ஏழு கடல், ஏழு மலை தாண்டி

ராம் பிரசாத்

‘என் பெயர் ராஷ். நான் ஒரு மருந்து ஆராய்ச்சியாளன். றிமா கண்டத்தின் மக்சாஸிலிருந்து எல்லா ஏ.எம் அலைவரிசையிலிருந்தும் ஒலிபரப்பிக்கொண்டிருக்கிறேன். நோவிட் வைரஸின் தீவிரத்துக்கு உலகின் எழு நூறு பில்லியன் மனிதர்கள் பலியாகிவிட்டார்கள். நாடுகளும், கண்டங்களும் அர்த்தமற்றுப் போய்விட்டன.  அங்கொன்றும் இங்கொன்றுமாக சின்னச்சின்ன குழுக்களாய் உங்களில் யாரேனும் வாழ்ந்துகொண்டிருந்து, இதைக் கேட்க நேர்ந்தால், மக்சாஸ் வரவும். என்னிடம் உணவும்,   நோய் தொற்ற வாய்ப்பில்லாத உறைவிடமும், கடல் மார்க்கமாகப் பயணித்துக் காப்பாற்ற சிறியரக கப்பல்களும் இருக்கின்றன. உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறேன்.” என்றுவிட்டு ரேடியோவை அணைத்தான் ராஷ். 

சுமார் ஆறு மாதங்களாக, ஒவ்வொரு நாளும் காலை பத்து மணி சுமாருக்கு  இப்படி ரேடியோவில் தன் குரலை உலகெங்கும் பரப்பிக்கொண்டிருக்கிறான். நோக்கம், நோவிட் வைரஸால் தாக்கப்படாத மனித உயிர்களைக் கண்டுபிடிப்பது. அதன் நோக்கம், சாபோர் இனத்தை முழு அழிவிலிருந்து காப்பது மற்றும் பெறுக்குவது. 

மக்சாஸ், டேனா சூரியக் குடும்பத்தில், பிரகாசமான நாஸ் சூரியனைச்சுற்றிவரும் கிரகமான மைபூவில், றிமா கண்டத்தில் அமைந்திருந்தது. ஒரு செல் உயிர்கள் தோன்றி பலகோடிக் கணக்கான ஆண்டுகளில் மெல்ல மெல்ல தாவரங்கள், விலங்குகள் என்று பரிணமித்து, இரண்டு கால், கைகள் கொண்ட,  விமானங்கள் செலுத்துமளவிற்கு தொழில் நுட்பத்தில் முன்னேற்றமடைந்த, சாபோர்கள் தோன்றி பல தலைமுறைகளாக வாழ்ந்து பல்கிப்பெருகியிருந்தனர். சிலிக்கா மிகுத்திருந்த கிரகத்தில், கார்பன் உயிர்களின் அமைப்பைத் திர்மானித்தது. கிரகத்தில், நான்கில் மூன்று பங்கு தண்ணீர் இருந்தது. நாள் ஒன்றுக்கு 24 மணி நேரங்களும், ஆண்டொன்றுக்கு 365 நாட்களுமாக இருந்தன. மைபூ கிரகத்தை நிலாவொன்று கிடையாகச் சுற்றி வந்தது. மைபூ கிரகத்தில் தோன்றிய 

மக்சாஸில் ராஷ் வசித்திருந்த இடம் ஒரு மயானம் போல் காட்சி அளித்தது. சாபோர்களின் நடமாட்டமே இல்லை. தொலைவில், சாபோர்களின் உடல்கள் எரிந்துகொண்டிருந்தன. காற்றில் சாபோர் உடல்கள் எரிந்த வாசம் வீசியது.  

அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். மேகமூட்டமாய்த் தெரிவது கண்டு புருவம் சுருக்கினான். உற்றுப் பார்த்ததில், அது சாபோர்  உடல்கள் எரிவதால் கிளம்பும் புகை தான் என்பது புரிந்தது. பெட்ரோல், டீசல் சப்ளை எப்போதோ துண்டிக்கப்பட்டுவிட்டது. கைவசம் இருந்ததும் சாபோர்  உடல்களை இட்டு எரித்ததில் மிக விரைவிலேயே தீர்ந்து போனது.  இருப்பினும் டெக்ஸாஸ் மிகப்பெரிய மாநிலம். மா நிலம் முழுமைக்கும் இருந்த சாபோர்கள் சட்டென வைரஸ் தாக்குண்டு இறந்ததில், எல்லா பெட்ரோல், மண்ணென்னை நிலையங்களில் தரைக்கடியில் சேமிக்கப்பட்டிருந்த எண்ணெய்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். கேட்பாரில்லை. அவற்றை அவசரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளலாமென்று, மரங்களை வெட்டி விறகாக்கி, எரிப்பதன் மூலமோ, கரியை எரிப்பதன் மூலமோ தான் வைரஸால் காவு வாங்கப்பட்ட சாபோர்  உடல்களைக்  எரிக்க முடிந்தது. உடல்களை நிச்சயம் எரித்தே ஆகவேண்டும். புதைப்பது, வைரஸை பிழைக்கச் செய்துவிடலாம் என்பது தெளிவாகியிருந்தது.

ராஷ் ஒரு ஆராய்ச்சியாளன். பயாலஜிஸ்ட் மற்றும் பாடனிஸ்ட். செயற்கையாக க்ரீன்ஹவுஸ் (Green house) கூடாரம் அமைத்து, தாவரங்கள், பழங்கள், காய்கறிகள் விளைவித்திருக்கிறான். அவைகள், வைரஸ்களால் தாக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. நோக்கம், உன்னதமானது. அது, அழிந்துகொண்டிருக்கும் சாபோர்  இனத்தை ஆரோக்கியமான உணவுகள் மூலம் காப்பாற்றுவது.  

எப்படி?

வைரஸ் பில்லியன் கணக்கில் அழித்ததில், சாபோர்  இனத்தில் இன்னும் எத்தனை பேர் மைபூ கிரகத்தின் எவரும் அறிந்திடாத மூலை முடுக்குகளில் எஞ்சியிருப்பார்கள் என்ற கேள்வி பதிலளிக்கப்படாமலே இருந்தது. அப்படியே எஞ்சியிருந்தாலும், அவர்களில் எத்தனை பேர் ஆரோக்கியமானவர்களாக இருப்பார்கள் என்பதுவும் தெரியவில்லை. ஆரோக்கியமான, இளமையான வித்துக்கள் இருந்தால் தான்,  புதிய ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க இயலும். இல்லையென்றால் மைபூக்கிரகத்தில் சாபோர்  இனம் முற்றிலுமான அழிந்துவிடும். வைரஸ் எல்லா பாலூட்டி உயிர்களையுமே கபளீகரம் செய்துகொண்டிருந்தது. 

பேரழிவு ஏற்படுத்தும் வைரஸிடமிருந்து தப்பிப்பிழைக்க, அதீத எதிர்ப்பு சக்தி தேவையாக இருந்தது. அது ஆரோக்கியமான உடல்களைக் கோருகிறது. அவ்விதமே ஆரோக்கியமான உடல்கள் இருந்தாலும், அவைகளைக் கொண்டு ஒரு புதிய தலைமுறையை உருவாக்கினாலும், அந்தப்பு தியவர்கள் வளர்ந்து அடுத்த தலைமுறையை உருவாக்கும் வரை, ஆரோக்கியம் குன்றாமல் இருக்க வேண்டும். அதுவரை அவர்களுக்கு ஆரோக்கியமான உணவையும் தந்து பாதுகாக்க வேண்டும். இது எல்லாமும் ஒரு வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக துல்லியமாக நிகழ வேண்டும்.

யோசிக்க யோசிக்க, மலை போல் தோன்றச்செய்யும் காரியம். விளைவைக் கற்பனை செய்தால், நம்பிக்கை இழக்கச்செய்வதான இயல்புடைய காரியம். விளைவைப் பற்றிச்சிந்திக்கூடாது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். ஆயினும், அதை நினையாமல் இருக்க முடியவில்லை.. அப்போது தொலைவில் எதுவோ மெல்ல அசைய, அது ராஸின் கவனத்தை ஈர்த்தது. தொலை நோக்கியை எடுத்து அதன் லென்சை அட்ஜஸ்ட் செய்து பார்க்க அங்கே ஒரு வயதானவர் நடந்து வருவது போல் தெரிந்தது. இளம் வயதினரை எதிர்பார்த்திருந்த ராஷுக்கு வயதானவர் என்றவுடன் சற்று ஏமாற்றமாக இருந்தது. இருப்பினும், யாராக இருப்பினும் காப்பாற்றியாக வேண்டும் என்ற எண்ணத்தில் அவரைத் தனது ட்ரக்கில் அண்டினான். 

“நீங்கள் ஆராய்ச்சியாளர் என்று ரேடியோவில் கேட்டதும் உங்களை எப்படியேனும் சந்தித்து விடவேண்டும் என்று தீர்மானம் செய்து கிளம்பி வந்தேன். என் பெயர் ஃபாலோ” என்றார் அவர், ட்ரக்கில் அமர்ந்ததும்.

“நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டீர்கள். என்னிடம் வைரஸை அழிக்கும் மருந்துகள் ஏதும் இல்லை” என்றான் ராஷ் அவசரமாக.

“இல்லை. உங்களிடம்  மருந்து இல்லை என்பது தெரியும். யாரிடமும் மருந்து இல்லை என்பதுவும் தெரியும். குறைந்தபட்சம், மருந்தை எப்படி அடையலாம் என்று எனக்கொரு யோசனை இருக்கிறது. அதை உங்களிடம் பகிரவே உங்களைத் தேடி இந்த முதிய வயதிலும் வந்தேன்.” என்றார் ஃபாலோ.

“ஒரு ஆராய்ச்சியாளன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு கூச்சமாக இருக்கிறது. சுமார் எட்டு நூறு மில்லியன் சாபோர்கள் வாழ்ந்த கிரகம் மைபூ. ஆனால் இப்போது யாருமே இல்லை. ஒரு சாபோர் உயிரைத் தேட வேண்டி இருக்கிறது. எட்டு நூறு மில்லியன் சாபோர்களில் ஒருவரால் கூட அந்த  நோவிட் வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை எத்தனை முயற்சித்தாலும் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. நானும் கூட முயன்று தோற்றுவிட்டேன்.இப்போது தோல்வியை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்தும் விட்டேன். அப்படிப்பட்ட ஒரு வைரஸுக்கு மருந்தை அடைய ஒரு மார்க்கம் இருக்கிறதென்றால் அதை எப்பாடு பட்டாவது அடைந்தே தீர வேண்டும். ஆமாம், ஏதோ யோசனை இருக்கிறது என்றீர்களே அது என்ன?”

“எங்கள் பரம்பரையில் எல்லோருக்கும் குறிப்பு எழுதும் வழக்கம் இருக்கிறது. அதில் என் பாட்டன் பூட்டனில் ஒருவர் இதற்கு முன் மைபூக்கிரகத்தில் வாழ்ந்தபோது, இதே போன்றதொரு வைரஸ் தொற்று ஏற்பட்டு, அதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் சாபோர்  இனம் திணறிற்று என்று பதிந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், சாபோர் இனம் உருவாகும் முன், ஒரு இடைப்பட்ட நிலைப்பாட்டில் குகா என்றொரு இனம் இருந்தது என்றும் பதிந்திருக்கிறார். அந்தப்பதிவில், சாபோர்  இனத்திற்கு முந்தைய இனமான குகாவின் மரபணுவில் அந்த வைரஸுக்கான எதிர்ப்பு சக்தி இருந்ததாகவும், குறித்திருக்கிறார். ஆனால், அந்த குகா இனத்தை அழித்ததே இப்போது வழக்கிலிருக்கும் சாபோர்  இனம் தான் என்று சரித்திரம் சொல்கிறது. இந்தப் பின்னணியில், அந்த முந்தைய இனத்தை தற்போதைய சாபோர்  இனமான நாம் அழித்திருக்கவே கூடாது என்றும், அவர்கள் தொடர்ந்து காக்கப்பட்டிருக்க வேண்டியது, மைபூக் கிரகத்தில் சாபோர்  இனத்தின் பிழைத்திருத்தலுக்கும், தொடர்ச்சிக்கும் அத்தியாவசியம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதை வைத்துப் பார்க்கையில், மைபூ கிரகத்தில் தற்போது உதித்திருக்கும் நோவிட் வைரஸுக்குமான தீர்வை, இந்த கிரகத்தில் தோன்றிய மூத்த இனத்தின் மரபணுவில் தேடிப்பார்த்தால் என்ன என்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது.” 

ஃபாலோ சொன்னதைக் கேட்டதும் ராஷின் கண்கள் விரிந்தன.

“பிறகெப்படி அந்த முந்தைய வைரஸ் தொற்றிலிருந்து சாபோர்  இனம் மீண்டு இப்போது நாமிருக்கும் இடத்திற்கு வந்ததாம்?” என்றான் ராஷ்.

“அப்போது வந்த வைரஸ் இத்தனை வலுவாக இல்லை என்பது என் ஊகம்.மேலும், அந்த வைரஸ் சாபோர்களைத் தாக்கியபோது, சாபோர்கள் விரைவிலேயே சுதாரித்துக்கொண்டார்கள். அதிர்ஷ்டம் கைகொடுத்தது எனலாம் அல்லது வைரஸ் பரவலில் அத்தனை வேகம் இல்லை எனலாம்.. அதற்கென கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் பின் விளைவுகள் மிக ஏற்படுத்தக்கூடியனவாக இருந்தன. அதிலிருந்து தப்பிய நாம் இன்றளவும் சற்று பலவீனமாக இருப்பதற்குக் காரணம், அந்த பக்க விளைவுகள் தாம். பொதுவாகவே அடுத்து வரும் வைரஸ், முன்பிருந்த வைரஸை விடவும் சக்திவாய்ந்ததாகவும், இந்த மைபூக்கிரகத்தின் இந்திரியங்களின் நிமித்தம் தன்னைத் தகவமைத்துக்கொண்டதாயும் இருக்க அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதுதான். அதன் படி, இப்போதிருக்கும் வைரஸுக்கு, இந்த மைபூ கிரகத்தின் மூத்த இனத்தின் மரபணுவில் தீர்வு இருக்கும் என்றே ஊகிக்கிறேன். ஏனெனில், இந்த மூத்த இனம் தான், இந்த கிரகத்தின் இந்திரிய உச்சத்தை உள்வாங்கிப் பிழைத்த முதல் இனம்” என்றார் ஃபாலோ.

“இந்தப் பாழாய்ப்போன வைரஸுக்கான தீர்வை எங்கிருந்தாலும் தேடி அடைவதுதான் நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு என்றால் அதை உடனே செய்வோம்” என்றான் ராஷ்.

“அது அத்தனை சுலபமல்ல. சாபோர்  இனம் மைபூ கிரகத்தில் தோன்றிய  தலைமுறைதான் இந்த கிரகத்தின் இந்திரியங்களை உட்கொண்டு செழித்த தலைமுறை. அவர்கள், மகுறி கண்டத்தின் தென் பகுதியில் தான் முதலில் தோன்றிப் பல்கிப்பெறுகினார்கள்.  அவர்களின் மரபணுவில் தான் இந்த கிரகத்தின் இந்திரியங்கள், சாரங்கள் அதிகபட்சம் இறங்கியிருக்க சாத்தியங்கள் இருக்கின்றன. மகுறி கண்டமானது றிமா கண்டத்திலிருந்து இரண்டு நாள் கடல்வழிப் பயணத்தில் இருக்கிறது” என்றார் ஃபாலோ.

“சரி, அங்கு சென்றதும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஏதேனும் ஊகம் இருக்கிறதா?” என்றான் ராஷ்.

“அந்தக் கண்டத்தில் பல மொழிகள் பேசுபவர்கள் வாழ்ந்திருந்தார்கள். ஆனால் அந்த எல்லா மொழிகளுக்கும் ஒரு தாய் மொழி இருந்தது. அதன் பெயர் ‘ழகர்’. ழகர் மொழி பேசுபவர்களை நாம் தேடினாலே போதும். ழகர் மொழி பேசுபவர்கள் தான் இக்கிரகத்தின் மூத்த இனமாக இருக்க வேண்டும்” என்றார் ஃபாலோ.

“சாபோர்  இனத்திற்கு மைபூ கிரகத்தை விட்டால் வேறு கதியில்லை. இந்த கிரகத்தில் எஞ்சியிருக்கும் கடைசி ஆராய்ச்சியாளன் நான் என்ற தகுதியில் இந்த கிரகத்தில் இப்போதிருக்கும் இக்கட்டை எப்பாடு பட்டேனும் தீர்த்துவிடவேண்டும் என்பது என் கடமையாகிறது. என்னிடம் சிறியவகைக் கப்பல் இருக்கிறது. அதில் அந்த கண்டம் சென்று சேர்ந்துவிடலாம். வாருங்கள் உடனே கிளம்புவோம்” என்ற ராஷ், உடனே காரியத்தில் இறங்கினான். தன்னிடமிருந்த ஆராய்ச்சிக்குத் தேவையான கருவிகளை கப்பலில் நிரப்பினான். அந்த சிறிய ரகக் கப்பல் அந்தக் கருவிகளையும், அவர்கள் இருவரையும் சுமந்தபடி கடல் மார்க்கமாக மகுறி கண்டத்தை நோக்கி விரைந்தது. 

இரண்டு நாள் கடல் பயணம் அத்தனை அபாயகரமானதாக இருக்கவில்லை. ஆனால், வைரஸின் தாக்கம் ஆங்காங்கே தெரிந்தது. வைரஸ் பாலூட்டிகளை மட்டுமல்லாது, திமிங்கிலங்களையும், மீன்களையும் தாக்கி உயிரற்ற உடல்களாக்கியிருந்தது. வைரஸால் தாக்குண்ட திமிங்கிலங்கள் ஆங்காங்கே தென்பட்ட தீவுகளில் கரை ஒதுங்கியிருப்பதைக் காண முடிந்தது.

ராஷின் சிறிய ரகக் கப்பல், மகுறி கண்டத்தின் தென் பகுதியில் கரை இறங்கியபோது கரையினருகே ஒரு சிறிய குழுவாக நான்கைந்து பேர் தென்பட்டனர். அங்கும் றிமா கண்டத்தில், மக்சாஸில் நடைமுறையில் இருந்தது போல் தொலைவில் இறந்த சாபோர்  உடல்கள் எரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அதை அவதானித்துவிட்டு புருவம் சுருக்கினான் ராஷ்.

“வைரஸின் தாக்கத்திற்கான எதிர்ப்பு சக்தி ழகர் மொழி பேசுபவர்களிடம் இருக்கிறதென்றால், மகுறி கண்டமே இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பியிருக்க வேண்டுமல்லவா? இங்கே நடப்பதைப் பார்த்தால், மகுறி கண்டம் தப்பியது போல் தெரியவில்லையே” என்றான் ராஷ்.

“அதுதான் எனக்கும் சற்று யோசனையாக இருக்கிறது. ஆயினும், நாம் கண்டுகொள்ள வேண்டியது ழகர் மொழி பேசுபவர்களிலேயே மரபணுத் தூய்மையின் அடிப்படையில் அமைந்த, முதல் தலைமுறைக்காரர்களின் சந்ததிகளை. அதற்கு எளிமையாக ஒரு யோசனை இருக்கிறது” என்றார் அவர்.

“என்ன?”

“இங்கே உயிருடன் எஞ்சியிருக்கும் இந்த மக்களுக்கு இலவசமாக உடல் ஆரோக்கியச் சோதனை நடத்த இருப்பதாகச் சொல்லலாம். அவர்களாக வருவார்கள். அவர்களின் ரத்தத்தைப் பரிசோதித்து நமக்கு வேண்டிய மரபணுவைத் தேடிக்கொள்ளலாம்” என்றார் அவர்,

ஆமோதிப்பாய்த் தலையசைத்த ராஷ் உடனடியாகக் காரியத்தில் இறங்கினான். கரையோரம் ஒரு டென்ட் போடப்பட்டது. ரேடியோ கருவிகள் மூலம் ராஷ் தகவல் பகிர, மருத்துவப் பரிசோதனைக்கென மகுறி கண்டத்தில் எஞ்சியிருக்கும் சாபோர்கள் ஒவ்வொருவராக வரத்துவங்கினார்கள்.

ராஷ் அவர்களின் ரத்தத்தைப் பரிசோதனை செய்வதாகக் கூறி ரத்த மாதிரிகளை எடுத்துச் சோதித்துப் பார்க்க, எதிலுமே வைரஸுக்கான எதிர்ப்பு சக்திக்கான மூலக்கூறுகள் தென்பட்டிருக்கவில்லை. ஆயினும் வந்திருந்தவர்கள் அத்தனை பேரும் தெளிவாக ழகர் மொழி பேசினார்கள். இது, ராஷையும், தோகியையும் வியப்பில் ஆழ்த்தியது. 

“இங்கே என்ன நடக்கிறது? எனக்கொன்றும் விளங்கவில்லை. இவர்கள் ழகர் மொழி பேசுகிறார்கள். ஆனால், இவர்களின் மரபணுக்களில் எதிர்ப்பு சக்தி இல்லையே? உங்களுக்கு நன்றாகத் தெரியுமா? உங்கள் மூதாதையர் குறிப்பில் இதுதான் இருக்கிறதா? அல்லது வேறு எதையேனும் கவனிக்காமல் விட்டுவிட்டீர்களா?” என்றான் ராஷ்.

“தெரியவில்லை. ஆனால் பிழைத்திருப்பது எப்படி என்று தெரியும். தனிமைப்படுத்துதலால் இருக்கலாம். அல்லது, முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வைரஸ் தொற்றிலிருந்து தங்களைத் தற்காத்திருக்கலாம். ஆனால், இவர்களின் மரபணுக்களில் எதிர்ப்பு சக்திக்காக மூலக்கூறுகள் இல்லாதது எனக்கும் சற்று குழப்பமாகத்தான் இருக்கிறது. அந்தக் கையேட்டில் அவ்வளவு தான் இருந்தது. அது வெறும் கையேடு தான். ஆனால், மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது என்றறிவேன்” என்றார் அவர்.

அப்போது ஒரு வயதானவர் சற்றே விந்தி விந்தி நடந்து வர,

“அடுத்த ரத்த சோதனை இன்னும் பத்து நிமிடத்தில் துவங்கிவிடும். சற்று காத்திருங்கள்” என்றான் ராஷ்.

“என் பெயர் நோவல். நான் ஒரு சரித்திர ஆய்வாளன். இது போன்ற ரத்தப் பரிசோதனை முகாம்கள் சிலவற்றின் நோக்கங்கள் என்னென்னவாக முற்காலங்களில் இருந்திருக்கின்றன என்பதை நான் அறிவேன். ரத்தப் பரிசோதனை என்பது ஒரு சாக்காகத்தான் இருக்க வேண்டும் என்பது என் ஊகம். மில்லியன் கணக்கில் மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். இத்தருணத்தில் மக்களின் உயிரைக் கேலிக்குள்ளாக்குவது போலிருக்கிறது நீங்கள் நடந்து கொள்வது” என்றார் நோவல்.

ராஷ், ஒருமுறை ஃபாலோவைப் பார்த்துவிட்டு, நோவலிடம் திரும்பி,

“மன்னிக்கவும். ஆம் . நாங்கள் நடத்தும் இந்த ரத்தப் பரிசோதனைக்கு உள் நோக்கம் இருக்கிறது. அது ழகர் மொழி பேசும் ஆதி மூத்த சாபோர் இனத்தை இனம் காண்பது.    நீங்கள் சரித்திர ஆய்வாளர் என்பதால் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இக்கிரகத்தில் முன்னொரு காலத்தில்  தோன்றிய ஒரு வைரஸுக்கான எதிர்ப்பு சக்தி………” என்று ராஷ் சொல்லிக்கொண்டிருக்க,

“….. அதற்கு முன்பே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்ட குகா என்கிற இடைப்பட்ட இனத்தின் மரபணுவில் இருப்பதாக தெரியவந்தது தானே” என்றார் நோவல்.

“அதே தான். அதன் அடிப்படையில் ழகர் மொழி பேசிய மூத்த சாபோர்  இனத்தின் மரபணு கிடைத்தால், அதிலிருந்து இந்த வைரஸை எதிர்ப்பதற்கான மூலக்கூறுகளைப் பெறுவது என்பதே திட்டம்” என்றான் ராஷ்.

“ஓ.. கிடைத்ததா?”

“இல்லை.. இதுவரை சுமார் நானூறு பேரிடம் சோதனைகள் மேற்கொண்டாயிற்று. எதிலுமே அந்த எதிர்ப்பு சக்திக்கான மூலக்கூறு காணப்படவில்லை. வந்திருப்பவர்களிடம் விசாரித்ததில், இந்த நானூறு பேர் தான் வைரஸின் தாக்கத்திலிருந்து பிழைத்தவர்கள், மற்ற எல்லோரும் வைரஸால் இறந்துவிட்டார்கள் என்றறிகிறேன்”

அதைக் கேட்டதும் நோவலின்  முகம் வாட்டம் கண்டதை கவனித்த ராஷ்,

“நீங்கள் இந்த கிரகத்தின் சரித்திரம் குறித்து படித்திருப்பீர்கள்.  ஒருவேளை, ஒரு கிரகத்தின் மூத்த இனத்தில், அந்த கிரகத்தில் நேரும் அத்தனை சிக்கல்களுக்குமான தீர்வு இருக்குமென்ற எங்கள் தேடல் தவறோ? தவறான இடத்தில் தேடிக்கொண்டிருக்கிறோமோ?” என்றான்.

“இந்த கிரகத்தின் மூத்த இனம் ழகர் மொழி பேசுபவர்கள் தான். அந்த மொழியில் எழுத்துக்கள் இரண்டு பகுதிகளாக இருக்கும். ஒரு பகுதியில் 12 எழுத்துக்களும், மற்றோரு பகுதியில் 18 எழுத்துக்களும் இருக்கும். இரண்டு பகுதிகளையும் பெறுக்க 216 சேர்க்கைகள் கிடைக்கும். இந்த மொழியிலிருந்தே மற்ற மொழிகள் உருவாகின. அந்தந்த மொழிகளைப் பேசும் சாபோர்  இனக் குழுக்கள் உருவானார்கள். ஆனால்………………………..”

“ஆனால்?… என்ன ஆனால்?”

“ழகர் மொழி பேசிய மூத்த இனம் வாழ்ந்த பகுதி இதுதான். துவக்கத்தில் செழிப்பாகவும், இந்த கிரகத்திலுள்ள உயிர் வாழ்க்கைக்கே முன்னுதாரணமாகவும் இருந்தது. ஏனெனியில், இங்கு தான் கிரகத்தின் இந்திரிய உச்சம் நிகழ்ந்தது. காரணம், இம்மக்களின் வாழ்வியல். ‘வாழ்வது’ தான் அவர்களது நோக்கமாக இருந்தது. சமத்துவம், சமன்படுதல் இதுவே அவர்களது தாரக மந்திரம். வான் பார்த்து வாழ்ந்த எளிய சாபோர்களாய் அவர்கள் இருந்தார்கள். ஆற்றங்கரையோரமாகவும், மலைகளிலுமே வீடுகள் கட்டி இயற்கையோடு ஒன்றி வாழத் தலைபட்டார்கள். காட்டில் இயற்கையாகக் கிடைப்பதை உண்டு வாழ்வதை முன்னிலைப்படுத்தினார்கள். ஆனால், அதுவே வினையாகிப்போனது. மற்ற குழுக்கள் ஆளுக்கொரு  நோக்கமொன்றை வகுத்து, அதற்கேற்ப மானுட வாழ்வைத் தகவமைக்கப்போக, ழகர் மொழி பேசிய மூத்த இனம் தன் உன்னத நோக்கத்தாலும், இயங்குமுறையாலும் பின் தங்கியவர்களாகப் பார்க்கப்படலாயிற்று. இது வெறும் ஒரு காட்சிப்பிழை தான். ஆனால், நோக்கங்கள் வகுத்த பிற இனத்தவர்களுக்கு இந்த எளிய காட்சிப்பிழை புரியாததை வேடிக்கை என்று கொள்வதா அல்லது சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டார்கள் என்று கொள்வதா தெரியவில்லை. பின் தங்கியவர்கள், நாளாக ஆக, தாழ்த்தப்பட்டவர்களாகப் பார்க்கப்பட்டார்கள். அவர்களது சொத்துக்கள், இருப்புகள் எல்லாமும் மற்ற இனக்குழுக்களால் ஆக்ரமிப்பு செய்யப்பட்டு, அதிகாரத்தால் அரசுடைமையாக்கப்பட்டு கபளீகரம் செய்யப்பட்டன. மற்ற குழுக்கள் ழகர் மொழி பேசிய மூத்த குடிமக்களின்  நிலங்களை அபகரித்து, அவர்களையே ஆளும் நிலையை எட்டினார்கள். எட்டியவர்கள் மென்மேலும் மூத்த குடிமக்களை அடிமைப்படுத்தினார்கள்.”

“சரி. அப்போது உங்களைப் போன்றவர்கள் மற்றும் மற்ற நடு நிலையாளர்கள் எல்லாம் என்ன செய்தீர்கள்? நீங்கள் நீதியை நிலை நாட்டியிருக்கலாமே? நடு நிலையாளர்களே இல்லாமலா போய்விட்டீர்கள்?” என்றான் ராஷ்.

“அப்போது அது அவ்விதமாகப் பார்க்கப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதிகாரத்திற்கு வந்தவர்கள், தங்கள் அதிகாரத்தை அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தக்க வைக்கவும், கீழ்த்தரமான வேலைகளைச் செய்யத் தொடர்ந்து கூலிகளை உருவாக்கவும், அடுத்த தலைமுறையிடம், அவர்களின் இளம் பிராயத்திலிருந்தே உண்மையை மூடி மறைக்கும் வண்ணம் பாடங்களை உருவாக்கினார்கள். பொழுது போக்கு அம்சங்களில் புகுத்தினார்கள். தங்களை முன்னிருத்தி, மூத்த இன மக்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று வகைப்படுத்தினார்கள். பலரால் பேசப்படுவது உண்மை என்று கொள்ளப்படும் என்ற அடிப்படையில் எங்கள் யாருக்குமே  நீதி எதுவோ அது முதலில் புரியவே இல்லை. பிற இனத்தவர்கள் உருவாக்கிய போலி பிம்பத்தில் நாங்கள் தொலைந்து விட்டிருந்தோம் என்று தான் சொல்ல வேண்டும். பார்க்கப்போனால், அதை தான் அந்த பிற இனத்தவர்களும் எதிர்பார்த்தார்கள்.  புரிந்து கொள்வதற்கான நூல்களும், நூலகங்களும், இன்ன பிற ஆவனங்களும், ஆதாரங்களும் அதிகாரத்தில் இருந்த பிற இனத்தவர்களால் தீவைத்து எரிக்கப்பட்டன, திருடப்பட்டன. ஆகவே உண்மையைத் தெரிந்துகொள்ளக்கூட சாத்தியங்கள் நாளாக ஆக, சிறுத்துக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டது. நாங்களும் அவர்களை வேண்டாதவர்களாகத்தான் பார்த்தோம். அவ்விதம் பார்க்கவே பழகிவிட்டோம் என்று தான் சொல்லவேண்டும்.”

“ஒரு முறை பக்கத்து நாட்டில் ழகர் பேசிய மூத்த குடியினர் மூன்று லட்சம் பேர் மொத்தமாக இன அழிப்பு செய்யப்பட்டார்கள். ஆனால், எந்த அரசாங்கமும் சரித்திரத்தில் அதை இன அழிப்பு என்று பதியக்கூட இல்லை. இதையெல்லாம் சதியாலோசனைக் கூட்டங்களில் மட்டுமே  பேசிக்கொள்வார்கள். மற்றபடி, அப்போது இன அழிப்பை நிகழ்த்திய நாடும், றிமா கண்டத்தில் இந்தப் பகுதி நாடும் நட்பு நாடுகள் என்கிற அந்தஸ்தில் தான்  இன அழிப்புக்குப் பிறகும் தொடர்ந்தன. அப்படியானால், எந்தளவிற்கு நடு நிலையாளர்கள் தோற்றப்போலிகளில் தொலைந்திருந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். எங்களுக்கு எல்லாமும் புரிய வந்தபோது அந்த மூத்த இனம் இந்தக் கிரகத்தின்  எங்கேனும் ஒரு மூலையிலேனும் ஒட்டிக்கொண்டிருக்கும் என்று தான் நம்பியிருந்தேன்.  நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், அவர்கள் எப்போதோ முற்றிலும் அழிந்துவிட்டார்கள் என்று தான் தோன்றுகிறது. இந்தக் கிரகத்தில் அழிவின்றி பிழைத்திருக்க,  ஒரு கேடயமாகப் பயன்படுத்திக்கொள்ளவேனும், யாரையெல்லாம் காப்பாற்றியிருந்திருக்கவேண்டுமோ, அவர்களெல்லாம் அழிந்துவிட்டார்கள் என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை.  இப்போது ழகர் மொழி பேசும் அனைவரும் கிரகத்தின் ஏனைய பகுதிகளிலிருந்து இந்த கண்டத்தில் பிழைக்கவென வந்து, ழகர் மொழி கற்றவர்களின் சந்ததிகளாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறேன். அதனால் தான் அவர்களது மரபணுவில் வைரஸைக் கட்டுப்படுத்த நாம் தேடும் மூலக்கூறுகள் இல்லை.” என்றார் நோவல்.

“இத்தனை நடந்தும் ழகர் பேசிய மூத்த இனத்தவர் எதிர்க்கவில்லையா?” என்றான் ராஷ்.

நெடு நேரம் ஏதும் பேசாமல் யோசனையில் ஆழ்ந்திருந்த நோவல்,

“அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.” என்று மட்டும் சொன்னார்.

“வைரஸால் கூட அழிக்க முடியாதவர்களை, மற்ற இனங்கள் தாழ்த்தியே அழித்துவிட்டன. அவர்களின் எளிமையே அவர்களைக் காவு வாங்கிவிட்டதோ என்னவோ” என்றார் ஃபாலோ.

“இல்லை. சின்ன வயதில், அசுரனொருவன் தன் உயிரை ஏழு கடல், ஏழு மலை தாண்டி ஒரு குகையில் பொந்தொன்றில் ஒளித்து வைத்திருந்தான் என்று கதைகளில் கேட்டிருக்கிறேன். எனக்கென்னவோ மைபூ கிரகத்தில் தோன்றிய புத்திசாலி உயிரினத்தின் உயிர் அதனில் முதன் முதலாய்த் தோன்றிய மூத்த இனத்தின் பிழைத்திருத்தலில், தொடர்ச்சியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்திருக்கிறது. அது தெரியாமல், சாபோர்கள், தங்கள் வீங்கிய மூளையின் நிமித்தம், தங்கள் அழிவைத் தாங்களே தேடிக்கொண்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது.” என்றான் ராஷ்.

“அப்படியானால், நாம் பிழைக்கவே முடியாதா ராஷ்? அழிவை நோக்கித்தான் செல்கிறோமா?” என்றார் ஃபாலோ கவலையுடன்.

“பலரால் பேசப்படுவது உண்மை என்று கொள்ளப்படும் என்ற அடிப்படையில் யாருக்குமே  நீதி எதுவோ அது முதலில் புரியவே இல்லை என்றார் நோவல். பலரால் மேற்கொள்ளப்படுவதை இயல்பென்று கொண்டு கண்மூடித்தனமாகத் தொடர்வதற்கு இதுதான் முடிவென்றால்,  நமக்கும் அதுதானே முடிவாக இருக்க முடியும்?” என்றான் ராஷ்.

***

3 Replies to “ஏழு கடல், ஏழு மலை தாண்டி”

 1. பூமி டெக்சாஸ் குமரி கண்டம் தமிழ் எல்லாம் எளிதாகவே புரிகிறது. “கருத்தொற்றுமை நிஜத்தை தீர்மானிக்காது. கருத்து வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒரு பொய்யை நம்பினாலும் அது நிஜமாகிவிடாது” என்று சொல்கிறது கதை.

  அதே சமயம் தமிழர்கள் உயர்ந்தவர்கள், மூத்தவர்கள், வந்தேறிகளால் வெல்லப்பட்டு, பின் அடக்கப்பட்டு, பின் ஆளப்பட்டு, பின் தாழ்த்தப்பட்டு பின் அழிக்கப்பட்டார்கள் என்ற ஒரு கருத்தையும் சொல்கிறது.

  அத்தனை தமிழர்களும் இதுவே உண்மை என்று நம்பினாலும் இது நிஜமாகிவிடாது. நம் பாரம்பரியத்தின் மேல் கொண்ட அபிமானமும் பெருமையும், ஓரளவுக்கு மேலே போனால் இன வெறி ஆகிவிடும் என்பதை கருத்தில் கொள்வது நலம்.

  1. //அதே சமயம் தமிழர்கள் உயர்ந்தவர்கள்…. …அத்தனை தமிழர்களும் இதுவே உண்மை என்று நம்பினாலும் இது நிஜமாகிவிடாது…// எது நிஜம் என்பதை அகழ்வாராய்ச்சிகள் தான் தீர்மானிக்க முடியும்… அகழ்வாராய்ச்சி நடப்பதையே தடுப்பதன் பின் இருக்கும் ஆதிக்க செயல்பாட்டைத்தான் சிறுகதை சுட்டுகிறது…

   //நம் பாரம்பரியத்தின் மேல் கொண்ட அபிமானமும் பெருமையும், ஓரளவுக்கு மேலே போனால் இன வெறி ஆகிவிடும் என்பதை கருத்தில் கொள்வது நலம்.//

   அறிவியலின் சட்டகத்துள்ளிலிருந்து மட்டுமே கேள்வி எழுப்புகிறது சிறுகதை…
   இனி பத்தாயிரம் வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் அடுத்த தலைமுறை அதியுயர் மனிதர்கள் (post humans/Homo deus) தங்களுக்குத் தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்திக்கு, அவர்களுக்கு முந்தைய இனமான இப்போதுள்ள மனிதர்களான நம்மில் உள்ள ஆதிக்குடிகளின் மரபணுக்களைத் தேடுவார்கள் என்று கேள்வி எழுப்ப தற்காலத்தில், மனிதர்களுக்குத் தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை மனித இனத்தின் மூத்த முந்தைய இனமான நியாண்டர்தல் இனத்தில் நவீன அறிவியல் தேடுவதில் இருக்கும் முகாந்திரத்தை மட்டுமே சிறுகதை கேள்வி எழுப்பப் பயன்படுத்திக்கொள்கிறது…

   தரவு இங்கே:
   https://www.medicalnewstoday.com/articles/neanderthal-genes-may-influence-covid-19-severity

   உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்.

  2. //அதே சமயம் தமிழர்கள் உயர்ந்தவர்கள்…. …அத்தனை தமிழர்களும் இதுவே உண்மை என்று நம்பினாலும் இது நிஜமாகிவிடாது…// எது நிஜம் என்பதை அகழ்வாராய்ச்சிகள் தான் தீர்மானிக்க முடியும்… அகழ்வாராய்ச்சி நடப்பதையே தடுப்பதன் பின் இருக்கும் ஆதிக்க செயல்பாட்டைத்தான் சிறுகதை சுட்டுகிறது…

   //நம் பாரம்பரியத்தின் மேல் கொண்ட அபிமானமும் பெருமையும், ஓரளவுக்கு மேலே போனால் இன வெறி ஆகிவிடும் என்பதை கருத்தில் கொள்வது நலம்.//

   அறிவியலின் சட்டகத்துள்ளிலிருந்து மட்டுமே கேள்வி எழுப்புகிறது சிறுகதை…
   இனி பத்தாயிரம் வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் அடுத்த தலைமுறை அதியுயர் மனிதர்கள் (post humans/Homo deus) தங்களுக்குத் தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்திக்கு, அவர்களுக்கு முந்தைய இனமான இப்போதுள்ள மனிதர்களான நம்மில் உள்ள ஆதிக்குடிகளின் மரபணுக்களைத் தேடுவார்கள் என்று கேள்வி எழுப்ப தற்காலத்தில், மனிதர்களுக்குத் தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை மனித இனத்தின் மூத்த முந்தைய இனமான நியாண்டர்தல் இனத்தில் நவீன அறிவியல் தேடுவதில் இருக்கும் முகாந்திரத்தை சிறுகதை கேள்வி எழுப்பப் பயன்படுத்திக்கொள்கிறது……

   தரவு இங்கே:
   https://www.medicalnewstoday.com/articles/neanderthal-genes-may-influence-covid-19-severity

   உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.