இருப்பு

வெகுதூரம் சென்றிருந்தேன்
அது அடர்வனமோ ஆழ்கடலோ
இரண்டுமற்ற வேறெதுவோ
என எதுவும் அறியாமல்
மூடி இருக்கும் விழிகள்.
காதுகளில் ஓசைகளும்
முழுவதுமாய் நின்றிருக்க
சென்றிருந்த தூரம் மட்டும்
எப்படியோ உறைத்தது.
வார்த்தையற்ற மெளனமும்
காட்சியற்ற சூன்யமும்
முற்றிலும் என்னை நிறைத்திருக்க
நினைவற்ற நிலை அது.
அங்கே காலம் ஒரு பொருட்டல்ல.
யுகம் யுகமாய் நானங்கே
இருந்திருக்கிறேன்.
இப்பொழுதும் அங்கேதான்
இருந்து கொண்டிக்கிறேன்.
அடடா
இப்பொழுதுதான் உணர்கிறேன்.
நான் தூரமென்று சொன்னது
சென்றதூரம் என்றில்லாமல்
வந்ததூரம் என்றிருக்க,
மீண்டும் வந்து சேர்ந்தேன் நான்.
சிலகாலம் இந்நிலையில் நானிருப்பேன்.
இந்நிலையும் நான் கடந்து
வந்த இடம் சென்றிடுவேன்.

***