சக்தி சட்டோபாத்யாய் கவிதைகள்

தமிழாக்கம்: கு. அழகர்சாமி

ரவீந்திரநாத் தாகூர், ஜீபனானந்தா தாஸ் தவிர, வங்க இலக்கிய உலகில் தான் வாழ்ந்த காலத்தில் இவரைப் போல் மிகவும் கொண்டாடப்பட்ட கவிஞர் வேறு யாருமில்லை என்று சொல்லும்படியான சிறப்புக்குரிய கவிஞர் சக்தி சட்டோபாத்யாய் (1933-1995)). இன்றளவும்  வங்காள மொழியின் முதன்மையான கவிஞர்களில் ஒருவர் இவர்.  நவீன வங்க மொழிக் கவிதைக்கு இவர் அளித்த பங்களிப்புகள் அடிப்படையானவை. இவர் எழுத வந்த காலத்தில்,  பெரும்பாலான கவிஞர்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் பின்புலத்தினராய் இருந்தனர். எனவே அவர்களின் கவிதைகளில் பாண்டித்தியமும் புலமையும் இருந்த அளவு வாழ்வுடனான தொடர்பும் வீச்சும் இல்லை. சக்தி சட்டோபாத்யாயின் கவிதைகள் இதைத் தலைகீழாக மாற்றின. இவர் கவிதைகள் தன் இளம் பிராயத்தில் அனுபவமான நாட்டுபுற வாழ்வில் நிலை கொண்டு, அதன் பண்பாட்டுக் கூறுக்ளையும், நாட்டார் வழக்காற்றுச் சொற்களயும், படிமங்களையும் பாண்டித்திய வடமொழிச் சொற்றொடர்களோடு ஊடாட வைத்து வங்கக் கவிதைகளுக்கு ஒரு வசீகரப் புத்துயிர்ப்பினைக் கொடுத்தன. சக்தி சட்டோபாத்யாயின் வாழ்க்கையின் பெரும்பகுதி பெருநகரான கல்கத்தாவில் கழிந்தாலும், இவர் கவிதைகளின் அடிச்சரடாய், உயிர்ப்பாய் இருந்த நாட்டுப்புறக் கூறுகளால், இவர் கவிதைகள் நகரிய நாட்டுப்புறத் தன்மையன(Urban pastoral) என்று அடையாளப்படுத்தப்பட்டன.

வங்க இலக்கியத்திற்கு சக்தி சட்டோபாத்யாயின் இன்னொரு  முக்கியமான பங்களிப்பு அவர் முன்னெடுத்துச் சென்ற ஓர் இலக்கிய இயக்கம்.. வங்கக் கவிஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து  1961-ல் Hungryalists or  Hungry Generation Movement என்ற இலக்கிய இயக்கத்தை தொடங்கினர். இவ்வியக்கத்தில் தீவிரமாக இயங்கிய  நால்வரில் சக்தி சட்டோபாத்யாய் ஒருவர். இவ்வியக்கம் தன் தத்துவார்த்தத்தை ஆஸ்வால்டு ஸ்பெங்லரின்( Oswald Spengler)  வரலாற்றுக் கோட்பாட்டில் அமைத்துக் கொண்டது. இக் கோட்பாட்டின் சாராம்சம் நோய்வாய்ப்பட்ட ஒரு கலாச்சாரம் அயன்மைக கலாச்சாரக் கூறுகளின் மேல் ஒட்டுண்ணியாய் உண்டு உயிர்வாழும் என்பது. இவ்வியக்கத்தினர். வஙக இலக்கியம் தனது உச்சத்தை ஏற்கனவே அடைந்து தேங்கி விட்டது. அது தற்போது அயன்மைக் கலாச்சாரக் கூறுகளை உணவாகக் கொண்டு உயிர் வாழ்கிறது எனக் கருதினர். ஏராளமான இளங்கவிஞர்கள் தம்மை இவ்வியக்கத்தில் இணைத்துக் கொண்டனர். இவர்களின் கவிதைகள் புலம்பெயர்ந்தோரின் பாடுகளைப் பேசின. அரசுக்கும் மற்றும் வழக்கமான சமூக, மத, ஒழுக்க நெறிகளுக்கும் எதிரான கருத்துக்களை முன்வைத்தன. விளைவு இவ்வியக்கத்தினர் மீது அரசுக்கு எதிரான சதி என்றும் இவர்களின் படைப்புகள் ஒழுக்கக் கேடானவை என்றும் அரசின் வழக்கு பாய்ந்தது.. பல்லாண்டுகளாய் நீடித்த இவ் வழக்கு உலக கவனத்தை ஈர்த்தது. ஆக்டேவியா பாஸ் (OctavioPaz),  அலென் கின்ஸ்பெர்க் (Allen Ginsberg) போன்ற புகழ் பெற்ற  உலகக் கவிஞர்களும் இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளித்தனர். பின்னர் கருத்து வேறுபாடுகளால், சக்தி சட்டோபாத்யாய் இவ்விலக்கிய இயக்கத்தினின்று வெளியேறினார். இன்றளவும் வங்கத்தின் ஒரே ஒரு முக்கிய இலக்கிய இயக்க நிகழ்வாய் இவ்வியக்கம் கருதப்படுகிறது. இக் கட்டத்தில் இவ்விலக்கிய இயக்க நிகழ்வை தமிழகத்தில் எழுபதுகளில் இயங்கிய வானம்பாடி இயக்கத்தோடும் ஒப்பிட்டுக் காணலாம். ஆனால் அறுபதுகளில் இயங்கிய Hungryalists இயக்கம், வானம்பாடி இயக்கம் போன்று தன் ஊற்றினை மார்க்சியத்திலிருந்து எடுத்துக் கொள்ளாமல், இன்னொரு இலக்கிய வரலாற்றுக் கோட்பாட்டிலிருந்து எடுத்துக் கொண்டது. சக்தி சட்டோபாத்யாயும் மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டவர் தான். பின்னர் கம்யூனிசக் கட்சியிலிருந்து விலகியவர். வானம்பாடிக் கவிதைகள் சமூக நோக்குடன் தமிழின் மரபுக் கவிதைப் போக்குக்கு எதிராக தனித் தமிழிலில்லாமல் , புரட்சி முழக்கங்களோடு தம் வருகையைப் பதிவு செய்தவை. அக் கவிதைகள் பிரச்சாரத் தன்மை கூடியவையாயினும், யாப்புத் தளையிலிருந்து விடுவிக்கப்பட்ட புதுக்கவிதைப் புதுமரபை பரவலாக மேலெடுத்துச் சென்ற சிறப்புக்குரியவை. Hungryalists இயக்கக் கவிதைகளுக்கும், வானம்பாடிக் கவிதைகளுக்கும் இடையே பத்தாண்டு இடைவெளி இருந்தாலும் இரண்டின் பாடுபொருள், உத்தி, படிமங்கள், மொழி  போன்ற கவிதைக் கூறுகளில் ஓர் ஒப்பீட்டு ஆய்வு நடந்தால் அது இலக்கிய ஆய்வுலகுக்கு புது வரவாக இருக்கும்.

சக்தி சட்டோபாத்யாய் தான் வாழ்ந்த காலத்தில் ஏராளமானோர் பின்பற்றக் கூடிய ஒரு ஆராதனை நிலையைப் (Cult status) பெற்றவரென்று கூட ஒரு அபிப்ராயம் உண்டு. இவரின் கவிதை நடையை மட்டும், இவரைப் பின்பற்றியவர்கள் வசீகரமாய்ப் பார்க்கவில்லை. மிகை குடியில் கட்டற்ற சுதந்திரத்தில், தன் கால் போன போக்கில் இவர் வாழ்ந்த வாழ்க்கையும் அவர்களுக்கு வசீகரமாய் இருந்தது. இவர் வாழ்ந்த வாழ்க்கையை ஒரு வித உன்மத்த வாழ்க்கை  ( A Bohemian life )  என்றே சொல்லலாம். மிகை குடியில் இவர் நாட் கணக்காய் தலை காட்டாமல் போவதுண்டு. இவரின் தேசாந்திரித் தனம் பற்றிய கதைகள் ஏராளம். ஒரு முறை நண்பரொருவரை இரயிலேற்றச் சென்றவர், அதற்குப் பதிலாய் தானே இரயிலேறி நான்கு மாதங்கள் கழித்து திரும்பி வந்தாராம். அதே போல், திருமணமான புதிதில், கடைக்கு சிகரெட் வாங்கச் சென்றவர் பூட்டானுக்கு காரில் செல்கின்ற ஒரு நண்பரை வழியில் கண்டு அவரோடேயே பூட்டானுக்கு கிளம்பிப் போய் விட்டாராம். சக்தி சட்டோபாத்யாய வறுமையின் நேரடி அனுபவத்திற்கு உள்ளாகியவர். தன் வாழ்வின் ஒரு கட்டத்தில், தன் தாயோடும் சகோதரரோடும் சேரியில் தன் வாழ்வினை நடத்தியவர். ஆனாலும், தனக்குக் கிடைத்தது ஒரு வாழ்க்கையல்ல பல வாழ்க்கைகள் என்பது போல ஆனந்தித்து செலவழித்து வாழ்ந்தவர். இவரின் சமகாலத்திய இன்னொரு மகத்தான படைப்பாளியான சுனில் கங்கோபாத்யாய் (Sunil Gangopadhyay) இவரின் உற்ற நண்பர். சக்தி-சுனில் என்று இணைத்து பேசப்படுமளவுக்கு இருவரின் நட்பு சிறந்திருந்தது. இவ்விருவரும், இவர்களோடு இன்னும் இரு நட்புக்கவிஞர்களும் சேர்ந்து அக் காலகட்டத்திய தேர்ந்த உதாரணமான கவிதைகளை எழுதினர். நள் யாமத்தில் கல்கத்தா நான்கு இளம்வாலிபர்களால் ஆளப்படுகிறது என்று அப்போது அது வர்ணிக்கப்பட்டது.  அலென் கின்ஸ்பெர்க் கல்கத்தாவில் வசித்த காலகட்டத்தில்,  இவரும் அலென் கின்ஸ்பெர்கும் நெருங்கிய நட்புடையினராய் இருந்துள்ளனர். ஒருவரையொருவர் பல்வகைகளில் பாதித்துள்ளனர். வங்கக்  கவிதையுலகில் மட்டும இவர் முத்திரை பதிக்கவில்லை., நாவல், மொழிபெயர்ப்பு, இதழியல் என்று பல் துறைகளில் இவரின் பஙகளிப்பு காத்திரமாய் இருந்தது. 1983-ல் சாகித்ய அகாடமி விருது இவருக்கு தாமதமாய்த் தான் வழங்கப்பட்டது.

 சக்தி சட்டோபாத்யாயின் கவிதைகள் தம் நடையில், சந்தத்தில், படிமங்களில், வெளிப்பாடுகளில் அலாதியானவை. அவை  அதீத மாயத்தன்மையின் (fantasy) வசீகரம் கொண்டவை. காரணம் இவர் தன் மனோலயப்படி கவிதைகள் தம்மைத் தாமே எழுதிக் கொள்வதை அனுமதித்தது தான். இதோ இவரின் கூற்று: வரிகளோடும் வார்த்தைகளோடும் படிமங்களோடும் , தாம் விரும்பும் எதையும் செய்ய என் உணர்வுகளை நான் அனுமதிக்கும் போது , நான் தன்னிச்சையான எழுதுதல் போன்ற ஏதோ ஒன்றைச் செய்கிறேன்.

( I do something like auto-writings when I allow my feelings to do anything they like with the lines, the words and the images) . 

இத் தன்னிச்சையான எழுதுதலில் தன் முப்பதாண்டு படைப்பு வாழ்க்கையில் இவர் எழுதிக் குவித்த கவிதைகள் ஏராளம். கணக்கு வழக்கில்லை. 45 தொகுப்புகள், சுமார் 2500 கவிதைகள் என்று ஒரு கணிப்பு.(poemhunter.com). 10000 கவிதைகளுக்கு குறையாமல் தேறும் என்று இன்னொரு கணிப்பு. (Sumit Mitra, March 15, 1984 India Today). எவ்வளவு உள்ளுணர்வின் படைப்பூக்கத்தின் தீவிரத்தில் ஆவேசத்தில், அசாத்தியத்தில் இது சாத்தியமாயிருக்கும் என்றெண்ணும் போது மலைப்பாயிருக்கிறது. இவரோடு 38 வருடங்களாகப் பழகிய சமீர் சென்குப்தா (Samir Sengupta) தன் நினைவோடையில், சக்தி சட்டோபாத்யாய் தான் எழுதியவை எவ்வளவு, என்னென்ன என்று கூட கவனிக்காதவரென்றும், இவரைப் போல் தன் படைப்புகளின் மேல் பற்றற்றவராக யாரும் இருக்க முடியாதென்றும் பதிவு செய்கிறார். 

ஆயிரக்கணக்கான கவிதைகள் எழுதிய ஒரு பெருங்கவிஞரின் பத்து கவிதைகள் தாம் இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. அதுவும் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து. எவ்வளவு இது நியாயமென்று தெரியவில்லை. ஆனால் ஒரு பழமொழி ஆறுதல் தருகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இச் சொற்ப தமிழாக்கக் கவிதைகள் இச் சோதனையில் தேறுமா என்று தெரியவில்லை. ஆனால் சக்தி சட்டோபாத்யாயின் கவிதைகள் ஒரு மொழிபெயர்ப்பிலிருந்து, இன்னொரு மொழிபெயர்ப்பிலும் கூட நீர்த்துப் போய் விடாத வீர்யமானவை. . வாசிப்போருக்கு இந்த உணர்வினை இத் தமிழாக்கக் கவிதைகள்  அளிக்குமென்று ஒரு நம்பிக்கை. சக்தி சட்டோபாத்யாய்க்கு என் ஆழ்ந்த மரியாதை உரித்தாகுக, அவரே தன் கவிதையொன்றில் என் ஆழ்ந்த மரியாதையின் தீ சுட்டு நீறாக்கட்டும் என்னை என்று தன் நிர்குண நிலயில் நிராகரித்திருந்தாலும் கூட..

குறிப்பு: இணையத்தில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலே இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

(1)

காட்டுக்குள் நுழைவதற்கு

காட்டுக்குள் நுழைவதற்கு குறிப்பிட்ட காலமில்லை.
எச் சமயத்திலும் நீ காட்டுக்குள் நுழைய முடியும்-
இலைகளைச் சேகரிக்கவோ அல்லது கோடரியால வெட்டுவதற்கோ.
காட்டுக்குள் நுழைவதற்கு எப்போதும் இணக்கமான அழைப்பு உண்டு.
எப்போதாவது காட்டில் நிலவோடு நடந்துள்ளாயா?
எப்போதாவது நிலவு
இலைகளின் ஈர்வாளால் கூறுபடுவதைப் பார்த்திருக்கிறாயா?
குன்றின் மேல் நிலவு ஒரு கால் பந்து போல் மிதக்கிறது.
நள் யாமத்தில் நடக்கவிருக்கும் போட்டி; உற்சாக ஆரவாரம்-
இத்தகைய தருணங்களில் நீ காட்டுக்குள் நுழைய முடியும்.

(2)

மரணம்

விறகுகள் அடுக்கிய சிதை மயானத்தில் எரிந்து கொண்டிருந்தது.
எரிந்து போக விரும்புவேன் யான்.
ஓ, எரிந்து போக விரும்புவேன் யான்.
எரிந்து போக விரும்புகிறேன் நான்
ஒரு நதியோரத்தில்.

ஏனெனில்,
ஒரு நேரம் வரலாம்
நேரம் வரலாம்
நதியோரத்தில் நெருப்பு பொறுக்க முடியாத போது
பிணம் சிமிழளவு தண்ணீர்
இறைஞ்சலாம்

மரணத்திற்கு அப்போது
வெற்றியில்லை;
வெற்றியில்லை.

(3)

என் பிறந்த நாளில்

என் பிறந்த நாளில் மலர்கள் சில வரவுற்றன.
அசாத்தியமான ஆனந்தத்திற்கும்,
சிரிப்பிற்கும், இசைக்கும்
மத்தியில்
ஒரு பூனை கவனமாய்
தன் கூருகிர்ப் பாதங்களின்
ஐம்பத்திரண்டு எட்டுகளை எண்ணிக்கொண்டே
படிகளின் மேல் ஏறிற்று.
ஒரு சுழல் இரும்புப் படிக்கட்டு, படிகளின் உச்சியில்
யாரும் கவனிக்காமலிருக்க,
கறுப்புப் படிகளின் உச்சியில்
நான் மட்டும் பார்த்தேன்
அதன் தயக்கமான நடத்தையை
அதன் மனக் கலக்கத்தை.

என் பிறந்த நாளில் மலர்கள் சில வரவுற்றன.
இப்போது அவை வாடி உதிர்ந்திருக்கின்றன.

(4)

என் பழைய துயரை இன்று வருமாறு

என் பழைய துயரை
இன்று வருமாறு நான் கேட்டுக் கொள்வேன்.
இங்கு நான் அமர்கிறேன;
சிறிது நிழலிருக்கிறது.
துயர் என்னருகில் அமரின்
அதை விரும்புவேன் நான்.
நான் நினைக்கிறேன்,
என் புதிய துயருக்கு கூறுவேன் –
போ அப்பால்
மகிழ்ச்சியின் மற்றொரு தோட்டத்தில் போய் திரி,
மலர்களை அழி, பசிய இலைகளைத் தீக் கொளுத்து,
ஊரைச் சூறையாடு,
சிறிது சமயம் கழித்து
நீ களைப்படைந்த போது
திரும்பி வா
என்னருகில் அமர்.
தற்சமயம்
என் பழைய துயருக்கு இடங் கொடு..
அது பல் தோட்டங்களுக்கும், இல்லங்களுக்கும் சென்று
வெட்டுப்பட்டும், தீப்புண்பட்டும்
வந்திருக்கிறது.
இப்போது என்னருகில் அமர அது விரும்புகிறது.
சில நாட்கள் அது தங்கியிருக்கட்டும்.
சாந்தத்தையும் சக தோழமையையும்
அது காணட்டும்.
பின்பு வா;
பிறகு வா,
என் புதிய துயரே!

(5)

கண்ணோட்டத்திலிருந்து நான் தப்பிக்க வேண்டும்

கண்ணோட்டத்திலிருந்து நான் தப்பிக்க வேண்டும்-
தற்போது நண்பகல்.
ஒரு இரயில் வண்டி இப்போது புறப்படுகிறது.
’நீ அரபு*க்கு செல்வதில்லையா?’
கண்ணோட்டத்திலிருந்து நான் தப்பிக்க வேண்டும்—
அரபு எவ்வாறு?
அங்கு
இரயில்நிலைய அதிகாரி உள்ளாரா?
மங்கலான இலாந்தர் விளக்கு உள்ளதா?
திகைப்புற்று நீ இசைப்பேழையில்
இசைக்க மட்டும் தான் செய்கிறாய்.
எல்லாப் பக்கங்களிலும்—
கூடாரம், முள் வேலி-
நிலவு விழிப்புடன் உள்ளது.
தப்பிக்க என் சந்தர்ப்பம் இது,
தப்பிக்க என் சந்தர்ப்பம் இது.

குறிப்பு: Arab

(6)

அபானி,  இல்லடைந்து விட்டாயா நீ?

தாளிடப்பட்ட கதவுகள்,
சுற்றுப்புறத்தினர் நிச்சலனமாய்த் துயில்கின்ற்னர்.
நான் கேட்பதெல்லாம்
இராவின் தட்டல்.
அபானி, இல்லடைந்து விட்டாயா நீ?

ஆண்டு முழுதும் இங்கு மழை பொழிகிறது.
மேயும் மந்தைகள் போல்
முகில்கள் இங்கு அலைகின்றன.
இப் பசிய புல்லிதழ்கள் ஐயுற நோக்குகின்ற்ன.
அவை என் கதவை மூச்சடைத்திட
என் இதயம் வலியில் அநேகமாகத் ததும்பி
தொலைவில் அப்பால் தொடர்கிறது.
ஆழ்ந்துறங்குகிறேன் நான்,
இராவின் தட்டலை மறுபடியும் கேட்பதற்கு.

அபானி, இல்லடைந்து விட்டாயா நீ?

(7)

திசை திரும்புவது சிறந்ததென்று எண்ணுகிறேன் நான்

திசை திரும்புவது சிறந்ததென்று எண்ணுகிறேன் நான்.
என் கைகள் மிகக் கரிந்து பூசப்பட்டுள்ளன.
வெகு காலமாக்
நீ எப்படியோ அப்படி உன்னை
நான் கருதியதே இல்லை.

இராவில் பள்ளத்தாக்கருகில்
நான் நிற்கும் போது
நிலவு கூவி அழைக்கிறது என்னை, வா
கங்கையினருகில்
நான் நிற்கும் போது, ஆழ்துயிலில்
சிதை கூவி அழைக்கிறது என்னை, வா

செல்ல முடியும் நான்,
இரண்டில், எவ்வழியிலும் செல்ல முடியும் நான்.
ஆயின், ஏன் செல்ல வேண்டும் நான்?

என் மழலையின் கன்னத்தை முத்தமிடுவேன் நான்.

செல்வேன் நான்
ஆயின் இன்னும் இப்போதல்ல,
தனியாயல்ல, ஏற்றதற்ற தருணத்தில்ல.

(8)

ஒரு கடிதம்

நீ இல் விட்டுப் போய் விட்டாய்
என் கடிதம் திரும்பி விட்டதால்
நீ அங்கில்லை.
வீடு துருப்பிடித்த பூட்டுடன் நிற்கிறது.
வேலையாள் கடிதத்தை
திரும்பக் கொண்டு வந்திருக்கிறான்-
நீ விட்டுப் போய் விட்டதினால்
நியாயமான வாடகையில்
வேறொரு வீட்டை நீ
அமர்த்தியிருக்க வேண்டும்.
முகவரியை அனுப்பு.
எத்தனை அறைகள்?
போதிய வெளிச்சம் உள்ளதா அங்கு?
திண்ணையில் செடிகளை வைத்திருக்கிறாயா?
பூக்கின்றனவா அவை?
அனைத்தையும் சொல்,
உன் கோணல் கையெழுத்தில் எழுது எனக்கு
ஒரு கடிதம், அது திருப்பி அனுப்பப்படாது,
உயிரோடுள்ளேன் நான்.

(9)

என் ஆழ்ந்த மரியாதையின் தீ

என் ஆழ்ந்த மரியாதையின் தீ
சுட்டு நீறாக்குகிறது என்னை.
முதலில் இனி நகர முடியாத
ஈரடிகளுக்கு தீ வைக்கிறது.
பின் அன்பையோ அல்லது ஒழுங்கையோ
இன்று ஏந்தியிருக்காத கைகள்,
பூக்களின் பனிப்பாறைகள் இப்போது
தம் மடக்கலிலுள்ள மேற்கைகள்,
இனி எப்பொறுப்பும் சுமக்காத தோள்கள்-
இவற்றை வாழ்வுக்கு அண்மையில் சுட்டெரிக்கிறது.
ஒரு கணம் நிற்கிறது.
பின் மெய்யும் பொய்யும் வண்ணமிட்ட
அறிவின் இருக்கையை அழிக்கிறது
விழிகளிரண்டைக் காப்பாற்றி வைக்கிறது.
ஒருவேளை, அவை ஏதோ ஒன்றை
மிச்சம் வைத்திருக்கலாம் காண்பதற்கு
கண்ணீர் வழிவது நின்றிருக்கும் போது
விழிகளை நசுக்குகிறது.
நறுமணக்கின்ற குலைந்த பூங்கொத்துகளையும்,
பூமாலைகளையும் எரிக்காதிருக்கிறது.
ஒரு அன்பான தொடுகை அவற்றின் உடல்களில் வாழ்கிறது.
நதியில் அவை சுதந்திரமாய் அலைந்து செல்லட்டும்.
வேண்டுமென்றே
என் ஆழ்ந்த மரியாதையின் தீ
சுட்டு நீறாக்குகிறது என்னை

(10)

இலையுதிர் காலத்துக் காட்டில் தபால்காரர்கள் திரிவதைப் பார்த்திருக்கிறேன் நான்

இலையுதிர் காலத்துக் காட்டில்
தபால்காரர்கள் திரிவதைப் பார்த்திருக்கிறேன் நான்.
அவர்களின் மஞ்சள் கோணிப்பைகள்
புற்களால் நிரம்பி
ஆடுகளின் வீங்கிய அடிவயிறுகள் போல்
நிறைந்திருக்கும்.
அநேக புதிய பழைய கடிதங்களை அவர்கள் கண்டெடுப்பர்.
இலையுதிர் காலத்துக் காட்டில் அத் தபால்காரர்கள்—
ஒரு தனி நாரை மீனைக் கொத்துவது போல்
அவர்கள் இடைவிடாது கொத்துவதைப் பார்த்திருக்கிறேன்.
அவ்வளவு அசாத்தியமாய், மர்மமானதாய்,
முழுகவனத்தில் ஈடுபாடுடன் அவ்ர்கள்
நம் மாற்றமற்ற குழையும் காதல் கடிதங்களை
எல்லா நேரங்களிலும் தொலைக்கின்ற
கைகளுள்ள நம் தபால்காரர்கள் போலில்லை.

நாம் ஒருவரிலிருந்து ஒருவர் தொடர்ந்து
விலகிப் போய்க் கொண்டே இருக்கிறோம்.
கடிதங்களின் மேல் பேராசையால்
நம்மை நாமே தொலைவாக்கிக் கொண்டு
தொலைவில் அப்பாலிலிருந்து அநேகக் கடிதங்களைப்
பெறுகின்றோம் நாம்.
உம்மிடமிருந்து உடன் விலகிச் செல்கின்றோம்
தபால்காரர்களிடம் காதல் நிறைந்த கடிதங்களைத் தர

ஆக, நாம் சக மனிதர்களிடமிருந்து
விலகிச் செல்கின்றோம்.
நாம் நாம் தாம்.
ஆகையால், நம் முட்டாள்தனமான பலவீனங்களையும்,
உள்நோக்கங்களையும்,
கண்ணாடியில் நம்மை நாம் பார்த்துக் கொள்ள முடியாத
ஒவ்வொன்றையும்
வெளிப்படுத்த முற்படுகின்றோம்.
மனிதர்களில்லாத
மாலைக்காலத் திண்ணையில்
மிதந்து கொண்டே இருக்கின்றோம்.
ஆகையால், நிலவொளியில் தனிமையில்
அடித்துச் செல்லப்பட
நம் ஆடைகளை அவிழ்க்கின்றோம்.
வெகுகாலமாக ஒருவரையொருவர் நாம்
தழுவிக் கொள்ளவில்லை.
வெகுகாலமாக மனித முத்தங்களை நாம்
சுவைத்திருக்கவில்லை.
வெகுகாலமாக மனிதர்கள் இசைப்பதை நாம்
செவிம்டுத்திருக்கவில்லை.
வெகுகாலமாக மழலை பேசும் மழலைகளைக்
கண்டிருக்கவில்லை.

சாசுவதமான இலைகளின் அடையாளம்
கற்தாடைகளில் கலந்தொன்றாகிய
காட்டினும் இன்னும் புராதானமான
ஒரு காடு நோக்கி
நாம் அலைந்து நகர்கின்றோம்.
இப்படிப்பட்ட மண்சாராத தொடர்புகளின் தேசத்திற்கு
நாம் மிதந்து போய்க் கொண்டிருக்கிறோம்.
இலையுதிர் காலத்துக் காட்டில்
தபால்காரர்கள் திரிவதைப் பார்த்திருக்கிறேன் நான்.
அவர்களின் மஞ்சள் பைகள்
புற்களால் நிரம்பி
ஆடுகளின் வீங்கிய அடிவயிறுகள் போல்
நிறைந்திருக்கும்.
அநேக புதிய பழைய கடிதங்களை அவர்கள் கண்டெடுப்பர்-
இலையுதிர் காலத்துக் காட்டில் அத் தபால்காரர்கள்.
கடிதங்களுக்கு இடையேயுள்ள தொலைவு மட்டும் அதிகமாக,
மரங்களுக்கு இடையேயுள்ள .தொலைவு அதிகமாவதை
நான் பார்த்திருக்கவே இல்லை.

குறிப்பு: வங்க மூலத்திலிருந்து  ஆங்கில மொழிபெயர்ப்பு- கவிதை வரிசைப்படி:

  1. To Enter the Forest            :  Samir Sengupta
  2. Death                    :  Samir Sengupta
  3. On My Birthday                :  Arunava Sinha
  4. I Will Ask My Old Sorrow        :  Arunava Sinha
  5. I Must Escape From Perspective    ;  Samir Sengypta
  6. Abani, Are You Home?            :  Arunava Sinha
  7. I Think it Best to Turn Around        :  Arunava Sinha
  8. A Letter                    :  Arunava Sinha
  9. Fire of My Reverence            :  Arunava Sinha
  10.  I Have Seen Postmen Wandering    :  Arunava Sinha

Sources:  

1.One Hundred Indian Poets, Signatures, Edited by       K.Satchidanandan,      National Book Trust, India

ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்: கு. அழகர்சாமி

***

One Reply to “சக்தி சட்டோபாத்யாய் கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.