நற்சாட்சிப் பத்திரம்
இன்று பிறந்த குழந்தையிடமிருந்து
வந்தது செய்தி.
கிடைத்து விட்டது நற்சாட்சிப் பத்திரம் அவளுக்கு.
அறிவிக்கிறாள் ஆகையால் முன்பின் அறியாத இப்புதிய உலகிற்கு
காதைத் துளைக்கும் அழுகையின் மூலமாகத் தன் உரிமைகளை!
நிராதரவற்ற சிறியவளாக இருப்பினும்,
தன் கைமுஷ்டியை உயர்த்துகிறாள்,
அதில் புரிந்துகொள்ள முடியாத சபதம் ஒளிர்கிறது.
யாருக்கும் புரியவில்லை.
சிலர் சிரிக்கிறார், சிலர் வசைபாடுகிறார்
ஆனால் எனக்கு அவள் மொழி புரிகிறது.
அவளது மங்கலான தெளிவற்றக் கண்களை நான் வாசிக்கும்போது
அக்குழந்தையின் நம்பிக்கையூட்டும் வரும் காலத்தின் அறிகுறிகளை
என்னால் பார்க்க முடிகிறது.
புதிய குழந்தை வந்து சேர்ந்திருக்கிறாள்.
நாம் அவளுக்கான இடத்தைத் தயார் செய்ய வேண்டும்;
பின் இந்தப் பழம்பூமியின்
சிதைந்தழிந்த தரிசு நிலத்துக்குள் நகர்ந்து விட வேண்டும்.
நாம் வெளியேறி விட வேண்டும். அதற்குமுன்
என் மூச்சுள்ளவரையில்,
என் முழு சக்தியையும் கொண்டு
பூமியின் முகம் மேலுள்ள
குப்பைகளைத் துப்பரவு செய்தபடியே இருப்பேன்.
இந்தக் குழந்தை வசிக்கத் தகுந்ததாக இந்த உலகை உருவாக்குவேன்;
இது, புதிதாகப் பிறந்த சிசுவுக்கு நான் கொடுக்கும் உறுதிமொழி.
என் பணி முடிந்ததும்
என் சொந்த இரத்தத்தினால்
குழந்தையை ஆசிர்வதிப்பேன்.
அதன் பிறகு, நான் வரலாறு ஆவேன்.
ஓ பெருவாழ்வே!
போதும் இனி இந்தக் கவிதை.
கடுமையான இனிமையற்ற
உரைநடையைக் கொண்டு வாருங்கள், பதிலுக்கு.
மறையட்டும் கவிதையின் சந்தங்கள்
ஓங்கியடிக்கட்டும் உரைநடையின் பலத்த சுத்தியல்.
கவிதை தரும் அமைதி இனி அவசியமில்லை;
கவிதையே, உனக்கு இன்று நான் விடுமுறை தருகிறேன்.
பசி ஆட்சி செய்கையில், இப்பூமி உரைநடைக்கே உரித்தானது.
முழு நிலவு தீய்ந்த ரொட்டியை நினைவூட்டுகிறது, எங்களுக்கு.

- மூலம் (வங்காள மொழியில்..): Sukanta Bhattacharya (সুকান্ত ভট্টাচার্য)
- ஆங்கில மொழியாக்கம்: Rini Bhattacharya Mehta
- ஆங்கிலம் வழித் தமிழில் – ராமலக்ஷ்மி
சுகாந்தொ பட்டாச்சார்யா
கவிஞரும் நாடகாசிரியருமான சுகாந்தொ பட்டாச்சார்யா (সুকান্ত ভট্টাচার্য:1926-1947) நவீன வங்காளக் கவிஞர்களான இரவீந்திரநாத் தாகூர், காஜி நசருல் இஸ்லாம் போன்றோர் வரிசையில் முக்கியமாக அறியப்பட்ட மற்றுமோர் எழுத்தாளர். வாழ்ந்த காலத்தில் இவரது கவிதைகள் பரவலாக அறியப்படவில்லை. இவர் காலமான பிறகே பெரும்பாலான இவரது படைப்புகள் வெளிவந்தன என்பதோடு, இவர் மீதான மரியாதையும் பன்மடங்கு உயர்ந்து இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த வங்காளக் கவிஞர்களில் ஒருவராகப் போற்றப் பட்டார்.
சுகாந்தொவின் கவிதைகள் புரட்சி, பொதுவுடைமைச் சிந்தனை, தேசப்பற்று, மனித நேயம் மற்றும் காதல் ஆகிய வகைகளுக்காக குறிப்பாக அறியப்பட்டன.
பெற்றோர் நிர்பன் சந்திர பட்டாச்சார்யா, சுநிதி தேவி ஆகியோரின் ஆறு மகன்களில் இரண்டாவதாகப் பிறந்தவர். நூல்களை விற்கும், பிரசுரிக்கும் சரஸ்வத் நூலகத்தின் உரிமையாளர் இவரது தந்தை. மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதலமைச்சர் புத்ததேப் பட்டாச்சார்யா இவரது மருமகன்.
கொல்கத்தாவின் காளி காட்டில், தனது தாய்வழிப் பாட்டனார் வீட்டில் வளர்ந்தார். ‘கமலா வித்யாமந்திர்’ ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போது தொடங்கியிருக்கிறது இவரது இலக்கியப் பயணம். இவரது முதல் சிறுகதை ‘சஞ்சே’ எனும் பள்ளி மாணவர் பத்திரிகையில் வெளியானது. 1944ஆம் ஆண்டு பெலகட்டா தேஷ்பந்து உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போது கம்யூனிச கட்சியில் இணைந்தார். அடுத்த ஆண்டு நடைபெற்ற பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி அடையவில்லை. கட்சியின் தினசரியில் ‘கிஷோர் சபா’ எனும் இளைஞர் பிரிவுக்கு ஆசிரியராகப் பணியாற்றி வந்திருக்கிறார். 1947_ஆம் ஆண்டில் காசநோயால் பாதிக்கப்பட்டு காலமானார்.
இவரது எல்லாப் படைப்புகளும் இவரது கம்யூனிஸக் கொள்கை மற்றும் அனுபவங்களின் ஆழமான வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன. குறிப்பாக ‘‘சார்பத்ரா’ எனும் நூலில் இடம்பெற்ற, பசியின் வெளிப்பாடாக நிலவைத் தீய்ந்த ரொட்டியுடன் ஒப்பிடும் “ஹெ மஹாஜிபான்” (Oh Great Life!) கவிதை பலராலும் பேசப்பட்ட ஒன்றாகும். இக்கவிதையின் பின்னணியை அறிந்து கொள்வது அவசியமாகிறது. 1943_ஆம் ஆண்டு நிலவிய பஞ்சத்தின் போது, சுகாந்தொ பட்டாச்சார்யா நிவாரணப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கொல்கத்தாவில் பசியால் துவண்டிருந்த மக்களுக்கு உணவுப் பொருட்கள் சரியாகச் சென்றடையப் பாடுபட்டார். பிரிட்டஷ் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில் கொண்டு வந்த சட்டங்களே பஞ்சத்திற்குக் காரணமாக மக்களால் பார்க்கப்பட்டது. அது விவாதத்திற்குரியதாக இருந்தாலும் பசியால் மக்கள் தெருக்களில் வீழ்ந்து மாண்டது ஆட்சிக்கு எதிராக மக்களின் கோபத்தை அதிகரித்தது. அதன் வெளிப்பாடாக சுகந்தா எழுதியதே “ஹெ மஹாஜிபான்” கவிதை.
‘சார்பத்ரா’ நூலையும், சில பத்திரிகைகளில் வெளியான கவிதைகளையும் தவிர்த்து வியப்புக்குரிய பெரும்பாலான இவரது படைப்புகள் இவர் காலமான பிறகே வெளிவந்த நிலையில், இவரது விரிவான வாழ்க்கை வரலாற்றை அறிய உதவியாக இருந்தது இவரது இளைய சகோதரரான அமியா பட்டாச்சார்யா எழுதிய “கபி சுகாந்தொ பட்டாச்சார்யா ஓ செ சமே” எனும் நூலே ஆகும்.
1967_ ஆம் ஆண்டு கொல்கத்தாவின் சரஸ்வத் நூலகத்தின் மூலமாக ‘சுகந்தா சமக்ரா’ எனும் சுகந்தாவின் முழுமையான படைப்புகள் வெளிவந்தன. வாழ்ந்த நாளில் அதிகம் அறியப்படாத எழுத்துக்களோடு, அவரது நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள் ஆகியவற்றோடு தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது கடிதங்களும் அதில் இடம் பெற்றன.
One Reply to “சுகாந்தொ பட்டாச்சார்யா கவிதைகள்”