குட்டி வீடு
மலை
இரவு
குளிர்.
ஒரு கற்குடிலில் அறை
அந்தக் குடும்பத்திற்கு.
படுக்கை விரித்த பின்னே
விளக்கணைக்கும் முன்னே
ஒரு பொற்தருணம் உண்டல்லவா
அப்போது
வெள்ளை போர்வைக்கடியில்
எழுந்து உட்கார்ந்த
குட்டிப்பயல்
கையை உயர்த்துகிறான்.
‘இதுதான் நம்ம வீடு’
மூவரும் அவனைச் சுற்றி
அதனுள்ளே தவழ
போர்வைக்குள்
ஒளிரத் தொடங்குகிறது
குட்டி வீடு.

பொருள்
ஒழுங்குபடுத்தினேன்
ஒவ்வொரு பொருளையும்
அதனதன் இடத்தில்.
சிறு இடைவெளி போதும்
ஒவ்வொன்றும்
அதனதன் தனிமையில்.
சரியான இடத்தில் அமர்ந்தவுடன்
ஒவ்வொரு பொருளும்
அமைதி கொள்கிறது.
ஒரு பெருமூச்சுடன்
கண்களை மூடிக்கொள்கிறது.
நீண்ட இரவின் தவத்திற்குப் பின்
மலர்கிறது ஒவ்வொன்றும்
அதனதன் இடத்தில்
இனி இந்த தவத்தை
கலைப்பதற்கில்லை
எந்தப் பக்கம் திருப்பினாலும்
இனி அவை
ஒளியையே காட்டும்

மாய்தல்
ஏழு அழைப்புகளை
நான் தவறவிட்டதாய்
கைபேசி சொன்னது.
நான் அழைத்தபோது
நீ விஷயத்தை சொன்னாய்
ஆனாலும் நீ அழைத்தபோது
நான் எடுக்கத்தவறிய
முதல் அழைப்பில்தான்
அந்த செய்தி உள்ளது.
அது, ஆறின் அடியில் கிடந்து
ஆற்றாமல் துடிக்கிறது
அதன் கண்ணீர் இன்னும்
சூடாய் இருக்கிறது
அதற்குத்தான் என்
அணைப்பு தேவைப்படுகிறது.
***
படித்ததில் பிடித்தது 🤩
அருமையான கவிதை