காடு

This entry is part 1 of 2 in the series காடு

பொங்கல் விடுமுறை 5 நாட்கள் என்று அறிவிக்கப்பட்டதும், கர்நாடகாவின் கபினி வனப்பகுதியின் ‘’Ghost’’ என அழைக்கப்படும் கருஞ்சிறுத்தையை காண வேண்டுமென பலநாட்களாக காத்துக்கொண்டிருக்கும்  கானுயிர் புகைப்படக்காரனான இளைய மகன் தருணின் பொருட்டும் அங்கிருக்கும் காட்டுமரங்களின் முதலைமரப்பட்டைகளையும் ( Crocodile bark ), அங்கு அதிகமாக வளரும் தந்தப்பாலை செடிகளையும் காணவேண்டி அங்கேயே செல்லலாமென  முடிவானது.  ஏமாற்றத்தைத் தவிர்க்க முன்கூட்டியே கானுலாக்களுக்கும், கபினியாற்றிலும், கழிமுகத்திலுமான படகுப்பயணங்களுக்கும் விண்ணப்பித்தோம். வைரஸ் தொற்றுக்காலமென்பதால் ரயில், பேருந்து பயணங்களை தவிர்த்து, அன்னூர்-சத்தியமங்கலம் வழி மைசூர் செல்ல வெறும் 200 கிமீதான் என்பதால்  காரிலேயே செல்ல திட்டமிட்டோம்.

புதனன்று போகிப்பண்டிகையென்பதால், எதிர்வரும் கோடைக்கால நோய்த்தொற்றுகளின் இயற்கைத்தடுப்புகளான வேம்பு மற்றும் மாவின் இலைகள், சிறுபீழை மற்றும் ஆவாரம் மலர்களாலான கொத்துக்களால்  வீடெங்கும் காப்புக்கட்டுதலை முடித்த பின்னர்,  பொள்ளாச்சியிலிருந்து அன்னூர் வழியே பயணத்தை துவங்கினோம். இந்த மாதம் முழுவதுமே  இடைவிடாத மழையானதால், அக்கம்பக்கம் அணைகள் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்பட்டு வயல்களும் தோப்புக்களும் நிரம்பி கடவு வழிந்தோடிக்கொண்டிருந்த சாலைகளில் குளிர் நிரம்பியிருந்தது.

அன்னூர் சத்தியமங்கலம் மலைப்பாதையின் 27 கொண்டை ஊசி வளைவுகளும் முன்பு போல் தொடர் சரக்கு லாரி போக்குவரத்தினால் இடைஞ்சல் வராதபடிக்கு நன்கு விரிவாக்கப்பட்டிருந்ததால் எளிதில் மலையேறி இறங்கினோம்.

 சத்தியமங்கலம் மைசூரு செல்லும் வனச்சாலையின் 40 கிமீ தூரமுமே சாலையென்றே சொல்ல முடியாத வகையில் குண்டும் குழியும் கற்களுமாக இருந்தது. ஆனால் காட்டின் விளிம்பிலும், காடு முழுவதும், பல்லாயிரக்கணக்கான் மூங்கில்கள் பொன் போல் பூத்து நின்றதை பார்த்ததும் பயணத்தின் சிரமமெல்லாம் பெரிதாகப்படவில்லை. மூங்கில்கள் பூப்பது ஒரு அரிய நிகழ்வு அதுவும் ஒருவர் ஒருமுறை பார்ப்பதே அரிது. நான் இரண்டாம் முறையாக பார்க்கிறேன். 2016’ல் தாவரவகைப் பாட்டியல் பயிற்சியின் பொருட்டு சென்றிருக்கையில் கேரளாவின் அமைதிப்பள்ளத்தாக்கு, சைரந்திரி வனத்தில் மூங்கில்பூப்பை முதன்முதலாக பார்த்திருந்தேன்

மூங்கில் பூப்பதென்பது மூங்கில் அழிவதுதான். வாழ்நாளின் இறுதியில் முதலும் கடைசியுமாக ஒரே ஒரு முறை பூத்துக்காய்த்து அழியும் Monocarpic வகையை சேர்ந்த மூங்கில்கள்  இப்படி சொல்லி வைத்தாற்போல  ஒட்டுமொத்தமாக 48 லிருந்து 50 வருடங்கள் கழித்து பூத்து பின்னர் ஏராளமான மூங்கிலரிசி எனப்படும் விதைகளை உருவாக்கிவிட்டு மடிந்துவிடும். 

மூங்கிற்சாவு எனப்படும் இந்த நிகழ்வு பெரும் பஞ்சத்தையும் அழிவையும் கொண்டு வருமென்று இந்தியாவின் பலபாகங்களில் நம்பிக்கை இருக்கின்றது. ஆனால்  ஏராளமான அளவில் உருவாகும் மூங்கிலரிசியை உண்ணும் எலி, பெருச்சாளி போன்ற கொறித்துண்ணும் விலங்குகள் பல்கிப்பெருகி பிற தானியங்களையும் உண்ணத் துவங்கி, உண்டான உணவுத் தட்டுப்பாட்டினால் இந்தியா சந்தித்திருந்த பல பெரும் பஞ்சங்கள் விட்டுச்சென்ற கோர நினைவுகளால் இப்படியொரு நம்பிக்கையும் அச்சமும் நிலைபெற்று விட்டது. மூங்கிலின் மிகுபூப்பிற்கும் (Gregarious flowering of Bamboo) தொடரும் பஞ்சத்திற்கும் தாவரவியல் அடிப்படையில் எந்த தொடர்புமில்லை

 புல் குடும்பத்தை சேர்ந்த தாவரமான மூங்கிலின் 1200 வகைகள் உலகெங்கிலும் பரவியுள்ளன. இவற்றில்  24 பேரினங்களின் 138 சிற்றினங்கள் இந்தியாவில் வளருகின்றன. இதில் 3 மட்டுமே அயல் தாவரங்கள் மற்ற அனைத்துமே இயல் தாவரங்கள். உலகெங்கிலுமே மூங்கில் பூப்பென்பது அரிய நிகழ்வுதான்.

 இந்தியாவில் மணிப்பூரில் மட்டும் 53 சிற்றினங்களும், அருணாச்சலபிரதேசத்தில் 50 சிற்றினங்களுமாக, வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே இந்தியாவின் மொத்த மூங்கிலின் 50 சவீதத்திற்கும் மேற்பட்ட  வகைகள் விளைகின்றன. இப்பகுதிகளில்  இசைக்கருவிகள், காகிதங்கள், தொப்பிகள். ஆயுதங்கள், மேசை நாற்காலிகள், வீடுகளின் கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாட வாழ்விற்கான 1500க்கும் மேற்பட்ட பொருட்கள் மூங்கிலினால்தான் செய்யப்படுகின்றன. 

 மூங்கில் குருத்தும், மூங்கிலரிசியும்  அம்மக்களின் மிக விருப்பமான முக்கியமான உணவாகும். சாப் ஸ்டிக்ஸ் எனப்படும் உணவுக் குச்சிகளாகவும், எரிவிறகாவும் மூங்கிலே இங்கு  பயன்படுகின்றது. ஆசியாவின் மிக உயர்ந்த கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளில் இங்கு விளையும் உறுதியான, நீண்ட கணுவிடைவெளிகளும், வளையும் தன்மையும் கொண்டிருக்கும் நெடுமூங்கில்களே சாரம் கட்டப் பயன்படுகின்றன. மூங்கிலின் இலைகளும் கால்நடைத் தீவனமாக பயன்படுகின்றது. 

அஸ்ஸாமிய மூங்கிலான Dendrocalamus tulda விலிருந்து செய்யப்படும் புல்லாங்குழல்தான் அங்கு கோவில் விழாக்களில் இசைக்கப்படுகின்றது. இக்குழலிசை துஷ்டசக்திகளை விரட்டுவதாக அங்கு நம்பிக்கை. நிலவுகின்றது

வடகிழக்கிந்தியாவில், மக்களின் வாழ்வுடன் இரண்டறக் கலந்துள்ள மூங்கில் பூப்பதென்பது பெரும் அபசகுனமென்றும், அழிவுக்கான அறிகுறியென்றும்  நெடுங்காலமாகவே நம்பிக்கை நிலவுகின்றது 

மிசோரத்தின் மெலொகன்னா பாக்கிஃபெரா (Melocanna baccifera) என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட முள்ளி மூங்கிலிலிருந்தே (Muli Bamboo)  தொட்டில்களும், கிறிஸ்துவமதம் அதிகம் பரவியிருப்பதால் சவப்பெட்டிகளும் கூட  செய்ப்யபடுகின்றன.

இப்பகுதிகளில் வளரும் Phyllostachys bambusoides எனப்படும்  பிறிதொரு மூங்கில் வகையின் கணுக்களிலிருந்து சுரக்கும் மணலைப்போன்ற சொரசொரப்பான ஒரு வடிதலை சுரண்டி சேகரிக்கப்படும் தபஷீர் (tabasheer) உள்ளூர் மக்களால் பல நோய்களுக்கு  மருந்தாகவும், பாலுணர்வு ஊக்கியாகவும் (Aphrodisiac) பயன்பாட்டிலிருக்கின்றது. தரைமட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக அமைக்கப்பட்டிருக்கும் மூங்கில் கழிகளை  அசைத்து, தாளத்திற்கேற்ப அவற்றின் இடைவெளிகளில், மூங்கில் தலையணியுடன் பாரம்பரிய உடையிலிருக்கும் மிசோர மக்கள் ஆடும் செரா (Cheraw) நடனம் உலகப்புகழ் பெற்றது

அஸ்ஸாமிலும் மிசோரத்திலும் மூங்கிலை முழுநிலவன்றும், செவ்வாய் சனிக்கிழமைகளிலும் வெட்டுவது அமங்கலமென்று கருதப்படுகின்றது. 

ஏழு சகோதரி மாநிலங்களெனப்படும் இம்மாநிலங்களின் பண்பாடு, சமூக மற்றும் அரசியல் தளங்களில் மூங்கில் மிக முக்கிய தாக்கமுண்டாக்கும் ஒரு தாவரமாக இருந்து வருகின்றது, குறிப்பாக மிசோரத்தில் இதன் முக்கியத்துவம் மிக அதிகம். மிசோரம் மாநிலத்தின்  மொத்த நிலப்பகுதியில் 49 சதவிகிதப் பகுதியில் மூங்கில் காடுகள்தான் உள்ளன.

மிசோ மொழியில் மூங்கில் பூப்பதை மௌடம்  என்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திய  ஒரு மெளடம் நிகழ்வினைத்தொடர்ந்து பெரும் பஞ்சமும் பல்லாயிரம் இறப்புக்களும் நிகழ்ந்துள்ளது.  அதன் பிறகு 1958 ல் மற்றுமொரு மெளடம் நிகழ்வும் தொடர்ந்த பெரும் பஞ்சமும் வந்திருக்கிறது. அக்காலத்தில், அஸ்ஸாமின் கீழ் இருந்த இப்பகுதி  மக்கள் மூங்கில் பூப்பு மற்றும் தொடர் பஞ்சத்துக்கான முன்கூட்டிய நிவாரணம் மற்றும் தடுப்பு ஏற்பாடுகளின் பொருட்டு அரசுக்கு விடுத்த கோரிக்கைகளையும், மூங்கில் பூப்பைக் குறித்த முன்னெச்சரிக்கையையும் மதிக்காத அரசை எதிர்த்து  மிசோரம் நாட்டு பஞ்ச முன்னணி என்ற பெயரில் தொடங்கப்பட்ட அமைப்புதான் பின்னர்  மிசோ தேசிய முன்னணி என்ற பிரிவினைப் போராளி அமைப்பாக உருமாறியது. அவ்வமைப்பில் முன்னணிப் போராளியாயிருந்த ’லால்தெங்கா’ தான் மிசோரம் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட பின் முதல்வரானார். அவருடன் போராளிக் குழுவில் முக்கிய பங்கு வகித்த’ சோரம்தெங்கா’வே  தற்போது மிசோரம்  முதலமைச்சராக உள்ளார்.  

சோரம்தெங்காவின் தலைமையில் மிசோரத்தின் 2006-2007‘லான மூங்கில் பூப்பை ஒட்டி இந்திய இராணுவம் , கொன்ற எலிகளின் வாலுக்கு 2 ரூபாய்கள் என் அறிவித்தும், மூங்கில் பூக்கும் சமயத்தில் தானியங்களை பயிரிடாமல் எலிகள் உண்ணாத இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றைப் பயிரிடும் பரிந்துரையை அளித்தும்   எலிப்பெருக்கத்தையும் அழிவையும் ஓரளவிற்கு கட்டுப்படுத்தியது.

இப்பகுதி மக்கள் மூங்கிலை சூடு பண்ணுகையில் கிடைக்கும் எளிதில் எரியும் தன்மையுடைய பிசினை விளக்கெரிக்கப் பயன்படுத்துகின்றனர். சிலிசிக் அமிலம் நிறைந்துள்ள மூங்கிலின் கெட்டியான கணுக்களை மட்டும் நறுக்கி துண்டுகளாக்கி, வறுத்துப்பொடித்து அதிலிருந்து காபியைப்போல ஒரு மணமுள்ள பானம் தயாரித்து அருந்துவதும் கிழக்கிந்திய மாநிலங்களில் பரவலாக உள்ள ஒரு உணவுப்பழக்கமாகும். 

மூங்கில் மிகுபூப்பு  லாவோஸ்,  மடகாஸ்கர்,  ஜப்பான்  மற்றும்  தென் அமெரிக்க நாடுகளிலும் நிகழ்கின்றது. சீனாவில் 1980ல்  பசானியா ஃபாங்கியானா (Bashania fangiana) என்னும் மூங்கில் இனத்தின் மிகுபூப்பினால், முதன்மை உணவாக மூங்கிலையே எடுத்துக்கொள்ளும்  பாண்டா  (Giant Panda) விலங்குகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

 சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியாவிலெல்லாம் மூங்கில் காடுகள் இருக்கின்றதென்றாலும் சீனாவின் மூங்கில் காடுகளே உலகில் மிகப்பெரியவை. ஆந்தோசயானின் நிறமிகள் அடர்ந்துள்ள கருப்பு மூங்கில் உள்ளிட்ட சுமார் 300 மூங்கில் சிற்றினங்கள் சீனாவில் விளைகின்றன. சீனா மட்டுமே ஆண்டுக்கு 57 பில்லியன் ஜோடிகள் உணவுக்குச்சிகளை (Chopsticks) தயாரிக்கின்றது. இக்குச்சிகளில் குழந்தைகளுக்கானவை, தம்பதிகளுக்கான ஜோடிகள், ஒற்றை  மற்றும் மீள் உபயோகத்துக்கானவை என ஏராளமான வகைகள் உள்ளன.   

 ஜப்பானிலும் மூங்கில் மிக முக்கியமான தாவரம். பைனுடன் சேர்ந்து, மூங்கிலையும் ஜப்பானியர்கள் மகிழ்ச்சி மற்றும் தூய்மையின் அடையாளமாக கொண்டிருக்கின்றனர். புத்தாண்டுக்கு முன்னதாக வீடுகளின் நுழைவாயிலை பைன் மற்றும் மூங்கில் கிளைகளால் அலங்கரிப்பது, வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் தருமென இவர்கள் நம்புகின்றனர்  ஜப்பானில் சாகனோ மூங்கில் காடுகளின் மூங்கில் தண்டுகளின் இடையே புகுந்து வரும் காற்றின் ஒலியை ஜப்பானிய அரசாங்கம் “பாதுகாக்கப்பட வேண்டிய ஜப்பானின் நூறு ஒலிகளில்” ஒன்றாக அங்கீகரித்திருக்கிறது.

டேக்கினொக்கொ- (takenoko) எனப்படும் சுவையான சத்தான மூங்கில் குருத்துணவு  ஜபபானில் வெகு பிரபலம். தற்போது மூங்கில் குருத்து உணவுகள் தமிழ்நாட்டிலும் குறிப்பிட்ட உணவகங்களில் கிடைக்கின்றது. ’’பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது’’ என்னும் நமது பழஞ்சொல்லுக்கு நிகராக ஜப்பானில் மூங்கில் காடுகளின் சலசலப்பை கொண்டு பழங்சொல்லொன்று, அதே பொருளில் புழக்கத்தில் இருக்கிறது.. 

மூங்கில் பூக்கும் காலத்தில் எலி, பெருச்சாளி போன்ற விலங்குகளுக்கு இனப்பெருக்கத்திற்கான கூடுதல் தூண்டலுண்டாகுமென்பதும் இயற்கையின் மற்றுமொரு விநோதம்.

மகாபாரதத்தில் திரெளபதி ஜெயத்ரதனால் இழுத்துச்செல்லப்படுகையில் ’’மூங்கில் பூத்த பின்பு வரும் பஞ்சத்தில் உயிர்கள் அழிவது போல, நீ அழிவாய்’’  என்று சாபமிடுவாள். வெண்முரசிலும் ஃபல்குனையாக இருக்கும் அர்ஜுனனிடம் நாகர்களின் படைவல்லமையை சொல்லும் ஒரு எதிர்தரப்பு வீரன் அவர்கள் மூங்கில் பூக்கும் காலத்து எலிகள் போல பெருகிக்கொண்டே இருக்கிறார்கள் என்பான்.

பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தொலைவிலிருப்பினும் ஒரே இனத்தை சேர்ந்த எல்லா மூங்கில்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் எப்படி ஒரே சமயத்தில் ஒட்டுமொத்தமாக பூத்து, அழிகின்றதென்பதை தாவர அறிவியலாலும் விளக்க முடியவில்லை

புதுத்தளிர்களும் மலர்களும் உருவாகும் காலத்தை, அவை பழுத்து உதிரும் காலத்தை, பட்டாம்பூச்சிகளின் முதல் பறத்தலின் காலத்தை, வலசைப்பறவைகள் பயணம் துவங்கும் கணத்தை, எனச்  சூழலுக்கும் உயிர்களின் வாழ்வுக்குமான தொடர்புகளின் அறிவியலான Phenology உலகெங்கிலுமான மூங்கில் பூப்பைக் குறித்து ஆய்வுகளை செய்தபடியே இருக்கிறது,  மூங்கில்களின் அடியில் இருக்கும் கிழங்குகளில் (Rhizome) தலைமுறைகளாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பூக்கும் காலத்தைக் குறித்த கணக்குகள் சரியான நேரத்தில் அதே இனத்தைச் சேர்ந்த அனைத்து மூங்கில்களுக்கும் கடத்தப்படுகின்றன அல்லது  எப்படியோ அனுப்பப்படுகின்றன என்று மட்டுமே இப்போதைக்கு அனுமானிக்கப்பட்டிருக்கின்றது. 

இப்படி குறிப்பிட்ட காலஇடைவெளியில் பல்லாயிரம் கிமீ தொலைவிலிருப்பினும்  மொத்தமாக பூக்கும் தாவரங்களான மூங்கில், குறிஞ்சி போன்றவை ‘Plietesials’ எனப்படுகின்றன. இத்தனை  துல்லியமான காலக்கணக்குகளை எவ்வாறு இவை நினைவில் வைத்திருக்கின்றன என்பதெல்லாம் மர்மம்தான். குறிஞ்சியில் 12 ஆண்டுகளுக்கொரு முறையும் 9 ஆண்டுகளுக்கொரு முறையும் மலரும் வகைகளுக்குள் எவ்வித குழப்பமுமில்லாமல் காலம் காலமாக மிகச்சரியாக  பூத்துக்கொண்டே இருப்பதும் தாவரவியலின் அதிசயங்களில் ஒன்று.

எல்லா மூங்கில் இனங்களும் 48-50 வருட இடைவெளியில் தான் பூக்குமென்பதில்லை.  ஜாவா வகையான Schizostachyum elegantissimum , மற்றும்,  Arundinaria wightiana மூங்கில்கள் மூன்று வருடஙகளுக்கொரு முறையும்,  Phyllostachys bambusoides , எனப்படும் சீன மூங்கில் 120 வருடங்களுக்கு ஒரு முறையும்,   Bambusa vulgaris  வகை 150 வருடங்களுக்கு ஒருமுறையும் மலர்ந்து அழியும். பூக்காமலே அழியும் மூங்கில் இனங்களும் உள்ளன. 

மூங்கிலின் 30’லிருந்து 40 அடி உயரம் வரை வளர்ந்திருக்கும் கிளைத்த, உலர்ந்த மஞ்சரிகளின் பொன்னிற மலர்களால் நிறைந்திருந்த, அந்தக் காட்டையும, வழியோரங்களிலும் பூத்து நிறைந்திருந்த மூங்கில்களையும் உடன் பயணித்த வாகனங்களில் வந்த ஒருவர் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை. சாலையோரங்களிலேயே சாதாரணமாக தென்பட்ட புள்ளிமான் கூட்டங்களையும், யானைகளையுமே வளைத்து வளைத்து படமெடுத்துக் கொண்டிருந்தார்கள். இனி இவ்வழியில் மற்றுமொரு மூங்கில் மிகுபூப்பை காண இன்னும் 50,60 வருடங்கள் ஆகுமே, இப்படி தவற விடுகிறார்களே இவ்வரிய நிகழ்வை என்று எனக்கு ஆதங்கமாக இருந்தது. 

பொதுவாகவே காட்டுயிர் என்றாலே அது பெரும்பாலானவர்களுக்கு விலங்குகள் மட்டும்தான் புலி, சிங்கம், மான், யானை ,கரடிதான். Wild life என்பது flora and fauna இரண்டும் தான் என்பதே பலருக்கும் தெரிவதில்லை 

தாவரங்களைக் குறித்த அறிதலும் அபிமானமும் உலகெங்கிலுமே மிகக் குறைவாகவே இருக்கின்றதென்பது என் அபிப்பிராயம். மூங்கில்களைக் குறித்தும் அப்படித்தான். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாஸ்து மூங்கில் / அதிர்ஷ்ட மூங்கில் என அழைக்கப்பட்டு  சிறு கிண்ணங்களில் வளர்க்கப்படும் தாவரம்., மூங்கிலே அல்ல. சீனா மற்றும் தாய்வானில் வளர்க்கப்பட்டு உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அஸ்ப்ராகேசியே குடும்பத்தை சேர்ந்த டிரசீனாதான் மூங்கிலென்று விற்பனை செய்யப்படுகின்றது. . Dracaena sanderiana  என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட இவற்றின் கணுக்களும் கணு இடைவெளிகளும் மூங்கிலைப்போல இருப்பதால் இவை மூங்கிலென்று அழைக்கப்படுகின்றன.

மூங்கில்கள் இப்படி பூத்த பின்பு அம்மலர்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெற்று பெண் மலர்கள் கருவுற்று விதைகள் உண்டாகி அவை உதிர்ந்து பின்னர் புதிய மூங்கில்கள் உருவாகி, நிலைத்து வளர எப்படியும் 7லிருந்து 9 ஆண்டுகள் ஆகிவிடும். அது வரையிலும் மூங்கில் குருத்துக்களையும் பசும் இலைகளையும் விரும்பியுண்ணும் அக்காட்டின் யானைகளும் காத்திருக்க வேண்டியதுதான். 

சத்தியமங்கலம் சாலையில் பழுத்துதிரும் பொன்மஞ்சள் இலைகளும் நெடிதுயர்ந்த மலர் மஞ்சரிகளுமாக இருந்த  மூங்கிலின் அடர்ந்த புதரொன்றினருகே ஒற்றைக்கொம்பன் யானையொன்று தலைகவிழ்ந்தபடி, அசையும் துதிக்கை நுனியை பார்த்தபடிக்கு வெகுநேரம் அசையாமல் நின்று கொண்டிருந்தது. என்ன நினைத்து கொண்டிருந்தன அல்லது என்ன பேசிக்கொண்டிருந்தன அப்பேருயிர்களிரண்டும்? இயற்கையின் பல்லுயிர்களுக்கிடையேயான பகிர்வாழ்வின் மர்மங்களும் ரகசியங்களும் மனிதர்களால் அறிந்துகொள்ளவே முடியாதவை. அறியாக்கரங்களால் வரையப்பட்ட ஒரு அழகிய ஓவியம் போலிருந்தது அக்காட்சி.

 ஒரு கையளவு சாலையில் உதிர்ந்து கிடந்த மூங்கில் நெல்மணிகளை மட்டும் சேகரித்துக் கொண்டேன். வீடு திரும்பியதும் அவற்றை உடைத்து வைக்கப்போகும் மூங்கிலரிசி பாயஸத்தில் இயற்கையின் அரிய சுவையும் பயணத்தின் இனிய சுவையும் கலந்திருக்கும்.

இன்னும் 60 வருடங்கள் கழித்து என் மகன்கள் அவர்களின் பேரப்பிள்ளைகளுடன் இவ்வழியே வருகையில் மீண்டுமொரு மூங்கில் பூப்பை பார்க்கும்படி அருளப்படுவார்களாக என்றெண்ணியபடி  பயணத்தை தொடர்ந்தேன்!

Series Navigationகாடு >>

2 Replies to “காடு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.