“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்

தாகூரின் அற்புதமான சிறுகதை இது.

மொழிபெயர்த்திருப்பது மகாகவி பாரதியார்.

சிறுகதை இடம் பெற்ற நூல் : தாகூர் கதைகள்- பாரதியார் மொழி பெயர்ப்பில்

அச்சிட்டோர்- சிறுவாணி வாசகர் மையம், கோவை

நதியின் பழைய ஸ்நாந கட்டம்; பெரும்பாலும் இடிந்தது .அதனருகே எனது தோணியைக் கொண்டு கட்டினோம். ஸூர்யன் அஸ்தமித்தான்.

தோணி மீதில் மஹமதியச் செம்படவர் மாலை ஜெபம் செய்தனர். மேற்கு வானமாகிய ஒளி கொண்ட திரை மீது அவர்களுடைய மௌனமான தொழுகை ஒரு சித்திரம் எழுதியது போல் தோன்றிற்று. நதியின் அசைவற்ற நீரின் மீது அஸ்தமய ஒளி பொன்னிற முதலாக உருக்கு நீலம் வரை பலவகைப்பட்ட மெல்லிய வர்ண பேதங்கள் காட்டிற்று.

எனக்கெதிரே அங்கொரு மாளிகை நின்றது. அது கிழப் பருவத்துக்குறிய குறிகளெல்லாம் பொருந்தியிருந்தது. ஜன்னல்கள் உடைந்திருந்தன. தாழ்வாரங்கள் இடிந்து கிடந்தன. நெடுந்தூரம் போகும் ஆலமர வேர்களால் உடைந்த படிக்கட்டின்மேல் நான் தனியாக உட்கார்ந்து இருந்தேன். ஏதோ விசனத்தில் அழத் தொடங்கினேன். அப்போது நான் திடுக்கிடும்படி ஒரு குரல் “எந்த ஊர் ஐயா!” என்று கேட்டது.

திரும்பிப் பார்த்தேன். ஏழை. இராப் பட்டினி போல் தோன்றிய மனிதன் ஒருவன் தென்பட்டான். வங்காளத்தை விட்டு வெளியே வேலைக்கு போயிருக்கும் வங்காளிகளின் முகத்தில் இடிந்து போன தோற்றம் ஒன்று காணப்படுதல் வழக்கம். அந்த களை இவன் முகத்திலும் இருந்தது. அஸாம் பட்டுச் சட்டை ஒன்று போட்டிருந்தான். அழுக்குச் சட்டை. எண்ணை ஊறி முன் பக்கம் திறந்திருந்தது. அவன் தினக் காரியத்தை முடித்துவிட்டு ஊருக்கு திரும்புவோன் போல தோன்றினான். ஸாயங்காலம் போஜனம் செய்ய வேண்டிய வேளையில் காற்றுக் குடித்துக் கொண்டு உலாவினான்.

அந்த மனிதன் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். அவனுடைய கேள்விக்கு மறுமொழியாக நான் “ராஞ்சி பட்டணத்திலிருந்து வருகிறேன்,” என்றேன்

“என்ன தொழில்?” என்று கேட்டான்

“வியாபாரி” என்றேன்

“என்ன வியாபாரம்?” என்று கேட்டான்,

“பட்டுநூலும், மரமும், வியாபாரம்” என்றேன்

“பெயரென்ன?” என்று கேட்டான்

ஒரு க்ஷணம் யோசனை பண்ணிப் பின் ஒரு பெயர் சொன்னேன். அது என் சொந்தப் பெயரன்று. பின்னும் அவன் மனம் திருப்தி அடையவில்லை . மறுபடியும் கேட்கத் தொடங்கினான்.

“இங்கு எதற்காக வந்தீர்?” என்றான்.

காற்றுக்காக” என்றேன்.

அவன் ஆச்சர்யப்படலானான். சொல்லுகிறான்: “இந்த ஊர்க்காற்று விசேஷ மென்றா வந்தீர்? நான் ஆறு வருஷங்களாக இந்தக் காற்றில் பழகுகிறேன். அதனுடன் நாள் தோறும் பதினைந்து தான்ய எடை கொயினா மருந்தும் சாப்பிட்டு வருகிறேன். யாதொரு அனுகூலமும் தெரியவில்லை” என்றான்.

“இருந்தாலும், ராஞ்சி பட்டணத்திலிருந்து வந்த எனக்கு இவ்விடத்துக் காற்றும் புதிதன்றோ ? கொஞ்சம் அனுகூல மிருக்கத்தான் செய்யும்” என்று மறுமொழி கூறினேன்.

அதற்கவன், “சரிதான். நீர் எதிர்பாராத அனுகூலமும் உண்டாகலாம்….. இங்கே எந்த வீட்டில் தங்குவீர்?” என்றான்

படித் துறைக்கு மேலே இடித்து கடந்த மாளிகையைக் காட்டி “அங்கே” என்றேன். நான் புதையலெடுக்க வந்ததாக அவன் சம்சயப்பட்டது போலே அவன் முகக் குறியில் தோன்றிற்று எனிலும், அந்த விஷயத்தைக் குறித்து அவன் ஒன்றும் சொல்லவில்லை ஆனால் பதினைந்து வருஷங்களின் முன்பு அந்த இடிந்த மாளிகையில் நடந்த விஷயமொன்றை விஸ்தரிக்கலானான்.

அந்த மனிதன் அவ்வூரில் பள்ளிக்கூடத்து வாத்தியார் என்று தெரிந்து கொண்டேன்.

பிரமாண்டமான வழுக்கைத் தலை, அதன் கீழே குழி விழுந்த கண்கள்- அப்ராக்ருத இயற்கைக்கு மாறான ஒளி வீசின. அவனுடைய முகம் பசியாலும் வியாதியாலும் வற்றிப்போயிருந்தது தோணிக்காரர் தங்களுடைய மாலை ஜபத்தை முடித்துச் சமையலிலே புகுந்தனர். ஸுர்யனுடைய கடைசிக் கிரணம் மங்கிவிட்டது. 

அந்த இருண்ட பாழ் வீடு இடிந்த படித்துறைக்கருகே ஒலியின்றிப் பேய் போல நின்றது.

அந்த வாத்தியார் சொல்லுகிறான்:

“நான் பத்து வருஷங்களுக்கு முன்னே இங்கு வந்தபோது அந்த வீட்டில் பூஷண் ஸாஹ் என்ற மனிதன் குடியிருந்தான். இவனுடைய சிற்றப்பன் துர்கா ஸாஹ் என்பவன் குழந்தை யில்லாமல் செத்துப்போய் விட்டபடியால், சிற்றப்பனுடைய பெரிய பூஸ்திதியும் வியாபாரமும் இவனுக்குக் கிடைத்தன.

“ஆனால் பூஷண் ஸாஹ் புது நாகரிகத்தைச் சேர்ந்தவன் இங்கிலீஷ் படித்து வெகு சுத்தமாகப் பேசுவான், துரைமார் சேரிகளில் செருப்புப் போட்டுக்கொண்டே நுழைவான். அத்துடன் தாடியும் வளர்த்தான். இதனால் துரைமார் இவனைக் கர்வியென்று சொல்லி இவனுக்கு யாதொரு நன்மையும் செய்யமாட்டார்கள். அவனைப் பார்த்தால் உடனே தெரியும், இவன் புது வழியைச் சேர்ந்த வங்காளி யென்று.

வீட்டிலேயும் அவனுக்கொரு ஸங்கடம். அவன் பெண்டாட்டி அழகாக இருப்பாள், காலேஜ் படிப்பு ஒரு புறம், அழகுப் பெண்டாட்டி மற்றொரு புறம்; புராதன ஆசார அனுஷ்டானங்கள் அவன் வீட்டிலே நிற்க இடமுண்டா ?”

அந்த வாத்தியார் மேலும் சொல்லுகிறான்:

“உமக்குக் கலியாணம் ஆயிருக்குமே. ஐயா! அவசியம் ஆயிருக்கும். ஆதலால் ஸாதாரண ஸ்த்ரீக்குப் புளிப்பு மாங்காய், கார மிளகாய், கடுமையான புருஷன் மூன்றுந்தான் நன்றாகப் பிடிக்குமென்ற விஷயம் உமக்கு நான் சொல்ல வேண்டியதில்லை யென்று நினைக்கிறேன். 

ஒரு மனிதன் தனது மனைவியின் காதலை இழக்க வேண்டுமாயின் குரூபியாகவும் ஏழையாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஸாதுவாக இருந்தால் அதுவே போதும்.

இப்படி இருப்பதன் காரணம் என்ன வென்று நீர் கேட்பீரானால், நான் அதைப்பற்றிச் சொல்லவேண்டிய விஷயம் அதிகமுண்டு. நான் இந்த விவகாரத்தைக் குறித்து மிகவும் யோசனை பண்ணியிருக்கிறேன்.

கலைமான் தன் கொம்புகளைத் தேய்க்க வயிரம் பாய்ந்த மரத்தை நாடும். வாழை மரத்திலே தேய்ப்பதில் அதற்கின்பமில்லை. ஆணும் பெண்ணும் இரண்டு பாலாகப் பிரிந்த காலமுதலாகப் பெண் ஆனை மயக்கி வசப்படுத்தும் பொருட்டாகத் தனது சக்தியை யெல்லாம் செலவிட்டு எத்தனையோ தந்திரங்கள் செய்து வருகிறாள் . தானாகவே பணிவு காட்டும் புருஷனுடைய பெண்டாட்டிக்கு உத்யோக மில்லாமல் போய் விடுகிறது. எண்ணில்லாத நூற்றாண்டுகளாகப் பாட்டிமாரிடமிருந்து வழி வழியாகக் கிடைக்கப் பெற்ற ஆயுதங்க ளெல்லாம் அவள் கையிலே பயனின்றிக் கிடக்கின்றன. கண்ணீர்களின் சக்தி, கோபத் தழல், விழி வலை – இவை யெல்லாம் தொழிலின்றிக் கிடக்கின்றன

நவீன நாகரிகத்தில் மனிதன் தனக்கு ஈசன் கொடுத்த மிருக இயற்கையின் சக்தியை இழந்து விடுகிறான். இதனால் காதற் கட்டுகள் தளர்ச்சியடைகின்றன. நவீன நாகரிகம் என்ற யந்திரந்திலிருந்து அந்த பாக்யஹீனனாகிய பூஷண் ஸாஹ் பழுதற்று வெளிப்பட்டான். ஆதலால் அவனுக்கு வியாபாரத்திலும் அனுகூலமில்லை. வீட்டிலும் அப்படியே.

“பூஷண் ஸாஹ் மனைவிக்குப் பெயர் மணிமல்லிகை அவளுக்குக் கேட்காமலே கொஞ்சுதல்கள்; அழாமலே டக்கா மஸ்லின் சேலைகள், சண்டை போட்டு ஐயிக்காமல் ஸாமான்யமாகவே தங்கக் காப்புக்கள் எல்லாம் சும்மா கிடைத்தன. அதனால் அவளுடைய பெண்ணியல்பு வளர்ச்சி பெற இடமில்லாமல் போய், அதனுடன் புருஷன் மீதுள்ள காதலும் மடிந்தது. அவனிடமிருந்து வஸ்துக்கள் பெற்றுக்கொண்டாள். அவனுக்கு யாதொரு கைம்மாறும் கொடுக்கவில்லை. சூது தெரியாத மூடக் கணவன் ஒன்றைக் கொடுத்தால் மீளப் பெறலாமென்று நினைத்தான். உண்மையோ அதற்கு தேர் விரோதம்.

இதன் பயன் எங்ஙனம் முடிந்ததெனில், நாளா நாளாக மணி தனது கணவனை டக்கா மஸ்லின்களும், காப்புக்களும் தரும் யந்திரமென்று பாவனை செய்யலானாள். முதல்தரமான யந்திரம்; அதன் சக்கரங்களுக்கு அவள் எண்ணை கூட பூச வேண்டியதில்லை.

. “பூஷணுடைய மனைவி அதிகம் பேசுவதில்லை. அக்கம் பக்கத்தாருடன் நெருங்கிப் பழகுவதுமில்லை.விரதமெடுத்துப் பிராமணருக்குச் சோறிடல், பரதேசிக்கு இரண்டு காசு போடுதல் இந்த வழக்கமெல்லாம் அவளுக்குக் கிடையாது. அவளிடம் சிக்கின பொருள் பிறகு நஷ்டமாவதில்லை. கையில் கிடைத்ததை வெகு ஜாக்கிரதையாக காப்பாற்றுவாள். கணவனுடைய முத்தங்களை மட்டும் தான் ஞாபகத்தில் காப்பாற்றுவதில்லை. அவளுடைய  யௌவன அழகில் ஓரணுக்கூட மாறாமலேயிருந்தது. அது பெரிய ஆச்சரியம். எத்தனை வயதானாலும் பதினாறு வயதுக்குள்ள ரூபம் அப்படியே இருந்ததாக அவளைப் பார்த்தவரெல்லாரும் கூறினர். பனிக்கட்டி போல அன்பில்லாத ஹ்ருதயமிருந்தால் யௌவனம் மாறாமல் இருக்கும் என்று தோன்றுகிறது.

மணிமல்லிகை வீட்டு வேலைகளில் மிகவும் வல்லவள். அத்தியாவசியமாக இருந்தாலொழிய வேலைக்காரர் வைத்துக் கொள்வதில்லை. தான் செய்யக்கூடிய வேலையைப் பிறர் செய்யக் கூலி கொடுத்தால் தன்னைத் தானே திருடுதலுக்கு ஸமானமென்று நினைத்தாள்.

யாரைப் பற்றியும் கவலை யில்லை அவளுக்கு. காதலின் கலக்கமில்லை. எப்போதும் வேலை செய்து மிச்சம் பிடிப்பாள். அவளுக்கு எப்போதுமே நோய் கிடையாது. விசனமில்லை.

“புருஷர் பெரும்பான்மையோருக்கு இது போதும். போதுமென்பது மாத்திரமன்று; இது அவர்களுக்கு அதிர்ஷ்டம். ஏனென்றால், காதல் செய்யும் மனைவியை மறப்பது சிரமம். ஓயாத நினைப்பின் சலிப்பினால் மனிதன் இளமையை இழந்துவிடுவான். இடுப்பு நோய் வந்தபோதுதான் மனிதனுக்கு இடுப்பிருக்கும் நினைவுண்டாகும். வீட்டில் மனைவி உன்னிடம் காதல் செய்து, தான் இருப்பதை எப்போதும் நினைப்பு மூட்டிக் கொண்டிருந்தால் அதுவும் இடுப்பு வலிக்கு ஸமானந்தான். அதிக ப்ரேமை மனைவிக்கு ஒரு புண்யமாக இருக்கலாம். ஆனால் புருஷனுக்குத் தொந்தரவு. இது என்னுடைய நிஷ்கபடமான அபிப்ராயம்

“நான் சொல்வது உங்களுக்குத் தொல்லையாகத் தோன்றவில்லையே! ஏனையா; உம்மைத்தானே; கேளும். நான் தனியாக குடியிருக்கிறேன்.என் மனைவி என்னோடு வசிக்கவில்லை. ஆதலால் எத்தனையொ முக்கியமான ஜன சமூஹ விவகாரங்களை பற்றி யோசனை பண்ண எனக்கு நேரம் கிடைக்கிறது. அவற்றை என் மாணாக்கரோடு பேச இடமில்லை. இன்னும் நான் பேசப் பேசக் கேட்டுக்கொண்டே வாரும். இந்த விஷயங்களைக் குறித்து நான் எத்தனை ஆழமாக யோசனை செய்திருக்கிறேன் என்று உங்களுக்கே தெரியும்.”

இங்ஙனம் அந்த வாத்தியார் பேசிக் கொண்டிருக்கும் போது, பக்கத்தில் ஒரு காட்டிலிருந்து நரிகள் ஊளையிடும் சத்தம் வந்தது. அவனுடைய பிரசங்க காட்டாறு சற்றே தடைப்பட்டு நின்றது. அந்த நரிகளின் ஒலியும் நின்றது. மண்ணும் நீரும் அதிக மவுனத்தில் விழுந்தன.

அப்போதவன் தன் சுடரும் விழிகளை இரவின் இருளில் விசாலமாகத் திறந்து கொண்டு மேலே கதை சொல்லுகிறான்:

“இப்படியிருக்கும் போதே பூஷணுடைய சிக்கலான வியாபாரத்தில் ஒரு குழப்பம் உண்டாய் விட்டது. நடந்த விஷயத்தை சரியாக அறியவும் சொல்லவும் நான் சக்தி இல்லாதவன். ஏனெனில் எனக்கு வியாபார பழக்கம் கிடையாது. என்ன காரணமோ அவனுக்கு கடைத்தெருவில் நாணயம் குறைந்துவிட்டது. எந்த உபாயத்தினாலேனும் ஒன்றரை லக்‌ஷம் ரூபாய் திரட்டிச் சில தினங்கள் அதைக் கடைத்தெருவில் புரட்டிக் காட்டினால், மறுபடியும் அவனுக்கு நாணயம் உறுதியாய் மேல் வியாபாரம் ஸங்கடமில்லாமல் நடக்கும்.

“ஒன்றரை லக்‌ஷம் ரூபாய் மொத்தக் கடனாக வாங்க வழி தேடினான். அதற்கு சரியான ஜாமீன் வேண்டியிருந்தது. நகைகள் தானே முதல் தர ஜாமீன்?”

பூஷண் ஷாஹ் தன் மனைவியிடம் சென்றான். ஆனால் பெரும்பான்மையான மனிதர் எத்தனை சுலபமாக மனைவியை முகம் நோக்கி பேசுகிறார்களோ அப்படி அவனால் பேச முடியாது. அவன் அவளிடம் செலுத்திய காதல் பயந்த வகுப்பு. மெதுவாக நடந்துபோய், தைரியமாக பேச முடியாமல் செய்கிற வகுப்பு. பூமிக்கும் ஸுர்யனுக்கும் உள்ள ஆகர்ஷணம் போல. பலமான கவர்ச்சி; ஆனால் இரண்டுக்குமிடையில் பல்லாயிரம் யோஜனை தூரம். 

“முதல் தரமான கற்பனை கதையிலே கதாநாயகனாக இருப்பவன் கூடச் சில ஸமயங்களில், மிகவும் நெருக்கடி உண்டானபோது, தனது ப்ரிய காந்தையினிடம் அடமானப் பத்திரங்கள், கடன் பட்டுக்கள் முதலிய கவிதா சூன்யமான விஷயங்களைப் பற்றிப் பேசும்படி அவயமாக நேர்கிறது. ஆனால் சொற்கள் இடறுகின்றன. ராகம் சரிப்படவில்லை. ஏனடா பேசத் தொடங்னோமென்ற திகைப்பு உண்டாகிறது. துர்பாக்யனாகிய பூஷணன்,  “இதோ, பாரடி, எனக்குப் பணம் வேண்டும். உன் நகைகளைக் கொண்டு வா” என்று சொல்ல முழுதும் சக்திஹீனனாய் நின்றான்,

கடைசியாக அவளிடம் விஷயத்தைச் சொன்னான். ஆனால் அவன் மெருகு போட்டு மெருகு போட்டுப் பேசின மாதிரியில் அவளுடைய ஆக்‌ஷேபத்திற்கு வலிமையேறிற்றேயன்றி அவள் அவனுடைய இஷ்டத்துக் கிணங்குவதாகிய பயன் கிடைக்கவில்லை. மணி மல்லிகை தன் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு வாய் பேசாதிருக்கையில் அவன் மனம் புண்பட்டது

எனிலும், மாறி அவள் புண்படுத்த அவனால் இயலவில்லை. காரணம் யாதெனில், பகவான் ஆணுக்கு கொடுத்திருக்கும் மிருகத் தனமாகிய இயற்கைக் குணத்தை அவன் லேசங்கூட மிஞ்சாதபடி இழந்துவிட்டான். 

இது மடமை யென்று அவனிடம் யாரேனும் சொன்னால், அதற்கவன் “என் மனைவி தன் ஸ்வேச்சைப்படி என் வசம் நகைகளைக் கொடுக்க மனமில்லாதிருக்கையிலே நா பலாத்காரம் செய்ய எனக்கு அதிகாரமில்லை” என்று மறுமொழி சொல்லியிருப்பான். கடவுள் மனிதனுக்கு வலிமையும், உக்ரத் தன்மையும் கொடுத்தது இங்னம் மெல்லிழை போட்ட தர்மங்களை ஸுக்ஷமாக அளப்பதில் வீண்காலம் செலவிடும் பொருட்டா?

எப்படியோ பூஷண் தனது மனைவியின் நகைகளை வாங்குதல் மானக் குறைவென்று நிச்சயித்து வேறு வழிகளாலே பணம் திரட்டிக் கொண்டு வரலாமென்ற உத்தேசத்துடன் கல்கத்தாவுக்குப் போனான்.

இந்த உலகத்தில் புருஷன் ஸ்த்ரீயின் குணத்தை அறிவதைத் காட்டிலும் அதி சுலபமாக ஸ்த்ரீ புருஷன் குணத்தைத் தெரிந்து கொள்ளுதல் விதி. ஆனால் நவீன புருஷர் மிகவும் ஸுக்ஷம குணமுடையவராய்ப் பல தலைமுறைகளில் பெண்ணுக்குண்டான ஸ்வபாவ யுக்திகளால் அறியத் தகாதவராய் விடுகின்றனர்.  சாதாரணமாக மனுஷ்யரை மூன்று பகுதியாக்கலாம். சிலர் மிருகங்கள், சிலர் மூடர்; சிலர் குருடர், ஆனால் இந்த நவீன மக்கள் இந்த மூன்றோடும் சேரவில்லை.

எனவே மணி மல்லிகை தன்னுடைய மந்திரியை அழைது யோசனை கேட்கலானாள். அந்த மந்திரி அவளுடைய அத்தான், பூஷணனுடைய ஜமீனில் அவனுக்கு ஒரு குமாஸ்தா வேலை. உழை பாடுபட்டு சம்பாதிக்கும் ஜாதியைச் சேர்ந்தவனன்று. குடும்பத்துக்கு பந்து வென்ற ஸ்தானத்தில் சம்பளத்தையும் மிச்சம் வைத்து மேலும் மிச்சம் பண்ணினான்.

மணி அவனை அழைப்பித்து நடந்ததைச் சொன்னாள். “நீ இதற்கு என்ன யுக்தி சொல்கிறாய்” என்றாள், அவன் மேதாவி போ தலையை அசைத்து ‘விஷயம் ஒன்றும் நேரில்லை’ என்றான். விஷயங்கள் நேரே இருப்பதாக மேதாவிகள் எப்போதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

அவன் சொன்னான்: ‘பாபுவுக்குப் பணம் அகப்படாது. கடைசிவரை உன் நகையைத்தான் கேட்பார்” என. 

மனித இயல்பை அவள் அறிந்தமட்டில் இது ஸாத்தியம்; பெரும்பாலும் நிச்சயமென்று கருதினாள். அவளுடைய கவலை மிகுதியாயிற்று. அன்பு செலுத்தக் குழந்தை கிடையாது அவளுக்கு. புருஷன் இருந்தான். ஆனால் அவன் இருந்தானென்பதே அவள் மனதில் சரியானபடி அழுந்த இடமில்லாமல் இருந்தான். எனவே அவளுடைய அன்பிற்குத் தனிப் பாத்திரமாய் குழந்தை வளவது போலே வருஷா வருஷம் வளர்த்து வந்த நகைகளை விட்டுப் பிரிவதென்ற நினைப்பு வந்த மாத்திரத்திலே அவளுடம்பு ஜில்லிட்டது. ரத்தம் உறைந்து போகத் தெரிந்தது. ஒரே கணத்தில் இத்தனை நகைகளையும் வியாபாரப் படுகுழியில் போடலாமா என்றெண்ணி நடுங்கி, இனி யாது செய்யலாம்” என்று கேட்டாள். மந்திரி அத்தான் பெயர் மதுசூதனன்.

மது சொன்னான்: “அட, நகைகளை யெல்லாம் எடுத்துக்கொண்டு பிறந்தகத்துக்குப் போய்விடு” என்றான். அவன் அந்தக்கரணத்தில் இந்த நகைகளிலே ஒரு பகுதி – பெரும் பகுதி – தன் வசமாகக் கூடுமென்ற நம்பிக்கை ஜனிக்கலாயிற்று.

மணி உடனே சம்மதப்பட்டாள். அப்போது கோடையிறுதி. இரவில் மழை பெய்து கொண்டிருந்தது. இதே படித்துறைக் கருகில் தோணி வந்து நின்றது. உச்சி முதல் பாதம் வரை சால்வையால் இறுகப் போர்த்திக் கொண்டு மணி தோணியில் ஏறினாள், உதயமாகும் தருணம். மேகங்கள் வானை மூடி பேரிருளாக இருந்தது. அப்போது தவளைகள் கத்திக்கொண்டிருந்தன. ஏற்கனவே மதுசூதனன் தோணியில் வந்து தூங்கினான். அவன் கண்ணை விழித்து “நகைப் பெட்டியை என் கையில் கொடு” என்றான்.

“இப்போது வேண்டாம். பிறகு கொடுக்கிறேன். தோணி செல்லுக” என்றாள் மணி மல்லிகை.

தோணி புறப்பட்டது. ஆற்றில் விரைந்து போயிற்று. இரவு முழுவதும் உட்கார்ந்து ம தன் நகைகளை உடம்பு முழுதிலும் ஒன்று மிச்சமில்லாமல் அணிந்து கொண்ட பிறகுதான் தோணிக்கு வந்தாள். அவற்றைப் பெட்டியிலே வைத்தால் பறிபோய் விடுமென்று பயநதாள். மேலே போட்டால், அவளைக் கொன்றாலொழிய யாராலும் பறிக்க முடியாதன்றோ ? மணி மல்லிகைக்குத் தனது கணவன் குணம் தெரியாவிடிலும், மதுவின் குணம் தெரியும்.

” மதுஸுதனன் மேற்படி ஜமீன் தலைமை குமாஸ்தாவுக்கு ஒரு கடிதம் எழுதி யனுப்பிவிட்டு வந்தான். அதில் யஜமானியைப் பிறந்தகத்தில் கொண்டுவிடத் தான் போவதாகத் தெரிவித்தான். இ தலைமைக் கார்யஸ்தன் பூஷணனுடைய பிதாவின் காலமுதலாக ஜமீனில் விசுவாசத்துடன் வேலை பார்த்து வருவான். அவனுக்கு மதுவின் கடிதத்தைப் பார்த்தவுடனே மஹா கோப முண்டாகத் தனது யஜமானனுக்கு நீண்ட லிகிதம் ஒன்று உச்சரிப்புப் பிழைகள் மயமாக எழுதி விடுத்தான்.

“அந்த லிகிதத்தில் இலக்கணம் கொஞ்சம் பலஹீனமாக இருந்தாலும் பாஷை வெகு கடுமை. பெண் பிள்ளைகளிடம் அதிக தாக்ஷிண்யம் காட்டுதல் மடமை என்ற தன் கொள்கையை மிகவும் தெளிவாக எழுதியிருந்தான். இந்தக் கடிதத்தை வாசித்தவுடன் மணி ரஹஸ்யமாக ஓடிப் போனதன் கருத்தை பூஷண் உணர்ந்து கொண்டான். நகை கொடுக்க மாட்டேவென்று பெண்டாட்டி சொல்லியதற்குத் தணிந்து போயும், இத்தனை ஸங்கடமான காலத்தில், அவள் பின்னும் ஸம்சயம் தீராதவளாய்த் தன்னைப் பிரிந்து சென்றுவிட்டதை யெண்ணும்போது அவன் வருத்தம் மிகுதிப்பட்டது.

கோபமடைவதை விட்டு மனம் வருந்தலானான், யாதொரு காரணமில்லாமல் மனுஷ்யன் காட்டுத் தீ போலே சினம் பொங்கும் படிக்கும், ஸ்த்ரீ நிஷ்காரணமாக மழைபோல் அழும்படிக்கும் பகவான் ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனால் கால சக்ரம் மாறிப் போனதிலிருந்து அந்த விதியும் மாறி வருகிறது.

பூஷண் தலையைக் குனிந்து கொண்டு ‘சரி, உன்னுடைய தீர்மானப்படி நீ நடந்து கொள். எனது கடமையை நான் செய்கிறேன் என்று தனக்குள் முணு முணுத்துக் கொண்டான். இவன் இன்னும் ஐந்தாறு நூற்றாண்டு கழிந்த பின்பு பிறந்திருக்க வேண்டும். அப்போது கேவலம் மானஸிக சக்திகளால் உலகம் இயக்கப்படுமென்கிறார்கள். அது தவறிப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்தது மாத்திரமே யல்லாமல் நித்யமான புராதன மிருக ஸ்வபாவங்களை உடைய ஒரு ஸ்த்ரீயை விவாகம் செய்யும்படி நேர்ந்தது அவனுடைய துரதிர்ஷ்டம். அந்த விஷயத்தைக் குறித்து அவன் அவளுக்கு ஒரு வரிகூட எழுதவில்லை . அவள் திரும்பி வந்த பிறகும் அவளிடம் இதைக் குறித்து ஒன்றும் பேசுவதில்லை யென்று தீர்மானம் செய்து கொண்டான். என்ன பயங்கரமான தண்டனை அவளுக்கு

“பூஷணன் பத்துப் பன்னிரண்டு தினங்களுக்கப்பால் தனக்கு வேண்டிய தொகை சேகரம் பண்ணிக் கொண்டு மறுபடி தனது வீட்டுக்குத் திரும்பி வந்தான். மணி மல்லிகையும் தந்தை வீட்டிலிருந்து திரும்பி வந்திருப்பாளென்று நினைத்தான். ஆதலால் தன் மனைவி தனது தகுதியற்ற ஸம்சயத்தை யெண்ணி வெட்கமும் பரிவும் காட்டுவாள் என்று பாவனை செய்து கொண்டு அவளறைப் பக்கம் போனான்.

“கதவு சார்த்தியிருந்தது. பூட்டை உடைத்தான். உள்ளே போனால், வெற்றறை. ஆரம்பத்திலே சில நாள் அவ திரும்பாத விஷயத்தைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. அவளுக்கிஷ்டமானால் தானே வருவாவென்று இருந்தான். பிறகு தலைமை குமாஸ்தா வந்து, ‘நீ கவனியாமல் இருப்பது பயனில்லை அவளைப் பற்றி ஏதேனும் செய்தி தெரிய வேண்டாமா?” என்றான். அதன் பேரில் மாமனார் வீட்டுக்கு பூஷணன் தூதரை விடுத்தான். அந்த ஸமயம் வரை அங்கு மணியும் வரவில்லை. மதுசூதனனும் வரவில்லை யென்று செய்தி கிடைத்தது.

எங்கும் தேட ஆரம்பித்தார்கள். நதியின் இரு புறத்துக்கரைகளிலும் விசாரணை பண்ணிக் கொண்டே போனார்கள். மதுவின் அங்க அடையாள விவகாரங்களெல்லாம் போலீசார் வசம் கொடுத்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. எந்த தோணியில் போனார்கள், யார் தோணிவிட்டார்கள், எந்த வழியே போனார்கள்- ஒன்றுமே துலங்கவில்லை.

இனி மனைவியை மீட்டும் காணலாம் என்ற ஆசை கட்டோடு நீங்கிய பின் ஒரு நாள் மாலை பூஷணன் தன் தனி கட்டிலருகே போனான். மழை விடாமல் பொழிந்து கொண்டிருக்கது. உத்சவத்தை யொட்டி கிராமத்தில் சந்தை கூடிற்று. ஒரு பந்தல் போட்டு அதில் நாடகம் நடந்தது. மழையோசையுடன் தொலைவிலிருந்து பாட்டொலியும் கலந்து வந்தது. அதோ பார்! அங்கு ஒரு ஜன்னல் நிலையை விட்டு நழுவிக் கிடக்கிறதே, அதன் மூலமாக இருளில் பூஷணன் மழையை நோக்கிக் கொண்டிருந்தான். 

ஈர வாடை உள்ளே தெளிக்கும் தூற்றல், பாட்டோசை ஒன்றையும் அவன் கவனிக்கவில்லை. அறையிலே சுவர் மீதில் இரண்டு ரவிவர்மா படங்கள், லக்ஷ்மியும், ஸரஸ்வதியும் மாட்டி இருந்தன. துணி தொங்கவிடும் மரத்திலே ஒரு வகைத் துண்டு. ஒரு ரவிக்கை, இரண்டு புடவைகள் இவை மாட்டியிருந்தன.

மறுநாள் உடுத்தத் தயாராக அவள் அவற்றை வைத்துப் போயினாள். மூலையில் ஒரு மேஜை மேல் ஒரு தட்டில் வெற்றிலை கண்ணாம்பு தடவி வைத்திருந்தது. அது அப்படியே சருகாய் இருந்தது. கண்ணாடி அலமாரியில் அவளுடைய குழந்தைப் பருவத்து பீங்கான் பொம்மைகள், வாஸனை சீசாக்கள், நேர்த்தியான சீட்டு கட்டு, பெரிய மெருகிட்ட சங்குகள், வெறும் லோப்புப் பெட்டிகள் முதலிய எத்தனையோ லாமான்கள் வெகு ஜாக்ரதையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  புரையில் அவளுக்குப் பிரியமான உருண்டை கண்ணாடி போட்ட சிறு விளக்கொன்று வைத்திருந்தது.  மாலைதோறும் மணி அதைத் தன் கையால் ஏற்றி வைப்பது வழக்கம். எல்லாவற்றையும் வெறுமையாக்கி விட்டுப் போவோர் உயிரற்ற பதார்த்தங்களின் மீதேயும் ஜீவ ஹ்ரிதயத்தின் முத்திரையிட்டு செல்லுகின்றனர்

பாதி இரவில் மழை நின்று நாடக சத்தமும் நின்ற பிறகு, பூஷணன் அப்படியே உட்கார்ந்திருந்தான். ஜன்னலுக்கு வெளியே காடாந்தகாரம். வானை அளாவி இருளுலகம். அவன் முன் கதவு திறந்து நிற்பது போல தோன்றிற்று. ஹோ’ என்றலறினால் இழந்த பொருளெல்லாம் திரும்பி வருமென்ற ப்ராந்தி உண்டாயிற்று.

இங்ஙனம் அவன் யோசித்துக் கொண்டிருக்கையிலே, நகைகள் குலுங்குவது போல் சில்லென்ற ஒரு சத்தம் கேட்டது. அவ்வொலி படித்துறையின் படிகளின் மேல் ஏறிவருவது போலிருந்தது. நதியின் நீர் இரவின் இருளுடனே லயித்துக் கிடந்தது. கம்பலையுடன் பூஷணன் தன் ஆவல் கொண்ட விழிகளால் இருளைக் கிழிக்க முயன்றான். கண் நோவுற்றது. ஒன்றும் புலப்படவில்லை. அவன் பார்க்க வேண்டுமென்ற ஆவல் மிகுதியுற்றது போலே இருளும் மிகுதிப்பட்டது. வெளியுலகம் மறைந்துவிட்டது. 

அவ்வொலி படித்துறையின் உச்சிக்கு வந்தது. பின் வீட்டை நோக்கி வரலாயிற்று. வாயிலுக்கெதிரே வந்து நின்றது. வாயில் காப்போன் கதவைப் பூட்டி விட்டுச் சென்றிருந்தான். அதோ பார் அந்த அடைத்த கதவின் மேல் கிலுகியென்று நகை போட்ட கைகளால் புடைப்பது போலே பல அடிகள் செவிப்பட்டன. பூஷணன் பின்பு கணமும் தரித்திருக்க மாட்டாதவனாய், ஒளியற்ற பல அறைகளின் வழியாகவும், மெத்தைப் படி வழியாகவும் தட்டித் தடவிக் கொண்டு இறங்கிவந்து மூடியிருந்த வாயில் கதவருகே நின்றான். அதன் வெளிப்பக்கத்தில் சீமைப் பட்டுப் பூட்டி இருந்தது. தன் பலத்தை எல்லாம் வைத்து இழுத்தான். இழுக்கிற சத்தத்தில் விழித்துக் கொண்டான்.

பிறகு தான் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், தூங்கினபடியே கீழே இறங்கி வந்திருப்பதாகவும் கண்டான், அவன் உடம்பு முழுதும் வியர்வையால் நனைந்திருந்தது. அவன் கைகால்கள் பனிக்கட்டி போல் குளிர்ந்திருந்தன. அவியப் போகிற விளக்கைப் போலே நெஞ்சு புடைத்துக் கொண்டது. அவனது கனவு உடைது போகவே மறுபடியும் மழையின் சலசலப்பைத் தவிர வேறே ஒசையொன்றுமில்லை என்பது கண்டான். கனவாயினும், ஏதோ ஒரு சிறு தடையினாலேயே தனது அஸாத்ய ஆசை நிறைவேறாது போய்விட்டதாக எண்ணி அதை நனவு போலே கருதலானான். இடைவிடாது பெய்யும் மழையொலி, “இந்த நனவே கனவு. உலகம் மாயை” என்று சொல்வது போல் இருந்தது.

கிராமத்தில் திருவிழா மறுநாளும் தொடர்ந்து நடந்தது.வாயில்

காப்போன் மறுநாளும் சந்தைக்குப் போக வேண்டுமென்று ரஜா கேட்டான். இரவு முழுதும் வாயில் கதவு திறந்து இருக்க வேண்டுமென்று பூஷணன் கட்டளை இட்டான்.

அன்றிரவு, விளக்கை அவித்து விட்டு பூஷணன் தனது படுக்கை அறையில் திறந்த ஜன்னலருகே பழையபடி உட்கார்ந்திருந்தான். வானம் கரிய மேகங்களால் இருண்டிருந்தது. ஏதோ பெரிய ஸம்பவம் நடக்கப் போவதை உலகம் எதிர்பார்த்து நிற்பது போலே மவுனம் இயன்றது. தவளை கத்துவதின் ஏக ராகமும் நாடகப் பாட்டும் அந்த மவுனத்தைக் கலைக்கவில்லை. அதனை விகாரமாக்கின.

இரவில் நெடு நேரமான பின், தவளைகளும் சில் வண்டுகளும் நாடகப் புரைப் பையன்களும் சத்தமில்லாது போன பிறகு, இரவின் இருள் இன்னும் மையாகிவிட்டது. ‘ஸமயம் வந்துவிட்டது

முதல் நாள் இரவுபோலவே நதியின் கட்டத்திலிருந்து சலசலப்பும், கிலுகிலுப்புமான சத்தம் மறுபடி வந்தது. ஆனால் இந்தத் தடவை பூஷணன் அதைத் திரும்பிப் பார்க்கவில்லை, ஆத்திர மிகுதியினால் தனது புலன்களைத் தவற விடக் கூடாதென்று நிச்சயித்துக் கொண்டான். தன்னைத்தானே வெகு சிரமத்தின் பேரில் அடக்கிக் கொண்டு சும்மா இருந்தான்.

“ஆபரண ஓசை படித் துறையிலிருந்து வாயிற் கதவுக்குள் மெதுவாக நுழைந்தது. பிறகு சுழற்சியாக இருந்த மேனிலைப் படிக்கட்டின்மீது தானும் சுழன்றேறி உள்ளறைகளுக்கு ஸமீபத்தில் வந்தது. பூஷணனாலே தன்னை அடக்க இயலவில்லை. நெஞ்ச கொட்டத் தொடங்கிற்று. ஆத்திரம் வந்து தொண்டையை அடைக்கிறது. படிக்கட்டின் உச்சிக்கு வந்து அந்த ஓசை தாழ்வாரத்தின் வழியே பூஷணன் இருந்த அறைக்கு வெளிப்புறத்திலே சளக்கென்று வந்து நின்றது. அறைக் கதவுக்கும் பக்கத்திலே நிற்கிறது

பூஷணன் தன்னை மறந்துவிட்டான். உள்ளே முடி வைத்திருந்த ஆத்திரமெல்லாம் உடைத்துக் கொண்டு, “அடியே மணி மல்லிகே” என்றொரு கூக்குரலாகப் புறப்பட்டது. மின் வெட்டுவது போல் நாற்காலியிருந் தெழுந்தான். மறுபடியும் தூக்கத்திலிருந்து தான் விழித்துக் கொண்டதைக் கண்டான். தனது கூக்குரலால் ஜன்னல் கண்ணாடி யெல்லாம் அதிர்ந்து கொண்டிருக்கக் கண்டான். வெளியே தவளைகள் கத்துகின்றன. மழை பெய்யும் ஓசை சள சள வென்று கேட்கிறது. பூஷண் நிராசையால் தலையை ஓங்கி புடைத்துக் கொண்டான்.

மறுநாள் சந்தை கலைந்து விட்டது. திருவிழாக் கடைகளும், நாடகக் கூட்டமும் போய்விட்டன. அன்றிரவு வீட்டில் தன்னைத் தவிர வேறு யாரும் படுத்துறங்கக் கூடாதென்று பூஷணன் உத்தரவு போட்டான்.

சாயங்காலமான வுடனே தனி வீட்டில் மேற்படி ஜன்னலுக்கருகே போய் உட்கார்ந்தான். அன்றிரவு மேகப் படலத்தில் உடைப்புகள் விழுந்திருந்தன. மழை பெய்து சுத்தப்பட்ட வானத்தில் அடைப்புக்களை ஊடுருவி நக்‌ஷத்ர ஒளி மின்னிற்று.  எழ நெடும் போதாய்விட்டது. சந்தை முடிந்து  போனபடியால், வெள்ளமாகப் பாய்ந்த நதியில் ஒரு தோணி கூட இல்லை. இரண்டிரவு கண் விழிக்க சிரமத்தால் கிராமத்து ஜனங்கள் அயர்ந்து நித்திரை போயினர்.

நாற்காலியின் முதுகிலே தலையைச் சாய்த்துக் கொண்டு பூஷணன் நக்‌ஷத்திரங்களை நோக்கிக் கொண்டிருந்தான்.

அவன் நோக்குகையிலே அவை ஒவ்வொன்றாக மறைந்தன. களைப் பொதிய விழியின் இமைகனைப் போலே வானின் இருட் படலமும் பூமியின் இருட்படலமும் சந்தித்தன. இன்று பூஷண் மனம் சாந்தியோடிருந்தது. தனது நெஞ்சின் ஆவல் தீர யமதர்ம ராஜன் தன் ரஹஸ்யங்களைத் தனக்குக் காட்டுதற்குரிய காலம் வந்து தென்று நினைத்தான்.

முந்தின இரவுகளைப் போலவே நதியின் கட்டத்திலிருந்து அந்த ஓசை புறப்பட்டு வந்தது. நதிப் படிகளின் மேல் ஏறிற்று. பூஷண் கண்ணை முடிக் கொண்டு சமாதியிலிருந்தான். கீழ் முற்றத்துக்கு வந்தது சுழன்ற படிக்கட்டின் மேல் ஏறிற்று. நீண்ட தாழ்வாரத்தைக் கடந்தது. அவனுடைய படுக்கை அறைக் கதவுக்கு வெளிப் புறத்திலே வந்து நெடுநேரம் சும்மா காத்து நின்றது.

பூஷணனுடைய நெஞ்சு புடைக்கிறது. அவன் உடம்பு முழுதும் நடுங்கிற்று. அவன் கண்ணைத் திறக்கவில்லை. அப்போது அவ்வொலி வாயிற் படியைக் கடந்து அவனறைக்குள் நுழைந்தது. சேலைகள் போட்டிருந்த மரத்தருகே போய்ப் பின்பு சிறு விளக்கு வைத்திருந்த புரையோரம் வந்து, அப்பால் சருகான வெற்றிலைகள் மடித்து வைத்திருந்த மேஜையைக் கடந்து, பலவித ஸாமான்கள் சேர்த்து வைத்திருந்த அலமாரியையும் தாண்டிக்கொண்டு கடைசியாக பூஷண் ஸாஹ் பக்கத்திலே வந்து நின்றது.

36

கண்ணைத் திறந்தான்.பிறைச் சந்திரனுடைய லேசான ஒளியில் தன் நாற்காலிக்கெதிரே, மனுஷ்ய ரூபம் போல் வெற்றெலும்பு கூடு வந்து நிற்பதைக் கண்டான். அந்த எலும்புக் கூடு தன் விரல்களில் மோதிரம் போட்டுக் கொண்டிருந்தது. கையில் காப்புகளும், கழுத்தில் சரங்களும், முடி மீது பொன் மகுடங்களும் அதன் உடம்பு முழுதும் பொன்னும் வயிரமுமாக மிளிர்ந்தன. ஆபரணங்கள் அதன் அவயங்களில் தொங்கி கீழே விழுந்து விடும் போல் இருந்தன.

எல்லாவற்றிலும் அதி பயங்கரமான விஷயம் என்னவென்றால், அதன் எலும்பு மூஞ்சியில் இருந்த இரண்டு கண்கள் மட்டும் உயிர்க் கண்கள். இரண்டு கரிய ஈர விழிகள். நீண்ட அடர்ந்த இமைகள் வழி இவனை வெறித்து நோக்கின. அவன் நாடிகளுக்குள்ளே ரத்தம் உறைந்து போய்விட்டது. இந்த கோரத்தைப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொள்ள முயன்றான். அவனால் இயலவில்லை அவை செத்தவன் கண்களைப்போல திறந்து கிடந்தன.

அப்போது அந்த எலும்பு ரூபம் அசைவற்றுக் கிடந்த பூஷணனை – நோக்கி கையை நீட்டி அழைப்பதுபோல சயிக்கினை செய்தது. அதன் எலும்பு விரல்களின் வைர மோதிரங்கள் வெளிறிய நிலவில் மின்னின.

தன் வசமிழந்தவனாய் பூஷணன் எழுந்து அந்த எலும்பு வடிவத்தைத் தொடர்ந்து சென்றான். அது அறையை விட்டு வெளியே புறப்பட்டது. அதன் எலும்புகளும் வயிரங்ளும் நெறு நெறுவென்ற ஒலி செய்தன. தாழ்வாரத்தை கடந்து போயிற்று. மையிருள் பொதிந்திருந்த படிக்கட்டு வழியே சுற்றி சுற்றி இறங்கு அடிக்கு வந்து சேர்ந்தது. கீழ்த் தாழ்வாரத்தையும் கடந்து விளக்கில்லாத வெளிப்புறத்து வெறுமண்டபத்துக்கு வந்தது. பூஷணனும் கூட வருகிறான். பிறகு தோட்டத்துச் செங்கல் தளமிட்ட பாதை வந்தனர். எலும்புக் கால்களினடியே செங்கல்கள் நொறுங்கின. அயர்ந்த நிலா மரக்கிளைகளின் வழியே இருண்டு வந்தது. பாதை நேரே தெரியவில்லை. இரு புறத்தும் மின்மினி பூச்சிகள் பறந்து சென்றன. இருண்ட மர நிழற் பாதை வழியே நதியின் கட்டத்துக்கு வந்து சேர்ந்தனர்..

முன் ஏறி வந்ததுபோலே,படித்துறையில் அந்த அலங்கார எலும்புக்கூடு படிப்படியாக மெல்ல மெல்ல நிமிர்ந்து வல்லோசையடிகளுடன் இறங்கிச் சென்றது. நதியின் வேகமான ஓட்டத்தின் மீது நிலாவின் மென்கதிர் அடித்தது. ஸமீபத்தில் பெய்த மழையால் நதி வெள்ளமாகப் பாய்ந்தது.

எலும்புக்கூடு தண்ணீருக்குள்ளே இறங்கிற்று. அதைப் பின் தொடர்ந்து பூஷணனும் ஓரடியை ஜலத்துக்குள் வைத்தான். ஜலத்தில் கால் பட்டவுடன் திடுக்கிட்டு கண்களை விழித்துக் கொண்டான். 

வழிகாட்டியை காணவில்லை. எதிர்க்கரையில் மரங்கள் அசையாமல் மோனமுற்று நின்றன. தலைக்கு மேலே பிறைச்சந்திரன் வியப்பெய்தியவன் போலே விழித்துக் கொண்டிருந்தான். உச்சி முதல் உள்ளங்கால் வரை நடுங்கிப் போய் பூஷண் சாஹ் கால் வழுக்கித் தலை கீழாக தண்ணீருக்குள் விழுந்தான்.

கனவுகளை விட்டு ஒரு கணம் ஜாக்ரலோகத்துக்கு வந்தான். மறுகணம் நித்ய நித்ரா லோகத்திலே ஆழ்ந்து விட்டான். செத்தே போனான்.

இங்ஙனம் கன் கதையைச் சொல்லி முடித்து அந்த வாத்தியார் சிறிது நேரம் சும்மா இருந்தான். அவன் கதையை நிறுத்தின க்ஷணத்தில் திடீரென்று உலகத்தின் மௌனம் என் உணர்வை வந்து மோதிற்று. நெடு நேரம் வாய் பேசாமல் இருந்தேன். என் முகத்தின் குறிப்பைக் காண வேண்டுமென்பது அவனுடைய அவா. இருள் இடங் கொடுக்கவில்லை.

கடைசியாக அவன் என்னை நோக்கி, “நீர் இந்தக் கதை உண்மையாக நடந்ததென்று நம்புகிறீரோ, இல்லையோ?” என்று கேட்டான்.

“உமக்கு நம்பிக்கைதானா?” என்று நான் திரும்பக் கேட்டேன்

அதற்கவன், “நான் நம்பவில்லை. கேள்விப் பட்டதைச் சொன்னேன், அவ்வளவுதான். இது வாஸ்தவமாக இராதென்பதற்கு இரண்டு காரணம். முதலாவது, காரணம் பிரகிருதியானவள் வேடிக்கைக் கதைகளெழுதும் வழக்கமில்லை. அதாவது, உண்மையில் நடக்க ஸமாசாரம் இத்தனை கதை மாதிரி இருக்காது. பிரகிருதிக்கு வேறு எவ்வளவோ வேலையிருக்கிறது” என்றான்,

அவன் சொல்லை நான் இடையே மறித்து “இரண்டாவது காரணம் யாதென்றால், பூஷண் ஸாஹ் என்பது அடியேனுடைய பெயர். நான் சாகவில்லை யென்பதற்கு நானே ஸாக்‌ஷி,” என்றேன்.

அந்த வாத்தியார் துளிகூட லஜ்ஜைப் படாமல், “ஓஹோ! நான் அப்படி இருக்கலாமேன்றே உத்தேசித்தேன்! உம்முடைய மனைவியின் பெயரென்ன” என்று கேட்டான்

“ந்ருத்ய காளி” என்று மறுமொழி கொடுத்தேன்.


தாகூர் எழுதிய சிறுகதைகள் சிலவற்றை பாரதியார் மொழியாக்கம் செய்திருக்கிறார். அவற்றில் எட்டுச் சிறுகதைகளைத் தொகுத்து ‘தாகூர் கதைகள் பாரதியார் மொழி பெயர்ப்பில்’ என்கிற பெயரில் கோவையைச் சேர்ந்த `சிறுவாணி வாசகர் மையம்’  அதனுடைய உறுப்பினர்களுக்கு புத்தகமாக வழங்கியிருக்கிறது. 

இந்த மொழியாக்கம் குறித்து நாவலர் சோமசுந்தர பாரதியார், 

“ரவீந்திர நாதரின் சிறுகதைகளுக்கு பாரதியார் செய்துள்ள மொழிபெயர்ப்பைப் படிக்கும் போது, மொழி பெயர்ப்பாக இல்லாமல், தானே முதனூலும், தாகூரின் ஆங்கிலமே மொழிபெயர்ப்பாகவும் தோன்றும்படியாக அத்தனை அழகு பெற்று அமைந்துள்ளது.”

[புத்தகத்திலிருந்து இக்கதையைத் தட்டச்சிக் கொடுத்தவர் ஆர்.பிரபு.]

2 Replies to ““நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.