்ந்தது  போஸ்டரெல்லாம்  அப்போது  கிடையாது. போஸ்டரென்றால்  அது  சினிமா  போஸ்டர்  மட்டும்தான். 

மட்டிக்  காகிதத்தில்  இருக்கும்  கதாநாயக, நாயகிகளை  பரவசத்துடன்  பார்த்தபடி நிற்போம். அம்மா, கணபதியண்ணன்  மனைவியிடம்  டைரக்டர்  பற்றியும்  விசாரிப்பாள். அவளுக்கு  பாலச்சந்தர், பாரதிராஜா, பீம்சிங்  படங்கள்  பிடிக்கும். கணபதியண்ணன்  மனைவி  விழிப்பாள். பின்,

” சட்டுன்னு  வாயில  வரமாட்டேங்குது ” என்று  சமாளிப்பாள். 

ஒருமுறை  சிறை  படம்  வந்திருந்தது. 

” அது  பெரியவங்க  பாக்குற  படம். அம்மா  போகட்டும். நீ  இரு” என்று  அப்பா  எனக்கு  தடையுத்தரவு  போட்டார். 

அதுநாள்வரை  அப்படியொரு  நிலை  வந்ததேயில்லை. ஒருவேளை  சாப்பாடு  போடாமலிருந்தால்கூட  கவலைப்பட்டிருக்கமாட்டேன். சினிமாவுக்குப்  போகக்கூடாதெனச்  சொன்னது  பெரும்   வேதனையாக  இருந்தது. முதலில்  கெஞ்சிப்  பார்த்தேன். 

பின்  தாரைதாரையாக  கண்ணீர்  வடித்தேன். எதற்கும்  அப்பா  அசைந்துகொடுக்கவில்லை. கண்களைக்  கசக்கியபடியே  அம்மாவிடம்  சிபாரிசுக்குப்  போனபோது  அவள்  கண்டுகொள்ளவேயில்லை. அன்று  ஞாயிற்றுக்கிழமைவேறு. காலையிலிருந்து  அழுதழுது  கண்கள்  வீங்கிவிட்டன. 

” அழுது  காரியத்த  சாதிச்சிக்க  பாக்குறா.  நான்  ஒத்துக்கப்போறதில்ல. “

அப்பா, அம்மாவிடம்  மெதுவாய்  சொல்லிக்  கொண்டிருந்தார்.  மாலை  மூன்று  மணிவாக்கில்  வெயில்  தாழ்வாரத்திலிருந்து  முற்றத்திலிறங்கிய  நேரத்தில்  அப்பாவைத்  தேடிக்கொண்டு  கிருஷ்ணமூர்த்தி  மாமா  வந்தார். 

” பொண்ணுக்கு  நகையெடுக்க  திருவாரூர்  போவணும். நீங்களும்  வந்தா  தேவலாம்.”

மாமா  கூப்பிட, அப்பா  உடனே  கிளம்பிவிட்டார். 

” பிளசர்லதான்   போறோம். அதனால  நேரம்  கொஞ்சம்  முன்னப்பின்ன  ஆனாலும்  இருந்து  வாங்கிட்டு    வந்துரலாம்னு  நெனச்சிக்கிட்டிருக்கேன். நீங்க  கெளம்பியிருங்க . அரைமணி  நேரத்துல  வந்துடறேன்.” 

கிருஷ்ணமூர்த்தி மாமா  போனபிறகு, அவசரமாய்  அம்மா  கொடுத்த  காபியை  விழுங்கியவர்,
” சினிமாவுக்கு  இவளையும்  கூட்டிட்டுப்போயிடு. வீட்டுல  தனியா  விடமுடியாது” என்று  சொல்லிவிட்டுப்  போனார். 

என்   அழுகை  ஸ்விட்ச்   நிறுத்தினாற்போல  சட்டென  நின்றுபோனது. அவசரம், அவசரமாக   முகம்  அலம்பி  உடை  மாற்றிக்கொண்டேன். 

கொட்டகையில்  கூட்டம்  நிரம்பி  வழிந்தது. 

அதிலும்  பெண்கள்  கூட்டம்  அதிகமாயிருந்தது. லட்சுமியின்  நடிப்புக்காக  இரண்டாவது  முறை  படம்  பார்க்க  வந்ததாக  அருகில்  அமர்ந்திருந்த  பெண்  முன்  வரிசை  பெண்ணிடம்  சொன்னாள். ஏற்கனவே  அழுதழுது  வீங்கிக்கிடந்த  என்  கண்கள்  லட்சுமியின்  நடிப்பில்  மேலும்  வீங்கிப்போயின. பெண்கள்   பக்கமிருந்து  மூக்குறுஞ்சும்  சத்தம்  கேட்டுக்கொண்டேயிருந்தது. 

” கட்டையில  போறவன். அந்த  மவராசிக்கு  இப்புடியொரு  பாதகத்த  செய்ய  எப்புடிடா  துணிஞ்ச…..நீ  உருப்புட  மாட்ட……”

ஒரு  பாட்டி  ராஜேஷைப்  பார்த்து  விரல்களை  நெறித்தாள். மறுநாள்  எனக்கு  காய்ச்சல்  வந்துவிட்டது. நான்குநாட்கள்  கண்களை  திறக்கமுடியாது  உடம்பு  அனத்திற்று.  சிறை  போய்  சிந்துபைரவி  வந்துவிட்டதாக  மோர்  வாங்க  வந்த  கணபதியண்ணன்  மனைவி  சொன்னது  காதில்  விழுந்தது. 

வைத்தியர்   தந்த  மாத்திரையை  விழுங்கிவிட்டு  அரைகுறை  நினைவோடு  கிடந்த  எனக்கு  அவள்  சொன்னது  மனதில்  பதியாமலே  போனது. கடைசியாக  டூரிங்  டாக்கீஸில்  சபாபதி  படம்  வந்தது. படத்தில்  காளி  என். ரத்னம்  அப்பாவியாக  வெளுத்து  வாங்குவார். 

அவரை  திரையில்  காணும்போதெல்லாம்  விழுந்து விழுந்து  சிரித்தேன். உடல்மொழியோடு  கூடிய  அவருடைய  நகைச்சுவையில்  கொட்டகை  குலுங்கியது. அதுதான்  இறுதிப்படம். அத்தோடு  கொட்டகை  இழுத்து  மூடப்பட்டது. லைசென்ஸ்  ரத்து  செய்யப்பட்டதாக  பேசிக் கொண்டார்கள். 

ஒரு  உயிரின்  நழுவல்  போல  அது  அனைவர்  மனத்திலும்  இனம்புரியாத  வலியை  உண்டாக்கிற்று. மங்கள  இசை  கேட்கும்  சாயங்காலப்பொழுதுகள்  மௌனமாக  கிடந்து  வெறுமையைக்  கூட்டின. கணபதியண்ணன்  மனைவி, குழந்தைகளுடன்  சொந்த  ஊருக்கு  கிளம்பிவிட்டார். 

” சொந்த  ஊருக்கே  போயிரலாம்னு  இருக்கோம். அங்க  போயி  விவசாய  வேல  ஏதும்  பாக்கலாமுன்னு…..”

கணபதியண்ணன்  மனைவி   எங்கோ  பார்த்தபடி  சொன்னாள். எனக்கு  அழுகை, அழுகையாக  வந்தது. ராணியின்   ஆத்தா  கோலம்  போடும்  தரையில்  உட்கார்ந்து  கொட்டகையை  மனிதர்  போல  பாவித்து  அடிக்கடி  ஒப்பாரி  வைப்பாள்.

” ஏஞ்சாமி, எங்கள  வுட்டுட்டுப்  போயிட்டியே…..இது  நாயமா…….நீ  இல்லாத  ஊரு  வெளக்கில்லாத  ஊடாட்டம்  இருண்டு  போயி  கெடக்குதே……”

அவளின்  புலம்பல்  ஒருவித  வலியை  உண்டாக்கிற்று. அனைவர்  மனதிலும்  இருந்த  துக்கத்தின்  குறியீடாக  அவள்  புலம்பல்  அமைந்ததில்  தெருவாசிகள்  ஒருவரும்  அவளை  ஒரு  அதட்டல்  கூட  போடவில்லை.  

இளஞ்சிவப்பு  நிறத்திலோ  அல்லது  மஞ்சள்  நிறத்திலோ  மட்டித்தாளில் ‘ செல்வி  திரையரங்கம்’ என்று  அச்சடிக்கப்பட்ட  போஸ்டரின்  மிச்சத்  துணுக்குகள்  எங்காவது  ஒட்டியிருக்கிறதா  என்று  வெளியில்  செல்லும்போதெல்லாம்  கவனிப்பேன். 

அது  என்  நினைவுகளில்  தங்கிப்போய்விட்ட  ஒன்றாக  மட்டுமே  இருந்தது. கொட்டகை  இருந்த  இடத்தில்  அதன்  அடையாளமாக  ஒரேயொரு  குட்டி  மண்சுவர்  நின்றிருந்ததைப்  பல  வருடங்கள்  கழித்து  அந்தப்  பக்கமாக  சென்றபோது  பார்த்தேன். தும்பை  செடிகளும், பெயர்  தெரியாத  கொடிகளும்  மண்டிக்கிடந்த  அவ்விடத்தில்  ஒரு  காலத்தில்  மாயாஜால  உலகம்  உயிர்ப்புடன்  இயங்கிக்  கொண்டிருந்தது  என்று      இப்போதும் யாராவது பேசிக்கொண்டே  இருக்கிறார்கள். 

3 Replies to “டூரிங் டாக்கிஸ்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.