சுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்

 (தமிழில்: சு. அருண் பிரசாத்)

சுசித்ரா பட்டாச்சாரியா மற்றும் சி.எஸ் லக்ஷ்மியின் ஹிந்தி கலந்த ஆங்கில உரையாடலிலிருந்து சில பகுதிகள். :

உரையாடல் நிகழ்ந்த இடம்: கொல்கத்தா

தேதி: செப்டெம்பர் 26, 2005.


சுசித்ரா பட்டாச்சாரியா பிஹாரில் உள்ள பாகல்பூரில் பிறந்தார். 1992-இல் “தீவிரமாக எழுதத் தொடங்கியதாக” அவர் சொல்கிறார். அதே ஆண்டு அவருடைய நாவல் காஞ்செர் திவால் (கண்ணாடிச் சுவர்), முன்னணி வங்க மொழி இதழான ஆனந்த் பஜார் பத்திரிகாவில் தொடராக வெளியானது. அப்போதிருந்து பல நாவல்கள், சிறுகதைகள் வெளியிட்டுள்ளார். காசேர் மானுஷ் (நம் மக்கள்), பரோபாஷ்  (புலம் பெயர்ந்தவர்) ஆகியவைத் தன்னுடைய குறிப்பிடத்தகுந்த நாவல்கள் என்று அவர் பட்டியலிடுகிறார். தஹன் என்ற அவருடைய நூலை ரிதுபர்ன கோஷ் திரைப்படமாக எடுத்துள்ளார். அவருடைய நாவல்களில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஹேமந்தெர் பாகி (இலையுதிர்காலப் பறவை)  என்ற திரைப்படம் சிறந்த கதைக்கான தேசிய விருது பெற்றது. அவருடைய எழுத்து வாழ்க்கையின் போக்கில் சுசித்ரா பல்வேறு தனியார் பணிகளிலும் அரசாங்கத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார், இந்த அனுபவங்கள் அவருடைய எழுத்துக்கு வளம் சேர்த்தன என்றும் அவர் நம்புகிறார். 

12  மே, 2015 அன்று சுசித்ரா திடீரென்று மாரடைப்பில் தன் அறுபத்தைந்தாம் வயதில் காலமானார்.


சி.எஸ். லக்ஷ்மி (ல): நாங்கள் பொதுவாக எழுத்தாளர்களின் குழந்தைப் பருவத்தில் இருந்து தொடங்குவோம், பெண்கள் அவர்களின் தொடக்க ஆண்டுகளில் எழுதுவதற்கான வெளியை  எப்படி உருவாக்கிக் கொண்டார்கள் என்பதை அறிய. நீங்கள் எப்படி வளர்ந்தீர்கள் என்று சொல்ல முடியுமா?

சுசித்ரா பட்டாச்சாரியா (சு): பிஹாரின் பகல்பூரில் உள்ள என்னுடைய மா’வின் வீட்டில் நான் பிறந்தேன். என்னுடைய மாமாவின் வீடு என்று சொல்ல மாட்டேன் — அது மா’வின் வீடு கூட, அம்மாவின் வீடு, மாமாவுடைய வீடு இல்லை. (சிரிப்பு) பிறகு நான்  கிட்டத்தட்டமூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது, என்னுடைய தந்தை இங்கு கொல்கத்தாவில் கெஸாப் கம்பெனியில்/அதிகாரியாக இருந்ததால், நான் கொல்கத்தாவின் தென் பகுதியில்தான் வளர்ந்தேன். என்னுடைய இலக்கியப் பணியைப் பற்றி நீங்கள் கேட்டால், உண்மையில் என்னுடைய  குழந்தை பருவத்திலிருந்தே நான் எழுதிவந்தேன்;  மூன்று அல்லது நான்காம் வகுப்பில் இருந்தே எழுதத் தொடங்கினேன்… அவற்றைக் கவிதைகள் என்று சொல்ல முடியாது.  கவிதை என்று இல்லை, மிலாகே மிலாகே  போல்னா,  அதாவது வெறுமே சொற்களை இணைப்பது. சொல்லப்போனால் அது… [சிறுபிள்ளைத்தனமானது என்று சொல்லலாம்.]  இப்போது அவற்றைப் பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகிறது…

இது எப்படி நிகழ்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் எங்கள் குடும்பத்தில் யாரும் எழுத்தாளர் இல்லை. (சிரிப்பு) உண்மையில் என்னுடைய சகோதரிகளில் ஒருவர், என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரி, இப்போது பிரபலமான கலைஞர்,  ஓவியர்; தீபாலி பட்டாச்சாரியா என்பது அவர் பெயர். ஆனால், எங்கள் குடும்பத்தில் நாங்கள் இரண்டு பெண்களும் விதிவிலக்குகள். இது ஏன், எப்படி  நிகழ்ந்தது என்பது தெரியவில்லை. நடந்தது என்னவென்றால், குழந்தைப் பருவத்திலிருந்து சின்ன சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனிப்பேன்; அவற்றைப் பற்றிய  சித்திரம் என் மனத்தில் உருவாகிவிடும்.  இந்தச் சித்திரங்களில் இருந்து உருவான சில கதைகள்  கூடாகக் கட்டப்பட்டு என் மனத்தில் தயாராகக் கிடந்தன.  பெரும்பாலும் காதல் கதைகள். குழந்தைப் பருவத்தில் நாம் எல்லோருமே காதல் கதைகள் எழுதுவோம்தானே (சிரிப்பு)  காதல்… விடலைக் காதல். (சிரிக்கிறார்.)

ல: அப்போது நீங்கள் வாசித்த எழுத்தாளர்கள் யார், யாரை உங்களுக்கு அதிகம் பிடித்தது?

சு: நான் பள்ளியில் படிக்கும் காலம் ஆஷாபூர்ணா தேவி நல்ல படைப்புகளைத் தரும் உச்சகட்டத்தில் இருந்த காலம். ஸுநீல் கங்குலி வளர்ந்துவரும் எழுத்தாளராக இருந்தார். ஷேஷேந்து முகர்ஜியும் முன்னுக்கு வந்துகொண்டிருந்தார். சொல்லப்போனால் நான் கல்லூரியில் இருந்தபோது ஸுநீல், ஷேஷேந்து போன்ற எழுத்தாளர்களையும், ஆஷாபூர்ணா தேவி பிறகு… நிச்சயமாக  மஹாஸ்வேதா தேவி மற்றும் நபனீதாதீ ஆகியோரையும் வாசித்திருக்கிறேன். ஆனால், அதன்பிறகு என்ன நடந்தது என்றால், என்னுடைய பள்ளி வாழ்க்கை முடிந்தபிறகு— உயர்நிலைப் பள்ளிக்குப்பிறகு— எனக்குத் திருமணம் நடந்தது. 

உண்மையில் அது நடந்தது — அது நடந்தது என்று சொல்வது தவறு. அது என்னுடைய பெற்றோரின் தவறு என்று சொல்வதும் தவறு. அது என்னுடைய தவறு. என் பெற்றோரின் உறவினரான — என் உறவினர் இல்லை — ராம் கிருஷ்ண தாஸ் என்பருடன் எனக்குத் திருமணம் ஆனது. காதல் திருமணம். அவரைத் திருமணம் செய்துகொள்ளத் துடித்துக்கொண்டிருந்தேன். அதன்பின் என்னுடைய மகள் பிறந்தாள், அப்போது நான் கல்லூரி இரண்டாம் ஆண்டில் இருந்தேன். எனவே நீங்கள் புரிந்துகொள்ள முடியும், அந்தச் சமயத்தில் என்னுடைய எழுத்து மொத்தமும் போய்விட்டது, மறைந்தே போய்விட்டது அத்தனையும். என்னால் எழுதமுடியவில்லை; மொத்தமாக எல்லாமே இல்லாமல் போய்விட்டது;   நான் கல்லூரியில் படித்துக் கொண்டுவேறு இருந்தேன். தவிர வீட்டில் எனக்கொரு மகளும் இருந்தாள், வீட்டு வேலைகளும் இருந்தன; இப்படித்தான் போய்க்கொண்டிருந்தது. பிறகு  இருபத்தெட்டு அல்லது இருபத்தொன்பது வயதில், என்னுடைய மாமாவின் நண்பர் ஒருவரைத் திடீரென்று தேசிய நூலத்தில்  சந்தித்தேன். “ஏன் இப்போதெல்லாம் நீ எழுதுவதில்லை?” என்று அவர் என்னிடம் கேட்டார். என்னுடைய குழந்தைப் பருவத்தின் வேட்கையாக எழுத்து இருந்தது, இப்போது அதைக் கடந்து வந்துவிட்டேன் என்று அவரிடம் சொன்னேன்.  சிறு வயதில் எழுதியபோது என்னுடைய நண்பர்களும் சகோதர சகோதரிகளுமே என்னுடைய எழுத்தின் வாசகர்களாக இருந்தார்கள்.  என்னுடைய குழந்தைப்  பருவத்திலும் பள்ளி நாட்களிலும் சோகக் கதைகள் எழுதிவதில் நான் அதிக ஆர்வம் கொண்டிருந்தேன், இப்போதும் அது என்னை ஈர்க்கிறது. ஒருவேளை துயரம், மக்களின் கண்ணீர்—அது என்னைத் தொடுகிறதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால்  ஏதோ ஒன்று, ஏதோ வகை எதிர்வினை, எனக்குள் நடக்கிறது  என்று நினைக்கிறேன். 

என்னுடைய வாசகர் வட்டம் என்பது என்னுடைய சகோதர சகோதரிகளும், நண்பர்களும்தான். உண்மையில் என்னுடைய தந்தை அந்தக் காலகட்டத்தில் எனக்கு மிகவும் ஊக்கமளித்தார். அவருடைய உந்துதல் இன்றி வாழ்வில் நான் எதையுமே சாதித்திருக்க முடியாது. அவர் எப்போதும் என் பக்கமே  இருந்தார். என்னுடைய மாமாவின் நண்பரை நான் பார்த்தபோது அவர் சொன்னார்: “தும்ஹார் லிகார் ஹாத் சிலோ” (எழுதும் கை உனக்கு).  இயல்பாகவே திறமை உன்னிடம் இருக்கும்போது அதை ஏன் விட்டுவிட்டாய்? அதெல்லாம் போயாகிவிட்டது, அது வெறும் குழந்தைப் பருவ வேட்கை மட்டுமே என்று அவரிடம் சொன்னேன். பிறகு அவர், “இல்லை, நீ சிறுகதைகள் எழுது. நான் உன் வீட்டுக்கு வந்து அவற்றை வாசிக்கிறேன், நான் அடுத்த வாரம் வருகிறேன்,” என்று சொன்னார். சொன்னபடியே அவர் அடுத்த வாரம் வந்தார்.  நான் எதுவும் எழுதியிருக்கவில்லைதான். அவர் என்னைக் கடுமையாகத் திட்டினார். “நான் அடுத்த வாரம் மீண்டும் வருவேன், நீ ஏதாவது எழுதி என்னிடம் காண்பிக்க வேண்டும். எழுதிவைத்து தயாராக இரு, சொல்லிவிட்டேன்” என்று சொன்னார். எனவே அவருக்காக மட்டுமே, அவருடைய வற்புறுத்தலினால் மட்டுமே நான் சிறுகதைகள் எழுதினேன், அவை சில இதழ்களில் வெளியாகின. அச்சில் என்னுடைய எழுத்தைப் பார்த்ததும் மிகுந்த வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன். அதன் பிறகு நான் மீண்டும் சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன். 

ல: அதற்கு முன்பு ஏதும் வெளியாகியிருந்தனவா?

சு: பள்ளி இதழில் சில வெளியாகியிருக்கின்றன.

ல: இதுதான் நீங்கள் முதிர்ச்சி அடைந்த பிறகு முதன் முறையாக எழுதியது.

சு: ஆமாம், ஒரு வயதை எட்டிய பிறகு… இவை எல்லாம் 28 அல்லது 30 வயதுக்குப் பிறகு வெளிப்பட்டன.  நான் மிகுந்த உற்சாகத்துடன் இயங்கத் தொடங்கினேன். நான் எழுத ஆரம்பித்தேன், ஆனால் நான் அரசாங்கப் பணியில் இருந்தேன். மேற்கு வங்க குடிமைப் பணியை  மேற்கொண்டிருந்தேன். இப்போது இல்லை; எழுதுவதற்காக என்னுடைய பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டேன். ஆனால் எதையும் எழுதவில்லை, எதுவும் நடக்கவில்லை! 

ல: நீங்கள் முப்பது வயதில் இருந்தபோது, உங்கள் மகளுக்கு என்ன வயது? அவள் அப்போது பிறந்தாகிவிட்டது, இல்லையா?

சு: ஆமாம்… அவள் ரொம்பச் சின்னக் குழந்தை… எனவே,   வீட்டிலோ குழந்தை… உண்மையில் நான் வெளிப்படையாகச் சொல்ல விரும்புகிறேன்; என் பாக்கியமும் அதிர்ஷ்டமும் என்று இதைச் சொல்வது சரியா இல்லை அப்படிச் சொலவது தவறா என்று தெரியவில்லை, ஆனால் எல்லாக் குடும்பங்களிலும் இப்படித்தான் இருக்கும். என் கணவரும் என் சகோதரனும் இப்போது என்னுடன் இருக்கின்றனர். என் கணவர் ஒரு தோழனாகவவே எப்போதும்  இருந்திருக்கிறார். அவர் எப்போதும் எனக்குப் பக்கபலமாக இருந்துள்ளார். நான் வீட்டு வேலைகளைப் பார்க்கவேண்டும், மகளைப் பார்த்துக் கொள்ளவேண்டும். அன்றாட வீட்டு வேலைகளில் அவர் உதவுவார், நான் எழுதுவேன். அவர் சமைப்பார். நான் எழுதுவதில் தீவிரமாக இருந்ததால் எல்லாம் இப்படி அமைந்தது.  நான் சீராட்டப்படுகிறேன் என்று சிலர் கேலி செய்வார்கள். இது சீராட்டல் என்று நான் கருதவில்லை இது சீராட்டலும் இல்லை.   இதில் கேலி செய்து சிரிக்க ஒன்றுமில்லை, இது இப்படித்தான் இருக்க வேண்டும். எனவே, டி.விக்குப்  பேட்டியளிக்கும்போது இந்த ஒத்துழைப்பு பற்றிப் பேசுவேன்.  நான் எழுதும்போது அவர்கள் டி.வியைக் குறைந்த ஒலியில் வைத்துப் பார்ப்பதையும் கூறுவேன். மேலும் இரவு சாப்பிடும் சமயம் வரும்போது, மைக்ரோவேவில் உணவைச் சூடாக்கி, உணவு மேசையில் எல்லாவற்றையும் வைத்துவிட்டு, “வா, சாப்பாடு தயார்” என்று சாப்பிட அழைப்பார்கள். ஏனென்றால் நான் அப்போது எழுதிக் கொண்டிருப்பேன். நான் இதைச் சொல்லும்போது சிலர் சிரிப்பார்கள். மேலும் சிலநேரங்களில் வீட்டுக்கு யாராவது வரும்போது இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே அவர்களால் முடியாது.  “உன் சகோதரர்  ஏன் டீ போடுகிறார்? நீ சும்மா உட்கார்ந்திருக்கும்போது   உன் கணவர்  ஏன் டீ போடுகிறார்?” என்று கேட்பார்கள். பார்க்கப்போனால் அவருடைய நண்பர்கள் வீட்டுக்கு வரும்போது நானும் டீ போடுவேன்,  என் நண்பர்கள் வரும்போது அவர் போடுவார். இது ஒரு சாதாரண விஷயம். இதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை. நான் கொடுத்துவைத்தவள் என்றெல்லாம்  சொல்லமாட்டேன். இந்த உலகில் ஒவ்வொருவரும் இயல்பாகப் பெறவேண்டிய ஒத்துழைப்பே எனக்குக் கிடைத்திருக்கிறது. இதுதான் விஷயம்…  என் எழுத்தைப் பற்றிச் சொல்லப்போனால்—அவரை நான் ரொம்பவே புகழ்ந்துகொண்டிருக்கிறேன்— (சிரிப்பு) என் எழுத்தைப் பற்றிச் சொல்வதானால், நான்‘81, ‘82 அல்லது ‘83-இல் எழுதத் தொடங்கியபோது  அதை சாதாரணமாகவே எடுத்துக்கொண்டேன். வீட்டைக் கவனித்துக் கொள்வது, என்னுடைய வேலை இவற்றுக்கெல்லாம் பிறகு  எனக்கு எப்போது நேரம் கிடைத்ததோ, எழுதத் தோன்றியதோ அப்போதுதான்  நான் எழுதினேன். பிறகு அவை இதழ்களில் பிரசுரிக்கப்பட்டன. வங்க மொழியில் வெளியாகும்  பெண்களுக்கான எல்லா  இதழ்களிலும் என்னுடைய சிறுகதைகள் வந்திருக்கின்றன; அவற்றைக் கண்டு நான் மிக்க உவகையும் மகிழ்ச்சியும் அடைந்திருக்கிறேன். 

ல: சுசித்ரா, நீங்கள்  சின்ன வயதிலேயே  திருமணம் செய்துகொண்டீர்கள், நீங்களாகவே தேர்வு செய்த திருமணம், திருமண வாழ்க்கை சரியாகப் போய்க்கொண்டிருக்கிறது  என்று சொன்னீர்கள்.

சு: இல்லை, வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால், அந்தச் சமயத்தில் நான் செய்தது தவறு.  எனக்கு வயது போதாது; என் மனத்துக்குப் பிடித்தவரைத்தான் மணந்தேன். ஆனால் அது தவறான தேர்வு. ஓரு வருடத்திலேயே அது முறிந்தும் போய்விட்டது.

ல: ஓ!

சு: பிறகு இப்போது நான் வாழ்ந்துகொண்டிருப்பவருடன் திருமணம் செய்துகொண்டேன். உடனடியாக, உடனடியாகவே நான் மறுதிருமணம் செய்துகொண்டேன். 

ல: இது வீட்டில் ஏற்பாடு செய்ததா? அல்லது இதுவும் உங்கள் தேர்வுதானா?

சு: இல்லை, இதுவும் காதல் திருமணம்தான். ஆனால் இந்த முறை அதைவிடச் சிறப்பான தேர்வு என்று நினைக்கிறேன். (சிரிப்பு.)

ல: இது நீண்ட காலம் நீடித்திருக்கிறது!

சு: இது கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகள் நீடித்திருக்கிறது என்று நினைக்கிறேன்…

ல: இந்தத் திருமணத்தின் மூலம் உங்களுக்குக் குழந்தை இருக்கிறதா?

சு: ஆமாம், என்னுடைய மகள்.

ல: ஒரே ஒரு குழந்தையா?

சு: ஆம், ஒரே ஒரு குழந்தைதான். அவள் இப்போது பெங்களூரில் இருக்கிறாள். அவளுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். என் பேரக் குழந்தைகளும் மகளும் அங்கு இருக்கின்றனர்…

ல: ஆக, நீங்கள் எழுதத் தொடங்கினீர்கள்…

சு: ஆமாம்… இயல்பாக, மிக இயல்பாக என்று நினைக்கிறேன். சில சமயம் மாதம் ஒரு முறை அல்லது இரு முறை எழுதுவேன். 1992இல் முன்னணி வங்காள இதழ் ஒன்றில் என்னுடைய நாவல் ஒன்று வெளிவரத் தொடங்கியது. அந்த நாவல் காஞ்செர் திவால். (கண்ணாடிச் சுவர்.) இது உறவுகளைப் பற்றியது. 

ல: அது எந்த இதழ்?

சு: ஆனந்த் பஜார் பத்திரிகா.

ல: சரி.

சு: ஆக, அந்த வேளையில் வாசகர்களிடம் இருந்து எனக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது, அவர்கள் என்னை மிகுந்த அன்புடன் ஏற்றுக் கொண்டனர். பிறகு எனக்குத் தோன்றியது, சரி, என்னிடம் சொல்வதற்கு ஏதோ இருக்கிறது… எனக்கென்று தத்துவம் இருக்கிறது, எனக்குச் சில அனுபவங்கள் இருக்கின்றன, எனக்குச் சில உணர்ச்சிகள் உள்ளன,  எனக்கு ஒரு பார்வை இருக்கிறது, என்னைச் சுற்றி இத்தனை மக்கள் இருக்கின்றனர்… எனவே என்னைச் சுற்றியிருக்கும் உலகைப் பற்றி எழுத நினைத்தேன். 

ல: ஆமாம்.

சு: எனவே நான் 1992இல் தீவிரமாக எழுதத் தொடங்கினேன், இப்போது 2005 நடக்கிறது. இத்தனை ஆண்டுகளும் விடாமல் நான் எழுதினேன் என்று என்னால் உங்களிடம் சொல்லமுடியும். விடாமல் என்றால் சிறிதும் விடாமல் என்றுதான் அர்த்தம்.    என் எழுத்து குறித்து நான் மிகவும் தீவிரமாக இருக்கிறேன். அது நல்ல எழுத்தா இல்லையா, அது இலக்கியமாகக் கருதப்படுமா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.  அது எத்தகையது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என் எழுத்தை நான் தீவிரமான முறையில் எடுத்துக் கொள்கிறேன். என் எழுத்துக்குக் குறைந்த பட்சம் நூறு சதவீதம் என் உழைப்பை வழங்குவேன்; இல்லை, வழங்குவேன் இல்லை, வழங்க முயற்சிப்பேன். இதுதான்  எழுத்தாளராக இருக்கும் என் கதை. 

ல: நான்  வாசித்தவரை, நீங்கள் பல்வேறு கருப்பொருட்களை விரும்புகிறீர்கள் என்று தெரிகிறது. எடுத்துக்காட்டாக, தஹன் நாவலில் பாலியல் தொல்லை குறித்தும் இளம் பெண்ணொருத்தி நீதிக்காகப் போராடுவது குறித்தும் பேசுகிறீர்கள். இது ஒரு திரைப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. இதை எழுதும் எண்ணம் எப்படித் தோன்றியது?

சு: இன்னொரு திரைப்படமும் வந்திருக்கிறது, ஹேமந்தெர் பாகி. (இலையுதிர்காலப் பறவை.) அது மத்திய வயதுப் பெண்ணொருத்தி தன் குழந்தைகளை வளர்ப்பதில் மும்முரமாக ஆழ்ந்துள்ளதைப் பற்றியது. இப்போது அந்தப் பையன்கள் இருவரும் வளர்ந்துவிட்டனர், கணவர் வேலையில் மூழ்கி இருப்பதால் இவள் தனிமையை உணர்கிறாள், அவள் எப்படி உணர்கிறாள்…  (சில காகிதங்களைப் புரட்டுகிறார்) இல்லை, அது இங்கு இல்லை, சரி.

ல: நீங்கள் எதையாவது தேடுகிறீர்களா என்ன?

சு: ஆமாம், தேடினேன். பரவாயில்லை… உண்மையில், நீங்கள் என்னை ஒரு பெண்ணியவாதி என்று அழைத்தால்,  நான் அந்த அர்த்தத்தில் ஒரு பெண்ணியவாதி இல்லை என்பேன்.  நான் ஒரு மனிதாபிமானி என்று வேண்டுமானால் சொல்லலாம். 

ல: பெண்ணியவாதிகளும் மனிதாபிமானிகள்தாம்.

சு: நிச்சயமாக, நிச்சயமாக. ஆனால் ஒரு பெண்ணாக நான் எழுதும்போது, பெண்களின் வேதனை, பெண்களின் பிரச்சனைகள், பெண்களின் கண்களினூடே பார்ப்பது இவை தானாகவே  என்னிடம் வந்துவிடும். ஆகவே, அந்த வகையில், யாரேனும் என்னை நீங்கள் ஒரு பெண்ணிய எழுத்தாளர் என்று கூறினால் அது பரவாயில்லை. ஆனால், நீங்கள் ஒரு மார்க்சிய எழுத்தாளர், நீங்கள் ஒரு பெண்ணிய எழுத்தாளர்  என்று முத்திரை குத்தப்படுவதை நான் விரும்பவில்லை—அப்படி நான் அடையாளப்படுத்தப்பட விரும்பவில்லை. நான் ஓர் எழுத்தாளராக, ஒரு மனிதாபிமானியாக, ஒரு மனித உயிராய் சுட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். மக்கள்தொகையில் பாதி பெண்கள்தாம். அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்தாலோ அடக்குமுறைக்கு உள்ளானாலோ நான் அவர்களைப் பற்றிப் பேசுவேன், அவர்களைப் பற்றி எழுதுவேன். அப்படிப் பார்த்தால் ஆண் ஒருவர் அடக்குமுறைக்கு உள்ளானாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்தும் நான் நிச்சயமாக எழுதுவேன். நான் அவர்களைப்பற்றி எழுதியாக வேண்டும், பேசியாக வேண்டும். அவர்களுக்காக நிச்சயமாக நான் குரல் கொடுப்பேன். அந்த வகையில் நான் ஒரு பெண்ணிய எழுத்தாளராக அடையாளம் காணப்பட விரும்பவில்லை, நான் ஒரு மனிதாபிமான எழுத்தாளராக அறியப்படவே விரும்புகிறேன். 

ல: சுசித்ரா, நீங்கள் பல நாவல்களும் சிறுகதைகளும் எழுதியிருக்கிறீர்கள். இது நாவலாக வரவேண்டும், இது சிறுகதையாக வரவேண்டும் என்று எப்படித் தீர்மானிப்பீர்கள்? எப்படி இந்த முடிவை எடுப்பீர்கள்?

சு: இல்லை, அது அப்படி இல்லை. நான் ஒரு நாவல் எழுதும்போது, ஒரு பிரச்சனையை எடுக்கிறேன், ஒரு பிரச்சனை, ஒரு குறிப்பிட்ட பிரச்சனை, குறித்து யோசிப்பேன்; பிறகு அதைப் பல்வேறு கோணங்களிலிருந்து அணுகுவேன். அப்படி நான் பல்வேறு கோணங்களில் இருந்து அணுகும்போது அது நாவலாக வருகிறது. 

ல: அது தன்னளவிலே ஒரு நாவலாகிவிடுகிறது…

சு: சரி. சில சமயம் அது ஒரு குறிப்பிட்டத் தருணம் பற்றியது என்று தோன்றினால் இது சிறுகதை ஆகலாம் என்று சொல்ல முடியும். சுருங்கச் சொல்லி விளக்கக் கூடிய பிரச்சனை என்றால், அது சிறுகதையாகிறது. நாவலைவிட சிறுகதை எழுதுவது மிகவும் கடினமானது என்று நினைக்கிறேன். ஆனால் சிறுகதையில் உணர்ச்சிகள் இருக்க வேண்டும்; வாசிப்பவரை நீண்ட நேரம் அது குறித்துச் சிந்திக்கத் தூண்டவேண்டும். கதை கதைக்காகவே  என்ற  சொற்றொடரில் எனக்கு நம்பிக்கை இல்லை. கதை என்பது கதைக்காக மட்டுமே இருக்கக் கூடாது, அதற்கும் மேற்பட்ட ஒன்று அதில் இருக்க வேண்டும்; அது மறைந்திருக்க வேண்டும், அடியில் இருப்பதை நாம் வெளியே கொண்டுவரவேண்டும். சிறுகதைகள் அப்படித்தான் இருக்கவேண்டும். 

ரவீந்திரநாத் தாகூரை நான் மேற்கோள் காட்டுகிறேன்: சோட்டோ சோட்டோ துக்கோ கதா, சின்ன சின்ன சோகக் கதைகள் என்று ரவீந்திரநாத் கூறினார். அனைத்தும் இணைந்து கதைகள் அமைகின்றன. கதை ஒன்றை எழுதிமுடித்த பிறகு ஒரு விஷயம் மனத்தில் எழும்; அது இப்படி ஒன்றைக் கூறுவதாக  இருக்கும் —  அதாவது நிறைவடைந்த  பிறகும் நிறைவாகாமலே இருப்பது. 

ல: சரிதான். நிறைவடைந்த பின்னும் அது நிறைவாகாமலே இருக்கிறது…

சு: தன்னுடைய எழுத்திலும் ரவீந்திரநாத் இதை வரையறுத்திருக்கிறார். நாம் — நவீன எழுத்தாளர்கள் — ஒரு வேளை இதிலிருந்து மாறுபடலாம்.  சொல்ல முடியாது. என்னுடைய முன்னோர்களை நான் மதிக்கிறேன், மேலும் ரவீந்திரநாத் என்னுடைய தலைமேல் அழுத்தமாக உட்கார்ந்திருக்கிறார்! இருந்தபோதிலும், என்னுடைய கருத்துப்படி, சிறுகதைகள் எதையும் சொல்லக்கூடாது, சொல்ல வேண்டியது வாசகர்களின் மனத்தில் தோன்றவேண்டும். 

ல: ஆமாம், நீங்கள் சுட்டிக்காட்ட மட்டுமே கூடிய ஒரு பாதையின் ஏதோ ஓரிடத்தில் அது  வாசகரை விட்டுவிட வேண்டும்.

சு: நான் செய்யக்கூடியது எல்லாம்…

ல: சமகால வங்க இலக்கியச் சூழலில் பெண் எழுத்தாளர்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?

சு: மிக நல்ல வரவேற்பு. உண்மையில் பத்திரிகை ஆசிரியர்களும் பதிப்பாளர்களும் எங்களை எழுத்தாளர்களாக மட்டுமே பார்க்கிறார்கள். நான் எழுதுவது நன்றாக இருந்தால் பிரசுரிக்கிறார்கள், மற்றபடி அவை பிரசுரமாவதில்லை, இப்படித்தான் இருக்கிறது. ஆனால் நாங்கள் [பிரசுரிக்க] அவசரப்படுகிறோம் என்ற உணர்வும் பொதுவாக இருக்கிறது.

ல: [சிரிக்கிறார்]

சு: [கடந்த காலத்திலும்] பெண் எழுத்தாளர்கள் இருந்தார்கள்; அவர்கள் பெண் எழுத்தாளர்கள் என்று  அழைக்கப்பட்டதால் அவர்கள் ஒரு சட்டகத்தில் அடைக்கப்பட்டார்கள். சிலநேரங்களில், நம்முடைய சமகால எழுத்தாளர்கள் கூட, “நீங்கள் சிறப்பான எழுத்தாளர். பெண் எழுத்தாளர்களில் நீங்கள் சிறப்பான எழுத்தாளர்” என்று கூறுவார்கள். [எழுத்தைப் பற்றிப் பேசும்போது] அங்கு பாலினம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இயற்கை இயல்பில் ஏதும் பாலினம் உள்ளதா என்ன?  ஒன்றை உருவாக்குவதில் பாலினம் இல்லை, ஆனால் இருப்பதாகத்தான் நினைக்கிறார்கள் பலர். “என் மனைவிக்கு உங்கள் கதைகள் பிடிக்கும். என் மகள், என் தாயார் உங்கள் கதைகளை வாசிப்பதை விரும்புவார்கள்…” என்று பலர் தொடர்ந்து கூறுவதைக் கேட்டுப் பழகிவிட்டோம்.

ல: (சிரிக்கிறார்) மற்றவர்கள் எல்லாம்தான்  உங்கள் கதைகள் விரும்புகிறார்கள்…

சு: பெண்களை வெற்றி பெற்றவர்களாகவும்  போட்டியாளர்களாகவும் எதிராளிகளாகவும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனத்தடைகளில் இருந்து இத்தகைய உணர்வு வருகிறது என்று நான் நினைக்கிறேன். பெண் எழுத்தாளர்களில் நீங்கள் நன்றாக எழுதக்கூடியவர் என்று சொல்வதில் நம்முடைய ஆண் எழுத்தாளர்களும்கூட மகிழ்ச்சி அடைகிறார்கள். 

ல: ஏதோ ஆதரவு காட்டுவதுபோல் இருக்கிறது இது. பெண்கள் வித்தியாசமாக எழுதும்போது, நான் சொல்வது என்னவென்றால், உடல் அல்லது இச்சை குறித்து ஒரு பெண் எழுதும்போது…

சு: போன திங்கட்கிழமை ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையில் கல்கட்டா நோட்புக்  பகுதி, அதை நீங்கள் வாசித்தீர்களா?

ல: இல்லை.

சு: இல்லை,  இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் பெண்கள் எப்படி வெற்றி பெற்றுவருகிறார்கள், ஆண் ஆதிக்கத்தை எப்படிக் கடந்துவருகிறார்கள் என்பதைப் பற்றிய குறிப்பு அதில் வெளியாகி இருந்தது. கவிதை வாசிப்பதில் பிரதீப் கோஷும் ஜகந்நாத் கோஷும் மிகப் பிரபலமானவர்கள், ஆனால் பிரதிபுலி கங்கோபாத்யாய் அவர்களை முந்திவிட்டார் என்று அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அதேபோல் இலக்கியத்தில் சுசித்ரா பட்டாச்சாரியாவின் புகழ், சுநீல் கங்கோபாத்யாயின் புகழுக்கு எந்த அளவும்  குறைவானதில்லை. கல்கட்டா நோட்புக்கில் எழுதியிருக்கிறார்கள். அதைப் பார்த்து நான் மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தேன். 

ல: (சிரிக்கிறார்)

சு:  விஜயாதீ— எழுத்தாளர் விஜய முகோபாத்யாய்—  என்னைத் தொலைபேசியில் அழைத்து, “சுசித்ரா, ஆண் எழுத்தாளர்களோடு, அதுவும் சுநீல் கங்கோபாத்யாயோடு நீ ஒப்பிடப்பட்டிருப்பதைக் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இப்படிப்பட்ட வாய்ப்புகள் வெகு அரிதாகவே கிடைக்கும்,” என்றார்.

(சிரிப்பு)

ல: தெற்கிலும்கூட, குறிப்பிட்டுச் சொன்னால்  தமிழ் நாட்டில், உடல் பற்றி பெண்கள் சமீபத்தில் எழுதியதற்குப் பெரிய சர்ச்சை ஒன்று உருவானது. ஆண் எழுத்தாளர்களில் பலர் இது வக்கிர எழுத்து, ஏன் இதுபோல் எழுதுகிறார்கள் என்றெல்லாம் கூறத் தொடங்கினர். ஆனால், இங்கு வங்காளத்திலும் அது நடக்கிறது போலும்.

சு: (சிரிக்கிறார்) முந்தைய காலத்தில் பெண்கள் அவ்வளவு பெரிய முக்காட்டைப் போட்டுக்கொள்வார்கள்.  அவற்றை அவர்கள் எடுத்ததும் கௌரவமே குலைந்துவிட்டது என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்தார்கள். பெண்கள் முகத்திரைகளைத் தூக்கி எறிந்தாயிற்று. இப்போது என்னவாகும்? நான் ஆண்களை மட்டும் குற்றம் சொல்லவில்லை, ஏனென்றால் இதுபோன்ற சமூகத்தைக் கட்டமைப்பதில் ஆண், பெண் இருவருக்கும் சம அளவில் பொறுப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். விரும்பினால் சமூகத்தை மாற்றலாம், பெண்கள் குரலெழுப்பலாம். எனக்குச் சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது, ஆனால், இதில் துயரம் தருவது என்னவென்றால் பெண்கள் தங்கள் குரலை எழுப்ப மிகவும் பயப்படுகிறார்கள்.  இப்போதெல்லாம் குரலெழுப்புவதில்லை, அவர்கள் கவனம் தங்கள் உடை, முடி, ஒப்பனை, உடலைக் காட்டுவது இவற்றில்தான் முக்கியமாக இருக்கிறது. ஒரு பெண் அல்லது ஒரு மனித உயிருக்கான உண்மையான சுதந்திரம் எது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.   நாரி  (பெண்) என்று சொல்கிறார்கள். ஆனால் அது உள்ளிலிருந்து அடையப்பட வேண்டிய ஒன்று, ஆனால் அவர்கள் ஆழமாகச் செல்வதில்லை; வெளித்தோற்றத்தையே நம்புகிறார்கள். நம் பெண்கள் இன்னும் பின்தங்கித்தான் இருக்கின்றனர். இது நிச்சயமாக ஆண் ஆதிக்கச் சமூகம்தான் என்றாலும் ஆண் பெண் இருவருமே  இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 

ல: விமர்சன முறைகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்…

சு: சரி. நான் விமர்சனம் பற்றிப் பேசுகிறேன். மிகச் சிறந்த எழுத்தாளர்கள் சிலர் இப்போது வந்திருக்கிறார்கள், அவர்கள் மிக வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் உடல், மனம் இவற்றின் தேவைகள் பற்றி எழுதுகின்றனர். இப்படிப்பட்ட  எழுத்து வெட்கப்படவேண்டியது என்று பலர் கூறுகின்றனர். ஆனால் நாம் அதைத் தொடரத்தான் வேண்டும்… 

ல: நாம் இதையெல்லாம் லட்சியம் செய்யக் கூடாது…

சு: இதுவல்ல நான் என்பதை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அதே நேரம் அளவுக்கு அதிகமாகப் போகும்போது அது ஆபாச எழுத்தாகிவிடும். நம் தேவைகளை முன்வைக்கும் விதம் இலக்கிய மதிப்புள்ளதாகவும் அதனின்றும் விலகாததாகவும் இருக்க வேண்டும். அது இலக்கியத்துக்கு அப்பால் சென்றுவிட்டால் விரசமான எழுத்தாகிவிடும்; அதன் எல்லைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பாலியல் எழுத்து எது கலை எது என்பது நமக்குத் தெரிய வேண்டும் — அதை நினைவில் கொள்ளவேண்டும். சிலர் இதை மறந்துவிடுவதால் சில சமயம் தவறுகள் நேர்கின்றன.  

ல: இளம் எழுத்தாளர்களில் உங்களுக்கு விருப்பமான எழுத்தாளர்கள் யார்?

சு: இப்போது எழுதுபவர்களில் இருவர். திலோத்தமா மஜூம்தார் மற்றும் சங்கீதா பந்தோபாத்யாய்… இவர்கள் வளர்ந்துவரும் எழுத்தாளர்கள்.

ல: அவர்கள் எழுதுவது சிறுகதைகளா, கவிதைகளா?

சு: அவர்கள் கவிதைகள் எழுதுகிறார்கள்,  சிறுகதைகள் எழுதுகிறார்கள், நாவல்கள் எழுதுகிறார்கள்—திலோத்தமா மஜூம்தார் மற்றும் சங்கீதா பந்தோபாத்யாய். எல்லோரும் அவர்களை எள்ளல் செய்கிறார்கள். பலர் அவர்கள் எழுத்தைக் கொச்சையானது என்று நினைக்கின்றனர். அது சில சமயம் அப்படி இருக்கலாம் என்பதை ஏற்கிறேன். அது ஆண்களின் எழுத்திலும் இருக்கக்கூடும். நாம் எல்லைகளைப் புரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ளவில்லை என்றால் பிரச்சனைதான்.

ல: இங்கு பெண் எழுத்தாளர்கள் சங்கம் ஏதும் இருக்கிறதா?

சு: சங்கம் என்று இல்லை. ஆனால் பெண் எழுத்தாளர்கள் குழு உண்டு— அது ஒரு சங்கம் கிடையாது—அனிதாதீ தற்சமயம் அதற்குத் தலைமை வகிக்கிறார். நாங்கள் ஒன்றாக அமர்ந்து, எங்கள் உணர்ச்சிகளைப் பேசிப் பகிர்ந்துகொள்வோம், எங்கள் கதைகளை வாசிப்போம் இப்படிச் சிலது…

ல: சும்மா ஓரிடத்தில் கூடிப் பேசுவதைப்போல…

சு: சும்மா ஓரிடத்தில் கூடிப் பேசுவதைப்போல…

ல: ஆனால் அதுவும்கூட முக்கியமானது என்று நினைக்கிறேன்.

சு: ஆனால், இப்போது ஆண் எழுத்தாளர்கள்  சொல்கிறார்கள்—சுமின்தா என்னிடம் கேட்டார்— “நீங்கள் அடிப்படைவாதியா?”

ல: அப்படியா!

சு: “நீங்கள் இன்னொரு குழுவைத் தொடங்கியிருக்கிறீர்கள்.இதனால் நீங்கள்  அடிப்படைவாதி ஆகிவிடவில்லையா?” (சிரிப்பு)… நாங்கள் அடிப்படைவாதிகளாக வேண்டும் என்று விரும்பவில்லை, ஆனால் சூழ்நிலை வீட்டுக்குள்ளேயே எங்களை ஒடுக்கி ஒரு வட்டத்துக்குள்ளேயே வாழும்படி வைக்கிறது.  எங்களை அவர்கள் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்., ஆனால் நாங்கள்  ஒதுங்கிப்போனால்  அவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. 

ல: சுசித்ரா, உங்கள் நாவல்களில் சில திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. உங்கள் அனுபவம் என்ன? அதை எப்படிப் பார்க்கிறீர்கள்? திரைப்படமாக வரும்போது, அது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா?

சு: இல்லை, அப்படிச் சொல்ல முடியாது. 

ல: உண்மையாகவா!

சு: ஏனென்றால் திரைப்படம் என்பது வேறு வகை ஊடகம். என்னுடைய கதைகள் முற்றிலும் வேறு வகை ஊடகம் என்று நான் நினைக்கிறேன்… [தொலைபேசி ஒலிக்கிறது.] நாம் திரைப்படங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இது வேறு வகை ஊடகம் என்பது எனக்குத் தெரியும்தான். இயக்குநர் என்றொருவர் இருக்கிறார், அவரிடமும் சொல்வதற்கு ஏதோ இருக்கிறது, சில செய்திகள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும். ஆனால் படைப்பாற்றல் என்பது கடினமான ஒன்று என்று நான் நினைக்கிறேன், நீங்கள் சரியாகச் செய்யவில்லை என்றால் பிரச்சனைதான். தஹன்  (தீக்குளிப்பு) பார்த்தபோது இதை நான் உணர்ந்தேன். தஹனில் தொழில்நுட்பத் தவறுகள் சில இருந்தன, வேறு சில குற்றச்சாட்டுகளும் எனக்கு இருக்கின்றன. இருந்தபோதிலும், ரிதுபர்னோ கோஷ் நான் வெளிப்படுத்த விரும்பிய செய்தியை வெற்றிகரமாகக் கடத்தியிருக்கிறார் என்றே நினைக்கிறேன். இது ஓர் ஆரோக்கியமான விஷயம். ஆக, ஒரு திரைப்படத்தின் பார்வையாளராக, அதைக் காண்பவராக நான் மகிழ்ந்தேன்; ஆனால் ஓர் எழுத்தாளராக இல்லை. கேன்சர் என்று அதன் பிறகு ஒரு திரைப்படம் வந்தது. வங்க மொழியில் கோபிர் ஓசுக்,  தீவிர நோய் என்று பொருள். அதுவும் சரியாக உருவாக்கப்படவில்லை. ஹேமந்தெர் பாகி (இலையுதிர்காலப் பறவை)  சிறந்த கதைக்கான தேசிய விருது பெற்றது. இயக்குநர் ஊர்மி சக்ரபர்த்தி கதை சொல்வதில் வெற்றியடைந்திருந்தார். ஒட்டுமொத்தமாக அது சரிதான். ஆனால் அதிலும் ஏராளமான தவறுகள் இருந்தன. அதனால்தான் [கதையின்] முடிவில் சொல்லவந்த செய்தி வெளிப்படவே இல்லை என்று நான் நினைக்கிறேன். 

ல: மிக அதிகமாகப் பேசப்பட்ட, பாராட்டப்பட்ட, சர்ச்சையை உருவாக்கிய உங்களுடைய நாவல் அல்லது சிறுகதை உண்டா?

சு: காசேர் மானுஷ் (நம் மக்கள்)  பற்றி அப்படிக் கூறமுடியும். அது தேஷ் பத்திரிகாவில் வெளியானது; மிகப் பிரபலமான நாவலும்கூட. எல்லோரும் இதைப் பற்றி என்னிடம் விசாரிப்பார்கள். கதையைப் பற்றி வாசகர்களிடையே சில கேள்விகள் எழும்.  தஹன் பரவலாக விவாதிக்கப்பட்டது, ஹேமந்தெர் பாகி பரவலாக விவாதிக்கப்பட்டது. பரோபாஷ் சிறுபான்மையினரைப் பற்றியது, சிறுபான்மையினர் என்றால்…

ல: முஸ்லிம்களா?

சு: இல்லை, முஸ்லிம்களைப் பற்றி அல்ல, சீக்கியர்களைப் பற்றி…

ல: நீங்கள் பலதரப்பட்ட விஷயங்கள் பற்றி எழுதி இருக்கிறீர்கள் [என்று தெரிகிறது]. ஒவ்வொரு நாளும் எழுத்துக்கு இத்தனை மணி நேரங்கள் என்று கட்டுப்பாடுடன் ஒதுக்கி, விடாமல் எழுதும் எழுத்தாளரா நீங்கள்?   இப்படித்தான் எழுதுகிறீர்களா அல்லது…?

சு: பாருங்கள், நான் எழுதுவதற்காக மட்டுமே என்னுடைய பணியைவிட்டு விலகினேன். பணிக்கு தினமும் காலை ஒன்பது மணிக்குச் செல்லவேண்டும், மாலை ஏழு அல்லது ஏழு முப்பதுக்குத் திரும்பி வரவேண்டும் என்று இருந்தது. அதன் பிறகு எழுதுவதற்கான சக்தி இல்லை, மிகவும் சோர்வாக இருக்கும். இரவில் ஒருவேளை நான் எழுத அமர்ந்தால் அதுவும் என்னைச் சோர்வுறச் செய்யும், பின்னிரவு இரண்டு மணிவரை எழுதிவிட்டு, காலை எழுந்து அலுவலகத்துக்கு ஓட்டம். வீட்டில் என் கணவரும் என் சகோதரரும் இருந்தார்கள். வேலையை விட்டுவிடச் சொல்லி அவர்கள் என்னிடம் கூறினார்கள். வேலை செய்ய முடியவில்லை. தவிர, எனக்கு இதயத்தில் பிரச்சனை இருந்தது. என்னுடைய உடல்நிலை தொல்லை தந்தபடி இருந்தது.  இதனால் வரும் அழுத்தங்களைத் தவிர்க்கச் சொன்னார்கள் அவர்கள். வேலையை விட்டுவிட்டு எழுதுவதை மட்டும் செய்யச் சொன்னார்கள்.  எனவே நான் வேலையை விட்டுவிட்டேன். ஆக, தினமும் எழுத முடிகிறது, நான் ஏதாவது எழுதியாக வேண்டும். தினமும் ஏதாவது எழுதியாக வேண்டும், ஆனால் அப்படி நடப்பதில்லை. நான் ஒருநாள் சாதாரண விடுமுறை எடுத்துக்கொள்ள முடியும், அது இப்போது என் கையில் இருக்கிறது, ஏனென்றால் நான் என் சொந்த வேலையைச் செய்கிறேன். (சிரிப்பு.) எனவே, சில நேரங்களில் எனக்கு நானே சாதாரண விடுப்பு அளித்துக்கொள்வேன் அல்லது  இரண்டு- நான்கு நாட்கள் ஈட்டிய விடுப்பு. இப்படிப் போகிறது.

ல: உங்கள் மகளுடன் எப்படிப்பட்ட உறவு இருக்கிறது? அவருக்கு உங்கள் எழுத்து பிடிக்குமா?

சு: ஓ! (சிரிக்கிறார்) நிச்சயமாக, நிச்சயமாக, நான் எழுதுவதெல்லாம்  அவளுக்கு வெகுவாகப் பிடிக்கும். அவளும், அவளுடைய கணவரும் — என் மருமகன் —  அவர்களுக்கு என்னைப்பற்றி மிகவும் பெருமை.

ல: அவர் வேலை பார்க்கும் பெண்ணா?

சு: என் மருமகன் விப்ரோ-வில் இருக்கிறார்.

ல: விப்ரோவில்.

சு: நான் பணியாற்றுவதைக் குழந்தை பருவத்திலிருந்து என்னுடைய மகள் பார்த்து வந்திருக்கிறாள். அவளுடைய அம்மா அலுவலகத்துக்குச் சென்றாள், ஏனென்றால் அம்மாவுக்கு வேலை செய்யவேண்டியிருந்தது. வேலைக்குப் போக வேண்டும் என்ற  எண்ணம் எனக்கு ஏன் ஏற்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை; என் சகோதரிகளுக்கு அப்படித் தோன்றவேயில்லை. என் உணவுக்கான செலவை நானே சம்பாதிக்கவேண்டும் என்று நினைத்தேன்; என் மனத்தில் அது இருந்தது; உயர்நிலை வகுப்புக்குப் பிறகு நான் சம்பாதிக்கத் தொடங்கினேன். முதலில் டியூஷன்கள் எடுத்தேன், பிறகு அலுவலகம் ஒன்றில் பணியாற்றினேன், பிறகு அரசாங்கப் பணியில் சேர்ந்தேன். ஆக, இதையெல்லாம் பார்த்தவள், தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாள். வீட்டில் சும்மா உட்காராமல் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவளது குழந்தை பருவத்திலேயே முடிவெடுத்திருந்தாள். இப்போது பள்ளியில் ஆசிரியராக இருக்கிறாள்.  குழந்தை பிறந்தபோது வீட்டில் இருந்ததால், இடையில் ஓராண்டுக் காலம் வேலையை விட்டிருந்தாள். பிறகு என்னிடம் சொன்னாள்,  வீட்டிலேயே இருப்பது மிகவும் சலித்துவிட்டது என்றும் என் மருமகனும் அவளை  வீட்டை விட்டு வெளியே போய்விட்டு வரும்படி சொன்னார் என்றும். பிறகு மீண்டும் ஒரு பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தாள். அவர்கள் டெல்லியில் இருந்தார்கள். அவள் முதுகலை வகுப்பில் படித்தபோது என்னுடன் இருந்தாள். அப்போது அவளுக்கு வேலைக்குச் செல்லும் அவசியம் ஏதும் இருக்கவில்லை.  [இருந்தாலும்] முதுகலை பயிலும்போது காலையில் பள்ளிக்கூடம் ஒன்றில் பாடம் நடத்துவாள்.  காலையில் பள்ளிக்குக் கிளம்பிப்போய் பிறகு அங்கிருந்து நேராகப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று வகுப்புகளை முடித்துவிட்டு மாலை 4.30 அல்லது 5 மணி வாக்கில் திரும்புவாள். 

ல: உங்களிடமிருந்து பெற்ற ஊக்கமா?

சு: இருக்கலாம்… (சிரிக்கிறார்)

ல: சுசித்ரா, நீங்கள் பல்வேறு விதமான வேலைகள் செய்திருப்பதாகக் கூறினீர்கள்.

சு: ஆமாம், நான் பல்வேறு விதமான வேலைகள் செய்திருக்கிறேன். எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். நான் கல்லூரியில் இருந்தபோது, பட்டம் பெறுவதற்குமுன், பின்னி  கம்பெனியின் முகவரான தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்தேன். அந்தக் காலகட்டத்தில் பின்னி கம்பெனி இருந்தது, அவர்களுக்கு இங்கு முகவரும் இருந்தார்… அதன்பிறகு வேறொரு நிறுவனத்தில் சேர்ந்தேன், ஸிங்க்ளேர் ஃப்ரேய்ட் அண்ட் சார்டரிங்க், அங்கு சில காலம் இருந்தேன். பிறகு நியூ கெலின்வொர்த் ஹோட்டலில்  தொலைபேசி இயக்குபவராகச் சேர்ந்தேன். நான் தொலைபேசிகளை மிக நன்றாகக் கையாள்வேன். (சிரிக்கிறார்.)  பெரிய தொலைபேசிப் பலகை ஒன்றை என்னிடம் கொடுங்கள், நான் சமாளிப்பேன். இணைப்புகள் வழங்குவதில் நான் சிறப்பாகச் செயல்படுவேன். இந்த அனுபவங்கள் எல்லாம் பிற்பாடு என் வாழ்வில் மிகுந்த உதவியாக இருந்தன. 

ல:  பல வித்தியாசமான பணிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், அதனாலா?

சு: பல்வேறு விதமான பணிகள். அரசாங்கப் பணியும்கூட செய்திருக்கிறேன். மாநில மின்சார வாரியத்தில் சில ஆண்டுகள் இருந்தேன், அதன்பிறகு நுகர்வோர் விவகாரங்கள் துறைக்குச் சென்றேன். எனவே, என் வாழ்வில் நான் நிறைய பேரைச் சந்தித்திருக்கிறேன், பல்வேறு விதமானவர்களைப் பார்த்திருக்கிறேன். அது என்னுடைய எழுத்துக்கு மிகவும் உதவியாக இருந்தது; எனக்கு மிகவும் உதவியது.

ல: அனுபவங்கள் கதைகளாகின்றன.

சு: அவை ஆகலாம், நிச்சயமாக அவை  [கதைகள்] ஆகலாம். நான் மாதுரி என்ற என்னுடைய நூலில் உள்ள சிறுகதை என்னுடைய அலுவலகத்தில் நடந்த சம்பவம். அதை உங்களுக்குக் காண்பிக்கிறேன், நீங்கள் படித்துப் பாருங்கள்…

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.