- ஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி
- வி. ராமஸ்வாமி: நேர்காணல்
- மேதையுடன் ஒரு நேர்காணல்
- வங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்
- சத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு
- 20ஆம் நூற்றாண்டின் வங்காளப் பத்திரிகை உலகம்
- தமிழில் வங்க எழுத்துகள்
- நாட்டிற்கு உழைத்த நமது நல்லவர்கள்: பங்கிம் சந்திர சாட்டர்ஜி
- வங்க இலக்கியங்கள்
- அனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை
- வங்காள வரலாறு
- நீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை
- தன் வெளிப்பாடு – முன்னுரை
வங்க மொழி நூல்களில் அவசியம் வாசிக்கப்படவேண்டியவை பற்றிய சுருக்கமான அறிமுகம் இங்கே தரப்பட்டுள்ளது. முக்கியமான எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும் இங்கே கிடைக்கும்.
உஷா வை.
தாராசங்கர் பந்தோபாத்யாய் (1898 – 1971)
தாராசங்கர் பந்தோபாத்யாய் (1898-1971) எழுத்தாளர் மற்றும் செயல்பாட்டாளர். அவர் இந்திய சுதந்திர இயக்கத்திலும் அதற்குப் பிற்பட்ட வங்காள அரசியலிலும் ஈடுபட்டு, சமூக மாற்றங்களுக்காக தீவிரமாய் உந்தியவர். இந்த காலகட்டத்தில் அவர் ஏராளமான படைப்புகளை எழுதினார் – 65 புதினங்கள், 53 கதைகள், 12 நாடகங்கள், 4 கட்டுரை புத்தகங்கள், 4 சுயசரிதங்கள், 2 பயணக் கதைகள் மற்றும் இசைத் தொகுப்புகள் என்ற அவரது பல படைப்புகளில் அவருடைய அனுபவங்களின் பிரதிபலிப்பைக் காணலாம். 1959ல் அவர் ஆம்ரபாலி என்ற திரைப்படத்தையும் இயக்கினார். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவருடைய படைப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. 1961 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ, 1969 ல் பத்மபூஷண், 1969ல் சாஹித்ய அகடமி விருது என பல வகையில் சிறப்பிக்கப்பட்டவர்.
உதாரணமாய் அவருடைய சில படைப்புகள் பற்றிய குறிப்புகள்:
ஆரோக்ய நிகேதன்
பீர்பும் மாகாணத்தின் ஒரு கிராமம் பாரம்பரிய வாழ்க்கைமுறையிலிருந்து நவீன வாழ்க்கைமுறைக்கும் மாறும் கட்டத்தில் அங்கு வாழும் முதியவர் ஜீவன் மசாயின் வாழ்வைப் பற்றிய கதை இப்புத்தகம் வெளிவந்த காலத்தில், முதுமையின் உளஆய்வின் மிக வலுவான பிரதிபலிப்பாகக் கருதப்பட்டது. தன் தந்தை மீது தனக்கிருந்த பக்தி, குடும்பத் தலைவராய் தன்னுடைய இன்றைய பங்கு, தன் கசப்பான திருமண வாழ்க்கை, ஆயுர்வேத மருத்துவரான அவருக்கு புதிதாய் முளைத்துள்ள அல்லோபதி மருத்துவத்துடனான போட்டி இப்படிப்பட்ட நினைவுகளால் இடைவிடாமல் தன்னை சுய ஆய்வுக்கு உட்படுத்துபவராக மசாய் காட்டப்படுகிறார். கதையின் கரு நோய், முதுமை இவற்றைப் பற்றிய யதார்த்தமான தர்க்கமாய் இருந்த போதிலும், மனிதர்களின் ஆழ்மனதில் எப்போதும் இருக்கும் மரணம் மற்றும் தலைமுறை மாற்றங்கள் பற்றிய பயத்தைச் சித்தரிக்கும் விதத்தில் பந்தோபாத்யாய் அவற்றில் ஒரு கவித்துவத்தை புகுத்துகிறார்.

கணதேவதா
கணதேவதா (வெகுஜனக் கடவுள்) 1942 ல் வெளிவந்தது, 1920 களின் கிராமப்புற வங்காளத்தில் நடக்கும் இக்கதை இந்திய கிராமப்புற மக்களின் வாழ்வை ஆழ்ந்த புரிதலுடன் சித்தரிக்கிறது. தம் முன்னோர்கள் பரம்பரையாய் செய்து வந்த, மனிதரை இழிவுபடுத்தும் ஒரு தொழிலை செய்ய மறுத்து ஒரு வகுப்பு மக்கள் தனியாய் ஒரு கூட்டுறவு மில்லை தொடங்குகிறார்கள். இது மேல்சாதி மக்களின் கோபத்தைக் கிளப்பி ஒரு முக்கிய விவாதப்பொருளாகவும், அவர்கள் வாழ்க்கையில் கலவரம் உண்டாக்குவதாகவும் ஆகிறது. சாதி அமைப்பு பற்றிய பரம்பரையான கொள்கைகள் நவீன சிந்தனைகளின் பாதிப்பில் எப்படி மாறுகின்றன என்பதை பந்தோபாத்யாய் மிகத் திறமையாக சித்தரிக்கும். இந்தப் புத்தகம் 1966ல் ஞானபீட விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஹன்ஸுலி பாங்கர் உபாகதா
வங்காளத்தின் காட்டுப் பகுதியில் ஒரு கிராமம் ஹன்ஸுலி டர்ன், இங்கு வாழும் கஹார் என்ற இனத்து பழங்குடி மக்கள் தீண்டத்தகாத, குற்றத்தொழில் செய்யும் பழங்குடியாய் கருதப்பட்டவர்கள். வெளி உலகம் மற்றும் உலக மய தாக்கங்களால் அவர்களது வாழ்முறையில் நிகழும் மாற்றங்கள், சிதறல்கள், கலாச்சார இழப்பு இவற்றை பந்தோபாத்யாய் கவித்துவத்துடன் காட்டுகிறார். சுதந்திரத்துக்கு பிந்தைய அரசியலை ஆக்கிரமித்த கிராமப்புற வளர்ச்சி, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சுரண்டல், தலித் போராட்டம் என்ற பல சிக்கல்களைப் பற்றிய தெளிவான உள் நோக்குகளைக் கொண்டது இப்புத்தகம். 1962ல் வங்காளத்தின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான தபன் சின்ஹா இக்கதையை இதே தலைப்புடன் திரைப்படமாய் எடுத்து வெளியிட்டார்.
கோபாய் ஆற்றின் கரையில் நிகழ்ந்த சம்பவங்கள் சரித்திரத்தை உருவாக்கியவை என்கிறார் பந்தோபாத்யாய். ” சிறு நதிகளான உபகதைகள் பெரிய கதைகளின் ஆற்றில் கலந்துவிட்டன.”
மனோஜ் பாசு (1901-1987)
மனோஜ் பாசு வங்காளத்தின் சமூக யதார்த்தவாதப் பள்ளி எழுத்தாளர்கள் குழுவைச் சேர்ந்தவர். முப்பதுகளின் முற்பகுதியில் கல்லோல் என்ற குழுவைச் சேர்ந்த அர்ப்பணிப்புள்ள சில எழுத்தாளர்கள் ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் ஃப்ளோபேரின் (Flaubert) வழியில் பெங்காலி மேல், கீழ் நடுத்தர வர்க்கங்களின் அவலத்தை அப்பட்டமாக சித்தரித்தனர். அப்போது முக்கியத்துவம் அடைந்த அக்குழுவின் எழுத்தாளர்களில் பாசுவும் ஒருவர். இவரது சிறுகதைகள் பங்கிம் சந்த்ர சாட்டர்ஜீயின் துன்பியல் காதல் கதைகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளன. 33 புதினங்கள், மற்றும் நாடகங்கள், பயணக்கதைகள், சிறுவர்களுக்கான புத்தகங்கள் எழுதியுள்ளார். எழுத்தாளர் பபானி பட்டாச்சார்யாவின் வார்த்தைகளில் “தொடர்ந்து மாறக் கொண்டே இருக்கும் ஒரு காட்சியை மறுக்க இயலாத நேர்மையுடன் பதிவு செய்வதில் அவரைவிட மிகக் குறைவான சமகால எழுத்தாளர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.”

நிஷிகுடும்ப்
“நான் ஒரு திருடனாய் வருகிறேன்” என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்ட இப்புத்தகம் 1966ல் வெளியிடப்பட்டு, விமரிசகர்களின் பாராட்டைப் பெற்றது. இரண்டு பகுதிகள் அடங்கிய இந்தப் புதினம், ஒரு விபச்சார விடுதியில் வளர்ந்த சாஹேப்பின் வாழ்க்கையைப் பின் தொடர்கிறது. குழந்தைப் பருவத்திலேயே திருடுவதில் தேர்ச்சி பெற்ற போதிலும் அவர் திருடுவதில் பெரும்பகுதி பிறருக்குக் கொடுப்பதற்கே. வயதான காலத்தில் திறன்கள் குறைந்து வறுமையிலும், பட்டினியில் வாடுகிறார். இறுதியில், பல வருடங்களுக்கு முன் அவரால் காப்பாற்றப்பட்ட ஒரு விபச்சாரம் செய்யும் பெண்ணின் தலையீட்டால் அவர் போலிசாரால் விடுவிக்கப்படுகிறார். நகர்புற ஆண்களின் உளவியலை ஆராயும் கதைகளே பிரபலமாய் இருந்த அக்காலகட்டத்தில், சமூகத்தில் அடையாளம் இல்லாத ஒருவனின் வாழ்க்கையை தனித்துவமான மனித நேயத்துடன் பாசு வரைகிறார். நவீனத்துவமும், அறநெறியும் கௌரவம், ஒழுக்கம் இவற்றை மற்றுமே சார்ந்தவை என்ற கண்ணோட்டத்தை அவர் தொடர்ந்து தாக்குகிறார். சாஹேப்பின் செயல்கள் அவன் போன்றோர் பற்றிய எதிர்பார்ப்புக்கு நேர்மாறாய் மிகுந்த மனித நேயத்துடன் இருக்கின்றன. பாசு ஒரு இந்திய ராபின் ஹூட்டைப் படைத்து இப்பாத்திரத்தின் மூலம் தற்கால நெறிமுறை மற்றும் அரசியல் சார்ந்த கேள்விகளை எழுப்புகிறார்
இப்படைப்பு 1966ல் சாகித்ய அகடமி விருதைப் பெற்றது.
ப்ரபோத் குமார் (‘மானிக்’) பந்தோபாத்யாய் (1908-1956)
‘மானிக்” என்ற அவரது புனைப்பெயராலேயே பெரிதும் அறியப்பட்ட ப்ரபோத் குமார் பந்தோபாத்யாய், வங்காளப் புனைவின் ஸ்தாபகர் என்று பெரும்பாலும் சொல்லப்படுகிறார். நோயும், வறுமையும் பீடித்த அவரது குறுகிய வாழ்வில் அவர் 42 புதினங்களும், 200 சிறுகதைகளும் எழுதியுள்ளார். புதுல் நாசிர் ஈதிகாதா மற்றும் சதுஷ்கோனே அவருடைய படைப்புகளில் புகழ்பெற்றவை.

பத்மா நதிர் மாஜி
1936ல் பந்தோபாத்யாய் எழுதிய பத்மா நதிர் மாஜி, இன்றைய பாங்க்ளாதேஷில் உள்ள கேடுர்பூர் என்ற கற்பனை கிராமத்தின் ஏழை மீனவர் சமூகத்தின் கதையைச் சொல்கிறது. மீன்களுக்காக நிரந்தரமாய் நதியைச் சார்ந்திருக்கும் இந்த மீனவர்களின் வாழ்க்கைதான் நதியைச் சுற்றி எழுதப்பட்ட இப்புதினத்தின் மையப் புள்ளி. கதை ஏழை மீனவன் குபேரைச் சுற்றி நடக்கிறது. குடும்பத்தில் பணம் சம்பாதிப்பவன் அவன் மட்டுமே, அவன் கேடுர்புரின் கரையோரத்திலுள்ள மீனவ சமுதாயத்தில் தன் மனைவி, மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் வாழ்கிறான். தன் அன்றாட பிழைப்பிற்கான தேடலில் அவனுக்கு உள்ளூர் வியாபாரி ஹொஸைன் மியாவின் நட்பு கிடைக்கிறது, இந்தச் சிறு வியாபாரி மனித கடத்தல் மற்றும் பல ரகசிய விவகாரங்களில் ஈடுபடுவதாய் சந்தேகிக்கப்படுபவர். வறுமையிலிருந்து செல்வந்தராய் உயர்ந்த ஹொஸைன் மியாவின் கதையின் மையக்காரணம் மொய்னாதீப் எனப்படும் வண்டல் மண் படுக்கையாலான ஒரு தீவு அல்லது சார். இப்பிராந்தியத்தின் பகுதிகளிலிருந்து பலரை ஹொஸைன் இந்தத் தீவுக்கு ஒரு குடியேற்றத்தை அமைப்பதற்காக அழைத்துப் போகிறார். வெள்ளம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் அல்லது சமூகப் புறக்கணிப்பால் அவதிப்படும் மக்கள், ஒரு புது தொடக்கத்தைத் தேடி அங்கு குடியேற அவருடன் செல்கிறார்கள்.
இறுதியில் முரண்நகையாய் அவன் மேலான ஒரு பொய்யான திருட்டுக் குற்றச்சாட்டை தவிர்ப்பதற்காக, குபேர், ஹொஸைன் மியாவின் தீவுக்குப் புறப்படுகிறான். சமுதாயத்தின் விளிம்பில் வாழும் மீனவர் சமுதாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்வின் மையம் பத்மா ஆறு. அந்த ஆறு அவர்களது தினசரி வேலைகள், சிறு சந்தோஷங்கள் மற்றும் துக்கங்களுக்கு சாட்சியாய் இருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு முன்பு எழுதப்பட்ட இக்கதை பின்தங்கிய, வறுமையில் வாடும் மீனவர் வர்க்கத்தை மனிதாபமற்ற முறையில் சுயநலமாய் பயன்படுத்திக்கொண்டு, மேல்தட்டு மக்களுக்கு ஆதரவாய் செயல்படும் சமூகத்தை விமரிசிக்கிறது. இப் புதினத்தின் முக்கியத்துவம், இது ஊழலும், சுரண்டலும் கைகோர்க்கும் மேல்தட்டு வர்க்கத்தின் பிடியிலிருந்து இறுதியில் விடுபடும் மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. குபேரின் மொய்னா தீப் பயணம் அவன் போன்ற மக்களுக்கு ஒரு புதிய சகாப்தத்தின் விடியலைக் குறிக்கிறது – அங்கு அவன் போன்றோருக்கு தம் விதியைக் கேள்விகளற்று ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்ற தேர்வு இருக்கிறது. அவனது நிலைமாற்றம், சமத்துவமும் நீதியும் நிறைந்த ஒரு புது உலக முறைமைக்குப் போவதற்கான கடைமுடிவான தாவுதலைக் குறிக்கிறது. சலுகை பெற்ற வர்க்கங்களின் சுரண்டல் இல்லாமல் மக்கள் ஒன்றாய் உழைக்கும் ஒரு விடுதலைக்கான உருவகமே மொய்னாதீப்.

இப்புதினம் 1993ல் திரைப்படமாக்கப்பட்டது. வர்க்க அரசியல் பற்றிய விவாதத்துக்காக இது இன்றும் முக்கியத்துவம் உள்ளதாய் இருக்கிறது, அதன் சுவாரசியமான உணர்ச்சிபூர்வமான கதைக்கூற்றுக்காக அது காலத்தைத் தாண்டி நிற்கிறது.
கஜேந்திர குமார் மித்ரா (1908 – 1994)

கஜேந்திர குமார் மித்ரா பல்துறை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் வங்காள இலக்கிய வெளியீட்டாளர். தனது இலக்கிய வாழ்கையின் முதல் பாதியில் அவர் சிறுகதைகள், கவிதை மற்றும் நாடகங்களை எழுதுவதில் முக்கியமாக கவனம் செலுத்தினார். 200 சிறுகதைகள் வங்காள பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட பின்புதான் அவரது முதல் புத்தகம் வெளிவந்தது 1934 ஆம் ஆண்டில் மித்ரா & கோஷ் பப்ளிஷர்ஸ் என்ற பதிப்பகத்தை இன்னொருவருடன் இணைந்து நிறுவினார், இது இன்றும் ஒரு பிரபலமான பதிப்பகமாக தொடர்கிறது. மானுட உணர்ச்சியின் நுட்பமான நிறபேதங்களை மித்ரா வர்ணிப்பது அவை நிஜம் என்ற மாயையை ஏற்படுத்தும், இதுவே மித்ராவின் நடையின் இலக்கணம் என்கிறார் இலக்கிய விமர்சகர் ஜே.என். சக்ரபர்த்தி.

கொல்கத்தார் காச்சி (கொல்கத்தாவுக்கு மிக அருகில்)
இது கொல்கத்தாவுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தின் மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையை அதில் உள்ள பெண்களின் கண்ணோட்டத்தில் ஆராயும் கதை. சமூகத்தில் குடும்ப கௌரவம் என்ற பெயரில் பாசாங்குகளை உருவாக்கி அவற்றைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டே, வறுமைக்கும் ஸ்திரத்தன்மைக்கும் இடையே இந்த குடும்பம் போராடும் ஒரு குடும்பச் சூழலை மித்ரா சித்தரிக்கிறார். குடும்ப கௌரவம் என்பது பெண்கள் வீட்டுக்குள் அடங்கி இருக்க வேண்டும் என்பதும் ஆண்கள் தங்கள் சிறகுகளை விரித்து வெளிப்புறப் பொருளாதார மற்றும் சமூக சுதந்திரங்களைக் கண்டறிவதும் என்று புரிந்துகொள்ளப்படுகிறது..ஆனால் தலைமுறைகள் மாறுகையில் மூத்த தலைமுறைப் பெண்களின் எதிர்ப்பற்ற அடிமைத்தன ஏற்பு இளம் பெண்களால் நிராகரிக்கப்பட்டு தம் சுதந்திரத்திற்கான இருத்தலியல் போராக மாறுகிறது. இக்கதை அந்தக் காலகட்டத்தில். காலனித்துவத்திற்கு எதிராக அனைத்து மக்களும், ஆணாதிக்கத்திற்கு எதிராகப் பெண்களும் மேற்கொண்ட போராட்டங்களின் பிரதிபலிப்பே. இப்படைப்பு 1959 ல் சாகித்ய அகடமி விருதைப் பெற்றது.
ஆஷாபூர்ணா தேவி (1909-1995)
தன் எழுத்துப் பணியின் தொடக்கத்தில், ஆஷாபூர்ணா தேவி குழந்தைகளுக்காக மட்டுமே எழுதினார். ஆனந்த பஜார் பத்ரிகாவின் துர்க்கா பூஜா சிறப்பிதழில் 1936ல் முதன்முதலில் வயது வந்தவர்களுக்காக பத்னி ஓ ப்ரெயொஷி என்ற கதையை எழுதினார். 1944ல் பதிப்பிக்கப்பட்ட அவருடைய முதல் புதினம் ப்ரேம் ஓ ப்ரயோஜன். அவருடைய பெரும்பாலான எழுத்தில் ஆண் பெண் இருபாலாரின் சார்பாகவும், பாலினப் பாகுபாடு மற்றும் பாரம்பரிய இந்து சமுதாயத்தின் உள்ளே புதைந்திருக்கும் குறுகிய கண்ணோட்டத்தினால் விளையும் அநீதிகள் இவற்றுக்கு எதிராகவும் ஒரு தீவிரமான எதிர்ப்பைக் காணலாம். வங்காள எழுத்தாளர்களிடையே மிகுந்த உறுதியானவரான ஆஷாபூர்ணா தேவி, ஒரு முழு கலாச்சாரத்தின் குரலை வெளிப்படுத்தவும், அதன் நுணுக்கங்களையும், மிகவும் உறுதியான மரபுகளையும் அதிர்ச்சியூட்டும் துல்லியத்துடனும், வலிமையான நுண்ணறிவுடனும் தம் எழுத்தில் வசப்படுத்தவும் வல்ல அரிய எழுத்தாளர்களில் ஒருவர்.

ப்ரதம் ப்ரதிஸ்ருதி
ப்ரதம் ப்ரதிஸ்ருதி, சுபர்னலதா மற்றும் பகுல் கதா என்ற மூன்று புத்தகங்கள் கொண்ட முத்தொகுப்பின் முதல் புத்தகம் இது. இந்த முத்தொகுப்பு இருபதாம் நூற்றாண்டின் போக்கில், மாறிக் கொண்டிருந்த வங்காள கிராமப்புற, நகர்புறச் சூழலின் மூன்று தலைமுறைப் பெண்களின் வாழ்க்கைக் கதைகளைப் பற்றியது. சமகால வங்காள சமூகத்தில் பெண்களைப் பற்றிய முரணான எதிர்பார்ப்புகளைப் பற்றி இப்புத்தகங்களில் ஆஷாபூர்ணா பேசுகிறார். 1964 ல் முதன்முதலாய் பதிக்கப்பட்ட ப்ரதம் ப்ரதிஸ்ருதி, சமூக வழக்கத்தை அனுசரித்து எட்டு வயதில் மணமுடிக்கப்பட்டு, கண்டிப்பான பிராம்மண சமூக வழக்கங்களின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்ட, நியாயத்துக்காக போராடும் குணமுள்ள சத்யபதியின் கதையைச் சொல்கிறது. விடாமல் சத்தியத்தைத் தேடும் சத்யபதி, இப்படி அடங்கி வைக்கப்பட்டிருப்பதை தன் விதி என ஏற்றுக் கொள்ள மறுத்து, குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராகவும், பலதார வழக்கத்தின் உளரீதியான வன்முறை மற்றும் பெண்களுக்கு அநீதியான பாராபட்சங்களை எதிர்த்தும் போராடுகிறாள். தான் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறோம் என்று அவளுக்குத் தெரியாது ஆனால் அவளுடைய விடாப்பிடியான முயற்சிகள், அவளுடைய மூன்றாம் தலைமுறைப் பெண்களுக்கு தன்னம்பிக்கையுடன் முன்னேறும் வலிமையைக் கொடுக்கின்றன. சத்யபதியின் மூலம், ஆஷாபூர்ணா தேவி வங்காள சமுதாயத்தில் நிலவும் இரட்டைத் தரங்களின் வேடத்தையும், “வாழ்க்கையை விடப் பெரிதான” அரசியல் மோதல்களால் புறக்கணிக்கப்பட்ட வீட்டு நடப்புகளின் மேலுள்ள திரைகளையும் விலக்குகிறார்., சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் காலனித்துவ எதிர்ப்புப் போரட்டத்தின் பின்னணியில், பெண்களின் உரிமைகளை வீட்டு உள்விவகாரங்கள், வீட்டுக்கு அப்பாற்பட்டவை, வீட்டைச் சுற்றி உள்ள பிரச்சினைகள் எனக் கட்டமைத்து, ஆணாதிக்கக் கட்டுப்பாட்டுகளுக்கு எதிராய் கூக்குரலிடுகிறார். மேலும் மாற்றத்துக்கு வேண்டிய நீதிக்காகப் போராட சுய பொறுப்பை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பற்றியும் பேசுகிறார்.

“உங்கள் நீதிமன்றங்களை ஏன் திறந்திருக்கிறீர்கள் எனச் சொல்லுங்கள்?… பல நூற்றாண்டுகளாய் பாவங்களின் குவியல்கள் சேர்ந்திருக்கின்றன. அவற்றை உங்களால் தீர்த்துக் கட்ட முடியும் என்றால், அப்பொழுதுதான் உங்களை சட்டத்தை உருவாக்கத் தகுதியானவர்கள் என நான் சொல்வேன். இன்னொருவரின் நிலத்தில் அரசன் என்ற.வேடத்தை ஏன் எடுத்துக் கொண்டீர்கள்? உங்களைக் கப்பல்களில் அடைத்துக் கொண்டு போக வேண்டியதுதானே?”
-சத்யபதி
ஆஷாபூர்ணா தேவிக்கு 1965ல் இப்படைப்புக்காக ஞானபீட விருது வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெற்ற முதல் பெண்மணி இவர்.
மைத்ரேயி தேவி (1914-1990)
வங்காளக் கவிஞரும் புதின எழுத்தாளருமான மைத்ரேயி தேவி, தத்துவவாதி சுரேந்திரநாத் தாஸ்குப்தாவின் மகள். கவி ரபீந்திரநாத் தாகூரின் வழிகாட்டுதலில் வளர்ந்தவர், அவரது ப்ரொட்டீஜி. அவருடைய முதல் கவிதைப் புத்தகம் உதாரதா அவருடைய 16 வது வயதில் ரபீந்திரநாத் தாகூரின் முன்னுரையுடன் வெளிவந்தது. அவர் ரபீந்திரநாத் தாகூரைப் பற்றி ஏராளமாக எழுதியுள்ளார். அவற்றில் சில அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தாகூர் பை தி ஃபயர்சைட் (Tagore by the Fireside) ன் மூலமான முங்க்புதே தாகூர் (முங்க்புவில் தாகூர்), க்ரிஹே ஓ விஷ்வே (தாகூர் வீட்டிலும், உலகத்திலும்), ரபீந்திர நாத் – அவரது கவிதைக்குப் பின்னுள்ள மனிதர் (Rabindranath the man behind his poetry) மற்றும் ஸ்வர்கேர் காச்சாகாச்சி (சொர்க்கத்துக்கு அருகில்). ஸ்வர்கேர் காச்சாகாச்சி நூல், தாகூர், மைத்ரேயியின் தந்தை மற்றும் மைத்ரேயிக்கு இடையேயான கடிதப் பரிமாற்றங்களின் தொகுப்பு. எழுதுவது மட்டுமன்றி, மைத்ரேயி தன் பின்னாட்களில் வசதியற்ற குழந்தைகளுக்காக ஒரு அநாதை ஆசிரமமும் தொடங்கினார்

ந ஹன்யதே
மைத்ரேயி தேவியின் சாஹித்ய அகடமி விருது பெற்ற புதினம் 1974ல் வெளிவந்த ந ஹன்யதே. இது ஆங்கிலத்தில் it does not die என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவருடைய சொந்த வாழ்வை அடிப்படையாய் கொண்டு எழுதப்பட்ட இக்கதை ரோமேனியாவைச் சேர்ந்த தத்துவவாதி மிர்ஸியா எலியட், இந்தியாவிற்கு வருகை தந்த போது அவருக்கும் மைத்ரேயிக்கும் இடையே உண்டான காதலைப் பற்றி ஃப்ரெஞ்ச் மொழியில் எழுதிய புனைவுபடுத்திய விவரணையான லே நுயி பெங்காலி (ஆங்கிலத் தலைப்பு: Bengali Nights) என்ற விவரணைக்கு மறுமொழியாய் எழுதப்பட்டது. மேல்தட்டு, உயர்சாதி இந்துக் குடும்பச் சூழலின் பின்புலத்தில், வயதுக்கு மிஞ்சிய அறிவுள்ள ஒரு பெண்குழந்தையின் குழப்பங்களை தேவி ஆற்றலுடன் காட்டுகிறார் – கலாச்சார அழுத்தங்கள் மிகுந்த முதல் காதல், அதன் முறிவு, தவறான தொடக்கங்கள், நிலைத்த வருத்தம் இவற்றை ஆழ்ந்த சிந்தனையுடன் உருவாக்கிக் காட்டுகிறார். நாற்பதாண்டு கால இடைவெளியில் எழுதப்பட்ட இவ்விரண்டு புதினங்களும் அவர்களது சாத்தியமற்ற காதலின் உணர்ச்சிப் பின்விளைவுகளை, இவ்விருவரின் நேர் எதிர்கோணங்களிலிருந்து பிரதிபலிக்கின்றன. இன்று இவை இரண்டும் சேர்ந்து படிக்கப்படுகின்றன. அப்பாவித்தனத்துக்கும் அனுபவத்துக்கும் இடையிலான மோதல்கள், மோகவயப்படுதல், அதிலிருந்து தெளிதல், கலாச்சார வேறுபாடு, காலனித்துவ ஆணவம் இப்படிப்பட்டவை மோதிக்கொள்கையில் என்ன நடக்கும் என்பதன் சக்திவாய்ந்த பகுப்பாய்வாக தேவியின் புதினம் தன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. ஒரே நடப்புகளை சொல்பவையானாலும், அவர்களது கோணங்களும், கதைக்கோடுகளும் வேறுபடுகின்றன. அவர்களுடைய காதலை தேவி தெளிவாகவும், உணர்ச்சிபூர்வமாகவும், வெட்கப்படாமல் சித்திரித்த விதம் வாசகர்களுக்கு அதிர்ச்சியூட்டி, இலக்கிய உலகில் ஒரு சூறாவளி போன்ற தாக்கத்தை ஏற்படுத்தி அவருக்கு மிகுந்த புகழைத் தேடித் தந்ததுடன் அவர் இலக்கிய உலகில் கவனிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் என்பதை உறுதி செய்தது.

“கவிதைநயமான உரைநடைக்கும், கடந்தகால நினைவூட்டலுக்கும் இடையே உள்ளும் வெளியுமாய் மூழ்கி எழும் அவருடைய எல்லைகளற்ற கதை சொல்லும் பாணியால் நான் நிலைகுத்தி ஈர்க்கப்பட்டேன்…ஒரு இந்தியப் பெண்மணியால், அதுவும் அவருடைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவரால் எழுதப்பட்ட, இப்படிப்பட்ட ஒரு புத்தகத்தை நான் எப்போதும் படித்ததில்லை.” என்கிறார் எழுத்தாளரும், கல்வியாளருமான கினு கமானி.
இப்படைப்புக்கு 1976ல் சாஹித்ய அகடமி விருது வழங்கப்பட்டது.
அமியா பூஷன் மஜும்தார் (1918-2001)
“ஒரு (பாரம்பரிய ) பாடகர் ஸ்வரத்திலிருந்து ஸ்வரத்துக்கு நகர்வது போல, அமியா பூஷன் வாக்கியத்திலிருந்து வாக்கியத்துக்கு நகர்ந்தார். இது உருவாக்கும் மந்திரக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடவும், இந்த அசைவிற்குத் தன்னை அனுசரித்துக் கொள்ளவும் வாசகனுக்கு சமயம் தேவைப்படுகிறது. இது புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு பாடமாகிறது” என்கிறார் கவிஞர் ஜொய் கோஸ்வாமீ.
“எழுத்தாளர்களின் எழுத்தாளர்” என அறியப்பட்ட அமியா பூஷன் மஜும்தார் ஒரு புதின எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் நாடகாசிரியர். 1944ம் வருடம் மந்திரா இதழில் இரண்டு பகுதிகளாய் பதிப்பிக்கப்பட்ட ஓரங்க நாடகம் “சினாய் மலையின் மேல் கடவுள்” (The God on Mount Sinai) பிரசுரத்தில் வந்த அவருடைய முதல் படைப்பு. பூர்பாஷா இதழ் 1946ல் வெளியிட்ட ப்ரொமிலார் பியே, சதுரங்கா இதழில் 1947ல் வந்த நந்தாராணி இவ்விரண்டு சிறுகதைகளும் பிரசுரமானதுமே அவருடைய தனிப்பட்ட உரைநடை பாணிக்காக ஒரு விசேஷமான தளத்திலான வாசகர்கள் மற்றும் விமர்சகர்களின் கருத்தை அவை கவர்ந்தன. 1953-54 ல், பூர்பாஷா இதழில் கார் ஸ்ரீகாண்டா மற்றும் சதுரங்கா வில் நயன்தாரா என்ற இரண்டு புதினக் கதைகளும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தொடர்களாய் வெளிவந்தன. அதற்குப் பிற்பட்ட 50 வருடங்களில், 27 புதினங்கள், 115 சிறுகதைகள், சுமார் 50 கட்டுரைகள் மற்றும் 6 ஓரங்க நாடகங்களை அமியா பூஷன் பதிப்பித்தார். நவீன வங்காளமொழி உரைநடையில் மிகவும் குறிப்பிடத்தக்கவராய் கருதப்படும் மஜும்தாரின் படைப்புகள் முக்கியமான விமரிசகப் பாராட்டுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றன. ராஜ்நகர் என்ற அவருடைய புதினத்துக்கு சாஹித்ய அகடமி விருது வழங்கப்பட்டது.

ராஜ்நகர்
ராஜ் நகர் மிகவும் சிக்கலான சரித்திரப் புதினம். ஃப்ரான்ஸால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஃபரஸ்தங்கா என்ற சந்தாநகர் பகுதியில் 1857ன் சிப்பாய் கலகத்துக்கும் முன்னும் பின்னுமான வருடங்களில் நடக்கும் கதை. அடிப்படையில் இப்புதினம் 3 வேறுபட்ட, நேர்த்தியான காதல் கதைகளின் பின்னல். காலனித்துவ ஆட்சியில் நிலைமாற்ற நேரத்தின் நிலத்தடி அதிகார அரசியல் பற்றிய நுட்பமான விவரணை. படைப்பில்,அக்காலகட்டத்தின் போட்டியிடும் முரண்பாடுகள் மற்றும் மத நம்பிக்கைகளின் அறிவுசார் அம்சங்களின் வர்ணனை தெளிவும், நுண்ணறிவும் உடையது. சில நேரங்களில் சுருக்கமான தருணங்களை மிக நுணுக்கமாகவும், விவரமாகவும் விளக்கி தனித்தன்மையுடைய விவரிப்பு முறைகளில் மஜும்தார் பரிசோதனை செய்கிறார். இப்புத்தகத்துக்கு 1986ல் சாஹித்ய அகடமி விருது வழங்கப்பட்டது. இது தெலுங்கு மொழியிலும் ஆங்கிலத்திலும் கல்பனா பர்தன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஸந்தோஷ் குமார் கோஷ் (1920-1985)

ஸந்தோஷ் குமார் கோஷ் ஏறக்குறைய இருபதாண்டுகளுக்கு மேல் வங்காளத்தின் மிகப் பெரிய பத்திரிக்கையான ஆனந்த் பஜார் பத்ரிகாவின் பொறுப்பாசிரியராக் இருந்தவர்.. நாடகம், கவிதை, கட்டுரைகள் என்று பல்வேறு வடிவங்களில் எழுதியபோதும் அவருடைய சிறுகதைகள் மற்றும் புதினங்களுக்காகவே அவர் பேசப்படுகிறார். 1950ல் கினு கொயலார் கலி (Kinu goalar Galli) என்ற அவரது முதல் முக்கிய புத்தகம் வெளிவந்ததுமே தாக்கம் ஏற்படுத்தும் எழுத்துக்கான அங்கீகாரத்தைப் பெற்றது.. இப்புத்தகம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.. கீழ்மட்ட மக்களின் துயரங்களை ஆழ்ந்த பச்சாதாபத்துடன் சித்தரிப்பதுடன், புதினத்தின் வரம்புகள் குறித்த அவரது சோதனைகளுக்காகவும் அவருடைய எழுத்துக்கள் பிரபலம் பெற்றன.. ரேனு தோமார் மோன் என்ற கதை முற்றிலும் முன்னிலைக் கதையாடல் உத்தியில் (second person narrative) எழுதப்பட்டது. மிலே ஆமிலே கவிதை,, கட்டுரை, கதை எல்லாம் சேர்ந்த கலவை.. அவருடைய புதினங்கள் குழந்தை பருவத்தின் அப்பாவித்தனம் நகரவாழ்க்கையில், வளர்ந்த மனிதர்களிடையே இழிவான குணமாய் மாறுவதை அம்பலப்படுத்தின. ஆனந்த பஜார் பத்ரிகாவின் பொறுப்பாசிரியராய் அவர் பல எழுத்தாளர்களின் எழுத்துக்களை வெளியிட்டு அவர்களது இலக்கிய வாழ்வின் முன்னேற்றத்துக்கும் விரிவாக்கத்துக்கும் துணையாய் இருந்தார்.

ஷேஷ் நமஸ்கார்
கோஷின் மகத்தான இலக்கியப் படைப்பாகக் கருதப்படும் இப்புத்தகம் மனித வாழ்வில் மரணத்தின் பங்கையும், ஒருவரின் வாழ்வில் அவரது பெற்றோர் மற்றும் வம்சாவளியின் பங்கு என்ன என்பதையும் ஆராய்கிறது. கதை முழுவதும் ஒரு மகன் தன் தாய்க்கு எழுதும் கடிதங்களின் ,மூலம் சொல்லப்படுகிறது. தன் வாழ்வில் தார்மீக அடிப்படையின் குறைபாட்டை தன் குழந்தை பருவத்திலும், தன்னைப் படைத்த தாயிடமும் அவர் தேடுகிறார். மாசற்ற கலைநுட்ப வலிமை மற்றும் கதைசொல்லியினுள் படைப்பாளி தன்னைப் புகுத்தி அவர் மூலம் வாழ்வு, மரணம் இவற்றின் அர்த்தத்தைத் தேடுவது இவ்விரண்டும் இப்படைப்பின் முக்கிய சாரங்கள். 1972ல் சாஹித்ய அகடமி விருது பெற்ற இப்புத்தகம் கேதகி தத்தா என்பவரால் “The Last Salute”” என்ற பெயரில் 2013ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
பிமல் கார் (1921-2003)
பிமல் கார் வங்காளத்தின் புகழ் பெற்ற புதின எழுத்தாளர் மற்றும் நாடகாசிரியர். தான் எடுத்துக் கொள்ளும் விஷயத்துக்குத் தகுந்தார்போல தன் விவரிப்புப் பாணியையும், உத்திகளையும் மாற்றக் கூடிய திறமைக்குப் பெயர் பெற்றவர். உதாரணமாய் உரையாடலே இல்லாத மிகச் சிறந்த கதைகளையும், பெரும்பாலும் உரையாடல்களாலேயே எழுதப்பட்டக் குறிப்பிடத்தக்க கதைகளையும் இவர் எழுதி இருக்கிறார். – முற்றிலும் விவரிக்கப்பட்டவை, முற்றிலும் உரையாடல்களாலேயே சொல்லப்பட்டவை, பெண் கதைசொல்லி, ஆண் கதைசொல்லி,, வங்காளத்தின் பல வட்டாரமொழிகளில் எழுதுவது எனப் பலவகைகளில் எழுதியிருக்கிறார். காரின் யதார்த்தவாதம் ஆழ்மனதில் உட்பதிக்கப்பட்டது, பொருட்களாலான வாழ்க்கையின் அம்சங்களில் அல்ல என்கிறார் கல்வியாளரும், சமூகவியலாளருமான துர்ஜதி முகர்ஜி..

அசமய்
இந்தப் புதினத்தில் நனவின் நீரோடை (Stream of Consciiousness) நடை உத்தியை பிமல் கார் திறம்படக் கையாண்டு, ஒருவரோடு ஒருவர் தொடர்புள்ள ஒரு மொத்த மக்கள் குழுவின் வாழ்க்கையின் முன்னோக்கு நடப்பைச் சித்தரிக்கிறார். கதையின் ஒருங்கிணைப்பு முனை, யாருடைய கதை சொல்லப்படுகிறதோ அந்தக் கதாபாத்திரத்தின் மாற்றத்துடன் மாறுகிறது. மோகினியும் அபினும் கதையின் முக்கிய பாத்திரங்களாயினும், சசிபதியும் அவருடைய நோயுமே அவர்கள் எல்லோரையும் இணைக்கிறது. புதுமையையும் அதன் மூலம் சமூகத்தில் உருவாகும் நிலைக் குலைபாட்டையும் அங்கீகரிப்பதும், அதே சமயத்தில் பாரம்பரியம் எப்படித் தன்னை (நியாயப்படுத்தும்படியோ, இல்லாமலோ) மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்கிறது என்பதும் அவருடைய படைப்புகளை இணைக்கும் தொடர்ச்சியான கருப்பொருள். இக்கதையிலும் கதாபாத்திரங்களின் விரக்தியும், பதட்டமும் விளைவது அதே கருத்திலிருந்துதான். சாஹித்ய அகடமி விருது பெற்ற இப்புத்தகத்தை “Belated Spring” என்ற தலைப்பில் 1999ல் நீதா சென் சமர்த் மொழிபெயர்த்துள்ளார்.

ராமபாதா சௌதுரி (1922-2018)
ராமபாதா சௌதுரி வங்காளப் புதின, சிறுகதை எழுத்தாளர். சௌதுரி இரண்டாம் உலகப்போர் நடக்கும் சமயத்தில் எழுதத் தொடங்கினார். பல வருடங்கள் ஆனந்த பஜார் பத்திரிக்கையுடன் இணைந்திருந்த அவர் அதன் ஞாயிறு இணைப்பு வெளியீட்டைப் பதிப்பித்து வந்தார். 50 புதினங்களும், 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ளார். தேஷ் பத்திரிக்கையில் பிரசுரமான கதைகளின் ஒரு தொகுப்பை பதிப்பிற்குத் தயார் செய்துள்ளார். பாரி பொத்லே ஜாய் என்ற புத்தகத்துக்காக 1988ல் அவருக்கு சாஹித்ய அகடமி விருது வழங்கப்பட்டது. ஏகோனி என்ற படைப்பிற்காக ரபீந்திர புரஸ்கார் விருதும், ஆனந்த புரஸ்கார் விருதும் பெற்றுள்ளார். ‘வெளியேறுவது ஒரு கலை’ என்று நம்பிய சௌதுரி எழுதுவதிலிருந்து ஓய்வு பெறத் தீர்மானித்தார் – வங்காள இலக்கிய வெளியில் முன்னோடியற்ற அருஞ்செயல் இது. மனித பலவீனங்கள் மற்றும் சமூகத்தை பிளவு படுத்தும் பிரச்சினைகளின் மேல் சார்பற்ற, கூர்ந்த கவனிப்பைச் செலுத்திய மிகச் சில எழுத்தாளர்களில் ஒருவர் என்ற முத்திரையைப் பதித்தபின், அவர் ஒரு வாசகனாய் தாம் தொடங்கிய இடத்துக்கே திரும்பிச் சென்றார்.

பாரி பொத்லே ஜாய்
இக்கதையின் மையப் பாத்திரங்களான த்ருபோவும் ப்ரீதியும் ஒரு கூட்டுக் குடும்பத்தில், காளிகாட் அருகேயுள்ள ஹரீஷ் முகர்ஜி வீதியில் வாடகை வீட்டில் வசிக்கும் ஒரு தம்பதி, ஆனால் அவர்களின் கனவு நகரத்தில் அவர்களுக்கான ஒரு இடம். வாடகைக்கு அடுக்கு வீட்டில் ஒரு இடம் தேடுகின்ற போது தமது அளவான பட்ஜெட்டில் கல்கத்தாவில் ஒரு சிறிய இடம் கிடைப்பது கூட எத்தனை கடினம் என்பதை அவர்கள் உணர்கிறார்கள். அடர்த்தியும், அருகாமையும் நகர்புறத்தின் இடஞ்சார்ந்த பரிமாணங்களை வரையறுக்கும் பண்புகள். நகர்புற வெளியின் இந்தப் முகப்புக்கூறின் விளைவான குடித்தனக்காரர்கள், வீட்டு உரிமையாளர்கள் போன்ற வகைகளை பாரி போத்லே ஜாய் ஆராய்கிறது. கூடவே, தொடர்ந்து வீடு மாறிக் கொண்டே இருக்கும் நகர்ப்புறவாசியின் சோதனைகளையும், துயரத்தையும் சித்தரிக்கிறது. ஒரு குடித்தனக்காரராய் சௌதுரியின் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தப் புதினத்துக்கு 1988ல் சாஹித்ய அகடமி விருது வழங்கப்பட்டது.

அபிமன்யு
1978 ல்இந்தியாவின் முதலாவது மற்றும் உலகத்திலேயே இரண்டாவது சோதனைக் குழாய் குழந்தையை (Test Tube Baby) உருவாக்கிய விஞ்ஞானி சுபாஸ் முகோபாத்யாயின் வாழ்க்கை மற்றும் தொழிலின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை அபிமன்யு. செயற்கை கருவூட்டல் (IVF) முறை பற்றிய ஆராய்ச்சிக்காக அவர் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டார். இறுதியில் தற்கொலை செய்துகொண்டார். இக்கதையை இயக்குனர் தபன் சின்ஹா 1990ல் ‘ஏக் டாக்டர் கி மௌத்‘ என்ற பெயரில் திரைப்படமாக்கினார். அது பல விருதுகளை வென்றது. அவருடைய நிஜ வாழ்க்கையால் தூண்டப்பட்ட இப்படம், அரசியல் நிர்வாகத்தின் அசட்டையால் உருவாகும் குழப்பங்களையும், படுகுழிகளையும், இந்திய விஞ்ஞானிகளுக்கு உள்கட்டமைப்பின் ஆதரவு கிடைக்காததையும் பற்றிய, நெஞ்சைப் பிளக்கும் சித்தரிப்பு.
சமரேஷ் பாசு “கால்கூட்” (1924 – 1988)

200 சிறுகதைகள், 100 புதினங்கள் என பல்வகைப்பட்ட எழுத்துக்களை எழுதிக் குவித்துள்ள சமரேஷ் பாசு வங்காள இலக்கியத்தில் ஒரு முக்கிய ஆளுமை. அவரது வாழ்வில் கிடைத்த அனுபவங்களின் தாக்கத்தை அவருடைய எழுத்துக்களில் காணலாம். அவரது துணிச்சலான புனைவுகள் தொழிலாளிகள், புரட்சியாளர்கள், மற்றும் தீவிரவாதிகள் சமூகத்தை எதிர்த்ததோடு தமது உள்மனப் பேய்களையும், நிராசைகளையும் எதிர்த்துப் போராடுவதைப் பற்றியும் பேசியது. அவரது இரண்டு புதினங்கள் ஆபாச எழுத்து என்று காரணம் காட்டி சில காலத்துக்குத் தடை செய்யப்பட்டன. சில காலத்துக்கு அவர் தொழிற்சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினராக இருந்தார். 1949-50 ல் அக்கட்சி நீதிக்குப் புறம்பானதாய் அறிவிக்கப்பட்டபோது சிறைப்படுத்தப்பட்டார்.. சிறையில் இவரது முதல் புதினம் உத்தரங்கா வை எழுதினார். பின்னர் அது புத்தக வடிவில் வெளியிடப்பட்டது. இவர் “கால்கூட்” “ப்ரமர்” என்ற புனைப் பெயர்களிலும் எழுதினார்.

ஷம்பா
ஷம்பா புராணக் கதைகளின் சுவாரசியமான மறுபார்வை. அது எழுதப்பட்ட காலத்தில், சமூக யதார்த்தமாயன்றி, ஒரு புராணக்கதையின் நவீன மாற்றலாய் இருந்ததே அதன் தனித்துவம். பயணக் கட்டுரைகள் எழுத அவர் உபயோகித்த புனைப்பெயரான “‘கால்கூட் என்ற பெயரில் எழுதப்பட்ட இந்த புத்தகம், நிலத்தின் ஊடான பயணத்தைப் பற்றியதை விட காலத்தினூடான பயணம். புத்தகம் அதன் எழுத்தாளரை காஸ்பியன் கடலின் கரையிலிருந்து குரு வம்சத்தின் பாஞ்சாலத்துக்கு இட்டுச் செல்கிறது அதன் பின் யாதவர்களின் இருப்பிடமான த்வாரவதியில் முடிகிறது. புராணங்களின் அதிகாரபூர்வ கதைசொல்பவரான சுதாவால் வழிகாட்டப்படும் நூலாசிரியர், ஆரிய விரிவாக்கத்தின் ” உண்மை ” சரித்திரத்தை தாம் கடப்பதை உணர்கிறார், இங்கு இந்திரன் முதல் கிருஷ்ணன் வரையான அனைத்து கதாபாத்திரங்களும் “நிஜமானவர்கள்”. யாதவ அரசகுமாரங்களில் மிக அழகானவன் ஷம்பா. அவனுக்கு கிருஷ்ணனின் பதினாறாயிரம் பெண்களிடையே இருக்கும் செல்வாக்கையும், கவர்ச்சியையும் கண்டு பொறாமை கொண்ட அவன் தந்தையால் சபிக்கப்பட்டு தொழுநோயால் பாதிக்கப்படுகிறான். நோய்க்கான குணத்தை தேடி நிராதரவாய் அலைகையில், நீலாக்ஷி என்ற தொழுநோளியின் உதவிபெற்று, இறுதியில் சூரியனைப் பின்பற்றுபவர்களால் குணப்படுத்தப்படுகிறான், அவர்களுக்கே தன் வாழ்க்கையையும், செல்வத்தையும் அர்ப்பணிக்கிறான். பௌத்தம், இந்துமதம், நவீன மார்க்ஸிசம், சமத்துவம், பெண்ணியம் அனைத்தின் கலவையாய் இப்புத்தகம் மன்னிப்பு, உடல் ஊனம், சமத்துவம் போன்ற கருத்துகளைக் கையாள்கிறது.
இப்புத்தகம் 1980ல் சாஹித்ய அகடமி விருது பெற்றது
மஹாஸ்வேதா தேவி (1926-2016)
மஹாஸ்வேதா தேவி வங்காள மொழியின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர். அவருடைய அரசியல் எழுத்துப் பாணிக்காக மட்டுமன்றி, அவர் பல பத்தாண்டுகளாய் வாழ்ந்த இந்தியாவின் கிழக்குப் பகுதியின் நிலமில்லாத கூலி விவசாயிகளுக்கு அவருடைய மகத்தான பங்களிப்புக்காகவும் அறியப்படுபவர். இந்தச் சமூகத்தினருடன் அவருக்கு இருந்த நெருக்கமான தொடர்பு அவருக்கு அவர்கள் பற்றிய புரிதலைக் கொடுத்தது, இதனால் அவர் அவர்களது அடிமட்ட அளவிளான பிரச்சினைகளை ஆவணப்படுத்தத் தொடங்கினார். இது ஒரு தெளிவான சமூக, அரசியல் நம்பகத்தன்மையையும், மனித நேயத்தையும் அவரது கதைகளுக்குக் கொடுக்கிறது. புதினங்கள், சிறுகதைகள், குழந்தைகளுக்கான கதைகள், நாடகங்கள் மற்றும் செயல்பாட்டு இலக்கியம் என பலவகைகளில் அவர் எழுதிய படைப்புகள் முத்திரை பதித்துள்ளன.
1986ல் பத்மஸ்ரீ. 2006ல் பத்ம விபூஷன், 1997ல் ரமோன் மக்ஸேஸே விருது எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2012ல் இலக்கியத்துக்கான நோபெல் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்ட இவர், தற்போது வங்காள மொழியில் மிகவும் படிக்கப்பட்ட, மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர்.

ஹஜார் சுராஷிர் மா
மஹஸ்வேதா தேவியின் மிகப் பிரபலமான புதினம் ஹஜார் சுராஷிர் மா, சாமிக் பந்தோபாத்யாயால் ஆங்கிலத்தில் mother of 1084 (1084ன் தாய்) என மொழிபெயர்க்கப்பட்டு 2010ல் வெளிவந்துள்ளது. தன மகனின் மரணத்தைப் பற்றி திடீரென அறியும் ஒரு அன்பு மிகுந்த தாயின் நெஞ்சைப் பிளக்கும், அதே சமயத்தில் தாட்சண்யமின்றி பகுந்தாயும், கதை. 1084 என்று மட்டுமே பிணவறை அதிகாரிகளால் அடையாளம் செய்யப்படும் அந்த இளைஞன், புரட்சிக்கார நக்ஸல்களை ஒழிப்பதற்காக 1970களில் வங்காளக் காவல்துறை பயன்படுத்திய போலி என்கௌன்டர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படுகிறான்.
அவனது இறப்புக்கு ஒரு வருடத்துக்குப் பின், அவனுடைய முன்னாள் காம்ரேட்கள், இயக்கத் தோழர்களுடன் தொடர்பு கொண்டு, விவரங்களை அறிந்து நக்ஸல் இயக்கத்தில் அவனுடைய ஈடுபாடு பற்றிய கதையை அவள் சிறிது சிறிதாய் சேர்த்து இணைத்துப் புரிந்து கொள்கிறாள். 1970 களில் வங்காளத்தை உலுக்கிய ஆயுதம் தாங்கிய அரசியல் இயக்கம் குறித்த ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தை இந்தப் புதினம் அளிக்கிறது. இவ்வியக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நகர்புற இளைஞர்களிடையேயும், கிராமப்புற விவசாயிகளிடையேயும் இருந்தனர், அரசியல் மற்றும் நிர்வாகப் பரப்பில் மட்டுமன்றி, இறந்தவர்களின் குடும்பங்களின் மீதும் அது தன் தாக்கத்தை விட்டுப் போனது. இப்படைப்புக்கு 1996ல் ஞானபீட விருது வழங்கப்பட்டது.
ஒரு தலைமுறையின் சிந்தனைப்போக்கையும், மத்தியதர குடும்பத்தின் வசதியான கட்டமைப்பில் ஏற்படும் கொந்தளிப்பையும் நேர்த்தியுடனும், கூர்மையுடனும் படம்பிடிக்கும் இக்கதை இன்றும் ஒரு உருக்கமான ஆவணம். ‘ஆதிவாசி சமூகத்தைப் பற்றி மட்டுமே எழுதுகிறீர்கள் எங்களை பற்றி ஒருபோதும் எழுதுவதில்லை’ எனக் கூறிய நகர்புற நக்ஸல்களின் வேண்டுகோளுக்கிணங்கி, ஏறக்குறைய அரசகுடும்பத்தினரின் விருப்பத்துக்கிணங்கி நடத்தும் கலைநிகழ்ச்சி போல இப்புத்தகத்தை நான்கே நாட்களில் எழுதி முடித்ததாக தேவி ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார்.

சுனில் கங்கோபாத்யாய் (1934- 2012)
புதினங்கள், பயணக்கட்டுரைகள், கவிதைத் தொகுப்புகள் என இருநூறுக்கும் மேற்பட்ட பல்வகைப் புத்தகங்களை எழுதியுள்ள சுனில் கங்கோபாத்யாய் கவிதையே தன் “முதல் காதல்” என அறிவித்துக்கொண்டார். ஏகா ஏபோன் கயெக்ஜோன் (1958), அமர் ஸ்வப்னா (1972), பந்தி ஜெகே ஆச்சி (1974), மற்றும் அமி ரகம் பாபே பெஞ்சே ஆச்சி (1975) இவருடைய பிரபலமான கவிதைத் தொகுப்புகள். க்ரித்திபாஸ் என்ற திருப்பு முனைக் கவிதை இதழை 1953ல் தொடங்கி அதன் ஆசிரியராகவும் இருந்தார். இது கவிதையின் கருக்கள், தாளங்கள் மற்றும் சொற்களில் புது வடிவங்களில் பரிசோதனைகள் செய்த புதுத் தலைமுறை கவிஞர்களுக்கு ஒரு மேடையாய் மாறியது. புதின எழுத்தில் புதுப் பாணியை உருவாக்கும் வகையான ஆத்மப்ரகாஷ் (1966) என்ற படைப்புடன் புதின களத்தில் புயலாய் பிரவேசித்து விரைவிலேயே வங்காள புதின எழுத்தாளர்களில் மிகப் பிரபலமானவர்களில் ஒருவராக உயர்ந்தார். ஆத்மப்ரகாஷ் கல்கத்தாவின் இளம் தலைமுறையினரிடம் இருந்த விரக்தியையும், எதிலுமே பற்று இல்லாத சலிப்பையும் மிக வலிமையுடன் சித்தரித்தது. காகாபாபு என்ற பிரபலமான புனைவுப் பாத்திரத்தை உருவாக்கி இவரை மையமாக வைத்துப் கங்கோபாத்யாய் எழுதிய பல கதைகள், இந்திய குழந்தைகள் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளன. இவர் நீல் லோஹித், ஸனாதன் பாடக், நீல் உபாத்யாய் என்ற புனைப் பெயர்களிலும் எழுதினார்

சேய் சமய்
1982ல் வெளிவந்த சேய் சமய் யின் பின்னணி பத்தொன்பதாம் நூற்றாண்டின் வங்காள மறுமலர்ச்சி மற்றும் 1857ன் எழுச்சி ஆகியவை. இக்கதை மனித பலவீனங்கள் மற்றும் வலிமை பற்றியது. கூடுதலாய், கல்கத்தா நகரின் சமூக, அரசியல் மற்றும் அறிவுசார் வாழ்க்கையின் குறுக்குக் கலாச்சார நீரோட்டங்களையும் ஆராய்கிறது. இது ஒரு சரித்திரக் காலகட்டக் கதை. ஹூதும் ப்யன்சார் நக்ஷா என்ற தலைப்பில் அன்றைய கல்கத்தா வாழ்க்கையை நையாண்டி செய்யும் புத்தகத்தை எழுதிய காளி ப்ரசன்னா சின்ஹா வைச் சுற்றி நடக்கும் இக்கதையில், சுமூக சீர்திருத்தவாதி வித்யாசாகர் கவிஞர் மைக்கேல் மதுசூதன் தத், துவாரகாநாத் தாகூர் ,மற்றும் அவர் மகன் தேபேந்திரநாத் தாகூர், பத்திரிக்கையாளர் ஹரீஷ் முகர்ஜி, பிரம்ம ஸமாஜ் தீவிரவாதி கேசப் சந்திர சென், ஆங்கிலக் கல்வியாளர்கள் டேவிட் ஹேர் மற்றும் ஜான் பெதூன் உள்ளிட்ட புகழ் பெற்ற வரலாற்று ஆளுமைகள் பாத்திடங்களாக உலாவி சரித்திரத்தின் ஒரு முக்கிய காலகட்டத்தை உயிர்ப்பிக்கிறார்கள். தேஷ் பத்திரிக்கையில் இரண்டரையாண்டு காலம் தொடராய் வெளிவந்த இக்கதையில் பகுத்தறிவு, பகுப்பாய்வு மற்றும் சார்பற்ற குரலின் கலவையில் கதையின் பரந்த கேன்வாஸில் உண்மையும், கற்பனையும் நேர்த்தியாய் பிணையப்பட்டுள்ளன. குறிப்பாய், இக்கதையில் பாத்திரங்களின் மீதான அழுத்தம் எழுதப்படும் காலகட்டத்தை முன்னிலைப்படுத்துகிறது, எதிர்புறமாய் அல்ல, எனினும் புத்தகத்தின் முடிவுரையில் சுனில் வலியுறுத்துகிறார் ” சேய் சமய் ஒரு புதினம் – சரித்திர ஆவணம் அல்ல….புனைவாசிரியர், சரித்திர உண்மைகளைச் சித்தரிக்கையில் கூட கற்பனையின் வெளிச்சத்தை அவற்றின் மேல் காட்ட வேண்டும், “வரலாறு மற்றும் செவிவழிச் செய்தி, உண்மை மற்றும் கற்பனை, ஆதாரச் சான்று மற்றும் கருத்து இவற்றை [சேய் சமய்} ஒத்த இயல்புடன் தன்னுள் கொண்டு வருகிறது. [இது} வங்காள மொழி புனைவிலக்கியத்துக்கு அண்மைக் காலத்தில் மிக முக்கிய பங்களிப்பு” என்கிறார் கல்வியாளர் ஜகன்னாத் சக்ரவத்தி.
இப்புத்தகம் 1985ல் சாஹித்ய அகடமி பரிசு பெற்றது.

ப்ரொதொம் அலோ
விருதும், விமரிசன ரீதியில் பாராட்டும் பெற்ற சேய் சமய் (அந்த நாட்கள்) யின் தொடர்ச்சியான ப்ரொதொம் அலொ (First Light என ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது) வின் முதல் பதிப்பு 2001ல் வெளிவந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பழைய இந்தியாவும் இளைய இந்தியாவும் அவரவர் இடத்துக்காகப் போட்டி போடும் ஒரு வங்காளத்தின் பின்புலத்தில் நடக்கும் ஒரு அற்புதமான கதை. இதன் பல பாத்திரங்களில் முக்கியமானவர்கள் கனவுகளைச் சுமந்த ஒரு இளம் கவிஞனும், தன் கலைக்கும், தெய்வீகமான தன் அண்ணி காதம்பரி தேவி மேலான அன்புக்கும் இடையே பிளவுபட்டவனுமான ரோபி என்கிற ரபீந்திர நாத் தாகூர் மற்றும் பின்னாளில் சுவாமி விவேகானந்தா என அறியப்பட்ட அழகும், ஆற்றலும் உள்ள நரேன் தத்தா. ப்ரொதொம் அலொ அளவில் பிரும்மாண்டமும், வெடிக்கும் உரைநடை ஆற்றலும் உள்ள புத்தகம். உறக்க நிலையில் இருந்து கொண்டு மெதுவாக மாறும் கிராமப்புறங்களிலிருந்து, நாகரீகமானவையும், அருவருப்பூட்டுபவையும் ஒருங்கே வாழும் சலசலப்பான கல்கத்தா வரையிலான வங்காளத்தின் நிறைவான, விரிவான உருவப்படம். அதே நேரம் அது ஒரு புது, நவீன உணர்வறி திறனுக்கு விழிக்கும் ஒரு மொத்த தேசத்தின் தொடர் வரலாறு.

நிஷங்கோ சம்ராட் (The lonely Monarch)
2005 ல் பதிப்பிக்கப்பட்ட நிஷங்கோ சம்ராட் இந்தியாவின் தலை சிறந்த தொழில்முறை நாடகக் கலைஞர் சிசிர் பாதுரியின் வாழ்வைச் சுற்றி நடக்கும் கதை. அவர் சக கலைஞர்களால் நேசிக்கப்பட்டவர், மதிக்கப்பட்டவர்,, பார்வையாளர்களால் போற்றப்பட்டவர், ரபீந்திரநாத் தாகூராலேயே தலைவன் என அங்கீகரிக்கப்பட்டவர். எனினும் சிசிர்குமார், கேளிக்கை என்ற பெயரில் நடக்கும் உரத்த கூத்துகளிலிருந்து தன் பார்வையாளர்களை அகற்றி மேடை நாடகத்தை பரிணமித்து அனுபவிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே கனவுக்குத் தன்னை உணர்ச்சிபூர்வமாய் அர்ப்பணித்தவராயிருந்தார். 1924ல் கல்கத்தாவின் துடிப்பான வங்காள நாடக உலகத்தில் நடக்கும் இந்தக் கடுமையான புதினம், மேற்கத்திய ஆதிக்கத்திலிருந்தும், சாதாரணத்துவத்திலிருந்தும் மேடையை விடுவிக்க சிசிர்குமார் செய்த அயராத முயற்சியை உயிர்ப்பிக்கிறது; அசிரத்தையான புரவலர்கள், பிடிவாதமான. பார்வையாளர்கள் மேல் அவரது விரக்தியும், ஏமாற்றமும்; அவருடைய அழிவுக்குக் காரணமாய் இருந்த மதுப் பழக்கம்; நெருங்கிய நண்பர்கள் மற்றும் அவருடைய வாழ்வில் இருந்த பெண்களிடமிருந்து அவரை அன்னியப்படுத்திய அவருடைய இலட்சியங்கள். சுனில் கங்கோபாத்யாய் ஈடற்ற இலக்கியக் கலை நுட்பத்துடன் அந்த மாமனிதனின் குழப்பமான வாழ்வையும் இந்திய நாடகக்கலை வரலாற்றில் ஒரு சரித்திர காலகட்டத்தையும் ஆவணப்படுத்தி., படைப்பாளியின் ஆன்மாவின் வலிமைக்கும், மீட்டெழுச்சித் திறனுக்கும் ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகிறார்.

கமல் தாஸ்
கமல் தாஸ் த்வமஸி மோமோ (1983), அம்ரிதம் பிபதி உள்ளிட்ட 6 புதினங்களையும், ஜானா அஜானா, உத்தரே மேரு தக்ஷினே பன் மற்றும் கேக், சாகோலேட் ஆர் ரூப்கதா என்ற 3 அறிவுசார் பயணக் கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார், அவருடைய பரந்த பயணங்கள் அவருக்கு ஆழ்ந்த உள்நோக்கையும், புரிதலையும் அளித்துள்ளன. இதனால், பயணக் கட்டுரைகளுக்கும் மேலாய், இவை சம்பவங்கள் மற்றும் விவரணைகளின் மூலம், கூரறிவுடனும் நயத்துடனும் சொல்லப்படும் அனுபவங்கள் மற்றும் ஆழ்ந்த உணர்வுகளின் வெளிப்பாடு.

அம்ரித்ஸ்ய புத்ரி
அம்ரித்ஸ்ய புத்ரி கமல் தாஸின் முதல் புதினம். இது ஒடியாவிலும், ஆங்கிலத்தில் “Daughter of Immortality” என்ற தலைப்பிலும், மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவரது தந்தை நீதியரசராய் இருந்த கிராமப்புற மாவட்டங்களிலும், பின்னாளில் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் சக எழுத்தாளருமான கணவர் தேபேஷ் தாஸுடன் வாழ்ந்த தில்லி வாழ்க்கையிலும் கிடைத்த அனுபவங்களில் வளப்படுத்தப்பட்டு எழுதிய இப்புத்தகம் வேர்களைக் கண்டறிய இயலாத அம்ரிதா என்ற பெண்ணின் வாழ்வைப் பற்றியது. இப்புத்தகத்தின் ராயல்டி தொகை ராமக்ருஷ்ணா மிஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கல்ச்சரால் இப்புத்தகத்தின் பெயரிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ள அறக்கொடை மூலம் இந்திய மாணவிகள் மற்றும் பல்கலைகழக ஆசிரியைகளுக்கு உதவியளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இப்புத்தகத்துக்கு 1982ல் சாஹித்ய அகடமி பரிசு வழங்கப்பட்டது
ஷிர்ஷேந்து முகோபாத்யாய் (1935)
பரோடாசரன், ஃபடிக், ஷபோர் தாஸ்குப்தா போன்ற சமீபத்திய புனைவுத் துப்பறிவாளர்களைப் படைத்த புகழ் பெற்ற வங்காள எழுத்தாளர் ஷிர்ஷேந்து முகோபாத்யாய். அவரது படைப்புகளினூடே ஒரு ஆழமான ஆன்மீகம் இழையோடுவதைக் காணலாம். அவை கதையின் ஓட்டத்தைத் தடுக்காமல் அதற்கு ஒரு ஆழத்தைக் கொடுக்கின்றன. தன் குரு அனுகூல்சந்த்ராவின் தாக்கம்தான் இதற்குக் காரணம் என்கிறார் முகோபாத்யாய். 1970ல் குழந்தைகள் இலக்கிய உலகத்துள் நுழைந்து முகோபாத்யாய் எழுதிய மனோஜ்டேர் அத்புத் பாரி என்ற புதினம் உடனடி வெற்றி பெற்றது. முகோபாத்யாய் கிட்டத்தட்ட 100 புத்தகங்கள் வயது வந்த வாசகர்களுக்கும், 34 புத்தகங்கள் பதின்ம வயதினருக்கும் எழுதியுள்ளார்.

மானப்ஜமீன்
நவீன காவியம் என குறிப்பிடப்படும் மானப்ஜமீன் 1989ல் சாஹித்ய அகடமி விருதை வென்றது. இக்கதையின் மையப் பாத்திரம் தீப்நாத், கதை அவருடைய சகோதர சகோதரிகளின் குடும்பத்தில் நடப்பவை, அவற்றில் அவரது உணர்ச்சிபூர்வமான ஈடுபாடு, அவற்றின் பிரதிபலிப்பாய் அவரது எதிர்வினைகள் ஆகியவற்றால் பின்னப்பட்டது. நகர்ப்புற இந்திய நடுத்தர வர்க்க வாழ்வின் விடிவில்லாத சோகம் மற்றும் அதன் விஸ்தீரணத்தின் தெளிவான வரம்புகள் இவற்றின் மிகத் தெளிவாகக் காட்டுகிறது இக்கதை. இதில் உள்ள ஒரு தீவிரம் இவ்வகையைச் சேர்ந்த பிற படைப்புகளிலிருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகிறது. இது ஒரு உணர்ச்சிபூர்வமான நடையில் எழுதப்பட்டுள்ளது, கதையின் ஒவ்வொரு பாத்திரமும் ஒரே அளவு புத்திசாலியாகவும், சில நேரங்களில் அவர்களது வெளிப்பாட்டில் மிகுந்த அறிவுக்கூர்மையுடனும் இருப்பது முழுக் கதையும் ஒரே சுருதிக்கு விசை கொடுக்கப்பட்டது போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. புதினத்தின் மையப் பாத்திரம், மானுடச் சூழலைப் பற்றி கதாசிரியரின் பார்வையிலிருந்து பேசுவது போன்ற எண்ணம் கூட தோன்றலாம்.

கூன்போகா (மரவண்டு)
1967ல் பதிக்கப்பட்ட கூன்போகா, ஷிர்ஷேந்து முகோபாத்யாயின் முதல் நவீனம். தலைசிறந்த இருத்தலியல் நவீனமாகக் கருதப்படுகிறது. இது தேஷ் பத்திரிக்கை, துர்க்கா பூஜா சமயத்தில் கொணரும் சிறப்பு வெளியீட்டில் வெளிவந்தது. ஆங்கிலம் உட்பட்ட 14 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
வங்காள இலக்கியத்தில் பெருமதிப்பு பெற்றன என்று கருதப்படுவனவற்றின் தகுதி குறித்த கேள்விகள் எழத் தொடங்கியபோது, அந்தச் சிக்கலை ஆராய்ந்த வசீகரமான, அரிய புனைவு இது.
கதையின் தொடக்கத்தில், நாயகன் ஷ்யாம் சக்ரபொர்த்தி, பெயர் பெற்ற ஒரு நிறுவனத்தில் உயர்ந்த பதவி கிட்டவிருக்கும் நிலையில் இருப்பவர், கோபம் கொண்ட ஒரு மேலதிகாரி உபயோகித்த வசவின் காரணமாய், பாதுகாப்பும், நிறைய ஊதியமும் தரும் சொகுசான தன் வேலையை விட்டு விலகுகிறார். கட்டுப்பாடு, மிகுந்த தன்னம்பிக்கை, ஒரு துளி பெருமிதம், தன் வெளித் தோற்றத்தின் மீது செலுத்தும் தீவிர அக்கறை இவற்றோடு, வெளி உலகின் அலைக்கழிப்புகள் தொடமுடியாத ஒரு கூட்டுக்குள்ளான வாழ்க்கை என்று பழகியிருந்த அவர், வேலை இழப்புக்குப் பின் வாழ்க்கை நிலை அத்தனை ஆழமாக வேறுபடுவதால், சில நாட்களிலேயே முற்றிலும் வேறு மனிதராக மாறுகிறார். பரபரப்பான பெருநகரமான கல்கத்தாவினூடே அலைந்து திரியும்போது, தளராத ஊக்கத்தோடு இயங்கும் அவரது சுபாவத்தின் இடத்தில், மிகுந்த தேக்கமும். மனச்சோர்வும், நகர்சார்ந்த அன்னியமாதலும் உருவாகி அவரைத் தன் சாரமான இயல்பிலிருந்து விலக்குகின்றன – காஃப்கா, காமு போன்றாரின் மொத்தப் படைப்புகளின் மையக் காரணமாக இருந்த வாழ்வின் வெறுமையையும், அர்த்தமின்மையின் பேரழுத்தத்தையும் நாம் ஸ்பரிசிக்கக் கூடிய விதமாக எழுப்புகிற நாவல் இது,

பிரபல வங்காள எழுத்தாளரும், விமரிசகருமான நபனிதா தேவ் சென் இப்புத்தகத்தின் மதிப்பீட்டில் கூறும் கருத்து:
“ஷிர்ஷேந்துவின் கதாநாயகன் சுத்திகரிப்பு, தெய்வீக அருள், மறுபிறப்பு ஆகியவற்றில் நம்பிக்கை உள்ளவர். மரணம் அவருக்கு முடிவு அல்ல, ஒரு புதிய தொடக்கம். இது இழந்த மதிப்புகளை மீண்டும் உறுதிப்படுத்தும் கதை, அப்பாவித்தனம் மற்றும் நிரந்தர உண்மையின் தேடல். கிழக்கத்திய தத்துவத்தில் வேரூன்றி, தன்னை மறுவரையறை செய்வதிலும், அழியாத அண்ட சக்தியுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்துவதிலும், ஷ்யாம் (அல்பேர் காம்யுவின் கதா நாயகனான) மெர்ஸோலிடமிருந்து வெகு தூரத்திலிருக்கிறார்.”
சமரேஷ் மஜும்தார் (1944)

சமரேஷ் மஜும்தார் பல்வகைப் படைப்பாளி எனினும் அவருடைய பல புதினங்களில் சிறிய அளவில் ஒரு சிலிர்ப்பும் மர்மமும் காணப்படும் – உதாரணமாய் ஆத் குதூரி நோய் தராஜா, பாந்தினிபாஷ், தேபத்தா, புனோ ஹான்ஷெர் பாலக். அவருடைய முதல் புதினமான தௌர் 1976 ல் பதிக்கப்பபட்டது. பலவகை இலக்கியத் துறைகளில் எழுதக்கூடிய திறன் கொண்ட மஜும்தார், சிறுகதைகள்., புதினங்கள், பயணக் கட்டுரைகள், சிறுவர்களுக்கான புனைவு என பல துறைகளில் சிறந்து விளங்குகிறார். அவர் அறுபதுக்கும் மேற்பட்ட புதினங்களும், 150 குழந்தைகளுக்கான புனைவுகளும் எழுதியுள்ளார். சாத் காஹோன், தேரோ பார்போன், உஜான் கங்கா ஸ்வப்னேர் பஜார், கோலிகதாய் நோபோகுமார் போன்ற குறிப்பிடத்தக்க புதினங்களை எழுதியிருக்கிறார். நான்கு புத்தகங்களடங்கிய உத்தரோதிகார் தொகுதி, சாஹித்ய அகதமி பரிசு பெற்ற கால்பேலா, மற்றும் கால்புருஷ், மோஷல்கால் ஆகியவை தரமான நவீன படைப்புகளாய் தற்போது கருதப்படுகின்றன. இவரது பல புத்தகங்கள் திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன. தூஆர்ஸின் தேயிலைத் தோட்டங்களிலிருந்து, கான்க்ரீட் காடான நகர வாழ்வின் மையம் வரை, வேறுபட்ட நிறபேதங்களும், ஆழமும் கொண்ட இவருடைய பாத்திரங்களும், கதைகளும் வாசகர்களின் மனதில் ஒரு சிறப்பான இடத்தை வென்றுள்ளன.

கால்பேலா
அனிமேஷ் க்வார்டெட் என்ற நான்கு புத்தகங்களடங்கிய தொகுதியின் ஒரு பகுதி கால்பேலா. இந்தத் தொடர்களின் முக்கிய பாத்திரம் அனிமேஷ் மித்ரா. இவரும் மஜும்தாரைப் போலவே வங்காளத்தின் வடபகுதியில் அமைந்துள்ள தூஆர்ஸ் பகுதியின் தேயிலைத் தோட்டங்களில் வளர்ந்து பின்னர் 1960களில் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் படிப்பதற்காக கொல்கத்தாவுக்கு இடம் பெயர்கிறார். பின்பு அனிமேஷ் 60களிலும் 70களிலும் மேற்கு வங்காளத்தை உலுக்கிய நக்ஸலைட் புரட்சியில் அமிழ்கிறார். கதையின் நாயகனின் பாத்திரப் படைப்பின் மூலம் மஜும்தார் சுதந்திரத்துக்கு பின்னான மேற்கு வங்காளத்தின் கொந்தளிப்பான அரசியல் சரித்திரத்தைச் சித்தரிக்கிறார். 1981- 1982ல் கால்பேலா மதிப்புவாய்ந்த தேஷ் இதழில் தொடராய் வெளியானது. 2003ல் இயக்குனர் கௌதம் கோஸ் இதை திரைப்படமாக்கினார். 1984ல் இப்புத்தகத்துக்காக அவருக்கு சாஹித்ய அகடமி பரிசு கிடைத்தது.
“பல்வேறு தளங்களில் உள்ள உறவுகளின் வடிவமைப்பிலும் அவற்றின் மூலம் அர்த்தத்தைத் தேடுவதிலும் இப்படைப்பின் வலிமையைக் காணலாம்…[இது] காதல் மற்றும் உணர்தலைப் பற்றிய புதினம் – வாழ்வின் மீதான காதல் மற்றும் இந்த வாழ்க்கை நிலைத்த தேடுதலுக்குட்படுத்தக்கூடியது என்ற உணர்தல்.” என்கிறார் கல்வியாளர் அமரேஷ் தத்தா.

கால்புருஷ்
பிரசித்தி பெற்ற அனிமேஷ் தொகுதியின் இறுதிப் புத்தகமான கால்புருஷ் 1985ல் பதிப்பிக்கப்ப்பட்டது. இது சமரேஷ் மஜும்தாரின் மிகச் சிறந்த படைப்பாகவும், நவீன வங்காள மொழி இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாகவும் கருதப்படுகிறது. கால்பேலாவின் தொடர்ச்சியான இந்த விறுவிறுப்பான புதினம் அனிமேஷ் மற்றும் மாதபிலதாவின் மகனான ஆர்கோ, தன் பெற்றோர்களின் இலட்சியவாதத்தையும், அவன் வாழ்வின் அங்கமாகிவிட்ட வேதனை தரும் நுகர்வோர் கலாச்சார சக்திகளையும் சமன் செய்ய முயல்கையில் அடையும் மனக்குழப்பத்தை ஆராய்கிறது.

அர்ஜுன் தொடர்
சமரேஷ் மஜும்தார் உருவாக்கிய அர்ஜுன் என்கிற இளைஞன் மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரி மாகாணத்தைச் சேர்ந்த ஒரு சாகசமான துப்பறியும் ஹீரோ. ஓய்வு பெற்ற போலீஸ்காரரான அமல் ஷோம், அர்ஜுனின் வழிகாட்டி, அவர் அவனது உண்மையான பணி என்ன என்பதை அவனுக்குப் புரியவைக்கிறார். பல குற்றங்களை அர்ஜுனே தீர்த்த போதிலும், அவன் பெரும்பாலும் ஷோமுடைய உதவியாளனாகத்தான் பணி புரிகிறான். ஏற்கனவே முதிர்ச்சியுள்ள வயது வந்த துப்பறிவாளர்கள் போலன்றி, தொடரின் விரிவோடு அர்ஜுனுக்கும் முதிர்ச்சி வருகிறது. சமரேஷ் மஜும்தார் தன் புதினங்களின் பின்புலமாக உபயோகிக்கும் வங்காளத்தின் வடக்குப் பகுதியின் மனம் கவரும் நிலப்பகுதியிலேயே இளம் துப்பறிவாளன் அர்ஜூனைக் காட்டுகிறார். இது நகர வாழ்வை மையமாகக் கொண்ட பெரும்பாலான எழுத்துகளில் இல்லாத ஒருவிதமான வசீகரத்தை அவருடைய புலனாய்வுப் புனைவுகளுக்கு அளிக்கிறது. அர்ஜுனைப் பற்றிய முதல் வங்காளத் திரைப்படம் கலிம்போங்க் ஏ சீதாஹரன். அர்ஜுன் தொகுதியில் பல குறிப்பிடத்தக்க புத்தகங்கள் உள்ளன.
One Reply to “வங்க இலக்கியங்கள்”