அந்த மீன் நடந்தே சென்றது

திலீபன்

“அப்பா, இந்த குருவி பேசுறது உங்களுக்கு புரியுமா ? “

“அப்பா, நான் பென்சில் ல கிறுக்குறது இந்த செவுருக்கு வலிக்குமா பா? “

“அப்பா, ரோஜா பிளாண்ட் இருக்கு ல. …அதுக்கு காது கேக்குமா பா?
அம்மா டெய்லி குட் மோர்னிங் சொல்ராங்க பா. “

“அப்பா. …நைட் டைம்ல மட்டும் எல்லா நட்சத்திரமும் ஏன்பா மின்னுது?”

இப்படி பல கேள்விகளைக் கொண்டு வானுயர கட்டிடமே கட்டிவிடுவாள் வர்ஷா. ..

“ஈவினிங் ஆனா அம்மா வீட்ல லைட் போடுவாங்க ல. அதே மாதிரி அங்கேயும் லைட் போடுவாங்க வர்ஷா மா அதான் நைட் டைம்ல மின்னுது.”

அவசர அவசரமாக ஒரு பதிலை சொல்லிவிட்டு செல்போனிற்குள் குதித்துவிடுவான் கார்த்திக்.

வர்ஷாவின் பார்வை எதன் மீதேனும் நெடுநேரம் விழுகிறதென்றால் கார்த்திக் தான் பாவம். அவளது தாத்தா இருந்தவரை அவனுக்கு இந்த பிரச்சனை இருந்தது இல்லை.

“அம்மாக்கு தெரியும் டா. போ நீ வேணும்னா கேட்டு பாரு ” இப்படித்தான் அவனால் தப்பித்துக்கொள்ள முடியும்.

 அப்பாவிற்கு போல் அம்மாவிற்கு துரத்தும் கேள்விகளெல்லாம் கிடையாது. .

பதில்கள். வெறும் பதில்கள் மட்டும் தான். இப்போது கேள்வி முறை அம்மாவுடையது. 

அம்மா நான் ஹோம்ஒர்க்  பண்ணிட்டேன் மா.

எப்போ பண்ண?

என்ன சப்ஜெக்ட்?

டைரிய காமி ?

அம்மா நான் உன் போனை சார்ஜ்ல போட்டுட்டேன்.

எப்போ எடுத்த நீ?

கேம் தான விளையாடுன?


அம்மா ரோட்ல ஒரு மாடு போறத பாத்தேன் மா.

நீ ரோட்டுக்கு போனியா?
ஜன்னல் வழியா தான பாத்த?
ஏன் போன சொல்லாம?  

பல சீறல்கள் வரும் அம்மாவிடமிருந்து. அத்தனையையும் ஒற்றை கன்னக்குழி சிரிப்பில் அமர்த்திவிடுவாள் வர்ஷா.

வர்ஷாவின் பாட்டிக்கு அப்படியே தனி ஏற்பாடு.

இங்கு அவள் பதில் பெற்ற அத்தனை கேள்விகளும் பாட்டியிடம் கேட்கப்படும். சிறிது கண்டிப்பான முறையில்,கையில் குச்சியுடன். முழு நேர ஆசிரியை போல.

“கஸ்தூரி, நட்சத்திரம் ஏன் மின்னுது னு தெரியுமா?”

“கடவுள் அருளால் தான் பூமியில் எல்லாம் நடக்குது வர்ஷா குட்டி.”

“போ. உனக்கு ஒன்னும் தெரியல. ஒன்னுமே தெரியல. “ஒரு பொய்க் கோப பார்வையை வீசுவாள். கையை பிசைவதைத் தவிர பாட்டியிடம் வேறு பதில் இருக்காது.
“நீ தோசை சுட தான் லாயக்கு, போ ” என்ற செல்லத் திட்டு வேறு.

ஞாயிறன்று மட்டும் வரும் பேத்தியிடம் இப்படி திட்டுகளை வாங்கிக்கொள்ள எந்தப் பாட்டிக்குத் தான் பிடிக்காது.

வர்ஷா ஓய்ந்து உட்கார்வது சாப்பிடும்பொழுது டிவி முன் மட்டும்தான். அப்போதும் அவள் அப்பாவிற்கு ஓய்வு அளிக்க படமாட்டாது.

“கார்த்திக், வர்ஷாக்கு ப்ராஜெக்ட் குடுத்துருக்காங்க, பாத்தியா?

“ஹ்ம்ம். “

“அக்வேரியம் பத்தி பிக்ச்சர்ஸோட ஒரு எஸ்ஸே எழுதணுமாம்.”

“நீயே பண்ணலாம். பிக்ச்சர்ஸ் மட்டும் வேணும்னா நான் கலெக்ட் பண்ணி தரேன். “

தன் பதிலுக்கு என்ன எதிர்வினை வரும் என்பதை முன்னரே அனுமானித்து, இட்லி பிசைவதில் தன்னை தீவிரப்படுத்திக்கொண்டிருந்தான்.

“அப்பா, என்னை அக்வேரியம் கூட்டிட்டு போவீங்களா பா? “

“வர்ஷா, நீ ஒழுங்கா சாப்பிடு மொதல்ல. அப்போதான் எல்லாம்.”

“சாப்பிட்டா கூட்டிட்டு போவீங்களா பா ?” என வாஞ்சையுடன் கேட்கும் வர்ஷாவின் முகத்திற்கு எவராலும் மறுப்பு சொல்ல முடியாது.

“சரி வர்ஷா மா நீ சாப்பிடு. “

எப்போதும் ஒரு இட்லி சாப்பிடுவது தான் அவள் வழக்கம். சாப்பிடும் ஒரு இட்லியை, அளவு குறைவாக பிய்த்து வேகமாக சாப்பிடுவது போல், வெறும் பாவ்லா காட்டிக்கொண்டிருந்தாள் வர்ஷா. 

அடுத்த நாளே பள்ளி முடிந்ததும்  வர்ஷாவை அழைத்து கொண்டு பெற்றோர் இருவரும் அருகில் இருந்த அக்வேரியம் சென்று வந்தனர். விளைவாக ஒரு மீன் தொட்டியும், இரு கோல்ட் பிஷ்களும் வீட்டிற்கு புதிய வரவாகின. தனது இரண்டு மீன்களும் தங்க நிறத்தில் இருந்ததால் தங்கத்தால் ஆன அதிசய மீன்கள் என அதிசயப்பட்டுக்கொண்டிருந்தாள் வர்ஷா. வயிறு பெருத்திருந்த மீனுக்கு பூகி என்றும், வயிறு ஒட்டி மெலிந்திருந்த மீனுக்கு டூகி என்றும் பெயரிட்டாள் வர்ஷா.

அக்வேரியம் பற்றிய வர்ஷாவின் கட்டுரையைவிட, பூகி டூகி பற்றிய அவளின் கதைகள் பள்ளியில் பெரும் வரவேற்பை பெற்றது. வகுப்பில் கதை சொல்வதற்காகவே அதிக நேரம் மீன் தொட்டி அருகில் செலவிட்டாள். எண்ணற்ற கதைகள் அவளுக்குள் பிறந்த வண்ணமிருந்தன. பூகி அவள் அசைவிற்கேற்றார் போல நடனம் ஆடும் என்றும், டூகி தன்னுடன் கார்ட்டூன் பார்த்து தானும் சிரிக்கும் என்றும் கதை விடுவாள்.பூகிக்கு தான் பின்னோக்கி நீந்த கற்றுக்கொடுத்ததாகவும், டூகி இரவு நேரங்களில் நிறம் மாறும் என்றும் கதைகளை நீட்டிக்கொண்டே சென்றாள். நாளாக நாளாக அவள் கதை பரப்பு நீண்டு கொண்டே சென்றது. பெட் ஷாப்களில் தரப்படும் மீன் உணவில், கோல்ட் பிஷ்களுக்கு பச்சை நிற உணவே மிகவும் பிடிக்கும், மற்றதை தொடாது எனவும் பரப்புரை செய்வாள்.

“எப்டி சொல்ற நீ? ” என்ற எதிர்கேள்விகளுக்கு

“ஆமா, பூகி ஒன் டைம் சொல்லுச்சு என் கிட்ட ” என்பாள்.

சில சமயம் அம்மாவிடம், ” அம்மா பாட்டிக்கு பூகி பிடிக்குமா, டூகி பிடிக்குமா” என கேட்பதும் உண்டு. தனக்கு பிடித்தமானவர்களின் பிரியத்தை கேட்டறிவதில் குழந்தைகளுக்கு எத்தனை இன்பம் என்றே தோன்றும்.

பாட்டியுடன் செலவிட வேண்டிய பல ஞாயிறுகளை பூகியும் டூகியும் விழுங்கி செரித்தன. தவறவிட்ட ஞாயிறை சரிக்கட்ட அடுத்த வாரம் சனி இரவே சென்று விடுவாள். வழக்கம் போல பாட்டிக்கான வகுப்புகள் ஞாயிறு காலை தொடங்கிவிடும். பாட்டிக்கும் சில மீன் கதைகள் சொல்லப்படும். பூகிக்கு பிடித்தமான உணவு, டூகி விரும்பி பார்க்கும் கார்ட்டூன் பற்றிய கேள்விகள் கேட்கப்படும். பாட்டி வீட்டில் அப்பாவிற்கு பிடித்தமான உணவு சமைக்கப்படும்போது, அப்பாவிற்கு பங்கு வைத்து எடுத்து வருவது அவள் வழக்கம்.

“அம்மா, உனக்கு பிடிச்ச பாட்டு போடறாங்க. வா” போன்ற அலறல்களை அடிக்கடி வர்ஷா வீட்டில் கேட்கலாம். .

பள்ளி முடிந்து வந்ததும், சீருடையைக் கூட கழட்டாமல், சேர் மீது நின்று கொண்டு பூகி டூகிக்கு உணவு போடுவாள். பச்சை நிறத்தில் உள்ள உருண்டைகளை மட்டும். பாகுபாடின்றி இரண்டு மீன்களுக்குமான முத்தத்தை தனித்தனியே கண்ணாடி சுவற்றில் பதிப்பாள். முத்தச்சுவடு காயாத கண்ணாடி சுவரில் பூகியும் டூகியும் மோதிச்செல்வது, அவள் முத்தத்தை பெற்றுக்கொண்டு பதில் முத்தம் விட்டுச்செல்வது போலவே இருக்கும்.

தன் பென்சில் பாக்ஸ் மீது இரட்டை மீன்களின் படத்தை ஒட்டி, பூகி டூகி என அவற்றின் கீழ் எழுதி வைத்துக்கொண்டாள். பல இரவுகளின் யாமத்தில், பூகி டூகியுடன் மீன்தொட்டி நீச்சலும் போட்டாள்.

ஒரு நாள் மிகுந்த பரபரப்புடன் வேலை செய்து கொண்டிருந்த அப்பாவிடம் சென்று,

“செத்து போறதுனா என்ன பா? ” என்று கேட்டாள் வர்ஷா 

திணறி போன கார்த்திக், எதிர் வீட்டு சந்தோஷ் வளர்த்த இரண்டு நாய்களில் ஒன்று இறந்து போனதை நினைவுபடுத்திக்கொண்டு,

“செத்து போறது னா, ரொம்ப தூரம் போறது வர்ஷா மா.”

“நாம ரொம்ப தூரம் இருக்க ஊர் போறோம் ல அது மாதிரி. “

“அதுக்கு ஏன் பா சந்தோஷ் அண்ணா அழுறாங்க? “என்றாள் கலக்கத்துடன்.

“……………………………………………”

“தாத்தா ரொம்ப தூரம் போய்ட்டாங்க னு உன் பாட்டி அழுவாங்க ல. அது மாதிரி தான் ” என்றான்.

“வர ரொம்ப நாள் ஆகுமா பா? “

“ஆமா மா. போ போய் ஹால்ல விளையாடுங்க ” சொல்லிவிட்டு மொத்த கவனத்தையும் லேப்டாப் மீது குவித்தான் கார்த்திக். வர்ஷாவின் கவனத்தையும் பூகி இழுத்துவிட்டது. அங்கிருந்து நகர்ந்தாள்.

தாத்தாவின் வேண்டுதலை நிறைவேற்றவும், பாட்டியின் ஆசைக்காகவும் குடும்பம் மொத்தமும் கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவில் பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது. அனந்தன் மாமா, சாந்தி அத்தை வருகையை அறிந்து துள்ளி குதித்து கொண்டிருந்தாள் வர்ஷா. மூன்று தினங்கள் பள்ளிக்கு விடுப்பு தெரிவித்ததும் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது அவளுக்கு. ஞாயிற்று கிழமை காலை கிளம்பி நான்கு தினங்கள் கும்பகோணம், திருநள்ளாறு, மயிலாடுதுறை என பல கோவில் தளங்களுக்கு சென்று வழிபட்டுவிட்டு,  ஊர் திரும்பத் திட்டம் போடப்பட்டது.  

திட்டப்படி ஞாயிறு காலை கிளம்பி வழிபாட்டை முடித்துக்கொண்டு புதன் இரவன்று வீடு திரும்பினர். வீடு திரும்புகையில் நள்ளிரவாகி விட்டதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் வர்ஷா. உறக்கத்திலும் அத்தை மாமா வாங்கி கொடுத்த பல வண்ண சிறிய பியானோவை கையில் இறுக பிடித்துக்கொண்டிருந்தாள். வர்ஷாவின் கையில் இருந்த பியானோ பிடுங்கப்படும்போது உண்டான இசை கூட அவள் உறக்கத்தை சலனப்படுத்தவில்லை. பலவண்ணக் கனவுகள் காணும் ஆழ்ந்த உறக்கம்.

வர்ஷா காலையில் எழுந்து மீன் தொட்டியை பார்த்தபோது, பூகியும் டூகியும் காணாமல் போயிருந்தன.

“அப்பா,  பூகி எங்க? ” என்றாள்.

“டூகியும் தான் இல்ல ” என்றாள் அம்மா ஒன்றும் தெரியாதது போல் 

“ஆமா, ரெண்டும் எங்க?”

கவனிப்பின்றி செத்து, தலைகீழாக மிதந்த இரண்டையும் அகற்றியவளே அவள் தான். தன்னை சமாளிக்கும்படி செய்கிறாளே என உள்ளூர நொந்து கொண்டான் கார்த்திக்.

“ரெண்டும் வெளியே போயிருக்கு வர்ஷா, வந்துடும்.” என்றான் 

“ஏன் போச்சு? ” பதில் கேள்வி.


“………………………………………….” கொஞ்ச நேர சிந்தனைக்கு பிறகு.

“நீ பாட்டி வீட்டுக்கு போவ ல, அது மாதிரி அதுவும் போயிருக்கு.”

ஒரு வழியாக சமாளித்து விட்டது போல் திருப்தியடைய நினைத்தவனை வர்ஷா விடவில்லை.

“எப்படி பா போச்சு? ” கலங்க தயாரான கண்களுடன்.

“நம்ம ஐஸ்கிரீம் கடை இருக்கு ல. அது வழியா நடந்து போறத வாட்ச்மென் தாத்தா பாத்துட்டு சொன்னாரு மா. “

“நடந்தே போச்சாம்.” என்றான்.

இப்போது கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது அவள் கண்களில்.

“நாம போய் கூட்டிட்டு வரலாமா பா? ” என்று அவள் சொல்லி முடிக்கும்போது ஒரு கண்ணில் தடுப்பை மீறி கண்ணீர் குதித்தோடி வந்துவிட்டது.

அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.

“வர்ஷா மா, நீ பாட்டி வீட்டுக்கு போயிட்டு நீயா வருவ ல. அதே மாதிரி பூகியும் டூகியும் அதுவா வந்துடும்.” என்றான் கார்த்திக்.

அழுகை ஒருவாறாக அமர்த்தப்பட்டது…அன்று எவரிடமும் அதிகம் பேசவில்லை வர்ஷா.

அடுத்த நாளே வீட்டிற்குள் இரு புதிய மீன்கள் பிரவேசித்தன. அவளை ஆற்றுப்படுத்த கார்த்திக் வாங்கிவந்திருந்த அந்த புதிய மீன்கள் வர்ஷாவின் கனவில் கூத்தாடிய தங்க நிறத்தில் இல்லை. .

தன் வீட்டில் பிறந்த குட்டி நாய் ஒன்றை சந்தோஷ் அவளுக்கு ஆசையாய் கொடுத்தான். அதன்மீதும் கவனம் செல்லவில்லை. வீட்டிலிருந்த புது நாய்குட்டியும், புது மீன்களும் அவள் கனவில் தோன்றவே இல்லை. அவற்றிலிருந்து அவளுக்குக் கதைகளும் பிறக்கவில்லை. .

சிலந்தி மனிதன் பறந்து கொண்டிருக்கும் அட்டைப்படமும் அவளை ஈர்க்கவில்லை. ஆதலால், புதிய பென்சில் பாக்ஸ் அலமாரியில் நிரந்தரமாக அடைபட்டுப்போனது. .

ஆத்மார்த்தமாக அன்பு செய்ய குழந்தைகளுக்கு நிகர் குழந்தைகளே என்றுதான் தோன்றுகிறது. அவர்கள் தன் நேசத்திற்குரிய உயிருக்கான மாற்றை உடனே கண்டுபிடிப்பதும் இல்லை, ஏற்றுக்கொள்வதும் இல்லை.

“உன் பூகி, டூகி என்னாச்சு? கதை சொல்லேன் ” என்கிற நண்பர்களின் கேள்விக்கு 

“அது நடந்தே போய்டுச்சு…”

“ரொம்ப தூரம்… “என்பாள். .

***

One Reply to “அந்த மீன் நடந்தே சென்றது”

  1. அந்த மீன் நடந்ததே சென்றது – எனும் சிறுகதையின் தலைப்பே என்னை பல சிந்தனைகளுக்கு அழைத்து சென்றது.செத்து போறதுனா என்ன பா? செத்து போறது னா, ரொம்ப தூரம் போறது வர்ஷா மா.நாம ரொம்ப தூரம் இருக்க ஊர் போறோம் ல அது மாதிரி.

    குழந்தையின் மரணம் பற்றிய கேள்வி,ஆசையாக பழகும் பூகி,டூகி மீன்களின் இழப்பை அந்த மீன் நடந்ததே சென்றதாக கூறி நம்வைப்பதையும் ,உன் பூகி, டூகி என்னாச்சு? கதை சொல்லேன் ” என்கிற நண்பர்களின் கேள்விக்கு
    அது நடந்தே போய்டுச்சு.என்று பதில் சொல்லும் குழந்தையின் அழகு.

    சிறுகதை ஆசிரியர் திலீபன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.