அறிவு

தருணாதித்தன்

என் முகத்தைப் பார்த்து விட்டு விஜய் கண்ணாடிக் கதவைத் திறந்தான். உள்ளே நுழைந்தவுடன் குளிர்ந்த காற்றும் மருந்து மணமும் முகத்தில் அடித்தன. ஆஸ்பத்திரியில் முன் போல கூட்டம் இல்லை. விஜய் என்னுடைய கம்ப்யூடர் பையை வாங்கிக் கொண்டான். நான் வழக்கம் போல முதல் வேலையாக சலவைக்கல் மண்டபத்தில் இருந்த பிள்ளையாரைக் கும்பிடச் சென்றேன். சண்பகப் பூக்களுடன் லேசாக ஊதுபத்தி மணம். விஜய் கூடவே வந்து நின்றிருந்தான்.  

முடித்தவுடன், புன்னகையுடன் “ என்ன சார் , ட்ராஃபிக் இல்லயா, இப்ப காலையில வரும்போதே டென்ஷன் இல்லாம வரீங்க “ என்றான். 

“ஆமாம் விஜய், இன்னும் நிறைய பேர் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார்கள் போல, ட்ராஃபிக் முன் மாதிரி இல்லை“

என்னுடைய அறையில் எல்லாம் கொண்டு வைத்து விட்டு, “ வேற ஏதாவது வேலை இருக்குதா சார்? “ என்று நின்றான்.

நின்றிருந்தது என்று சொல்லலாம், விஜய் ஒரு ரோபோ. ஆனால் ஸ்டீல் உடம்பும், நட்டும் போல்ட்டுமாக இருக்காது. ஹ்யூமனாயிட் எனப்படும் மனிதர்களைப் போலவே தோற்றம். கண்கள் நோக்கி, இமைகள் மூடித் திறந்து, உதடுகள் சரியாக அசைய  நம்முடன் பேசும் ரோபோக்கள். கைகளும் அப்படியே நம்மைப் போல. தோல், விரல்கள், நகம், மடங்குவது எல்லாமே அச்சாக இருக்கும். தொடும்போது கூட அதிக  வித்தியாசம் தெரியாது. சட்டை, பான்டு, ஷூ என்று சற்று தூரத்திலிருந்து பார்த்தால் ரோபோ என்று சொல்ல முடியாது.

எங்கள் எம்டி ராம்கி சார் ஹாஸ்பிடல் முழுவதும் முடிந்தவரை ஆட்களைக் குறைத்து ரோபோக்களை கொண்டுவந்து விட்டார். கொரோனா உச்சத்தில் இருந்தபோது செய்தது. இப்போதும் தொடர்கிறது, நான் ஜெனரல் மானேஜராக தினமும் மனிதர்களை வேலை வாங்கித்தான் பழக்கம், ரோபோக்களை மேய்ப்பது புதிய அனுபவம்.

ராம்கி சார்  இரண்டு வருடங்களுக்கு முன் ரோபோக்களை ஒரு ஹோட்டலில் பார்த்தார். தன்னுடைய முதல் ரோபோ அனுபவத்தை, உற்சாகமாக சொல்லுவார். 

ஹோட்டலுக்கு சென்ற உடன், வரவேற்றது ஒரு ரோபோவாம், அவர்களை மேசையில் உட்கார வைத்து, “ சார் முதல்ல ஒரு ஸ்வீட் – அம்மா உங்களுக்குப் பிடித்த ஸ்பெஷல் பாதாம் அல்வா சூடா தரட்டுமா ? “

பிறகு மெனு கார்டைக் கொடுத்து “ பாருங்க சார், எல்லாம் இருக்குது, சாருக்கு ரவா ஆனியன் ரோஸ்ட் முறுகலாப் போடலாமா ? அம்மா உங்களுக்கு இடியாப்பம் தேங்காய்ப்பால் ?” 

ராம்கி சார் ஆச்சரியப் பட்டுப் போய் விட்டாராம். மேலும் சாப்பிடும் போது நடுவே வந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கேட்டதாம். தானாகவே வந்து சாருக்கு வெங்காய சட்னி கொஞ்சம் என்று தட்டில் காலியானதைப் பார்த்துக் கேட்டதாம். என்ன ஒரு சர்வீஸ், இந்த மாதிரி மனுஷன் கூட தினமும் அலுக்காமல் செய்ய முடியாது என்றார். அன்றைக்கே எந்த கம்பேனி ரோபோக்களை தயாரிக்கிறது, எப்படி ப்ரோக்ராம் செய்வது, திருப்தியாக இருக்கிறதா என்று அங்கிருந்த மானேஜரிடம் விவரங்களைக் கேட்டு வந்தார்.

என்னிடம் விவரங்களைச் சொல்லி “நம்ம ஹாஸ்பிடல்லயும் ரோபோ கொண்டு வந்தால் எப்படி இருக்கும் ? “ என்று கேட்டார்.

அந்த ரோபோக்களுக்கு அடிப்படையான ப்ரோக்ராம் ஏற்கெனவே தயாராக இருக்கிறதாம். ரோபோக்களை கொண்டு வந்து ஒரு வாரம் விட்டால் போதும். நாம் எந்த வேலைகளை ரோபோ செய்ய வேண்டுமோ அதைச் சொல்லி விட வேண்டும் . முதல் வாரம், மனிதர்கள் கூடவே இருந்து அவர்கள் எப்படிச் செய்கிறார்கள் என்று கவனித்துக் கொள்ளும். தனியாக ட்ரெய்னிங்க், விளக்கம் எதுவும் நாம் கொடுக்க வேண்டியதில்லை. தேவைப் பட்டால் தானாகவே கேட்டுக் கொள்ளும். 

அப்போது எனக்கு சரிப் பட்டு வராது என்று தோன்றியது. மனிதர்கள், அதுவும் நோயாளிகளுடன் ஒத்துழைக்க வேண்டும். எங்கள் வேலை உப்பிய பூரி அலுங்காமல் கொண்டுவந்து தருவது போல இல்லை. பல சமயம் நோயாளிகள் பேச முடியாமல் இருப்பார்கள், இல்லை அவர்களுடைய தாய் மொழியில் பேசுவார்கள், வலியில் கோபப்பட்டு கூவுவார்கள், கத்துவார்கள், மணி நேரம் காத்திருந்து எரிச்சலில் இருப்பார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கையாள வேண்டும். எனக்குத் தெரிந்து ரோபோக்கள் மனிதர்களுடைய உணர்வுகளை நுட்பமாகப் புரிந்து கொள்வது சினிமாப் படங்களில் மட்டும்தான். அதுவும் மனிதர்களை வேலையிலிருந்து எடுத்து ரோபோக்களை கொண்டு வருவது எனக்குப் பிடிக்கவில்லை. ராம்கி சார் அப்போது விட்டு விட்டார், இல்லை, அப்படி நான் நினைத்துக் கொண்டிருந்தேன். 

சென்ற வருடம் ஜனவரியிலேயே கொரோனா பரவ ஆரம்பித்ததும் திரும்பவும் ரோபோ விவகாரத்துக்கு வந்தார். 

 “ தொற்று நோய் பரவும் அபாயம் இருக்கும்போது, குறைந்த அளவு ஆட்கள் இருப்பது நல்லது இல்லையா ?” என்று என்னைக் கேட்டார்.

“இல்ல சார், இந்த மாதிரி எத்தன பார்த்திருக்கோம், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், எபோலா, நிப்பா..  கடைசியில வந்த மாதிரியே போயிடும். “

“ அருண், இது அப்படி இல்ல, பார்த்துக்கிட்டே இரு, ஊர் முழுக்க பரவிடும், யாரும் வேலைக்கு வரவே பயப்படுவாங்க, அதுவும் ஹாஸ்பிடலுக்கு, அரசாங்கமே லாக் டவுன் செஞ்சிடுவாங்க “ என்றார். எனக்கு அவர் மிகைப் படுத்துவதாகத் தோன்றியது.

நான் என்னுடைய பழைய வாதங்களை எடுத்தேன், அவர் விடுவதாக இல்லை.

“அதெல்லாம் சரி, முதலில் எளிதான வேலைகளில் ஆரம்பிக்கலாமே ?”

அவர் முடிவு செய்து விட்டார்.

“சரி சார் “ என்று தலையை மையமாக அசைத்தேன்.

“முதல்ல ரிசப்ஷன்ல ஆரம்பிக்கலாம், இப்ப வந்திருக்கற புதுப் பெண் பாதி நேரம் வாட்ஸப்பில் இருக்குறா. வரவங்க வலிய வந்து கேட்டால் தவிர உதவ மாட்டா.”

ராம்கி சார் ஒரு நாளுக்கு வருவதே சுமார் இரண்டு மணி நேரம்தான், எல்லாம் கவனித்திருக்கிறார். நான் சிறிது கவனமாக இருந்திருக்க வேண்டும். நான் யோசித்தேன். முதலில் எனக்கும் சில பிரச்சினைகள் தீரலாம் என்று தோன்றியது.

ராம்கி சார் உற்சாகமாக “ ஏன், உனக்கு எப்பவும் நர்ஸ்கள் கூட தொந்தரவுதான், சரியாக ட்யூடிக்கு வர மாட்டாரங்க, அய் சி யுவில் இருக்கும் உதவி நர்ஸ் ,பேர் என்ன ? மரியாவா ? எப்போதும் சிடு சிடுத்த முகம்தான். எல்லா வேலைகளையும் முடிந்த வரை ரோபோ கொண்டு வந்திடலாம், என்ன சொல்லுற ? “ என்றார்.

எனக்கும் இது நல்ல முயற்சி என்று தோன்றியது.

இப்படியாக ஒரு நல்ல நாளில் “மனுஷ்” என்கிற ஸ்டார்ட் அப் கம்பெனி ஆட்கள் வந்து முதலில் வாசல் கதவுக்கு ஒரு ரோபோவை நிறுத்தினார்கள். 

அந்தக் கம்பெனியிலிருந்து ஒரு இளம் எஞ்சினியர் வந்திருந்தான். அவன் ராம்கி சாரிடம் “ சார், இது வரைக்கும் ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ் வெச்சு, நம்ம முகத்தைப் பார்த்து என்ன உணர்ச்சிகள் என்று கண்டு பிடிக்கலாம், நான் புதுசா ஒரு அல்காரிதம் எழுதி இருக்கேன், மனுசங்க மாதிரியே இன்னொருத்தருடைய உணர்ச்சிகளை கண்டு பிடிக்கறது மட்டும் இல்ல, அதப் புரிஞ்சு கிட்டு அதுக்குத் தகுந்தால் போல தானும் பதில் உணர்ச்சிகள் காட்டும். இது வரைக்கும் எங்கயும் இன்ஸ்டால் செய்யல, இது ஹாஸ்பிடல் , உங்களுக்கு நிறைய உபயோகம் இருக்கும் “ என்றான். ராம்கி உடனே சரி என்று விட்டார்.

ராம்கி சார்தான் முதல் ரோபோவுக்கு விஜய் என்று பெயரிட்டார். அவருக்கு நம்முடைய புராணங்கள் நிறைய பரிச்சயம். அவர்தான் சொன்னார், வைகுண்டத்தின் வாயில் காவலர்கள் பெயர் ஜயன் விஜயன் அன்று. நான் , அப்படியானால் இது வைகுண்டத்துக்கு வழியா, பிறகு யாரும் நம்ம ஹாஸ்பிடலுக்கு வர மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன். விஜய் ஒரு கணம் அயராமல் வாயிலில் கந்தசாமி செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்து. சரியாக ஒரு வாரம், மனுஷ் எஞ்சினியர்கள் வந்து விஜய் எவ்வளவு கற்றுக் கொண்டது என்று பரிசோதித்தார்கள். 

அதுதான் முதல் முதலாக எங்கள் ஹாஸ்பிடலில் வெற்றிகரமான ரோபோ சேவை ஆரம்பம். விஜய் தினமும் புதிதாதக் கற்றுக் கொண்டது. ஆம்புலன்சில் வந்த ஒருவரை அய் சி யுவுக்கு அனுப்பியது. மாஸ்க் அணியாமல் வந்த ஒரு பெண்ணை நயமாக எச்சரித்தது. இன்னொரு தாத்தாவை வார்டுக்கு அனுப்பி விட்டு, கூட வந்தவரை “கவலப் படாதீங்க, இங்க வந்தாச்சில்ல,  நாங்க பாத்துக்குவோம்“ என்று அனுப்பி வைத்தது.

வார்டில் நர்சுக்கு உதவி செய்ய ரம்பா என்று பெயரிட்டு ரோபோவை அமர்த்தினோம். அதுவும்  ஒரே வாரத்தில் நிறைய வேலைகளை கற்றுக் கொண்டது. தொடாமலேயே நெற்றியில் டெம்பரேசர் பார்த்தது. எழுதி வைத்த சார்டைப் பார்த்து வேளைக்கு மருந்து எடுத்துக் கொடுத்தது. சாப்பாட்டு நேரத்தில் கேன்டீனிலிருந்து இன்னொரு ரோபோ எடுத்து வந்து கதவுக்கு வெளியில் வண்டியில் வைத்த வந்த உணவை எடுத்து வந்து ஒவ்வொருவருக்கும் அழகாக கொடுத்தது.  தானாகவே நடுவில் கைகளை சோப்புப் போட்டுக் கழுவிக் கொண்டது. தண்ணீர் அதிகம் குடிக்காத தாத்தாவை பேசிப்பேசி நிறைய தண்ணீர் குடிக்க வைத்தது.  “சோகமாக இருந்த பாட்டியைப் பார்த்து மொபல் ஃபோன் சார்ஜ் போயிடுச்சா, சார்ஜரை மறந்து வந்துட்டீங்களா ?” என்று விசாரித்து  இன்னொருவரிடமிருந்து சார்ஜரை வாங்கி சானிடைஸ் செய்து கொடுத்தது. யாரோ இன்னொருவர் ” உனக்கு மட்டும் மாஸ்க் தேவை இல்லையா ? என்று கேட்டார். ரோபோக்களுக்குத் தேவை இல்லா விட்டாலும் உடனே ரம்பா தானாக மாஸ்க் கேட்டு வாங்கி போட்டுக் கொண்டது. இப்படியாக ரம்பா வெள்ளை நிற உடையில் ஒரு தேவதை போல அய் சி யுவில் பறந்து வேலை செய்தது. னிறய புதிதாக தானே கற்றிக் கொண்டது. சில மாதங்களில் நாங்கள் அவை ரோபோக்கள் என்பதை ஏறக்குறய மறந்து விட்டோம்.

வீட்டில் தினமும் இரவு உணவின் போது இதேதான் பேச்சு. என் மனைவி அனு “உங்களுக்கும் வேலை போய் விடப் போகிறது” என்று கிண்டல் செய்வாள். 

எல்லாம் நல்லபடி நடந்து கொண்டிருந்தபோது , ஒரு விபத்து ஆயிற்று. அய் சி யூவில் எல்லோரும் மரியாவுக்கு பதில் ரம்பாவை வரச் சொல்லி கேட்டார்கள். மூன்றாம் நம்பர் படுக்கையில் இருந்த தாத்தாவினால்தான் இந்த விவகாரம் பெரிதானது. அவருக்கு தினமும் ரத்தம் எடுத்து சோதனை செய்ய வேண்டும். மரியாதான் அதைச் செய்வாள். அவள் அன்றும் வழக்கம் போல தாத்தாவின் கையைப் பற்றிக் கொண்டு, ஊசி குத்துவதற்கு சரியான ரத்தக் குழாய்  இல்லை என்று முகம் சுளித்துக் கொண்டிருந்தாள். அருகே ரம்பா பார்த்துக் கொண்டிருந்தது. தாத்தா சும்மா இல்லாமல் “ போதும், தினமும் நீ சரியாக் குத்தாமல் வலி உயிர் போகிறது, ரம்பா நீ வா “ என்று அழைத்தார். அது வரை ரம்பா ஊசி குத்தி, ரத்தம் எடுப்பது போன்ற வேலைகளைச் செய்யவில்லை. ஆனால் தினமும் பார்த்துத் தானே கற்றுக் கொண்டிருக்க வேண்டும். உடனே ரம்பா மரியாவிடமிருந்து ஊசியை பிடுங்குவது போல எடுத்துக் கொண்டது. தாத்தாவின் இரண்டு கைகளையும் பார்த்துவிட்டு இது கையில் சரியான ஒரு இடம் தேர்ந்தெடுத்து, வலிக்காமல் ரத்தம் எடுத்து விட்டது. தாத்தா சும்மா இல்லாமல் ” நீ எல்லாம் என்ன நர்சு “ என்று ஏதோ சொல்லி விட்டார். மரியா கோபப்பட்டு அங்கிருந்து வெளியேறி விட்டாள். 

இரவு ட்யூடிக்கு வேறு நர்ஸ் வந்த போது மரியா இல்லை. வழக்கமாக ரம்பா வார்டில் சுற்றிக் கொண்டிருக்கும், அதையும் காணவில்லை. எனக்கு தகவல் வந்தவுடன் சென்று விசாரித்தேன். மரியாவை மொபைலில் அழைத்தேன், அவள் எடுக்கவில்லை. 

விஜய் என்னிடம் வந்து “ சார், மரியாவுக்கு ரம்பாவைக் கண்டாலே ஆவதில்ல, ரம்பாவுக்கு என்ன ஆச்சுன்னு கவலையா இருக்குது, போய்ப் பார்க்கலாம் வாங்க “ என்றான்.

நான் பாதுகாப்பு உடை அணிந்து கொண்டு அய் சி யூவுக்கு உள்ளே சென்று பார்த்தேன். நர்ஸிங் ஸ்டேஷனுக்குப் பின்புறம் ஒரு அறை உண்டு. அது ஸ்டோர் ரூம் மாதிரி. மருந்துகள், ஊசி, சுருட்டிய பஞ்சு எல்லாம் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். அங்கே எல்லாம் கலைந்து விழுந்து கிடந்து. ஒரு மூலையில் தரையில் அலங்கோலமாக ரம்பா. ஓடிச் சென்று அழைத்தேன். ரம்பாவுக்கு கண் அசைவு கூட இல்லை. இரண்டு கைகளும் பிய்ந்து, நிறைய வண்ண வயர்கள் தொங்கின. எனக்கு கோபம் ஏறியது. மரியாதான் இதைச் செய்திருக்க வேண்டும். 

கந்த சாமியை அழைத்து, அவன் உதவியுடன் ரம்பாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து கீழே எடுத்து வந்தேன். மற்ற எல்லா ரோபோக்களும் வந்து சுற்றிலும் நின்று கொண்டு பார்த்தன.   நான் ரோபோக்களை அவர் அவர் வேலைகளைப் பார்க்கப் போகச் சொன்னேன். ரோபோக்கள் உடனே திரும்ப வேலைக்குப் போகாமல், ஒரு ஓரமாகச் சென்று பேசிக் கொண்டிருந்தன.  மனுஷ் கம்பெனி சர்வீஸ் ஆட்களை உடனே அழைத்தேன்.  அதனால், அவர்கள் மறு நாள் காலை வருவதாக சொன்ன்னர்கள். ரம்பாவை ஸ்டோர் ரூமில் வைத்து விடச் சொன்னேன்.   

நான் வீட்டுக்குக்  கிளம்பினேன். போகும் வழியில் யோசித்தேன், ரம்பா என்ன ஒரு ரோபோதானே, லிஃப்ட் கெட்டுப் போனது மாதிரி இல்லை ஜன்னல் கண்ணாடி உடைந்தது மாதிரிதானே, எனக்கு ஏன் அவ்வளவு கோபம் வந்தது என்று. அதை விட விஜய் என்னிடம் “கவலை” என்று சொன்னது யோசிக்க வைத்தது. வீட்டுக்குப் போய் மனைவி அனுவிடம் அன்று நடந்ததைப் பற்றி சொன்னேன். அனு “ ஒரு வேளை விஜய்க்கு ரம்பா மேல காதல் இருக்குமா ?” என்று சிரித்தாள். 

அனு சாப்பிட்டு டீவி பார்க்க உட்காரும்போதுதான்  கேட்டாள்.

“என்னங்க ஜெராக்ஸ் எடுத்தீங்களா ? டாகுமென்ட் உங்க பையில இல்லையே “என்றாள். அப்போதுதான் எனக்கு நினவுக்கு வந்தது – அனு காலையிலேயே என்னிடம்  ஏதோ சில டாகுமென்ட் கொடுத்து ஜெராக்ஸ் எடுத்து வரச் சொல்லியிருந்தாள். அதை மறக்காமல் இருக்க மேசை மேல் கண்ணில் படும்படியாக எடுத்து வைத்திருந்தேன். அனுவுக்கு காலையிலேயே அது கட்டாயம் வேண்டும் என்றாள்.

உடை மாற்றிக் கொண்டு திரும்பவும் ஹாஸ்பிடலுக்கு வந்தேன். எங்கள் ஹாஸ்பிடல் பெயர் நீல நிற நியான் விளக்கில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இரவு நேரத்தில் வளாகமே களை மாறி அமைதியாக இருந்தது. பார்க்கிங்கிலிருந்து வாயிலுக்குச் செல்லும் வழியில் ஒரு பக்கம் விளக்குகள் எரியவில்லை. சுற்றிலும் பார்த்தேன். அதற்குப் பொறுப்பான ரோபோ  காணவில்லை. பின்பக்கம் தண்ணீர் மோட்டார் ஆன் செய்யப் போயிருக்கலாம். 

வாயிலில் விஜய் வரவேற்பதற்கு இல்லை. உள்ளிருந்து பித்தானை அழுத்தித் திறந்தால்தான் நான் உள்ளே செல்ல முடியும். இரவு மேனேஜர் உள்ளே தென்படுகிறானா என்று பார்த்தேன். காணவில்லை. கான்டீனுக்குப் போயிருக்கக் கூடும். ஆனால் இப்படி ஒருத்தரும் இல்லாமல் எங்கே ஒழிந்தார்கள் என்று எரிச்சல் வந்தது. ரோபோக்கள் எங்கே என்று பார்க்க ஒரு ஆப் இருந்தது. என்னுடைய செல்ஃபோனில் அந்த ஆப்பைப் பார்த்தால், அதில் சரியாக தகவல் வரவில்லை.

வெளியே இடது பக்கத்தில் இருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்தேன். அது எப்போதும் திறந்திருக்கும். காத்திருக்கும் அறை காலி. உள்ளே காலேஜ் பையன் மாதிரி இருந்த இளம் டாக்டர் கேம் விளையாடிக் கொண்டிருந்தான். அவனைத் தாண்டி உள்ளே சென்றேன். ரேடியாலஜியில் யாரும் இல்லை. ஃபார்மசி மூடி இருந்தது. வார்டுகளுக்குச் செல்ல நான் பாதுகாப்பு உடை அணிய வேண்டும். ஒரு ரோபோ கூட காணவில்லை. 

முதலில் என்னுடைய அறைக்குச் சென்று டாகுமென்டை எடுத்துக் கொண்டேன். செக்யூரிட்டி அறைக்கு வந்தேன். அங்கே இன்னும் ரோபோ வரவில்லை. கல்னல் இருந்தார். அவர்தான் இரவு நேர செக்யுரிடி தலைவர். “என்ன கல்னல், யாருமே இல்லை ? எங்க போயிட்டாங்க எல்லோரும் ? “ என்றேன். அவர் சுவர் முழுவதும் இருந்த மானிடர்களைப் பார்த்தார்.  நான் நினைத்தது சரிதான். கான்டீனில் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள். 

“அது சரி, ஒரு ரோபோ கூட காணவில்லை, விஜய் கூட வாசல்ல இல்லை ?”

“ நான் இப்பதான் ஒரு ஐந்து நிமிடம் முன்பு ரவுண்டு முடித்துவீட்டு வந்தேன்,  அப்ப பார்த்தேனே “அவர் மறுபடியும் மானிட்டர்களில் தேடினார். அவற்றில் இரண்டில் படம் வரவில்லை. கருப்பாக இருந்தது. கல்னல் தீவிரமாக எழுந்தார். இது பேஸ்மென்டில இருக்கற கான்ஃபரன்ஸ் ஹால் உள்ளே இருக்கும் காமிரா, இன்னொன்று அங்கே போகும் வழி, இரண்டும் எப்படி வராமல் இருக்கும் ? நீங்க இங்கயே இருங்க, நான் ஒரு நிமிடம் போய் பார்த்து விட்டு வந்திடறேன் “ என்றார். எனக்கும் ஆர்வம் பற்றிக் கொண்டது.   நெட்ஃப்ளிக்சில் நிறைய க்ரைம் சீரியல் பார்ப்பதன் விளைவு. “ கல்னல் நானும் வருகிறேன் “ என்று கிளம்பினேன். அவர் ஒரு கணம் தயங்கினார். “சரி, என் பின்னாலே வாங்க “ 

நான் லிஃப்ட் அருகே சென்றேன். கல்னல் வேண்டாம் என்று சைகையில் சொல்லி, படிகளுக்குச் செல்லும் கதவைக் காண்பித்தார். நாங்கள் இருவரும் பேஸ்மென்டுக்குச் செல்லும் படிகளில் இறங்கினோம். விளக்குகள் எதுவும் எரியவில்லை. கான்ஃபரன்ஸ் ஹால் போகும் வழியில் சுவற்றின் மேல் இருந்த காமிராவைப் பார்த்தோம். கல்னல் சுட்டிக் காட்டினார். அதன் கேபிள் கழன்று தொங்கிக் கொண்டிருந்தது. 

நாங்கள் கான்ஃபரன்ஸ் அறைக் கதவுக்கு வந்தோம். கல்னல் மறுபடியும் என்னை சத்தம் செய்யாமல் இருக்க உதட்டின் மேல் விரல் வைத்து சைகை காட்டி, கதவை மிக லேசாகத் திறந்தார். உள்ளே நடுவில் மெல்லிய வெளிச்சம். நாற்காலிகள் எல்லாம் ஒரு பக்கம் அடுக்கி இருக்க, அறை நடுவே ரோபோக்கள் எல்லாம் தரையில் இருந்தன. கவனித்த போது அவை எல்லாம் தரையில் விழுந்து வணங்குவது போல இருந்தது. எழுந்து மண்டி போட்டது போல உட்கார்ந்தன. கைகளைக் கூப்பி அழுவது மாதிரி விசித்திரமான ஒலி எழுப்பின.  நாங்கள் மெல்ல உள்ளே சென்றோம். நடுவில் மேசை மேல் ஒரு ரோபோ படுத்த மாதிரி இருந்தது. எட்டிப் பார்த்தேன். ரம்பா ரோபோதான்.

 அப்போதுதான் அந்த அறையில் மெல்லிய சண்பகப் பூக்களின் மணமும் ஊதுபத்தி மணமும் உணர்ந்தேன்.

****

5 Replies to “அறிவு”

  1. நல்ல கதை. காதல் தோன்றும் என்று யூகித்தேன். தவிர, வேலை நிறுத்தம், வன்முறை ஏதாவது நடக்குமோ என்ற அச்சம் வந்தது. சரியான உச்சரிப்பு ரொபாட். ரோபோ என்று தமிழர்கள் ஏன் சொல்ல வைக்கப்படுகிறார்கள்? போலிஷ் மொழி யில் ரொபாட் என்றால் வேலை. அது தான் மூலம். ஃபரெஞ்ச் அல்ல

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.