- தொகுத்தவர்: அருண்குமார் மகோபாத்யாய்
- தமிழில் மொழிபெயர்ப்பு : சு.கிருஷ்ணமூர்த்தி

வங்கச் சிறுகதைகள் என்கிற இந்த நூல் மொத்தம் 21 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. இந்த 21 சிறுகதைகளும் 21 ஆசிரியர்களால் எழுதப்பட்டவை.
இதைத் தொகுத்தவர் வங்க எழுத்தாளர் ஸ்ரீ. அருண்குமார் மகோபாத்யாய். இதைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர் திரு. சு.கிருஷ்ணமூர்த்தி.
இந்த நூலில் உள்ள எழுத்தாளர்கள், கல்லோல் யுக எழுத்தாளர்கள், இரண்டாம் உலகப்போர் கால எழுத்தாளர்கள், இளைய தலைமுறை எழுத்தாளர்கள் என மூன்று காலகட்ட எழுத்தாளர்களாக பிரிக்கப்பட்டு, அவர்களின் பல சிறுகதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளே இந்த நூலில் 21 கதைகளாக தொகுக்கப்பட்டுள்ளன.
இந்திய இலக்கிய உலகில் வங்க இலக்கியங்கள் சிறப்பான இடத்தை பிடித்துக் கொண்ட காலகட்டங்கள், கல்லோல் காலம் (1923 முதல் 1939), மற்றும் அதன் பிறகு வந்த இரு கால கட்டங்கள். முக்கியமாக ரபீந்திரநாத் தாகூர் மற்றும் சரத் சந்திரருக்கு பின் வந்த இலக்கிய காலக் கட்டத்தை கல்லோல் காலம் என்று அழைக்கிறார்கள். அதாவது ஒரு பெரும் இலக்கிய இயக்கம் இந்த கால கட்டத்தில் நிகழ்ந்தது. மேலும் இது ஒரு புதிய இலக்கிய அலை என்று கூட சொல்லலாம். இந்த கால கட்டத்தில் பல இளம் எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள். 15 வயதில் உள்ளவர்கள் எல்லாம் எழுதத் தொடங்கினார்கள். இலக்கியம், எழுத்து, நாடகம், இசை என்று வளரத் தொடங்கிய காலம். படைப்பாளர்கள் அவர்களுக்கென்று தனிக் குழுக்கள் அமைத்து இலக்கியத்திற்கு வளம் சேர்த்த கால கட்டம். இளம் படைப்பாளர்களின் படைப்புகள் மிகுந்த வரவேற்புக்குள்ளான கால கட்டம் இந்த கல்லோல் காலம்.
இந்த காலகட்டத்தில் உருவான எழுத்தாளர்கள் தான் காஜி நஸ்ரல் இஸ்லாம், பிரேமாந்திர மித்ரா, புத்ததேப் பாசு போன்ற எழுத்தாளர்கள். இவர்கள் எல்லாம் 25 வயதிற்கு உட்பட்டவர்களாகவே இருந்தனர். இதனைத் தொடர்ந்து பல எழுத்தாளர்கள் எழுதத் தொடங்கினர். இந்தக் கல்லோல் கால கட்டத்தில் இந்தியாவில் பொருளாதார மந்தமும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எழுச்சி இருந்தாலும் படைப்பாளர்கள் அமைதியான சூழ்நிலையில் இலக்கியம் படைத்தார்கள் என்று இந்த நூலின் ஆசிரியர் சொல்கிறார்.

கல்லோல் கால எழுத்தாளர் : அசிந்த்ய குமார் சென் குப்தா
கல்லோல் கால எழுத்தாளர் படைப்புகளில் பிராய்டின் தாக்கமும், புரட்சியாளர் காரல் மார்க்ஸின் தாக்கமும் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்தக் கூற்றின்படி இந்த் நூலில் உள்ள சாரங், ராணி பசந்த், எல்லைக் கோட்டின் எல்லை போன்ற கதைகள் மனித மனதின் போராட்டங்களைக் காட்டும் கதைகளாக இருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகம் ஏதேனும் ஒரு சமுதாயக் கட்டமைப்புக்குள் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கும். கலாச்சாரம், பண்பாடு என்ற விதிமுறைக்குள் தன்னை உட்படுத்திக்கொண்டு இருக்கும். குடும்பமோ உறவுகளோ அதை மீறிச் செயல்படும் போது மனித மனம் கொள்ளும் குழப்பங்களும், வெறுப்புகளும், சொல்ல முடியா சோகங்களும், அதைக் கடக்க நினைக்கும் மனங்களும், அதை எதிர்கொள்ளும் மனிதர்களைப் பற்றி பேசும் கதைகளாகக் இந்தக் காலகட்ட கதைகள் இருந்தன என்று கூறலாம்.
அசிந்த்ய குமார் சென் குப்தாவால் எழுதப்பட்ட “சாரங்க்” என்ற கதையில் வரும் நாயகன் நசீமிற்கு தன் தாய் வேறு ஒருவனோடு (கஹ்ராலி) தொடர்பு கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மேலும் கஹ்ராலி அவனை அடக்க நினைப்பதும், அவனிடம் தான் அடிமையாக இருப்பதும் விரும்பத் தக்கதாக இல்லை. தன் தந்தை இருந்திருந்தால் இந்த நிலை தனக்கு வந்திருக்காது என்று எண்ணுகிறான். தன் தாய் கோல்பானு கஹ்ராலியை திருமணம் செய்து கொண்ட பிறகு யாராவது அவன் தாயிடம், இவன் யார் என்று கேட்டால் “இவன் என் முதல் புருஷனின் மகன்” என்று தன்னை மற்றவர்களிடம் அறிமுகம் செய்வாள் என்று நினைக்கும் போது நசீமுக்கு நெஞ்சு பற்றி எரிகிறது. அவனுடைய தந்தையின் இடத்தில் கஹ்ராலியை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் அவன் ஊரை விட்டே போகிறான்.
அந்த ஊரின் எல்லையில் எப்போதும் வரும் நீராவிப் படகில் ஏறி அங்கிருக்கும் வேலையாட்களிடம் தனக்கு ஒரு வேலை வேண்டும் எனக் கேட்கிறான். அவர்கள் அந்தப் படகின் சாரங்கியிடம் அவனை அழைத்துக் கொண்டு போகின்றனர். சாரங்கியோ மிகவும் கறாரான பேர்வழி. அவன் நசீமிற்கு வேலை கொடுப்பதாகச் சொல்கிறான். ஆனால் சம்பளம் இல்லை. வெறும் உணவு மட்டும்தான். உடுத்த துணி கூட கிடையாது. அங்கிருக்கும் வேலையாட்கள் எல்லோரும் சாரங்கியால் அடிமைகள் போலத்தான் நடத்தப்படுகிறார்கள். நசீமின் நிலையும் அதுவே. ஆனால் அவன் அந்த அடிமைத்தனத்தை வெறுக்கவில்லை. அவன் எப்படியாவது சாரங்கியின் மனதைக் கவர்ந்து வேலையில் அடுத்தடுத்த நிலையை எட்டிப் பிடிக்க வேண்டும் என்பது மட்டுமே அவனுக்கு குறிக்கோளாக இருந்தது.
அதனால் அவன் படகில் ஏறும் பயணிகளிடம் இருந்து சின்னச்சின்ன திருட்டுக்களைச் செய்து சாரங்கியிடம் அதைக் கொடுத்து அவனிடம் நல்ல பெயர் வாங்க நினைக்கிறான். அப்படி ஒரு நாள் சாரங்கியின் நீராவிப் படகில் புதிதாக திருமணம் ஆகப் போகும் மணமகளின் கழுத்தில் இருக்கும் நகையைப் பறிக்கப் போக நசீம் அங்கு இருக்கும் கூட்டத்தினரால் கையும் களவுமாகப் பிடிக்கப்படுகிறான்.
ஆனால் நகையைப் பறிகொடுக்க இருந்த அந்தப் பெண்ணோ அந்தப் பையன் மீது எந்தத் தவறும் இல்லை என்று சொல்லி விடுகிறாள். அதே சமயம் சாரங்கியும் அங்கே வந்து நசீம் தன்னுடைய மகன் என்றும் ஏதொ தெரியாமல் நடந்துவிட்டது என்று சொல்லிக் காப்பாற்றி விடுகிறான்.
அந்தத் திருமண ஜோடிகள் படகை விட்டு இறங்கும் போதுதான் அவன் உணர்கிறான் அந்த திருமணப்பெண் அவன் தாய் என்று. அவன் தாயை நிரந்தரமாக இழக்கவும், அதே சமயம் அவனுக்கு சாரங்கி எனும் தகப்பன் கிடைக்கும் அந்த கணம் நசீமின் மனம் மட்டுமல்ல நம் மனமும் கனத்து விடுகிறது.
இதே போன்றுதான் மற்ற கதைகளான ராணி பசந்த், எல்லைக்கோட்டின் எல்லை போன்ற கதைகள் மனித மனங்களின் குழப்பங்கள், அந்த காலக் கட்டத்தில் சமுதாயத்தில் வரையறுக்கப்பட்ட சில கோட்பாடுகளை மீற முடியாமல் திணறும் மனிதர்களையும், பெண்களின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் இருக்கும் மனிதர்கள், அதே சமயம் அதை எதிர்த்து போராடவும் துணிவு இல்லாத/போராட முடியாத பெண்களையும் இந்தக் கதைகளில் காணலாம்.

இரண்டாம் உலகப்போர் எழுத்தாளர்: நாராயண் கங்கோபாத்யாய்
இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் வங்காள நாட்டிலும் சமூகத்திலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. விலைக்கட்டுப்பாடுகள், பஞ்சம், உணவுப் பங்கீடு, ராணுவத்துக்காக கொள்முதல், பொருளாதாரச் சீர் குலைவு என இன்னும் பற்பல மாற்றங்கள் இந்த காலகட்டத்தில் தான் நிகழ்ந்தன. இந்த காலகட்ட எழுத்தாளர்கள் தங்களுடைய வாழ்க்கைப் போராட்டங்களையும், அனுபவங்களையும் தம் கதைகள் மூலம் கொடுக்க ஆரம்பித்தனர்.
நாராயண் கங்கோபாத்யாய் எழுதிய “மதிப்பிற்குரிய, விடைத்தாள் திருத்துபவர் அவர்களுக்கு” என்னும் இந்தச் சிறுகதை அன்றைய விவசாயிகளின் நிலையை எடுத்துக்காட்டுகிறது. அன்று முதல் இன்று வரை விவசாயிகளுக்கு பஞ்சம் வந்தால் தற்கொலைதான் ஒரே வழி என்ற கசப்பான உண்மையுடன் தான் கதை ஆரம்பம் ஆகிறது. அவர்கள் விவசாயம் செய்து பிழைக்க வழியில்லாமலும், படித்து முன்னேறத் தலையெடுக்கும் போது எப்படி அவர்கள் மேல் வர்க்க மக்களால் அல்லது அதிகார வர்கத்தாலோ சுரண்டப்படுகிறார்கள், அவர்களின் ஏழ்மை எப்படி அவர்களை அடுத்த நிலைக்கு வளர விடாமல் தடுக்கிறது போன்ற உண்மைகளை எடுத்துரைக்கும் கதையாக இருக்கிறது..
ஸ்வாதீன்குமார் என்னும் இளைஞன் தன்னுடைய கல்லூரி இறுதித்தேர்வுத் தாளில், விடைதிருத்துபவருக்கு எழுதும் கடிதமாகக் கதை ஆரம்பம் ஆகிறது. நாட்டின் விடுதலைக்கு முன் நடந்த கதையாகத் தொடங்குகிறது. மேதினிபூர் மாவாட்ட்த்தில் ஒரு சிறு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் வளர்ந்த இளைஞன் ஸ்வாதீன்குமார், சுதந்திரத்திற்காக தன் உயிரையே கொடுத்த தன் தந்தையின் விவசாயத் தொழிலைத் தொடராமல் படிப்பிற்காக ஊரை விட்டு தன் தூரத்து உறவினர் வீட்டில் இருந்து படிக்கிறான்.
ஆனால் அங்கு அவனிடம் இருந்த கணிதத் திறமையைப் பார்த்து அந்த உறவினர் அவனைக் கணக்கு வழக்குகளை பார்க்க சொல்கின்றார். இதனால் அவனுடைய படிக்கும் நேரமும் குறைந்து போகிறது. அவனிடம் போதிய பணமில்லாமல் புத்தகங்கள் வாங்க முடியாமல் என பல தடைகள் வந்த போதும் அவன் அவற்றை எல்லாம் மீறி படிக்கிறான். ஆனால் அவனால் மூன்றாம் கிளாசில் மட்டுமே தேர்ச்சி அடைய முடிகிறது. இதனால் அவனுக்கு சாதாரணக் கல்லூரியில் மட்டுமே இடம் கிடைக்கிறது. அவனுக்கு எந்தச் சலுகையும் அந்தக் கல்லூரி தரவில்லை. “ குடியானவன் பிள்ளை வித்யாசாகர் ஆகப் போறியாக்கும் “ என்ற அந்த எள்ளல்களும் அவன் நினைவில் வந்து போகின்றன.
தன் அம்மா அவனிடம் கடிதத்தில் சொன்ன “அப்பா மாதிரி பெரிய மனிதனாக ஆகு. சுதந்திர பாரதத்தின் தொண்டனாக நீ உழைக்க வேண்டும் என்பதை மறக்காதே” என்ற வரிகள் அவன் நினைவுக்கு வந்தாலும் அதே சுதந்திர மாதா தனக்கு என்ன உதவியைச் செய்தாள், அல்லது இயற்கைதான் விவசாயிகளுக்கு என்ன செய்தது. மழை இல்லை. நெல் இல்லை. ஏழைகளின் பசி போக்க என்ன வழி? எங்கே ஓடிப் போவது நான் என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு தன்னுள் தன் தாயின் நம்பிக்கை வரிகளை நினைத்துக்கொண்டும், தைரியத்தையும் உற்சாகத்தையும் வரவழைத்துக்கொண்டும், தான் சுதந்திர பாரததின் விஞ்ஞானி என்று சொல்லிக்கொண்டும் அவன் கனவுகளைத் துரத்திக்கொண்டு ஓடுகிறான்,
ஆனால் அவன் எண்ணிய கனவுகள் அவனுக்கு பலிக்கவில்லை. ஒரளவிற்கு மேல் படிக்க வசதியில்லாமல் போகிறது. புத்தகம் வாங்கக் கூட பணம் இல்லாமல் கூடப்படிக்கும் மாணவர்களின் புத்தகங்களைத் திருடி படிக்கிறான். நாட்டின் சுதந்திரத்திற்காக தன் ரத்தத்தையே கொடுத்த தந்தைக்கு பிறந்த அவன் திருடனாக ஆனதை நினைத்து வேதனைப்படுகிறான்.
தன்னுடைய இறுதித்தேர்வு நாள் நெருங்க நெருங்க அவனுக்கு பயம் வருகிறது. காரணம் தேர்வுக்கட்டணத்திற்கு பணம் இல்லை. அவனுடைய தேர்வுக்கட்டணம் ஐம்பது ரூபாயை சர்க்கார் தான் தருவதாக முன் வருகிறார். அதற்கு உதவியாக அவரின் கணக்குகளை பார்த்துக் கொள்ள வேணும். அதுவும் வருமான வரி அதிகாரிகளின் கண்களில் மண் தூவுவதற்காகச் செய்யப்படும் போலிக் கணக்குகள்.
இப்படி வருமானத்துறையை ஏமாற்றி பிழைத்து பணம் சேர்த்து வாழும் அந்த பணக்கார வர்க்கத்திற்காக அவன் இரவும் பகலும் பாடுபட்டு உழைத்து படிக்கக் கூட நேரம் இல்லாமல் தேர்வு எழுதப்போகிறான். அவனுக்கு தான் தேர்ச்சி பெற முடியாது என தெரிந்து விடுகிறது. தன் விடைத்தாளில் தன் கதை முழுதும் விடைத்திருத்துபவருக்கு எழுதிவிட்டு தான் ஏதாவதொரு ரயிலுக்கடியில் தன்னை மாய்த்துக் கொள்ளப்போவதாகவும், அந்த முடிவு தன்னைப் போன்ற ஏழை மாணவர்களுக்கு ஒரு புதிய வரலாற்றை தொடங்கி வைக்கும் என்ற நம்பிக்கையில் அவன் மாய்த்துக்கொள்வதாக சொல்கிறான். ஆனால் அந்த வரலாறு எப்போது முழுமை பெறும் என்று தெரியாது.
“ சார், உங்களால் சொல்ல முடியுமா?”
என்று விடைத்தாளை திருத்துபவரிடம் கேட்பது போல வாசிப்பாளர் நம்மிடமும், சமுதாயத்தை நோக்கி வைக்கப்படும் கேள்வியாக இருக்கிறது.
“ஜனநாயகத்தை காப்பாற்றத் தேர்தல்கள் இருக்கின்றன.
ஜனங்களைக் காப்பாற்ற யார் இருக்கிறார்கள்?
விதிகளைக் காப்பாற்ற அதிகாரிகள் இருக்கிறார்கள்
மக்களைக் காப்பாற்ற யார் இருக்கிறார்கள்”
என்று அப்துல் ரகுமான் வரிகளுக்கேற்ப பல கேள்விகளுக்கு இன்னும் விடைதெரியாமல் தான் விவசாயத் தற்கொலைகளும், வசதியின்மையால் படிக்கமுடியாமல் போகும் ஏழை மாணவர்களின் தற்கொலைகளும் எல்லா காலகட்டங்களிலும் எல்லா சமூகங்களிலும் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பது மறுக்கமுடியாத மற்றும் மறக்க முடியாத உண்மை.

இளம்தலைமுறை எழுத்தாளர்கள்: சீர்ஷேந்து முகோபாத்தியாய்
வங்க இலக்கியங்களில் இளம் எழுத்தாளர்கள் எனும் சொல்லப்படும் இந்த எழுத்தாளர்கள் 1930 முதல் 1940க்குள் பிறந்தவர்கள். இவர்கள் புதிய தலைமுறை எழுத்தாளர்கள். இவர்கள் தங்களுக்கு முற்பட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த எதையும் பார்க்கவில்லை. பஞ்சம், இருட்டடிப்பு, வகுப்புக் கலவரம், இரத்தம் தோய்ந்த சுதந்திரம் என இவை எல்லாம் நிகழ்ந்த காலத்துக்கு பின் இவர்கள் வாழ்ந்ததால் இவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை என்று இந்நூலின் ஆசிரியர் கூறுகிறார்.
“என்னைப் பாருங்கள்” சீர்ஷேந்து முகோபாத்தியாய் எழுதிய இந்தக் சிறுகதையில் வரும் நாயகன் அரிந்தம் பாசு தன்னுடைய கதையை, தினமும் அவன் கடந்து வரும் மனிதர்கள் மற்றும் சொல்வதாக அமைந்து இருக்கிறது. அரிந்தம் பாசு வங்கி ஒன்றில் பணப்பட்டுவாடாப் பிரிவில் வேலை செய்கிறார். அவர் தினமும் நூற்றுக்கணக்கான் மனிதர்களை சந்திக்கிறார் அந்த வங்கியில். கம்பிகளின் பின்னால் அமர்ந்து கொண்டு அவர் தன்னை நாடி வரும் மக்களுக்கு ரூபாய் நோட்டுக்களை எண்ணி கொடுக்கிறார். அவர் அந்தக் கம்பிகளின் முன்னால் இருக்கும் மனிதர்களைக் காண்கிறார். அவர்களின் அந்த இயந்திரத் தனமான வாழ்க்கை அவரை ஆச்சரியப்பட வைக்கிறது, அவர் அந்த வங்கியை விட்டு வெளியே வந்து தன்னை அந்த வங்கியின் பணப்பட்டுவாடப் பிரிவில் வேலை செய்பவன் என்று அறிமுகம் செய்து கொண்டு வாடிக்கையாளர்களிடம் பேசினால் கூட அவர்களுக்கு அரிந்தம் பாசுவை அடையாளம் தெரியாமல் போகிறது. மனிதர்கள் யாரும் பிற மனிதர்களை உற்று நோக்குவதில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று மட்டுமே வாழ்கிறார்கள்.
அவர் தினமும் வரும் பேருந்தில் அவரை யாரும் சட்டை செய்வதில்லை. அந்தப் பேருந்தில் அவர் ஒடுங்கி நசுங்கி நிற்கிறார். மனிதம் அங்கே இல்லாமல் போகிறது. யாருக்கும் யார் மேலும் அக்கறை இல்லாமல் போகிறது. காரணம் சாதாரண மனிதர்களை யாரும் கவனிப்பதில்லை. அவருக்கோ அவளுக்கோ தனிச்சிறப்பு ஏதெனும் இருந்தால் மட்டும்தான் அவர்கள் சமூதாயத்தில் உற்று நோக்கப்படுகிறார்கள்.
இத்தனை பெரிய உலகத்தில் அவரைக் கவனிக்கும் ஒரு ஜீவனாக இருப்பது அவருடைய மகன் மட்டுமே. அரிந்தம் பாசு அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் தன்னைப் பொருட்காட்சிக்கு அழைத்துப் போகுமபடி அவனுடைய மகன் கேட்கிறான். அவர்கள் பொருட்காட்சிக்கு சென்று அங்கு சர்க்கஸ் பார்த்துவிட்டு கிளம்பும்போது அவருடைய மகன் கூட்டத்தில் அரிந்தம் பாசுவின் கையை விட்டுவிட்டு முன்னால் நடக்கிறான். திடீரென்று கூட்டத்தில் காணாமல் போகிறான். அரிந்தம் பாசு மகனைத் தேடுகிறார். எல்லோரிடமும் நீலக் கலர்சட்டை போட்ட சிறுவனைப் பார்த்தீர்களா? என்று கேட்பதாக கதை முடிகிறது.
மற்றவர்களின் பிரச்சினைகள் என்ன என்று தெரியாது, மனிதர்கள் தம் சொந்த வாழ்க்கையை வாழும் தனித் தீவுகளாக மாறி இருப்பதைச் சொல்லும் கதை.
ஒவ்வொரு கதையையும் ஆழ்ந்து படிக்கும் போது சுதந்திர இந்தியா, பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறை, அக்காலப் பஞ்சம், விவசாயிகள் பிரச்சனை, குடும்பங்களில் காணப்பட்ட அடக்குமுறை, சாதிப்பிரச்சனை, தனிமனித சுதந்திரம், பெண்களின் உளவியல், ஆகியவற்றை முன்வைத்து அவை எழுதப்பட்டுள்ளதை நாம் அறிய முடியும்.
- அனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள்
தொகுப்பு : அருண்குமார் மகோபாத்யாய்
வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா - ISBN 81-237-2140-4
- முதற்பதிப்பு 1997 (சக 1919)
- தமிழாக்கம் © நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா 21
Bengali Short Stories (Tamil) - வெளியீடு: இயக்குநர்,நேஷனல் புக் டிரஸ்ட்,
இந்தியா ஏ-5, கிரீன் பார்க், புதுதில்லி 110016
One Reply to “வங்கச் சிறுகதைகள்: அறிமுகம்”