சுல்தானாவின் கனவு

ருகையா ஷகாவத் ஹுசென்

(தமிழில்: நம்பி கிருஷ்ணன்)

ஒரு மாலைப் பொழுதில் படுக்கையறைச் சாய்வு நாற்காலியொன்றில் ஹாயாக இந்தியப் பெண்களின் நிலை குறித்து முனைப்பில்லாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். அப்படியே தூங்கிப் போனேனா என்று சரியாக நினைவில்லை; அனேகமாக கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டுதான் இருந்தேன் என்று நினைக்கிறேன். நிலவொளிர்ந்த வானத்தில் வைரம் போல் ஆயிரக்கணக்கில் ஜொலித்த நட்சத்திரங்களைப் பார்த்தது மிகத் துல்லியமாக இன்னமும் நினைவில் இருக்கிறது. 

திடீரென்று என்முன் ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தார்; எப்படி உள்ளே வந்தார் என்று தெரியவில்லை. என் நண்பி சிஸ்டர் சாராவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். 

“இனிய காலை வணக்கம்” என்றார் சிஸ்டர் சாரா. அது காலையல்ல, விண்மீன்கள் ஒளியைப் பொழிந்து கொண்டிருக்கும் இரவு என்பதை நான் அறிந்திருந்ததால் உள்ளுக்குள்ளேயே சிரித்து கொண்டேன். இருந்தாலும்கூட “எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டு வைத்தேன். 

“நன்றாகவே இருக்கிறேன். கேட்டதற்கு நன்றி. எங்கள் தோட்டத்தைப் பார்வையிடுவதற்காக தயவுகூர்ந்து சற்று வெளியே வரமுடியுமா?

திறந்த ஜன்னல் வழியே நிலவை மீண்டும் ஒருமுறை பார்வையிட்டு விட்டு, இந்நேரம் வெளியே செல்வதில் அபாயம் ஏதுமில்லை என்று நினைத்துக் கொண்டேன். வேலைக்கார ஆசாமிகள் வெளியே தூங்கிக் கொண்டிருந்தார்கள். சிஸ்டர் சாராவுடன் சற்று நடந்துவிட்டு வருவது சுகமாகத்தான் இருக்கும் என்று தோன்றியது.  அழைப்பை ஏற்று அவருடன் வெளியே செல்லலாம் என்று முடிவுசெய்தேன். 

டார்ஜீலிங்கில் இருந்தபோது சிஸ்டர் சாராவுடன்தான் நான் நடைப்பயிற்சி செய்வேன். தாவரவியல் தோட்டங்களில் கைகோத்துக்கொண்டு சிரித்துப் பேசியபடியே நடந்து செல்வோம். இப்போதுகூட அப்படிப்பட்ட தோட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்காகத்தான் வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். அவரது அழைப்பை ஏற்று அவருடன் வெளியே சென்றேன். 

நடந்து செல்கையில், இவ்வளவு அருமையான காலையா என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டேன். ஊர் முற்றிலும் விழித்துவிட்டிருந்தது. நெரிசல் கூட்டத்துடன் சாலைகள் உயிர்த்திருந்தன. வெட்ட வெளிச்சத்தில் வீதியில் நடந்துசெல்வது மிகவுமே கூச்சமாக இருந்தது, ஆனால் ஓர் ஆண்கூட தென்படவில்லை. 

எங்களைக் கடந்து சென்றவரில் சிலர் என்னைப் பற்றி ஜோக் அடித்தார்கள். அவர்கள் பாஷை புரியவில்லை என்றாலும் அவர்கள் நக்கலடிக்கிறார்கள் என்பது நிச்சயமாகத் தெரிந்தது. என் நண்பியிடம் கேட்டேன், “என்ன சொல்றாங்க?” 

‘பெண்கள் நீ ரொம்பவுமே ஆம்பளத்தனமா இருக்கங்கறாங்க?’

“ஆம்பளத்தனமான்னா?  என்னதான் சொல்ல வராங்க?’  நான் கேட்டேன்.

‘ஆம்பளைங்களப்போல நீ பயந்து கூச்சப்படறன்னு நினைக்கறாங்க.’

‘ஆம்பளங்களப்போல பயந்து கூச்சப்படறேனா?’  நல்ல கதை. எனக்குத் துணையாக வருவது சிஸ்டர் சாரா அல்ல, ஒரு வேற்றுப் பெண், என்பதை உணர்ந்து கொண்டபின் மிகவுமே பதற்றம் அடைந்தேன். நான் என்ன ஒரு முட்டாள், இந்த அம்மணியை என் நேசத்துக்குரிய நீண்ட நாள் தோழி சாரா என்று தவறாக நினைத்துவிட்டேன். 

நாங்கள் கைகோத்தபடி நடந்து கொண்டிருந்ததால், என் விரல்கள் அவள் கையில் நடுங்கியதை அவர் உணர்ந்திருக்க வேண்டும்.

“என்னாச்சுமா?” அவர் அன்பாகக் கேட்டார். “பர்தா அணியும் பெண்ணாகப் பழகிவிட்டதால் முகத்தைத் திரையிடாது வெளியே நடப்பதற்கு எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது” என்று மன்னிப்புக் கேட்கும் தொனியில் கூறினேன். 

“இங்கு ஆண்மகனை எதிர்கொள்ளும் பயம் கிடையாது. தீங்கையும் பாவத்தையும் துறந்த பெண் நாடு இது, அறம் இங்கு ஆட்சி புரிகிறாள்.” 

நடை அதிகரிக்க அதிகரிக்க இயற்கையை ரசிக்கத் துவங்கினேன். உண்மையாகவே அது பிரமாதமாக இருந்தது. பசும்புற்தடம் ஒன்றை மென்பட்டு மெத்தையாக முதலில் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டேன். மென் கம்பளமொன்றின்மீது நடந்து செல்வதுபோல் இருக்கிறதே என்று கீழே பார்த்தால் பாதை முழுதுமே பூக்களாலும் பாசியாலும் போர்த்தப்பட்டிருந்தது. 

“ஆகா, எவ்வளவு அருமையாக இருக்கிறது” என்று கூறினேன்.

“பிடித்திருக்கிறதா” என்று சிஸ்டர் சாரா கேட்டார். (இன்னமும் அவளை “சிஸ்டர் சாரா” என்றே அழைத்துக் கொண்டிருந்தேன். அவரும் என்னைத் தொடர்ந்து பெயர் சொல்லியே அழைத்தார்.)

“ஆம் மிகவும் பிடித்திருக்கிறது; ஆனால் இனிமையான பிஞ்சுப் பூக்களை மிதிப்பது எனக்குப் பிடிக்காது.”

“அதெல்லாம் பரவாயில்லை சுல்தானா; நீ நடந்து செல்வதால் குடி முழுகிவிடாது; அவை சாலைப் பூக்கள்.”

“இந்த இடம் முழுவதுமே ஒரு தோட்டத்தைப்போல் இருக்கிறது. ஒவ்வொரு செடியையும் நீங்கள் அவ்வளவு நுணுக்கமாக சீரமைத்திருக்கிறீர்கள்,’ என்று நான் வியப்புடன் கூறினேன். 

“உங்கள் நாட்டவர் விரும்பினால் கல்கத்தாவை இதைக் காட்டிலும் அருமையான தோட்டமாக ஆக்கிவிட முடியும்.”

“செய்வதற்கு அவ்வளவு காரியங்கள் கிடக்க, தோட்டக்கலையில் இவ்வளவு கவனம் செலுத்துவது நேர விரயம் என்று அவர்கள் எண்ணக்கூடும்.”

“அவர்களுக்கு அதைக் காட்டிலும் நல்ல காரணம் கிடைக்காது,” என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்னார். 

ஆண்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு எனக்கு மிகவும் ஆவலாக இருந்தது. நடந்து செல்கையில் நூற்றிற்கும் மேற்பட்ட பெண்களைச் சந்தித்தேன், ஆனால் ஓர் ஆடவனைக்கூட எதிர்கொள்ளவில்லை. 

“ஆண்கள் எங்கு இருக்கிறார்கள்?”

“எங்கு இருக்க வேண்டுமோ அங்கு, அவர்களுக்கு ஏற்ற இடங்களில்.”

“ஏற்ற இடங்கள்னா? தயவுசெய்து சற்று விளக்கி விடுங்களேன்.”

“ஓ! என் தவறுதான். இதுவரையில் இங்கு வந்திராததால் நீ எங்கள் பழக்க வழக்கங்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை. நாங்கள் அவர்களை வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்திருக்கிறோம்.”

“செனானாவில் எங்களை வைத்திருப்பது போலவா?”

“அதே, அதே!”

“வேடிக்கையாய் இருக்கிறதே” நான் குபுக்கென்று சிரித்துவிட்டேன். சிஸ்டர் சாராவும் சிரித்தார். 

“ஆனால் அருமை சுல்தானா, ஒரு பாவமும் அறியாத பெண்களை உள்ளே பூட்டி வைத்துவிட்டு ஆண்களை அலைந்து திரிய அனுமதிப்பது எவ்வளவு அநியாயம் என்று சற்று யோசித்துப் பார்.”

“ஏன்? இயல்பாகவே நமக்கு உடல்வலு குறைவாக இருப்பதால், செனானாவைவிட்டு வெளியே வருவதில் நமக்குத்தானே அபாயம்.” 

“ஆமாம், சாலைகளில் ஆண்கள் வளைய வருகையில் நமக்கு அபாயம்தான். ஒரு காட்டுவிலங்கு சந்தைக்குள் நுழைந்துவிட்டால் நமக்கு ஆபத்தாக இருப்பதைப்போல்தான் இதுவும்.”

“அப்படி எல்லாம் சொல்ல முடியாது.”

“மனநோய் விடுதியிலிருந்து பைத்தியங்கள் தப்பி மனிதர்கள், குதிரைகள் மற்ற இதர ஜந்துகளுக்குத் தீங்கிழைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்; இம்மாதிரியான ஒரு சம்பவத்தை உங்கள் நாட்டவர்கள் எப்படி எதிர்கொள்ளுவார்கள்?”

“அவர்களைத் தேடிப் பிடித்து மீண்டும் மனநோயகத்தில் சேர்க்க முயல்வார்கள்.”

“சரியாகச் சொன்னாய், நன்றி!  புத்தி சுவாதீனமுள்ளவர்களை மனநோயகத்தில் அடைத்துவிட்டு சுவாதீனமில்லாதவர்களை வெளியே சுதந்திரமாக அலைந்து திரிய விடுவதை நல்ல யோஜனை என்று நினைக்க மாட்டாய் இல்லயா?”

“மாட்டவே மாட்டேன்!” என்று முறுவலித்தபடியே கூறினேன். 

“உண்மையாகச் சொல்ல வேண்டுமானால், உங்கள் நாட்டில் இதைத்தான் செய்துகொண்டு இருக்கிறீர்கள்! சில்மிஷம் செய்யும் அல்லது அளவற்ற சில்மிஷம் செய்யக்கூடிய ஆண்களைக் கட்டுப்படுத்தாது, அப்பாவிப் பெண்களைச் செனானாவில் பூட்டி வைக்கிறீர்கள்! பயிற்றுவிக்கப்படாத இம்மாதிரியான ஆண்களை நம்பி எப்படித்தான் வெளியே அனுமதிக்கிறீர்களோ தெரியவில்லை.”

“எங்கள் சமூக நடவடிக்கைகளை நிர்ணயிப்பதற்கான அதிகாரம் எங்களுக்கில்லை. இந்தியாவில் கணவனே கண்கண்ட தெய்வம், அனைத்து அதிகாரங்களையும் சலுகைகளையும் தன் கையில் வைத்துக்கொண்டு பெண்களை செனானாவில் பூட்டி வைத்திருக்கிறான்.”

“பூட்டி வைக்க நீங்கள் ஏன் அனுமதிக்கிறீர்கள்?”

“பெண்களைக் காட்டிலும் அவர்கள் பலசாலிகள் என்பதால், செய்வதற்கு ஒன்றுமில்லை.”

“சிங்கம்கூடத்தான் மனிதனைவிட வலிமையானது, ஆனால் மனிதகுலத்தின் மீதே ஆதிக்கம் செலுத்துவதற்கான ஆற்றலை அது பெற்றுவிடவில்லையே. உங்கள் நலத்தில் உங்களுக்கு இருக்கும் கடமையைச் செய்யத் தவறுகிறீர்கள். உங்கள் நலன்கள் மீது கவனம் கொள்ளாததால் உங்களுக்கு இயல்பாகவே அளிக்கப்பட்டிருக்கும் உரிமைகளை இழந்து விட்டீர்கள்.”

“ஆனால் எனதருமை சிஸ்டர் சாரா, நாமே அனைத்தையும் செய்து கொண்டிருந்தால் ஆண்கள் என்னதான் செய்வார்கள்?”

“கடுமையாகப் பேசுவதற்காக மன்னித்துவிடுங்கள், அவர்கள் எதையும் செய்யத் தேவையில்லை; எதையும் செய்ய அவர்கள் லாயக்கில்லை. அவர்களைப் பிடித்துச் செனானாவில் அடைத்துவிட்டால் போதும்.” 

“பிடித்து நான்கு சுவர்களுக்கிடையே பூட்டிவைப்பது அவ்வளவு சுளுவான வேலையா என்ன?  இது சாத்தியப்பட்டாலும், அரசியல் வணிகம் சார்ந்த அவர்களின் தொழில் வியாபாரமெல்லாம் என்னவாகும். செனானாவிற்குள் அவையும் போய்விடுமா?” 

சிஸ்டர் சாரா பதிலளிக்காமல் இனிமையாக முறுவலிக்க மட்டும் செய்தார். கிணற்றுத் தவளையுடன் ஒப்பிடத்தக்க ஒருவருடன் வாதிடுவதைக் காட்டிலும் பயனற்ற காரியம் இல்லை என்று அவர் நினைத்திருக்கலாம். 

அந்நேரத்திற்குள் சாராவின் வீட்டை அடைந்துவிட்டோம். அழகான இதய-வடிவத் தோட்டமொன்றில் அது நின்றுகொண்டிருந்தது. இரும்பு நெளிதகடுக் கூரையை உடைய அந்த பங்களா நம் ஆடம்பரமான கட்டிடங்களைக் காட்டிலும் நவநாகரிகமானதாகவும் அழகாகவும் இருந்தது. அருமையான அறைகலன்களுடன் எவ்வளவு நயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது என்பதை விவரிப்பதற்கான வார்த்தைகள் என்னிடம் இல்லை. 

நாங்கள் அருகருகே உட்கார்ந்துகொண்டோம். அவர் முகப்பறையிலிருந்து பூந்தையல் வேலை செய்துகொண்டிருந்த பொருளை வெளியே எடுத்து வந்து அதில் புதிய வடிவமொன்றைத் தைக்கத் தொடங்கினார். 

“உனக்கும் பின்னல் தையல் வேலையெல்லாம் வருமா?”

“தெரியும், செனானாவில் அதைத்தவிர செய்வதற்கு ஏதுமில்லை.” 

“ஆனால் எங்கள் செனானாவாசிகளைப் பூந்தையல் வேலைசெய்ய நாங்கள் அனுமதிப்பதில்லை! நூலை ஊசிமுனையில் நுழைப்பதற்குக்கூட ஓர் ஆண்மகனுக்குப் பொறுமை இல்லை என்பதால்” என்று சிரித்துக்கொண்டே கூறினார். 

“இதை எல்லாவற்றையும் நீங்களே செய்தீர்களா” அங்கிருந்த பலவிதமான பூந்தையலிடப்பட்ட டீபாய் மேசை விரிப்புகளைச் சுட்டிக்காட்டியடியே கேட்டேன்.  

“ஆமாம்.”

“இதை எல்லாம் செய்ய உங்களுக்கு ஏது நேரம்?  ஆபீஸ் வேலையையும் செய்ய வேண்டும் இல்லையா?”

“ஆமாம். ஆனால் பரிசோதனைக் கூடத்தில் நாள் முழுக்க இருக்கத் தேவையில்லை. இரண்டு மணிநேரத்தில் என் வேலைகளை முடித்துவிடுவேன்.”

“ரெண்டு மணிநேரத்திலா! அது எப்படிச் சாத்தியம்? எங்கள் நாட்டில், அதிகாரிகள், மாஜிஸ்ரேட்கள்கூட தினமும் ஏழு மணி நேரங்களுக்காவது வேலை செய்தாக வேண்டும்.”

“அவர்கள் சில பேர் வேலை செய்வதைத்தான் நான் பார்த்திருக்கிறேனே. ஏழு மணி நேரமும் வேலை செய்கிறார்கள் என்று நம்புகிறாயா?”

“கண்டிப்பாக வேலை செய்கிறார்கள்.”

“இல்லை! அருமை சுல்தானா, அவர்கள் முழுநேரமும் வேலை செய்வதில்லை. புகைபிடித்துக்கொண்டு ஜல்லி அடித்துக் கொண்டிருப்பார்கள். சிலர் ஆபீஸ் நேரத்தில்கூட இரண்டு மூன்று சுருட்டுகளாவது பிடிப்பார்கள். வேலையைப் பற்றி அதிகமாகப் பேசுவார்களே ஒழிய சிறிதுநேரம் மட்டுமே அவ்வேலையைச் செய்து முடிப்பதற்குச் செலவிடுவார்கள். சுருட்டு முழுதும் எரிந்து சாம்பலாவதற்கு குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது ஆகுமென்றும், தினமும் ஓர் ஆசாமி பன்னிரெண்டு சுருட்டுகள் பிடிக்கிறானென்றும் வைத்துக்கொண்டால், புகை பிடிப்பதற்கு மட்டுமே அவன் தினமும் ஆறு மணி நேரத்தை விரயம் செய்கிறான், சரிதானே?” 

இப்படியே பல விஷயங்களைப் பேசினோம். நம்மைப்போல் அவர்கள் கொசுக்கடியால் அவதிப்படுவதோ, தொற்றுநோயால் பாதிக்கப்படுவதோ கிடையாது என்று தெரிந்துகொண்டேன். பெண்நாட்டில் அரிதான விபத்தைத் தவிர இளமையில் எவருமே மரிப்பதில்லை என்ற தகவல் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. 

“எங்கள் சமையலறையைப் பார்க்க விரும்புகிறாயா” அவள் கேட்டாள். 

“சந்தோஷமாக!” என்று பதிலளித்துவிட்டு அவளுடன் சமையலறையை பார்க்கச் சென்றேன். நான் அவ்விடத்தை அடைவதற்கு முன்னதாகவே ஆண்களை அங்கிருந்து போகச் சொல்லிவிட்டார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. சமையலறை அழகான காய்கறித் தோட்டத்திற்கு மத்தியில் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு படர்கொடியும், ஒவ்வொரு தக்காளிச் செடியும் ஓர் அணிகலனாகத் திகழ்ந்தது. புகையையோ புகைபோக்கியையோ சமையலறையில் காண முடியவில்லை — அது பளபளவென்று சுத்தமாக இருந்தது; சன்னல்கள் பூந்தோட்டங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கரி நெருப்பு இவை இருந்ததற்கான அடையாளங்கள்கூட தென்படவில்லை.  

“எதைக் கொண்டு சமைப்பீர்கள்?” நான் கேட்டேன்.

“சூரிய வெப்பத்தைக் கொண்டு” என்று பதிலளித்துவிட்டு செறிவுபடுத்தப்பட்ட சூரிய ஒளியையும் வெப்பத்தையும் கடத்தும் குழாயையும் காட்டினார். அம்முறைமையை எனக்கு தெளிவுபடுத்துவதற்காக உடனுக்குடன் சமைத்தும் காட்டினார். 

“சூரிய-வெப்பத்தை எப்படி உங்களால் சேகரம்செய்து சேமிக்க முடிந்தது” என்று வியந்தபடியே அவரிடம் கேட்டேன். 

“அதை விளக்குவதானால் எங்கள் கடந்தகால வரலாற்றின் ஒரு சிறு பகுதியை சொல்லியாக வேண்டும். முப்பது வருடங்களுக்குமுன், எங்கள் ராணி பதிமூன்று வயதை எய்தியபோது, அரியாசனத்தை மரபுரிமையாகப் பெற்றார். பேருக்குத்தான் ராணி, மற்றபடி முக்கிய மந்திரிதான் நாட்டை ஆண்டுகொண்டிருந்தார்.    

“மாட்சிமைமிக்க எங்கள் ராணி அறிவியலை மிகவும் விரும்பினார். அனைத்துப் பெண் பிரஜைகளுக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்றொரு ஆணையை அவர் பிறப்பித்தார். அதன்படி பல பெண்களுக்கான பள்ளிக்கூடங்கள் அரசாங்க ஆதரவுடன் தொடங்கப்பட்டன. கல்வி பெண்களிடத்தே ஆழமாகவும் அகலமாகவும் பரவியது. பால்ய விவாகமும் தடைசெய்யப்பட்டது. இருபத்து ஒன்று வயது எய்துவதற்குமுன் எந்தப் பெண்ணும் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றம் வருவதற்குமுன் நாங்கள் கண்டிப்பான பர்தாவிலிருந்தோம் என்பதையும் கூறியாக வேண்டும்.”

“ஆஹா, காலம் எப்படி எல்லாம் திசை மாறுகிறது பாருங்கள்” என்று நான் சிரித்துக்கொண்டே குறுக்கிட்டேன். 

“ஆனால் அதே அளவு ஒதுக்கி வைப்புதான். சில ஆண்டுகளில் ஆண்கள் அனுமதிக்கப்படாத, எங்களுக்கு மட்டுமே ஆன பிரத்தியேகப் பல்கலைகளும் நிறுவப்பட்டன.”

“ராணி வசிக்கும் தலைநகரத்தில், இரண்டு பல்கலைகள் இருக்கின்றன. அதில் ஒன்று அற்புதமான பலூன் ஒன்றைக் கண்டுபிடித்தது. அதில் அவர்கள் பல குழல்களைப் பொருத்தியிருந்தார்கள். கட்டுப்படுத்தப்பட்ட இந்த பலூனை முகில்-தேசத்திற்கும் அப்பாலுள்ள ஓர் உயரத்தில் எப்படியோ மிதக்கவைக்க முடிந்ததால் வளிமண்டலத்திலிருந்து நீரை வேண்டும் அளவிற்கு அவர்களால் கறக்க முடிந்தது. பல்கலைக்கழகத்தார் இடையறாது நீரைக் கறந்து கொண்டிருந்ததால் மேகத்திரள் தவிர்க்கப்பட்டது. அதிபுத்திசாலி முதன்மை ஆசிரியர் சீமாட்டியால் மழையையும் புயலையும் தடுத்து நிறுத்த முடிந்தது.”

“உண்மையாகவா! இப்போதுதான் புரிகிறது, இங்க ஏன் சகதியே இல்லை என்பது!” என்று நான் கூறினேன், ஆனால் நீரை குழாய்களில் எப்படிச் சேகரம் செய்ய முடியும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதை அவர் எனக்கு விளக்கினார் என்றாலும் என் அறிவியல் அறிவின் போதாமையால் என்னால் அதை இன்னமும் புரிந்துகொள்ள முடியவில்லை. அதைப் பொருட்படுத்தாது அவர் மேலும் தொடர்ந்தார், “இது அந்த இரண்டாம் பல்கலைக்குத் தெரியவந்தபின், அவர்கள் மிகவும் பொறாமையுற்று அதைக்காட்டிலும் வியக்கத்தக்க ஒன்றைச் செய்ய முனைந்தார்கள். வேண்டிய மட்டும் சூரிய-வெப்பத்தைச் சேகரம் செய்யும் ஒரு கருவியை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அந்த வெப்பத்தைச் சேமித்து, மற்றவர்களின் தேவைக்கேற்ப வினியோகம் செய்தார்கள்.”

“பெண்கள் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் இந்நாட்டு ஆடவர்கள் தங்கள் படைத்துறை பலத்தை அதிகரிப்பதில் மும்முரமாக இருந்தார்கள். பெண்கள் பல்கலைகள் வாயுமண்டலத்திலிருந்து நீரையும் சூரியனிடமிருந்து வெப்பத்தையும் சேகரிக்கிறார்கள் என்ற செய்தியை அறிந்தவுடன், அப்பல்கலை உறுப்பினர்களை எள்ளி நகையாடி அவ்விஷயம் முழுவதையுமே “ஓர் உணர்வுநெகிழ்ச்சிக் கொடுங்கனவு” என்று முத்திரையிட்டார்கள். 

‘உங்கள் சாதனைகள் அனைத்துமே அருமையானவைதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உங்கள் ஆண்களை செனானாவிற்குள் எப்படி அடைத்திட முடிந்தது என்பதைப் பற்றி முதலில் கூறிவிடுங்கள். பொறி வைத்துப் பிடித்துவிட்டீர்களா?”

“இல்லை.”

“சுதந்திரத்துடன் வெளியே போய்வரும் உரிமையை விட்டுக்கொடுத்து செனானாவின் நான்கு சுவர்களுக்குள் அவர்களாகவே முடக்கிக் கொள்வார்கள் என்று தோன்றவில்லை. நிச்சயமாக அவர்கள் அடக்கி ஆட்கொள்ளப்பட்டிருப்பார்கள்.”   

“ஆமாம்.”

“யாரால்?  பெண்-போர்ப்படை வீரர்களாலா?”

“இல்லை, ஆயுதங்களைக் கொண்டல்ல”

“ஆமாம், அப்படிச் செய்ய வாய்ப்பில்லை. ஆண்களின் ஆயுதங்கள் பெண்களுடையதைவிட பலமானவை. பின் எப்படி?” 

“மதியால்.”

“பெண்களின் மூளைகளைக் காட்டிலும் அவர்கள் மூளைகள் பெரிதானதும் கனமானதும் ஆயிற்றே?  இல்லையா?

“ஆமாம், அதனால் என்ன? ஒரு யானைக்குக் கூடதான் மனிதனைவிட பெரிய கனமான மூளை இருக்கிறது. இருந்தாலும் மனுஷன்தான் தன் இஷ்டத்திற்கு அதைச் சங்கிலியால் கட்டி வேலை வாங்குகிறான்.”

“நன்றாகச் சொன்னீர்கள். ஆனால் தயவுசெய்து அதெல்லாம் நிஜமா எப்படி நடந்ததுன்னு சொல்லுங்க. தெரிந்துகொள்ளவில்லை என்றால் மண்டை வெடித்துவிடும் போலிருக்கிறது!”

“பெண்களின் மூளைகள் ஆண்களின் மூளைகளைவிடச் சற்று துரிதமாக வேலை செய்கின்றன. பத்து வருடங்களுக்குமுன் படைத்துறை அதிகாரிகள் எங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை “உணர்வுநெகிழ்ச்சிக் கொடுங்கனவு,” என்று மட்டம் தட்டியபோது, சில நங்கைகள் அதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று விரும்பினார்கள்.  ஆனால் இரண்டு தலைமை ஆசிரியைகளும் அவர்களைக் கட்டுப்படுத்தி, வார்த்தைகளைக் கொண்டு அல்ல சந்தர்ப்பம் கிடைக்கையில் செயல்களால் எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். அவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை.” 

“அற்புதம்!”  நான் முழுமனதுடன் கைதட்டினேன். “செருக்குமிக்க சீமான்களே தற்போது உணர்வு நெகிழ்ச்சி மிக்க கனவுகளைக் காணும் நிலமைக்கு வந்துவிட்டார்கள்.”

“விரைவிலேயே பக்கத்து நாட்டிலிருந்து சில நபர்கள் எங்கள் நாட்டில் அடைக்கலம் தேடி வந்தார்கள். அரசியல் குற்றத்திற்காக பிரச்சினையில் மாட்டிக் கொண்டிருந்தார்கள். நல்லாட்சியைக் காட்டிலும் அதிகாரத்தில் அக்கறை காட்டிய அரசன் எங்கள் ஈரநெஞ்சத்து ராணியிடம் தன் அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டான். அகதிகளைப் புறந்தள்ளுவது அவரது கொள்கைக்குப் புறம்பானது என்பதால் ராணி மறுத்துவிட்டார். இம்மறுப்பைக் காரணம்காட்டி அந்த ராஜா எங்கள் நாட்டின்மீது போர் தொடுத்தான்.”

“சடுதியில் எங்கள் போர்த்துறை அதிகரிகள் துள்ளி எழுந்து விரோதிக்கு எதிராக அணிவகுப்புச் செய்தார்கள். ஆனால் எதிரிகளோ அவர்களைக் காட்டிலும் பலசாலிகளாக இருந்தார்கள். எங்கள் படைவீரர்கள் துணிவுடன் சண்டையிட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனினும் அவர்கள் வீரத்தையும்மீறி அந்நியப் படை படிப்படியாக எங்கள் நாட்டிற்குள் பிரவேசிக்கத் தொடங்கியது. 

“கிட்டத்தட்ட அனைத்து ஆண்களுமே சண்டையிடப் போய்விட்டார்கள்; ஒரு பதினாறு வயது இளைஞனைக்கூட போர்ப்படை விட்டுவைக்கவில்லை. பெரும்பாலான எங்கள் வீரர்கள் கொல்லப்பட்டார்கள், எஞ்சியிருந்தவர்களைப் பின்தள்ளியபடியே தலைநகரத்திற்கு இருபத்து ஐந்து மைல் தூரம் வரையிலும் எதிரி வந்துவிட்டான்.”

“நாட்டைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிடுவதற்காக அறிவுக்கூர்மைமிக்க பல பெண்கள் ராணியின் அரண்மனையில் கூடினார்கள். படைத்துறை வீரர்களைப்போல் போரிடவேண்டும் என்று சிலர் பரிந்துரைத்தார்கள்; துப்பாக்கி, கத்தி, ஏன் எந்த ஆயுதத்தை வைத்தும் சண்டையிடப் பெண்கள் பயிற்றுவிக்கப்படாததால் இது நடைமுறைக்கு உதவாது என்று வேறுசிலர் எதிர்வாதம் செய்தார்கள். ஈடுகட்ட முடியாத அளவிற்கு பூஞ்சையான உடல்களைக் கொண்டிருப்பதாக மூன்றாம் தரப்பினர் நொந்து கொண்டார்கள்.”

“உடல் பலத்தால் தாய்நாட்டைக் காப்பாற்ற முடியாவிட்டால் மதியின் வலிமையைக் கொண்டு முயன்று பாருங்கள்,” என்று அரசி கேட்டுக் கொண்டார்.

“சில நிமிடங்களுக்கு மூச்சுப் பேச்சில்லை. மாட்சிமை பொருந்திய மேதகு ராணியார் மீண்டும் பேசத் தொடங்கினார் ‘நாட்டையும் மானத்தையும் இழந்துவிட்டால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.”

“அதன்பின், விவாதம் நடக்கையில் மௌனமாக சிந்தித்துக் கொண்டிருந்த இரண்டாம் பல்கலையின் (சூரிய-வெப்பத்தை சேகரித்தவர்கள்) தலைமை ஆசிரியை, அனைத்தையும் இழந்துவிடப்போகும் தருவாயில் இருப்பதாகவும், இனி நம்பிப் பயனில்லை என்று கூறும் அளவிற்கும் நிலைமை மோசமாக இருந்ததையும் சுட்டிக் காட்டினார்; ஆனால் ஒரு திட்டத்தை மட்டும் முயன்று பார்க்க விரும்புவதாகவும், அதில் தோல்வியுற்றால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார். என்ன ஆனாலும் சரி, அடிமையுறுவதற்கு மட்டும் ஒருக்காலும் சம்மதிக்க மாட்டோம் என்று அங்கிருந்தவர்கள் அனைவரும் உறுதி பூண்டார்கள்.” 

“அவர்களிடம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துவிட்டு அரசி தலைமை ஆசிரியையிடம் அவரது திட்டத்தை முயன்று பார்க்குமாறு கேட்டுக் கொண்டார். தலைமை ஆசிரியை மீண்டுமொரு முறை எழுந்து நின்று ‘நாம் வெளியே செல்வதற்குமுன் ஆண்கள் செனானாக்களுக்குள் புக வேண்டும். பர்தாவின் புனிதம் காக்க இந்த விண்ணப்பத்தை முன் வைக்கிறேன்,’என்றார். ‘ஆமாம், அப்படியே ஆகட்டும்’ என்று மாட்சிமைமிக்க ராணியார் பதிலளித்தார்.” 

“மறுநாள், மானத்துக்காகவும் சுதந்திரத்திற்காகவும் அனைத்து ஆண்களையும் செனானாவிற்கு ஏகும்படி ராணி கேட்டுக் கொண்டார். அடிபட்டு சோர்வுற்றிருந்த அவர்கள் அதை ஆணையாக அல்லாது ஒரு வரப்பிரசாதமாகவே ஏற்றுக் கொண்டார்கள்! ஒரு வார்த்தைகூட எதிர்த்து பேசாது, அரசியைத் தலை வணங்கிவிட்டு செனானாவிற்குள் அவர்கள் போய்விட்டார்கள். நாட்டிற்கு விமோசனம் கிடையாது என்று உறுதியாக நம்பினார்கள்.  

“அதன்பின் தலைமை ஆசிரியையும் அவரது இரண்டாயிரம் மாணவிகளும் போர்க்களத்திற்கு அணிவகுத்தார்கள். அதை அடைந்தவுடன் அடர்வீரியமாக்கப்பட்ட சூரிய ஒளியையும் வெப்பத்தையும் எதிரியின்மீது இயக்கினார்கள்.” 

“வெப்பத்தையும் ஒளியையும் தாளமாட்டாது, சுட்டுப் பொசுக்கும் சூட்டைத் தணிக்க வழியறியாது, குழப்பத்தால் பீதியுற்ற அவர்கள் புறமுதுகிட்டு ஓடிவிட்டார்கள். துப்பாக்கிகளையும், தளவாடங்களையும் அங்கேயே போட்டுவிட்டு ஒடியதால் அதே சூரியவெப்பத்தைக் கொண்டு அவர்களை எங்களால் எளிதாக சுட்டுக் கொல்லமுடிந்தது. அன்றிலிருந்து இன்றுவரை எங்கள் நாட்டை எவருமே படையெடுக்க முயலவில்லை.”

“அப்போதிலிருந்து உங்கள் நாட்டின் ஆண்மக்கள் செனானாவை விட்டு வெளியேவர முயற்சிக்கவில்லையா?”

“ஆமாம். அவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்பினார்கள். சில போலீஸ் கமிஷனர்களும் ஜில்லா மாஜிஸ்ட்ரேட்களும் போர்ப்படை அதிகாரிகளை அவர்கள் தோல்விக்காக கண்டிப்பாக சிறையிலிட வேண்டும் என்றும், ஆனால் தம் கடமையைச் செய்யத் தவறாதாதால் தங்களைத் தண்டிப்பது நியாயமல்ல என்றும், அவரவர் பணிகளில் மீண்டும் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அரசியிடம் கோரிக்கை வைத்தார்கள்.”

“அவர்கள் சேவை மீண்டும் தேவைப்படுகையில் சொல்லியனுப்புவதாகவும் அதுவரையிலும் அவர்கள் இருக்குமிடத்திலேயே இருக்க வேண்டும் என்றும் ஓர் அறிக்கைக் கடிதத்தின் மூலமாக மாண்புமிகு அரசியார் அவர்களுக்குத் தெரிவித்தார். பர்தா முறைமை பழகிவிட்டதால் அவர்கள் தற்போது தனிமை வைப்பைப் பற்றி முனங்குவதில்லை. இப்போதெல்லாம் அம்முறைமையைச் செனானாவிற்கு பதில் மர்தானா என்று அழைக்கிறோம்”

“ஆனால், போலீஸோ மாஜிஸ்ட்ரேட்களோ இல்லாமல் திருட்டையும் கொலையையும் எப்படி சமாளிக்கிறீர்கள்,” சிஸ்டர் சாராவிடம் கேட்டேன். 

“மர்தானா முறைமை நிறுவப்பட்டது முதல் கொலையும் பாவமும் அறவே இல்லை; ஆதலால் குற்றவாளியைப் பிடிக்க போலீஸோ குற்றவியல் வழக்கை நிர்ணயிக்க மாஜிஸ்ட்ரேட்டோ தேவையில்லை.”

“சபாஷ், இது உண்மையிலேயே மிக அருமையான விஷயம்தான். நேர்மையற்ற வழியில் நடந்துகொள்பவள் இருப்பாளாயின் அவளை நீங்கள் சுலபமாகவே கண்டித்துத் திருத்திவிடுவீர்கள் இல்லையா. திட்டவட்டமான வெற்றியை ஒரு சொட்டு ரத்தத்தைக்கூட சிந்தாமலேயே அடைந்துவிட்டதால், குற்றத்தையும் குற்றவாளிகளையும் அதிக சிரமமே இல்லாது விரட்டிவிட்டீர்கள்.”   

“அருமை சுல்தானா. இங்கேயே உட்கார்ந்திருக்கப் போகிறாயா, இல்லை என் வரவேற்பறைக்கு வருகிறாயா?”  என்று அவர் கேட்டார்.

“ராணியின் அந்தப்புரத்தைக் காட்டிலும் உங்கள் சமையலறை குறைந்ததல்ல” முறுவலித்தபடியே பதிலளித்தேன், “ஆனால் இதைவிட்டு நாம் வெளியேறும் நேரம் வந்துவிட்டது; ஏனெனில் இவ்வளவு நேரமாக சமையல் வேலைகளைச் செய்யவிடாமல் தடுத்துக் கொண்டிருந்ததற்காகக் கனவான்கள் என்னைக் கரித்துக் கொண்டிருப்பார்கள்.” நாங்கள் இருவருமே வாய்விட்டுச் சிரித்தோம்.

“பெண்நாட்டில் பெண்களே அரசாண்டு அனைத்துச் சமூக நியதிகளையும் நிர்ணயிக்கிறார்கள் என்றும், குழந்தைகளைப் பராமரிப்பதற்கும், சமைப்பதற்கும், அனைத்து விதமான வீட்டு வேலைகளைச் செய்வதற்கும் ஆண்கள் மர்தானாவில் வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்றும் என் நாட்டிற்குத் திரும்பிச் சென்று நண்பர்களிடம் கூறும்போது அவர்கள் எல்லோரும் ஆச்சரியத்தில் வாய்பிளப்பார்கள். அதுவும் சமையல் வேலை அவ்வளவு சுலபமாக இருப்பதால் சமைப்பதே அத்தனை சந்தோஷமாக இருக்கிறது.”

“ஆமாம். இங்கே பார்த்துக் கொண்டிருப்பது அனைத்தையும் அவர்களிடம் கூறு.” 

“நிலத்தை எவ்வாறு பயிரிட்டு உழுகிறீர்கள் என்பதையும் பிற கடினமான உடலுழைப்பைக் கோரும் வேலைகளை எப்படி செய்கிறீர்கள் என்பதையும் அப்படியே சொல்லிவிடுங்கள்.”

“மின்சாரத்தைக் கொண்டுதான் எங்கள் வயல்கள் உழப்படுகின்றன. பிற கடின வேலைகளைச் செய்வதற்கான இயக்குவலுவையும் மின்சாரமே வழங்குகிறது. வானூர்திகளுக்கும் அதையே பயன்படுத்துகிறோம். இருப்புப்பாதைகளோ, பூசப்பட்ட சாலைகளோ இங்கு கிடையாது. ”  

“ஆகவே சாலை, ரயில் விபத்துகளும் கிடையாது அல்லவா. மழைத்தண்ணீர் இல்லாதது கஷ்டமாக இல்லயா?”  என்று கேட்டேன். 

“நீர் பலூன் அமைக்கப்பட்ட பிறகு பிரச்சனை ஏதுமில்லை. பெரிய பலூனையும் அதில் பொருத்தப்பட்டிருக்கும் குழல்களையும் பார்த்திருப்பாயே. வெள்ளங்களோ இடி மின்னல் புயல்களோ எங்களைப் பாதிப்பதில்லை. இயற்கை இயல்பாகவே அளிக்கும் உற்பத்தியைப் பெருக்குவதில்தான் நாங்கள் எல்லாருமே மும்முரமாக இருக்கிறோம். வெட்டியாக ஒருபோதுமே இல்லாததால் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொள்வதற்கெல்லாம் எங்களுக்கு நேரமில்லை. மேதகு ராணியாருக்குத் தாவரவியல் மிகவுமே பிடிக்கும்; நாடு முழுவதையுமே ஒரு மாபெரும் தோட்டமாக மாற்றும் பேரவா அவருக்கிறது.” 

“அருமையான திட்டம். உங்கள் பிரதான உணவு?”

“பழங்கள்.”

“வெய்யில் காலத்தில் நாட்டை எவ்வாறு குளிர்விக்கிறீர்கள்? வெயிற்காலத்தில் மழை இறைவனின் கொடை என்றே நாங்கள் கருதுகிறோம்.”

“வெப்பம் தாங்கமுடியாத அளவிற்கு அதிகரிக்கையில், செயற்கை நீரூற்றிகளின் தாராளமான தாரைகளைக்கொண்டு நிலத்தில் நீர் தெளிப்போம். குளிர்காலத்தில் எங்கள் அறைகளைச் சூரிய-வெப்பத்தைக் கொண்டு வெதுவெதுப்பாக்கிக் கொள்வோம்.”

அகற்றப்படக்கூடிய கூரையை உடைய குளியலறையை அவர் காண்பித்தார். கூரையை அகற்றிவிட்டு (ஒரு பெட்டின் மூடியைப்போல் அது இருந்தது) பொழிவிக் குழலின் குழாயை திறந்து விட்டுக்கொண்டால் போதும், இஷ்டப்படும் போதெல்லாம் ஷவர்-குளியல் செய்து கொள்ளலாம்.

“நீங்கள் எல்லோருமே கொடுத்து வைத்தவர்கள்!” என்று தானாகவே வாயில் வந்துவிட்டது. “இன்மை என்பதையே அறியாதவர்கள். உங்கள் மதத்தைப் பற்றி நான் அறிந்து கொள்ளலாமா?”

“எங்கள் மதம் உண்மையையும் அன்பையும் அடிப்படைகளாகக் கொண்டது. உண்மையாக இருப்பதையும், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதையும் கடமைகளாக எங்கள் மதம் வலியுறுத்துகிறது. பொய் சொல்பவர், அவளோ அவனோ….”

“மரணத்தால் தண்டிக்கப்படுவார்கள், சரிதானே?”

“இல்லை. மரணத்தால் அல்ல. கடவுளின் படைப்பை, அதுவும் ஒரு மானுடப் படைப்பைக் கொல்வதில் எங்களுக்கு ஆனந்தமில்லை. புளுகுபவரை நாடுகடத்தித் திரும்பியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்வோம்.”

“தவறிழைத்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாதா?” 

“உண்டு. அவர் உண்மையாகவே தவறு செய்ததற்காக வருத்தப்பட்டால்.”

“உறவினரைத் தவிர எந்த ஆண்மகனையும் சந்திக்க உங்களுக்கு அனுமதி கிடையாதா?”

“புனிதமான பந்தங்களைத் தவிர எவரையும் சந்திக்க முடியாது.”

“எங்கள் புனித பந்த வட்டம் மிகக் குறுகியதே; அத்தை சித்தி பிள்ளைகள்கூட புனித பந்தங்களில் சேர்த்தியில்லை.”

‘ஆனால் எங்கள் உறவு வட்டம் மிகப் பெரியது; தூரத்து அத்தை பையனின் உறவுகூட சகோதரனின் உறவைப் போல் புனிதமானது.”

“மிகச் சிறப்பு. புனிதமே உங்கள் நாட்டை ஆள்கிறது என்று நினைக்கிறேன். தொலைநோக்குடன் இச்சட்டங்களை எல்லாம் பிறப்பித்துச் சான்றாண்மையுடன் அரசாண்ட அந்த அரசியை நான் சந்திக்க விரும்புகிறேன்.”

“சரி!” என்றார் சிஸ்டர் சாரா, 

சதுரப்பலகை ஒன்றில் இரண்டு இருக்கைகளை திருகாணியிட்டுப் பொருத்தி, அதனுடன் நன்றாக மெருகூட்டப்பட்டிருந்த இரு உருண்டைகளையும் இணைத்தார். உருண்டைகள் எதற்காக என்று நான் கேட்டபோது புவியீர்ப்பை மீறுவதற்காக ஹைட்ரஜன் வாயுவால் நிரப்பபட்டிருக்கும் பந்துகள் அவை என்று பதிலளித்தார். அதன்பின் அந்த வாயு-ஊர்தியில் இறக்கைகளைப் போலிருந்த இரண்டு தகடுகளைப் பிணைத்தார். அவை மின்சாரத்தால் இயங்கின என்பதையும் அவர் விளக்கினார்.  நாங்கள் இருவரும் சவுகரியமாக எங்களை அமர்த்திக்கொண்ட பிறகு அவர் ஒரு குமிழைத் தொட மட்டுமே செய்தார். தகடுகள் சுழலத் தொடங்கின, ஒவ்வொரு கணமும் வேகத்தை அதிகரித்தபடியே. ஆறேழு அடிக்கு முதலில் உயர்த்தப்பட்டபின் பறக்கத் தொடங்கினோம். பறந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வதற்குள் ராணியின் தோட்டத்தை அடைந்துவிட்டோம்.

என் நண்பி இயந்திரத்தின் நெம்புகோலை எதிர்த்திசையில் இயக்கி வாயு-ஊர்தியை கீழிறக்கத் தொடங்கினார். ஊர்தி தரைதட்டி அதன் இயந்திரம் நிறுத்தப்பட்ட பிறகே நாங்கள் வெளியேறினோம்.

ராணியார் தன் சின்னஞ்சிறு மகளுடனும் (அவள் வயது நான்கு) சேடிப் பெண்களுடனும் தோட்டப் பாதையில் நடந்துசென்று கொண்டிருப்பதை வானூர்தியில் இருந்தபோதே பார்த்திருந்தேன். 

“ஹலோ! என்ன இந்தப் பக்கம்” என்று சிஸ்டர் சாராவை அரசி விளித்தார். மேதகு அரசியிடம் நான் அறிமுகப்படுத்தப்பட்டேன். அவரும் என் அறிமுகத்தைப் பகட்டின்றி நட்புறவுடன் ஏற்றுக்கொண்டார். 

ராணியுடன் பரிச்சயம் ஏற்பட்டது என்னை மிகவும் மகிழ்வூட்டியது. அவருடன் பேசிக் கொண்டிருக்கையில் தனது பிரஜைகள் பிற நாடுகளுடன் வணிகம் செய்வதில் தனக்கெந்த ஆட்சேபணையும் இல்லை என்று ராணி கூறினார். ‘ஆனால் செனானாவில் பெண்களைப் பூட்டி வைக்கும் நாடுகளுடன், அவர்களது பெண்கள் இங்கு வந்து வியாபாரம் பேச முடியாததால், வணிகம் செய்வதற்கு வாய்ப்பில்லை. ஆண்கள் ஒழுக்கம் குறைந்தவர்கள் என்பது எங்கள் அனுபவமாதலால் அவர்களோடு கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்வதில் விருப்பமில்லை. அடுத்தவர் நிலத்தை அபகரிக்க எங்களுக்கு ஆசை கிடையாது, கோஹினூரைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு பிரகாசமாக ஜொலித்தாலும் அவ்வைரத்திற்காகச் சண்டையிட எங்களுக்கு விருப்பமில்லை. மயில் அரியாசனத்தை நினைத்து நாங்கள் பொறாமைப்படுவதுமில்லை. ஞானக்கடலில் முத்துக் குளித்து இயற்கை எங்களுக்காக பத்திரப்படுத்தி வைத்திருக்கும் அரிய மணிக்கற்களை கண்டெடுக்கவே முயல்கிறோம். முடியும் மட்டும் இயற்கையின் அன்பளிப்புகளைத் துய்த்து இன்புறுகிறோம்,” என்று ராணி தொடர்ந்தார்.

ராணியிடமிருந்து விடைபெற்றபின், புகழ்பெற்ற அப்பல்கலைகளைப் போய்ப் பார்த்தேன். தொழிற்சாலைகளையும், சோதனைக் கூடங்களையும், வானாய்வுக் கூடங்களையும் அவர்கள் எனக்கு காண்பித்தார்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட சுவாரசியமான இடங்களைப் பார்வையிட்டபின் மீண்டும் வாயு-ஊர்தியில் ஏறி அமர்ந்துகொண்டோம். ஆனால் அது நகரத் தொடங்கிய உடனேயே, எப்படியோ வழுக்கி விழுந்துவிட்டேன்.  நான் விழுந்தது என்னைக் கனவிலிருந்து உலுக்கி எழுப்பிவிட்டது. கண் திறந்து பார்த்தால், படுக்கையறைச் சாய்வு நாற்காலியில்தான் ஹாயாக உட்கார்ந்திருக்கிறேன் என்பது புலப்பட்டது.

——————————-
மூலநூல்கள் / மேலும் படிக்க:
https://digital.library.upenn.edu/women/sultana/dream/dream.html
Hossain, Rokeya Sakhawat, Sultana’s Dream and Padmarag, Penguin, 2005.

One Reply to “சுல்தானாவின் கனவு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.