பிபூதிபூஷன் பந்தோபாத்யாயா எழுதிய ‘ஆஷானி சங்கேத்’ நாவலின் மொழிபெயர்ப்பு
தமிழில்: சேதுபதி அருணாசலம்

கங்காசரணின் பள்ளி நன்றாக நடந்து வந்தது.
அன்று காலை ஏழெட்டு புதிய மாணவர்கள் களிமண்ணாலான மைக்குடுவையோடு வந்திருந்தார்கள். கங்காசரண் மதியம் வரை அவர்களோடு நேரம் செலவிட்டான். பெரும்பாலான மாணவர்கள் விவசாயக் குடும்பத்தினர்கள். அவர்கள் குடும்பத்துப் பெரியவர்களுக்குத் தங்களுடைய பெயரைக்கூட எழுதத் தெரியாது. அவர்கள் வாழையும், கத்திரிக்காயும் விளைவித்துப் பிழைப்பவர்கள். எழுதுவது படிப்பதெல்லாம் அவர்களைப் பொருத்தவரை அதி நவீனமான விஷயம்.
”காலைலேருந்து ஒரு எழுத்துகூட எழுத வரல. ஏர் பிடிச்சுப் பிடிச்சு விரலெல்லாம் வளைஞ்சு போச்சு, அதெல்லாம் நேராக ஆறு மாசமாகும். ஏய் புடோ, இங்கே வா, போய் புகையிலை கொண்டு வா. உள்ளே சமையலறையிலிருந்து நெருப்பு எடுத்துட்டு வா,” என்றான் கங்காசரண்.
உடனே இரண்டு மாணவர்கள் எழுந்து நின்றனர்.
”இந்த வேலைக்கு எதுக்கு ரெண்டு பேர்? புடோ ஒருத்தன் போனாப்போதும்” என்ற கங்காதரண், ”உன் அப்பா வீட்ல இருக்காரா?” என்று அடுத்த மாணவனைப் பார்த்துக் கேட்டான்.
”ஆமா, ஸார்.”
”நாளைக்கு வந்து எனக்கு சவரம் செஞ்சுட்டுப் போகச் சொல்லு.”
“ஸார், நாளைக்கு அவர் சவர வேலைக்கு இன்னொரு கிராமத்துக்குப் போகனும்.”
“ஓ, அப்போ அவர் திரும்பி வந்தப்புறம் வந்துட்டுப் போகச்சொல்லு.”
அப்போது உள்ளே இருந்து அனங்கா அழைத்தாள்.
கங்காசரண் உள்ளே சென்றான். “என்ன வேணும்?”
”நாள் பூராம் இப்படி நீங்க இந்தப் பசங்களோடயே இருந்தா சரிப்பட்டு வராது. சமையல் விறகு தீர்ந்து போச்சு. ஏதாவது செய்ங்க.”
”அதுக்குள்ளயா? கொஞ்ச நாள் முன்னாடிதானே ஒரு வண்டி விறகு கொண்டுவந்தேன். அதுக்குள்ள தீர்த்துட்டியா?” கங்காசரண் ஆச்சரியமாகக் கேட்டான்.
அனங்கா அதைக் கேட்டு மனம் புண்பட்டாள். “ஆமா, விறகு சாப்பிடற பண்டம்தானே? நான் எல்லாத்தையும் சாப்பிட்டுட்டேன். தினமும் ஒரு பானை அரிசி பொங்கனும். இப்போதான் பத்துப் பன்னிரண்டு காதா அவல் சமைச்சேன். அதுக்கெல்லாம் விறகு செலவாகத்தானே செய்யும்?”
அனங்கா இதைச் சொல்லும்போது அவள் குரலில் கொஞ்சம் பெருமையும் தொனித்தது. இப்படிப்பட்ட வசதியை, பெற்றோர் வீட்டில் அவள் அனுபவித்ததே இல்லை. கல்யாணமான ஆரம்ப வருடங்களில்கூட அவள் அதை அனுபவித்ததில்லை.
பாசுதேவ்பூர் மற்ற ஊர்களுக்கு எவ்வளவோ பரவாயில்லை. ஆனால் அங்கேயும் வீட்டுப் பள்ளிக்கூடம் மட்டும்தான் வருமானத்துக்கான ஒரே வழி. யாரும் இங்கே கொடுப்பதைப்போலப் பொருட்களைத் தானமாகக் கொடுத்ததில்லை. அவர்கள் இருவரும் இப்போதும் அவ்வப்போது பாசுதேவ்பூர் குறித்துப் பேசிக்கொள்வார்கள்.
மதிய சாப்பாட்டுக்குப்பின் கங்காசரண் ஓய்வாக இருந்தபோது, அனங்கா அதைப் பற்றி மீண்டும் பேச்செடுத்தாள். “திரும்பியும் பாசுதேவ்பூர் போகப்போற எண்ணம் இருக்கா?”
“ஏன்?” என்று ஆச்சரிமாகக் கேட்டான் கங்காசரண்.
“இல்லை, சும்மாதான் கேட்டேன். அந்த வீட்டை நீங்க இன்னும் விக்கலியே…”
“நமக்கு இந்த ஊர் சரிப்பட்டு வருமான்னு அப்போ எனக்குத் தெரியல.”
“ஆனா பட்சலாவை என்னால இன்னும் மறக்க முடியல. தாமரைக்குளம் ஞாபகம் இருக்குதானே?”
”ஓ! நல்லா ஞாபகம் இருக்கு. நல்ல குளம். நிறைய தண்ணீர்.”
”சித்திரை மாசத்துல கொஞ்சம்கூட தண்ணி இருந்ததில்ல. ஆனா ஊர்மக்கள் ரொம்ப அன்பா இருந்தாங்க. மூணு பக்கம் வயல்வெளி. பெரிய சதுப்புநிலம். ரொம்ப அழகான இடம்.”
”தாமரைக்குளக் கரையில ஒரு வீடு கட்டனும்னுகூட நீங்க ஆசைப்பட்டிங்களே?”
”ஆமா ஆமா. அறுவடை முடிஞ்சு, புது வைக்கோல் வந்ததும் கட்டனும்னு நினைச்சேன். ஆளுங்ககிட்ட அதுக்காகச் சொல்லியும் வச்சேன். நமக்குன்னா, கொஞ்சம் குறைஞ்ச விலைலகூட தந்திருப்பாங்க.”
அனங்கா விரல்விட்டு எண்ணினாள். “ஹரிஹர்பூர்ல கல்யாணமாச்சு. அப்புறம் பட்சாலாவுக்குப் போனோம். அங்கேருந்து வாசுதேவ்பூர் போனோம். இப்போ இங்கே. நாம நிறைய ஊர் சுத்திருக்கோம் இல்ல?”
”ஹரிஹர்பூர்லயே யாரும் அத்தனை இடம் பார்த்ததில்ல,” கங்காசரண் பெருமையாகச் சொன்னான்.
“சும்மா சுத்திப் பார்க்கறது மட்டுமில்ல. நாம ஒவ்வொரு ஊர்லயும் வாழ்ந்திருக்கோம்.”
”ஆமா ஆமா.”
“ஆனா, ஒரு விஷயம்…”
“என்ன?”
”இந்த ஊரை விட்டு வேறெங்கயும் போக வேண்டாம்.”
”எல்லாம் சரியா இருக்கறவரைக்கும், இங்கேருந்து போறதப் பத்திப் பேச்சே இல்லை. பிஸ்வாஸ் மஷாய்தான் இந்த ஊர்ப் பெரியவர். அவரே உறுதி கொடுத்தப்புறம் எனக்கு ஒரு கவலையும் இல்லை.”
”அது தெரியும். ஆனால் நீங்க ஒரு இடத்துல நிலையா இருக்கமாட்டீங்க. அதைப் பத்திதான் கவலை எனக்கு.”
”கொஞ்ச காசு சம்பாதிச்சப்புறம், அந்த அலைபாயற மனசு அடங்கிடும். அதுவுமில்லாம இங்கே பக்கத்துலயே எவ்வளவு அழகான ஒரு நதி வேற இருக்கு.”
“ஆனா, எனக்கு ஒரு தடவை பட்சலாவுக்குப் போய்ட்டு வரனும்னு ஆசையா இருக்கு.”
“ஓ! அதை நீ தாராளமாச் செய்யலாம். மாட்டு வண்டில ஒருநாள் பயணம்தான். பிஸ்வாஸ் மஷாய்க்கிட்ட தாராளமா வண்டிக்கு ஏற்பாடு பண்ணித் தருவார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.”
“அப்போ கேட்டுப் பாருங்களேன்?” அனங்கா ஆர்வமாகக் கேட்டாள்.
”உண்மையாலுமே போகணும்னு ஆசைப்படறியா?” கங்காசரண் புன்னகைத்தான்.
“ஆமா, உண்மையா.”
“அப்போ, படோல், கோக்கா ரெண்டு பேரையும் கூட்டிட்டுப் போ.”
“ஓ, அப்போ நீங்க?”
“பள்ளிக்கூடம்? லீவுதான் விடணும். யோசிக்கறேன்.”
”பட்சலாவை விட்டுவந்து எத்தனை வருஷமாச்சு! நாலஞ்சு வருஷம் இருக்குமே. நாவிதர் மனைவி பினி (Bini) யை ஞாபகம் இருக்குதானே? நம்ம மேல அவளுக்கு எவ்வளவு பிரியம்! நம்மளப் பாத்தா அவ ரொம்ப சந்தோஷப்படுவா. மாந்தோப்புக்குப் பக்கத்துல நாம இருந்த வீடு ஞாபகம் இருக்கா? அது மாதிரி இது வரையிலும் எத்தனை வீடு கட்டிருப்போம்!”
இப்படி அரட்டையிலேயே மதியம் கழிந்து குளிர் இருட்டிக்கொண்டு வந்தது. கங்காசரண் எழுந்து நின்றான். “பக்கத்து கிராமத்துக்குப் போய் இன்னும் சில மாணவர்களைச் சேக்கறதைப் பத்திப் பேசனும். எவ்வளவு அதிகம் பசங்க இருக்காங்களோ, அவ்வளவு வசதி.”
”ஏதாவது சாப்பிட்டுட்டுப் போங்க.”
கங்காசரண் சிரித்தான். “இப்படியே எனக்கு ஒரு கெட்டப் பழக்கம் உண்டாக்கிடாத.”
அனங்காவும் சிரித்தாள். “லக்ஷ்மி தேவி கொடுக்கும்போது வேண்டாம்னு சொல்லுவானேன்? இருங்க இங்கேயே கொண்டுவரேன்.”
ஒரு கல்பாத்திரத்தில் பப்பாளித் துண்டுகளும், ஒரு சிறு வெல்லக் கட்டியும், ஒரு வெண்கலக் கிண்ணத்தில் பாலாடையும் கொண்டுவந்தாள்.
சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது கங்காசரண் சொன்னான், “எனக்கு ஒரு யோசனை.”
“என்ன?”
”நாம இனிமேல் சாயந்திரம் டீ குடிக்கறத வழக்கப்படுத்திக்கிட்டா என்ன?”
“ஆஹா, உடனே எல்லாம் வேணும்னு பறக்கறீங்களே?” அனங்கா பழிப்புக்காட்டினாள்.
“ஏன்?”
“அதெல்லாம் வசதியானவங்க குடிக்கறது. நமக்குச் சரிப்பட்டு வராது.”
“உனக்கு டீ போடத் தெரியாதுங்கறதுதான் உண்மையான காரணம்,” என்று கங்காசரண் சிரித்தான்.
”ஆஹா” என்று அனங்கா பழித்துக்காட்டினாள்.
“அப்படியா? நீ எப்போ டீ போட்டுக் குடுத்தே, சொல்லு பாக்கலாம்?”
அனங்கா இப்போது ஒத்துக்கொள்ளும் வகையில் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, “செஞ்சு பார்த்தா போச்சு. பாசுதேவ்பூர்ல சக்கோத்தி வீட்ல தினமும் டீ குடிப்பாங்க. எத்தனையோ முறை அதை எப்படி செய்யறாங்கன்னு நான் பாத்துருக்கேன்.”
ஒருவழியாக கங்காசரண் பக்கத்து கிராமத்துக் கிளம்பிச் செல்கையில், கிட்டத்தட்ட சூரிய அஸ்தமனமாகிவிட்டது. நாள் பூராவும் வெயிலில் காய்ந்தபின், உலா, காசிபனா (কাশীবনে) புற்கள் மணம் பரப்பிக்கொண்டிருந்தன. அன்று ஓரளவு குளிரும் இருந்தது.
ஈச்சமரத்தின் மேல் ஒருவன் பானையோடிருந்ததைப் பார்த்தான் கங்காசரண். கங்காசரண் கத்தினான், “ஓய் ச்சிடாம், ஒருநாள் எங்களுக்கும் கொஞ்சம் ஈச்சங்கள்ளு தாயேன்?”
“நாளைக்கே ஆகட்டும் மஷாய். பசங்ககிட்ட ஒரு பாத்திரத்தைக் குடுத்தனுப்புங்க.”
இந்த ஊரில் யாரும் அவனுக்கு மறுப்பு சொல்வதில்லை என்று கங்காசரண் இறுமாந்தான். பாட்சாலாவிலோ, பாசுவேத்பூரிலோ இப்படி இருந்ததில்லை.
(தொடரும்)
One Reply to “மின்னல் சங்கேதம் – 2”