பரோபகாரம் – மஹா உதவல்கள்

This entry is part 4 of 5 in the series பரோபகாரம்

இந்தியா மட்டுமில்லாமல் உலகின் பல நாடுகளில் வாழும் மக்களிடையே ஒரு பொதுக்கருத்து வழக்கிலிருக்கும். அதன்படி நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தங்கள் நாடுகளில் வாழும் கோடீஸ்வரர்களிடம் பணமும் அதிகாரமும் மிக அதிகமாகச் சேர்ந்திருப்பதாகவும், அது முறையன்று என்பதால் நியாயப்படி அவையெல்லாம் திரும்பப் பொதுமக்களுக்குத் தரப்பட வேண்டும் என்றும் கருதுவார்கள். ஏதோ அந்தக் காலத்து அரசர் பரம்பரையினர் போன்றவர்கள் பெரிய செல்வந்தர்களாக இருப்பதை மக்கள் ஒப்புக்கொண்டிருக்கலாம். மற்றபடி இந்த ஒருமித்த பொதுக் கருத்துக்கு நிறைய விதிவிலக்குகள் இருக்காது. இன்றும் சீனா போன்ற நாடுகளில் அரசாங்கமே எந்த ஒரு தனி நபரும் அதீதமான அளவில் பணம் சேர்ப்பதை விரும்புவதில்லை. சமீபத்திய உதாரணம், அலிபாபா நிறுவனர் ஜாக் மா

அமெரிக்காவில் இருப்பவர்கள் மட்டும் இப்படி அதிகம் யோசிப்பதில்லை. தாங்கள் அனைவரும் இன்னும் பத்து வருடங்களில் ஏதோ செய்து பெரும் பணக்காரர்கள் ஆகிவிடுவோம் என்று அவர்கள் பொதுவாக நம்பிவருவதாகத் தெரிகிறது. எனவே பெரும் பணக்காரர்களின் வாலை ஒட்ட வெட்டும் அளவு வரி விதிப்பது, சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக்கொள்வது போன்ற முயற்சிகளுக்கு மக்களிடையே பரந்த எதிர்ப்பு இருக்கும். ஆயிரக்கணக்கான வருடங்களாய்த் தொடரும் சரித்திரங்கள், ராஜா ராணி கதைகள் அமெரிக்காவுக்கு கிடையாது என்பதால், பெரும்பாலான பணக்காரர்கள் முறையான வழிகளில்தான் பணம் சம்பாதித்திருப்பார்கள் என்ற பொது நம்பிக்கை பெரும் பணக்காரர்களை வெறுக்காமல், ஹீரோக்களாகப் பார்க்கும் கலாசாரத்தை வளர்த்திருக்கிறது என்று ஒரு விளக்கம் உண்டு.  இன்னும் சில வருடங்களில் கோடீஸ்வரர்களானவுடன் இந்த வரியால் நாமும் பாதிக்கப்படுவோம் என்ற எண்ணம் அந்த மாதிரி வரிகள் வருவதை அனுமதிக்க கூடாது என்று பெரும்பாலானோரை எண்ணவைக்கிறது. 

ஹார்வர்ட் பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் ராஜ் செட்டி போன்றவர்கள் செய்திருக்கும் விலாவாரியான ஆய்வுகளில் இருந்து இத்தகைய நம்பிக்கைகளில் இருக்கும் தவறுகள் தெரியவருகின்றன என்றாலும், விரவியிருக்கும் இந்த நம்பிக்கை உலக மகா கோடீஸ்வரர்கள் பலரை அமெரிக்காவில் உருவாக்கியிருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இவர்களில் பலர் 2010 வாக்கில் வாரன் பஃப்பெட் துவங்கிய The Giving Pledge என்ற ஒரு பிரமாணத்தை எடுத்துக்கொள்வதன்மூலம், தாங்கள் இறப்பதற்குள் தங்கள் சொத்தில் குறைந்தது 50 சதவீதத்தையாவது தம் உறவினர் அல்லாதோருக்கு நல்ல காரியங்களுக்காக நன்கொடையாகக் கொடுத்துவிடுவதாக உறுதி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் இது ஒரு பாராட்டப்படவேண்டிய பரோபகார முயற்சிதான் என்றாலும் முதலில் இந்த அளவு எவர் ஒருவரிடமும் பணம் சேருவது சரியா என்று பலர் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

The Meritocracy Trap என்ற புத்தகத்தை எழுதியிருக்கும் டேனியல் மராக்கொவிட்ஸ் யோசிக்க வைக்கும் ஒரு உதாரணத்தைத் தருகிறார். சுமார் இருபது வருடங்களுக்கு முன்னெல்லாம் வாடகைக் காரோட்டியாக (Taxi Driver) இருப்பது, ஒரு நடுத்தரவர்க்கத் தொழிலாக இருந்தது. ஒரு நல்ல காரோட்டியாக இருப்பவருக்குப் பல்வேறு விவரங்கள் தெரிந்திருக்கவேண்டும். ஊரில் உள்ள எந்த இடத்துக்கும் விரைவாகச் சென்றடையச் சரியான வழியென்ன என்று முதலில் தெரிந்து வைத்திருக்கவேண்டும். காலை / மாலை / என்ன கிழமை என்பதைப் பொறுத்து ஊரில் போக்குவரத்து நிலவரம் எப்படி இருக்கும், எந்த ரோடு வழியே எப்படிப் போனால்  சவாரியைச் சீக்கிரம் முடிக்கலாம் என்ற ஞானம் வேண்டும். பயணிகளுடன் இதமாக அவர்கள் பேசும் மொழியில் பேசத் தெரிந்திருக்கவேண்டும். எந்தச் சமயத்தில் எங்கே போய்க் காத்திருந்தால், சட் சட்டென்று சவாரி கிடைக்கும் என்று புரிந்திருக்கவேண்டும். லண்டன் போன்ற நகரங்களில், இதற்காகப் பிரசித்திபெற்ற கடினமான தேர்வெல்லாம்  (The Knowledge Test) கூட உண்டு. ஊரைப் பற்றிய இந்த எல்லா விவரங்களையும்  விரல் நுனியில் வைத்திருக்கும் தேர்ந்த டிரைவர்களால் நடுத்தர வர்க்க சம்பாத்தியத்தை ஈட்டிக் குடும்பம் நடத்தமுடிந்தது. 

இப்போது நிலைமை எப்படி மாறியிருக்கிறது என்று யோசியுங்கள். போகவேண்டிய இடத்திற்கு வழியென்ன என்று போக்குவரத்து நிலவரத்தை சீர்தூக்கிப் பார்த்து வழிகாட்ட ஜி‌பி‌எஸ் இருக்கிறது. சவாரி பிடித்துக்கொடுப்பது திறன்பேசியில் இருக்கும்  ஊபர் / ஓலா போன்ற செயலிகள். சவாரிக்குக் கட்டணம், டிப்ஸ் எவ்வளவு என்று நிர்ணயிப்பதெல்லாம் ஊபர் / ஓலா நிறுவனங்கள். இந்த அமைப்பில் திறமைக்குப் பெரிய அவசியங்கள் ஏதும் இல்லை என்பதால் ஓரளவு காரோட்டத் தெரிந்த யார் வேண்டுமானாலும் டாக்ஸி டிரைவர் ஆகிவிடமுடிகிறது. இதில் எல்லாம் நிறைய வசதிகளும் பாதுகாப்புகளும் இருக்கின்றன என்பதென்னவோ உண்மைதான். ஆனால் இந்தத் துறையில் இருந்து கொட்டிக்கொண்டிருக்கும் வருவாயின் பெரும் சதவீதத்தை அள்ளிக்கொள்வது ஊபர் / ஓலா நிறுவனங்களை நடத்தும் மேலாளர்களும், நிரலிகள் எழுதும் கணினி நிபுணர்களும், மற்றும் இந்த நிறுவனங்களின் முதலீட்டாளர்களும்தான். இவர்கள் எல்லோரையும் சேர்த்தால் சில ஆயிரம் பேர் நிறையப் பணம் பண்ணுவது தெரியும். ஆனால்  லட்சக்கணக்கில் வாகன ஓட்டிகளாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் இந்தத் துறையின் வருவாயிலிருந்து பெரும் பங்கு சதவீதம் படுகுழியில் விழுந்துவிட்டது! 

இந்தப் பகுதியை எழுதும்போது, நடைமுறைப் பொருளாதாரம் (Behavioral Economics) என்ற துறையில் புழக்கத்தில் இருக்கும் Quasi Hyperbolic Discounting என்ற சொற்றொடர் ஞாபகத்திற்கு வருகிறது. கேட்பதற்கு சிக்கலாக இருந்தாலும், அதன் அர்த்தத்தை எளிதில் புரிந்துகொண்டு விடலாம். நமது சொந்த வாழ்வில் நமக்கு நேரும் சின்னச்சின்ன அனுபவங்கள் உலகில் வேறெங்கோ நடக்கும் மிகப்பெரிய நிகழ்வுகளை விட அதிகமான தாக்கத்தை நம்மில் ஏற்படுத்தும் என்பதுதான் அதன் அர்த்தம். நம் கைவிரலில் பட்டிருக்கும் ஒரு சிறு காயம் தரும் வலி, உலகில் வேறெங்கோ ஆயிரம் பேர் பூகம்பத்தில் இறந்ததைப் பற்றி கேள்விப்படும்போது நமக்கு கிடைக்கும் வலியை விட பெரிதாகத் தோன்றுகிறதல்லவா? இந்தத் தாக்கம் நம்மை குழப்பி விடாமல் பார்த்துக்கொள்வது நமது சிந்தனைகள்/செயல்களில் கோடல்கள் (Bias) ஊடுருவாமல் இருக்க உதவும். மேலே சொன்ன காரோட்டிகள் பற்றிய அனுமானிப்பு, புத்தக ஆசிரியர் வசிக்கும் அமெரிக்காவிற்கு பொருந்தும். ஆனால் இந்தியாவிலிருக்கும் நண்பர்களிடம் பேசியபோது, ஆட்டோ, டாக்ஸிகாரர்களின் தாங்கமுடியாத ஆட்டத்தை இந்த ஊபர்/ஓலா போன்ற சேவைகள் சற்றுக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றன என்றே கருதுகிறார்கள் என்பது புரிந்தது. நைஜீரியா போன்ற சில நாடுகளில் ஊபர் சேவையை உபயோகித்து டாக்ஸியைப் பிடித்தபின், காரோட்டியும், பயணியும் ஒருவருக்கொருவர் கண்ணடித்துக்கொண்டு சவாரியை கேன்ஸல் செய்ததாக செயலியில் பதிவு செய்துவிட்டு, ஊபர் நிறுவனத்துக்கு சேரவேண்டிய கட்டணத்தை தங்களுக்குள் பங்கு போட்டுக்கொள்ளும் பித்தலாட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இதை எப்படித் தடுப்பது/தண்டிப்பது என்று நிறுவனங்கள் (கான்பரன்ஸ்) ரூம் போட்டு திட்டம் தீட்டி வருகின்றன!

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இந்தத் தொழில் நுட்பங்களை உருவாக்கி, சேவைகள் வழியே அவற்றை எல்லோரும் பெரும்படி வழங்கி இருக்கும் நிபுணர்கள் நிறைய பணம் சம்பாதிப்பது தவறு என்று தோன்றாது. ஆனால் இந்தத் துறையின் மொத்த வருவாய் எவ்வளவு, அதில் யாருக்கு எவ்வளவு பங்கு போய் சேருகிறது என்று குடைய ஆரம்பித்தால், ஏதோ நெருடத் தொடங்கும்.  இங்கேதான் நியாயத்தை நிலைநிறுத்தும் நம்பகமான அரசாங்கங்களின் சேவை தேவை. பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு கவனித்து இந்த முன்னேற்றங்கள் கொண்டு வந்து கொட்டும் பயன்கள் எல்லோருக்கும் போய்ச் சேரும்படி பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இல்லாவிடில் வருமான சமத்துவமின்மை (Income Inequality) அதிகரித்துக் கொண்டே போய், சமுதாயப் புரட்சிகளிலும், வன்முறையிலும் தீர்வுகளைத் தேடத்துவங்கும் சங்கடங்களில் போய் விரைவில் உலகம் நிற்கும்!

பெருநிறுவனங்களின் சமுதாயக் கடமை (Corporate Social Responsibility) என்பது சமீப காலத்தில் மிகவும் பறைசாற்றப்படும் ஒரு விஷயம். இந்தக் கடமைக்காக அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம். 

1. பணமாகவோ, பொருட்களாகவோ, தங்கள் ஊழியர்களின் நேரமாகவோ நிறுவனங்கள் செய்யும் நன்கொடைகளை இந்த முதல் கூடையில் போட்டுவைக்கலாம். நிறுவனம் உதவுகிறது என்ற விளம்பரத்துக்குமேல், இந்த வழியாக அவர்களுக்குப் பெரிய லாபம் ஏதும் கிடைக்காது.

2. சுற்றுச்சூழலை பாதுகாக்க, தண்ணீர் செலவு, மின்சக்தி உபயோகம் போன்றவற்றைக் குறைத்தல், தொழிலாளர் நலனுக்காக மருத்துவமனை, பள்ளிக்கூடம், நூலகம் போன்றவற்றைக் கட்டித் தருதல் முதலியவற்றை இரண்டாம் கூடையில் போடலாம். இப்படி செய்யப்படும் பரோபகார காரியங்களால் நிறுவனத்தின் செலவு குறைந்து, தொழிலாளர்களின் திருப்தி அதிகரித்து, நிறுவனத்தின் வருவாயும் லாபமும் உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் இதில் உண்டு. 

3. சில சமயம் தங்கள் வியாபாரம் சார்ந்த ஓர் இடத்திலிருந்து சாதாரணமாய்ச் சமூகத்துக்கு உதவிசெய்ய ஆரம்பித்துப் பின்நாட்களில் அதிலிருந்தே நிறைய லாபம் வருவதைக் கண்டுகொண்டு, இந்த மூன்றாம் கூடையை மிகவும் பெரிதாக்கிச் சமூகத்துக்கும் உதவி, தாங்களும் பணம் பார்க்கும் நிறுவனங்கள் உண்டு. உதாரணமாக இந்தியாவில் யூனிலீவர் நிறுவனம் கிராமத்துப் பெண்களுக்கு உதவுவதற்காகச் சக்தி என்று ஒரு திட்டத்தைத் துவக்கி, தங்கள் கம்பெனி  சோப்பு போன்ற பொருட்களை வீடுவீடாகச் சென்று கிராமப்புறங்களில் விற்றுப் பணம் சம்பாதிக்க வழி வகுத்தது. அந்தத் திட்டம் அவர்கள் நினைத்ததைவிடப் பெரிய அளவில் வெற்றிபெற்று ஏறக்குறைய ஒரு லட்சம் பெண்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்க உதவியதுடன், நிறுவனத்தின் வியாபாரத்தையும் பெருக்கியதால், அதே திட்டத்தை அவர்கள் இப்போது பல நாடுகளில் நடத்திவருகிறார்கள்.

இந்த மூன்று விதமான முறைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளாகவோ, அல்லது ஒன்றில் ஆரம்பித்து இன்னொன்றில் முடிவதாகவோ இருக்கலாம். அவற்றை நிறுவனங்கள் முறையாகக் கவனித்து நடத்தி வந்தால் இரண்டு பக்கங்களும் நிறையப் பயன்கள் பெற வாய்ப்புண்டு. திறமையான முறையில் நடத்தப்பட்டு, வெற்றிபெறும், நன்கு வளரும் நிறுவனங்களும் அவை நல்ல கார்ப்பரேட் குடிமக்களாக விளங்கித் தாங்கள் இருக்கும் ஊர், உள்ளூர் மக்கள் எல்லோருக்கும் உதவுவதும் அவசியம் தேவை. ஆனால்  எங்கள் வியாபாரம் / வளர்ச்சி என்பதில் மட்டுமின்றி, இப்படிச் சமூகத்துக்கு உதவுவதிலும்  நாங்கள் விற்பன்னர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பல நிறுவனங்கள், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தவேண்டும் என்பது போன்ற விவாதங்கள் வரும்போது, அதெல்லாம் ரொம்பக் கஷ்டம் என்று பின்வாங்குவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். அவர்கள் CSR என்று செய்யும் பணிகளும் தரும் கொடைகளும் அவர்களின் மறுபுறத்து மோசமான நடவடிக்கைகளை மறைக்கும் வெள்ளையடிப்பாக இருந்துவிடாமல் அவர்களின் ஒட்டுமொத்த நல்ல நடைமுறையின் ஒரு பகுதியாகத் திகழ்வது அவசியம்.

ஒரு சின்ன புள்ளிவிவரம். அமேசான் நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 5.75 லட்சம். நிறுவனத்தின் CEO ஜெஃப் பெஸோஸ் அவர்கள் அத்தனை பேருக்கும் தன் சொந்தப் பணத்திலிருந்து இந்த வருடம் தலா ஒரு லட்சம் டாலர் (சுமார் எழுபது லட்சம் ரூபாய்) பொங்கல் போனஸ் கொடுத்தாலும்கூட, அவரது சொத்து 2020 ஆரம்பத்தில் இருந்ததைவிட இன்று அதிகமாக இருக்கும்! காரணம் கொரொனா தாண்டவத்தால் உலகமே தடுமாறிக்கொண்டிருந்த போன வருடம் மட்டும் அவரது சொத்து மதிப்பு அவ்வளவு உயர்ந்திருக்கிறது! இப்படிச் சிலரின் சொத்து மதிப்பு அதிரடியாய் உயர்ந்து வருவதால், ஒரு பக்கம் நல்ல எண்ணங்களுடனும் இன்னொரு பக்கம் உலகுக்கு தங்களை நல்லவர்களாய் காட்டிக் கொள்வதற்காகவும் இவர்களில் பலர் உலகம் இதுவரை கேள்விப்பட்டிராத அளவு பெரிய தானங்களைச் செய்யத் தாங்கள் முன்வந்திருப்பதாகப் பெரிய அறிவிப்புகளைச் செய்கிறார்கள்.  

அந்த மஹா கோடீஸ்வரர்கள் இந்த நன்கொடைகளை எப்படி விநியோகிக்கிறார்கள் என்பது தலையைச் சொறியவைக்கிறது. ஏதோ நூறு நல்ல காரியங்களையோ, அமைப்புகளையோ தேர்ந்தெடுத்து, ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு என்று காசோலைகளை அனுப்பிவிட்டு இவர்கள் யாரும் சும்மா உட்கார்ந்திருப்பதில்லை. பதிலாகத் தங்கள் நிறுவனங்களை எவ்வளவு உக்கிரத்துடன் நடத்தி அசுர வளர்ச்சிபெற வைத்தார்களோ அதே உக்கிரத்துடன் இந்த பரோபகார உலகிலும் மேலாண்மை செய்ய இவர்கள் எல்லோரும் விரைகிறார்கள். உதாரணமாகப் பில் கேட்ஸின் அமைப்பு ஓர் ஏழை நாட்டில் தடுப்பூசிபோட மில்லியன் டாலர் கொடுக்க நினைத்தால், அந்த நாட்டு அரசாங்கத்துடன் ஓர் ஒப்பந்தம் போடுகிறது. அதன்படி அமைப்பு தரும் ஒரு மில்லியன் டாலர் நன்கொடையைப் பெற அந்த அரசாங்கம் தன்நாட்டுத் தடுப்பூசித் திட்டத்தில் ஐந்து மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யவேண்டும், பெரும்பாலான மருந்துகளை அவர்கள் சொல்லும் நிறுவனங்களில் இருந்து வாங்கவேண்டும் போன்ற வற்புறுத்தல்கள் இருக்கும். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இதிலும் தவறேதும் இல்லை என்றுதான் தோன்றும். அவர்கள் கொடுக்கும் ஒரு ரூபாயின் மதிப்பை ஆறு ரூபாய் ஆக்குகிறார்கள் (Leverage), நல்ல தரமான மருந்துகளை வாங்கவேண்டும் என்று சொல்கிறார்கள், இதெல்லாம் அந்நாட்டு மக்களுக்கு நல்லதுதானே என்றாலும், இதனால் அந்த அரசாங்கமும், தடுப்பூசித் திட்டமும் பல சுதந்திரங்களை இழந்து இந்த அமைப்பின் முடிவுகள் தவறோ சரியோ, அதன்பின்னே சுற்றிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது. பல சமயங்களில் இந்த பரோபகார அமைப்புகளின் முடிவுகளும் புரிதல்களும் தவறாகப்போய்க் குட்டையைக் குழப்பிய உதாரணங்கள் நிறைய இருக்கின்றன. பில் கேட்ஸ் அடி மனதில் நல்லவர்தான், அவர் செய்ய விழையும் நற்காரியங்கள் சரியானவைதான் என்றாலும் கடந்த பன்னிரண்டு வருடங்களாக முழுநேரமும் இந்த அமைப்பை நடத்துவதில் அவர் ஈடுபட்டிருந்தாலும் அவர் சொத்து மதிப்பென்னவோ 2008ல் இருந்த 58 பில்லியன் டாலர்களில் இருந்து இன்று 100 பில்லியன் டாலர்களைத் தொடவிருக்கிறது. அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிப்படி எப்போது தன் ராஜ்ஜியத்தில் பாதியைத் தானம் கொடுத்து முடிப்பாரோ தெரியவில்லை. 

இந்த அணுகுமுறையே தவறு என்கிறார் அமெரிக்க சமூக ஆர்வலர் ஆனந்த் கிரிதரதாஸ். 2019ல் வெளிவந்த Winners Take All என்ற இவரது புத்தகத்தில் “நிஜமாகவே பரோபகார காரியங்களுக்காகப் பூமி இதுவரை கண்டிராத அளவுக்குப் பல்லாயிரம் கோடிகள் கணக்கில் இந்த ஜாம்பவான்கள் பணத்தை அள்ளிவீசும் இந்த வருடங்கள் ஏன் பூமி இதுவரை கண்டிராத அளவுக்கு இதே கோடீஸ்வரர்களால் பணம் சேர்க்க முடியும் அதே வருடங்களுடன் சேர்ந்து இருக்கிறது? என்ற கேள்வியை நாம் அனைவரும் கேட்கவேண்டியது அவசியம்”, என்கிறார் இவர். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு இவர் அளித்த ஒரு சிறு நேர்காணலை இங்கே பார்க்கலாம்.

போன வருடம் மட்டும் அமெரிக்கர்கள் சுமார் 500 பில்லியன் டாலர்களை நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார்கள். பிரமிக்க வைக்கும் இந்த எண்ணுக்கு பின்னே வேறொரு கதை இருக்கிறது என்கிறார் இந்திய அமெரிக்க காமெடியன் ஹசான் மினாஜ். சட்டத்திற்கு மிகவும் உட்பட்ட Donor Advisory Fund என்ற, பெரும் பணக்காரர்கள் உபயோகிக்கும் ஒரு தகிடுதத்தம் இருக்கிறது. நீங்கள் இந்த வருடம் பத்தாயிரம் ரூபாய்வரை நன்கொடை கொடுக்க இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். சாதாரணமாக உங்களுக்குப் பிடித்த ஏதோ ஓர் அமைப்புக்கு அந்த மதிப்பிற்கான ஒரு  காசோலையை அனுப்பிவிட்டு, இந்த வருடத்துக்கான வருமான வரி செலுத்தும்போது பத்தாயிரம் ரூபாய் தள்ளுபடி வாங்கிக்கொள்வீர்கள். அப்படித்தானே? அதற்குப் பதிலாக அதே பத்தாயிரத்தை Donor Advisory Fund (DNF) என்கிற ஒரு அக்கௌண்டில் போட்டுவிட்டீர்களானால் போதும். வரிச் சலுகையை இந்த வருடமே பெற்றுக் கொள்ளலாம். ஆனால் பணம் எங்கேயும் போகாது. பின்னால் ஓரிரு வருடங்கள் கழித்தோ, பல வருடங்கள் கழித்தோ, உங்களுக்கு சௌகரியப்படும்போது அந்தப் பணத்தை எடுத்து நன்கொடையாகக் கொடுத்துக்கொள்ளலாம்.

இது வரிச் சலுகையை உங்களுக்குத் தேவையானபோது பெற்றுக்கொண்டு, நன்கொடையைப் பின் எப்போதாவது கொடுத்துக்கொள்ள ஒரு சட்டபூர்வமான வழி. “அதனாலென்ன? என்றைக்கிருந்தாலும் அந்தப் பத்தாயிரம் நன்கொடையாகத்தானே போகப்போகிறது?” என்கிறீர்களா? இந்த வழிமுறையை மஹா கோடீஸ்வரர்கள் எப்படித் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று ஹசான் மினாஜ் படம் பிடித்துக்காட்டுகிறார். நிக்கோலெஸ் வூட்மன் என்பவர் GoPro காமிரா கம்பெனியின் மேலாளர். 2014ல் இந்த நிறுவனம் IPO (Initial Public Offering) வழியே பங்குச் சந்தையில் குதித்தபோது இவர் சொத்து மதிப்பு திடீரென்று மூன்று பில்லியன் டாலர்களானது. அந்த வருட வருமானத்தின்படி அவர் பல மில்லியன் டாலர்கள் வருமானவரி செலுத்தியிருக்க வேண்டும். அதற்குப் பதில், அவர் நிறுவனத்தின் ஸ்டாக் உச்சத்தில் இருந்தபோது, பல மில்லியன் டாலர்கள் பெறுமானமுள்ள பங்குகளை DNF அக்கௌண்ட் ஒன்றில் போட்டு, வரிகள் கட்டுவதைச் சட்டப்படி வெகுவாகக் குறைத்துக் கொண்டுவிட்டார். அடுத்த சில வருடங்களில் அந்தக் கம்பெனி அவ்வளவு ஒன்றும் பெரிதாக வெற்றி நடை போடாததால் ஸ்டாக்கின் விலை வெகுவாகச் சரிந்துவிட, அந்த DNF கணக்கின் மதிப்பு ஏகத்துக்கு குறைந்துவிட்டது. இப்போது அவர் அந்தக் கணக்கில் இருந்து கொடுக்கும் நன்கொடைகள் முதலில் நினைத்ததோடு ஒப்பிட்டால் பாதிகூட இருக்கப்போவதில்லை என்றாலும் அவர் பெற்ற வரிச் சலுகைகள் எதையும் அவர் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. “ஒரு வேளை ஸ்டாக்கின் விலை வெகுவாக உயர்ந்திருந்தால்?” என்ற கேள்வி மிகவும் நியாயமானது. ஆனால் இந்த மாதிரி தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் முறைகளை உபயோகிப்பவர்களுக்கு (அல்லது அவர்களின் கணக்குப்பிள்ளைகளுக்கு) ஸ்டாக்கின் விலை விரைவில் ஏறுமுகமாக இருக்கப்போகிறதா அல்லது இறங்குமுகமா என்று உள்ளூரத் தெரிந்திருக்கும். இறங்குமுகம் என்று சந்தேகம் இருந்தால் DNF. ஏறுமுகம் என்று தோன்றினால் பேசாமல் தங்கள் கணக்கிலேயே ஸ்டாக்கை வைத்துக்கொண்டு விடுவார்கள்.

இதற்கு மேலும் போகவேண்டும் என்றால் ஆப்ஷன் டிரேடிங், ஹெட்ஜ் ஃபண்ட்ஸ், கேரீட் இண்டரெஸ்ட் லூப்ஹோல், பேக்டோர் ரோத் IRA என்று உலக நாடுகள் எங்கிலும் சட்டத்துக்குட்பட்ட பற்பல வழிமுறைகள் இருக்கின்றன. உங்களுக்கு இதெல்லாமும் தெரியும், இதற்கு மேலேயும் தெரியும் என்றால் நீங்களும் ஒரு மஹா கோடீஸ்வரராக இருக்கலாம். இதெல்லாம் நீங்கள் கேள்வியே பட்டதில்லை என்றால், கொஞ்சம் பொறுத்திருங்கள். நீங்கள் மஹா கோடீஸ்வரராக ஆனவுடன் உங்கள் கணக்குப்பிள்ளை இதைப்பற்றி எல்லாம் உங்களுக்குச் சொல்லிக் கொடுப்பார். 

பரோபகாரம் பற்றிய கட்டுரைத் தொடரில், இந்த வழிமுறைகளைப் பற்றி இவ்வளவு தூரம் பேச வேண்டுமா என்றால், இந்தப் போர்வையின் பின்னால் சாதாரணர்களால் முடியாத என்னென்ன விதங்களில் மஹா பணக்காரர்களால் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க முடிகிறது என்று கொஞ்சம் திரையை விலக்கிப் பார்த்து புரிந்துகொள்ளத்தான் இந்த அலசல். இந்த நடைமுறைகள் புரியும்போது, இந்தக் கட்டுரையைப் படிக்கும் நாம் யாரும் பில்லியனர்களாக இல்லாதபோதும் நமதளவில் அணுகுமுறைகளை நாம் எப்படி மாற்றிக்கொள்வது சமுதாயத்துக்கு நல்லது, எந்த மாதிரியான வரியமைப்புகளுக்கு ஆதரவளிக்கலாம், பேரம் பேசுவது கார் வாங்கும்போது சரியா அல்லது காய்கறி வாங்கும்போது சரியா என்றெல்லாம் யோசிக்கலாம். அதோடு சமுதாயத்தின் உச்சியில் இருக்கும் ஒரு சதவிகித பணக்காரர்களை எகிறி குதித்துக்குதித்து குற்றம் சொல்லும்போது “சுட்டும் விரலால் எதிரியைக் காட்டிக் குற்றம் கூறுகையில், மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா” என்ற பழைய ஏசுதாஸ் பாடல் வரிகள் நமக்கு ஞாபகம் வரவேண்டும். சமயம் கிடைக்கும்போது, நடுத்தரவர்கம் என்று சொல்லிக்கொள்ளும் நம்மைப் போன்றவர்கள் பணக்காரர்கள் செய்வதற்கு ஈடான அதே மாதிரியான வில்லத்தனங்களை நம் மட்டத்தில் செய்துகொண்டிருக்கும் வழக்கை பிட்டுப்பிட்டு வைக்கும் இந்த நீண்ட கட்டுரையை படித்துப் பாருங்கள். முடியாவிட்டால் குறைந்தது அந்த நீண்ட கட்டுரையின் கதைச் சுருக்கமான இந்த மூன்று நிமிட காணொளியையாவது   பார்த்து விடுங்கள்.  அது அமெரிக்க சமுதாயத்தைப் பற்றிய ஆய்வு என்றாலும், நாம் எங்கே வாழ்ந்தாலும் அதே கதை நமக்கும் பொருந்தும் என்பது நிமிடத்தில் உள்மனதுக்குள் உறைக்கும். நமது சமுதாயத்தின் அங்கத்தினார்களாக நாம் அனைவரும் சரியாக இயங்கினால், மஹா கோடீஸ்வரர்கள் மட்டும் இல்லை, லட்சாதிபதிகளோ, மற்ற சாதாரணர்‌களோகூட பரோபகாரச் செயல்கள்செய்து சமூகத்தைக் காப்பாற்றவேண்டிய தேவையே இருக்கக் கூடாது!

(அடுத்த இதழில் முடியும்)

முகப்பிலிருக்கும் ஓவியத்திற்கான சுட்டிhttps://democracyuprising.com/2018/02/01/the-lives-of-the-filthy-rich/

Series Navigation<< பரோபகாரம் – தன்னார்வுலாபரோபகாரம் – நாட்டுக்கு நாடு >>

4 Replies to “பரோபகாரம் – மஹா உதவல்கள்”

  1. “அமெரிக்காவில் மட்டும் இப்படி யோசிப்பதில்லை ..” அதற்க்கு சில பல காரணங்கள் வியாக்கியானங்கள் அடுக்குகிறார் அழகிய மறையின் இலக்கு (சுந்தர் வேதாந்தம்). பின்னர் எந்த அளவு மகா செல்வந்தர்கள் தங்களைச் சுற்றி ஒரு மாயை, பூர்வாசிரம கட்டு கதை எல்லாம் பரப்புகிறார்கள் என்பதையும் விளக்குகிறார்.

    ஒருவேளை அமெரிக்காவில் பரவலாக “நாளையே நானும் கோடீஸ்வரன் ஆவேன்” என்று நம்பப்படுவதும் இவர்களுடைய ஊடக செல்வாக்கினால் உருவாக்கப்பட்டு, பரப்பப்பட்ட மூட நம்பிக்கையோ என்ற சந்தேகமும் தோன்றுகிறது.

  2. பல்வேறு விஷயங்களைத் திறமையாகக் கோர்த்து சிந்தனையைத் தூண்டும்விதமாக கட்டுரைகள் இதில் வருகின்றன. தன்னை முன்னிறுத்தும் இன்றைய சமூதாயத்தில் முன்னேற்றம் என்பது செல்வத்தினால் அடையப்படுகிறது.. அப்படி அடைந்தவர்கள்,அது தங்களின் தனிப்பட்ட திறமையினால் என்ற முடிவிற்கும் வந்து விடுகிறார்கள்.அதற்கான சூழல் தங்களுக்கு பெரும்பாலும் அமைந்து உள்ளது என்பது மறந்தே போகிறது.
    இதில் சி.எஸ்/ஆர் பற்றியும் வந்திருக்கிறது. உண்மையில் இது பெரும்பாலும் கண்துடைப்பு வேலையே.சாலைப் பூங்காக்களை அமைத்து தங்களை விளம்பரம் படுத்திக் கொள்ளும் நிறுவனங்கள் அதற்கான வரி சலுகை மட்டும் பெற்றுக் கொண்டு பின்னர் ஒரேயடியாக மறந்து விடும்.. அந்த பூங்காக்கள் குப்பைக் கிடங்குகளாக நறுமணம் (!) வீசிக் கொண்டிருக்கும். சிஎஸ்ஆர்விஷயம் சமீபத்தில் இந்தியாவில் பெரும் சச்சரவை ஏற்படுத்தி பின்னர் அரசு சில சலிகைகள் கொடுத்தது. இந்த விஷயத்தில் எனக்கு ஒன்று புரியவில்லை. கைவிடப்பட்ட சுரங்கங்களில் ந்யூட்ரினோ ஆய்வகங்களை அமைக்க சுரங்கம் மற்றும் கனிம நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஏன் சி எஸ் ஆர் நிதிகளைப் பயன்படுத்தக் கூடாது? அது சாத்தியமா என்று ஏன் ஒரு ஆய்வு கூட நடத்தப்படவில்லை.?.அந்தந்தத் தொழில் நிறுவனங்களுக்குத் தொடர்புள்ள செயல்பாடுகளில் ஏன் ஈடுபடக்கூடாது? நான் கோயில்களுக்கோ, வழிபாட்டு இடங்களுக்கோ எதிரியல்ல. சமீபத்தில் பல கோடி பெறுமானமுள்ள நிலம், சென்னையின் முக்கிய பகுதியான தி.நகரில் உள்ள இடம், பத்மாவதித் தாயாரின் கோயிலுக்காக நன்கொடையாக அளிக்கப்பட்டது..அந்த நிலத்தை விற்று வரும் தொகையில் அழிந்து போகும் நிலையிலிருக்கும் பல வழைபாட்டுத் தலங்களை, கலைக்கூடங்களை அதன் பழமை மாறாமல் பேணியிருக்கலாம்.இல்லை ஒரு பன்முகத் திறமைகளை வளர்த்தெடுக்கும் , இன்றைய தேவைக்கான, ஒரு முறைசாரா ஆய்வகம் அமைத்திருக்கலாம்.
    கொடுப்பது… தேவை அறிந்து கொடுப்பது… பாத்திரம் அறிந்து இடுவது..நினைவில் நிற்பதில்லை போலும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.