- பருவம் – சகாப்தத்தின் குரல்கள்
- ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை
- அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்
- ஒற்றன் – அசோகமித்திரன்
- நிறமாலை
- ரா. கிரிதரனின் “ராக மாலிகை”
- லஜ்ஜா: அவமானம்
- துருவன் மகன்
- கம்யூனிஸப் பொன்னுலகில் அகதிகளுக்கு இடமில்லை
- பாகீரதியின் மதியம் – விமர்சனம்
- புத்தக அறிமுகம்: கடலெனும் வசீகர மீன்தொட்டி
- களியோடை
- தத்வமஸி: புத்தக அறிமுகம்
- பாமாவின் கருக்கு
- பர்மா வழிநடைப் பயணம் – வெ. சாமிநாத சர்மா
- கண்ணனை அழைத்தல்
- பாரதியின் இறுதிக்காலம்
- குவெம்புவின் படைப்புலகம்
- தி.ஜானகிராமனின் மோகமுள் வாசிப்பு அனுபவம்
- “இரு புறமும் சுழலும் கடிகாரம்” பற்றி
- புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்து
- இமையம் எழுதிய ‘எங் கதெ’ நாவல் பற்றி
- ஆகாரசமிதை
- உயர்ந்த உள்ளம்
- எல்லைகள் அற்ற வெளி
- மிருத்யுஞ்சய்
- ப. கல்பனாவின் குரல்: பார்வையிலிருந்து சொல்லுக்கு
- தப்பித்தல் நிமித்தம்
- ரணங்கள்: ஃ பிர்தவுஸ் ராஜகுமாரன்
- ஒளிர்நிழல் – கரிப்பின் விசாரணை
- சு. வேணுகோபாலின் ‘வலசை’ நாவல் பற்றி
- பசு, பால், பெண்
- தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்
- வெங்கட் சாமிநாதன் – தொடரும் பயணம்
- திருவரங்கன் உலா
- ச. தமிழ்ச்செல்வனின் ’பேசாத பேச்சு’
- அஃகம் சுருக்கேல்
- அறுபடலின் துயரம் – பூக்குழி
- ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன்
- தீப்பொறியின் கனவு
- புத்தக அறிமுகம்: முருகவேளின் ‘முகிலினி’
- மொட்டு விரியும் சத்தம்- நூல் அறிமுகம்
- தீர்த்த யாத்திரை – தீராத யாத்திரையின் சுயமி
- இரா. முருகனின் நளபாகம்
- பின்கட்டு
- யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்
- நீர்ப்பறவைகளின் தியானம்
- ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும்
உத்ரா
- துருப புத்ரா– வங்காள நாவல் –ஆசிரியர் அமர் மித்ரா
- தமிழில் பெ. பானுமதி
- வெளியீடு: சாகித்திய அகாதெமி-2014

இந்த நாவல் 2006-ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. அமர் மித்ரா 30 நாவல்களும், 10 சிறுகதைத் தொகுப்புகளும், சிறுவர்களுக்காக 4 நூல்களும் எழுதியுள்ளார். ‘கதா’, ‘பங்கிம்’, ‘சரத் சந்திரர்’ விருதுகளையும் பெற்றவர் இவர்.
மொழிபெயர்ப்பாளரான பெ. பானுமதி கல்கத்தா பல்கலையில் தமிழ்த்துறையில் பேராசிரியராக இருந்தவர். ‘மீதிச் சரித்திரம்’ என்ற இவரது மொழி பெயர்ப்பு நூலிற்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது. மற்றொரு மொழி பெயர்ப்பு நூலான ‘திஸ்தா நதிக்கரையின் கதை’, ‘திசை எட்டும்’ விருதினைப் பெற்றது.
இந்தியாவின் பழம்பெரும் நகரமான உஜ்ஜைனிதான் கதைக்களம். விஷாலா, பத்மாவதி, குமுதவதி போன்ற பலபெயர்கள் உள்ள உஜ்ஜைனி, அவந்தியின் தலை நகரம். அப்பெயருடன் நம் நினைவில் வருபவர் ‘உஜ்ஜயினீ நித்ய கல்யாணி’ என்று போற்றித் துதித்த நம் பாரதியார்.
ஒரு நாவலின் நாயகன் நம்மிடம் நேரே அறிமுகமாகி அவன் பயணத்தில் நம்மை இணைத்துக் கொள்வான். ஆனால், அவனைப் பற்றிய நினைவு கூறல்கள், மற்றும் அவனைப் பற்றிய உரையாடல்கள் மூலமாகவே ஒரு நாவலைத் திறம்பட எழுத முடியும் என்று சொல்லியிருக்கிறார் இதில் அமர். அவன் இறந்தவனில்லை, உயிரோடு காணாமல் போனவன், இளைஞன், ஞானவான், அறிவாளி; அப்படிப்பட்டவனை உலகிய ஒழுக்கக்கூறுகளில் ஒன்றான காம நேர்மையில் அமர் அடக்க முயலவில்லை. அதை மீறி அவனுக்காக நம்மை ஏங்கச் செய்கிறார்; அவன் மீண்டு வர வேண்டும், ஊர் திரும்ப வேண்டும், உஜ்ஜையினியின் உன்னதம் அவனால் மேம்படவேண்டும் என்று நம்மை நினைக்க வைக்கிறார். மிக உண்மையாக, ஒரு நாவலைக் கட்டமைக்க முடியுமா என்ற வினோதக் கேள்விக்கான விடை இந்த நாவல். புனைவும், சரிதமும் முயங்குகையில் வரும் ருசிகர விளைவு இது. அரசியல், ஆன்மீகம், யதார்த்தம், மனிதம், அவன் உளவியல், அவன் செருக்கு, அவன் பணிவு, அவன் காமம், அவன் சினம், அவன் குணம், அவனது கோழைத்தனம், அவன் கொள்ளும் எச்சரிக்கை, இவை அனைத்துடன் வானவியல், இயற்கை, நதி, ஏரி, நட்சத்திர மண்டலங்கள், கடல் என்று வந்து கொண்டே இருக்கிறது. கேலியுடன், சற்று இகழ்ச்சியுடன் கூடிய நகைச்சுவைக்கும் இடமிருக்கிறது. வதந்திகள் எவ்வளவு சுவை சேர்த்து பரப்பப்படுகின்றன என்பதை வாட்ஸ்ஸப், முகநூல், இணையம், செய்தித்தாள்கள், சிறுகுருவிச் செய்திகள் போன்ற பலவற்றைப் பயன் படுத்தும் நாம் சிறிதறிவோம்; அரசுகளை அமைக்கவும், கவிழ்க்கவும் அவை எவ்வாறு உண்மை போன்றத் தகவல் கட்டமைப்புகளுடன் உலா வர அனுப்பப்படுகின்றன என்பதும் நாம் அறிந்ததே. அவந்தியின் அரசரான பர்த்ருஹரியினை அகற்றி அவரது மாற்றாந்தாய் மகனான விக்ரமனை பதவியில் அமர்த்த நடைபெறும் சதிகளை இந்த நாவல் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அதற்காக, சதிகாரர்கள் வறட்சி நீடிக்க வேண்டுமென்கிறார்கள்; தாழ்ந்த சாதியினரின் குடியிருப்பை சித்திரை மாதத்தில் கிருஷ்ண பக்ஷ நவமி திதியில் தீயிட்டு எரிக்கிறார்கள். சூத்திரர்கள் தங்கள் உழைப்பால் வறட்சியில் தங்கள் ரத்னாகர ஏரியில் நீர் கொண்டு வந்ததற்காக அவர்களைக் கைது செய்கிறார்கள்; வதைக்கிறார்கள்; அந்த நீரை அவர்கள் பயன்படுத்தக்கூடாதென்று காவல் அமர்த்தி கட்டுப்பாடு விதிக்கிறார்கள்.
நாவலின் நாயகன் துருவன் மகன். அவன் அழகன், வெள்ளை நிறத்தவன், இனிமையான குரல் உள்ளவன், நீலக் கண்களில் ஞான ஒளியுடன் இருப்பவன். (வங்காள நாவலாசிரியர்களுக்கு வெள்ளை நிறத்திலும், நீலக் கண்களிலும் ஒரு மோகம்; அதீன் பந்த்யோபாத்யாய எழுதிய ‘நீலகண்ட பறவையைத் தேடி’ நாவலிலும் இதைப் பார்க்கலாம்) அவனிடம் அனைத்து சிந்தனைகளும் கிரமப்படி இருக்கின்றன. அவனிடம் கேள்விகளுக்குப் பதில்கள் இருக்கின்றன. அவன் மனிதர்களை சாதி முறையில் பிரித்துப் பார்ப்பதில்லை. வானவியல், நிலவியல், மேக சஞ்சாரம், நதிகள், கடல், மலைத் தொடர்கள் என அவன் சொல்வதைக் கம்பீராவிலும், உஜ்ஜைனியிலும் நினைவில் வைத்திருக்கிறார்கள் பலர். அவன் பெயர் கூட நாவலில் சொல்லப்படுவதில்லை. மணிபத்ரனை நீங்கள் துருவன் மகன் எனக் கொள்ளலாம். அவன்கூட இறுதிப் பகுதியில்தான் வருகிறான், தொடக்கத்தில் சிறு நூலிழையாகக் காட்டி சாமர்த்தியமாக அதைக் கடக்கிறார் அமர். துருவன் மகன், தன் தந்தை இறந்த பிறகு உஜ்ஜைனியின் அருகிலுள்ள கம்பீரா கிராமத்தில் சிவநாதர் என்ற தந்தையின் நண்பரின் வீட்டில் தங்குகிறான். அவனது தந்தையின் தொழில் கூட்டுக்காரர் வணிகர் சுபக்தத்தர் அவனுக்குக் கல்வியும், கலைகளும் கற்பிக்க வழி செய்கிறார். கம்பீரா நதி, மூங்கில் காடு, காட்டிலிருந்த கிணறு, அவர்கள் வீட்டு முற்றம், சம்பக மலர், கம்பீராவின் நீல நிற நீர் எல்லாவற்றையும் அமர் வர்ணிக்கிறார். அவந்தியின் பிரதான கணிகை தேவதத்தை, அவளிடம் கலைகள் கற்க, வீணை வாசிக்க, வணிகரின் ஆதரவில் செல்லும் துருவன் மகன் அவளிடம் மயங்குகிறான். வணிகர் தனக்காக அவன் மூலம் அவளை வசப்படுத்த நினைக்க, அவனோ அவளிடம் காதலும், காம மயக்கமுமாக இருக்கிறான். தன் தேரோட்டி உதங்கனைக் கொண்டு அவனை இந்தத் துரோகத்திற்காக சாட்டையால் இரத்த விளாறாக அடித்து வீதியில் வீசிவிடுகிறார் வணிகர். சூத்திரர்கள் குடியிருப்பில் உள்ளவர்கள் துருவன் மகனை அறிவார்கள். இரகசியமாக அவனைக் காப்பாற்றுகிறார்கள். அவன் நகரை விட்டுப் போய் விடுகிறான். துருவன் மகனுக்கு தேவதத்தை மீது மோகமென்றால், அவன் தங்கியுள்ள வீட்டின் கந்தவதி அவனையே உயிரெனக் கொள்கிறாள். ஆனால், அவள் ஒரு நாள் உணர்கிறாள், துருவன் மகனுக்கு அவள் மற்றவர்களைப் போலத்தான், அவளிடம் மட்டுமென்று அவன் விசேஷக் காதல் கொள்ளவில்லை. இதை அவள் அறிந்து கொள்ள அமர் அமைக்கும் களம் அதி அற்புதம். உள் உணர்வுகள் விஸ்வரூபம் எடுத்து சினம், நிஷ்டூரம், அன்பின் வகைமைகள் எனக் காட்சிப் படுத்திய விதம் அருமை. கந்தவதி தன்னைத் தானே நம்பவில்லை என உணர்கிறாள். அவள் தந்தை கார்த்திக் குமார் ஹூணர்களுக்கு எதிராக போரிடச் சென்ற படையோடு சென்றவர் ஐந்து வருடங்களாகியும் ஊர் திரும்பவில்லை. அவர் மனைவி ரேவா காணாமல் போய்விட்ட இருவருக்காக, மகளுக்காக, பொழியாத வானத்திற்காக, முதுமையில் தங்களைச் சுமக்க நேர்ந்த மாமனாருக்காக, அரசில் சாதாரணமான பதவி வகிக்கும் உத்தப நாராயணனும், (அந்த உத்தபனுடைய கண்களில் அவனது தந்திர புத்தியைத் தவிர வேறு எதுவும் தெரியாது.) பக்கத்து வீட்டுப் பார்வதி பாட்டியும் செய்யும் அராஜகச் செயல்களுக்காக, தன் பெண்ணை கழுகு போல் கொத்திச் செல்லக் காத்திருக்கும் முத்து வணிகருக்காக நாவலில் மனப் போராட்டத்திலியே இருக்கிறாள். அவள் நினைக்கிறாள்: “என் கணவருக்கு தலை மறைவான வாழ்க்கையை யாரோ தந்திருக்கிறார்கள். வெகு தூரத்தில் ராம் மலையின் உச்சியில் யாரோ அவரை வைத்து விட்டு வந்திருக்கிறார்கள். தலைக்கு மேல் ஆகாயத்தைத் தவிர வேறு எதுவுமில்லை. மழைக் காலத்தில் அந்த ஆகாயத்தில் அடர்ந்த மேகம் இருக்கும். அந்த மேகம் தூரத்தில் எங்கோ போய் விட்டது. தசார்ண நாட்டிற்குப் போயிருக்கலாம். அது என் கணவரின் செய்தியைச் சுமந்துகொண்டு வைத்ரவதி நதியைத் தாண்டி உஜ்ஜைனியை நோக்கி வருகிறது.” ஒரு மனைவியின் துயரமும், நம்பிக்கையும் இதில் ஆழமாகக் காட்டப்படுகின்றன.
நகரின் மிகப் பெரும் செல்வந்தர், அரசருக்கே கடன் கொடுக்கும் அளவு செல்வம் மிக்கவர் சுபக்தத்தரிடம், கணிகை தேவதத்தைக்கு வெறுப்பு. அவளது அம்மா சுரமஞ்சரி சௌராஷ்டிரத்திலிருந்து இவளைக் கருவாகச் சுமந்துகொண்டு அவந்தியில் தஞ்சமடைந்தவள்; தாயும், மகளும் ஆயக் கலைகள் அறுபத்தி நான்கிலும் வல்லவர்கள். சுரமஞ்சரியின் கணவர் வெளி நாட்டுக்காரர், யவனர். சுரமஞ்சரியை அடைய வேண்டி ஒரு சௌராஷ்டிர வணிகர், அவரைக் கொலை செய்துவிட, தப்பித்த அவள் அவந்தியின் தற்போதைய அரசர் பர்த்ருஹரியின் தந்தை கந்தர்வ சேனர் காலத்தில் அவரின் ஆசை நாயகியாய் கௌரவமாக இருந்தவள். சுரமஞ்சரி இப்போது உயிருடனில்லை. வணிகர் தேவதத்தையிடம் மோகம் கொண்டு காமத்தால் எரிகிறார்; அவளுக்கென்றே பல நகைகளைப் பரிசாக அளிக்கிறார். தேவதத்தை, தன் காதல் அரசரிடம் மட்டுமே என்று வெளிப்படுத்திக் கொள்கிறாள். ஆனால், அவள் வரையும் ஓவியங்களில் ஆக்சு நதியும், துருவன் மகனும்தான் இருக்கிறார்கள். அரசருக்கோ இந்தக் கணிகையிடம் மோகமில்லை. அவர் மென்மையான மனம் கொண்டவராக, கலைகளில் நாட்டம் உள்ளவராக, குழந்தை இல்லாதவராக இருக்கிறார். முதலில் அவரிடம் காதலும், காமமுமாக இருக்கும் பட்டத்து அரசி, அவரது ஒரே மனைவி பானுமதி, அவரை ஒதுக்குகிறாள். அரசரின் மாற்றாந்தாய் மகனான விக்ரமனும், அவளும் நெருக்கம். துருவன் மகனையும், கணிகைக்குப் பிடித்தமானவர் என அறியப்படுவதால் அரசரையும் ஏதோ ஒரு வழியில் பழி வாங்க சுபக்தத்தர் முனைகிறார். பட்டத்து அரசியின் காம உணர்வினைக் களமாகக் கொண்டு சேனாதிபதியும், காதலனும், அரசியின் மைத்துனனுமான விக்ரமன் தான் நாற்காலியில் அமர காய் நகர்த்துகிறான். சந்தர்ப்பங்களும் அதற்கேற்றாற்போல் அமைகின்றன. மஹா காலர் கோயில் தாவாரத்தில் சாதாரண கணிகையான லலிதாவுடன் அரசர் கூடுகிறார். அதற்கு சிறிது நேரம் முன்பாகத்தான் அவர் காமத்தால் எரிந்து, மனைவியால் புறக்கணிக்கப்பட்டு அவந்தியின் நிலை குறித்தாவது பிரதான புரோகிதரிடம் கேட்டு வரலாமென மஹா காலர் கோயிலுக்கு வந்தார். அந்தப் பாவப்பட்ட பெண் அவரை மஹா காலரெனவே நினைக்கிறாள்; அமர் இதை சுருதி லயமாகக் காட்டுகிறார். தனது வாழ்வில் முழுமையடையாத ருசி அன்றுதான் முழுமையடைந்தது போல அவருக்குப் பட்டது; அவர் தன்னையே ‘யாரோ’ என்பது போல் உணர்ந்தார். அரசர் அப்பெண்ணிற்கு அளித்த ‘மகாலதா’ நகையால் விஷயம் ஊரெங்கும் பரவுகிறது. பாவப்பட்ட கணிகை லலிதாவும், சுபத்ராவும் மௌனமாகவும், நடுக்கத்துடன் இருக்க, அடாத செயல் செய்த அரசர் ஆட்சியில் மழை பெய்யாது, வறட்சி தலை விரித்தாடும், கொள்ளை, கொலைகள் அதிகரிக்கும், சூரியனின் தேர்க்கால் வானில் அழுந்தி நின்று முடிவற்ற பகல் மட்டுமே இருக்கும், இரவும், குளிரும் மேகமும், மழையும், கருவும் அற்றே போய் விடுமென வதந்திகள் என்றே அறியாமல் செய்திகள் பரப்பப்படுகின்றன. இத்தனை சூழ்ச்சிகளுக்கும் மதியூகியாக தலைமைப் புரோகிதர் செயல் படுகிறார். சூத்திரர்கள் குடியிருப்பிற்குப் போய் வணிகர் மறைமுகமாகப் பேசி பொற்காசுகளையும் கொடுக்கிறார். கணிகை தேவதத்தை, வணிகர் தனக்கென செய்து அனுப்பிய அத்தனை நகைகளையும், தன் தோழியும், அழகற்றவளும், இளமையானவளும், பெருங்கனவு காண்பவளும், உத்தபன் கைகளில் சிக்கிச் சீரழிபவளும், பெண் தரகன் மகாபார்ஷ்வனின் உதவியும் தேவைப்படும் அபலைக் கணிகையான சதுரிகாவிடம் கொடுக்கிறாள். அது உத்தபன் கைகளுக்கு வருகிறது. அவன் கந்தவதியை மணமுடிக்கும் ஆசையில் இருக்கிறான்; அக்குடும்பத்தாருக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. அவன் தன் அரசு அதிகாரத்தைக் காட்டி பயமுறுத்துகிறான்; இராக்ஷச விவாகம் செய்வேன் என்கிறான்; அவனை அங்கிருந்து விரட்டுவதற்காகக் கந்தவதி அந்த நகைப் பேழையை வாங்கிக் கொள்கிறாள்; அவளது தாத்தா அதை வீட்டில் வைத்துக் கொள்ளப் பயந்தும், உத்தபன் தன் பேத்தியைக் கட்டாயக் கல்யாணம் செய்து கொள்வதைத் தடுக்கக் கோரியும் வணிகரை சந்திக்கிறார். கொஞ்சம் ஆசுவாசம் அடைகிறார்.
இடையில் தசார்ண தேசத்து மலையடிவாரத்தில் இருக்கும் ‘சோனா’ கிராமத்திலிருந்து ‘தாமிர துவஜன்’ என்ற ஒரு இளைஞன் ஆச்சார்யார் விருஷ பானுவிடம் ஜோதிடக் கலை, கிரக நிலைகளைக் கற்றுத் தேர்ந்து ‘விதிஷா’ நகரத்திற்குத் திரும்பும் எண்ணத்துடன் வருகிறான். அவன் ‘வைணிக’ இனத்தைச் சேர்ந்தவன்; அவன் தந்தை ஒரு வியாபாரி. அது ஒன்றுதானா அவனது எண்ணம்? அவன் மா நிறம், தலையில் அடர்ந்த சுருண்ட முடி, காட்டுவாசி போல் அகன்ற மார்பும், வலிமையும், மெலிந்த உடலுமாக இருக்கிறான். அவன் பேச்சும், நடத்தையும், தெளிவும், காணாமற் போன துருவன் மகனை, தசார்ண தேசத்து ஜோதிடன் என அழைத்து வந்தது போல கந்தவதிக்குத் தோன்றுகிறது.
அரசர் பர்த்ருஹரியிடம் மக்களின் அபிமானத்தைக் குறைக்கும் மற்றொரு முயற்சியாக சூத்திரர்கள் குடியிருப்பு தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது. அதை செயல்படுத்துபவன் வணிகரின் தேரோட்டி உதங்கன். அவன் மலை நாட்டவன்; சிறு குழந்தையாக இருந்த போதே அன்னையிடமிருந்து வணிகரால் பலவந்தமாக செல்வமளித்து பிரிக்கப்பட்டு அவர் கண்காணிப்பில் கொடூரமானவனாக, அவரிடம் நன்றி பாராட்டும் வேலையாளாக இருப்பவன். அவன் குடிசைகளை எரித்து விட்டு அவைகள் பற்றி எரிவதையும், மனிதர்கள் அலறுவதையும் கொம்பேறி மூர்க்கனைப் போல் ஆசையோடு பார்க்கிறான். அவன் தான் தீ வைத்தவன் என்பது சூத்திரர்களுக்குத் தெரிந்தவுடன் மேலும் ஒரு பாதகத்தை தலைமை புரோகிதரும், சேனாதிபதியும் முன்னெடுக்கின்றனர். அது, உதங்கனை கிருஷ்ண சதுர்தசியன்று உயிரோடு கொளுத்துவதுதான். அரசியல் செயல் நீதி பேசப்படுகிறது- சேனாதிபதியின் நீதி உணர்விற்கு சாட்சி, வணிகரின் நெறி வழுவா நியாயத்திற்கு சாட்சி எனக் கணக்குப் போடுகிறார்கள். மலையின் அந்தக் குழந்தை குடிசையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு எரிக்கப் படுகிறான். வணிகர் அமைதியற்றுப் போகிறார். அவரும், உதங்கனின் ஆவியும் பேசுவதாக அமர் எழுதியிருப்பது அபாரம்.
கிழவர்கள் கிராமங்களில் மெள்ள மெள்ளத் தலைமைப் பதவியை அடைந்து விடுகிறார்கள் என்று அமர் கிண்டலடித்தாலும், பராசரன் எனும் அத்புத மனிதனை அங்கேதான் அமைக்கிறார். ஒரு காலத்தில் படை வீரன் அவர்; வயோதிகத்தில், தன் குடியிருப்பு மக்களுக்கு வழி காட்டி. தாமிரதுவஜனும், சிவநாதரும், ஏனையோரும் தனித்தனியே பல சந்தர்ப்பங்களில் அவரிடம் துருவன் மகனைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் அவர் தன் மக்களின் பாதுகாப்பிற்காக சொல்லும் பதில்கள் ஆழமும், குழப்பமுமான ஒன்று. அவர் மனதிலும் துருவன் மகன் ஞானவானாக, சத்திய வடிவாக, ஜாதிகளைப் பாராதவனாக, அறிவோடு எதையும் ஆராய்பவனாகத் தானிருக்கிறான். வணிகர் விரிக்கும் வஞ்சகச் செல்வ வலையில் அவர் தலைமை புரோகிதரைப் போல மயங்கவில்லை. வறட்சியால் பஞ்சம் பிழைக்க ஊரை விட்டுக் கிளம்பும் தன் கூட்டத்தினரை தடுத்து நிறுத்த அவர் ரத்னாகர ஏரியைத் தோண்டச் செய்கிறார். அவர்கள் நிராசையுற்று அந்தப் பணியை நிறுத்த நினைக்கையில் தங்கக் கலசம் ஏரியின் அடியில் இருப்பதாகக் கனவு கண்டதாகச் சொல்கிறார். ஊரெங்கும் நதிகள் இளைத்து ஏரிகள் வற்றிவிட இவர்கள் குடியிருப்பின் ஏரியில் நீர் வருகிறது; ஆனால், அவர்கள் புலம் பெயரும் எண்ணத்தைக் கைவிடாத போது குடும்பம், குழந்தை என்ற அமைப்பை வலியுறுத்துகிறார் பராசரன். மேகத்திற்கும், கர்ப்பத்திற்கும் இருக்கும் அந்த நூதன உறவை அமர் எழுதியது போல் யாரும் எழுதவில்லை எனத் தோன்றுகிறது. புத்ர காமேஷ்டி யாகம் செய்த நாடல்லவா இது? கர்ப்பம் என்பது பெண் செய்யும் யாகம். அதை உணரப் பொழுதில்லை இன்று. ஒரு தபஸ்வியைப் போல் அவர் எரிந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்து விடுகிறார். மக்கள் சாதகப் பறவையைப் போல் தண்ணீர், தண்ணீர் என்று அலையும் போது, நதிகளும், நிலமும் வறண்டு போயிருக்கும் போது, கோவிலில் இருக்கும் கடவுள் எந்த செல்வத்தில் அழகு பெற்று விளங்க முடியும்? அவர் நீர் கொணர்ந்த மேன்மையை அரசரிடம் சொல்லும் வேளையில் அரசர் தன் கடமையைச் செய்யத் தவறியதாக ஒரு குடிமகன் சொல்லும் உரிமையை அமர் எடுத்துக்காட்டும் போது, மக்களாட்சியும், மன்னன் செவி கொடுத்தலும் வாசகரின் மனதில் மலர்கின்றன.
வணிகர் வடமேற்கேயுள்ள இந்து குஷ் மலைத் தொடரில் இருக்கும் ‘பாஹ்லிக்’ நாட்டிற்குப் போகத் தீர்மானிக்கிறார். அந்த நாடு, புருஷபுரம், காந்தாரம் ஆகியவற்றைத் தாண்டி இருக்கிறதா இல்லை மத்ர நாட்டில் பஞ்ச நதிக்கும் சிந்து நதிக்கும் இடையே இருக்கிறதா என்பது பற்றி அவருக்கு சந்தேகம். இந்துகுஷ் மலைத் தொடரில் இருக்கும் அந்த தேசத்தில் தன் ஆட்சியை நிறுவினான் மாவீரன் அலெக்ஸான்டர். அதனால் அந்த நாட்டில் கிரேக்க நாட்டினர் பலர் குடியேறினர். பாஹ்லிக் தேசம் கிரேக்கம் போன்றது, ஆனால், அது கிரேக்கமல்ல. வடக்கே பல யோஜனை தூரத்தைத் தாண்டி இமாலயம் இருக்கிறது. உலகத்தின் இந்தப் பகுதியைக் கடவுள் மலைகளால் சூழ வைத்திருக்கிறார். வட கிழக்கிலிருந்து வட மேற்கு வரை இந்த மலைப் பகுதி படர்ந்திருக்கிறது. வடமேற்கில் மதுரா, சுரசேனா, மத்ஸ்ய நாடு, இந்திரபிரஸ்தம் இவற்றையெல்லாம் தாண்டி இமாலயம் வெகு தூரத்திலிருக்கிறது. ஆனால், வட கிழக்கில் அத்தனை தூரமில்லை. பாஹ்லிக நாட்டிற்கு வணிகர் போக இருப்பதை அரைப் பைத்தியமான வைத்தியன் நகுஷ சர்மன், கணிகையும், அழகற்றவளுமான சதுரிகாவிடம் சொல்கிறான்; மேலும், சூர்யன் தன் தேர்க்காலை வானில் ஊன்றி வானத்தை வெப்பத்தால் வளைத்து விட்டான், இனி இரவு பகலுடன் கலந்து விடும் அதனால் அவளை வணிகர் அழைத்திருப்பதால், அவள் அவசியம் நகரை நீங்கிச் செல்ல வேண்டுமென அறிவுறுத்துகிறான். அவள், பாவம், மனக்கோட்டை கட்டுகிறாள். வேசித் தரகனான மகா பார்ஷ்வன் ஓரிடத்தில் சொல்கிறான்: “வெய்யிலில் அலைந்து அலைந்து மூளை புரண்டு போய் விடுகிறது. சில சமயம் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்ய வேண்டும், அவர்கள் கஷ்டத்தைப் பார்த்து ஆனந்தப்பட வேண்டும் என்று தோன்றுகிறது.” அவனே, சதுரிகாவைக் காதலிக்கத் தொடங்கிய பிறகு அவளுடனும், வணிகருடனும் தாங்கள் பாஹ்லிக் போவதைப் பற்றி எண்ணுகிறான்- ‘புது இடத்தில் ஒரு நதிக்கரையில் அவர்கள் வீடு கட்டிக் கொள்வார்கள்;அங்கே வெய்யில் மென்மையாக இருக்கும்; காற்று குளிர்ச்சியாக இருக்கும்; விளை நிலமிருக்கும்; அங்கே கணிகையர் இருக்க மாட்டார்கள்.’ அவனுடைய அம்மா கணிகையாக இருந்து, பால்வினை நோய் வந்தவுடன் காட்டில் விலங்குகளுக்கு இரையென உயிருடன் போடப்பட்டவள். அவன் மனம் படும் பாட்டை ஒற்றை வரி சோகச் சித்திரமாக அமர் காட்டுகிறார்.
வறட்சி வாணிபத்தை மிகப் பாதிப்பதை அமர் சொல்கிறார்: “இறந்த விலங்கின் கண்கள் நிலைத்து நிற்பதைப் போல் நிலைத்த பார்வையுடன் கடைகளில் வியாபாரிகள் உட்காந்திருந்தனர். வெய்யிலில், நீரற்ற நதியில், மணல், கத்தி முனையைப் போல் பளபளத்தது. வெய்யில், தீட்டிய வானவில் போல் உடலை வாட்டியது. சூரியன் நிலையாக இருந்தால் நேரமும் நகராது.
அரசர் இயற்கையை எப்படி எதிர்கொள்வது, வறட்சியை எப்படிப் போக்குவது எனத் தவிக்கிறார்; ஆனால், தன்னைச் சுற்றி நடக்கும் சதிப் பின்னல்களால் தெளிவாகச் சிந்திக்க, தீர்மானமான முடிவெடுக்க அவரால் முடியவில்லை. சேனாதிபதி விக்ரமனை ரேவா நதியைத் தாண்டி சூர்பாரக் துறைமுகம் சென்று வணிகர்களை கொள்ளையரிமிருந்து பாதுகாக்கச் சொல்கிறார்; அதுவும் அவர் நினைத்தபடி நடக்கவில்லை; வீரர்களுக்கு வணிகர்களைக் கொள்ளையடிக்க மறைமுகமாக ஆதரவு அளித்து விட்டு அவன் நாடு திரும்பி, தலைமைப் புரோகிதருடன் தன் வழக்கமான சதிகளில் தான் ஈடுபடுகிறான். படை செய்யும் குற்றமெல்லாம் குற்றமேயில்லை!
அரசர் வணிகரை அழைத்து தான் சில சதிகளை அறிந்திருப்பதைக் கோடி காட்டுகிறார். அவர் வணிகத்திற்காகத் தற்சமயம் போகத்தான் வேண்டுமா என்றும் கேட்கிறார். வணிகர் அதிர்ந்தாலும், தன் முடிவில் உறுதியாக இருக்கிறார். சதுரிகாவின் மூலம் வணிகர் பாஹ்லிக் தேசம் செல்லப் போவதை அறிந்த தேவதத்தை, துருவன் மகனின் அன்பிற்குரியவள், செல்வந்தரான வணிகரை நிராகரித்தவள், அவருடன் தன் சொந்த நாட்டிற்கு (அது அவளது தந்தையின் தேசம்-அங்கே ஒருக்கால் துருவன் மகனுமிருக்கலாம்) செல்ல ஆசைப்பட்டு தானும் அவர்களுடன் பயணப்படுவதாகச் சொல்கிறாள். “அந்த நீல நிறக் கண்களை உடைய துருவன் மகன் மேல் எனக்கு விருப்பம் ஏற்பட்டதா என்று இப்போதும் புரியவில்லை. துருவன் மகன் தான் எனக்கு எல்லாம் என்று சில சமயம் தோன்றுகிறது; வேறு சமயம் உஜ்ஜைனியின் சந்தோஷமில்லாத அரசர்தான் எனக்கு எல்லாம் எனத் தோன்றுகிறது.” இந்த ஊசலில் ஆடாதவர்கள் யாரேனும் உண்டா? ஆனால், ஒத்துக்கொள்ளாதவர்கள் உண்டு. மனிதர்களை சொந்த மண் ஈர்ப்பது போல் எதுவும் ஈர்ப்பதில்லை. உலகெங்கும் புலம் பெயர்ந்து அன்னிய தேசத்தில் தஞ்சமடைந்திருப்போர் காணும் கனவுகளில் அவர்கள் தந்தையர் தேசம் தான் வருகிறது; அந்த மண் வாசனைக்கான ஏக்கம் உயிருடன் கலந்த ஒன்று. இந்தப் பிரதான அழகி, உண்மையான நேசத்திற்கு ஏங்கியவள், நடனத்திலும், வீணை வாசிப்பதிலும், சித்திரம் வரைவதிலும் திறன் மிகுந்தவள், உடலில் ஆடையற்ற நிலையில் கற்பழிக்கப்பட்டு கொலையும் செய்யப் படுகிறாள். அவள் மாளிகைக்கு அரசர் உருவில் வந்தவர் யார்? சதி முற்றிலுமாக அரசரைப் பிணைத்து விட்டது. இந்தக் கொலையின் மர்மம் மகா பார்ஷ்வனுக்கு, அவன் மூலம் சதுரிகாவிற்குத் தெரியும். உதங்கனுக்கும் தெரியும். அவன் அவர்களை மிரட்டுகிறான்- அரசர் தான் தேவதத்தையைப் பார்க்க இரவில் வந்தார், அவர் தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று சாட்சி சொல்ல வேண்டும் என்று மிரட்டி, அவர்களைக் காவலில் வைக்கிறான். அவர்கள் இருளில் தப்பித்து ஒடுகிறார்கள். வணிகர் தன் பிரயாணத்தை தேவதத்தையின் மரணத்தால் நிறுத்திவிடவில்லை; வெறுமையான மனதுடன் அவர் நகர் நீங்குகிறார்.
அரசருக்கு மேலும் அபகீர்த்தி ஏற்படுகிறது; அவர் கொலையாளி என்று சொல்லவும், நம்பவும் மக்கள் வற்புறுத்தப்படுகிறார்கள்; மறுத்த வசுதேவனை உத்தபன் கொல்கிறான். பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றாரே பாரதி. அரசி, அரசரைக் கொலைகாரர் என ஆணித்தரமாகச் சொல்கையில் அவளது கிழப் பணிப்பெண் துணிந்து எதிர்க்கிறாள். வங்காள மண்ணின் குருதியின் வாசம் இக்கதாபாத்திரத்தின் மூலம் வருகிறது. அவள் பெயர் நிபுணிகா. அவள்தான், அந்த வெளி நாட்டவன் அரசரைச் சந்திக்க வழி செய்கிறாள். அவன் மிகவும் துணிச்சலாக அரசரைக் கேட்கிறான் அவர் ஏன் ஆச்சாரியரைத் தேடவில்லையென, அவரின் அந்திமச் சடங்குகள், கிடைத்த சில எலும்புகளை மட்டுமே தகனம் செய்து ஷிப்ரா நதிக்கரையில் நடந்திருப்பதை அவர் ஏன் அறியவில்லையென; அதோடு நிறுத்தவில்லை அந்த வெளி நாட்டான்- ‘நாட்டிலுள்ள எல்லாருக்கும் அரசரைப் பற்றி முழுமையாகத் தெரியும்; ஆனால், அரசரின் துர்ப்பாக்கியம் அவருக்கு அவருடைய குடிமக்களைத் தெரியாது; தெரிந்து கொள்ள எந்த வழியுமில்லை.’ எவ்வளவு கச்சிதமாக இன்றைய நிலைக்கும் பொருந்துகிறது இது! அவன் மேலும் சொல்கிறான் ‘உண்மையில் தங்கள் மனதில் மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதைத்தான் கண்ணாடியில் பார்க்கிறார்கள். நீங்கள் உங்கள் நம்பிக்கையிலிருந்து சொல்வது எப்போதுமே உண்மையாக இருக்காது. அரசாட்சியின் முறை அப்படி இருக்கலாம். சக்தி அதிகமாக ஆக அறியாமையும், அதிகமாகும். சக்திதான் அறியாமையைத் தோற்றுவிக்கிறது.’
அரசரிடம் காலாமுகி கிராமத்தின் ஆட்சியை ஏற்று புது வாழ்வு வாழும்படிச் சொல்கிறான் அவன். தன்னைப் பற்றி இப்படிச் சொல்கிறான் ‘நான் ஒரு அவமானப்படுத்தப்பட்ட மனிதன். என்னை விரும்பிய பெண்ணைப் புறக்கணித்துவிட்டுக் கிளம்பினேன். எல்லாமே முற்பிறப்பில் நிகழ்ந்தது போல் இருக்கிறது. அந்த அவமானத்திற்குப் பிறகு நான் நகரத்தை விட்டுப் போய் விட்டேன். தற்கொலை செய்து கொள்வதற்காக கம்பீரா நதியில் இறங்கிய போது சரஸ்வதி தேவி (கந்தவதிதான் அவள்) என் முன் தோன்றினாள்.’ துருவன் மகன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் இடமிது. தான் நேசித்த ஒரு பெண், அவள் கணிகை; ஆனாலும் அது கைகூடாமல் போய்விட்டது; அவனை நேசித்த ஒருத்தி, கந்தவதி, அவன் தற்கொலை செய்து கொள்வதை அவளறியாமல் தடுத்து அவனுக்கு ஞானவாணியாகிறாள். அதனால்தான், அவன் அவளிடம் திரும்பவில்லை என்பதை மிக அழகாக தாமிரதுவஜன் கந்தவதியிடம் சொல்கையில் அமரின் கரம் பற்றிக் குலுக்கத் தோன்றுகிறது. வாழ்வில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் ஒருமித்து இருக்கும் அந்த எழிலை, மகாகவி காளிதாசரின் அற்புதமான ‘மேகதூதத்தின்’ இரு முதல் வரிகளுடன் அமர் நாவலை நிறைவு செய்கிறார்.

இந்த நாவலில் விரவிக் கிடக்கும் விண்மீன்களைப் பற்றிய வியத்தகு செய்திகளைப் பார்ப்போம்; கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அரசன் முதல் ஆண்டி வரை வானைப் பார்த்து, அதன் நட்சத்திரங்களை அடையாளம் காணும் திறம் கொண்டிருந்தார்கள் என்ற செய்தி, எதையெல்லாம் புறந்தள்ளி, நான்கு சுவர்களில் ஒரு ஒளிபுகா நிலவறையை நம்மில் பெரும் பாலோர் அமைத்துக் கொண்டுவிட்டோம் என்ற ஆற்றாமையை எழுப்புகிறது. ‘விருஷ பானு’ ஆச்சார்யரிடம் படித்த துருவன் மகன், கந்தவதிக்கு எத்தனை நட்சத்திரங்களை அடையாளம் காட்டுவான்-சுவாதி, சித்திரை, அபிஜித், கால புருஷன், சப்தரிஷி மண்டலம்; தை மாதம் வட திசையில் மறுபடியும் சப்த ரிஷிகளும், மஹா ரிஷி வசிஷ்டரும் அவர் மனைவி, அருந்ததியும் என்ன ஒருகாட்சி! வடகிழக்கில் ‘ரிஷப ராசி’, அதற்கு கொஞ்சம் மேற்கே ‘மேஷம்’, அதற்கு மேலே ‘மீன ராசி’யின் விண்மீன் மண்டலம், ஆகாயத்தின் நடுவே பாருங்கள், சற்றே தெற்கே, ‘மகர ராசி,’ ‘கும்ப ராசியையும் பார்க்கலாம்- ஒளிமிகுந்த ‘சிரவணம்’ ; ஐப்பசி மாத பௌர்ணமியில் சந்திரன் கிருத்திகை நட்சத்திரத்தில் இருக்கும்; ஐப்பசி மாதக் கடைசியில் சூரியன் உதிப்பதற்கு முன் விடியற்காலையில் சுக்கிரனைப் பார்க்கலாம்; தேவ குரு ஐப்பசி ஆரம்பத்தில், மாலையில், ஆகாயத்தின் மேற்கே இருந்தார். இந்த ஐப்பசிக்கு முந்தைய ஆடி மாதத்தில் ‘விருச்சிக’ மண்டலத்தின் நட்சத்திரமான ஜ்யேஷ்டா, எல்லா விண்மீன்களையும் விட ஒளி மிகுந்த பச்சை நிற அந்த ஆயில்யம், வெளிர் நீல நிறமாயிற்றாம். அது மிகவும் சூடாகி விட்டது; அதனால் தான் அவந்தியில் மழையில்லை. ஜ்யேஷ்டா நட்சத்திரத்தின் நிறம் மாறியதாகச் சொல்வதும், ஒரு புது நட்சத்திரம் ஆகாயத்தில் தோன்றுவதாகச் சொல்வதும் சதியின் முதல் தொடக்கம்.
திரயோதசிக்கும், பௌர்ணமிக்கும் அப்படி என்ன வித்யாசம்? திரயோதசி கிரமப்படி வளர்ந்து பௌர்ணமியாகும். கன்னிப் பெண்ணின் வளர்ச்சியையைக் கூட அமர் இயற்கைச் செயல்பாடுகளினூடே சொல்கிறார். ஓரிடத்தில் அவர் எழுதுகிறார்: “மனிதன் அந்த நட்சத்திரங்களின் குழந்தை. உயிர் ஒரு துளி தான். ஒளித் துளியிலிருந்து மனிதன் பிறந்தான். அவன் மூச்சொலியால் உலகின் நிசப்தம் கலைந்தது. அவனுடைய கண்ணின் ஒளியால் இருள் விலகியது.” துருவ நட்சத்திரம்-அதை உற்றுப்பார்க்கப் பார்க்க, அந்த நட்சத்திரத்திலிருந்து பனித் துளியைப் போன்ற மனிதனுடைய உயிர் கீழே இறங்கி வருவது போல் தோன்றுகிறது. மனிதனுடைய உயிர், நட்சத்திரத்தின் தண்ணீரா என்ன?
நாவலில் இப்படி ஒரு வர்ணனை வருகிறது: பங்குனி முடியப் போகிறது. பௌர்ணமி வந்து கொண்டிருந்தது. இன்னும் சில நாட்களில் சித்திரை ஆரம்பமாகும், கிழக்குத் தொடுவானத்தில் விசாகம் இரவில் தோன்ற ஆரம்பிக்கும். ஆகாயத்தின் வடக்குத் திசையில் சப்த ரிஷிகள் தியானத்தில் மூழ்கியிருந்தார்கள். அகஸ்தியர் தெற்கே இருந்தார். அகஸ்திய நட்சத்திரம் உதிக்கும் தேசத்தில் ஒரு நதி இருக்கிறது. அதன் பெயர் காவேரி. விந்திய மலை, சந்தனக் காடு இருக்கிறது. துருவன் மகன் காணாமல் போயிருப்பது போல் இப்போது சிலவற்றைக் காணவில்லை. விசாகம் கண் மறைவாக இருக்கிறது. பங்குனியில் ஆகாயத்தில் நட்சத்திரங்களை விட்டு விட்டுப் போனான் அவன்; ஒளியால் கூட மறைக்க முடியுமா? அகஸ்திய நட்சத்திரம் வைகாசி மாதம் ஆகாயத்தில் மறைந்திருப்பதைப் போல் துருவன் மகனும் மறைந்திருக்கலாம். சித்திரை மாத ஆகாயத்தில் உறக்கமற்ற கிரக நட்சத்திரங்களின் கூட்டம்; தலைக்கு மேல் வடக்கு ஆகாயத்தில் சப்த ரிஷி மண்டலம்; மேற்கே தொட்டுக் கொண்டு வடக்கிலிருந்து தெற்கே இறங்கி வந்தது நட்சத்திர ஒளிப்பாதை. இந்த ஒளிப்பாதையை ஒட்டி வடக்கே பிரம்ம இதயம் மின்னியது. சவிதா நட்சத்திரம் நகருவதால் தான் பகல், இரவு, காலை, மாலை, கடந்த காலம், எதிர்காலம் எல்லாம்.
ஹூணர்களுடன் போரிடச் சென்ற அவந்தியின் வீரனும், ரேவாவின் கணவனும், கந்தவதியின் தந்தையும், சிவ நாதரின் மகனுமான கார்திக்குமார், ஐந்து ஆண்டுகளாக ஊர் திரும்பவில்லை-இறந்தோர் பட்டியலில் அவர் பெயரில்லை; வெற்றியைக் கொண்டாடிய அரசு காணாமற் போன படை வீரனைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவர் யுத்தத்திற்குக் கிளம்பும் நாளின் வர்ணனையைக் கேளுங்கள்: ‘சுகந்தா’ என்று அவளை யார் அழைத்தார்கள்? எப்போது, என்று, எந்தக் காலத்தில், எந்த நட்சத்திரத்தின் ஒளியில்? அப்போது தலைக்கு மேல், ‘ஆகாய கங்கை’ உதயமாகியிருந்தது- அதில் சிரவண நட்சத்திரம்; ஆகாய கங்கையின் மறுபக்கம் ‘அபிஜித்’, ‘ஸ்வாதி’ மின்னிக்கொண்டிருந்தன. துருவ நட்சத்திரம், சப்தரிஷி, சதவிஷா எல்லாமிருந்தன. இதெல்லாம் நினைவில் இருக்கும் கந்தவதிக்கு தனது தந்தையின் முகத்திற்குப் பதிலாக தன் நண்பன் துருவன் மகனின் முகம் தெரிகிற விந்தை என்ன? இருவருமே இன்று எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கணவனின் நினைவில் அவன் மனைவி ரேவா பேசுவதும், தன் நண்பனின் நினைவில் கந்தவதி பேசுவதும் என்ன ஒரு இனிய மயக்கம்! கணவன் மனைவிக்குக் காட்ட வேண்டிய அருந்ததி இந்தியா முழுதுமிருந்த பண்டைய பண்பாடு போலும்.
பங்குனியில் அகஸ்திய முனி தெற்குக்கோடியில் எழுவார். அவரைக் காணமுடியாத காலத்திலும் அவர் ‘மஹாப்ரும்மாண்டத்தில்’ இருக்கிறார் அல்லவா? மனித வாழ்க்கையிலும் இயற்கையைப் போல் காலச் சக்கரம் இருக்கிறது. மனிதனுக்கு சிருஷ்டியின் ரகசியம் தெரியாது; சிருஷ்டி செய்பவனுக்கும் தெரியாது. ஞானத்தைத் தேடும் போது சிருஷ்டி உண்டாகிறது, சிருஷ்டிக்கும் போது ஞானம் மலருகிறது. சத்தியம் இருந்தால் அசத்தியமும் இருக்கும். அஞ்ஞானம் என்பது அசத்தியம்

இந்த நாவல் பேசும் நகைகள் எத்தனையெத்தனை! தாமிரபரணி நதி முத்து, மலயகோடி மலையின் முத்து, பாஷிக்ய நதியின் முத்து, சிங்கள தேசத்து குலா நதி முத்து, சப்தலஹரி மாலை, கஜமோதி மாலை, சீதா ஹாரம், சந்திர ஹாரம், வங்கி, தங்கத் திலகம், கொலுசு, தேவ சந்தம், தங்க வளையல்கள்!
மழை, மேகம், காற்று, சூரியன் முதலான நட்சத்திர நிலைகள் இவற்றை மானிடனின் வாழ்வோடு இணைத்துச் சொல்கிறார் ஆசிரியர். மழையின் அளவு இவ்வளவு செ. மீட்டர் என நாம் இப்போது தான் அளக்கக் கற்றுக்கொண்டதாக நினைக்கிறோம்; ஆசிரியர் எழுதுகிறார்: “இந்த அவந்தி தேசத்தில் 736 ‘சேர் கன அடி’ மழை பெய்தால் விளைச்சல் நன்றாக இருக்கும். கடந்த இரண்டு வருடங்களாக மொத்தம் 320 சேர் கன அடி மழை கூடப் பெய்யவில்லை.”
உஜ்ஜைனியின் ஏழு ஏரிகளும் அவந்தி நகரின் ஏழு வட முத்து மாலையாம்; அவை ஏழு திதிகள் போல; இரண்டு முறை பிரதட்சிணம் செய்தாலே சதுர்தசி. கிழக்கே ரத்னாகர ஏரி, மேற்கே ருத்ர ஏரி, அரண்மனையின் கிழக்கே புஷ்கர் ஏரி, க்ஷீர சாகரம் அந்தப்புரத்தை ஒட்டி இருந்தது; வடக்கே கோவர்த்தன ஏரி, இன்னும் வடக்கே புருஷோத்ரம் ஏரி, விஷ்ணு ஏரி. கண்முன்னே ஏரிகளைப் பார்ப்பது போல் பிரமிப்பாக இருக்கிறதல்லவா? மகாதேவ சங்கரரின் வெற்றி ரதம் எதைக் கொண்டு தயாரிக்கப்பட்டது? “இந்த உலகம், மந்தார மலை, திசைகள், நட்சத்திர மண்டலம், சப்த ரிஷி மண்டலம், வாசுகி, இமயமலை, விந்திய மலை, சிந்து, கங்கை, சரஸ்வதி, ஆகிய நதிகள், இரவு, பகல், சுக்ல, கிருஷ்ண பக்ஷ அம்சம் ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டது. சூரிய சந்திரர்கள் சிவனின் ரத சக்கரங்கள்; இந்திரன், வருணன், யமன், குபேரன் அந்த ரதத்தின் குதிரைகள், ரதத்தின் கொடிக்கம்பம் மேரு மலை, ஆகாயத்தில் விளங்கும் மின்னல் நிறைந்த மேகம் தான் கொடி! வாயு மேகம் இடியாய் இடிக்கிறது; அக்கினி மேகம் மின்னுகிறது; மேகங்களில் மூன்று வகை இருக்கிறது- முதல் வகையான நீர் கொண்ட மேகம் காளை, யானை உருவங்களில் ஆகாயத்தில் மிதந்து செல்லும். தரையில் இறங்கும் இந்த மேகத்திலிருந்துதான் உலகம் உயிர்ப்படைகிறது. இது இடியோசை எழுப்பாமல் மழை பொழியும். இரண்டாவது வகை மேகம் பிரும்ம மேகம், அது அவன் மூச்சிலிருந்து பிறப்பது, இடி, மின்னலுடன் பொழியும். இந்த மேகத்தின் அழைப்பில் பயிர் செழிக்கும். மூன்றாவது வகை மேகம் ‘இறக்கையுடைய மேகம்’ இந்த வகை மேகத்திற்குப் பல உருவங்கள் உண்டு. இது எல்லா நெருப்பையும் அணைத்துவிடும், ‘பராபஹ’ என்ற காற்றில் தங்கியிருக்கும். இமாலயத்திற்கு வடக்கே சுமேரு மலைக்குத் தெற்கே ஹேமகூட் என்றொரு மலை இருக்கிறது. அதில் பனி மழை பெய்தால், காற்று அந்த நீரை வாங்கி அங்கிருந்து இமாலயம் வரை மழையைப் பெய்விக்கும். இப்படியே வடகிழக்கு, மற்றும் தென்மேற்கு பருவ மழைகளைப் பற்றி , போகும் காற்று, திரும்புவது பற்றியெல்லாம் இந்த நாவல் பேசுகிறது. தென் மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலையின் பள்ளத்தாக்கிலிருந்து எழுந்து வரும் மேகம் உஜ்ஜைனிக்கு வரும். தெற்கு மேற்காகப் பயணப்படும் மேகம் ஆனி மாதம் வட கிழக்காகப் பயணப்படும். மழைக்காற்றுக்கும், வணிகர்களின் பயணத்திற்கும் ஒரு அழகிய தொடர்பை இதில் சிந்திக்கிறார் ஆசிரியர். மனிதன் ஈர்ப்பதால் தான் மேகம் வருகிறது. அவனை நனைத்து மென்மையாக்குவதற்கு வருகிறது.
சிருஷ்டி ஆரம்பமாகாத போது, ஆழ்ந்த இருட்டு உலகை மூடியிருந்தது. பின்னர் அக்னி தோன்றியது; அது வெளிச்சமாக மாறியது; உலகம் அக்னி உருண்டையாகத் தோன்றியது. அக்னி எப்போதுமே கர்ப்பமாக இருக்கும்; அதை ஜலகர்ப்பம் என்போம். சூரியனின் ஆயிரம் கிரணங்களுள் பனி பொழியும் கிரணங்கள் முன்னூறு. இவை மஞ்சள் நிறத்தவை. அவனுடைய வெள்ளை நிறமுடைய முன்னூறு கிரணங்களால் உலகம் வெப்பம் பெறுகிறது. மீதமிருக்கும் நானூறு பல்வேறு வர்ணக் கிரணங்களைக் கொண்டு சூரியன் உலகிற்குத் தண்ணீர் வழங்குகிறான். அவனது குதிரைகள் ஏழு- காயத்ரி, த்ரிஷ்டுபா, அனுஷ்டுபா, ஜகதி, பங்கித், ப்ரஹதி, உஷ்ணிகா. வறட்சி மரணம் என்றால் மழை ஜனனம் அல்லவா? இந்தப் பிரும்மாண்டத்தில் மனிதன் சிறு தூசு. இயற்கையின் பலவிஷயங்கள் அவன் அறிவிற்கு அப்பாற்பட்டவை. அவனுக்கு எல்லாம் தெரிவதில்லை, ஆனால் பலன்களை மட்டும் அவன் அனுபவிக்கிறான். சரியாகச் சொன்னால், மனிதன் மனிதனைப் பற்றியே சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை.
இந்த நாவலில் கதையிருக்கிறது, கனவு இருக்கிறது, உளவியல் உண்மைகள் இருக்கின்றன, சாதிப் பாகுபாடுகளை, பௌத்தர்களாக மதம் மாறக்கூடும் தாழ்ந்த சமுகத்தைப் பற்றிய உள் விசாரமிருக்கிறது, அரசியல், செல்வம் மோதும் களமிருக்கிறது, பெண்களைக் கவரும் ஆசையும், அவர்களை இழித்துப் பேசும் குணமுமிருக்கிறது, தாழ்வு மனப்பான்மையில் வாடும் அரசர் இருக்கிறார், காமமும், அதிகார மமதையும் கொண்ட புரோகிதர் இருக்கிறார், பதவியை துஷ்ப்ரயோகம் செய்யும் சேனாதிபதி, அவரின் கையாள் எனப் பலர் இருக்கிறார்கள்.
ஆனால் கயமையை மட்டுமே பேசவில்லை அமர். அழகு, அன்பு, கருணை, வீரம், விவேகம், காதல், ஏக்கம், காமம் அனைத்தும் வருகின்றன. கதை மாந்தர்கள் ஆசிரியரின் குரலாக மட்டுமே ஒலிக்கவில்லை. வானமும், பூமியும், நிலவும், நீரும், நட்சத்திரங்களும், காகமும், மயிலும், நதிகளும் கூடவே வருகின்றன.
தி ஜானகிராமனின் ‘நளபாகம்’ நாவலில், ரங்கமணி ‘எனக்குத்தான்’ என மாமியாரும், மருமகளும் நினைப்பது ஒரு அழுத்தமான பதிவு. கந்தவதி தன் அன்னை ரேவாவைப் பற்றி அப்படி ஒரு அசூயை கொள்வதையும், அதிலிருந்து அவள் விடுபடுவதையும் அமர் உளவியல் உளியால் செதுக்கியிருக்கிறார். தத்துவமும், ஞானமும் பின்னிப் பிணைந்து வருகின்றன. உவமைகள் உறுத்தாமலிருக்கின்றன. பழங்குடி தெய்வம் தான் மகாகாலராக பெருங் கோயிலில் குடி வந்துள்ளது என்று தாமிரதுவஜன் மூலம் சொல்கிறார் அமர். இளைஞர்களின் தெளிவில் மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். சூர்ய நமஸ்காரத் துதியில் தொடங்கி காளிதாசரின் மேக சந்தேசத்தில் முடிக்கிறார். அவர் எழுதுகிறார்: “எல்லா உண்மைகளையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது. சில உண்மைகள் இருட்டில் தானிருக்கும். ஞானம் பகலைப் போன்றது.அஞ்ஞானம் ஆழ்ந்த இருளைப் போன்றது.அது எப்போதுமே ஞானத்தை அதிகாரம் செய்ய விரும்புகிறது.”
One Reply to “துருவன் மகன்”