குஷ்வந்த் சிங் (இங்கிலிஷ் மூலக் கதை)

என் பாட்டி எல்லோருடைய பாட்டியைப் போன்றே முதிர்ந்தவர். நான் பார்த்த இருபது வருடங்களில் பாட்டி சுருக்கங்களுடனும், மடிப்புகளுடனும் முதிர்ந்தே இருந்தார். ஒருகாலத்தில் பாட்டியும் இளமையான அழகான பெண்ணாக இருந்ததாகவும், அவருக்கு திருமணமாகி கணவர்கூட இருந்ததாக கூறுவர், அவை எனக்கு நம்பக்கூடியவையாக இருந்ததே இல்லை. ஆனால் தாத்தாவின் சித்திரம் வரவேற்பறை கணப்படுப்பு மாடத்தின்மேல் மாட்டப்பட்டிருந்தது. பெரிய முண்டும், இறுக்கமற்ற தளருடையும் அணிந்திருந்தார். அவருடைய நீளமான வெள்ளைத்தாடி மார்பைமூடி நீண்டு வளர்ந்திருந்தது. அவருடைய இந்த தோற்றத்திற்கு நூறு வயதாவது இருந்திருக்க வேண்டும். அவரைப்பார்த்தால், அவருக்கு மனைவி, குழந்தைகள் எல்லாம் இருக்கும் என யாராலும் சொல்ல முடியாது. வேண்டுமானால் கொள்ளை கொள்ளையாக பேரக்குழந்தைகள் இருந்திருக்கலாம். என்னைப் பொறுத்த வரையில், என்னுடைய பாட்டி இளமையாகவும், வசீகரமான தோற்றத்துடனும் இருந்திருப்பார் என்பது நினைத்துப் பார்க்கக்கூட முடியாத ஒன்று. பாட்டி சிறுவயதில் விளையாடிய விளயாட்டைக் குறித்துக் கூறுவன யாவும் அத்தனை அபத்தமாகவும், அவருடைய சித்திரத்திற்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாதவையாகவும் தோன்றும், அவற்றை ஏதோ தீர்க்கதரிசியின் கட்டுகதைகளைப்போலே நாங்கள் கேட்போம்.
எப்போதும் பாட்டி குள்ளமாக, பருத்த உடல் சற்று முன்னோக்கி வளைந்தவாறு இருப்பார். அவருடைய முகத்தின் சுருக்கங்கள் எல்லா இடங்களிலிருந்தும் எல்லா இடங்களுக்கும் குறுக்கும்நெடுக்குமாக ஓடியிருக்கும். இல்லை. உறுதியாகவே தெரியும், நாங்கள் அறிந்த பாட்டியாகவேதான் அவர் எப்பொழுதும் இருந்திருப்பார். மிகவும் முதிர்ந்தவர். இன்னும்கூட கொஞ்சம் முதிர முடியாதளவு முதிர்ந்து முதுமை ததும்பி நிலைத்துப்போனது போல் இருப்பார். தூய வெள்ளை ஆடையில், ஒருகையை முன்னோக்கி மடிந்த உடலை சமன்செய்ய இடுப்பில் தாங்கிப்பிடித்து, இன்னொரு கையில் ஜெபமாலையை உருட்டிப்பிடித்துக்கொண்டு தளர்ந்த நடையில் வீடெல்லாம் உலவுவார். அவருடைய வெள்ளைச் சுருள் முடிகள் கலைந்து முகச்சுருங்களின்மேல் பரவிக்கிடக்கும், உதடுகள் ஓய்வில்லாது அமைதியாக எந்நேரமும் மந்திர சுலோகங்களை உச்சரித்துக்கொண்டே இருக்கும். ஆம், அவர் மிக இனிமையானவராக இருந்திருக்கக்கூடும். அவரைப்பார்க்கும்பொழுது, குளிர்காலத்தில் மலையுச்சியில் காணக்கிடைக்கும் நிலக்காட்சியைப்போன்றே அமைதியாகவும், நிறைவாகவும், பரிபூர்ணமாகவும் தோன்றும்.
நானும் பாட்டியும் நல்ல நண்பர்கள். தாயும், தந்தையும் நகரத்திற்கு குடிபெயர்ந்தபோது, நானும் பாட்டியும் கிராமத்தில் ஒன்றாகச் சேர்ந்தே இருந்தோம். பாட்டிதான் என்னை காலையில் எழுப்பி, பள்ளிக்கு தயார் செய்வார். என்னை குளிக்கவைத்து, உடையணிவிக்கும் வேளையிலே காலை பிரார்த்தனைப்பாடலை ஒரே பாட்டுத்தொனியில் சொல்லி முடிப்பார், கூடவே அதை நானும் கற்றுக்கொள்வேன் என்ற நம்பிக்கையில். நானும் கேட்பேன், ஆனால் அது பாட்டியின் குரலினிமைக்குத்தானே தவிர அதன் ஒரு வார்த்தைகூட எனக்குள் சென்றதேயில்லை. ஏற்கனவே என் எழுதுபலகையைக் கழுவி, மஞ்சள் சுண்ணம்புக்கட்டியுடன் கட்டி, மண்ணாலான மைகுடுவை மற்றும் நாணல் பேனாவுடன் சேர்த்து கொடுப்பார். பழைய சப்பாத்தியில் வெண்ணையும் சர்க்கரையும் தடவிச் சாப்பிட்ட காலையுணவு போக, பள்ளிக்குப் போகையில் சில பழைய சப்பாத்திகளையும், பாட்டி தெருவில் உள்ள நாய்களுக்காக எடுத்து வருவார்.
பாட்டி எப்பொழுதும் என்னுடனே பள்ளிக்கும் வருவார். நான் படிக்கும் பள்ளி கோவிலுடன் இணைந்தேயிருக்கும். கோவில் மதகுருதான் அங்கு எழுத்துகளையும், காலை வழிபாட்டுப் பாடல்களையும் சொல்லித் தருவார். நாங்கள் தாழ்வாரத்தில் வரிசையாக அமர்ந்து ஒருமித்த குரலில் பாடிக்கொண்டும், படித்துக்கொண்டும் இருக்கும்பொழுது பாட்டி கோவிலினுள் வேதநூல்களை படித்துக்கொண்டிருப்பார். இருவரும் முடித்தபிறகு, சேர்ந்தே வீடு திரும்புவோம். இப்பொழுது, கோவில் வாசலில் தெரு நாய்கள் காத்திருக்கும். பாட்டி எடுத்துவந்த ரொட்டித் துண்டங்களைப் பொடித்து வீடுவரை வீசிக்கொண்டே வருவார், நாய்கள் விழுந்த ரொட்டி துண்டுகளுக்காக அவற்றிக்குள்ளே அடித்துக்கொண்டு, குரைத்துக்கோண்டே பின்னால் வரும்.
தாய்தந்தையர் நகரத்தில் வசதியாகக் குடியமர்ந்த பிறகு, எங்களையும் அழைத்துச் சென்றார்கள். இதுதான் எனக்கும் பாட்டிக்குமான நட்பின் திருப்புமுனையாக அமைந்தது. ஒரே அறையில் இருவரும் தங்கியிருந்தாலும் பாட்டி இனி என்னுடன் பள்ளிவரை வர இயலாது. நான் இப்பொழுதெல்லாம் மோட்டார் பஸ்ஸில்தான் பள்ளிக்குச் செல்கிறேன். இங்கு தெருவில் நாய்களும் இல்லை. பாட்டி நகரத்திலுள்ள எங்கள் வீட்டின் முற்றத்தில் சிட்டுக் குருவிகளுக்கு உணவளிக்கத் துவங்கலானார்.
வருடங்கள் போக, இருவரும் ஒருவருக்கொருவர் பார்ப்பதே அரிதானது. கொஞ்சகாலம் பாட்டிதான் இங்கும் என்னை எழுப்பி, பள்ளிக்கு தயார் செய்தார். பள்ளியிலிருந்து திரும்பி வந்ததும் உற்சாகமாக பள்ளியில் என்ன சொல்லித் தந்தார்கள் எனக் கேட்பார். நானும், கற்ற சில ஆங்கில வார்த்தைகளையும், காந்த ஈர்ப்பு விதி, ஆர்க்கிமிடிசு தத்துவம், உலகம் கோள வடிவமானது போன்ற மேலை அறிவியல் பற்றிச் சொல்வேன். இவையெல்லாம் பாட்டிக்கு அந்நியமாகவும் வருத்தமாகவும் இருந்தது. இனி பாட்டியால் பாடங்களில் எழும் சந்தேகங்களுக்கு எனக்கு உதவ முடியாமலானது. மேலும், இறைநம்பிக்கை குறித்தும், வேதங்கள் பற்றியும் எதுவுமே சொல்லித்தராத ஆங்கில பள்ளிகளின்பால் பாட்டிக்கு நம்பிக்கையின்மையும், வருத்தமும்தான் எழுந்தது. பள்ளியில் நான் இசையும் கற்பதாகச் சொன்ன பிறகு பாட்டி என்னிடம் அரிதினும் அரிதாகவே பேசுவார். பாட்டியைப்பொறுத்தவரை, இசை ஆடும் மகளிருக்கும், இரவலர்களுக்குமான விஷயம், பள்ளியில் கற்பதற்கானதல்ல.
நான் கல்லூரி படிப்பிற்காக பல்கலைக் கழகத்தில் சேர்ந்த பொழுது எனக்காக வீட்டில் தனியறை கொடுக்கப்பட்டது. இப்போது எனக்கும் பாட்டிக்குமான தொடர்புகள் முற்றிலுமாக முறிந்தன. பாட்டியும் அதை அமைதியாக உபசார பாவனையில் ஏற்றுக்கொண்டதுபோல் இருந்தது. பின் காலைமுதல் அந்திவரை அவருடைய கைராட்டினத்தின் அருகில் அமர்ந்து எந்நேரமும் பாட்டி, உதடுகள் முணுமுணுக்க நூல் நூற்றுக்கொண்டே இருப்பார். மதியம் சிட்டுக் குருவிகளுக்கு உணவிடுவதற்காக மட்டுந்தான் நூல் நூற்கும் வேலையிலிருந்து சற்று விலகியிருப்பார். ரொட்டித்துண்டுகளை சிறு துணுக்குகளாக பொடித்துக்கொண்டு முற்றத்தில் அமர்ந்திருப்பார். பாட்டியைச்சுற்றி நூற்றுக்கணக்கான சிட்டுக் குருவிகள் குழுமிப் பேரிரைச்சல் இட்டுக்கொண்டிருக்கும். சில பாட்டியின் கால்களிலும், தோள்களிலும் சில தலையிலும் அமர்ந்திருக்கும். அந்த நேரங்களில் பாட்டி சிரித்துகொண்டேயிருப்பார், ஒருபோதும் அவற்றை விரட்டியதேயில்லை. ஒரு நாள் பொழுதில் அந்த அரை மணிநேரம் மட்டுமே அவருக்கு பேருவகையானது.
நான் மேல்படிப்புக்காக அயல்நாடு செல்ல முடிவெடுத்தபோது, அது நிச்சயம் என் பாட்டியை வருத்தமுறச்செய்யும் என எதிர்பார்த்தேன். இதற்குமேல் முதிர முடியா இந்த வயதில் பாட்டியை விட்டு ஒரு ஐந்து வருடம் தொலைவில் இருக்க போகிறேன் என்ற நிலையில் யாராலும் எளிமையாகச் சொல்ல முடியாத ஒன்றையே என் பாட்டி சொன்னார். பாட்டி உணர்ச்சி வயப்படுபவர் அல்ல. எந்தவித உணர்ச்சிக் கொந்தளிப்புமின்றி அமைதியாக ரயில்நிலையம் வரை என்னுடன் வந்தார். இப்பொழுதும் அவருடைய உதடுகள் மந்திர உச்சரிப்புகளை உச்சாடனம் செய்துகொண்டிருந்தன. அவருடைய சிந்தனை முழுக்க பிரார்த்தனையில் ஆழ்ந்திருந்தது. கைவிரல்கள் ஜெப மாலையின் மணிகளை எண்ணிக்கொண்டிருக்க, பாட்டி என்னருகில் வந்து என் முன்நெற்றியில் முத்தத்தை பதித்து வழியனுப்பினார். அந்த முத்தத் தடமே எனக்கும் பாட்டிக்குமான இறுதி ஸ்பரிசம் என சிந்தையில் வைத்து விடைபெற்றேன்.
அவ்வாறில்லாது, ஐந்துவருடம் கழித்து நான் திரும்பும் பொழுதும் பாட்டி ரயில்நிலையத்திற்கு வந்திருந்தார். பாட்டி நான் பார்த்ததிலிருந்து ஒருநாள்கூட முதிர்ந்ததாக தெரியவேயில்லை, அப்படியே இருந்தார். இப்பொழுதும் பாட்டி வார்த்தைகள் ஏதும் பேச அவகாசமில்லாதவராய் தோன்றினார், கைகளால் என்னை தழுவிய பொழுது என்னால் அவருடைய மந்திர உச்சரிப்புகளை கேட்க முடிந்தது. நான் திரும்ப வந்த அதே நாளிலும்கூட அவருடைய சந்தோஷமான தருணங்கள் சிட்டுக்குருவிகளுடனே இருந்தது, வெகுநேரமாய் உணவளித்துக்கொண்டும் செல்லமாக கண்டித்துக்கொண்டும் அவற்றுடன் விளையாடிக்கொண்டிருந்தார்.
அந்திப் பொழுதில் பாட்டியிடம் ஏதோ புது மாற்றம் தெரிந்தது. ஜெபிக்கவுமில்லை. அண்டைவீட்டு பெண்களையெல்லாம் கூட்டி தன்னுடைய பழைய கைமேளத்தை எடுத்துக்கொண்டு பாடத்துவங்கிவிட்டார். தொய்ந்து தொங்கும் அந்த மேளத்தை பாட்டி தாளமிட்டு வீரர்கள் வீடு திரும்பும்போது பாடும் பாடலை பல மணிநேரமாக நிறுத்தாமல் பாடிக்கொண்டே இருந்தார். அவர் களைப்படைந்திடாமலிருக்க, நாங்களே அவரிடமிருந்து வாத்தியத்தைப் பிரித்து வற்புறுத்தி நிறுத்த வேண்டியதாய் இருந்தது. எனக்கு தெரிந்த வரையில் பாட்டி அன்றுதான் முதன்முதலாகப் பிரார்த்திக்காமல் இருப்பதை கண்டிருக்கிறேன்.
அடுத்த நாள் காலை பாட்டியின் உடல் சரியில்லாமல் ஆனது. மருத்துவர், சாதாரணக் காய்ச்சல் சீக்கிரம் சரியாகிவிடும் என்று சொன்னார். ஆனால் பாட்டியின் எண்ணங்கள் வேறாய் இருந்தன. பாட்டி எங்களிடம் அவருடைய முடிவு நெருங்கிவிட்டதாக கூறினார். அவருடைய வாழ்வின் இறுதிப் பகுதியின் சில மணி நேரங்களில் அவர் ஜெபிக்காமல் விட்டுவிட்டதாகவும், இனியும் எங்களுடன் பேசி நேரத்தை வீணடிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.
மறுத்து, எங்களிடம் அவரை பேசுமாறு கெஞ்சினோம். ஆனால் அவர் எதையும் பொருட்படுத்துவதாய் இல்லை. படுக்கையில் அமைதியாகப் படுத்தவாறு பிரார்த்தனையை துவங்கி ஜெபமாலை மணிகளை உருட்டி உச்சரிக்கலானார். நாங்கள் ஊகிக்கும் முன்பே, உதடுகள் அசைவுகளின்றி நிலைத்துக் கையிலிருந்த ஜெபமாலை உயிரிழந்த விரல்களிலிருந்து நழுவி விழ, முகம் வெளிறி அமைதி ததும்ப பாட்டியின் உயிர் பிரிந்துவிட்டதை அனைவரும் உணர்ந்தோம்.
இறுதி மரியாதை செய்யும் வழக்கம்போல், பாட்டியின் உடலை படுக்கையிலிருந்து இறக்கி தரையில் படுக்கவைத்து உடலின் மீதொரு சீலையை போர்த்திவிட்டோம். சில மணி நேர துக்க அனுசரிப்பிற்கு பின்னர், அவருடைய உடலைத் தனித்திருக்க விட்டு, ஈமச்சடங்குக்கான ஏற்பாடு செய்ய சென்றோம்.
மாலை தகனத்திற்காக டோலியுடன், பாட்டியின் உடலைத் தூக்க அறைக்குச் சென்றபோது, கதிரவன் மறையும் நேரம், பாட்டியின் அறை மற்றும் தாழ்வாரம் முழுதும் மின்னும் பொன்ஒளியால் நிரம்பியிருந்தது. முற்றத்தின் முன்பே நின்றுவிட்டோம். தாழ்வாரத்திலிருந்து பாட்டியின் இறந்து இறுகியிருக்கும் உடல் இருக்கும் அவருடைய அறை வரை சிட்டுக்குருவிகள் பரவி நிரம்பியிருந்தன. எப்பொழுதும் அவை எழுப்பும் கீச்சு ஒலிகள் ஏதுமில்லை. அந்த காட்சியை காண மிகவும் வருத்தமாக இருந்தது, அம்மா சென்று சில ரொட்டித்துண்டுகளை கொண்டு வந்தார். பாட்டி எப்போதும் பொடிப்பதைபோலவே சிறுசிறு துகள்களாக பொடித்து அங்கு தூவிவிட்டார். ஆனால் அவை ரொட்டித்துண்டுகளை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. பாட்டியின் உடலை நாங்கள் தூக்கிச்செல்லும் வரை காத்திருந்து பறந்து சென்றன. அடுத்த நாள் காலை கூட்டும் நபர் அந்த ரொட்டித்துகள்களை குப்பைத்தொட்டியில் இட்டார்.
இங்கிலிஷ் மூலம்: குஷ்வந்த் சிங் – ‘The Portrait of a Lady’
தமிழாக்கம்: ஆ. அகிலா
***
ஆஹா.
மிக அருமையான, இலகுவான மொழி பெயர்ப்பு.
பல ஆண்டுகளுக்கு முன், Reader’s digest இதழில், ஆங்கிலத்தில் அனுபவித்து படித்தது நினைவுக்கு வருகிறது.
வாழ்க வளமுடன்.