பொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்

முன்னூறு வகையான ராமாயணங்கள் இருப்பதை ஏ.கே.ராமானுஜம் முன்வைத்ததுபோல அவற்றிலிருந்து கிளைத்த பலவிதமான சிற்பம், ஓவியம் மற்றும் வாய்மொழிக்கதைகளைத் தொகுத்தால் ஆயிரத்துக்கும் அதிகமான ராமாயணக் கதைகளை நாம் சென்றடைய முடியும். மலையின் சிறு குமிழியிலிருந்து பீறிடும் ஊற்று பலவகையான நிலங்களில் கலந்து நூற்றுக்கணக்காகப் பிரிந்து கடலில் கலப்பதுபோல. மூலக்கதைகளான முன்னூறு ராமாயணங்களுக்கும் பலவித முரண்கள் இருப்பதுபோல, அவற்றை வாய்பாட்டுகளாகவும், ஓவியங்களாகவும் உருமாற்றியிருப்பனவற்றுள்ளும் பல முரண்கள் உள்ளன. ஆனால் இவை அனைத்தும் சேர்ந்ததுதான் நம் வரலாறு.

வங்கத்தில் பொடுவா கலைஞர்கள் பல நூற்றாண்டுகளாக வரைந்துவரும் ஓவியங்களிலும் இப்படிப் பல பாணிகள் உள்ளன. சமூகக் கதைகள், யமனின் தண்டனைகள், ஈராக்கில் நிகழ்ந்த யுத்தம் போன்ற பல வகையான சுவர் ஓவியங்களை வரைந்தாலும் ராமாயணக் கதைகள் இவர்களது தனித்துவமான அடையாளமாக உள்ளது. இவர்கள் ராமாயணத்தில் வரும் அனைத்துக் காட்சிகளையும் வரைவதில்லை. தேந்தெடுக்கப்பட்ட சில காட்சிகள் மட்டுமே வரைகின்றனர். கைகேயிடம் வரம் கொடுத்த தசரதன், மூக்கறுந்த சூர்பனகை ராவணனிடம் முறையிடுதல், ஜடாயுவின் போராட்டம், தீக்குளிக்கும் சீதை எனக் குறிப்பிட்ட சில நிகழ்வுகளை மட்டுமே மீண்டும் மீண்டும் வரைகின்றனர்.

 ‘The Ramayana in Bengali Folk Paintings’ எனும் புத்தகத்தில் மாந்தகிராந்தா போஸ் இந்த ஓவியங்களைப் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். அவரது ஆய்வு சுவர்களிலும், துணிகளிலும் ஓவியம் வரைந்து வைக்கும் காலத்திலிருந்து தொடங்குகிறது. பொடா ஓவியங்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் கீர்த்திவாசர் எழுதிய வங்க மொழி ராமாயணத்திலிருந்து தொடங்கியிருக்கலாம் என ஊகிக்கின்றனர். பொதுவான கருத்தாக இருந்ததை மண்டகிராந்தா போஸின் ஆய்வு மாற்றியுள்ளது. வால்மிகி இயற்றிய ராமாயணத்தில் இல்லாத பல நிகழ்வுகளைக் கீர்த்திவாசர் இயற்றியுள்ளார். இதற்குப் பல முன்மாதிரிகள் இந்தியப் புராணங்களில் உள்ளன. சங்கப் பாடல்களில் ராமன் வரும் இரு பாடல்கள் வால்மிகியிலும் இல்லை. இவை நாட்டார் பாடல்களாகப் புழக்கத்தில் இருந்திருக்கும். அங்கிருந்து அவை சங்கப் பாடல்களாக மாறியிருக்கலாம். இன்னொரு விதத்தில் வாய்மொழிப் பாடல்களும், பாணர் கதைகளும் இட்டுகட்டப்பட்டு கவிஞர்களிடம் வந்து சேர்ந்திருக்கலாம். எப்படியாயினும், நமது செவ்வியல் இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்தில்கூட தனி மரபாக நாட்டுப்புறக் கதைகள் இருந்தன எனப் பல ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

மாந்தகிராந்தா போஸ் அவர்களுக்கு முன்னோடி என டேவிட் மேக்குட்சியன், பந்தோபாத்யாயா, விஷ்வதத்தா போன்ற சிலரைக் குறிப்பிடலாம். முக்கியமாக, தனது 41ஆவது வயதிலேயே இறந்துபோன டேவிட் கிட்டத்தட்ட நாற்பதாயிரத்துக்கும் அதிகமான ஓவியங்களைப் புகைப்படம் எடுத்திருந்தார். அவரது படங்கள் ஓவியக்கூடங்களில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. மக்களிடையே புழங்கும் கலையாக இருந்தாலும் பணபாட்டு ஆய்வுகளில் இக்கலையை மீட்டெடுத்த பெருமை இவருக்கு உண்டு.

பொடுவா பாணி ஓவியங்களில் கூனியின் நிகழ்வு கிடையாது. ராமாயணத்தின் முக்கியமான நாடகீய தருணத்தின் தொடக்கத்தில் அமைந்திருக்க வேண்டிய இந்தக் காட்சி பொடுவா பாணியில் இல்லை. இந்த குறிப்பிட்ட இடைவெளி வேறொரு ராமாயணக் கதையில் இருந்திருக்கலாம். பதினெட்டாம் நூற்றாண்டில் மேற்கு வங்கத்தில் எழுதப்பட்ட ராமபிரசாதி ஜகத்ராமி ராமாயணா எனும் நூலில் சீதையைக் காளியாக வழிபட்டு எழுதப்பட்ட நிகழ்வுகள் உள்ளன என்பதால் வங்கத்தில் மூல ராமாயணத்திலிருந்து பிரிந்து பல வகையான கிளைக்கதைகள் இருந்தன என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. ஒரிஸா, அசாம் நிலங்களில் இருந்த நாட்டார் வகைக் கதைகள் வங்கத்திற்குள் வந்திருக்கலாம். ஆதிகவி வால்மிகி எழுதிய ராமாயணத்திலிருந்து அடிப்படையான நிகழ்வுகளை எடுத்திருந்தாலும் அந்தந்தக் காலத்தின் சமூக விழுமியங்களைப் புகுத்துவதற்கு நாட்டார் கலைகள் உதவியுள்ளன.

பொதுவாக வங்கத்தில் சாக்த பக்தி மார்க்கம் பதினேழாம் நூற்றாண்டிலிருந்து தழைத்திருப்பதாகப் பல பிரதிகள் சொல்கின்றன. சாக்தம் அவர்களது கலை ரசனையில் பெரிய ஆதிக்கத்தை செலுத்தியிருக்கிறது. வைணவ தத்துவத்துக்கு நெருக்கமானவற்றையும் அவரகள் சாக்தம் மூலமே அணுகியிருக்கின்றனர்.

ஓவியம், பாடல்கள், கவிதைகள், கோயில் சுவர் ஓவியங்கள், சிலைகள் என வங்கத்தின் பாணி பிரத்யேகமாக வளர்த்தெடுக்கப்பட்டன.

 1. கதை அல்லது நிகழ்வின் உரை வடிவம்
 2. பாடல்களை இயற்றிப் பாடுவது
 3. கோவில் சுதை சிற்பங்கள்
 4. துணியில் ஓவியங்கள்
 5. வீட்டு சுவர் ஓவியங்கள்

பொடுவாக்கள் என்பவர்களை பற்றி நாம் பதினைந்தாம் நூற்றாண்டுவரை பின்சென்று அறிந்துகொள்ள முடியும்.  ஆங்கிலேயர்களின் காலகட்டத்தில் நாடோடிகளாக வாழத் தொடங்கினாலும், ஆரம்ப காலத்தில் பாணர்களைப்போல அவர்களுக்கு நல்ல மதிப்பு இருந்திருக்கிறது. கதைகள் சொல்வது இவர்களது பிரதானமான வேலை என்றாலும், அதற்கு உறுதுணையாக இருப்பதற்காக ஆறு முதல் பத்து துணிகளில்  நிகழ்வுகளை ஓவியங்களாகத் தீட்டி எடுத்துச் செல்வர், ஒவ்வொரு ஓவியத்தைச் சுற்றியும் வேலைப்பாடு மிகுந்த சட்டகங்கள் இருக்கும். இன்று ஓவியங்களில் கையெழுத்து அல்லது வரைந்தவரைக் குறித்து ஏதேனும் அடையாளம் இருப்பதுபோல , பொடுவா-க்களின் கீழே ஊருடன் சேர்ந்து வரைந்தவரின் அடையாளமும் இருக்கும்.

பொதுவாக, பண்டைய காலத்தில் இருந்த குறுநில மன்னர்களின் அரண்மனையில் ஆசுகவியாகவும், ஓவியர்களாகவும் இம்மக்களே இருப்பார்கள். கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் உளவு பார்க்க வருபவர்கள் ஓவியம் தீட்டுபவரகளாகவோ , கதைகள் சொல்லும் பாணர்களாகவோ இருப்பார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் மதிப்புள்ள இடத்தில் இருந்த பொடுவாக்கள், ஆங்கிலேயர்களின் புது சட்டங்களினால் மெல்ல சமூகத்தின் கீழ் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.  ஏதோ ஒரு காலத்தில் எச்சிலைத் தொட்டு ஓவியங்கள் வரைந்த ஒரு பொடுவா கலைஞனால் பொடுவா இனத்தின்மீது இப்படி ஒரு சாபத்தைச் சிவன் இட்டதாகவும் புராணக்கதை உண்டு. நவாபுகளின் காலத்தில் பல முஸ்லிம் ஓவியர்கள் ஊரூராகச் சென்று பொடுவாக்களைக் காட்டிக் கதை சொல்லிச் சம்பாதித்தனர். பொதுவாகப் புராணக் கதாபாத்திரங்களைப் பற்றிப் பாடுவதால் தங்களுக்கு ஓர் இந்து மாற்றுப் பெயரையும் இவர்கள் வைத்துக்கொண்டார். நாங்கள் இருவித வாழ்வை வாழ்பவர்கள் எனக் குறிப்பிடுகிறார்கள்.

காலப்போக்கில் பொடுவா இனத்தினர் பாடுவதைக் குறைத்துக்கொண்டு ஓவியங்கள் வழியே மட்டும் கதை சொல்பவர்களாக மாறினார்கள். காலிகட் பொடுவா ஓவியர்கள் மெதினிபூர் தாலுகாவிலிருந்து வரும் இந்துக்கள். இன்று பல முஸ்லிம் மதத்தினரும் ஓவியர்களாக இருக்கிறார்கள். ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைளை வரைந்தாலும், முன்னதே பிரதானமாகக் காட்சிக்குக் கிடைக்கிறது. பாம்புகளின் அரசியான மானசா தேவி, யமன், காளி, சீதா, ஜடாயு, சூர்பனகை போன்றவை அதிகம் வரையப்படுகின்றன.

மரப்பட்டைகள், சிறு குச்சிகளை வெயில் காலத்தில் சேகரிக்கத் தொடங்குகிறார்கள். சித்திரையில் பலவிதமான மைகளைத் தயாரிக்கத் தொடங்குகிறார்கள். இலைகளிலிருந்து பச்சை, சுடவைத்த அரிசியிலிருந்து கரி மற்றும் மஞ்சள் நிறமும், துருப்பிடித்த ஆணிகளிலிருந்து பழுப்பும், செங்கல்லிலிருந்து செம்மண் நிறமும், மஞ்சளை அரைப்பதினால் வரும் நிறம் என பலவற்றைச் சேர்க்கிறார்கள். இவ்வேலையில், குடும்பத்தினர் அனைவரும் ஈடுபடுகின்றனர். நிறக்கலவைகள் தயாரானதும் ஒவ்வொருவரும் தங்கள் தலைமுறை வழியாகப் பயின்ற பாணியில் படங்களை வரையத் தொடங்குவார்கள்.

1960களின் முற்பகுதிவரை தனிநபர்களின் நிதி உதவியாலும், கலை ஆர்வலர்கள் வாங்கும் படங்களின் வழியாகவும் நிலைத்து வந்தவர்களுக்கு வங்க அரசு உதவித்தொகையும், ஓவியங்களுக்கு கணகாட்சியும் வைக்கத் தொடங்கியது. புராண ஓவியங்கள் தவிர அன்றைய சமூக மாற்றங்களைக் காட்டும் ஓவியங்களும் தீட்டப்பட்டன. குடும்பக்கட்டுப்பாடு, கஞ்சா / அபின் போன்றவற்றுக்கு எதிரான ஓவியங்களைத் தீட்டும்படி அரசு உதவித்தொகை அளித்தது. அதேபோலக் கற்பழிப்பு, பெண் கல்வி, சிறுவர் சிறுமியர் மீதான வன்முறை போன்றவை சமீபகாலங்களில் அதிகப் பிரபலமான ஓவியங்களாகத் தீட்டப்படுகின்றன.

இம்மாற்றங்களைப் பார்க்கும்போது ஒன்றை நம்மால் உணர முடிகிறது. பொடுவாக்கள் இக்கலையை ஒரு நிலைத்தன்மை கொண்ட ரசனைகள் மீது கட்டப்படும் ஒன்றாக இருக்கக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். புராணங்கள் மற்றும் இதிகாசத்தில் சொல்லப்பட்டவை என்ற காரணங்களினால் பழங்கால விழுமியங்களை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. மாறாத எதுவும் இப்புவியில் இல்லை என்பதைப் பிரகடனப்படுத்தும் வடிவமாக இக்கலை அமைந்துள்ளது. சீதை தீக்குளிப்பது, ராமர் காடேறுவது, ஜடாயுவின் மரணம், நெருப்பில் சென்ற சீதை காளி வடிவம் எடுப்பது எனப் பொடுவா-க்கள் தங்கள் ரசனைகளுக்கும் உணர்வுகளுக்கும் ஒரு வடிவம் தருபவையாக மாறியுள்ளன.

பொடா எனும் நிகழ்த்துக்கலை

பொடா பாட்டும், ஓவியமும் ஒருங்கே அமைந்த ஒரு நிகழ்த்துக்கலை. ஒரு குறிப்பிட்ட இடத்தில், பார்வையாளர்கள் முன்னிலையில் இக்கலை நிகழும்போது அரங்கின் உணர்வுகளும் இக்கலைக்கு மேலதிக அர்த்ததை அளிக்கும். கதைப்பாடல்போல பாடலைப் பாடும்போது ஓவியங்களும் முழுதாகப் பிரித்துக்காட்டப்படும். பாடல்களின் உணர்வு, பாடுபவரின் தனித்தன்மை, கதை சொல்லும் பாணி, குரலின் குழைவு எனக் கலவையான அடிப்படைகளைக் கொண்டே இக்கலையின் அழகியலைப்பற்றி நாம் ஒரு புரிதலுக்கு வரமுடியும்.

ராமாயண நிகழ்கலையில் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் பாடலும் அரங்கேறும். கூடவே ஓவியங்களும் பார்வையாளர்களுக்குக் காட்டப்படும்.

 1. ராமர் சீதா திருமணம்
 2. ராமர் காடேறும் நிகழ்வு
 3. சீதா மாயமானின் அழகில் மயங்குவது
 4. ராவணன் சீதாவின் அழகில் தன்னிலை மறப்பது
 5. சீதாவை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வது
 6. இலங்கைக்கு அனுமன் நுழையும் காட்சி
 7. போர் முனைக்காட்சிகள்
 8. அனுமன் சஞ்சீவினியைத் தூக்கி வருவது
 9. கும்பரணன் வருகை
 10. இந்திரஜித் இறப்பு
 11. ராவணன் இறப்பு
 12. சீதை தீக்குளிப்பது

ஒவ்வொரு காண்டமாகச் சொல்லும்போது பொடுவா கலைஞர்களின் பாணி மாறுபடும். பிர்பிஹிம் பொடுவா பாணி கீர்த்திவாசனின் ராமாயணத்தை மிக நெருக்கமாகத் தொடர்கிறது. ஆங்காங்கே பாடுபவர்களின் கற்பனைக் கதையை வெளியே கொண்டுசென்றாலும் பெரும்பாலும் அவை ஏதேனும் ஒரு சமகால நிகழ்வின் விழுமியங்களை ஒப்பிடுவதற்காகவோ மெருகேற்றுவதற்காகவோ மட்டுமே இருக்கும்.

பல பொடுவாக்கள் குழுவாகச் செல்வதால் ஒவ்வொருவரும் ஒரு சிறு பகுதியைக் கையாள்வர். சில சமயம் அவர்களுக்கு இடையே சம்பாஷனை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அறப்பிறழ்வை விவாதிக்கும்பொருட்டு இருக்கலாம். ‘சித்திராகர்’ என அழைக்கப்படும் இவர்கள் ஓவியங்களைச் சுட்டிக்காட்டிக் கதையை விவரிப்பார்கள். திறந்தவெளி அரங்கங்களாக இருப்பதால் பல சமயங்களில் பார்வையாளர்களின் கேள்விக்கணைகளும் பதில்களும் நிறைந்திருக்கும்.

உரையாடல்களும் கதைப் போக்கும் மட்டுமே இவர்களது தனித்துவமானது என்றில்லை. கதையோடு உணர்வுபூர்வமாக அவர்கள் ஒன்றும்போது எப்போதோ நிகழ்ந்த கதை என பொடுவாக்களும் பார்வையாளர்களும் நினைப்பதில்லை. இதோ இங்கே இப்போது ராமன் சீதா கிடைக்காமல் தத்தளிக்கிறான் எனும் நினைப்பைப் படங்கள் வழியாகவும் உணர்ச்சிகளை சரியானபடி காட்டுவதன் வழியாகவும் நிலைநாட்டுகிறார்கள். படங்களைக் காட்டுவதினால் இக்கலை காட்சிப்படிமமாக முழுமை பார்ப்பவர்க்கு முழுமை பெறுகிறது.

பொடுவா கலைஞர்களில் முன்னோடிகளாகக் கருதப்படுபவர்கள்: நிரஞன் சித்ரகார், தபன் சித்ரகார், நூர்ஜஹான் சித்ரகார், கோஹன் சித்ரகார், கல்பனா சித்ரகார்.

*

மாந்தகிராந்தா போஸ் இந்திய ஆசிய ஆய்வுக்கழகத்தின் ஆய்வாளராக வான்கூவரின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வேலை செய்கிறார். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக நிகழ்த்துக்கலையில் சமஸ்கிருதத்தின் பங்கு, ராமாயணம், இந்து தர்ம சாஸ்திரங்கள், கலை இலக்கியத்தின் முப்பாலினருக்கும் இருக்கும் முக்கியத்துவம் போன்ற தலைப்புகளில் ஆய்வு செய்கிறார்.

One Reply to “பொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.