லஜ்ஜா: அவமானம்

This entry is part 7 of 48 in the series நூறு நூல்கள்

தமிழில்: கே.ஜி. ஜவார்லால்

உலகளவில் கடும் எதிர்ப்புகளையும் பாராட்டுகளையும் பெற்ற நாவல்.  முதல் முறையாகத் தமிழில்!

டிசம்பர் 6, 1992 அன்று இந்து அடிப்படைவாதிகள் அயோத்தியில் பாபர் மசூதியைத் தரைமட்டமாக்கினார்கள். சுதந்தரம் அடைந்ததில் இருந்தே பெரும்பான்மை இஸ்லாமியர்களால் ஓரங்கட்டப்பட்டுவந்த பங்களாதேச இந்துக்களின் வாழ்க்கை, பாபர் மசூதி உடைப்பைத் தொடர்ந்து நரகமானது.

இஸ்லாமிய மதவெறிக் கும்பல்கள் பங்களாதேசத்தில் வசிக்கும் ஒவ்வொரு இந்துவையும் தேடிப் பிடித்துத் தாக்கின. இந்துக்களின் உடமைகள் நிர்மூலமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இந்துப் பெண்கள் கொடூரமாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு மசூதி உடைப்புக்குப் பதிலடியாக ஓராயிரம் கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டன.

இஸ்லாமிய கட்சிகள், இஸ்லாமிய நண்பர்கள், அரசியல் அமைப்புகள், ஊடகங்கள், கம்யூனிஸ்ட்டுகள் என அனைத்துத் தரப்பாலும் கைவிடப்பட்ட இந்துக்களின் சோகம் உலுக்கியெடுக்கும் வகையில் இந்நாவலில் விவரிக்கப்பட்டுள்ளது.

எதிரொலியாக, இந்தியாவில் இருக்கும் சிறுபான்மை முஸ்லிம்கள் பதிலடி கொடுக்கிறார்கள். பங்களாதேசத்தில் வாழும் சிறுபான்மை இந்துக்-களோ பெரும்பான்மை முஸ்லிம்களால் அடித்துக் கொல்லப்படு-கிறார்கள். இந்தியாவில் நடப்பது ஹிந்து முஸ்லிம் கலவரம். ஆனால் பங்களாதேசத்தில் நடப்பதோ ஹிந்து ஒழிப்பு. இதுவே இந்தியாவுக்கும் பங்களாதேசத்துக்கும் உள்ள வேறுபாடு. அதுவே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான வேறுபாடும்கூட என்ற உண்மையை இந்நாவலில் விவரிக்கிறார், பிறப்பால் முஸ்லிமான நாவலாசிரியர் தஸ்லிமா நஸ்ரின்.

இந்துச் சிறுபான்மையின் வேதனை வரலாற்றை எவ்விதப் பாசாங்கு-மில்லாமல் பதிவு செய்யும் இந்த நாவல், மிக அபூர்வமான, முக்கியமான ஆவணமாகவும் இருக்கிறது.

தஸ்லிமா நஸ்ரின்

விருதுகள் பல வென்ற எழுத்தாளர், மனித உரிமைப் போராளி. மத அடிப்படைவாதம் குறித்த தீவிரமான விமர்சனங்கள், பெண்கள் படும் வேதனை குறித்த அழுத்தமான படைப்புகள் ஆகியவற்றுக்காகப் புகழ்பெற்றவர். 1962-ல் பங்களாதேசத்தில் மைமன்சிங் பகுதியில் பிறந்தார். 14 வயதில் எழுத ஆரம்பித்த இவர் முப்பது வயதுக்குள் டாக்காவின் மிக முக்கியமான எழுத்தாளராகப் பரிணமித்திருந்தார். எல்லை-களைக் கடந்து மேற்கு வங்காளத்திலும் இவருடைய படைப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. 1994-லும் 2000-லும் ‘ஆனந்தா விருது’ என்ற மதிப்புக்குரிய விருதைப் பெற்றார். 1994-ல் பங்களாதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இவர், இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வசித்துவருகிறார். கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள் என முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார். இவருடைய படைப்புகள் இருபதுக்கும் மேற்பட்ட இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

முன்னுரை

நான் அடிப்படைவாதத்தையும் வகுப்புவாதத்தையும் அறவே வெறுக்கிறேன். அதனால்தான் 1992, டிச, 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் நடந்த வன்முறைகளை வைத்து லஜ்ஜா நாவலை எழுதினேன். இந்தப் புத்தகத்தை ஏழே நாளில் எழுதி முடித்தேன். பங்களாதேசத்தில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லிம்களால் அங்கு சிறுபான்மையாக இருக்கும் இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகளைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. 

பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து எனது தேசத்தில் இந்துக்கள் வேட்டையாடப்பட்ட நிகழ்வு மிகவும் அவமானகரமானது. இந்த அழகான தேசத்தில் இப்படி ஒன்று நிகழ்ந்தது குறித்து இந்தத் தேசத்தை விரும்பும் அனைவருமே வெட்கித் தலைகுனியவேண்டும். 1992-ல் நடந்த அந்த வன்முறைகளுக்கு நாம் எல்லாரும்தான் காரணம். தவறு நம்மீதுதான். நமது கூட்டுத் தோல்வியின் ஆவணமே இந்த நாவல்.

1993-ல் பிப்ரவரியில் லஜ்ஜா வெளியானது. 60000 பிரதிகள் விற்றுத் தீர்ந்த நிலையில், சமூக அமைதிக்குக் கேடு விளைவிப்பதாகக்கூறி அரசு இந்தப் புத்தகத்தைத் தடை செய்தது. செப்டம்பர் மாதம் ஓர் அடிப்படைவாத அமைப்பு எனக்கு எதிராக ‘ஃபத்வா’ பிறப்பித்தது. எனது உயிருக்கு விலை வைக்கப்பட்டது. என் உயிரைப் பறிக்க-வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பியபடி டாக்கா தெருக்களில் ஏராளமான ஊர்வலங்கள் அணிவகுத்தன. மத வன்முறை,  இனப்-படுகொலை ஆகியவற்றுக்கு எதிரான என்னுடைய போராட்டத்தை இவை எதுவுமே துளியும் அசைத்துவிடவில்லை. 

30 லட்சம் பேரைப் பலிகொடுத்து பாகிஸ்தானிடமிருந்து சுதந்தரம் பெற்றோம். மதத் தீவிரவாதிகள் நம்மை ஆள்வதற்கு நாம் அனுமதித்தால் அந்த சுதந்தரத்துக்காகச் செய்த தியாகங்கள்  வீணாகிப்போய்விடும். இந்த முல்லாக்களை வெற்றிபெற வைத்தால் என்னைக் கொல்வதோடு பங்களாதேசத்தில் எந்தவொரு முற்போக்கான அம்சமும் இல்லாமல் அழித்தொழித்துவிடுவார்கள். அவர்கள் கைகளில் என் அருமையான தேசம் சிக்கிவிடாமல் தடுக்க-வேண்டியது என் கடமை. என் மதிப்பீடுகளை ஆதரிக்கும் நபர்கள் என் உரிமைகளை நான் வென்றெடுக்க நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தரும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

மத அடிப்படைவாதம் என்ற நோயானது பங்களாதேசத்தில் மட்டுமே இருப்பதாக எண்ணவேண்டாம். என் உயிருக்கு விடப்பட்டும் எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படமாட்டேன். நான் இத்தகைய ஒடுக்குதல்களையும் வன்முறைகளையும் தொடர்ந்து எதிர்த்து எழுதுவேன். மதச் சார்பு இல்லாமல் மனித நேயத்துடன் சிந்திக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்து இத்தகைய தீய சக்திகளுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடினால்தான் அவற்றைத் தடுத்து நிறுத்தமுடியும். அதுவரையில்  என் எதிர்ப்பை என்றும் நிறுத்திக்கொள்ளவேமாட்டேன்.

இந்த நாவலில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் என் கற்பனையில் உருவானவையே. உயிருடன் இருக்கும் அல்லது இறந்த நபர்களை அது குறிப்பதாக இருந்தால் அது தற்செயலானதே. 

இந்த நாவலில் ஏராளமான வன்முறை நிகழ்வுகள், சரித்திரச் சம்பவங்கள், தரவுகள், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றைப் பற்றி எழுதியிருக்கிறேன். என்னால் முடிந்த அளவுக்கு அவற்றின் உண்மைத்-தன்மையைச் சோதித்துப் பார்த்த பிறகே  எழுதியிருக்கிறேன். எகோதா, ஆஸ்கெர் காகஸ், க்லானி, பங்களாதேசத்தில் நடக்கும் மதவாத ஒடுக்குதல்களும் வன்முறைகளும் என்ற அறிக்கை, பங்களாதேசத்தில் நடக்கும் மத ஒடுக்குமுறைகள் : உண்மைகளும் தரவுகளும் என்ற அறிக்கை, பரிஷத் வார்த்தா ஆகியவற்றில் இருந்து நாவலுக்கான தகவல்களை எடுத்துக்கொண்டிருக்கிறேன். 

Series Navigation<< ரா. கிரிதரனின் “ராக மாலிகை”துருவன் மகன் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.