குரல் கொடுப்பதிலிருந்து இடம் கோருவது வரை

அனாம்னி அங்கனா வும் அதற்கப்பாலும்

தமிழில்: முத்து காளிமுத்து

ரவீந்திரநாத் தாகூருக்குப் பிறகு வங்காள இலக்கிய நாடகத் துறையில் பல்துறை சாதனையாளரும், சிந்தனைகளுக்கு சவால் விடுபவருமான ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படுபவர் புத்ததேவ் பாசு (বুদ্ধদেব বসু -1908-74). அனாம்னி அங்கனா (அநாமதேய பெண்) என்ற ஒரு சிறு நாடகத்தை 1960 ஆம் ஆண்டில் வெளியிட்டார். மகாபாரதத்தில் உள்ள ஒரு குறுகிய திறப்பை உபயோகித்து அதைத் தனியாய் பிரித்தெடுத்து ஒரு விளம்புப் பாத்திரத்திற்கான இடத்தை உருவாக்குகிறார்.

பாசு தேர்ந்தெடுத்த அத்தியாயம் பரவலாக அறியப்பட்ட ஒன்றாகும். மீனவக் குடியிலிருந்து குரு வம்சத்தினவரின் குலத் தலைவியானவர் அரசி சத்யவதி. கணவனை இழந்த தனது மருமகள்கள் குலப் பரம்பரையின் தொடர்ச்சியை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக, சந்ததியினரை உருவாக்க முயற்சிக்க வேண்டுமென்று  முடிவு செய்கிறார். ஆழ்ந்த ஆலோசனைக்குப் பின், தன் முதல் மகனும், மகாபாரதக் காவியத்தை இயற்றியவர் எனப் பரவலாய் அங்கீகரிக்கப்படுபவருமான பெருமுனி வியாசரை அவர்களுடன் உறவுகொள்ளத் தேர்வு செய்கிறார்.

அங்கனா அவள் தோழிகளிடம் மனம் திறக்கும் காட்சியுடன் நாடகம் ஆரம்பமாகிறது. நிழலுருவமான இந்த அடிமைப் பெண்ணுக்கு பாசு ஒரு உயிரோட்டத்தையும், மனப் போராட்டங்களையும் ஒரு அமைதியற்ற, சங்கடப்படுத்தும் குரலையும் அளிக்கிறார். கிராமத்தில் குடிசை வீடு, வெளியில் இருக்கும் புளிய மரங்களின் மேல் சூரியனின் பிரகாச ஒளி, இந்தச் சூழலில் அழகான இளம் நெசவாளரான தனது காதலனுடன் வாழவேண்டும் என்ற நம்பிக்கை, இப்படி ஒரு அழகிய உலகத்திற்கான அவளது ஏக்கத்தை ஆரம்பத்தில் நாம் காண்கிறோம்.

இருப்பினும், நாடகம் அரசிகள் சத்யவதி, அம்பிகாவின் பக்கம் நகர்கிறது. வியாசரின் உருவத்தை வெறுக்கத்தக்கதாய் உணர்ந்ததால், முதல் முயற்சியில் இளவரசிகளுக்குப் பார்வையற்ற குழந்தையும், “வெளிறிய” குழந்தையும் பிரசவமாகின்றன. ​​சத்யவதி தனது மூத்த மருமகள் அம்பிகா இன்னுமொரு தடவை முயற்சிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார். தனக்கும் வியாசருக்குமான தொடர்பை தன் மருமகளுக்கு தெரியப்படுத்தி, வியாசரின் நற்குணங்களை அவளிடம் புகழ்ந்துரைத்து அவளை சம்மதிக்க வைக்க முயற்சிக்கிறார்.

சத்திரிய இளவரசி அம்பிகா, இனப்பெருக்கம் செய்வதற்கான ஒரு கருவியாக மட்டும் தான் பயன்படுத்தப்படுவதை விரும்பவில்லை. எதிர்க்கிறாள். ஓர் இளவரசியாய்த் தனக்கு பண்பட்ட வகையான இன்பத்தின் எதிர்பார்ப்புகள் உள்ளன என அவள் சுட்டிக் காட்டுகிறாள். சத்திரிய குலமூத்தவர் பிரம்மச்சாரி பீஷ்மர் அவளையும், அவள் சகோதரிகளையும் சிறைபிடித்ததுபோல், ஆண்களைப் பொறுத்தவரை பெண்கள் வெறும் சிறைபிடிக்கப்பட வேண்டியவர்கள்தான் என வாதாடுகிறாள். அவர்கள் வெறும் பாத்திரம், ஒரு கொள்கலம் போலத்தான் நடத்தப்பட்டனர். ஆடு மாடுகளைப் போல்தான் நடத்தப்படுவதற்கு அவள் நிச்சயமாக உடன்பட விரும்பவில்லை. சத்யவதி தனது கடந்த கால வாழ்க்கையை அம்பிகாவிடம் பகிர்வதன் மூலம், அவளின் எதிர்ப்பைச் சமாளிக்க முயற்சிக்கிறாள். சத்யவதிக்கும் ஒரு முனிவருடன் தொடர்பு இருந்தது, அதன்பின் அவள் தாமரைபோல் நறுமணம் கொண்டவளானாள், அவளது கருநிறம் தங்க நிறமாக மாறியது.

அம்பிகா தயக்கத்துடன் ஒப்புக்கொண்டாலும், இதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறாள் – தனக்கு மாற்றாய் ஓர் அடிமைப் பெண்ணை அனுப்பத் தீர்மானிக்கிறாள். தனது அடிமைப் பெண்களிடையே மிகவும் சுறுசுறுப்பும், அழகும் நிறைந்தவள் தனக்குப் பதிலாக படுக்கையில் இடம் பெறவேண்டும் என்று அம்பிகா தீர்மானிக்கையில், அங்கனாவின் கனவுகள் எல்லாம் உடைந்து சிதைந்து விடுகின்றன. அங்கனா மிகவும் மனம் கலங்குகிறாள். ஆனால், அம்பிகா அங்கனாவுக்கு அவளது சுதந்திரம் மற்றும் செல்வத்தின் ஆசையைக் காட்டி மயக்கப் பார்க்கிறாள். மேலும், முனிவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நல்ல வரங்களையே அவளுக்கு வழங்குவார்கள் என்கிறாள். எனவே, அங்கனா தான் விரும்பியதைவிட அதிக நற்பலன்களையே அடையமுடியும் என்கிறாள். இந்த கணிப்பு ஆச்சரியமான உண்மையாய் நிரூபணமாகிறது.

தயக்கமும் பயமும் இருந்தாலும், அங்கனா முனிவரிடம் உடலின்பத்தில் கலந்து அவரிடம் சரணடைகிறாள், அவரும் அவ்வாறே செய்கிறார். அம்பிகாவைப் போலல்லாமல், பாலியல் பேரின்பத்தின் ஆழ்நிலை அனுபவத்தை அங்கனா பெறுகிறாள். காட்டின் மணமும் பூமியின் மணமும் சுமந்திருந்த, பயத்துக்கு அப்பாற்பட்ட தன் அனுபவத்தை அவள் விவரிக்கையில், அம்பிகாவின் பதில் ஒரே நேரத்தில் அவமதிப்பும்,  பொறாமையும் உள்ளதாய் இருக்கிறது – ‘தாழ்ந்த பிறப்பு” உள்ளவர்கள் மட்டுமே ஒருவரை ஒருவர் இப்படி உணர்ந்தறிய முடியும் என்று மறைமுகமாய் அவள் சொல்கிறாள். ஆனால் அவளை நிம்மதி குலையைச்செய்வது, அங்கனா தனது உடனடி சுதந்திரத்திற்காக ஏங்குவதில்லை என்பதுதான். மாறாக, இப்போது அவள் வியாசர் முன்னுரைத்த, தான் இதுவரை கற்பனை செய்யாத, கற்பனை செய்ய முடியாத நல்லதொரு எதிர்காலத்தை எதிர்நோக்குகிறாள்.

விதுரன் இன்னும் பிறக்கவில்லை. அவர்களது உறவிலிருந்து பிறக்கும் மகன் விவேகமுள்ளவனாகவும், அறிவாளியாகவும் மென்மையானவனாகவும் இருப்பான் என்று வியாசர் கணித்துள்ளார். ஒரு கொடிய யுத்தம் நடக்கும்போதுகூட ​அவர் மனநிம்மதியோடு இருப்பார், எல்லாவற்றினின்றும் விலகி அமைதியின் பக்கம் நிற்பார். ‘அவர் கற்றலில் தனது தந்தையைப் போன்றவர், திரைக்குப் பின்னால் பணியாற்றுவதில் தன்னைப் போன்றவர்’ என்று அங்கனா நினைக்கிறாள். ‘வறுமையிலும் செல்வந்தராய், உலக விஷயங்களில் பிடிப்பற்றவராய்,  சத்திரியரும் அல்லாமல், பிராம்மணரும் அல்லாமல், சூத்திரரும் அல்லாமல், நண்பனோ எதிரியோ அல்லாமல் சம்சாரியோ  முற்றும் துறந்தவரோ அல்லாமல்’ இருப்பாரவர் என்று நினைக்கிறாள். கொந்தளிப்பான காலங்களில் கூட சமாதானக் கொடியைப் பிடிக்கும் ஒருவர். அவள் அவருக்கு சாட்சியாக இருப்பாள்.

பெயரிடப்படாத பெண்ணுக்காக இவ்வாறு குரல்  கொடுத்த பாசு, ஆணாதிக்க விதிகளுள் சிக்கவைக்கப்பட்ட வித்தியாசமான முரண்பட்ட, பதற்றமான குரல்களைக் கொண்ட பெண்கள் அவற்றுக்கு எப்படி வெவ்வேறு வகையில் பதிலளித்தனர் எனக் காட்சிப்படுத்தினார். சத்யவதி கீழ்குடியில் பிறந்தவளாய் கருதப்பட்டவள் எனினும், அவள் அங்கமாக இருக்கும் அரசகுலத்தின் வம்சாவழியை காப்பாற்ற ஆர்வமாக உள்ளாள். அம்பிகா தான் குழந்தை உற்பத்தி செய்பவளாக பயன்படுத்தப்படுவதை எதிர்ப்பதோடு, நிறைவேறாத பாலியல் விருப்பங்களுக்காகக் குரல் கொடுக்கிறாள். அங்கனா அடிமைத்தனத்திற்கும், விடுதலைக்கும் இடையில் சிக்கியுள்ளாள். ஆனால், சாதி வகைகளிலிருந்து வெளிப்படும் அதிகாரத்தின் அடர்த்தியான உறவுகளையும், அதை விசாரிப்பதற்கான இடத்தையும் அவளது பாத்திரம் திறக்கிறது. புயலுக்குப் பிறகு சிறகு எடுத்துப் பறக்கும் குஞ்சுப் பறவையைப் பற்றி அங்கனா ஒரு பாடலைப் பாடுவதாக நாடகம் முடிகிறது. நம்பிக்கை இருக்கிறது. காவியத்தில் பேசப்படாத பகுதிகள் இப்படி புதிய குரல்களால் நிரப்பப்படலாம்.

இந்த புதிய குரல்கள் இப்போது நம்மைச் சுற்றி கேட்கப்படுகின்றன, அங்கீகரிக்கப்படத் தொடங்கியுள்ளன. ஆனால் பெரும்பாலும் மகாபாரதத்தில் விதுரரின் குரலைப் போல தனிமையாகவே இருக்கின்றன. இன்னும், அனாம்னி அங்கனாவின் சிக்கல்களிலிருந்து விலகி நோக்குகையில் அவற்றின் ஒலி தனித்துக் கேட்கிறது. இவற்றிலொருவர் கல்யாணி தாக்கூர் சரல், 1965 ல் பிறந்தார், அசைக்க முடியாத எழுத்தாளர். தனக்கென ஒரு இடத்தை உருவாக்கவும், தம் குரலைக் கண்டுபிடிக்கப்  போராடும் பிறருக்காகவும் வேலையிலும், வெளி உலகத்திலும் தினசரிப் பாகுபாடுகளை எதிர்த்து நிற்பவர். அவரது கவிதைகளின் அகலமும் ஆழமும் ஒரே நேரத்தில் பிரமிக்க வைப்பதோடு நம்மை உணரவும் வைக்கும். அவற்றின் காவியத் தரம் – அரச வம்சாவளிகளைப் பற்றி அல்ல – ஆனால் சாதாரண மக்களிடமும், அவர்களின் போராட்டத்திலுமிருக்கும்.

நான் இச்சதுப்பு நிலங்களையும் காடுகளையும்
இக்காட்டின் மக்களையும்
ஆற்றையும், வன பாதையையும்
பின்னே விட்டுப் போகிறேன்.
தொலைவில் ரத்தமும் வியர்வையும் சிந்தும்
என் சொந்த மக்களிடம்
நான் போகிறேன்

வீழ்ந்த, அடிபட்ட மூதாதையர்களின்
ஊட்டச்சத்தில்லாத குழந்தைகளிடம்,
என் சகோதர சகோதரிகளிடம்

நான்கு ஆறுகள், ஐந்து குடியிருப்புகளாலான
இந்த நிலத்தை நான் விட்டு விடுவேன்

கொல்லனின் உலைக்கருகில் படுத்திருக்கையில்
நான் கேட்டிருக்கிறேன்
சுத்திக்கும், இரும்புக்குமான வாக்குவாதத்தை

நான் கலப்பையாகிவிட்டேன்
விவசாயின் தோளில் சவாரி செய்து வெகுதூரம் பயணித்தேன்
பெரும் பரப்பை உழுதிருக்கிறேன்
வயல் பயிர்களால் வளமுறுவதற்காக

பசியின் வேதனையை எதிர்த்துப் போராட

இருந்தும் நான் அம்லாசோலைக்* காணவேண்டியுள்ளது
வெள்ளை அரிசி தானியம் போலிருக்கும்
எறும்பு முட்டைகளை என் குடும்பத்துக்கு உணவளிக்கிறேன்

குழந்தைகளைப் பேண அது போதுமானது
அவர்கள் தங்கள் வில் அம்புகளை ஏந்துவார்கள்

புரட்சியின் நிஜ அர்த்தம்
பற்றி அறிய முற்படாமலே
துப்பாக்கி முனைக்கு முன் வெற்றுமார்பைக் காட்டுகிறார்கள்

* மேற்கு வங்கத்தில் மிகவும் ஏழ்மையான கிராமமான அம்லாசோல் பலரின் பட்டினிச் சாவுகளுக்காக செய்திகளில் அறியப்பட்டது.

பெண்களின், ஆண்களின் இந்த குரல்களை, பல காலமாய் வாயடைக்கப்பட்டு, சரித்திரத்தின் இடைவெளிகளில் நீண்ட காலமாகத் தொலைந்தவற்றை, நாம் ஒவ்வொருவரும் கேட்கவேண்டும்.

***

4 Replies to “குரல் கொடுப்பதிலிருந்து இடம் கோருவது வரை”

  1. நல்ல அருமையான சொற்பிரயோகங்கள். கருத்தாழமிக்க ஒரு கட்டுரை. விளிம்புநிலை பெண்களின் வாழ்க்கை இன்றைக்கும் இப்படித்தான் உள்ளது. கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளில் பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை. எல்லோருக்குமான கல்வி அறிவும் பொருளாதார சுதந்திரமும் மட்டுமே நிலைமையை மாற்றக்கூடும்.

    நல்ல தரமான மொழிபெயர்ப்பு. கட்டுரையாசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பு ஆசிரியர் இருவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.