படைப்பின் தருணம்

புத்ததேவ பாஸு
தமிழில்: வெங்கட் பிரசாத் (வி.பி.)

இது ஒய்வுக்காலம், நீ அதன் மந்த மாருதம்.
ஓரிரு மணிநேரம் ஏதும் செய்யாதிருத்தலோ, வெதுவெதுக்கும்
மொட்டைமாடியிலிருந்து கௌரிஷ்ருங்காவை கண்ணுறுவதோ,
மெல்ல உடைந்தகலும் அந்தியோ,
இறுகிய நரம்புகளின் இளைப்பாறலோ
அன்றி
உன் எல்லைகள் முடிவிலி வரை நீள்வதையும்
அமரத்துவம் மட்டுமே நிறைந்திருப்பதையும் உணர்ந்திருப்பது.
ஓடையின் நீரோட்டத்திற்கடியே மறைந்து விட்டதனைத்தும்—
இறந்தொழிந்துவிட்டதனைத்தும் —
நடைபாதைகளை நெருக்கும் திரள்கள்
அண்டை விலங்குகளின் மெல்லிய உரையாடல் முயற்சிகள்
பூந்தொட்டியிலிருக்கும் பூவின் அர்த்தமற்ற இளிப்பு—
மெல்ல மீண்டு, வடிவம் கொண்டு, வாழ்வை மீட்டெடுப்பது போல்;
அனைத்தும் ஒன்றாக — கருஞ்சிவப்பு மலர்களும், ரகசிய புழுக்களும்
சாத்தியமற்ற அனைத்தும்.
முதன்முறையாக பழக்கமானவற்றைத் துறந்து வருபவனைப் போல்
அவன் தடுமாறுகிறான்:
பின் ஆழ்ந்த இருண்மையோடொலிக்கும்
எதிர்பாராதெழுந்த கர்ஜனையுடன்—
பூமியிலிருந்து
வலிந்திழுத்துப்
பெயரும்
மன விமானம் முடிவில்லா இரவின் இதயத்துள் தப்பித்து
நனவிலியை ஒட்டிய பெயரிலிப் பகுதியை நுழைய —
அங்கே
அறியப்பட்டதிலிருந்து கற்பனையில் சிக்காது விடுபட்ட —
விளக்குகள், வாகனங்கள், கட்டிடங்கள், துறைமுகத்துக் கப்பல்கள்,
திடீரென அதன் முழுமையில் வெளிப்படும் நகரம்;
எஞ்சியிருப்பதோ
வெறும் ஒரு இரவும், பெருவெளியும் சில விண்மீன்களும் மட்டுமே;
பயங்கள் மறைய, கண்ணீர் அமிழ
விழிநிலை உறக்கமெனும்
மௌன மனசட்டகத்தில்
ஒரு கணத்தால் பிணைக்கப்பட்டு
உதயமாகின்றன
அவன் விட்டுச்சென்ற அனைத்தும்
இனி வரவிருக்கும் அனைத்தும்.
இதுதான் ஒய்வு, நீயோ அதன் உறைந்த பரவசம்.

மூலநூல்கள் / மேலும் படிக்க:
https://parabaas.com/translation/database/translations/poems/buddhadebabasu_7.html