தமிழில் : வேணு தயாநிதி
காதல் புயல்

ஒலியற்று
நிலைத்துவிட்ட இந்த
தனிமையில்,
இருண்ட மாலையின்
ஏகாந்தம் மிக்க
இந்தக் காற்றில்,
ஆகாயத்தின்
பிரமாண்டத்தின் முன்
தோன்றும் –
மேகத்தைப்போல குளிர்ந்து
மங்கிய நிலவு போன்ற
நின்
வெண்ணிற முகம்.
தொலைதூர நிலத்திலிருந்து
நான் நடுங்குகிறேன்
தாள முடியா ஆசையின் வாதையில்
உன் வெண்கல் முகத்தை சுற்றி
கூந்தலின் முடிக்கற்றையாய் ஆசைகள்
விரல்களாய் நீண்டு
காற்றின் இருளில்
வெடவெடத்து நடுங்குகின்றன
பிரார்த்தனையின்
வேதனையில்.
சூழும்
மேகங்களால்
வானத்தின் மூலை
கனத்து வளர்கிறது
தொடர்ந்து திரும்பும்
மூர்க்கத்தின் வேகத்தில்
உடனே உருவாகும்
ஏக்கத்தின் கண்ணீர்.
பரவசத்தின் பிரமாண்டத்தில்
எல்லையற்ற இருளின்
தூரங்களை உடைத்துக்கொண்டு
காமத்தின் பெருக்கு
அலையடித்து வெடித்துக்கிளம்பும்,
பிரதிபலித்து அசைவற்று
சோம்பிக்கிடக்கும் நிலத்தில்.
மேகம் போல குளிர்ந்து
மங்கிய நிலவு போன்ற
உன் முகம் திரும்பும்போது,
உயர்ந்தெழும் உன் மார்புகள்
அழுகை தீர்ந்து
களைத்த நிலம் போல்
அமைதிக்கு திரும்பியிருக்கும்
பிராத்தனையில் தளர்ந்து
எதிர்பார்த்து
ஏங்கி வரண்ட
உன் கரங்களை விரிப்பாய் –
சீற்றம் கொண்டு நிற்கும்
ஆகாயத்தின்
பிரமாண்டத்தின்
முன் –
அவைகளைச் சுற்றி
இருள் சூழும்,
எல்லையற்ற
தனிமையின் காற்றில்
கூந்தலின் முடிக்கற்றை
ஆயிரம் ஸ்வரங்கள்.
சிருஷ்டி
மெல்ல தன்
ஆயத்த நிலையை அடையும்:
ஒரு பயங்கரமான இனிமையின்
ஆசிர்வாதத்தின் க்ஷணத்தில் திகழ்வது போல
ஆசையின் மேகங்கள் உடைகின்றன
விருப்புடன் மேல் நோக்கித் திறந்து கிடக்கும்
உன் மார்பின் மையத்தில்
கூடலின் பேரின்பத்துடன்
துளைத்து இறங்கும்
தாங்க முடியாத
இடியின் ஒலி.
ஈரத்தில்
தலைகுப்புற
சிதறிக்கிடக்கும்
உலகின்
எல்லா ஒழுங்கீனங்களையும்
இல்லாமல் ஆக்கும்படி
இதமாய்
வந்து சேரும்
பிறகு,
அழகின்
குளிர்ந்த
காலை
ஒன்று.
என் விலாவின் துடுப்புகள்

(1)
என்
விலாப்புறத்தில்
துடுப்புகள்,
குருதியில் நீர் தெறிப்பு
படகின் ஓட்டிலிருந்து
எழுந்து வருகிறது
வளர்பிறை.
பாசிகள் நாணல்கள்
உடலை பாரமாய் அழுத்த
எனக்கு
இறந்த காலம் இல்லை
எதிர்காலமும்
இல்லை.
(2)
புயல்
பிடுங்கியெறிந்த
விளக்குக்கம்பம்
தனித்துக்கிடக்கிறது
வயலில்,
தலையில்
மின்மினிப்பூச்சிகள் சூடி.
உயரே
ஓரியனின் வாள்
போர் முடிந்து
காலம்
அமைதிக்கு திரும்பிவிட்டது
பிரம்மாண்டமான
ஒளி கசியும் கடல் போல
கவிய ஆரம்பிக்கிறது
இரவு.
(50)
அவமானங்கள்
மற்றும் காயங்கள் பெற்று
குறுகி வளைந்தவன்,
நாளின்
எவ்வொரு பொழுதையும்
ஒவ்வொரு அலையையும்
தன்மீது
வழிய விட்டு
தலைவணங்கி நின்றவன்,
நேற்று மாலை
அவன் விலாப்புறங்களில்
இறகாய் தீண்டும்படி
உன் ஸ்பரிசம் எழுந்தபோது
உன் விரல்களில்
சாட்சியாய்
என் முன்
வந்திறங்கியது
தெய்வம்.
(63)
அசைவின்றிக் கிடக்கும்
நிலம்
தழலின் ஆத்திரம்போல்
திடீர் வெடிப்பு பாறைகளை அறைய,
பொருளற்ற சொற்களாய்
கிளம்பும் தூசு
வெம்மை
எரிகுழம்பு
வசைகள்
ஏதும்
அற்று.
வெள்ளை நிற கல்லறைகள்

அன்று இரவு
நான் வீட்டிற்கு
திரும்பிக்கொண்டிருந்தபோது
நகரின் மையத்தில்
மூடுபனியிலிருந்து
வெளிவந்தன,
பெயர்களற்ற
கல்லறைகள்:
முதலில்
கன்னியாஸ்த்ரீகளின்
வரிசைபோல
தண்டனிட்டு அசைவற்று
பிரார்த்தனையில் மூழ்கிவிட்டதுபோல;
கூதிர்காலத்தின்
வாடைக்காற்றில்
யூகலிப்டஸ் நறுமணத்திற்கு
குற்ற உணர்ச்சி கொண்டது போல
பூமி நடுங்கிக்கொண்டிருந்தது:
ஆனால் பிறகு
மூடுபனி சுவராக மாறி
வெண் பாறைகளின்
பிரார்த்தனைகள்
கேலியாக மாற
நான்
வீட்டுக்கு
வந்து சேர்ந்தபோது
என் தலையில்
அலங்காரங்கள் இருக்கவில்லை
கல்லறையும்
இல்லை.
பயணத்தின் முடிவில் (அல்லது சாலையின் வளைவில்)

இவைகளை
நான் இன்று
சொல்லக்கூடாதுதான்;
இருந்தாலும் சொல்கிறேன்
சாலையின்
வளைவில் நின்று கொண்டு
என் முன்னால்
வெட்டிப்பிரியும் கிளைகளுடன்
மெளனித்துக் குளிர்ந்த
அடிமரம்
முதிர்ந்த மரப்பட்டையின்
பிளவுகளுக்கு
இடையில்
மறைந்திருக்கும்
பல தசாப்தங்களின்
சரணடைவுகள்,
மேலும்
அநேகம் பேருக்கு
அடைக்கலம் அளித்ததின்
தடயங்கள்,
கோடாரியின்
வெட்டுத்தடங்கள்;
பிறகு,
கங்கையை நோக்கி
சென்று மறையும்
பாதத்தின் ஒலிகள்
சுவடின் தடங்கள்
வயதாகி
பார்வையிழந்து
சந்ததியற்ற
என்னை,
இங்கேயே
விட்டுவிடுங்கள்!
புனிதம்

நான் இங்கே
சுடுகாட்டிலேயே
படுத்துக்கொள்கிறேன்
இதைப்போன்ற முரட்டுத்தனம்
சிதையேறுதலுக்கு பொருந்தாது
என்பதை
அவர்களிடம்
சொல்லுங்கள்.
என்
தலைமாட்டிலும்
கால்மாட்டிலும்
பக்கவாட்டிலும்
இருக்கும்
உங்கள் அடிமைகளிடம்
என் மார்புக்கூட்டில்
முடிவற்று ஒலிக்கும் அடியை
விட்டுவிடச் சொல்லுங்கள்
கெண்டைக்கால் வரை நீண்ட
அவள் கூந்தலை
விட்டுவிடச் சொல்லுங்கள்
அவள் கிரீடத்தில் எரியும்
நட்சத்திரங்களை விட்டு
அவர்கள்
தப்பி ஓடட்டும்
மேலும்,
மண்டையோடுகள் கோர்த்த
பெயரிடப்படாத
அந்த மாலையிலிருந்து
சொட்டட்டும்,
குளிர்ந்த என் முகத்தின் மீதும்
சில்லிட்ட மார்பின் மீதும்
புனிதம்
வழியட்டும்.
(Translated in English by Nandini Gupta from Indian Institute of Technology, Kanpur, India) https://parabaas.com/translation/database/authors/texts/sankhaghosh.html
குறிப்புகள்:
காதல் புயல்: original poem [aakaa~Nxaar jha.D* by sha~Nkha ghoshh*] appeared in the collection of poems dinaguli raataguli (1956); written during 1949-54.
என் விலாவின் துடுப்புகள்: original poem [paa.Njare daa.N.Der shabda by sha~Nkha ghoshh*] appeared in the collection of poems under the same title I.e., Oars in My Ribs (1980); written during 1976-78.
வெள்ளை நிற கல்லறைகள்: original poem [pather baa.Nke* by sha~Nkha ghoshh] appeared in the collection of poems under the title baabarer praarthanaa (1976); written during 1974-76. The poet was awarded Sahitya Akademi Award for this collection.
சாலையின் வளைவில்: original poem [pather baa.Nke* by sha~Nkha ghoshh] appeared in the collection of poems under the title baabarer praarthanaa (1976); written during 1974-76. The poet was awarded Sahitya Akademi Award for this collection.
புனிதம்: original poem [dharma* by sha~Nkha ghoshh] appeared in the collection of poems under the title mUrkha ba.Do, saamaajik naY* (1974); written during 1972-73.
One Reply to “ஷாங்க்யா கோஷ் கவிதைகள்”