“பான்சுரிக்குப்பின் வேறு ஒரு கருவி மீதும் ஆர்வம் வரவில்லை” : கிளைவ் பெல் பேட்டி

கடந்த நாற்பது வருடங்களாக பான்சுரி இசைக்கலைஞராக லண்டனில் பணியாற்றி வரும் கிளைவ் பெல்லின் இசைப்பயணம் மிகவும் தனித்துவமானது. 1960களின் இறுதியில் உலகின் இசை ரசிகர்கள் சிதார் இசையினால் கவரப்பட்டு இந்தியாவை நோக்கிப் படையெடுத்தபோது, ஏதோ ஒரு இசைக்கச்சேரியில் கேட்டிருந்த பான்சுரி எனும் வாத்தியக்கருவி மீது பித்தாகி தனது வேலையை துறந்து இந்தியாவுக்கு வந்தவர் கிளைவ் பெல். இந்தியாவின் இசை மேடைகளிலேயே பான்சுரிக்கு ரெண்டாம் இடம் மட்டுமே கிடைத்த காலகட்டம். பண்டிட் ஹரிபிரசாத் செளராசியா மெல்ல பிரபலமாகிக்கொண்டிருந்தார். அப்படிப்பட்ட நேரத்தில் மொழி தெரியாது, கருவியைக் கற்றுக்கொடுக்கும் குரு அதிகமில்லாத காலத்தில் பான்சுரியின் ஒலிக்கு அடிமையாகி விடப்பிடியாக இந்தியாவின் பல மூலைகளுக்கு அலைந்தவர் கிளைவ் பெல். படிப்படியாக அவரது கனவு நிறைவேறுகிறது. உலக மேடைகளில் பான்சுரி பிரபலமாகத் தொடங்கிய காலத்தில் அதன் ஓலியை லண்டனின் பல மேடைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அறிமுகப்படுத்தியவர்.

ஒரு இசை லெக்-டெம் விழாவில் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்ட பின்னர், இணையத்தின் வழி ஒரு பேட்டி கொடுக்கும்படி கேட்டேன். உடனே சம்மதித்த க்ளைவுக்கு நன்றி. பேட்டியின் காணொளியை இணையத்தின் வழி பதிந்து தரவேற்றித் தந்த எழுத்தாளர் சிவா கிருஷ்ணமூர்த்திக்கு நன்றிகள்.

***

கிரி: உங்கள் சிறுவயது பற்றி வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துங்களேன். ஹிந்துஸ்தானி இசையை கற்றுக்கொள்வதற்குமுன் உங்கள் இசை அறிமுகம் யாரிடம் தொடங்கியது?

கிளைவ்: என் ஒன்பது வயதில் நான் மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதம் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். முதலில் பியானோ. முழுமையாகத் தொடர முடியாவிட்டாலும், என் இருபது வயது வரை பியானோவில் கவனம் செலுத்தினேன். இருபத்து மூன்று வயதுக்குப் பின்னர் மேற்கத்திய குழலிசையில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.

கிரி: பியானோ கற்றுக்கொண்ட காலத்தில் உங்கள் இசை வாழ்க்கைப் பற்றிய எதிர்காலத் திட்டம் என்னவாக இருந்தது? ஒரு குழுவினருடன் இணைந்துகொள்வதா, தனித்த இசைக் கலைஞராவதா?

கிளைவ்: இசை பற்றி எந்தொரு கனவும் இல்லாமல் என் பதின்ம வாழ்க்கைக் கடந்தது. பியானோ இசையை விரும்பினேன். ஆர்வத்தோடு கற்றுக்கொண்டேன். ஆனால் அதற்கும் தொழில்முறை இசைக்கலைஞன் ஆவதற்கும் இருந்த வித்தியாசத்தைப் புரிந்தே இருந்தேன். பொழுதுபோக்கிற்காகப் பியானோ வாசித்தேன் எனலாம்.

படிப்பு முடிந்ததும் நான் தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் சார்ந்த எடிட்டிங் பணியில் கவனம் செலுத்தினேன். அங்கு காட்சிகளை சரியான முறையில் தொகுத்துக்கொள்ளும் கலையைக் கற்றுக்கொண்டேன். நான் முழு நேர இசைக்கலைஞனாக ஆனது என் நாற்பதாவது வயதுக்குப் பின்னர்.

கிரி: அதுவரை உங்கள் பணி சார்ந்த வேலையில் இசைக்கு இடமிருந்ததா? திரைப்படங்களில் பணி செய்த போது?

கிளைவ்: இல்லை. நான் இசையல்லாத துறையில் வேலை செய்தபோதும் என் திருப்திக்காகத் தொடர்ந்து இசையைக் கற்றேன். அப்போது இந்திய இசைமீது என் ஆர்வம் திரும்பியது. அது 1970களின் தொடக்கம். ஜிப்சி இசையும், ஐரோப்பிய இசையும் இந்திய இசை ரசனையைக் கண்டுகொள்ளத் துவங்கிய காலகட்டம். உலகமே ரவிஷங்கரைத் தேடி இந்தியா சென்றது. 

நானும் அக்காலகட்டத்தில் மூன்று முறை இந்தியா சென்றேன். அப்போதும் தொழில்முறையாக வாத்தியங்களை இசைக்கத் தொடங்கியிருக்கவில்லை. பின்னர் பான்சுரி கற்றுக்கொண்ட பின்னர்தான் திரைப்படங்களில் இசை பங்களிப்பு துவங்கியது.

கிரி: நீங்கள் இந்தியா செல்லத் தொடங்கிய காலகட்டம் மேற்கத்திய இசைக் கலைஞர்கள் இந்திய இசைமீது கவனத்தைத் திருப்பத் தொடங்கிய காலகட்டம் இல்லியா? உங்களை இந்தியா எப்படி ஈர்த்தது?

கிளைவ்: ஆம். ஜிப்சி இசையும், உட்ஸ்டாக் விழாவில் இந்திய சிதார், தபேலா புகழ் பெற்றன. மேற்கத்திய இசையும் கிழக்கு இசையும் இணைந்து பயணம் செய்யத் தொடங்கிய காலம். தபேலா மற்றும் சிதார் கருவியில் வெளிப்பட்ட கமகங்களின் நுண்மையில் மேற்கத்திய இசை சிக்கியிருந்தது. ஆனால், அப்போதும் மேற்கத்திய சாஸ்திரிய இசை இந்திய இசையின் ராக நுணுக்களை எடுத்தாளவில்லை. வெகு நாடகளுக்குப் பின்னர் ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க இசை மூலமே அது மைக்ரோ நோட் எனும் அலங்காரங்கள் வழியே இந்திய இசைக்கு வந்து சேர்ந்தது.

நான் 1974 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு முதல் முறை செல்லும்போதே குழலிசை மட்டுமே என் ஆர்வம் என்பதில் தீர்மானமாக இருந்தேன். அப்போது வாங்கிய பான்சுரியைக் கொண்டு அடுத்த ஐந்து வருடங்கள் தீவிரமாகப் பயின்றேன். லண்டனில் சிலரிடமிருந்து கற்றுக்கொண்டேன். மீண்டும் ஒரு குருவைத் தேடி 1977/78 இந்தியா சென்றபோது பான்சுரியில் ஐந்து வருடங்கள் அடிப்படைகளைப் பயின்றிருந்தேன்.

அப்போது பண்டிட் ரகுநாத் சேத் அவரக்ளிடம் பயிலத் தொடங்கினேன். அம்முறை கிட்டத்தட்ட ஒரு வருடம் இந்தியாவில் தங்கியிருந்தேன். அப்போது அதன் பெயர் பம்பாய். 1979ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்தபின் என் கவனம் முழுவதும் பான்சுரியில் கழிந்தது. அதற்கு சில வருடங்களுக்குப்பின் முழு நேர இசைக் கலைஞனானேன்.

கிரி: வேறு கருவி இசையில் உங்களுக்கு ஆர்வம் வந்ததா?

கிளைவ்: இல்லை, இந்தியாவுக்குப் போவதற்குமுன் மேற்கத்திய பியானோ மற்றும் குழல் ரெண்டையும் கற்றுக்கொண்டேன். ஏதோ ஒரு விதத்தில் அவை போதாமல் ஆயின. பின்னர், இந்தியாவுக்குச் சென்று பான்சுரி கற்றுக்கொண்டபின் வேறு ஒரு கருவிமீதும் ஆர்வம் வரவில்லை. பான்சுரியில் வாசிப்பு மெருமேறும் பயணம் சுலபமாக இருக்கவில்லை. மெல்ல மெல்ல நான் அதைக் கற்றுக்கொண்டேன்; கற்றுக்கொள்கிறேன்.

கிரி: இந்திய இசை மீது உங்களுக்கு ஆர்வம் எப்படி வந்தது?

கிளைவ்: குறிப்பிட்ட ஒரு நிகழ்வு அறிமுகப்படுத்தியது எனச் சொல்லமுடியாது. 1960களின் இறுதியில் லண்டனுக்குள் பல இந்தியர்களும், இந்திய கலைகளும், ரசனைகளும் புகுந்துவிட்டன. பல சாமியார்கள் வந்த வண்ணம் இருந்தனர். யோகா குருக்கள் பலரும் பொது மக்களிடையே வலம் வந்தனர். அதற்கு ஏற்றாற்போல, இங்கிலாந்து நாட்டுக்காரர்களும் மிகுந்த ஆர்வத்தோடு இவற்றில் ஈடுபடுத்திக்கொண்டனர். 

பீட்டில்ஸ் உடன் இருந்த நெருக்கம் காரணமாக பண்டிட் ரவிஷங்கர் மிகப்பிரலமானார். அவரது சிதார் இசை தொடர்ந்து பல இசை விழாக்களில் கேட்கத் துவங்கியது. தெற்குக்கரை மையத்தில் (Southbank Centre) சமஸ்கிருத வாரம் எனும் ஒரு வாரம் நடந்த நிகழ்வுகளைக் காணும்பொருட்டு நான் சென்றிருந்தேன். ரவிஷங்கர் பல இந்திய இசைக் கலைஞர்களை அழைத்து வந்திருந்தார். அதில் ஒருவர் பான்சுரி மேதை பண்டிட் ஹரிபிரசாத் செளராசியா. அவர் அப்போது அத்தனை பிரபலமில்லை. நண்பர்கள் மூலம் சில இந்திய கிராமஃபோன் இசையைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போதெல்லாம் ஒரு இசை விழாவுக்குச் சென்றால் இந்திய இசைக்கருவி ஒன்றேனும் இருந்துவிடும். இசை பற்றிய விவாதங்களில் மெல்ல ராகங்கள் பற்றிய உரையாடலகள் இடம்பெற்றன. ராகங்கள் கொண்டுவந்த விளக்க முடியாத ஒலி அனுபவம் இந்திய இசை மீது ஒரு பெரும் வசீகரத்தை ஏற்படுத்தியிருந்தது. அவை தான் என் முதல் இந்திய இசை அறிமுகம்.

கிரி: கேட்டதும் காதலா?

கிளைவ்: (சிரித்துக்கொள்கிறார்) கண்டிப்பாக இல்லை. அதன் நுணுக்கங்களை ரசிக்கக்கூடிய முதிர்ச்சி ஏற்படப் பல வருடங்கள் ஆயின. அந்தக் காலத்தில் குழல் இசைக்கலைஞர்கள் குறைவாகவே இருந்தனர். பண்டிட் ஹரிபிரசாத் வரும்வரை அதுதான் நிலை. இசைத் தொகுப்புகள் என்றாலே சிதார், சரோட், தபேலா போன்றவை மட்டுமே இருக்கும். அவ்வப்போது ஏதேனும் திரையிசைப் பாடலில் ஹிந்துஸ்தானி பான்சுரி சில நொடித் துணுக்காக வரும்.

ஒருவித குருட்டு நம்பிக்கையோடுதான் நான் பான்சுரி வழியே ஹிந்துஸ்தானி இசைக்குள் நுழைந்தேன். மேற்கத்திய குழலிசை தெரியும்; எல்லைகள் தடையாக ஆகக்கூடிய இடங்கள் புரிந்திருந்த வயது. இந்தியக் குழலை அதன் தொடர்ச்சியாகத்தான் கண்டேன். மிக அரிதாகக் கிடைக்கும் இசைத்தட்டுக்களில் கீறல் வரும்வரை கேட்டிருக்கிறேன். இப்போது போல யூ-டியூபில் சென்று நொடியில் எல்லாவற்றையும் எடுத்துவிடும் சாத்தியம் அன்று இல்லை. ஒரு விதையைப்போல் மெல்ல வளர்ந்தது எனலாம்.

கிரி: இந்தியாவுக்குச் சென்று கற்றுக்கொள்ளத் துவங்கிய காலகட்டத்தில் உங்கள் ஆர்வத்துக்கான வரவேற்பு எப்படி இருந்தது? எப்படிப்பட்டத் தடைகளை சந்தித்தீர்கள்?

கிளைவ்: நான் இசையைத் தேடிப் போனபோது எங்கு எப்படி என எதுவும் புரியாமல் இருந்தேன். ஆர்வம் இருந்தது; ஆனால் எப்படி யாரை அணுகுவது எனத் தெரியவில்லை. முதல் முறை நான் பண்டிட் ரகுநாத் சேத் அவரைச் சந்திக்கவில்லை. பின்னர் அவர் லண்டன் வந்திருந்தபோதே முதல் சந்திப்பு சாத்தியாமயிற்று. என் முதல் இந்தியப் பயணத்தில் திசை தெரியாது சுற்றியபோது பனாரஸ் சென்றேன். அங்கு ஸ்ரீவாத்ஸவ் எனும் பான்சுரி கலைஞரை பனாரஸ் ஹிந்துக் கல்லூரியில் சந்தித்தேன். அந்த அனுபவம் திருப்திகரமாக அமையவில்லை.

பண்டிட் கவுர் கோஸ்வாமி  அவர்களிடம் கற்றுக்கொள்ள கல்கத்தா சென்றேன். ஆனால் நான் சந்திப்பதற்குள் அவர் இறந்துவிட்டார். பின்னர் தில்லியில் சுற்றி அலைந்தபோது ஜெயசங்கர் லால் எனும் தொழில்முறைப் பான்சுரி கலைஞரை சந்தித்தேன். அவரது தந்தையும் அவரும் தில்லி ஆல் இந்தியா ரேடியோவில் வித்வான்களாகப் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அவரிடம் என் பயிற்சி முறையாகத் துவங்கியது.

ஆனால் சில மாதங்களில் கோடை வந்துவிட்டது. தில்லி கோடை பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டுமா? கிட்டத்தட்ட 45-50 டிகிரி வெயில். அதைத் தாங்கமுடியவில்லை. உடனே லண்டனுக்குத் திரும்பிவிட்டேன். இங்கு வந்தபின் ஒரு ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டுக் கலைஞரிடம் இசை அறிமுகத்தைத் தொடங்கினேன்.

பான்சுரி, வேணு போன்ற குழலிசைகளில் வாய்ப்பாட்டு ஞானம் மிகவும் முக்கியம். நம் குரலில் குழைவுகள், சுருதி ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றுக்குச் சமானமாக குழல் இசை அமைந்திருக்க வேண்டும். மற்றொரு பான்சுரி குருவிடம் கற்றுக்கொள்வது அவசியமில்லை.

சுரேந்திர காமத் என்பவரிடம் நான் இங்கு கற்றுக்கொண்டபோது அந்த வருடம் இந்தியாவிலிருந்து பண்டிட் ரகுநாத் சேத் லண்டனுக்கு வந்திருந்தார். அவர் லதா மங்கேஷ்கருடன் ஆலப்ர்ட் இசைக்கூடத்தில் பிரம்மாண்டமான இசை நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்தார். சுரேந்திர காமத் பண்டிட்டைக் கட்டாயப்படுத்தி இரண்டு மாதங்கள்வரை லண்டனில் தங்கவைத்தார். அப்போது இங்கிலாந்தில் பான்சுரி கற்றுக்கொண்டிருந்த அனைவரையும் வரவழைத்து ரகுநாத் சேத் அவரகளைச் சந்திக்கும்படி ஏற்பாடு செய்தார். எப்பேர்ப்பட்ட செயல்! அதன் மூலம் எனக்கு ரகுநாத் சேத் உடன் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அப்போதுதான் எனக்கும் ஒழுங்கான பான்சுரி கருவி கிடைத்தது.

கிரி: பான்சுரி கற்றுக்கொள்ள இத்தனை தடைகள், சிக்கல்கள் இருந்த நேரத்தில் இந்தியாவில் வேறொரு கருவியைக் கற்றுக்கொள்ளலாம் எனும் குழப்பம் ஏறபட்டதா?

கிளைவ்: கண்டிப்பாக இல்லை. குழலிசைக்கான உதவி கிடைப்பது அரிது என்றாலும் நான் வேறெந்த கருவியைப் பற்றியும் நினைக்கவேயில்லை. தரமான பான்சுரி கிடைப்பது அரிதாக இருந்தது. நான் முதல் முறை தில்லிக்குச் சென்றபோது (1974) பல மாதங்கள் தங்கியிருந்தேன். பல இசைக் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். சிதார், தபேலா, போன்ற பல இசைக்கருவிகள் இருந்த கச்சேரிகளில் ஒரு முறை கூட பான்சுரி இசையைக் கேட்டதில்லை. தரமான கருவியில் பயிற்சி செய்ய எனக்கு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆயின. மிகக் குறைந்த கலைஞர்களே பான்சுரி பயின்றார்கள்.

கிரி: கடந்த நாற்பது வருடங்களில் இது மாறியுள்ளதா? நீங்கள் பவன் பள்ளி மூலம் பல இளம் தலைமுறையினருக்கு பான்சுரி சொல்லிக்கொடுக்கறீர்களே? எந்தளவு அவர்களுக்கு ஆர்வம் உள்ளது?

கிளைவ்: ஆம், மிகப்பெரிய மாற்றம். குறிப்பாக, பண்டிட் ஹரிபிரசாத் செளராசியா பிரபலமான பின்னர் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் பான்சுரி கவனம் பெற்றுள்ளது. யூடியூபிலேயே கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் பான்சுரி கற்றுத் தருகிறார்கள். தொன்னூறுகளின் மத்தியில் என் வகுப்பில் ஐந்து மாணவர்கள் இருந்தனர். இன்று 25 பேர் கற்றுக்கொள்கிறார்கள்.

பான்சுரி கிடைப்பதும் சுலபமாகிவிட்டது. இன்று இந்தியாவில் பலரும் பான்சுரி தயாரிக்கிறார்கள். பல தயாரிப்பு முறைகள் வந்துவிட்டன. அவற்றைத் தொடரும் சில ஆசிரியர்களும் மாணவரகளும் நவீன கரானாக்களை உருவாக்கி வருகிறார்கள். இணையத்தின் வழி நம்மால் உலகம் முழுவதும் பான்சுரியை அனுப்ப முடிகிறது.

என்னுடைய முதல் பான்சுரியை குரு ரகுநாத் சேத் தயாரித்துக் கொடுத்தார். இன்றும் அது துல்லியமாக நினைவில் இருக்கு. அவரது அறை முழுவதும்  புகை மூடியிருந்தது. பலவிதமான மூங்கில் கழிகளில் அளவெடுத்து துளையிட்டுக்கொண்டிருந்தார். வெவ்வேறு சுற்றளவும் நீளமும் கொண்ட மூங்கில்கள். துளையிட்டபின் அவற்றை சூட்டில் காட்டி ஓட்டையை பதமாக்க வேண்டும். மூங்கில்களைத் தேர்ந்தெடுப்பதே ஒரு கலை. அதே போல, தபேலா மற்றும் தம்புராப் பெட்டியை இயக்குவதற்கு இப்போதெல்லாம் ஆட்கள் தேவையில்லை. பலவிதமான செயலிகள் வந்துவிட்டன.

கிரி: இந்தியாவில் நீங்கள் ஆரம்பகட்டத்தில் சந்தித்த தடைகளைப் பற்றிப் பேசினீர்கள். இந்தத் தடைகளைக் கடந்த பின் நீங்கள் மொழி மற்றும் கலாசார ரீதியில் சிலவற்றை சந்தித்தீர்களா? இந்திய இசை ஆன்மிகத்துடன் நெருங்கிய தொடர்புடையது. இங்கிலாந்தில் வளர்ந்த உங்களுக்கு இந்த இடைவெளி எப்படி இருந்தது? அதை எப்படிக் கடந்தீர்கள்?

கிளைவ்: அது ஒரு நெடிய பயணம். எனக்கு மொழி மட்டுமல்ல, காலசாரத்தோடும் நெருக்கமில்லை. ஷுவுக்குள் நெருடும் சிறு கல்லைப் போல இவை எனக்கு சிக்கல்கள் தந்தன. ஆரம்பத்தில் இசையை எழுதி வைத்து வாசிக்கும் கற்றலில் இருந்து விடுபட வேண்டியிருந்தது. இந்திய இசை பெரும்பாலும் காதால் கேட்டு நம்முள் வளர்வது. அதன் ஆன்மிக அனுபவங்களையும், குழைவான சங்கதிகளையும் நான் பல வருடங்கள் மெதுவாகக் கற்றுக்கொண்டேன். இன்றும் கற்று வருகிறேன். ஒரு பரிணாம வளர்ச்சி போல. இன்று ஹிந்துஸ்தானி இசை பற்றிய என் புரிதலுக்கும் அன்று கிடைத்த புரிதலுக்கும் பெரிய இடைவெளி உண்டு. 

நான் ஒரு நம்பிக்கையோடு அன்று போனேன். அந்த இசை மீதான ஈர்ப்பினால் சென்றேன். அதன் அழகு என்னைக் கவர்ந்தது.

கிரி: அதன் பின்னர் இந்தி மொழி கற்றுக்கொண்டீர்களா?

கிளைவ்: கற்றுக்கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். எனக்குக் குழல் கற்றுக்கொடுத்தவர்கள் நல்ல ஆங்கிலம் பேசினார்கள். அதனால் இந்தி தேவைப்படவில்லை. ஆனால் இசையின் சில பிரயோகங்களைப் புரிந்துகொள்ள இந்தி தேவைப்படுகிறது. அதற்குத் தேவையான மொழி அறிவை வளர்த்துக்கொண்டேன்.

கிரி: மொழி தெரியாதது மட்டுமல்லாது அந்நிய கலாசாரத்தின் கலை சாரத்தை எப்படி அடைய முற்பட்டீர்கள்?

கிளைவ்: ஆரம்பத்தில் எனக்குப் பிடிகிட்டவில்லை. பல வருடங்கள் ஆனது. மேற்கத்திய இசை இயல்பான கணக்குக்குள் ஓரளவு அடங்கிவிடும். அதைப் பயிற்சியாக செய்ய முடியும். இந்திய இசை உணர்ச்சியை மையமாகக் கொண்டது. அதுவும் ராகம் என்றால் என்ன என்பதைப் பற்றி ஒவ்வொரு முறையும் புதிய திறப்புகள் கிடைக்கின்றன. ராகத்தின் சாயல்களை எப்படி சங்கதிகளில் காட்டுவது என்பதன் அர்த்தம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றாக இருக்கிறது. இசையோடு நமக்கான உறவை புதிய பார்வையில் பார்க்க வைக்கிறது. ஒலி பற்றியும் எனக்கு புது தரிசனங்கள் கிட்டுகின்றன. 

நான் புரியும்படி சொல்கிறேனா எனத் தெரியவில்லை. ஆனால் ரஸா எனச் சொல்லப்படுவதன் அர்த்தத்தை என்னால் முழுமையாக விளக்க முடியாது. அதற்கு என் மொழி போதாது. ஆனால் அந்த உணர்வை ஓரளவு காட்டுவதற்கு ராகா உதவுகிறது. ரஸா என்பது ராகத்தை விடப் பெரியது. ராகமே மிகவும் அரூபமான ஒரு கட்டமைப்பு தான். ரஸா, அதைவிட பல மடங்கு சூக்குமமானது.

கிரி: நன்றி. இசைக்கலைஞர்களில் உங்க நட்பு சூழல் எப்படி இருக்கிறது? யாருடன் இன்றும் தொடர்பில் உள்ளீர்கள்?

கிளைவ்: யாருடனும் இல்லை. நான் பல வருடங்களாகத் தனிமையில் இருக்கிறேன். என்னுடன் இந்தியாவில் படித்த நண்பர்கள் பலர் இன்று இல்லை. நான் கற்றுக்கொண்ட குருக்களும் பல வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர்.  என்னிடம் படிக்கும் மாணவர்களில் சில நண்பர்கள் உண்டு. 

இந்திய இசையின் மையமாக வாய்ப்பாட்டு இசை உள்ளது. என் நட்பு வட்டத்தில் இருந்த பலரும் பாடகர்கள் தான். ஏனென்றால், பான்சுரி எப்போதும் குரலிசையை ஒட்டி பயணம் செய்யும் கருவி. இன்றும் நான் யூடியூபில் ஏதேனும் கேட்கச் சென்றால் குரலிசையை மட்டுமே தேர்வு செய்வேன். சிதார் அதிகம் கேட்பதில்லை. பான்சுரி கூட அதிகம் கேட்க மாட்டேன். குரலிசையில் வரக்கூடிய அத்தனை சங்கதிகளையும் பான்சுரியில் வாசிக்க முடியும். சிதார், சரோட் போன்ற தந்தி இசைக்கருவிகளில் ஒரு தந்தியை மீட்டியபின்னர் அடுத்ததை மீட்டும்போது ஒரு தாவல் நிகழ்கிறது. ஒருவிதத்தில் அது தொடர்ச்சியைத் தடுக்கிறது. நாம் பேசும்போதும் பாடும்போதும் அப்படி இல்லை. அந்த ஏற்ற இறக்கங்களை நம்மால் குரலில் கொண்டுவருவதைப்போல குழலிலும் கொண்டு வர முடிவதனாலேயே பான்சுரி, ஷெனாய் போன்ற கருவிகளால் தொடர்ச்சியான பல ஒலிகளைத் தொடமுடிகிறது.

கிரி: உங்கள் ப்ளாகை சில நாட்களாகப் படித்து வருகிறேன். கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு முன்னர் கடைசி பதிவை வலை ஏற்றியிருக்கிறீர்கள். பான்சுரி கற்றுக்கொள்பவர்களுக்கு பல நுட்பங்களும் பயிற்சிகளும் தொகுக்கப்பட்டிருக்கு. உங்கள் அனுபவங்கள் எப்படி அதற்கு உதவின? கடந்த பத்தாண்டுகளில் அவற்றில் ஏதேனும் மாற்றம் உள்ளனவா?

கிளைவ்: அக்குறிப்புகள் பான்சுரி வாசிக்க ஆரம்பிப்பவர்களுக்கானது. அதில் இருக்கும் பயிற்சிகள் என்றும் முக்கியம் வாய்ந்தவை. பான்சுரி கற்றுக்கொள்வது கடினமல்ல. மிக எளிமையான வாத்தியக்கருவி. ஆறு அல்லது ஏழு துளைகள் இருக்கும் மூங்கில் குழாய். ஒரு ஓட்டை வழியாக ஊதியபடி பிற துளைகளை சரியானபடி மூடித் திறக்கும்போது இனிமையான ஒலி கிடைக்கும். மிக எளிமையான வாத்தியம் என்றாலும் இனிமையான இசை வருவதற்கு சற்று அதிகமாக மெனெக்கெட வேண்டும். ஒரு முறை ஏழு ஸ்வரங்களையும் இசைக்கக்கற்றுக் கொண்டுவிட்டால் அதற்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் பயிற்சி செய்ய வேண்டியதுதான். அந்த ப்ளாகில் எதையும் மாற்றத் தேவையில்லை. என் அனுபவத்தில் அறிந்தவற்றை பயிற்சியாகத் தொகுத்துள்ளேன்.

கிரி: கர்நாடக சங்கீத அறிமுகம் எப்படி கிடைத்தது? அதைப் பற்றி சொல்லுங்கள்.

கிளைவ்: 1980களில் லண்டனில் கர்நாடக சங்கீதக்காரர்கள் யாரும் இல்லை. ஒரு நாள் நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் அவர்கள் லண்டன் பவன் பள்ளிக்கு வந்திருந்தார். அப்போது புல்லாங்குழல் கலைஞர்கள் யாரும் இல்லாததால் என்னை வாசிக்கச் சொல்லியிருந்தார்கள். ஜதி ஸ்வரங்கள், வர்ணங்கள் போன்றவற்றைக் குறுகிய காலத்தில் கற்றுக்கொண்டேன். 

மிக அழகான இசை. அன்றிலிருந்து அடுத்த 10 வருடங்களுக்கு நான் புல்லாங்குழலும் வாசித்தேன். நாங்கள் பல கச்சேரிகளுக்காக இங்கிலாந்து, ஐரோப்பா சுற்றியபோதெல்லாம் கர்நாடக குழலிசையை வாசித்திருக்கேன். வாய்ப்பாட்டுக்கு பக்கவாத்தியமாகவும், வயலின் குழுவினரோடு வாசிப்பவனாகவும் இருந்திருக்கிறேன். ரசித்துக் கற்றுக்கொண்டேன். பவன் பள்ளியின் முன்னாள் தலைவர் சிவஷக்தி பாண்டியன் அவர்கள் பல மாணவர்களுக்கு கர்நாடக இசை கற்றுக்கொள்ள என்னிடம் அனுப்பி உள்ளார். சொல்லப்போனால் பல ஹிந்துஸ்தானி கலைஞர்களிடையே கர்நாடக இசை பற்றிய அலட்சியம் உண்டு. அதில் நான் இல்லை. 

கிரி: ஃப்லூட் மாலி கேட்டதுண்டா?

கிளைவ்: இல்லை. ரமணி, லால்குடி போன்றோரின் வாத்திய இசையை கேட்டுள்ளேன். மாலி லண்டனுக்கு வந்ததில்லை என நினைக்கிறேன். ஆனால் தொடரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஹிந்துஸ்தானி இசையை விட மிகவும் மாறுபட்டது என்பதை உணர்ந்துள்ளேன். இசைக் குழுவினரோடு இசைக்கச்சேரிகளில் பலவித பாணிகளில் இசைத்துள்ளேன். கதக், பரதநாட்டியம், குச்சுப்புடி, கோவில் பஜன், பாலிவுட் இசைக்குழுவினரோடு செய்த கச்சேரிகள் எனப் பல பாணிகளைப் பயின்றுள்ளேன். பான்சுரி கலைஞர்களுக்குக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் நான் பயன்படுத்திக் கொண்டேன்.

வயதாகிவிட்டதால் இப்போதெல்லாம் இசைக்கச்சேரிகளில் கலந்து கொள்வதில்லை. மூன்று பள்ளிகளில் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறேன். 1983 முதல் பவன் பள்ளியிலும், கடந்த 20 வருடங்களாக ஸ்வாமி நாராயண் பள்ளியிலும், 10 வருடங்களாக ஹேரோ (Harrow) கல்லூரியிலும் மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறேன். துரதிர்ஷ்டவசமாக இஸ்கானுடன் தொடர்புடைய ஸ்வாமி நாராயண் பள்ளி மூடப்பட்டுவிட்டது. 

கிரி: இசைக்குழுக்களுடன் இருந்த நாட்களில் பல சங்கம (Fusion) பாணி குழுக்களுடன் இணைந்துள்ளீர்களா? ஐரோப்பாவில் ஒரு காலத்தில் பல இசைக்குழுக்கள் சங்கம இசையில் பிரத்யேகக் கவனம் செலுத்தின இல்லையா?

கிளைவ்: ஆமாம். 1980 களில் பல இசைக்குழுக்களுடன் ஐரோப்பா முழுவதும் பல விழாக்களிலும், கச்சேரிகளிலும் கலந்து கொண்டுள்ளேன். குறிப்பாக, நான் பான்சுரி வாசிப்பவன் என்பதால் பல ஃபூஷன் குழுக்களுடன் நான் பயணம் செய்துள்ளேன். கிழக்கு – மேற்கு இசைக்குழு, இண்டிக் குழு எனப் பல பெயர்களில் அப்போது குழுக்கள் இருந்தன. இதற்கெல்லாம் அச்சாணி இட்டது ரவிஷங்கரும், அல்லார் ராகா கான், ஹரிபிரசாத் செளராசியா போன்றோர் தான். 

அதன் பின்னர் பல தொலைக்காட்சி தொடர்களுக்கும், ஹாலிவுட், பாலிவுட் திரைப்படங்களுக்கும் இசையமைத்தேன். எனக்கு மிகப் பெரிய தொடக்கமாக அமைந்தது “Jewel in the Crown” எனும் கிரானடா தொலைக்காட்சித் தொடர். பன்னிரெண்டு பகுதிகள் கொண்ட நாடகத்துக்காக நான் பல மாதங்கள் ஸ்டூடியோவில் தங்கி இசையமைத்தேன். அதில் நாங்கள் அமைத்த பல பின்னணி இசைத் துணுக்குகள் பிற்காலத்தில் மிகப் பிரபலமாக ஆயின. அது தான் என்னுடைய திரையிசைப் பாதைக்கான தொடக்கம் எனலாம்.

(Jewel in the Crown என்பது Raj Quartet எனும் நான்கு பகுதிகளாக வந்த நாவலின் கதைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர். பிரித்தானிய எழுத்தாளர் பால் ஸ்காட் எழுதிய இந்த நாவல் வரிசை ஈ.எம்.ஃபாரஸ்டரின் Passage to India நாவலை அடியொற்றி எழுதப்பட்டது. பல காலங்கள் பிரித்தானிய ராணுவத்திலும், இந்திய தூதரகத்திலும் பணி செய்த பால் 1976 ஆம் ஆண்டு புக்கர் பரிசையும் வென்றவர்)

கிரி: உங்கள் நண்பருடன் பால் உடன் நீங்கள் கேம்டன் டவுன் வீட்டில் இசைத்த ஒரு பாடலை யூடியூபில் கேட்டேன்.  தன்னிலை இழக்க வைக்கும் அனுபவமாக குழல் கிறங்கடித்தது. 

கிளைவ்:  அது இணையத்தில் இருக்கிறதா?! (சிரிக்கிறார்) சந்தோஷமாக இருக்கிறது. இதெல்லாம் ஒரு வகை பழைய ஞாபகங்களைக் கிளர்த்தும் முறைகள் தானே. ஆம். இது போலப் பல இசைத் தொகுப்புகளில் நான் பங்காற்றியுள்ளேன். பல தொகுப்புகள் கேஸட்டுகளில் வெளியாகி மறைந்துவிட்டன. நீங்கள் குறிப்பிடுவது போல ஒரு சில இணையத்தில் கிடைக்கின்றன. 

மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும்போது நான் இசையை எழுதி வைத்துக்கொடுக்கிறேன். இந்திய இசை எழுதுவதற்கு ஏற்றதல்ல. முறையாக ஆசிரியரிடம் பயிலும் போது இசையை கேட்ட பின் வாசிப்பது சுலபமாக இருக்கும். காதுக்குப் பழக்கமாகும். இங்கிலாந்தில் அது சாத்தியமல்ல. ஆசிரியரை வாரம் ஒரு முறை மட்டுமே சந்திப்பதினால் பல இசைக்கோர்வைகளை நான் எழுதி அவரக்ளுக்குத் தந்துவிடுவேன். இது ஒரு விதத்தில் இந்திய இசை கற்றலை முழுமையான அனுபவமாக ஆக்குவதில்லை. ஆனால், அப்படி எழுதும்போது எனக்குக் கிடைக்கும் சில அனுபவங்கள் இசையை வேறொரு விதத்தில் நெருங்க வைக்கிறது. அதுவும் ஒருவகையில் காலத்தில் பயணம் செய்வது போல பழைய நினைவுகளைக் கிளர்த்திவிடுகிறது.

கிரி: எப்போது இசை அமைக்கத்தொடங்கினீர்கள்?

கிளைவ்: எண்பதுகளின் தொடக்கத்தில் மாணவர்களுடன் சேர்ந்து வாசிக்கும்போது அவர்கள் கற்பனை ஸ்வரங்களில் தடுமாறுவதைக் கண்டேன். அப்போது நாங்கள் லண்டனின் பல மேடைகளில் இசைக்கச்சேரிகள் நடத்திக்கொண்டிருந்தோம். எல்லாரும் சரியாக வாசிப்பதற்காக நான் நோட்ஸ் எடுத்து எழுதத்தொடங்கினேன். உண்மையில், ஹிந்துஸ்தானி இசையில் ஆலாபனையும் ‘தான்’களும் கற்பனை மூலம் மட்டுமே விரித்தெடுக்க முடியும். அதற்கென ஒரு கச்சிதமான விதிகள் இல்லை. அந்நிய ஸ்வரம் சாயல் வரக்கூடாது என்பது போன்ற மேலோட்டமான விதிகளைச் சொல்லலாம். ஆனால், இப்படி கற்பனை மூலம் இசைப்பதற்கு மிகுந்த தாள ஞானமும், லய பிடிப்பும் வேண்டும். மாணவர்களை அப்பயிற்சியில் ஈடுபடுத்த நான் அவற்றை எழுதி கொடுக்கத் தொடங்கினேன். அது அவர்களது கற்பனையை பாதிக்கலாம் என்பதால் கவனமாகத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பேன்.

இன்னொரு விஷயம் என்னவென்றால், பான்சுரிக்கான ஸ்வரகோர்வைகள் அப்போதெல்லாம் எளிதில் கிடைக்காது. அதனால் பாடல்களிலிருந்து நான் அவற்றை பான்சுரிக்காக மாற்றத் தொடங்கினேன்.

கிரி: எந்த வயதிலிருந்து உங்களிடம் குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள்? கற்றுக் கொடுப்பதில் நீங்கள் கடைபிடிக்கும் முறை என்ன?

கிளைவ்: என்னிடம் ஐந்து வயது முதல் குழந்தைகள் தொடங்குகிறார்கள். சிறு குழந்தைகளுக்கு நான் ராகங்களை அறிமுகம் செய்வதில்லை. அவை மிகவும் அரூபமானவை. அவர்களுக்குப் பிடிக்கும் குழந்தைப் பாடல்கள், பஜன், பக்தி வேதாந்த மந்திர் உருவாக்கிய சில கிருஷ்ண கானங்கள் என மிக எளிமையாகவே தொடங்குவேன். குழலில் ஓரளவு பயிற்சி வந்தபின்னர் நான் எளிமையான ராகங்களைத் தொடங்குவேன். அதில் சில வருடங்கள் தோய்ந்த பின்னர் அவர்களின் கற்பனையைக் கொண்டு புது இசை துணுக்குகளை எழுத வைப்பேன். இது ஒரு நீண்ட பயணம்.

நாற்பது வயதுக்கார்களுக்கு இசை அறிமுகம் பாடல் வழியாக இருக்கும் என்பதால் அவர்களுக்கான கற்பனையைத் தூண்டும் பிரயோகங்களை சீக்கிரம் தொடங்கிவிடலாம்.

1990களின் தொடக்கத்தில் முப்பது வயதைக் கடந்தவர்களே என்னிடம் கற்றுக்கொள்ள வந்தனர். மெல்ல, அவர்களது குழந்தைகள் வந்து சேர்ந்தன. இப்போதெல்லாம் பல குழந்தைகள் வயலின், பியானோ கற்றுக்கொள்வதைப் போல பான்சுரியிலும் தொடங்குகிறார்கள். சிறு வயதில் ஸ்வரங்களை அதிக நேரம் மூச்சடக்கி இசைக்க முடியும். பிசிறு தட்டாமல் நீண்ட நேரம் ஒரே ஸ்வரத்தில் சஞ்சரிக்க முடிவது ஹிந்துஸ்தானி இசை பாணி. சிறு வயதில் தொடங்கும் போது நமது சுவாசம் அதற்கு ஏற்றார்போல பலப்படும்.

கிரி: நீங்கள் இயற்றியதில் பிடித்தமானது என்ன?

கிளைவ்: பலதும் உள்ளன. ஹம்ஸத்வனியில் நான் இயற்றிய ஒரு பான்சுரி பாடல் என் மனதுக்கு நெருக்கமானது.  அது தவிர பூபாளி, கேதார் போன்ற ராகங்கள் எனக்குப் பிடிக்கும். இந்திய இசையை எழுதி வைத்து கற்றுக்கொள்ள முடியாது என்பதால், ஸ்வரக்கோவையை மட்டும் கொண்டு நான் ‘தான்’ களையும், ஆலாபனையையும் கற்பனை மூலம் சேர்ப்பேன். என் மாணவர்களுக்கும் அதையே சொல்வேன். இசை என்பது நீங்கள் வைத்திருக்கும் காகிதத்தில் இல்லை. அது ஒரு வழிகாட்டி மட்டுமே. நீங்கள் தான் அதில் பயணம் செய்ய வேண்டும். இசை வேறெங்கோ உள்ளது. அதனால் வாய்ப்பாட்டுகளையும், குழலிசைகளையும் கேட்கும் பயிற்சியை தினமும் செய்யச் சொல்வேன்.

மேற்கிசையில் மிக நுணுக்கமான சங்கதிகளும் பதியப்பட்டிருக்கும். அங்கும் கற்பனைக்கு இடம் உண்டு என்றாலும் ஒரு இசைக்குறிப்பை பல இசைக்கலைஞர்கள் கிட்டத்தட்ட ஒன்றே போல வாசிப்பார்கள். இந்திய இசை அப்படியல்ல. குறிப்புகளைக் கொண்டு ஒவ்வொரு கலைஞரும் வேறு மாதிரி அவர்களது இயல்புக்கு ஏற்றார்போல மாற்றுவார்கள். கர்நாடக இசைப் பாடலை எழுதிய தியாகராஜர், தீக்ஷிதர் பாடல்களை இன்று வரை ஒவ்வொருவரும் அவர்களது கற்பனை மூலம் வளப்படுத்தி வந்துள்ளனர்.

கிரி: நாற்பது வருடங்களுக்கும் மேலாக இந்திய இசையோடு பயணம் செய்துள்ளீர்கள். இந்திய இசை பற்றிய புரிதல் அதிகமாகியுள்ளதா? மாறியுள்ளதா?

கிளைவ்: நிச்சயமாக அதிகமாகிவுள்ளது. மாறியும் உள்ளது. நாற்பது வருடங்களுக்குமுன் இசை அங்கு இருந்தது நான் அதை என் இசைக்கருவியில் வாசித்தேன். இன்று அதை எனக்குள் ஆற்றுப்படுத்தி உள்ளேன். ஒரு வகையில் இது என் இசை எனும் உரிமையை அதனுடன் உருவாக்கியுள்ளேன் என நினைக்கிறேன். ஆரம்பத்தில் கடவுளைப் போல தள்ளி நின்று வேண்டுதலை கோரி நின்றேன். இன்று சற்று இளகுவாகிவிட்டேன். இன்றும் மரியாதையும் பக்தியும் உள்ளன. ஆனால் என் அகப்படுத்தியதால் என்னில் ஒரு பகுதி என்பதாகவே ஹிந்துஸ்தானி இசையை அணுக முடிகிறது. ஒரு  வகையில் internalise ஆகிவிட்டதால் முன்னர் என் குரு ரகுநாத் சேத் போல இசைத்தவன் இன்று எனக்கென என் இயல்புக்கு என ஒரு முறையைத் தேர்ந்தெடுத்துவிட்டேன். 

கிரி: அற்புதம். மிக்க நன்றி. கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்ததுக்கு நன்றி.

கிளைவ்: நன்றி. நேரடியாகத் தமிழில் எழுதப்போறீங்களா? அல்லது ஆங்கிலத்தில் எழுதி மொழிமாற்றம் செய்வீங்களா?

கிரி: நேரடியாகத் தமிழில்தான் எழுதுவேன். ஒலிக்கோப்பாக உங்களுக்கு அனுப்புகிறேன். மிக்க நன்றி.

கிளைவ்: நன்றி. இந்த கொரானா ஒழிந்தபின் நாம் நேரில் சந்தித்து வேறு பல விஷயங்களைப் பேசலாம்.

கிரி: நன்றி கிளைவ்.

One Reply to ““பான்சுரிக்குப்பின் வேறு ஒரு கருவி மீதும் ஆர்வம் வரவில்லை” : கிளைவ் பெல் பேட்டி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.