நவாப் சாகிப்

  • வங்காள மூலம்: பனஃபூல்  (பலாய்சந்த் முக்கோபதேய்)
  • ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு விஜய் சத்தியா

நவாப் சாகிப்பை மூன்றுமுறை பார்த்திருக்கிறேன். ஒருமுறை நேரிலும் இரண்டு முறை மனதிலும் பார்த்திருக்கிறேன். நேரில் பார்த்ததும் அப்படியொன்றும் நீண்ட நேரத்திற்கி்ல்லை. முதலில் இந்தக் கதையைச் சொல்கிறேன்.

நான் உள்ளூர் டாக்டர்.  

ஒரு நாள் உள்ளூர்ச் செல்வந்தர்கள் சிலர் நவாப் சாகிப்பைத் தேநீர் விருந்திற்கு அழைக்கப் போவதாக என்னிடம் கூறினார்கள். அவருக்கு பேச்சுத் துணையாக உள்ளூர்வாசிகள் சிலர் அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் நானும் ஒருவன். இந்தச் செய்தியை என்னிடம் சொன்னவர் “உங்கள் வீடு காலியாகத்தானே இருக்கிறது டாக்டர்? உங்கள் குடும்பத்தினர் எப்போது திரும்பி வருகிறார்கள்?” என்று கேட்டார்.

“இப்போது இல்லை. ஒரு மாதத்திற்கு மேலாகும்.”

“அப்படியென்றால் டீ போடுவதற்கு உங்கள் வீட்டை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தால் மிகவும் உதவியாக இருக்கும். எங்கள் வீட்டிலெல்லாம்  இவ்வளவு பெரிய இடத்தை ஒதுக்கமுடியாது. நாங்கள் கேள்விப்பட்டது என்னன்னா…” என்று நிறுத்தினார்.

“நீங்க என்ன கேள்விப்பட்டீங்க?”

“நம்மைப்போல் சாதாரணமான மனிதர்களை அழைப்பதென்றால் இவ்வளவு பெரிய ஏற்பாடு தேவையில்லை. ஆனால் நவாப் சாகிப் என்றால் அது வேறு. அவருடைய ஆட்களே வந்து சமைப்பார்கள். ரஃகாப்தார்[1] என்ற தலைமைச் சமையல் வல்லுநர்,  அவருக்கு துணையாக மூன்று சமையல் வல்லுநர்கள் என ஒரு குழுவாக வருவார்கள். அவர்களுக்கு தேவையானதை முன்பே பட்டியலிடுவார்கள், ஒரு நாளுக்கு முன்னாலேயே வந்து சமையலறையைத் தயார் செய்வார்கள். தேநீர் விருந்தன்று அதிகாலையிலேயே வந்து சமைக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. உங்கள் வீடு பெரிதாக இருந்தாலும் காலியாக உள்ளதால் நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால்…”

அத்தகைய ஓர் ஆக்கிரமிப்பில் எனக்கு விருப்பமில்லை என்றாலும் அவர்களின் கோரிக்கையை என்னால் நிராகரிக்க முடியவில்லை. “நல்லது, எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை,” என்று சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. “ஆனால் நவாப் சாஹிப் ஏன் திடீரென தேநீர் விருந்திற்க்கு அழைக்கப்பட்டார் என்று எனக்கு புரியவில்லை.

என் விருந்தினர் அவரது புருவங்களை வளைத்து தன் ஆச்சரியத்தை நீண்ட நேரம் வெளிப்படுத்தினார். “நவாப் சாஹிப்பிற்கு தேநீர் விருந்தளிப்பது என்ன ஒரு பாக்கியம் என்று உங்களுக்குத் தெரியுமா? இதுபோன்ற அழைப்புகளை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை — நாங்கள் நான்கு ஆண்டுகளாக அவரிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம். இம்முறை அவர் ஏன் ஒப்புக்கொண்டார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.”

நான் சற்று அமைதியாக இருந்த பின்னர் கேட்டேன், “நீங்கள் அனைவரும் அவரை நன்கு அறிவீர்கள் என்று நினைக்கிறேன் …”

“அவர் எங்கள் மிகப்பெரிய கடனாளிகளில் ஒருவர்.”

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

“நாங்கள் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் கடன் வழங்குகிறோம்.  அவருக்குப் பணம் தேவைப்படும்போதெல்லாம் எங்களிடம் தெரிவிப்பார் — நாங்கள் சென்று அவரிடம் பணத்தை ஒப்படைப்போம்.”

என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தருணமிது. கடன் வாங்கியவர் கடன் கொடுப்பவருக்கு மிகுந்த நன்றியுள்ளவராக இருப்பதைத்தான் நான் எப்போதும் அறிந்திருந்தேன். ஆனால் இது நேர்மாறாக இருந்தது.

“அவர் நிறைய கடன் வாங்குகிறார் என்று நினைக்கிறேன்.”

“நிறைய.”

“சரியான நேரத்தில் திருப்பித் தருகிறாரா? “

“தருவார், ஆனால் சரியான நேரத்தில் இல்லை. நாங்கள் அவரிடம் கடன் பத்திரத்தையும் எழுதி வாங்கமாட்டோம் — வெறும் பணத்தை மட்டும் தந்துவிடுவோம். அவருக்குப் பணம் வந்த செய்தி கிடைத்தால், அவரை சந்தித்து வணங்கி, இந்த மாதிரி, இந்த தேதியில் உங்கள் ஆணைப்படி இவ்வளவு தொகை வழங்கி உங்களுக்குச் சேவை செய்தோம். இப்போது அது திரும்பக் கிடைத்தால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று அவரிடம் கூறுவோம். அவர் உடனே தன் பொருளாளருக்கு கட்டளையிடுவார். கேட்கும் முழுத் தொகையையும்  எங்களுக்கு எப்போதுமே கிடைத்துவிடும். ஐந்தாயிரம் கடனுக்கு ஈடாக பத்தாயிரம் கேட்டாலும்கூட கிடைத்துவிடும். அவர் ஒருபோதும் எங்களைக் கேள்வி கேட்பதில்லை. ஒர் உண்மையான நவாப். “

சொல்வதற்கு எதுவும் இல்லாததால் அமைதியாக இருந்தேன். ஆனால் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்தது.

அவரைப்பற்றி முன்பே கேள்விப்பட்டிருந்தேன்; ஆனால் சமீபத்தில்தான் இந்த இடத்திற்கு குடி வந்திருந்ததால் அவரை கவனிக்கவில்லை.

“அவர் எப்போது வருகிறார்?”

“இன்னும் நான்கு நாட்களில். புதன்கிழமை மாலை ஐந்து மணிக்கு. அவருடைய பிரத்தியேக சமையல் வல்லுநர்கள் நாளைக்கு வருவார்கள்.”

திட்டமிட்டபடி சமையல் வல்லுநர்கள் வந்தார்கள். உண்மையான நவாப் எப்படியிருப்பார் என்று எனக்குத் தெரியாது என்றாலும், அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சிறிய நவாப் போல் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் தாடியில் மருதாணி வைத்திருந்தார்; மற்றொருவர் வெல்வெட் செருப்புகள் அணிந்திருந்தார்; மூன்றாமவர் குர்தா மீது வெல்வெட் ஜாக்கெட் அணிந்திருந்தார்; நான்காவது நபருடைய விரலில் இருந்த மோதிரத்தில் அசல் வைரமொன்று பதித்திருப்தாகத் தோன்றியது. ரஃகாப்தார்  நேர்த்தியான மேற்கத்திய ஆடைகளை அணிந்து, சரளமாக  ஆங்கிலத்தில் பேசினார். அவர் வெளிநாட்டில் வாழ்ந்திருந்ததாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. முகலாய், பதான், ஆங்கிலம், பிரஞ்சு, இத்தாலியன், கோவன், ஜெர்மன், சீன – என பலவிதமான உணவு வகைகளில் நிபுணராக இருந்தார். அவரது சம்பளம் மாதம் ஐநூறு ரூபாய்.

நான் இவற்றையெல்லாம் கண்டு பிரமித்திருந்தேன், அவர்களை அன்புடன் வரவேற்று இருக்கைகளை வழங்கினேன். அவர்களும் கண்ணியமாக, மரியாதையுடன் என்னையும் வாழ்த்தினார்கள். ரஃகாப்தார் மட்டுமே இருக்கையில் அமர்ந்தார், மற்ற மூவரும் நின்று கொண்டிருந்தனர். நவாபிற்கு தேநீர் விருந்து வழங்கும் பணக்கார மனிதர்களில் ஒருவரும் கூட இருந்தார். அவரும் ஒரு இருக்கையில் அமர்ந்தார். ரஃகாப்தார்  அவரிடம் ஆங்கிலத்தில், “நவாப் சாஹிப்பிற்கு விருந்தளிக்க உங்கள் திட்டம் என்னவென்று சொல்லுங்கள்?” என்று கேட்டார்.

நாங்கள் அவரை தேநீர் விருந்திற்கு அழைத்திருந்தாலும். தேநீர் மட்டுமே அளிக்கும் திட்டமில்லை.  கொஞ்சம் புலாவ், கொஞ்சம் மட்டன் மற்றும் நீங்கள் பொருத்தமாகக் கருதும் எதுவும் இருக்கும். ஃபிர்போஸிலிருந்து[2]  ரொட்டி, கேக், பிஸ்கட், ஜாம் மற்றும் ஜெல்லிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. உணவருந்துவதற்கான பீங்கான் தட்டுகளும், கோப்பைகளும் சேர்த்துதான்.  ஃபிர்போஸிலிருந்து ஒருவர் எல்லாவற்றையும் கொண்டு வருவார்.

“ஆனால் அவர்களால் தங்கத் தட்டுகளை வழங்க முடியுமா? “என்று ரஃகாப்தார்  கேட்டார். “நீங்கள் நவாப் சாஹிப்பை அழைத்திருப்பதால்…

அவர் விருந்தளிப்பவரின் பிரதிநிதிகளை ஒரு புன்னகையோடு பார்த்தார். விருந்தளிப்பவருக்கு வேர்த்து விறுவிறுத்திருப்பதுபோல் தோன்றியது.

“மொத்தம் எத்தனை விருந்தினர்கள்?”

“சுமார் பத்து.”

“அவ்வளவுதானா? நான் தங்கத் தட்டுகளைக் கொண்டுவருகிறேன்.”

“ஃபிர்போவில் வேண்டாம் என்று சொல்லிவிடவா?”

“அவர்கள் கொண்டு வருவதைக் கொண்டு வரட்டும். எங்களுக்குக் கோப்பைகளும் மற்ற தட்டுகளும் தேவை.  காகிதமிருந்தால் கொடுங்கள், ஒரு பட்டியலை உருவாக்குகிறேன்.” நான் அவருக்கு ஒரு காகித அட்டையைக் கொடுத்தேன். “பத்து விருந்தினர்கள்?”

ரஃகாப்தார் ஒரு நிமிடம் சிந்தனையில் மூழ்கி, கண்களை மூடிக்கொண்டார். பின்னர் அவர், “ஏற்பாடுகள் மிகவும் விரிவாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இரண்டு வகையான புலாவ், நான்கு வகையான வெள்ளை மற்றும் ஜர்தா கபாப்கள் இருக்கட்டும். குருமா வகைகளை தேநீருடன் சுவைக்க முடியாது. அதற்கேற்ப பட்டியலை உருவாக்குகிறேன். நீங்கள் சில நம்கீன், கச்சோரி மற்றும் சமோசாக்களுக்கும் ஏற்பாடு செய்யலாம். நல்ல நெய் இங்கே கிடைக்குமா? இல்லையென்றால், நானே அதை எடுத்து வருகிறேன். என் சமையல் சரக்கு அறையிலிருந்து சில சிறந்த மாவுகளையும் நான் வழங்க முடியும். நாங்கள் காஷ்மீரிலிருந்து நெய்யை நவாப் சாஹிப்பிற்காக பெறுகிறோம், பெண்கள் அதை தங்கள் கைகளால் தயாரிக்கிறார்கள். மாவு பஞ்சாபிலிருந்து வருகிறது … ” என்று கூறினார்

“நல்லது நீங்களே நெய்யையும், மாவையும் கொண்டு வாருங்கள், நாங்கள் பணத்தைக் கொடுத்து விடுகிறோம்,” என்றார் விருந்தளிப்பவர்.

“பணம் தருகிறீர்களா? நாங்கள் மளிகைக் கடைக்காரர்கள் அல்ல, பாபு சாஹிப். “

ரஃகாப்தாரின் முகத்தில் பெருமிதமான புன்னகை தோன்றியது.

“என்னை மன்னியுங்கள்,” விருந்தளிப்பவர் விரைவாக கூறினார்.

“நான் பட்டியலிட்டிருக்கும் அனைத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள். நான் செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் வருவேன். வீட்டின் முற்றத்தை சுத்தம் செய்ய நாளை எங்களுக்கு இரண்டு வேலையாட்கள் தேவை; அடுப்பை தயாரிக்க ஒரு மேஸ்திரி. ரம்ஜான் அலி, நீங்கள் தனிப்பட்ட முறையில் அடுப்புத் தயாரிப்பை மேற்பார்வையிட வேண்டும். “

“ஜீ ஹுஸூர். ” வைர மோதிரம் அணிந்திருந்த ரம்ஜான் அலி, ஒரு சலாம் போட்டு உத்தரவை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் ரஃகாப்தார் கஃபூர் கானிடம் “நீங்கள் சமையலறையை அலங்கரிக்க வேண்டும். பூஞ்சாடிகள், பூங்குவளைகள், தரைவிரிப்புகள், நாற்காலிகள் – பாபு சாஹிபிடம் உங்களுக்குத் தேவையானதை தெரிவிக்கவும், அவர் அத்தனைக்கும் ஏற்பாடு செய்வார்.” என்று அறிவுறுத்தினார்,

விருந்தளிப்பவருக்கு முகமன் சொல்லிய கஃபூர் கான், “இரண்டு டஜன் பூந்தொட்டிகள், ஒரு நேர்த்தியான பூஞ்சாடி, ஒரு தரைவிரிப்பு மற்றும் ஒரு சாய்வு நாற்காலி. நாற்காலியின் இருபுறமும் இரண்டு சிறிய மேசைகள். அத்தர் வைப்பதற்கு ஒரு குவளை, ஒரு சாம்பல் தட்டு, அழகிய தோரணங்களோடு ஒரு உயரமான பந்தல்” என்று கூறினார். சமையலறைக்கான தேவைகள் குறித்து நான் சிறிதும் ஆச்சரியப்படவில்லை.

சமைப்பதற்கு இதுவெல்லாம் தேவைதானா?” என்று கேட்டேன்.

“ஆஃப் ஃகோர்ஸ்,” ரஃகாப்தார்  நயமான ஆங்கிலத்தில் புன்னகையுடன் பதிலளித்தார். “சூழல் இதமாக இல்லாவிட்டால், சமையல்காரர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லாவிட்டால், சமையல் எப்படி சிறப்பாக இருக்கும்? நவாப் சாஹிப்பிற்கு உணவு தயாரிக்கப்படும் சுற்றுச்சூழல் இனிமையாக இருக்கக்கூடாதா?”

“ஆமாம், நிச்சயமாக,” அந்த பணக்கார கனவான் வேகமாக இடைமறித்தார். ஆனால் அவர் மேலும் வேர்த்து விறுவிறுத்திருப்பது போல் தோன்றியது.

“நான் இப்போது பட்டியலிடுகிறேன். பத்து விருந்தினர்கள் என்றா சொன்னீர்கள்?”

“ஆம், பத்து.”

ரஃகாப்தார்  சிறிது நேரம் நெற்றியை சுழித்து கோபத்துடன் அமர்ந்திருந்தார். பின்னர் அவர், “பரவாயில்லை, நான் இப்போது திரும்பிச் சென்று பட்டியலை விரைவில் அனுப்புகிறேன். நான் அதை இங்கே கொடுத்தால் சில பொருட்களை விட்டுவிட நேரிடும். எவரேனும் இதை விரைவில் உங்களிடம் சேர்ப்பார்கள். நான் இப்போதே புறப்படுகிறேன். பட்டியலில் உள்ள எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்யுங்கள். அபித் மியான், நவாப் சாஹிப் சாப்பிடும் அறையை அலங்கரிக்க நீங்கள் நாளை இங்கு வரவேண்டும். தொங்கும் அலங்கார விளக்குகள் இருக்கும் என்று நம்புகிறேன். “

“இருக்கிறது,” என்றார் பணக்கார கனவான். “உங்களுக்கு எத்தனை தேவை? “

“வரவேற்பறை பெரியதாக இருந்தால், சுமார் ஒரு டஜன்.”

“நல்லது, அதனை பார்த்துகொள்கிறோம்.”

மூன்றாவது சமையல் வல்லுநரான ஆபித் மியான் சலாம் வைத்து ஒதுங்கி நின்றார். ரஃகாப்தார் எல்லோரிடமும் விடைபெற்று வெளியேறினர். மற்ற மூவரும் மறுநாள் காலையில் திரும்பி வருவதாக உறுதியளித்து அவரைப் பின்தொடர்ந்தனர். பணக்கார கனவான் தனது கால்சட்டைப் பையில் இருந்து ஒரு கைக்குட்டையை எடுத்து முகம், புருவம் கழுத்தைத் துடைத்துக் கொண்டார். “இருநூறுக்குள் சமாளித்துவிடலாம் என்று எதிர்பார்த்தோம்,” ஆனால் அதற்கு நிறைய தேவைப்படும் என்று தோன்றுகிறது. நவாப் சாஹிப்பிற்கான தேநீர் விருந்து அப்படியொன்றும் எளிய காரியமல்ல. நானும் போக வேண்டும். அவர்கள் உங்களிடம் பட்டியலை அனுப்பினால், தயவுசெய்து அதை அனுப்புங்கள்.” என்று கூறினார்.

“சரி.”

அவரும் வெளியேறினார்.

இரண்டு மணி நேரம் கழித்து பட்டியலை என்னிடம் கொடுத்தார்கள். அந்தப் பட்டியலில் இருந்தவற்றைக் கண்டு வியந்தேன். ஆசாமிக்கு கிறுக்குப் பிடித்திருக்குமோ என்று யோசித்துப் பார்த்தேன். பத்து விருந்தினர்கள் மட்டுமே இருப்பார்கள், ஆனால் பட்டியலிலோ: ஏழு ஆடுகள் (ஒவ்வொன்றும் ஏழு முதல் பத்து கிலோ எடையுள்ளவை), வெள்ளை புலாவுக்கு பதினைந்து கிலோ தரமான அரிசி (துளசி மஜாரி அல்லது கட்டாரி போக்), ஜர்தா புலாவுக்கு பதினைந்து கிலோ பெஷாவரி அரிசி. குங்குமப்பூவைத் தவிர, புலாவுக்கு இருபது வெவ்வேறு மசாலாப் பொருட்கள் ஒவ்வொன்றும் ஐந்து கிலோ, அதில் குங்குமப்பூ மட்டும் இரண்டு கிலோ தேவைப்பட்டது.

பத்து கிலோ வெங்காயம், பூண்டு, ஐந்து கிலோ இஞ்சி – மற்றும் உலர் திராட்சை, பாதாம் மற்றும் இதர கொட்டைகள் ஒவ்வொன்றும் ஐந்து கிலோ. என்னால் நம்பவே முடியவில்லை! எனினும், எனக்கென்ன வந்ததென்று வீட்டிற்கு வந்த கனவானுக்கு பட்டியலை அனுப்பினேன் –  விருந்து கொடுப்பவர்களே தீர்மானிக்கட்டும். நான் ஏன் என் மூளையைப் போட்டு கசக்கிக்கொள்ள வேண்டும்! வெறுமனே நவாப் சாஹிப் வருகின்ற நேரத்தில் அவரைச் சந்தித்தால் என் வேலை முடிந்தது!. பட்டியலை அனுப்பிவிட்டு, சில நோயாளிகளைப் பார்க்க புறப்பட்டேன்.

ரம்ஜான் அலியும், கஃபூர் கானும் மற்றும் ஆபித் மியானும் மறுநாள் காலை ஒரு மேஸ்திரி இரண்டு சுமைதூக்குபவர்களுடன் வந்தனர். செங்கலையும் சிமெண்டையும் கொண்டு வந்திருந்தார்கள். வீட்டின் பின்னால் உள்ள திறந்தவெளி முற்றத்தை அவர்களுக்கு காட்டிவிட்டு, நான் மருத்துவம் பார்க்க வேண்டிய வீட்டு அழைப்புகளுக்காக வெளியே சென்றேன்.

மதியம் இரண்டு மணிக்குத் திரும்பியபோது, ​​அந்த இடமே உருமாறியிருந்தது. முழுப் பகுதியும் களையெடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருந்தது. ஒரு களிமண் அடுப்பு அமைக்கப்பட்டிருந்தது, அதன் பக்கத்தில் பூந்தொட்டிகள் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தன,  அழகாக வடிவமைக்கப்பட்ட பந்தல் போடப்பட்டிருந்தது. பந்தலின் மூங்கில் கால்கள்கூட சிவப்புத் துணியால் சுற்றப்பட்டிருந்தன. கைபிடி வைத்த கேன்வாஸ் சாய்வு நாற்காலியொன்றும் இரண்டு குட்டையான மேஜைகளும் பக்கத்தில் இருந்தன. பூஞ்சாடி, அத்தர் குவளை சாம்பல் தட்டு அனைத்துமே அவர்கள் அனுப்பியதுதான். கம்பளமொன்று மடிக்கப்பட்டு தரையில் கிடந்தது.

“புதன்கிழமை காலை, கம்பளம், சிறிய மேசைகள் மற்றும் சாய்வு நாற்காலி தேவைப்படும், ஹூசூர் ” என்று ரம்ஜான் அலி என்னிடம் கூறினார். “பூஞ்சாடி, அத்தர் குவளை மற்றும் சாம்பல் தட்டும் கூட. அவற்றை உங்கள் அறைகளில் ஒன்றில் வைக்கிறேன்.”

“இதையெல்லாம் வைத்து என்ன செய்ய போகிறீர்கள்?” என்று கேட்டேன்.

“எங்கள் தலைமைச் சமையல் வல்லுநரான ‘ரஃகாப்தார்’ நூர் முகமது சாஹிப் சாய்வு நாற்காலியைப் பயன்படுத்துவார். நாங்கள் அதை கம்பளத்தின்மீது வைப்போம், இருபுறமும் சிறிய மேஜைகள் வைக்கப்படும். ஒன்று அத்தர் குவளை மற்றும் பூஞ்சாடிக்கு, மற்றொன்று சாம்பல் தட்டுக்கு.”

என்ன ஒரு அமர்க்களமான ஏற்பாடு! எல்லாவற்றையும் உள்ளே வைக்க அனுமதித்தேன். பட்டியலிலிருந்த பிற பொருட்கள் அடுத்த நாள் வந்தது. என் வீட்டின் முன் ஏழு கொழுத்த ஆடுகள் கத்த ஆரம்பித்தன. அரிசி, மசாலாப் பொருட்கள் வந்து சேர்ந்தன. மேலும் நூர் முகமது காஷ்மீர் நெய் மற்றும் பஞ்சாப் மாவுடன் சிறிது நேரம் கழித்து வந்தார். அவருடன் பணக்கார கனவானும் வந்திருந்தார். வியப்படைவதற்கான மற்றொரு தருணம். நூர் முகமது ஆடுகளைச் சுற்றிவரத் தொடங்கினார், ஒவ்வொன்றையும் கவனமாக ஆராய்ந்தார். பின்னர் அவர் அபித் மியானிடம் அவற்றில் ஒன்றை நடுவில் பிடித்து தூக்கச் சொன்னார். ஆபித் மியான் அவரது உத்தரவுக்கு பணிந்தார்.

ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் ஆட்டை ஆராய்ந்துவிட்டு, நூர் முகமது தனது திருப்தியை தெரிவித்தார். “இதை வைத்துக் கொள்ளுங்கள்,” மீதத்தைத் திருப்பி அனுப்பிவிடுங்கள். எங்களுக்கு அவ்வளவு கறி தேவையில்லை. மூன்று கிலோவை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்… “

ரம்ஜான் அலி பக்கம் திரும்பி, “நீங்கள் இப்போது தொடங்கலாம். இரண்டு வகை அரிசி ஒவ்வொன்றிலும் எனக்கு இரண்டு கிலோ தேவை. ஒவ்வொரு அரிசி மணியும் உடையாமல் நெற்றாக இருக்க வேண்டும். அதனால்தான் கூடுதல் அரிசியெல்லாம். நீஙகளிருவரும் அரிசியை முடித்து விட்டு மசாலாப் பொருட்களை கவனியுங்கள். கவனமாக இருங்கள். கிராம்பு, ஏலக்காய் மிளகு ஆகியவற்றை மிக கவனமாகப் பொறுக்கி எடுக்க வேண்டும், பழுதானதெதுவும் இருக்கக் கூடாது. உலர்ந்த பழங்களையும் அதே கவனத்துடன் தேர்ந்தெடுங்கள் – பெரும்பாலும் உலர்திராட்சை மற்றும் பாதாம் பருப்பில் கலப்படங்கள் இருக்கும். நினைவில் கொள்ளுங்கள், ஒவ்வொரு பருக்கையும் பெரிதாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும், ஒன்று கூட அழுகி இருக்கக்கூடாது…”

“ஜீ ஹுஸூர்”

சலாம் வைத்து வணக்கம் செலுத்தி, ரம்ஜான் அலி அரிசிக் கூடையை நெருங்கினார். மற்ற சமையல்காரர்கள் அரிசி, மசாலாப் பொருட்களின் சிறந்த பகுதிகளை பொறுக்கி எடுத்து கழுவுவார்கள் என்றும், மறுநாள் திரும்பி வருதாகவும் கூறிவிட்டு நூர் முகமது வெளியேறினார். அவர் சென்ற பின் மற்ற மூவரும் வேலையில் இறங்கினர், எல்லாவற்றையும் முடிக்க இரவு ஒன்பது மணி வரை உழைத்தனர். சிறந்த பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு பெருவாரியான அரிசி, மசாலா உலர்ந்த பழங்களை அவர்கள் திரும்ப எடுத்துச் சென்றனர்.

மறுநாள் காலை ‘ரஃகாப்தார்’ நூர் முகமது சற்று முன்னதாகவே வந்தார். ரம்ஜான், கஃபூர் மற்றும் ஆபித் அவரது உத்தரவுகளைப் பின்பற்றினர். வசதியாக சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு , விலையுயர்ந்த சிகரெட்டுகளை புகைத்தபடி கட்டளைகளை பிறப்பிப்பதை மட்டுமே அவர் செய்து கொண்டிருந்தார். அவர்களின் சமையல் மணம் எல்லா இடங்களிலும் பரவியது. புலாவ் தயாரிக்கப்படும் போது மட்டுமே நூர் முகமது கொஞ்சம் உடல் உழைப்பைத் தர வேண்டியிருந்தது.  மசாலா நெய் கலவையும் தேவையான அளவு திரவமமும் அரிசியுடன்  ஒரு கலத்தில் கலக்கப்பட்டன, அதன்பின் பிசைந்த மாவைக் கொண்டு அக்கலத்தின் வாயில் மூடப்பட்டது. நூர் முகமது எப்போதாவது தனது சாய்வு நாற்காலியில் இருந்து எழுந்து, ஒரு ஸ்டெதாஸ்கோப்பைக் காதில் மாட்டிக்கொண்டு  புலாவ் கலத்தில் கொதிப்பதை உன்னிப்பாகக் கேட்பார். அதன்படி  தீயை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்வார். இதயத்தின் நிலையை அறிய மருத்துவர்கள் ஸ்டெதாஸ்கோப்பைப் பயன்படுத்துவதைப் போலவே, நூர் முகமதுவும் புலாவை எவ்வளவு நேரம் சமைக்க வேண்டும் என்பதை கலத்தில் இருந்து வரும் கொதிச் சத்தங்களிலிருந்து அறிய முற்பட்டார். நான் அப்படியே மயங்கிப் போய்விட்டேன்.

நவாப் சாஹிப் தனது காரில் சரியாக மாலை ஐந்து மணிக்கு வந்தார். அவரது குர்தாவும் இறுக்கமான பைஜாமாவும் கரையற்ற தூய வெள்ளை நிறத்தில் இருந்தன, அவரது தலையிலோ ஒரு வெள்ளைச் சரிகை தொப்பி இருந்தது. சாதாரண மனிதராகத் தெரியவில்லை, ஒளிவீசும் கூர்வாள் போலிருந்தார். கண்கள் நீல நிறமாகவும், புன்னகை மென்மையாகவும் இருந்தது. எங்கள் ஒவ்வொருவரிடமும் ஆதாப்[3] என்று முகமன் கூறியபின் இருக்கையில் அமர்ந்தார். விருந்தோம்பிகள் தங்கள் மிகையார்வத்தில் அவரிடம் அதீத புகழ்சியோடு சிறிது பேசவும் செய்தார்கள். தலை சாய்த்தபடியே அவர் அனைத்தையும் கேட்டார் அவ்வப்போது தலையசைத்துக் கொண்டே சிரிக்கவும் செய்தார்.

தங்கத் தட்டுகளில் உணவு வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து தேநீர். நவாப் சாஹிப் தேநீரை மட்டுமே ஏற்றுக்கொண்டார், அதையுமே ஒன்றிரெண்டு மிடறுகள் மட்டுமே அருந்தினார். அவர் உணவைத் தொடவில்லை. அரை கப் தேநீர் அருந்திய பின் எழுந்து நின்றார். அவர் மரியாதையுடன் “தயவுசெய்து என்னை மன்னியுங்கள், வேறொரு இடத்தில் நான் இருந்தாக வேண்டும்” என்று கூறினார்.

எங்கள் அனைவரிடமும் விடைபெற்று சென்றார்.

நவாப் சாஹிப்புடன் எனது இரண்டாவது சந்திப்பு வேறு வழியில் நடந்தது. நான் ஒரு ஏழை பீடா கடைக்காரரின் மகனுக்கு சிகிச்சை அளித்தேன். அவரால் எனது மருத்துவ கட்டணத்தைத் தர முடியவில்லை. அவரிடம் பாழடைந்த குடிசையும், ஒரு சிறு கடையுமே இருந்தன- அந்த ஏழையால் தனக்குத் தேவையான மருந்தை கூட வாங்க முடியாது. சில மாதங்களுக்குப் பிறகு அவர் இன்னொரு முறை என்னை அழைத்திருந்தார். அந்த நேரத்தில் அவரது மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், ஆனால் அதிர்ஷ்டம் அடித்து சிறப்பாக அவர் வாழ்வே மாறிவிட்டிருந்ததை நான் அறிந்து கொண்டேன்- இப்போது அவர் இரண்டு மாடி வீட்டில் வசித்துக் கொண்டிருந்தார். இம்முறையும் வழக்கத்தை விட குறைந்த கட்டணத்தை எனக்கு தர முயன்றார். “நீங்கள் இப்போது செழிப்பாக இருக்கிறீர்கள்” என்று நான் சொன்னேன். “உங்களுக்கு இரண்டு மாடி வீடு இருக்கிறது…”

“நான் எப்போதும் ஏழைதான், டாக்டர்,” என்று அவர் கூறினார். “நவாப் சாஹிப்தான் இவ்வீட்டை வசிப்பதற்காக எனக்களித்தார்.”

“நவாப் சாஹிபா?”

“ஆமாம், டாக்டர். நான் ஒரு அதிர்ஷ்டசாலி, ஏனென்றால் ஒரு நாள் என் கடைக்கு முன்னால் அவரது கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. அதை மாற்றுவதில் ஓட்டுநருக்குக் கை கொடுத்தேன். அப்படியே நவாப் சாஹிப்பையும்  தலைவணங்கினேன். புன்னகையுடன் ‘நீங்கள் இங்கே வசிக்கிறீர்களா?’ என்று அவர் கேட்டார்.”

“ஆமாம் ஹூஸூர், அது என் வீடுதான்” என்றேன்.

” பாழடைந்த என் குடிசையைப் பார்வையிட்டுவிட்டு அவர் சென்றார். மறுநாள் காலையில் ஒரு பொறியாளர் வந்தார். ‘நவாப் சாஹிப் உங்களுக்காக இரண்டு மாடி வீடு கட்டும்படி எனக்கு உத்தரவிட்டிருக்கிறார்.’ என்று கூறிவிட்டு அதே நாளில் வேலையைத் தொடங்கினார், கண்மூடி திறக்கும் நேரத்தில் எங்களுக்கு இரண்டு மாடி வீடு கிடைத்தது… “

நவாப் சாஹிப்பை மனக்கண்ணால் கண்ணுறுவது போலிருந்தது. களையாக, நீலக்கண்களுடன், மென்மையாக சிரித்தபடி …

நவாப் சாஹிப் இறந்துவிட்டார் என்று சமீபத்தில் கேள்விப்பட்டேன். நோய்வாய்ப்பட்டல்ல, கடலில் விழுந்து. அது அவர் விரும்பியே செய்தது என்று பலர் கூறினார்கள். ஏனெனில் அவருடைய உயில் வழக்கத்திற்கு மாறாக இருந்தது. அதில், “ஏழைகளின் நலனுக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் தானமாக அளிக்கிறேன். இப்போது என்னிடம் ஒரு பைசாகூட மிச்சமில்லை. எஞ்சியிருக்கும் என் வாழ்நாளை எப்படிக் கடப்பேன்?”

மூலம்: அருணாவ் சின்ஹாவால் வங்காளத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


[1] ரஃகாப்தார் – நவாப்பின் பிரத்தியேக தலைமைச் சமையல் வல்லுநர். 

[2] ஃபிர்போஸ் (Firpo’s) – 1917 – 1960 வரை கொல்கத்தாவில் இருந்த புகழ்பெற்ற இத்தாலிய உணவகம்.

[3] ஆதாப் – லக்னோ நவாப்புகள் ‘ஆதாப் அர்ஜ் ஹை – நான் உங்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்’ என்று முனமன் கூறுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். லக்னோ வாசிகள் இன்றும் அதனை பின்பற்றுகிறார்கள்.

2 Replies to “நவாப் சாகிப்”

  1. ஒரு மொழிபெயர்ப்பு கதை போலவே தெரியவில்லை. எளிய இனிய அருமையான சரளமான நடையில் மிகச் சரியான சொற்களை பயன்படுத்தி ஒரு நேரடித் தமிழ்மொழி கதை போலவே மொழிபெயர்த்துள்ளார் விஜய் சத்யா. இரண்டு பத்திகளில் கதை முழுவதுமாக உள்ளே இழுத்துக்கொண்டது. நல்வாழ்த்துக்கள் விஜய் சத்யாசத்யா. இன்னும் நிறைய ஆக்கங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

    ஒரு நல்ல கதையை படித்த ஒரு நிறைவை அளித்த ஆக்கம் இது. துணிந்து நண்பர்களுக்கு பகிரலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.