வங்காள வரலாறு

This entry is part 11 of 13 in the series வங்கம்

காலம் என்பதை சக்கரமாக மெய்ஞானமும், விஞ்ஞானமும் உருவகிக்கின்றன. நிகழ் காலத்தில் எதிர் கால விசையும், கடந்த காலத்தின் ஓசையும் இருக்கிறது என்றே தோன்றுகிறது. காலம் சில நேரங்களில் நிலையான ஒன்றாகவும், இயக்கம் அதன் மீது நிகழ்த்தும் மாயா விளையாட்டில் மூன்றாகக் காட்சி மயக்கம் கொள்வதாகவும் கூட எண்ணங்கள் ஏற்படுகின்றன. மூன்று என்பது இந்து தத்துவத்தின் படி அன்னையின் சக்தி, சிவனின் திரிசூலம். தமிழும் முத்தமிழ் அல்லவா? இக்கட்டுரை தத்துவத்தைப் பேசப் போவதில்லை. வரலாற்றைப் பேசப் போகிறது.

உலகில் பொதுவாக ஆங்கில ஆண்டினைக் குறிப்பிட்டு செயலாற்றுகிறோம். ஆயினும் அந்தந்த நாட்டின், பிரதேசத்தின் படி ஆண்டினைக் குறிப்பிடும் வழக்கமும் உள்ளது. தமிழில் திருவள்ளுவர் ஆண்டெனச் சொல்கிறோம். அதைப் போல வங்காளத்திலும் குறிப்பிடும் வழக்கம் உள்ளது. இதில் போற்றுதலுக்குரிய செய்தி என்னவென்றால், அவர்கள் தாங்கள் வெளியிடும் பல நூல்களில் வங்காள ஆண்டினைக் குறிப்பிட்டு வெளியிடுகிறார்கள் என்பது; ஒரு சிறு விஷயம், காலம் காலமாகப் பின்பற்றப்பட்டுத் தொடரப்படுகிறது என்பது சிறப்பு.

வங்காள சகாப்தம் என்பது பொது சகாப்தத்தை விட 593 ஆண்டுகள் பின்னே வருகிறது. எடுத்துக்காட்டாக 2021 என்பது வங்காள ஆண்டு 1428 என வரும். இதில் புத்தகத்தில் சுருக்கித் தரப்பட்ட வ ச (வங்காள சகாப்தம்) அப்படியே தருகிறோம்; பொது வருடத்தை அடைப்புக் குறிக்குள் சுட்டியுள்ளோம்.

வரிசை முறை

பொது சகாப்தத்திற்கு முன்பு (பொ ச மு) 1600-1400 மேற்கு வங்காளத்தில். வர்த்தமானில் நிகழ்த்திய தொல் பொருள் ஆய்வு அங்கே மனிதர்கள் வசித்ததை சான்றுடன் காட்டியது. பாண்டு ராஜ திபி(Pandu Rajar Dhibi) என்றழைக்கப்படும் இந்த இடத்தில் நிகழ்ந்த முதல் ஆய்வு, செப்புக் காலத்தைச் சேர்ந்தது என சொல்லப்படுகிறது.

பொ ச மு 1400-900  மேற்குறிப்பிட்ட நிர்வாகத்தில் செம்பு பயன்பாடு செழுமையும் செம்மையுமுற்றது.

பொ ச மு 900-700 இரும்புக் காலம். மங்கள்கோட், வர்த்தமான்

பொ ச மு ஏழு-ஆறாம் நூற்றாண்டுகள்- பிற்காலத்திய வேத நூல்களில், வங்கம் அசுத்தமான தேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொ ச மு ஐந்தாம் நூற்றாண்டு பங்களா தேஷ், நர்சிங்க்டியில் (Narsingdi) நகரக் கட்டமைப்புகள். புராதனக் கோட்டை.

பொ ச மு நான்காம் நூற்றாண்டு-  பொது சகாப்தம் இரண்டாம் நூற்றாண்டு- கிரேக்க ரோமானியர்கள் தெற்கு வங்காளத்தில் உள்ள கங்காரிதை (Gangaridai) என்ற வளமிக்க நகரைக் குறிப்பிடுகிறார்கள். இதே சொல்லை இவ்விடத்தைச் சார்ந்த மனிதர்களையும் குறிப்பிடப் பயன்படுத்துகிறார்கள்.

பொ ச மு நான்காம் நூற்றாண்டு-பொ ச ஆறாம் நூற்றாண்டு 24 பர்கானாசிலிள்ள சந்த்ரகேதுகர் (Chandraketugarh) என்ற துறைமுக நகரம். இங்கே பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன. 2300 ஆண்டுகள் பழமையான சுடுமண் சிற்பங்கள் அகழ்வாய்வில் வெளி வந்து உலகெங்கும் பயணப்பட்டிருக்கின்றன. அந்தச் சிற்பங்களில் கலை நயத்துடன் ஆடை, ஆபரணங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. உள்ளூர்வாசிகள் சந்திரகேது என்பவர் அரசு செய்தார் என்றுதான் இன்று வரை சொல்கிறார்கள்.

பொ ச மு மூன்றாம் நூற்றாண்டு மௌரியப் பேரரசுடன் வடக்கு வங்காளத்தின் சில பகுதிகள் இணைக்கப்பட்டன. வங்காள தேசத்திலுள்ள போக்ரா, மஹாஸ்தானில் (Bogra, Mahastan) உள்ள கல்வெட்டில் மௌரிய –ப்ராம்மி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

Yakshi Holding a Crowned Child with a Visiting Parrot (1st century B.C.E.)

பொ ச நான்கு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டு- குப்தப் பேரரசுடன், வடக்கு மற்றும் மேற்கு வங்காளத்தின் பல பகுதிகள் இணைக்கப்பட்டன. பிராமணர்களுக்கும், புத்த நிறுவனங்களுக்கும் வரியற்ற நிலங்கள் வழங்கப்பட்டன. வணிக வர்த்தகத் துறைமுகமாக தாம்ரலிப்தா(Tamralipta) செழிப்புற்றது. மகாபாரதத்தில் பீமன் இந்த நகரை அடைந்த்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆறாம் நூற்றாண்டு- தெற்கிலும் கிழக்கிலுமான சுதந்திர அரசை கோப சந்திரா நிறுவினார்.

ஏழாம் நூற்றாண்டு- முதன்மையான, பலம் பொருந்திய, சுதந்திரரான சஷாங்கா, வடக்கு, மேற்கு வங்காளத்தில் தன் அரசை நிறுவினார். சூவான் ஜாங்க் (Xuan Zang) என்ற சீன அறிஞர் கிழக்கு வங்காளத்தைப் பற்றி பதிவு செய்துள்ளார். தாம்ரலிப்தி பௌத்த அறிதல் மையமாகவும், வணிக நகராகவும்  தொடர்ந்து பொலிந்து வந்தது. கார்க (Kharga) வம்ச வழியினர், கிழக்கு, தெற்கு வங்காளத்தை ஆண்டனர்.

750-1144  பாலா (Pala) வம்சத்து  அரசினர்  பல  காலம்  வங்காளத்தை ஆண்டனர். தர்மபாலா (770-810), தேவபாலா (810-850) ஆண்ட  கால கட்டத்தில் அவர்களின் ஆட்சிப்பகுதி  மேற்கில்  மைய  கங்கை  பள்ளத்தாக்கிலிருந்து   கிழக்கில் அஸ்ஸாம்  வரை  விரிந்தது.  மஹாயான  பௌத்தம்,  தாந்திரிகத்தை  நோக்கி நகர்ந்தது.  தர்மபாலா,  பகர்பூரில் (Paharpur)  சோமபுரா  மஹாவிஹாரைக்  கட்டினார். வங்காள தேசத்தில்,  ராஜ்ஷாஹி (Rajshahi)  என்ற  இடத்திலும்  இந்த மஹாவிஹாரைக்  கட்டியவர்  இவரே.  வடக்கு  வங்காளத்தில்    ‘கைவர்த்தா புரட்சியை’  (Kaivarta Revolt)  இராம்பாலா  ஒடுக்கினார்.

9-11 ஆம் நூற்றாண்டு- சந்திர வம்ச அரசினர் கிழக்கு மற்றும் தெற்கு வங்காளத்தை ஆண்டனர். 11-ஆம் நூற்றாண்டில் அதிஷா திகம்பர ஸ்ரீஞானா (Atisha Dipankara Shrigyana) பௌத்தத்தைப் பரப்ப திபெத்திற்குச் சென்றார்.

Manjuvajra Mandala (Manjushri, the Bodhisattva of Transcendent Wisdom) 11th century

9-12 நூற்றாண்டு- வங்காள இலக்கியத்தின் முந்தையப் படைப்பான ‘சார்யபதங்களுக்கு’ (Charyapadams) குறியீடுகள் ஏற்படுத்தப்பட்டன.

11-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதி- 12-ஆம் இரண்டாம் பகுதி கிழக்கு வங்காளத்தை வர்ம (Varman) அரசினர் ஆண்டனர்.

1095-1230 வங்காளத்தின் பெரும் பகுதியை சேனா (Sena) வம்சத்தினர் ஆண்டனர். பிரதேச சட்ட நூல்களை வரைமுறைகள் செய்து பிராமணர்கள், சமூக நிலைப்படிகளில் தங்களை நிறுவிக் கொண்டார்கள். ஜெயதேவர் 12-ஆம் நூற்றாண்டில், உலகப் புகழ் பெற்ற ‘கீத கோவிந்தம்’ எழுதினார்.

1202- தென் மேற்கு மற்றும் மத்திய வங்காளத்தில், முதல் முஸ்லீம் அரசை இக்தியரூதீன் முகம்மது பக்தியார் கியால்ஜி (Ikthiyaruddin Muhammad Bakhtiyar Khalji) நிறுவினர்.

1226-1291 வங்காளத்தின் பெரும் பகுதியை ஆளுநர்களைக் கொண்டு தில்லி சுல்தான்கள் ஆட்சி செய்தனர். தென்கிழக்கு வங்காளத்தையும், திரிபுராவையும் தேவ வம்ச அரசர்கள் ஆண்டனர்.

1291-1338 ஆளுநர்கள் தில்லியின் கட்டுப்பாட்டிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். கியாசுதீன் துக்ளக் (Ghiayasuddin Tughluq) தில்லியின் அரசியல் அதிகாரத்தை மீண்டும் நிலை நிறுத்தினார் (1325). நிர்வாகத்திற்காக, கிழக்கு, மேற்கு, வடக்கு என்று வங்காளம்  பிரிக்கப்பட்டு மூன்று ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். மாணிக்யா அரச வம்சம் திரிபுராவை ஆளத் தொடங்கியது.(1300)

1342-1414 வங்காளத்தில் சுதந்திர இலியாஸ் ஷாஹி (Iliyas Shahi) வம்ச சுல்தான்களின் ஆட்சி தொடங்கியது. சூஃபி ஞானி ஹஸ்ரத் ஷா ஜலால் (Hazrat Shah Jalal) அவர்களை சந்திக்க பதூதா வங்காள தேசத்தில் உள்ள சில்ஹெட்டிற்கு(Sylhet) வந்தார்.(1346). சிக்கந்தர் ஷாவின் (1358-1390) ஆட்சியில் மேற்கு வங்காளத்தின் மால்தாவில் அதீனா மசூதி கட்டப்பட்டது.

1414-1437 வங்காளத்தை ராஜா கணேஷூம் அவரது வம்சத்தினரும் ஆண்டனர்.

1437-1487 சுதந்திர வங்காள சுல்தான்களான முகம்மது ஷாஹி அரச வழியினர் ஆண்டனர். தர்ம மாணிக்யாவின் ஆட்சி காலத்தில் ‘ராஜ்மாலா’ என்ற திரிபுராவின் அரச பரம்பரையின் வரிசை தொகுக்கப்படத் தொடங்கியது.(1431-1462)

1493-1538 சுதந்திர வங்காள சுல்தான் ஹுசைன் ஷாஹி வம்சத்தினரின் ஆட்சி தொடங்கியது. அலாவுதீன் ஹுசைன் ஷாவின் ஆட்சியின் நிலப்பரப்பாக மேற்கு அஸ்ஸாம், திரிபுரா, ஒரிஸ்ஸா, பீகாரின் சில பகுதிகள், மற்றும் முழு வங்காளம் இருந்தது. சம்ஸ்க்ருதத்தில் தேர்ந்த அறிவு மையமாக நவதீப் உருவாகியது. அன்பும், பக்தியுமான தன் தத்துவ அறிதல்களை வைணவ ஞானியான சைதன்ய தேவா (1486-1533) சொல்லத் தலைப்பட்டார். விஜய குப்தா, மாலாதர் பாசு, விப்ர தாஸ் ஆகியோரின் கவிதைகள் வங்காள இலக்கியத்தை செழுமைப்படுத்தின. சிட்டகாங், வங்காள தேசத்தில் வர்த்தக உரிமை பெற்று போர்த்துகீசியர்கள் வசிக்க ஆரம்பித்தனர். மாணிக்ய அரசர்களில் தலை சிறந்த தன்ய மாணிக்யா(1490-1514) திரிபுராவை ஆட்சி செய்தார்.

1539-1556 1539-ல் ஆப்கான் அரசர் ஷெர்ஷா வங்காளத்தை வென்று நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். அவரும், அவரது வழியினரும் 1556 வரை வங்காள அரசை ஆண்டார்கள்.

1564-1576  கராணி (Karrani) வம்சத்தினரின் ஆட்சி. முகலாயர்கள் வங்காளத்தை வென்றனர். (1576)

1576-1608  Baro Bhuiyans களின் எதிர்ப்பையும் மீறி முகம்மதியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வங்காளத்தை வைத்திருந்தனர். விடுதலைக்கு முன்னான பிரிவுபடாத கால கட்டத்தில், 1586-ல் முகல் சுபாஹ் (Mugal Subhah) பிரதேசமென சற்றேறக்குறைய வங்காள பூமி அறியப்பட்டது. 1608-ல் தாக்கா இதன் தலைநகரானது.

16-17ஆம் நூற்றாண்டுகள் வங்க நாட்டிலிருந்து உள் நாட்டிற்குள்ளும், அயல் தேசங்களுக்கும் அரிசி, பருத்தி, பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. கிழக்கு வங்காளத்தில் இஸ்லாமிய மதம் பரவலாகி வளர்ந்தது. வங்காளத்தின் பல பகுதிகளில் ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள், பிரெஞ்சுக் காரர்கள் தத்தமது வணிக நிறுவனங்களை ஏற்படுத்தினர். 1690-ல் கல்கத்தா நகரம் உருவானது. ரகுநந்தன் வங்காள இந்துக்களுக்கான மத, சமூகத் தடைகளை முன்மொழிந்தார். ‘சண்டி மங்கள் காவிய’த்தை முகுந்தராம் சக்ரவர்த்தி எழுதினார். அலோல் (Alaol) ‘பத்மாவதி’யை எழுதினார்.

1704  பின்னர் முஷிராபாத் என்றழைக்கப்பட்ட முக்சுதாபாத் (தாக்காவின் தலைநகர் அந்தஸ்தை நீக்கி) தலைநகரானது.

1717-1727 முகலாய வங்காளத்தின் ஆளுநரானார் முர்க்ஷித் க்யுலி கான். (Murshid Quli Khan). 1720 களில் வங்காளம் தன்னிச்சையான முகல் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

1740-1756 அலிவர்தி கான் (Alivardi Khan) வங்காள நவாப் ஆனார். (மராத்தியர்கள்) பார்கி (Bargi) தாக்குதல்கள் நடந்தன. ப்ளாசி(Plassey) போரில், நவாப் சிராஜித் தௌலாவை, ராபர்ட் க்ளைவ் தலைமையில், கிழக்கிந்திய கம்பெனி தோற்கடித்தது.

1764-1765  பக்ஸார் யுத்தத்தில் மீர் காசிமின் தோல்வியைத் தொடர்ந்து க்ளைவ் வங்காளத்தின் ஆளுநர் ஆனார். வங்காளம், பீஹார், ஒரிஸ்ஸா பிரதேசங்களில் வரி வசூல் செய்யும் உரிமையை (திவானி) பேரரசர் ஷா ஆலம் ஆங்கிலக் கம்பெனிக்குக் கொடுத்தார். பிரித்தானிய இந்தியா மற்றும் வங்காளத்தின் தலை நகராக கல்கத்தா ஆனது.

1760-1790  ஆங்கிலக் கம்பெனி திரிபுராவை வென்றது.(1761) ‘சன்யாசி ஃபகீர் கிளர்ச்சிகள்’- ‘சோர் புரட்சி’ (Choar Revolt) தென் மேற்கு வங்காளத்தின் காட்டுப் பகுதிகளில் ஏற்பட்டது.

1769  பஞ்சத்தினால் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இறந்தார்கள். இவர்கள் அப்போதைய வங்காள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் என கணிக்கப்படுகிறது.

1774- பவுல்(Baul) ஞானியும் கவிஞருமான லலன் ஃபகீர் பிறந்தார்.

1778  வங்க மொழி இலக்கணத்தை Nathaniel Brassey வெளியிட்டார்.

1782-1787  நில அதிர்வும், வெள்ளமும் பிரும்மபுத்ராவின் வழியை மாற்றின. வில்லியம் ஜோன்ஸ் வங்க ஆசிய சமூகக் குழுவை அமைத்தார்.

1793  நிரந்தரக் குடியிருப்பு என்ற பெயரில் புது வரி அமைப்பு, நிலத்தின் மீது விதிக்கப்பட்டது.

1800 ஃபோர்ட் வில்லியம் கல்லூரி கல்கத்தாவில் ஏற்பட்டது.

1817  இந்துக்களுக்கு ‘லிபரல் கல்வி’ அளிப்பதற்காக ‘இந்து கல்லூரி’ தொடங்கப்பட்டது.

1829 ‘சதி’ என்ற உடன் கட்டை ஏறும் வழக்கம் சட்டத்தால் தடை செய்யப்பட்டது.

1830-1860 ஃபரைசி (Faraizi) இயக்கம் போன்ற இஸ்லாமிய தூய்மைக் கிளர்ச்சிகள்  கிராமப் பகுதிகளில் ஏற்பட்டன. டைட்டுமீர் (Titumir) கிளர்ச்சி ஆங்கிலேயத் துருப்புகளால் அடக்கப்பட்டது(1831). 1830 களில் அரசு மொழியாக (‘பெர்சியன்’ இடத்தில்) ஆங்கிலம் அறிவிக்கப்பட்டது.

1843 பிரும்ம சமாஜை தேவேந்திர நாத் தாகூர் நிறுவினார்.

1850 ரயில் அமைப்புகள் வங்காளம் முழுதும் ஏற்பட்டன. தென் மேற்கில் காடுகளை ஆக்ரமித்த பிரித்தானிய துருப்புகளுக்கு எதிராக ‘சந்தால்’ இனத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்(1855-56). இந்து விதவைகள் மறுமணம் ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் முன்னெடுப்பால் சட்டபூர்வமாக்கப்பட்டது (1856).

1857 ‘சிப்பாய் கலகம்’ பெருமளவில் வங்கத்தில் தாக்கம் ஏற்படுத்தவில்லை. கல்கத்தா பல்கலை உருவானது.

1858 கிழக்கிந்திய கம்பெனியிலிருந்து பிரித்தானிய அரசுக்கு அதிகாரம் சென்றது.

1861-1883  சட்டமன்ற குழுக்களில் சிறுபான்மையில் இடம் பெறவும், உள்ளூர் நிர்வாக அமைப்புகளில் சிறிய அளவில் இடம் பெறவும் இந்தியர்கள் அனுமதிக்கப்பட்டனர். மிக்கேல் மதுசூதன் தத்தா,(Micheal Madusudan Datta) ‘மேக்னாபாத் காவ்யம்’ என்ற வெற்று வசன நூலை எழுதி வெளியிட்டார்(1861). பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா, வங்காளத்தின் முதல் வெற்றிகர நாவலான ‘துர்கேஷ் நந்தினி’யை எழுதினார் (1865). பிரித்தானிய அரசு அரசியல் முகவரை நியமித்தது(1871). அரசர் வீர்சந்திர மாணிக்யா(1837-1896) திரிபுராவில் நிர்வாக சீரமைப்புகளைக் கொண்டு வந்தார்.

Kali/ Tara 1885

1885 இந்திய தேசிய காங்கிரஸ் மும்பையில் தொடங்கப்பட்டது. உமேஷ் சந்திர பந்தோபாத்யாயா அதன் முதல் தலைவராக இருந்தார்.

1890  ‘பிஷாத் சிந்து’( bishad Sindhu) வை முஷராப் ஹுசைன் எழுதினார்.

1893 வங்காள மொழி மற்றும் அதன் இலக்கிய வளர்ச்சிக்காக ‘பங்கிய சாகித்ய பரிஷத்’ கல்கத்தாவில் தொடங்கப்பட்டது. சிகாகோவில் ஸ்வாமி விவேகானந்தர் மதங்களின் மா நாட்டில் உலகப் புகழ் பெற்ற உரையை நிகழ்த்தினார்.

1905-1911 வங்காளம் இரு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. கிழக்கு வங்காளம் அஸ்ஸாமுடன் இணைக்கப்பட்டு தனி மாநிலமாக, தாக்காவை தலை நகராகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பொருளாதார சுயச் சார்பிற்காக, தேச நிறுவனங்களை முன்னிறுத்தி வளர்ப்பதை வலியுறுத்தியும், பிரிவினையை எதிர்த்தும், சுதேசி இயக்கம் தொடங்கியது. தேசீயக் கல்வி அமைப்பினை ஏற்படுத்த ஜாதீய சிக்ஷா பரிஷத் வடிவமைக்கப்பட்டது(1905). Rokeya Sakhawat Hossain ‘சுல்தானின் கனவுகளை’ எழுதினார். ஜுகந்தர் (Jugantar) என்ற இரகசியப் புரட்சி அமைப்பு ஏற்பட்டது (1906). அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் அரவிந்த கோஷும் அவரது கூட்டாளிகளும் பிரித்தானியர்களுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டனர்(1908-09). ஆல் இந்தியா முஸ்லீம் லீக் தாக்காவில் தொடங்கப்பட்டது(1906). இந்து, முஸ்லீம் என அரசியல் வகைமைகள் உண்டாயின. பிரிவினை பின்வாங்கப்பட்டு, கல்கத்தாவிலிருந்து தில்லிக்கு தலைநகர் மாற்றப்பட்டது(1911).

1913 ரவீந்திர நாத் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1919  அபநிந்திரநாத் தாகூர் இந்தியச் சமூக கீழைப் பண்பாட்டுக் கலை மன்றத்தை நிறுவினார்.

1921 தாக்கா பல்கலைக்கழகம் உருவானது. மேற்கு வங்கத்தில் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் சாந்திநிகேதனில் எழுந்தது.

1923 சித்தரஞ்சன் தாஸின் சமரச முயற்சியினால் ஸ்வராஜ் தள், மற்றும் முஸ்லீம் தலைவர்கள் வங்காள உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். ‘கல்லோல்’ (Kallol) என்ற இலக்கிய இதழின் முதல் பிரதி வெளி வந்தது(1923-29)

1924-25  சத்யேந்திர நாத் பாசு (போஸ்), ஆல்பெர்ட் ஐன்ஸ்டெய்ன், போஸ்-ஐன்ஸ்டெய்ன் புள்ளியியல் இயற்பியலில் ஒரு திருப்பு முனை.

1926  ‘வங்காள மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலை சுநிதி குமார் சட்டோபத்யாயா எழுதினார்.

1930 பிரித்தானியர்களுக்கு எதிரான ஆயுதப் புரட்சியை முன்னெடுக்க  சூர்யா சென் தலைமையில் ‘சிட்டகாங் எழுச்சி’ பிறந்தது.

1937 மாகாணத் தேர்தல் நடந்தது. ஃபஸ்லுல் ஹக்(Fuzlul  Haq) வங்காளத்தின் பிரதமர் ஆனார். 25000 சணல் ஆலைத் தொழிலாளர்கள் 74 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

1943 பஞ்சத்தினால் கிட்டத்தட்ட நாற்பது இலட்சம் மனிதர்கள் உயிரிழந்தனர். இந்தக் கொடும் பஞ்ச அனுபவங்களை அடி நாதமாகக் கொண்டும், ஜெய்னுல் அபேதீன் வரைந்த பல சித்திரங்களை எடுத்துக்கொண்டும் ‘நாபன்னா’ என்ற நாடகத்தை இந்திய மக்கள் தியேட்டர் குழு நடத்தியது. சுபாஷ் சந்திர போஸ் ‘ஆசாத் ஹிந்த் பௌஜ்’ (இந்திய விடுதலை இராணுவம்) ஏற்படுத்தினார்.

1946 புதுத் தேர்தல் நடைபெற்றது. ஹூசேன் ஷாஹித் சுராவர்த்தியின் தலைமையில் முஸ்லீம் லீக் அமைச்சரவை அமைந்தது. கல்கத்தாவிலும், நவகாளியிலும் இந்து முஸ்லீம் கலவரங்கள் வெடித்தன.

1946-47 நில குத்தகையும், நிலமுமற்று, நிலத்தில் பாடுபடும் விவசாயிகளுக்கு விளைச்சலில் மூன்றில் இரண்டு பங்கு கேட்டு ‘தேபாகா’ இயக்கம் தொடங்கியது.

1947 இந்தியாவை பிளவு படுத்தி தனி ஆதிக்கத்தில் இந்திய, பாகிஸ்தானிய அரசுகள் உருவாயின. க்வாஜா நஜீமுதீன் தலைமையில், பாகிஸ்தானின் கிழக்கு மாகாணமாகிய கிழக்கு வங்காளத்தில் முஸ்லீம் லீக் அமைச்சரவை அமைத்தது. பிரபுல்ல சந்த்ர கோஷ் தலைமையில், குடியரசு இந்தியாவிலுள்ள மாநிலமான மேற்கு வங்காளத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் அமைச்சரவை ஏற்பட்டது.

1947-48 எட்டு இலட்சம் முஸ்லீம்கள், இந்தியாவிலிருந்து கிழக்கு வங்கத்திற்குக் குடி பெயர்ந்தனர்; பத்து இலட்சம் இந்துக்கள் கிழக்கு வங்கத்திலிருந்து மேற்கு வங்கத்திற்கும், திரிபுராவிற்கும் புலம் பெயர்ந்தனர். இன்று வரை எல்லை சார்ந்த புலம் பெயர்தல் நடை பெறுகிறது. வங்காள அகதிகளால் திரிபுராவின் உள் நாட்டுப் பழங்குடியினர் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகினர். விதான் சந்த்ர ராய் (Bidhan Chandra Ray) மேற்கு வங்கத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

1949 அரசர்கள் ஆண்ட கோக் பீஹார் மேற்கு வங்கத்துடன் இணைக்கப்பட்டது. திரிபுரா இந்தியாவுடன் இணைந்தது. தாக்காவில் மௌலானா அப்துல் ஹமீத் கான் பஸானி, அவாமி முஸ்லீம் லீக்கைத் தொடங்கினார். 1955-ல் இது அவாமி லீக் என்று பெயர் மாற்றமடைந்தது.

1950  கிழக்கு வங்காள அரசு, ‘நிலம் கையகப்படுத்துதல் மற்றும் குடக்கூலி (குத்தகை) சட்டம்’ கொண்டு வந்து, ஜமீன்தார்கள், நிரந்தரக் குடியிருப்பின் மூலம் முன்னர் பெற்றிருந்த நில உரிமைகளை இரத்து செய்தது. கல்கத்தா துறைமுகம், கிழக்கு வங்கத்திலிருந்து மூலப் பொருளான சணல் வராததால் தன் உள் துறைமுகப் பகுதிகளை இழந்தது. இதைச் சுற்றியிருந்த சணல் தொழில் ஆலைகள் மிகுந்த பாதிப்படைந்தன. கிழக்கிலும், மேற்கிலுமான இந்து- முஸ்லீம் கலவரங்களால் மேலும் இரண்டு இலட்சம் அகதிகள் கிழக்கு வங்காளத்திலிருந்து இடம் பெயர்ந்தனர். மேற்கு வங்காள டார்ஜீலிங்கில் பல்லாயிரக்கணக்கான திபெத்திய அகதிகள் குடி அமர்ந்தனர். மே.வ சித்தரஞ்சனில், ரயில் எஞ்சின் தொழிற்சாலை, உற்பத்தியைத் தொடங்கியது.

1951 மேற்கு வங்காளத்தில் இந்திய தொழில் நுட்பக் கழகம், காரக்பூரில் தொடங்கப்பட்டது. கிழக்கு வங்காளத்தில். 44 மில்லியன் மக்கள் வசித்தனர்; மே. வ 26.3 மில்லியன். 

1952 பாகிஸ்தானில் அரசு மொழியாக 1948-ல் உருது அறிவிக்கப்பட்டதிற்கு எதிராக எழுந்த குரல்களை மௌனிக்கச் செய்ய காவல் துறை சுட்டது பிப்ரவரி 21, 22ல் நடந்த கலவரமிது. 21 பிப்ரவரி ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டித்து தன் சிறை நண்பர்களுடன் இணைந்து தாக்காவில் ஒரு கேலி நாடகத்தை, முனீர் சௌத்ரி மேம்படுத்தப்பட்ட அரங்கில் நிகழ்த்தினார். முக்கியத் தொழில் மைய இடமாக துர்காபூரை மேற்கு வங்க.அரசு வளர்க்கத் தொடங்கியது. ஆதரவற்றோருக்கான முதல் சேவை மையத்தை அன்னை தெரசா தொடங்கினார்.

1954 கிழக்கு வங்க மாகாணத் தேர்தல்; அவாமி லீக் ஐக்கிய முன்னணி, முஸ்லீம் லீக்கை வென்றது. ஷேக் முஜிபுர் ரஹ்மான் இளைய அமைச்சரவை உறுப்பினர் ஆனார்.

1955 கிழக்கு வங்காளம், கிழக்கு பாகிஸ்தான் என்று பெயரிடப்பட்டது. வங்காள தேசத்தின் நாராயண கஞ்சில் ஆதாம்ஜீ சணல் ஆலை உற்பத்தியைத் தொடங்கியது. கிராமப்புற வளர்ச்சிக்காக தாக்காவில் ‘பங்களா அகெதெமியும்’, கமீலாவில்(Comila) ‘பாகிஸ்தான் அகெதெமியும்’ தொடங்கப்பட்டன. சத்யஜித் ரே இயக்கிய ‘பதேர் பாஞ்சாலி’ கல்கத்தாவில் திரையிடப்பட்டது. 

1956 பெங்காலி பாகிஸ்தானின் அரசு மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. திரிபுரா இந்திய யூனியன் பிரதேசமானது.

1961  வங்காள தேசத்தின்  சிட்டகாங் மலைத் தொடர்களில் வசித்த உள்ளூர் மனிதர்கள் பலர், Kaptai நீர்மின்சக்தித் திட்டம் நிறைவேற்றப்பட்டதால் புலம் பெயரும் துன்பத்தைச் சந்திக்க நேர்ந்தது. மேற்கு வங்காள கூர்க்கா மலைகளில் நேபாலி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.

1964 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளந்தது- ஒன்று சோவியத் ருஷ்யாவை இணக்கமாகக் கொண்ட சி பி ஐ; மற்றொன்று சீனாவை இணக்கமாகக் கொண்ட சி பி ஐ (மார்க்ஸிஸ்ட்). கிழக்கு வங்காளத்திலும், கல்கத்தாவிலும் நடந்த இனக் கலவரங்களால் மேற்கு வங்கத்தில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

1965 இந்திய-பாக் போர், புவியமைப்பினால், கிழக்கு பாகிஸ்தானிலும், மேற்கு வங்காளத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

1966 ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவாமி லீக்கின் ஆறு அம்ச திட்டத்தை அறிவித்தார். மே வங்கத்தில் உணவிற்கான சூறையாடல்கள் நடந்தன.

1967 காங்கிரஸ் அல்லாத முதலாவது ஐக்கிய முன்னணி மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்து, 18 அம்சத் திட்டத்தை அறிவித்தது. மே வ நக்சல்பாரியில் விவசாய கிளர்ச்சி இயக்கம் வலுவாக உருவானது.

1968-69 பாக் அதிபர் அயூப் கானை மக்கள் பரவலாக எதிர்த்தனர். யாக்யா கான் அயூபின் இடத்திற்கு வந்தார். மே வங்கத்தில் அதிகரித்த தொழிலாளர் தகராறுகளால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. மே.வங்கத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. ஐக்கிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. நக்ஸல் இயக்கத்திற்குத் தலைமை ஏற்று சாரு மஜூம்தார் இந்திய கம்யூனிஸ்ட் கழகம் மர்க்ஸிஸ்ட்- லெனினிஸ்ட்டை வடிவமைத்தார். இந்த இயக்கம் கல்கத்தாவிலும், மே வங்கத்தின் மற்றப் பகுதிகளிலும் பரவியது.

1970  நான்கு மற்றும் ஐந்திற்கு இடைப்பட்ட நூறாயிரம் பேர்களை, புயல், கிழக்கு பாக்கில் கொன்றது. பாக்.கில் முதல் பொதுத் தேர்தல் நடை பெற்றது- அவாமி லீக் பெரும்பான்மை பெற்றது.

1971  அதிபர் யாக்யா கானுக்கும், முஜிபூர் ரஹ்மானுக்கும் இடையில் நடந்த அரசியல் சாசனப் பேச்சு வார்த்தைகள் தோல்வியுற்றன. தாக்காவிலுள்ள வங்காளிகளின் மீது 24, மார்ச்சில் பாக் இராணுவம் தாக்குதல் நடத்தியது. உள் நாட்டுப் போர் ஆரம்பித்தது. நவம்பர் இறுதியில் இந்தியப் படை இந்தப் போரில் பங்கேற்றது. தாக்காவில் பாக் இராணுவம் சரணடையவே விடுதலைப் போர் 16 டிசம்பரில் முடிவுற்றது. கிழக்கு பாக் சுதந்திரம் பெற்ற தனி நாடாகி வங்காள தேசம்(பங்களா தேஷ்) என்றாகியது. ரவி ஷங்கர் பங்களா தேசத்திற்காக ந்யூ யார்க்கில் கச்சேரிகள் வாசித்தார்; பிற இசை நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்தார். மேற்கு வங்கம், மற்றும் அடுத்துள்ள மாநிலங்களிலும் போரின் போது மிக அதிக எண்ணிக்கையில் அகதிகள் தஞ்சம் புகுந்தனர். அவர்களில் பலர், பின்னர் பங்களா தேஷ் மீண்டனர்.

1972 முஜிபூர் அவாமி லீக் அரசின் தலைவராக இருந்தார்; பங்களா தேஷ் தன்னைக் குடியரசாக அறிவித்தது; தேசீயம், மதச் சார்பின்மை, பொது நலக் கோட்பாடுகள் மற்றும் மக்கள் ஆட்சி இவை வழி நடத்தும் கொள்கைகளாக அரசியல் சாசனச் சட்டத்தில் உறுதி படுத்தப்பட்டன. மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் பதவிக்கு வந்தது. அரசின் அடக்கு முறையாலும், உட்குழுப் பூசலாலும் நக்ஸல் இயக்கம் தன் வலுவை இழந்தது. திரிபுரா இந்தியாவின் ஒரு மாநிலமாகியது.

1973 வங்காள தேசத்தின் முதல் நாடாளுமன்றத் தேர்தலில் அவாமி லீக் வரலாறு காணாத பெரும் வெற்றி பெற்றது.

1974 பஞ்சத்தால் 1.5 மில்லியன் மக்கள் வங்காள தேசத்தில் இறந்தனர்.

1975 இராணுவ சதி; முஜிபூர் ரஹ்மானும், குடும்பத்தினரும் தாக்காவில் கொல்லப்பட்டனர். ஜியாவுர் ரஹ்மான் தலைமையில் இராணுவ ஆட்சி ஏற்பட்டது. சிட்டகாங் மலைப் பகுதிகளில் மிக நீண்ட போர் (1975-90) நடந்தது. வங்காள தேசத்தில் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தால் விளைச்சல் (1975-90) பெருகியது. இந்தியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.(1975-77) தேர்தல்கள், குடி மக்கள் உரிமைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

1977 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா) முன்னிருந்து நடத்திய இடது முன்னணி மே வங்கத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மே 2011 வரை ஆட்சியில் இருந்த, உலகில் ஜன நாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு மிக நீண்ட காலம் ஆட்சி செய்த, கம்யூனிஸ்ட் கட்சி இதுதான். ஜோதி பாசு முதலமைச்சரானார். மே வ அரசு அரசியல் கைதிகளை விடுதலை செய்யத் தீர்மானித்தது. நிலத்தில் மிகக் குறைந்த ஊதியத்தில் பாடுபடும் பயிர் வளர்ப்போரை குத்தகைதாரர்கள் என்று பதிவு செய்யும் பர்கா(Barga) செயல் திட்டம் தொடங்கியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா) முன்னிருந்து நடத்திய இடது முன்னணி திரிபுராவிலும் ஆட்சியைக் கைப்பற்றியது. நிருபன் சக்ரவர்த்தி முதலமைச்சரானார். ஜியாவுர் ரஹ்மான் சொன்ன ‘மேன்மை பொருந்திய அல்லாவிடத்தில் பூரண நம்பிக்கை உள்ளது’ என்பது வங்காள தேசத்தின் அரசியல் சாசனத்தில் சேர்க்கப் பட்டது.

1978  தென் மேற்கு வங்காளத்தில் (நூற்றாண்டின்) அபாயகரமான, அதிக வெள்ளத்தினால் மிகப் பெரும்  சேதங்கள் ஏற்பட்டது. பாகிஸ்தானில் தலை மறைவாக இருந்த ஜமாத்– இ -இஸ்லாமி, வங்காள தேசத்திற்குத் திரும்பவும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் அனுமதிக்கப்பட்டனர்.

1979 அரசு மரிச்சாபியில்(Marichjhapi) அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தது.

1981 ஜியாவுர் ரஹ்மான் சிட்டகாங், வங்காள தேசத்தில் படு கொலை செய்யப்பட்டார். டார்ஜீலிங் மலைப் பிரதேசத்தில் தன்னாட்சி அமைய மேற்கு வங்க சட்டமன்ற அவை விருப்பம் தெரிவித்தது.

1982 ஜெனரல் ஹெச் எம் எர்ஷாத் இராணுவ வல்லடி மூலம் வங்காள தேசத்தில் பதவியேற்றார். இடது முன்னணி மே வங்கத்தில் மீண்டும் தேர்தலில் வென்றது.

1983 கிராமீன் வங்கி, சிறுதொழிற்கடன் வழங்கும் நிறுவனம், வங்காள தேசத்தில் ஏற்படுத்தப்பட்டது. ஆயத்த ஆடைத் தொழில் பெரு வளர்ச்சி அடைந்தது.

1984 கல்கத்தாவில் மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்.

1985 சால்ட் லேக் மின்னணு தொழில் நிறுவனம் கல்கத்தாவில் தொடங்கப்பட்டது. தாக்காவில் தேசிய நூலகமும், தேசிய காப்பகமும் தொடங்கப்பட்டன.

1986 ‘பச்சிம் பங்கா பங்கா அகெதெமி’ கல்கத்தாவில் உருவானது.

1988 வங்காள தேசத்தில் இந்து, பௌத்த, கிருத்துவ ஒற்றுமைக் குழு அமைக்கப்பட்டது. டார்ஜீலிங் கூர்கா மலைக் குழுவினருடன் கல்கத்தாவில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது; அந்தக் குழுவிற்கான தேர்தலும் நடை பெற்றது.

1990 எர்ஷாத்திற்கு எதிரான மக்கள் எழுச்சியால் அவர் பதவி விலக நேர்ந்தது. பங்களா தேஷ் நாடாளுமன்ற ஜன நாயக முறைக்குத் திரும்பியது. வங்காளப் புலம் பெயர்பவர்களுக்கு எதிராக, நேஷனல் லிபரேஷன் ஃப்ரான்ட் ஆப் திரிபுரா, ஆல் திரிபுரா டைகர் ஃபோர்ஸ் போன்ற கிளர்ச்சியாளர்கள் களமிறங்கினர்.

1991 பொதுத் தேர்தலில் பங்களா தேஷ் நேஷனலிஸ்ட் கட்சி வெற்றி பெற்று கலீடா ஜியா பிரதமரானார். தென் கிழக்கு வங்காள தேசத்தில் புயல் தாக்கி 1,40,000 பேர் இறந்தார்கள்.

1992 மேற்கு வங்காளம் ‘தீன் பிகா நடைபாதையை’ வங்காள தேசத்திடம்  கொடுத்தது.

1996 வங்காள தேசத்தில் அவாமி லீக் ஆட்சிக்கு வந்தது. ஷேக் ஹசீனா பிரதமரானார். முப்பதாண்டுக்கான கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தம் இந்தியா – வங்காள தேசத்திடையே ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினருக்கான முன்னேற்றம் மற்றும் நிதிக் குழுமம் அமைக்கப்பட்டது.

1997 வங்காள தேசத்தின் சிட்டகாங் மலைத் தொடர் நிலவரம் சம்பந்தமாக அமைதி ஒப்பந்தம் ஜே எஸ் எஸ்ஸுடன் (யுனைட்டெட் பீபிள் கட்சியினர்) வங்காள தேசத்தில் செய்யப்பட்டது.

1998 65 நாட்களுக்கு 60% பங்களா தேஷ் பெரு வெள்ளத்தால் சூழப்பட்டது. திரிபுராவில் இடது முன்னணி வெற்றி பெற்று மாணிக் சர்கார் தலைமையில் அரசு அமைந்தது.

2000 நவீன வரலாற்றில் பங்களா தேஷ் மிகு உபரி தானியங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்தது. அது, தாக்காவில் முதன்முதலாக கிரிக்கெட் ஆட்டம் ஆடியது. ஜோதி பாசு பதவி விலக புத்ததேவ் பட்டாச்சார்யா மேற்கு வங்க முதல்வரானார். மே வ ஹால்தியா பெட்ரோ கெமிகல்ஸ்  உற்பத்தியைத் தொடங்கியது.

2001 வங்க தேசப் பொதுத் தேர்தலில் பங்களா தேஷ் நேஷனலிஸ்ட் கட்சி வெற்றி பெற்று கலீடா ஜியா பிரதமரானார். மே வங்கத்தில் மீண்டும் இடது முன்னணி வெற்றி பெற்றது.

2005 தீவிரவாதக் குழு, ‘ஜமாத்துல் முஜாஹிதீன், பங்களா தேஷ்’, வங்காள தேசத்தில் உள்ள 50 பெருநகரம் மற்றும் சிறு நகரங்களில், ஒரே நேரத்தில் 300 இடங்களில் 500 வெடிகுண்டுகளை வெடித்தனர்.

2006 முகம்மது யுனூசிற்கும், கிராமீன் வங்கிக்கும் நோபல் பரிசு கிடைத்தது. ஆயத்த ஆடைகள் வங்காள தேசத்தின் ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு இடம் பிடித்தன. டார்ஜீலிங் மலைப் பகுதிக்கு தன்னிச்சை அதிகாரம் வழங்க ஓர் அமைப்பு ஏற்படுத்துவதற்கான திட்டம் ஒப்புதல் பெற்றது. மேற்கு வங்கத்தில் இடது முன்னணி மீண்டும் ஆட்சியில்.

2007 வங்காள தேசத்தில் பொதுத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு மீண்டும் இராணுவ ஒத்துழைப்போடு இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. ஷேக் ஹசீனாவும், கலீடா ஜியாவும் ஊழல் செய்தார்கள் என்றும், மிரட்டி பணம் பறித்தார்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். புயலால் சுந்தரவனத்தின் சதுப்புப் பகுதிகள் பெரும் சேதமடைந்தன. தொழிற்சாலைகள் அமைப்பதற்காக விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து மதினாபூர் மாவட்டம், நந்திகிராமில் வன்முறை நிகழ்ந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சிங்கூர், ஹூக்ளியில் உற்பத்தி செய்ய நினைத்த சிறு கார்களுக்காக மேற்கு வங்க அரசு விளை நிலங்களை கையகப்படுத்தியதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன.

2008 அவாமி லீக் தேர்தலில் வென்றது. ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமரானார். சிங்கூர் தொழிற்சாலை திட்டத்தை டாடா மோட்டார்ஸ் கைவிட்டது. இது எதிர் காலங்களில் மேற்கு வங்கத்தில் தனியார் முதலீடுகளைப் பற்றிய ஹேஷ்யங்களை எழுப்பியது.

2010 சிறுபான்மை முஸ்லீம் இனத்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் 10% இட ஒதுக்கீட்டை மேற்கு வங்க அரசு அறிவித்தது. தங்கள் நாட்டில் பதுங்கியுள்ள திரிபுரா கிளர்ச்சியாளர்களின் மீது நடவடிக்கை எடுப்பதாக பங்களா தேஷ் உறுதிமொழி கொடுத்தது.

2011 மேற்கு வங்கத்தை 34 ஆண்டுகள் ஆண்ட இடது முன்னணி  தேர்தலில் தோற்றது. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் வென்று பதவிக்கு வந்தது. எல்லை வரையறைகளில் இருக்கும் பிணக்கினை நீக்க  இந்தியாவும், பங்களா தேஷும் ஒப்பந்தம் செய்து கொண்டன.

2012 1971ஆம் ஆண்டு நடந்த விடுதலைப் போரில், தேசத்திற்கு எதிராக பாகிஸ்தானுடன் கூட்டுச் சேர்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட, ஜமாத்- இ- இஸ்லாமின் முக்கிய நபர்களின் மீது அரசு தீர்ப்பாயம், போர் குற்றங்களைச் சாட்டியது. கூர்க்கா நிலப் பிரதேச  நிர்வாகம், டார்ஜீலிங், மேற்கு வங்கத்தில் செயல்படத் துவங்கியது.

“காலக் கடலுக்கோர் பாலமிட்டாள் அன்னை காற்படினே.”

– பாரதி
Series Navigation<< அனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரைநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை >>

One Reply to “வங்காள வரலாறு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.