ரவீந்திரநாத் தாகூர் அற்புதமான ஒரு கவிஞர். அதற்கிணையான சுவாரசியமான ‘கதை சொல்லி’; ஆன்மீகவாதி. நாடகங்கள் எழுதியவர். ஒரு திரைப்படத்தையும் தாமே படைத்து இயக்கியவர். அவரது படைப்புகள் அனைத்துமே வங்கமொழி இலக்கியத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் நமக்கு அழகாக உணர்த்துவன.
‘கீதாஞ்சலி’யில் உள்ளம் பறிகொடுத்துப் பின் அவருடைய படைப்புகளை ஒவ்வொன்றாகத் தேடித்தேடிப் படித்ததுண்டு. உள்ளம் கரைந்து சிந்திக்க வைக்கும் படைப்புகள். ஒவ்வொரு படைப்பிலும், சிறு கவிதையிலும் காணும் கருத்துக்கள் எக்காலத்திற்கும் பொருந்தும். பல கவிதைகள் பொருள்செறிந்த கதை சொல்வன. அவற்றுள் ஒன்றினையே இப்போது பகிர்ந்துகொள்ள எண்ணியுள்ளேன்.

நள்ளிரவு; சன்னியாசியாகப் போகின்ற அவன் உரைத்தான்:
“இதுவே எனது வீட்டைவிட்டு நீங்கி கடவுளைத் தேட நல்ல சமயம். ஆ! என்னை இத்தனைநாள் இந்த மாயையில் ஆழ்த்திப் பிடித்திருந்தது யார்?”
கடவுள் அவனிடம் ரகசியமாகக் கூறினார், “அது நான்தான்.” ஆனால் மனிதனின் காதுகள் அடைத்திருந்தன.
படுக்கையின் ஒருபுறம் அவன் மனைவி, உறங்கும் குழந்தையை மார்பிலணைத்தவண்ணம் நிம்மதியாகத் தானும் உறக்கத்திலாழ்ந்திருந்தாள்.
மனிதன் கூறினான்: “யாரது? இத்தனை காலம் என்னை ஏமாற்றிவந்தது?”
ரகசியக்குரல் மறுபடியும் கூறியது: “அவர்கள் கடவுள்.” ஆனால் அவன் அதைச் செவியுறவில்லை.
குழந்தை ஏதோ கனவுகண்டு அழுதது; தாய் அதனை இன்னும் இறுக அணைத்துக்கொண்டாள்.
கடவுள் ஆணையிட்டார்: “நில், முட்டாளே, உன் வீட்டைவிட்டுப் போகாதே!” ஆனால் அவன் அதையும் கேட்கவில்லை.
கடவுள் பெருமூச்சு விட்டபடி சலித்துக் கொண்டார்: “எனது ஊழியன் என்னைப் புறக்கணித்துவிட்டு, பின் என்னைத்தேடி ஏன் எங்கெங்கோ அலைகிறான்?”
(தோட்டக்காரன் – கவிதைத் தொகுப்பிலிருந்து)

படிக்கும் நம் உள்ளத்தை யாரோ பிடித்து உலுக்குகிறார்கள் அல்லவா?
என் எண்ணங்கள் பின்னோக்கிச் செல்கின்றன……
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் சந்தித்த இளம்பெண்ணொருத்தி; என் நண்பரின் தூரத்து உறவு. மருத்துவம் படித்துக் கொண்டிருந்தாள். அவள்தாய் வங்கியில் வேலைபார்த்தாள். மிகுந்த பிரயாசையின் பேரில் புத்திசாலியான பெண்ணைப் பெரியபடிப்பு படிக்க வைத்துக்கொண்டிருந்தாள். பெண் பாடுவாள். ஒரு சந்திப்பின்போது, நான் பாடச்சொல்லிக் கேட்டதும், ‘கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்,’ என மிக இனிமையாகப் பாடினாள். அப்பெண்ணை அன்புமிகுதியில் அணைத்துக் கொண்டேன்.
“மைதிலி, உங்கப்பா என்ன பண்ணறார்?”
“ஆன்ட்டி, எனக்கு அப்பா இனிமேல் இல்லை,” என்றாள் ஆங்கிலத்தில். “ஐ டோன்ட் ஹாவ் எ ஃபாதர் எனிமோர்.” துணுக்கென்றது. என்ன சொல்கிறாள் இந்தப்பெண்? தகப்பனார் இறந்துவிட்டார் என்பதை இப்படிச் சொல்ல மாட்டார்களே! அதுவும் படித்த பெண்! என்னையறியாமலே அனிச்சையாய் எழுந்த என் முகத்தின் கேள்விக்குறியைக் கண்டுகொண்ட அந்த சுட்டிப்பெண் சொன்னாள்: “ஆன்ட்டி! எனக்கு எட்டு வயசாக இருக்கும்போது எங்கப்பா திடீர்னு வீட்டை விட்டுப்போய் சன்யாசம் வாங்கிண்டுட்டார். என் தங்கைக்கு அப்போ ஆறு வயசு. அவர் இப்போ எங்கே என்று யாருக்கும் தெரியாது.”
எனக்கு வேதனையில் வயிறு குமைந்தது. மணிமணியான இரு சுட்டிப் பெண்கள். தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கும் அன்பான மனைவி. எதனைத் தேடி அந்த மனிதர் இப்படிச் செய்தார் என யோசித்தேன். விடை கட்டாயம் கிடைக்கவில்லை!!
அப்பெண்ணின் தாயினிடம் அனுதாபத்திற்கு மாறாகப் பெரும் மதிப்பு உண்டானது. ஒற்றையாக நின்று வாழ்க்கையில் எதிர்நீச்சலிட்டு குழந்தைகளை வளர்ப்பதல்லவோ பெரிய தவம்? தன் சொந்த ஆசைகளை மூட்டைகட்டி வைத்துவிட்ட அன்பு சார்ந்த இந்தக் கடமை இயற்றல் அல்லவோ சன்யாசத்தினும் மேலான துறவு! இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது.

தாகூரின் இந்தக் கவிதையைப் படித்தபோதும் அதே வேதனையில் உள்ளமும் உடலும் நெகிழுகிறது. எதனைத்தேடி மனிதர்கள் இந்த சன்யாசப் பாதையை நோக்கி வீணாக ஓடுகிறார்கள்? சிறுவயதிலேயே தேடல் ஆரம்பித்தால் அது உண்மையான தேடல்! இவ்வாறு, இல்லறத்தில் புகுந்து, வாழ்ந்து, பொறுப்புகள் வந்தபின் பாதியில் அவற்றைப் புறந்தள்ளிவிட்டு ஓடுவது ஏன்? ‘கடவுளைத்தேடி’ என்பது அப்பட்டமான பொய் எனவல்லவா தோன்றுகிறது! எதிலிருந்தோ தப்பிக்கப்பார்க்கும் மனபாவம்! அதற்கு இதுவொரு சாக்கு! நமது வாழ்க்கை நெறியும்கூட கிரஹஸ்தாசிரமம் முடிந்து வானப்பிரஸ்தமும் கழிந்தபின்தானே சன்யாசத்தை ஏற்கக் கூறுகிறது?
தாகூரின் படைப்பு இவர்களையே சாடுவது போலல்லவா இருக்கிறது!
நீண்டநாட்கள் முன்பு படித்த சித்தார்த்தனின் கதை (புத்தர்) நிழற்படலமாகக் கண்முன் தோன்றியது. இதனைப் படிப்பவர்கள் தாகூரின் படைப்பின் தொடர்ச்சியாக இதனைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஞானம்பெற்ற கௌதம புத்தர் திரும்பத் தனது நாட்டிற்கு வருகிறார். அனைவரும் அவரைக் கொண்டாடி வரவேற்கின்றனர். அரண்மனை வாயிலில் வந்து நிற்கும் அவரை, வளர்ந்த மகன் ராகுலன் எதிர் கொள்கிறான். பின்னால் தூணருகே அமைதியே உருவாக நிற்கிறாள் மனைவி யசோதரை! காவியுடை அணியாவிடினும் எளிய ஆடையில், அணிமணிகள் ஏதும் பூணாமல் அவளே துறவிபோல நிற்கிறாள். கணவனே தன்னைப்பிரிந்து சென்றபின் அலங்காரங்கள் தேவையில்லை என ஒதுக்கிய துறவு மனப்பான்மை. அரண்மனையை நீங்கிச் செல்லவில்லை. ஆனால் ஆடம்பரமான வாழ்வை ஒதுக்கி எளிய உணவையே உண்டாள். கணவன் அளித்துச் சென்ற குழந்தையை நன்கு பொறுப்புடன் வளர்த்துப் பெரியவனாக்கி விட்டாள். கணவன் அவளிடம் அதனைச் செய்யக் கூறிவிட்டுச் செல்லவில்லை! பொறுப்பு இருவருக்கும் தானே? தான் ஒருத்தியாகவே அதனை நிறைவேற்றத் துணிந்தாள் அவள்.
பலவாண்டுகளின் முன்பு சித்தார்த்தன் அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிய பின்னர், அவளுடைய அழகிற்காகவும், பண்பிற்காகவும் அவளை மணந்துகொள்ளப் பல அரசர்கள் போட்டியிட்டனர். ஒருவர் பக்கமும் அவளுடைய பார்வை கூடத் திரும்பவில்லை.
இறைவன் தனக்கு விதித்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு தவமாகவே அதனை வாழ்ந்தவளின் முகம் இன்று அந்தத் தவவலிமையின் திவ்வியமான தேஜசுடன் ஜ்வலிக்கின்றது. கணவனை – அல்ல அல்ல – புத்தரைக் கண்ட தலை குனியவில்லை; பதறவில்லை; கண்கள் நீர் பொழியவில்லை; உதடுகள் துடிக்கவில்லை. மாறாகச் சின்னஞ்சிறு புன்னகை இதழ்க்கடையோரம்….
என்ன சொல்கிறது அப்புன்னகை?
‘யார் துறவி எனத் தேவரீர் இப்போது அறிந்து கொண்டீர்களா?’- இப்படித்தானே கேட்பதாக எண்ணினீர்கள்?
ஆனால் இல்லை! எதற்காக அவள் புத்தரின் மனதைப் பச்சாதாபத்தில் அழுத்தித் தன்னையும் வருத்திக்கொள்ள வேண்டும்? அது துறவிக்கு அழகல்லவே!
கடமையைப் புறக்கணித்துச் சென்றவர், ஆழ்ந்து தவம் செய்து, வாழ்வே மாயை என உணர்ந்து வந்திருக்கிறார். உலகிற்கும் அச்செய்தியைப் பரப்பப் போகிறார். அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை அவருக்கு!
“என் கடமையைச் சரிவரச் செய்துவிட்டேன், இதுவே நானியற்றிய தவம்; அதன் பலன்,” என்று உணர்த்தியது அவள் புன்னகை. முகம் மேலும் மலர்ந்து ஆத்மத்திளைப்பில் விகசித்தது.
தாகூரின் படைப்பினில், அவர் சொல்லாமல் உட்பொருளாக வைத்தது இதுதானா?
பதில் உங்களிடமே!
2 Replies to “யசோதராவின் புன்னகை”