டிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது

தமிழில்: உஷா வை

இது 1972ன் டிஸம்பர் மாதத்தில் ஓர் அந்திப்பொழுது. சௌரிங்கீயும் லெனின் சாரனியும் சந்திக்கும் குறுக்குச் சந்திப்பில் இரண்டு வழி தவறிய காளைகள் ஒன்றையொன்று முட்டிக் கொண்டிருந்தன. சாரி சாரியாய் வாகனங்கள் – பஸ்கள், கார்கள், டாக்ஸிகள், ட்ராம்கள்- முன்னே போக முடியாமல் நின்றுவிட்டிருந்தன. வெள்ளைச் சீருடையும், கறுப்பு பெல்டும் அணிந்து இடுப்பில் துப்பாக்கியோடிருந்த இரண்டு ட்ராஃபிக் போலீஸ்காரர்கள் தம் மீசைகளை முறுக்கிக்கொண்டு இதை எல்லாம் வேடிக்கை போலப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இது 1972ன் டிஸம்பர் மாதத்தில் ஓர் அந்திப்பொழுது. மெட்ரோ தியேட்டரில் கல்கட்டா 71 என்ற படம் ஓடிக் கொண்டிருக்கிறது – போஸ்டரில், முதியவரான அந்த எண்பது வயது மனிதர், கையில் தடியுடன், முகத்தின் சருமம் சுருங்கி, முன்நோக்கிய வெற்றுப் பார்வையுடன். லெனின் சிலையைச் சுற்றிய கிராதியின் அருகே, வெற்று மார்போடு பச்சை லுங்கியும் சிவப்பு முண்டாசும் அணிந்த ஒரு மனிதன் உட்கார்ந்து சிறுநீர் கழித்தான். ஆரஞ்சு, ஆப்பிள், வாழைப்பழ வியாபாரிகள் விற்றுக் கொண்டிருந்தார்கள்.

இது 1972ன் டிஸம்பர் மாதத்தில் ஓர் அந்திப்பொழுது. ஸால்ட்லேக் ஸிடியில் நடந்து கொண்டிருந்த காங்கிரஸ் அமர்வில், மிகத் தீவிரமாய் கரீபி ஹடாவோ (வறுமையை அகற்று) கைப்பிடிக்கப்பட்டு கொண்டிருந்தது. மைதானத்திலிருந்த கதம்பமரத்தின் மேல் வெய்யில் சலிப்புடன் சாய்ந்திருக்க, மேற்கு வங்காளத்தின் செய்தியாளர்கள், தில்லி கார்ப்பரேஷனின் துப்புரவுப் பணியாளர்கள், குஜராத்தின் அரசாங்க ஊழியர்கள், பிஹார் மற்றும் ஹரியானாவின் ஆசிரியர்கள் இவர்கள் அனைவரும் வேலை நிறுத்தம் செய்துகொண்டிருந்தனர். அவர்களது கோரிக்கைகளை அலட்சியப்படுத்த அரசாங்கத்தின் கையில் தி டிஃபென்ஸ் ஆஃப் இந்தியா சட்டம் இருந்தது.

இது 1972ன் டிஸம்பர் மாதத்தில் ஓர் அந்திப்பொழுது. சௌரிங்கீக்கும் லெனின் சாரனிக்குமான் குறுக்குச் சந்திப்பில் அந்த இரண்டு காளைகளும் ஆக்ரோஷமாக முட்டிக் கொண்டிருந்தன. எல்லாத் திசைகளிலும் சாரிசாரியாய் கார்கள் நின்றிருந்தன. ட்ராஃபிக் போலீசார் என்ன செய்வதெனத் தெரியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்தனர். அருகாமையில் எல்ஃபின்னிலும், சோட்டா ப்ரிஸ்டலிலும், நியூ கேதேயிலும் அறிவிஜீவீ இளைஞர்கள் மதுவுடன் கிருஸ்துமஸைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் கிரிக்கெட், இலக்கியம், கலாச்சாரம் பற்றி விவாதித்தனர். புரட்சியைப் பற்றிய திரைப்படமான ‘கல்கட்டா 71’க்கான டிக்கெட்டுகள் வேகமாய் விற்றுக் கொண்டிருந்தன. வியத்நாமின் மக்கட்தொகை மிகுந்த நகரங்களின் மேல், ஆஸ்பத்திரிகளின் மேலும் குழந்தைகளின் பள்ளிகளின் மேலும், குண்டு மழை பொழிந்துகொண்டிருந்தது. பல நூற்றுக்கணக்கான குழந்தைகளும், உடல் நலமற்றவர்களும் அடிபட்டும் இறந்துகொண்டும் இருந்தனர். 

இது 1972ன் டிஸம்பர் மாதத்தில் ஓர் அந்திப்பொழுது. பிஹாரிலும், உத்தரப் பிரதேசத்திலும், உழைப்பாளிகளும், தொழிலாளிகளும், விவசாயிகளும் குளிரில் விறைத்துப் போய்க்கொண்டிருந்தனர். மேற்கு வங்காளத்தின் பாபுக்களும், பீபீக்களும் மிதமான பருவகாலத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர். பல நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்கள் நடைபாதைகளிலும், சாலைகளிலும், ரயில் நிலையங்களிலும் படுத்துக் கிடந்தனர். அவர்களில் பலரிடமும் தம்மைக் குளிரிலிருந்து காப்பாற்றிக்கொள்ள ஒரு கிழிந்த சாக்குத் துணிகூட இல்லை.

இது 1972ன் டிஸம்பர் மாதத்தில் ஓர் அந்திப்பொழுது. பண்டிகைப் பித்துப்பிடித்த ஆண்களும் பெண்களும் பூங்காக்களிலும், மைதானத்திலும், ஆற்றுப்பக்கத்திலும் குழுமினர். குழந்தைகளின் கைகளில் பலூன்கள், பெரியவர்களின் உதட்டில் கிரிக்கெட். ஆனால் சௌரிங்கீக்கும் லெனின் சாரனிக்குமான குறுக்குச் சந்திப்பில் அந்த இரண்டு காளைகளும் ஒன்றை ஒன்று மூர்க்கமாய் முட்டின. எஸ்ப்லனேட் முழுவதும் ட்ராஃபிக் ஜாம் ஆனது. லத்திக்கம்புகளால் அடித்தும் கூட அவற்றை ட்ராஃபிக் போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இது 1972ன் டிஸம்பர் மாதத்தில் ஓர் அந்திப்பொழுது. சௌரிங்கீயின் பொதுவழியில் அவ்விரண்டு திடகாத்திரமான காளைகளும் போரிட்டுக் கொண்டிருந்தன. எல்லாத் திசைகளிலும் கார்கள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தன. வேடிக்கை பார்க்கும் பித்துப் பிடித்த மக்கள் கூட்டம். ஒரு சிறு இடைவெளியில் அவ்விரண்டு கைவிடப்பட்ட காளைகளும் முட்டி மோதி சண்டையிட்டுக் கொண்டிருந்தன.

இது 1972ன் டிஸம்பர் மாதத்தில் ஓர் அந்திப்பொழுது. கிருஸ்துமஸ் பித்துப் பிடித்த பொதுமக்கள் அந்த வட்டாரம் முழுதும் கூடினார்கள். மதியம் விரைவில் சாயந்திரம் ஆனது. அவ்விடத்தில் கூட்டமாய் போலீசார் வந்து சேர்ந்தனர். அவ்விரண்டு மிருகங்களையும் அகற்ற அவர்கள் என்னென்னவோ வித்தைகளை முயன்று பார்த்தனர். ஆனால் அவ்விரண்டு மூர்க்கக் காளைகளுக்கும் அறிவோ விவேகமோ சுத்தமாய் இல்லை. கல்கத்தாவின் இந்த நெரிசலான பொது வழியில் இன்று ஒரு முடிவுக்கு வந்துவிடலாம் என்ற  தீர்மானத்துடன் அவை வந்திருந்தது போல் இருந்தது

இது 1972ன் டிஸம்பர் மாதத்தில் ஓர் அந்திப்பொழுது. போரிடும் காளைகள் பற்றிய செய்தியைக் காற்று சுமந்து போனது. அக் காட்சியைப் பார்க்க விரும்பிய மக்கள் ஓடோடி வந்தனர். லெனின் சாரனி நெடுகலும் ட்ராஃபிக் ஜாம் ஆனது. ரபீந்திரநாத், சித்தரஞ்சன், ஜவஹர்லால் இவர்களின் பெயர்களைத் தாங்கிய சாலைகளில் ட்ராஃபிக் ஜாம்.

இது 1972ன் டிஸம்பர் மாதத்தில் ஓர் அந்திப்பொழுது. ஸால்ட் லேக் ஸிடியில் நடந்துகொண்டிருந்த  காங்கிரஸ் கட்சி அமர்வில் கரீபீ ஹடாவோ செயல்முறைத் திட்டம் தயாராகிக்கொண்டிருந்தது. சுற்று வட்டாரங்களிலிருந்து அங்கு குடியிருந்த  நாடோடிகளும், அகதிகளும் துரத்தப்பட்டனர். மைதானத்தின் தென்கிழக்கு மூலையிலிருந்து சலிப்புடன் சூரியஒளி வீசியது. மெட்ரோ சினிமாவின் முன்பு இரண்டு காளைகள் ட்ராஃபிக் ஜாமை உண்டாக்கியிருந்தன. இப்போது  நான்கைந்து போலீஸ்காரர்கள் சேர்ந்து ஒரு மூங்கில் கழியைக் கொண்டு வந்தார்கள். அந்த காளைகளை அக்கழியால் ஓங்கி அடித்தார்கள். மக்கள் இதை தூரத்திலிருந்து பார்த்தனர். ஏற்கனவே மதம் பிடித்திருந்த காளைகள் அடிவாங்கியதும் இன்னும் பித்தேறிச் சாலையில் ஓட ஆரம்பித்தன. மக்கள் பயந்து பின்வாங்கினர். பயந்து ஓடுகையில் கால்தடுக்கி ஒருவர்மேல் ஒருவர் விழுந்தனர்.

அச்சாலை முழுவதும் வாகனங்களின் நெரிசல் – பஸ்கள் – கார்கள் – டாக்ஸிகள் – கார்கள் – மாடி பஸ்கள். அவ்விரண்டு காளைகளுக்கும் ஓடக்கூட இடமில்லை. நடைபாதையில் மக்கள். சாலையில் மக்கள். ஒவ்வொருவரும் தப்பிக்கும் வழியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தள்ளுமுள்ளில் ஒரு நாகரீகமான பெண்மணி அலறினாள். ரத்தம் சூடேறிய இரு இளைஞர்கள் கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். பெல்பாட்டம் அணிந்த ஒரு பெண்ணின் உடலைத் தடவிவிட்டு நடந்து போயினர். எதையுமே உணராதவள் போல அவள், உடலைத் தடவ அலையும் கூட்டத்தின் கைகளிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளத் தீவிரமாக முயன்றாள். எங்கும் மக்கள் அங்கிருந்து ஓட முயன்று கொண்டிருந்தனர். மூங்கில் கழிகளால் குத்தப்பட்டு, இவ்விரண்டு காளைகளும் ஒரு சிறிய இடத்தில் சுற்றிச் சுற்றி ஒடிக்கொண்டிருந்தன.

எங்கும் குழப்பமான கூச்சல். அலறல். நகரத்தின் மேல் அந்தி கவிந்தது. நியான் விளக்குகள் ஒரே நேரத்தில் எரிய ஆரம்பித்தன. வழக்கம் போல ஒரு தரகன், தலையைச் சுற்றிக் கட்டிய சிவப்பு முண்டாசுடன் அருங்காட்சியகத்தின் அடியில் நின்றான். வாரீங்களா சார், எங்கிட்ட உங்களுக்காக நிஜமான பரிசு இருக்கு! கணீர் என சத்தமிட்டுக்கொண்டு தீயணைக்கும் வண்டி வந்தது. அது நகர இடம் இல்லை. எங்கும் நெரிசல். அவ்விரண்டு காளைகளும் மிரண்டிருந்தன. அங்கும் இங்கும் அர்த்தமின்றி ஓடின. மக்கள் இன்னும் சிலரின் காலடியில் மிதிபட்டனர். உரத்த அலறல்கள். இப்போது காளைகள் மெட்ரோ சினிமாவின் நடைபாதையின் மேல் ஏறின. அங்கிருந்தவர்கள் உயிருக்கு பயந்து எங்கு முடியுமோ அங்கு ஓடினார்கள். கையில் மூங்கில் கழியுடன் போலிசார் காளைகளைத் துரத்தினார்கள். மிரண்டு போய், மெட்ரோ சினிமாவின் கதவு திறந்திருப்பதைக் கண்டு அவை உள்ளே ஓடின, அரங்கில் கல்கட்டா 71 ஓடிக் கொண்டிருந்தது.

முதலில் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. திடீரென சிலருக்கு விஷயம் புரிந்து கத்த ஆரம்பித்தனர். அரங்கின் உள்ளே இருட்டு. திரையில் கனத்த மழைக் காட்சி ஓடிக் கொண்டிருந்தது, ஒரு குடிசை வீடு. மழை நூறு ஓட்டைகளிலிருந்து கொட்டிக் கொண்டிருந்தது. இடிந்த குடிசையின் முன்பு ஒரு ஏழைத் தந்தை தன் மனைவி, மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு இப்போது எங்கே போவது என்று திகைத்து நிற்கிறார். அதே தருணத்தில் குழப்பம் ஆரம்பித்தது. அரங்கில் இருந்த அத்தனை பேரும் எழுந்து உரத்த குரலில் கத்த ஆரம்பித்தனர்: அரங்கினுள்ளே காளைகள்! ஒரு நாகரீகமான பெண்மணி பாசாங்குக் கூச்சத்துடன் கத்தி மயக்கமானாள். இருட்டு. கத்தல். அலறல்கள். காளைகள் ஒன்றை ஒன்று முட்டின. படம் பார்க்க வந்தவர்கள் ஆசனங்களை விட்டு நகர முடியவில்லை. படம் நிறுத்தப்பட்டது. வெளிச்சம் வந்தது. மேனேஜர் எங்கிருந்தோ ஓடி வந்தார். காவலாளிகள் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு ஓடி வந்தனர்.

காளைகள்! மேனேஜர் தம் கண் முன்னால் இரண்டு உயிருள்ள காளைகளைக் கண்டார் – இங்கே, அவருடைய அரங்கினுள்ளே! முன்னாலிருந்த எழுபத்தி ஐந்து பைசா சீட்டுகளிலிருந்து யாரோ குரல் கொடுத்தார்கள் – தாதா, கவலைப் படாதீர்கள், காளைகளுக்கு சினிமா பார்க்க வேண்டும் போலிருக்கிறது! யாரோ அலறினார்கள்: கதவுகளைத் திறந்து விடுங்கள்! கதவுகளைத் திறந்து விடுங்கள் – அவை வெளியே ஓடிவிடும்! உடனே சிலர் ஓடிப் போய் கதவுகளைத் திறந்து விட்டனர். இரண்டு காளைகளுக்கும் போக வேறு இடம் இல்லை. இங்கும் அங்கும் பார்த்து விட்டு அவை செருமின. பிறகு திரும்பின. இதற்குள், இரண்டு காளைகளும் மெட்ரோ சினிமாவில் சட்டம் ஒழுங்கை மீறி நடந்ததாய் வெளியே செய்தி பரவியது.

லால்பஜாரில் இருக்கும் போலீஸ் தலைமையகம், தலைமைச் செயலகமான ரைடெர்ஸ் கட்டிடம் மற்றும்  மாண்புமிகு முதல் மந்திரியே கரீபீ ஹடாவோ வை வரைவுபடுத்திக் கொண்டிருந்த ஸால்ட்லேக் ஸிடி வரைக்கும் செய்தி சென்றது. மாண்புமிகு மந்திரி அமைதியிழந்தார். ஒரு ஸிகாரைப் பற்ற வைத்துக் கொண்டு, மேலும் கீழுமாய் நடந்தார். தன் பக்கப்பட்டிகளை சொறிந்தார். உள்துறை அமைச்சருக்கு ஃபோன் செய்தார். லால்பஜாருக்கு ஃபோன் செய்தார். பின் மக்களுக்கு முன் தோன்றுவதற்காக விரைவாய் உடைகளை மாற்றிக் கொண்டார். பவுடர் பஃப் உபயோகித்து கழுத்தை மெதுவாய் தட்டிக் கொண்டார். 

நிலைமை எதுவாயினும் அதை அவர் தைரியமாய் எதிர்கொள்ளவேண்டும். போலீஸ் ஜீப் வந்து சேர்ந்தது. பாதுகாவலர்கள் வந்தனர். அவர் ஜீப்பில் ஏறினார். பாதுகாவலர்கள் தம் மோட்டார் சைக்கிள்களில் தாவி ஏறினர். ஜீப் நகர ஆரம்பித்தது. முதல்மந்திரி தன் பக்கப்பட்டிகளை சொறிய ஆரம்பித்தார். சில நிமிடங்களீலேயே ஜீப் மெட்ரோ சினிமா வந்து சேர்ந்தது. சுற்றிலும் பெரிய மக்கள் கூட்டம் இருந்ததை அவர் பார்த்தார். லால்பஜாரிலிருந்து போலீஸ் வண்டி வந்திருந்தது. உள்துறை மந்திரியின் வாகனம் வந்திருந்தது. எங்கு பார்த்தாலும் நூற்றுக்கணக்கில் போலீசார் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர். மாண்புமிகு முதல்மந்திரி ஜீப்பிலிருந்து வெளியே தாவிக் குதித்தார். அவர் இருபத்தி ஐந்து வயது இளைஞனைப் போலத் தோற்றமளித்தார். எங்கும் மக்கள் கூட்டம். கத்தல். அலறல். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் தலையை நிமிர்த்தி நின்றார். களத்தை உற்று நோக்கினார். இரண்டு சாம்பல் வண்ணக் காளைகள் மெட்ரோ சினிமாவின் முன்னால் சுற்றி ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அதை இரண்டு வினாடிகள் கவனித்தார். பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அவருக்கு எல்லாம் புரிந்து போயிற்று.

விரல்களைச் சொடுக்கி உள்துறை அமைச்சரை அழைத்தார். ஹரிகேஷ்டோ சாட்டர்ஜீ, உள்துறை அமைச்சர், அவரிடம் வேகமாய் வந்தார். அருகில் ஒரு போலீஸ் வயர்லெஸ் வேன் நிறுத்தப்பட்டிருந்தது. மாண்புமிகு முதலமைச்சர் அதன் மேல் தாவி ஏறினார். ஹரிகேஷ்டோவும் அப்படியே செய்தார். அமைச்சர்கள் இங்கும் அங்கும் தாவுவதைக் கண்ட மக்கள் ஆச்சரியமடைந்தனர். காளைகளை மறந்து, இப்போது அவர்கள் அமைச்சர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். வேனின் மேல் நிமிர்ந்து நின்ற முதலமைச்சர் மைக்கை எடுக்க கை நீட்டினார். ஆனால் அங்கு மைக் இல்லை. மைக்! மைக்! என்ற முணுமுணுப்பு எல்லாத் திசைகளிலும் பரவியது. லால்பஜாரில் ஒரு மைக் இருந்தது. அதைக் கொண்டுவர வேண்டியிருந்தது. முதலமைச்சர் கோபமடைந்தார். இங்கே பக்கத்திலே எங்கிருந்தாவது ஒன்று கொண்டு வர முடியாதா! உடனே யாரோ ஒரு லாட்டரிச் சீட்டு விற்பவரிடமிருந்த கை மைக்கை பிடுங்கிக் கொண்டு வந்தனர். லாட்டரிச் சீட்டு விற்பவர் தன் கை முறுக்கப்பட்டபோது வலியால் துடித்தார் – என்ன சொல்வது என்று அவருக்குத் தோன்றவில்லை. பக்கத்தில் யாரோ அவருக்கு ஆறுதல் சொன்னார்கள்: முட்டாளே, இப்போதெல்லாம் பிடுங்கிக் கொள்வது சாதாரண விஷயம், இது உனக்குத் தெரியாதா! முதலமைச்சர் தாவி வந்து மைக்கை வாங்கிக் கொண்டார். தன் முழு உயரத்துக்கு நிமிர்ந்து நின்றார். லேசாய் இருமினார்.

பிறகு சொன்னார்: நண்பர்களே, பயப்படாதீர்கள்! அவர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியும். அவை குறிப்பாக எங்கள் கரீபீ ஹடாவோ செயல்திட்டத்தை குழப்பம் ஏற்படுத்தி சிதைப்பதற்காக வந்திருக்கின்றன. இது ஒரு தனித்த சம்பவம் அல்ல. யாரும் பொறுமை இழக்காதீர்கள். வன்முறையில் ஈடுபடாதீர்கள். நாங்கள் தற்போதே நடவடிக்கை எடுக்கப் போகிறோம். இப்படிச் சொல்லிக்கொண்டே அவர் உள்துறை அமைச்சரைப் பார்த்து புன்னகைத்தார். இப்படிப்பட்ட உள்குறிப்புகள் நிறைந்த பேச்சை உள்துறை அமைச்சர் ரசிக்கவில்லை. அவர் முதலமைச்சரின் கையிலிருந்து மைக்கை வாங்கினார். தன் குரலை வேண்டுமளவு ஆவேசமாய் உயர்த்தி, உள்துறை அமைச்சர் பேசத் தொடங்கினார்: நான் உள்துறை அமைச்சர் ஹரிகேஷ்டோ சாட்டர்ஜீ பேசுகிறேன். கலவரம் வேண்டாம். அந்த இரண்டு காளைகளும் நிஜத்தில் காளைகள் இல்லை – கம்யூனிஸ்ட் தீவிரவாதிகள் காளைகள் உருவில் நம்மிடையே வந்து குழப்பம் ஏற்படுத்த வந்திருக்கிறார்கள். மக்களுக்காக மனம் கசியும் இந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க வந்துள்ளார்கள்.

ஆனால் தீவிரவாதிகள் இதுபோன்ற சதித் திட்டங்களை முன்பும் பலமுறை செய்திருக்கிறார்கள், அளவற்ற கொலை – படுகாயம் – திகில் இவற்றைச் செய்திருக்கிறார்கள் – ஆனால் அவர்களால் ஒருபோதும் வெற்றியடைய முடியவில்லை, இன்றும் அவர்களால் முடியாது. தன் பேச்சை முடித்து, அவர் முதலமைச்சரிடம் கண்ணால் பேசினார். உதட்டின் ஓரத்திலிருந்து கொஞ்சம் புன்னகைத்தார். முதலமைச்சர் ஒரு போலீஸ் அதிகாரியை சமிக்ஞையால் அழைத்தார். என்ன செய்யவேண்டும் என அவருக்கு உத்தரவு கொடுத்தார். போலீஸ் அதிகாரி உடனே ஓடினார். மக்கள் அமைச்சர்களின் உரைகளைப் புகழ்ந்து பேச ஆரம்பித்தனர். மைதானத்தின் மேல் அடர்ந்த இருள் கவிந்தது, நியூ சினிமா தியேட்டரின் முன் இரண்டு போலீஸ்காரர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்: கர்மம் – ஷீலா படங்கள யாரு பார்ப்பாங்க – அவ மாரெல்லாம் தொங்கி போச்சு… பார்க் தெருவின் பார்களின் குறைந்த உடை அணிந்த பெண்கள் நடனமாடினார்கள். பராபஜாரின் மார்வாரிகளும், பணம் படைத்த அறிவுஜீவிகளும் மதுபானங்களுடன் அதை ரசித்தனர். ஒரு பீடாக்கடையில் ட்ரான்ஸிஸ்டர் பாடியது: ஹரே க்ரிஷ்ணா, ஹரே ராமா. ஹரே க்ரிஷ்ணா, ஹரே ராமா.

முதலமைச்சரின் உத்தரவு காவல்துறைக்கு உடனே தெரிவிக்கப்பட்டது. அத்தனை ஓட்டத்துக்குப் பின் களைத்துப்போன இரண்டு காளைகளும் பெருமூச்சு விட்டுக்கொண்டு அசையாமல் நின்றிருந்தன. மக்கள் தூரத்தில் நின்றனர். வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்கள் நிலைகொள்ளாது தவித்தனர். சௌரிங்கீ முழுவதும் நியான் வெளிச்சத்தில் மிதந்து கொண்டிருந்தது. இரண்டு போலீஸ்காரர்கள் தம் இடுப்பிலிருந்த துப்பாக்கிகளை வெளியே எடுத்து காளைகளின் அருகே மெதுவாகச் சென்றனர். பாதுகாப்பான தூரத்தில் தெருவில் முட்டியிட்டுக் குனிந்து உட்கார்ந்தனர். பொதுமக்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு காத்திருந்தனர். கூட்டத்தில் யாரோ கத்தினார்கள்: ஏய், அது மஹாதேவக் கடவுளின் காளை – அவற்றைக் கொல்வதில் என்ன பலன்? இன்னொருவன் பதில் சொன்னான்: ஆனால் அவை கம்யூனிஸ்ட் காளைகள் – அவற்றைக் கொல்வது பாவமில்லை! 

இரண்டு போலீஸ்காரர்களும் துப்பாக்கியை குறி வைத்தனர்.

இரண்டு காளைகளும் சோர்ந்து போய்விட்டிருந்தன, அவை அசையாமல் நின்றன. ஆளுக்கொரு பைனாகுலரை வரவழைத்திருந்த முதலமைச்சரும், உள்துறை அமைச்சரும் நடப்புகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். எந்தச் சூழலிலும் காளைகளைத் தப்ப விடக்கூடாது என்று காவல்துறைக்குக் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. போலீஸ்காரர்கள் ஆளுக்கு இரண்டு முறை சுட்டனர், மொத்தத்தில் நான்கு. துப்பாக்கி வெடிச் சத்தம் கேட்டு கூடியிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலமுறை ஓடிப்போக முயன்று தோற்றுப் போய், அவ்விரண்டு பிரும்மாண்ட தேகங்களும்  நிலத்தில் சரிந்தன- அவ்விடம் முழுவதும் ரத்தத்தால் கழுவப்பட்டது. மரணத்துக்கு முன், அதன் பிடியில் அந்த இரண்டு காளைகளும் துடிக்கும் அத்தனை நேரமும், மாண்புமிகு அமைச்சர்கள் பைனாகுலர்களிலிருந்து கண்களை அகற்றவில்லை. 

கம்யூனிஸ்டுகளை நம்பவே கூடாது, சாவின் பிடியிலிருந்துகூட உயிர் பெற்றெழுந்து வந்துவிடுவார்கள். சற்று நேரம் நடுங்கியபின், ஒவ்வொரு காளையின் கால்களும், மொத்தமாய் எட்டு கால்கள் அசைவிழந்தன. இரு அமைச்சர்களும் நிம்மதிப் பெருமூச்சுடன் பைனாகுலர்களை கீழிறக்கினர். வெகு நேரமாய் ஆச்சரியத்தில் உறைந்து போயிருந்த மக்களிடையே சலசலப்பு தொடங்கியது. எப்படிப்பட்ட அழிவு அவர்களுக்கு வரவிருந்தது! நல்ல வேளை மந்திரிகள் வந்து அவர்களுக்கு நேரவிருந்த ஆபத்திலிருந்து காப்பாற்றினார்கள்! காளைகளின் வேடத்தில் கம்யூனிஸ்டுகள் அவர்களிடையே வந்திருப்பது பற்றி அவர்களால் கனவில் கூட யோசிக்க முடிந்திருக்காது. அசையாமல் நின்றிருந்த மக்கள் இப்போது நகரத் தொடங்கினார்கள். கார்கள் ஹார்ன்களை அலறவிட்டன. உள்துறை அமைச்சரும், முதலமைச்சரும், ஒருவர் தோளில் ஒருவர் கைபோட்டபடி வாகனத்தின் மேலிருந்து கீழே குதித்தனர். அத்தனை குறுகிய நேரத்தில் மூன்று முறை அவர்கள் தாவிக் குதித்ததைக் கண்டிருந்த மக்கள் இத்தகைய முதலமைச்சரை அடைந்ததற்கு தாம் எத்தனை பாக்கியசாலிகள் என உணர்ந்தனர்.

இது 1972ன் டிஸம்பர் மாதத்தில் ஓர் அந்திப்பொழுது. மெட்ரோ சினிமாவில் கல்கட்டா 71 என்ற திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. திரைப்படத்தின் போஸ்டரில், அதே எண்பது வயதானவர், கையில் தடியுடன், முகத்தில் சுருக்கங்கள் விழுந்த சருமத்துடன், எதிரிலுள்ள மைதானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இது 1972ன் டிஸம்பர் மாதத்தில் ஓர் அந்திப்பொழுது. கரீபி ஹடாவோ செயல்திட்டத்தின் வரைவு காங்கிரஸ் கட்சியின் அமர்வில் தயாராகிக் கொண்டிருக்கிறது. மந்தமான சூரிய ஒளி மைதானத்தின் கதம்ப மரத்தின் மேல் தொங்கியது. மேற்கு வங்காளத்தின் செய்தியாளர்கள், தில்லி கார்ப்பரேஷனின் துப்புரவுப் பணியாளர்கள், குஜராத்தின் அரசாங்க ஊழியர்கள், பிஹார் மற்றும் ஹரியானாவின் ஆசிரியர்கள் இவர்கள் அனைவரும் வேலை நிறுத்தம் செய்துகொண்டிருந்தனர். அவர்களது அடிப்படை உரிமைகள் , டிஃபென்ஸ் ஆஃப் இந்தியா சட்டத்தின் கீழ் சட்டவிரோதச் செயல்களாய் பார்க்கப்பட்டன,

இது 1972ன் டிஸம்பர் மாதத்தில் ஓர் அந்திப்பொழுது. எல்ஃபினிலும், சோட்டா ப்ரிஸ்டலிலும், நியூ கேதேயிலும் அறிவுஜீவி இளைஞர்கள் கிருஸ்துமஸை விஸ்கியின் உதவியுடன் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் கிரிக்கெட், இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். புரட்சியைப் பற்றிய திரைப்படமான கல்கத்தா71 க்கான டிக்கெட்டுகள் சுறுசுறுப்பாய் விற்றன. வியத்நாமின் மக்கட்தொகை மிகுந்த நகரங்களின் மேல், ஆஸ்பத்திரிகளின் மேலும் குழந்தைகளின் பள்ளிகளின் மேலும், குண்டு மழை பொழிந்துகொண்டிருந்தது. பல நூற்றுக்கணக்கான குழந்தைகளும், உடல் நலமற்றவர்களும் அடிபட்டும் இறந்துகொண்டும் இருந்தனர். 

இது 1972ன் டிஸம்பர் மாதத்தில் ஓர் அந்திப்பொழுது. பிஹாரிலும், உத்தரப் பிரதேசத்திலும், உழைப்பாளிகளும், தொழிலாளிகளும், விவசாயிகளும் குளிரில் விறைத்துப் போய்க்கொண்டிருந்தனர். மேற்கு வங்காளத்தின் பாபுக்களும், பீபீக்களும் மிதமான பருவகாலத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர். பல நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்கள் நடைபாதைகளிலும், சாலைகளிலும், ரயில் நிலையங்களிலும் படுத்துக் கிடந்தனர்.

இது 1972ன் டிஸம்பர் மாதத்தில் ஓர் அந்திப்பொழுது. பிஹார், ஹரியானா, குஜராத் மற்றும் மேற்கு வங்காளமெங்கும் வேலை நிறுத்தங்கள் – சட்டம் வேலை நிறுத்தங்களை சட்டவிரோதமாக்குகிறது – கிரிக்கெட், இலக்கியம். சினிமா, ரபீந்திர சதனில் நாட்டிய நாடகங்கள்- ஆனால் சற்றுமுன் கொல்லப்பட்ட இரண்டு காளைகள் மெட்ரோ சினிமாவுக்குமுன் விழுந்து கிடக்கின்றன – அவற்றின் உறைந்த ரத்தம் லெனின் சிலைக்கு சில அடிகளுக்கு அப்பால் – ரத்தத்தின் கறை.

முற்றும்

[ஜனவரி 1973]

சுபிமல் மிஸ்ரா (பிறப்பு 1943) வங்க மொழியில் எழுதும் ஒரு ஸ்தாபன எதிர்ப்பு  மற்றும் பரீட்சார்த்த எழுத்தாளர். இவர் கல்கத்தாவில் வசிக்கிறார். 60களின் பிற்பகுதியிலிருந்து சிறு இலக்கியப் பத்திரிக்கைகளில் மட்டுமே பிரத்தியேகமாக எழுதிவந்துள்ளார். இவரது கதைகள், குறு நாவல்கள், நாவல்கள்,  நாடகங்கள், கட்டுரைகள் அடங்கிய சுமார் 30 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இவரது ஆரம்பகால கதைகளின் தொகுப்பான ‘தி கோல்டன் காந்தி ஸ்டாச்சூ ஃப்ரம் அமெரிக்கா’ 2010ல் வெளியிடப்பட்டது. 

ஃப்ரெஞ்சு இயக்குனர் கோடார்டின் (Jean Luc Godard) சினிமாவால் பெரிய தாக்கத்தை அடைந்திருந்த சுபிமல் தன் எழுத்தில் சினிமாவின் மொழியைப் பிரயோகித்தார். இது வங்காள மொழியில் முதன்முறைப் பரிட்சார்த்த முயற்சி. இவரது எழுத்துகளைச் ‘சமூக யதார்த்தம்’ மற்றும் ‘சமூக விமரிசனம்’ எனச் சொல்லலாம். வங்காள மத்திய வகுப்பின் பழக்க வழக்கங்களையும், போலி நம்பிக்கைகளையும் உரித்துக் காட்டும்வகையில் இவர் தனது பேனாவில் ‘மைக்குப் பதிலாய் விஷம்” ஊற்றி எழுதுவதாகச் சொல்லலாம். சமூகத்தின் கீழ்மட்டமக்களில் முக்கியமாக தொழிலாளிப் பெண்களைப் பற்றி இவர் மிகுந்த மனிதநேயத்துடனும், ஆத்திரத்துடனும் நிறைய எழுதுகிறார். இவரது தொடக்க காலக் கதை ஒன்றில் ஒரு பெண் சொல்கிறாள்: ‘ஒரு நாயாகப் பிறப்பது இதைவிட மேல் – ஓ ஒரு பெண்ணின் வாழ்க்கை எத்தனை வெறுக்கத்தக்கது’. மிஸ்ராவின் கதைகள் பெண்களின் பாலியல் உணர்வுகள் போன்ற ஒதுக்கிவைத்த விஷயங்களைப் பற்றியும் பேசுகின்றன.

இந்த சிறுகதை கல்கத்தாவில் வசிக்கும் மொழிபெயர்ப்பாளர் வி.ராமஸ்வாமி அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர் திரு சுபிமல் மிஸ்ராவின் ‘தி கோல்டன் காந்தி ஸ்டாச்சூ ஃப்ரம் அமெரிக்கா’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

One Reply to “டிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.