சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 4

This entry is part 18 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

ரவி நடராஜன்

இந்தக் கட்டுரையில், மூன்று சம்பந்தப்பட்ட தளங்களில் சிகரெட் தொழிலின் திரித்தல்கள் அலசப்படும். இந்த் மூன்று தளங்களும் 1970 முதல் 2000 வரை தொடர்ந்தது. இந்த மூன்று தளங்கள்: 1) சிகரெட் பிடிப்பதால் வரும் புற்று நோய்த் தளம் 2) நிகோடின் என்ற வஸ்துவின் அடிமைத்தனமாக்கும் தளம் 3) இரண்டாம் பட்ச புகையினால் வரும் உடல்நலப் பாதிப்பு. இந்த மூன்று தளங்களிலும் ஒரே சமயத்தில் அறப்போர் நிகழ்ந்ததால், சில வருடக் குறிப்புகள் குழப்பமாகத் தோன்றலாம். ஆனால், இவற்றைப் பலமுறை சரிபார்த்துவிட்டேன்.

1970–களிலும் சிகரெட் நிறுவனங்களின் விஞ்ஞானத் திரித்தல் முழு மூச்சில் நடந்தது. உதாரணத்திற்கு, BAT நிறுவனத்தின் ரகசியக் கடிதப் போக்குவரத்துகள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளன. “நாங்கள் டாக்டர்கள் அல்லர், தயாரிப்பாளர்கள் என்று சொல்லிவிட்டுச் சும்மா இருக்கமுடியாது. சிகரெட் பிடிப்பது பாதுகாப்பானது என்று நுகர்வோருக்குப் புரியவைக்க வேண்டும்.”

இதைவிட இன்னும் மோசமான ஒரு சிகரெட் தொழிலின் கடிதப் போக்குவரத்தில், அமெரிக்கப் புகையிலைக் கழகத்தின் ஃப்ரெட் பேன்ஸர், 1972-ல் சொன்னது இவர்களுடைய இரட்டை வேடத்தை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. அதில்,

”கடந்த 20 ஆண்டுகளாக, சிகரெட் தொழில் தன்னுடைய நலனுக்காக வழக்கு, அரசியல் மற்றும் பொதுவெளிக் கருத்து என்று மூன்று பக்கத்திலும் போராடி வந்துள்ளது. இது அருமையான முயற்சி என்றாலும், வெற்றிபெறும் முயற்சி அன்று. நமது நோக்கம் வெற்றிபெறுவது. எப்படி இதைச் செய்வது?

1. முதலாவதாக, புற்றுநோய் வருமா என்றால், அதை மறுக்க வேண்டாம். அதற்குப் பதிலாக, கேள்வி எழுப்புபவருக்குச் சந்தேகம் வரும்படி செய்யவேண்டும்.

2. இரண்டாவதாக, புகை பிடிப்பது சட்ட விரோதமன்று. புகை பிடிப்பவருக்கும் உரிமைகள் உண்டு என்று கூக்குரல் எழுப்பவேண்டும்.

3. மூன்றாவதாக, விஞ்ஞான ஆராய்ச்சி, பாரபட்சமின்றி நடக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்க வேண்டும்.”


அடடா, என்ன அக்கறை விஞ்ஞான ஆராய்ச்சிமீது, இவர்களுக்கு! இதில் முதல் மற்றும் மூன்றாவது தாக்குதல், விஞ்ஞானத்தைப் பணத்தால் குழப்பும் ஒரு லாப நோக்குள்ள நிறுவன முறை. முதலில் விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகளைக் கேள்விகேட்டு, முழு உண்மை அறியாத ஊடகத்தைக் குழப்புவது. அடுத்தபடியாக, பாரபட்சமின்றி விஞ்ஞான ஆராய்ச்சி நடக்க வேண்டும் என்று சொல்லிவிட வேண்டும். அப்படிச் சொல்வதால், விஞ்ஞானம் சிகரெட் நிறுவனங்களைக் குறிவைத்துப் பாரபட்சம் காட்டுகிறது என்று பொதுவெளியில் கருத்து உருவாகும். என்ன உள்குத்து இது! அத்துடன், இந்தப் பொதுவெளியில் இருப்பவர்கள்தான் வாடிக்கையாளர்கள். இவர்கள், இதில் ஏதோ கசமுசா இருக்கிறது என்று செய்திகளை உதறிவிட்டு, சிகரெட் ஊதப் போய்விடுவார்கள்! என்ன ஒரு சாணக்கியம்!

1980–களில், இந்த பனிப்போர் இன்னும் வலுவானது. அமெரிக்க சர்ஜன் ஜென்ரல், ஒருபடி மேலேபோய், “புகைபிடிப்பது, நமது சமூகத்தில் உள்ள மிகப் பெரிய தவிர்க்கக்கூடிய இறப்புகளுக்குக் காரணம். பொது மருத்துவத்தின் மிகப் பெரிய பிரச்னை புகைபிடிப்பது” என்றார்.

உடனே சிகரெட் நிறுவனங்கள் என்ன சொல்லின? “புகைபிடித்தால் புற்றுநோய் வரும் என்று சொல்வது வெறும் ஒரு பொதுக் கருத்து – அவ்வளவுதான். விஞ்ஞான முடிவு ஒன்றும் அன்று.”

எப்படி இவர்களின் தொனி மாறுகிறது பாருங்கள். இல்லவே இல்லை என்று மறுப்புத் தெரிவித்தல் ஒன்றே வழி என்று முடிவாக, அத்தனை விஞ்ஞான ஆராய்ச்சியையும் ஒதுக்கிவிட்டுப் பணபலத்தால், எப்படியாவது தொடர்ந்து லாபம் ஈட்டிக்கொண்டே இருக்க வேண்டும்!

1990–ல், அமெரிக்க நீதிபதி சரோகின், சிகரெட் தொழில் மீதுள்ள வழக்கின் முடிவில் மிக அழகாக இவ்வாறு கூறினார் (இதைக் கல்வெட்டாக ஒவ்வொரு ஊரிலும் பதிக்கவேண்டும்):

“நுகர்வோரின் உடல் நலனா அல்லது லாபமா என்ற கேள்வி எழும்போது, சிகரெட் தொழில், மிகத் தெளிவாக இயங்கியுள்ளது.

1. உண்மைகளை மறைப்பதை, நுகர்வோரை எச்சரிப்பதைவிட முக்கியமாகக் கருதுகிறது.

2. விற்பனையைப் பாதுகாப்பைவிட முக்கியமாகக் கருதுகிறது.

3. பணத்தை அறத்தைவிட முக்கியமாகக் கருதுகிறது.


இந்தத் தொழில் தெரிந்தும், ரகசியமாக, நுகர்வோரின் உடல்நலத்தை லாபத்திற்காகப் பகடையாக்குகிறது. சிகரெட் தொழில், உண்மைகளை மறைக்கும் விஷயத்தில் ராஜா.”

RJ Reynolds என்ற சிகரெட் நிறுவன ஆராய்ச்சியில் பணிபுரிந்த ஆண்டனி கோலுச்சி என்பவர், இந்தத் தொழிலைவிட்டு நீங்கியபின், இவ்வாறு 1992–ல் கூறினார், “எத்தனை நாள்தான், சிகரெட்டினால் நோய் வராது என்று மறுத்துக்கொண்டே இருப்பது? விஞ்ஞானம் தெளிவாகச் சொல்லிவிட்டது. சிகரெட் கொல்லும். ஏன், இந்தத் தொழில், ”சிகரெட் பிடிப்பதால் புற்றுநோய் வரும். நீங்கள் எடுக்கும் ரிஸ்க் இது” என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ளக் கூடாது? ஒன்றை இங்கு கவனியுங்கள். விஞ்ஞானம் வென்றுவிட்டது என்று அவர் சொல்லவில்லை. விஞ்ஞானத்திற்கு உண்மை மட்டுமே முக்கியம் – வெற்றி அல்லது தோல்வி, மனிதர்களுக்குத்தான் முக்கியம்.

ஆனால், அவ்வளவு எளிதில் இதை ஒப்புக்கொள்வார்களா? மறுத்துக்கொண்டே இருந்தார்கள். அடுத்தபடியாக, நிகோடின் என்ற ரசாயனம் புகைபிடிப்போரை அந்தப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் என்பதை இன்று நாம் அறிவோம். விஞ்ஞானம், இதைத் தெளிவாக நிரூபித்தும்விட்டது. சிகரெட் தொழில், தங்களது தயாரிப்பு நுகர்வோரை இந்தப் பழக்கத்திற்கு அடிமைப்படுத்தாது என்று பல்லாண்டுகள் சொல்லிவந்தது. அடுத்தகட்ட பனிப்போர், புற்றுநோயிலிருந்து நிகோடினுக்கு மாறியது.

1998–ல், பிரிடிஷ் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவுகள் இவைதான்.

1. “நிகோடின் என்னும் ரசாயனம், அதைப் பயன்படுத்துபவர்களை மீண்டும் மீண்டும் உபயோகிக்குமாறு அடிமைப்படுத்துகிறது. ஹெராயின், கோகேய்ன் போன்ற போதை மருந்துகளுக்கு மனிதர்கள் அடிமையாவதன் முக்கியக் காரணம் நிகோடின். இதே நிகோடின்தான் மனிதர்களைப் புகைபிடிக்கும் பழக்கத்திற்கும் ஆளாக்குகிறது.”

2. ”இளமையில் நிகோடினுக்கு அடிமையானால், அதை விடுவது வளர்ந்த மனிதனுக்குக் கடினமாகிவிடுகிறது. மனிதனின் உடல் அதே அளவு நிகோடினுக்காக ஏங்கத் துவங்குகிறது. இதனாலேயே, சிகரெட் நிறுவனங்கள், இளமையில் இந்தப் பழக்கத்தை ஏற்படுத்தத் துடியாக இருக்கின்றன.”

3. ”புகைபிடிப்பதை நிறுத்தமுயன்றால், இவர்களுக்கு, கவனிப்புச் சக்தி குறைகிறது, எரிச்சல் கூடுகிறது, மனக்கவலை, அமைதியின்மை, மனச்சோர்வு யாவும் நேர்கின்றன. இவர்களுக்குப் புகைபிடித்தால் மட்டுமே, இந்தப் பிரச்சினைகள் தீரும் என்று உடல் ஏங்கத் தொடங்குகிறது. இதற்குக் காரணம் நிகோடின். இது சோதனை முறையில், புகை அல்லாத நிகோடின் ஒட்டுமூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.”

4. ”இந்தக் காரணங்களால், புகைபிடிப்பவர்கள் நிறுத்தவேண்டும் என்று நினைத்தாலும், சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப்பின் மீண்டும் இந்தப் பழக்கத்திற்குத் தாவிவிடுகிறார்கள்.”

5. ”இந்த நிகோடின் அடிமைத்தனத்திலிருந்து (சிகரெட் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது) மக்களை விடுவிப்பது ஒரு மிகப்பெரிய பொது மருத்துவநலச் சவால்.”

இதென்ன புது பூதம் கிளம்பிவிட்டது, நம் லாபம் போயே போய்விடுமோ என்று சிகரெட் தொழில் அஞ்சத் தொடங்கியது. இருக்கவே இருக்கிறது, கைவசமுள்ள விஞ்ஞானக் குழப்ப முறைகளை அவிழ்த்துவிடத் தொடங்கியது.

1994 –ல், அமெரிக்க செனட்முன் நடந்த விசாரணையில் Philip Morris, RJ Reynolds, போன்ற பெரிய சிகரெட் நிறுவனங்களின் தலைவர்கள், ‘நிகோடின் மக்களை அடிமைப்படுத்தும் என்று நாங்கள் நம்பவில்லை’ என்று சொல்லி வைதாற்போல ஒரே மாதிரியாகப் புளுகினார்கள்.

1996–ல் BAT–ன் தலைவர், ”நாங்கள் எதையும் மறைக்கவில்லை. மறைக்கவும் மாட்டோம். எங்களது ஆராய்ச்சியில் சிகரெட் புகைப்பதில் மக்களை அடிமைப்படுத்தும் தன்மை எதுவும் இருப்பதாக நிரூபணமாகவில்லை” என்றார்.

அதே 1996–ல், Philip Morris–ன் தலைவர், “சிகரெட் புகைப்பது மக்களை அடிமைப்படுத்தும் என்று சொல்வது ஒரு கருத்து, அவ்வளவுதான். விஞ்ஞான முறைப்படி எதுவும் நிரூபிக்கப்படவில்லை” என்று சொன்னார்.

இது மட்டும் போதாது என்று அடுத்தகட்டத் தாக்குதலாக, BAT இப்படிக் குழப்பப் பார்த்தது, “காபி, டீ மற்றும் கோகோ கோலாவிலும் நிகோடின் உள்ளது. எதில்தான் நிகோடின் இல்லை? சும்மா, விஞ்ஞானிகள் இதைப் பெரிதுபடுத்துகிறார்கள்.”

கடைசியாக, இரண்டாம் பட்ச சிகரெட் புகைப் (second hand smoke) பிரச்சினை. முதலில், விஞ்ஞானிகள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்.

1. இரண்டாம் பட்ச சிகரெட் புகை, தொடர்ந்து உள்வாங்குவோருக்கு 20% முதல் 30% அதிக புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.

2. ஒரே வீட்டில் வசிக்கும் சிகரெட் பிடிக்காதவர்களுக்கு, பிடிப்பவரால் 23% அதிகப் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.

3. புகைபிடிக்கும் கர்பிணிப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தை இறப்பதற்கு (பிறந்த ஓரிரு ஆண்டுகளில்) இரட்டிப்பு ரிஸ்க்.

4. இரண்டாம் பட்ச சிகரெட் புகையால் ஆஸ்மா, நடுக்காதில் தொற்று, நிமோனியா என்று பல வகை நோய்கள் குழந்தைகளுக்கு வர வாய்ப்புள்ளது. வளர்ந்தவர்களுக்கு, இருதய மற்றும் நுரையீரல் புற்றுநோய், என்று இதர பல நோய்கள் வரவும் வாய்ப்புள்ளது.


இந்த விஷயங்களை மழுங்க அடிக்க சிகரெட் நிறுவனங்கள், உடனே குழப்பப் பிரச்சாரத்தில் இறங்கிவிடுவது வழக்கம். அதையே இந்த விஷயத்திலும் செய்தார்கள்.

“சிகரெட் நிறுவனங்களின் எதிரிகள், இரண்டாம் பட்சப் புகையினால் பல நோய்கள் வரும் என்று பீதியை அநாவசியமாகக் கிளப்பிவிட்டுள்ளார்கள். இதில் எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லை. இவர்களது குறிக்கோள், புகைபிடிப்பதைச் சமூகம் ஒப்புக்கொள்ளாதபடி செய்வதே.”

அடுத்தபடி, RJ Reynolds–ன் தலைவர் 1976–ல், “சிகரெட் தொழிலின் எதிரிகள், புகைபிடிதலுக்கு எதிராகத் தீவிரமாகிவிட்டார்கள். இவர்களின் தாக்குதலை முறியடிக்கவேண்டும். இப்படிச் சுற்றி இருப்பவருக்கும் நோய்வரும் என்று பூச்சாண்டி காட்டி நம் தொழிலையே அழித்துவிடுவார்கள். நாம் புகைபிடிப்போரின் உரிமைக்காகக் குரல் கொடுக்கவேண்டும். அவர்களும் வரி கட்டும் குடிமக்கள்தானே.”

அமெரிக்கப் புகையிலைக் கழகம், 1978–ல் இவ்வாறு ஓர் அறிக்கையைப் பொது மக்கள் தொடர்பு அமைப்பான Roper–இடமிருந்து பெற்றது:

“புகைபிடிப்பவர், அவருடைய உடல்நலத்திற்கு என்ன கேடு விளைவிக்கிறார் என்பது அவரது இஷ்டம். ஆனால், புகைபிடிப்பவர் அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு என்ன கேடு விளைவிக்கிறார் என்பது இன்னும் அபாயகரமான விஷயம். இந்த ஆராய்ச்சியை வளரவிட்டால் நம் தொழிலையே அழித்துவிடுவார்கள். நம் குறிக்கோள், நம்மிடம் உள்ள விஞ்ஞான சக்திகளைத் திரட்டி, இந்த விஷயத்தை முறியடிக்கவேண்டும்.”

1998–ல், ஒரு சிகரெட் தொழிலின் பத்திரிகையில் (Tobacco International), மிகப் பெரிய ஒரு மேதாவித்தனமான அறிக்கை வந்தது, “கம்யூனிஸம் ஏன் தோற்றது? மக்களுக்கு தேர்ந்தெடுப்பு (choice) இல்லாததே காரணம். சிகரெட், இத்தனைத் தாக்குதல்களையும் மீறி எப்படி இன்னும் கொடிகட்டிப் பறக்கிறது? புகைபிடிப்போருக்கு தாராளமான தேர்ந்தெடுப்பு இருப்பதால்.”
முதலில் இவர்கள் விஞ்ஞானிகளைப்போல முகமுடி அணிந்து குழப்பிப் பார்த்தார்கள். அது வேகவில்லை என்று தெரிந்து, அரசியல் மேதாவிகளானார்கள்!

இவர்களின் விஞ்ஞானத் திரித்தலில் இருக்கும் படிகளை மேலே பார்த்தோம். சுருக்கமாகச் சொன்னால்,

1. விஞ்ஞானம் சொல்வதை முதலில் முழுவதும் மறுக்கவேண்டும்.

2. நம்மூர் அரசியல்வாதி ஸ்டைலில், தொழிலின் எதிரிகளின் சதி என்று அறிவிக்கவேண்டும்.

3. இது எதுவும் சரியாக வேலை செய்யவில்லை என்றால், தனி மனிதச் சுதந்திரம் பற்றிக் குழப்பவேண்டும்.

4. கடைசியாக, அரசியல் ரீதியில் சுதந்திரம் பற்றிப் பேசிக் குழப்பவேண்டும்.

இந்தக் கட்டுரைத் தொடரை யாராவது அரசியல்வாதி படித்துவிடக்கூடாது. இல்லையேல், சிகரெட் தொழில்பற்றி ஆராயத்தொடங்கி, நம் தலையை உருட்டத் தொடங்கிவிடுவார்கள்.
இரண்டாம் பட்சப் புகைபற்றிய ஆராய்ச்சியால் இன்று பல கட்டடங்களில் புகைபிடிக்க அனுமதி இல்லாமல் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம். இந்தக் கடினமான சிகரெட் தொழிலுக்கு எதிரான வெற்றிகள் ஓரளவிற்கு மேற்குலகில் இருந்தாலும், சிகரெட் தொழில் ஆசியா, கிழக்கு யுரோப் மற்றும் ஆப்பிரிக்காவில் அமோகமாக நடந்துவருகிறது. மேற்குலகில் புகைபிடிப்போருக்கு, அந்தப் பழக்கத்திலிருந்து மீள பலவகை முயற்சிகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால், இதிலும் ஒரு புதிய சிக்கல் கடந்த பத்து ஆண்டுகளாகத் தோன்றியுள்ளது. அது மின்னணு சிகரெட். இதைப்பற்றி விரிவாக அடுத்த இரு பகுதிகளில் பார்ப்போம்.

Series Navigation<< சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 3மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 1 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.