அண்மையில் கவியோகி ரவீந்திரநாத் தாகூர் அவர்களது கீதாஞ்சலி கவிதை தொகுப்பு நூல் ஒன்றை படிக்க நேர்ந்தது. அதன் மீது ஏற்பட்ட ஆர்வ மேலீட்டால் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு கிடைக்குமா என தேடினேன். மொழிபெயர்ப் புக்களும் அதனை மொழிபெயர்த்தோர் சிலரது விபரம் கிடைத்தது. பிரதியை பெறுவதற்காக முயற்சித்தபோது முதலில் எழுத்தாளர் சி. ஜெயபாரதன் அவர்களின் தொகுப்பு கிடைத்தது. அதனை படிக்க தொடங்கிய வேளை சொல்வனம் சஞ்சிகையில் வெளிவந்த 240ஆவது வெளியீடாகிய “வங்காள இலக்கிய சிறப்பிதழ்” பற்றிய அறிவிப்பைக் காணும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது. அப்போது அந்த வெளியீட்டிற்கு ஒரு கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலிடவே என்ன தலைப்பில் எழுதுவது என்ற கேள்வி உருவாகியது. கீதாஞ்சலியை படித்துக்கொண்டிருந்த எனக்கு அதைப்பற்றியே எழுதினால் சிறப்பாக இருக்குமே என்ற பதில் மனதில் தோன்றவே உடன் எழுத ஆரம்பித்துவிட்டேன். இவ்வாறு எழுதத்தொடங்கியதே “கவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள் ஒரு தேடலும் பதிவும்” என்ற இந்த ஆக்கம். எனது தேடலின் விளைவாக அடுத்ததாக இரு மொழிப் புலவர் சோ. நடராசன் அவர்கள் மொழிபெயர்த்த “கீதாஞ்சலி” தமிழ் மொழிபெயர்ப்பு நூலும் கிடைக்கவே இந்த ஆக்கத்தை மேலும் சிறப்பாக எழுதுவதற்கான ஒரு தெம்பு கிடைத்தது.
ஆளுமைகள், வரலாறுகள், அபிவிருத்தி, அனுபவங்கள் மற்றும் சிறுகதைகள் என்று வெவ்வேறு விதமான படைப்புகளை வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதுவர் அதேபோலவே கவிஞர்களும் பல்வேறு வகையான கவிகள் அல்லது பாடல்களை இந்த சிறப்பிதழுக்காக எழுதுவர். சொல்வனத்துடன் இணைந்திருக்கும் பிரபலமான பல எழுத்தாளர்களுக்கு ஈடாக எழுதுவது சற்றுச் சவாலான விடயம்தான் இருந்தாலும் என்னை தைரியப்படுத்திக்கொண்டு ஒரு சிறிய முயற்சியாக இந்த ஆக்கத்தை எழுதியிருக்கிறேன்.
தாகூர் பற்றி உலகின் பல பாகங்களிலும் வாழும் அநேகமான மக்களுக்கு நன்றாகவே தெரியும். சிலருக்கு இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் தேசிய கீதங்களை எழுதியவராக மட்டுமே தாகூரை தெரியும். கவியோகி தாகூர் அவர்கள் வங்கம் தந்த புகழ்பெற்ற பல்துறை ஆளுமை. கவிஞராக, இசையமைப்பாளராக, ஓவியராக, மெய்யியலாளராக மற்றும் நாடக ஆசிரியராக என்று பல்வேறு துறைகளினூடாக தனது திறனை வெளிப்படுத்தி தனது பெயரை உலகறியச் செய்தவர் என்பதாலேயே இவர் பல்துறை ஆளுமை என வர்ணிக்கப்படுகிறார். இரவீந்திரநாத் தாகூர் என்பது இவரது இயற்பெயர். வங்காள மொழியை தாய் மொழியாகக்கொண்ட இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவங்களில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்திப் புதுமைகளைப் புகுத்தினார் என்றால் அது மிகையாகாது. இரண்டாயிரம் கவிகளுக்கு அதிகமான கவிகளை இவர் படைத்துள்ளதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. வைகாசி மாதம் 7ஆம் திகதி 1861ஆம் ஆண்டு கொல்கொத்தாவில் பிறந்த இவர் ஆவணி மாதம் 7ஆம் திகதி 1941ஆம் ஆண்டு இறைப்பதமெய்தினார். இவர் வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டச் செயற்பாடுகளில் ஆரம்பத்தில் தன்னை ஈடுபடுத்தியிருந்தாலும் பின்னர் அதிலிருந்து தன்னை முற்றாக விடுவித்து ஆன்மீகம் மற்றும் மெய்யியல் சார் விடயங்களுக்குள் அதிகமாக ஈடுபடுத்திக்கொண்டார். இந்தியா மற்றும் வங்கம் ஆகிய இரு நாடுகளினதும் தேசிய கீதங்களைப் படைத்தை பெருமையும் இவரையே சாரும்.
தாகூரின் படைப்புக்களில் அவர் படைத்த கவிதைகளே பெரிய அளவில் அவருக்கு புகழ்சேர்த்தன. கவிதைகளிலும் “கீதாஞ்சலி” என்ற படைப்பே இவரை உலகம் முழுவதிலும் பிரபல்யப்படுத்திய சிறந்த படைப்பாக இருக்கிறது. 157 பாடல்களைக்கொண்டு வங்கமொழியில் உருவாக்கப்பட்ட “கீதாஞ்சலி” பின்னர் ஆங்கில மொழிக்கு மொழி பெயர்க்கப்படும்போது அதன் மூலப் படைப்பிலிருந்து 50 பாடல்களும் வேறு படைப்புகளிலிருந்து 53 பாடல்களும் தெரிவு செய்யப்பட்டு 103 பாடல்களடங்கிய தொகுப்பாக ஆங்கிலத்தில் அவராலேயே மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த தொகுப்பு பல்வேறு மொழியை சார்ந்தவர்களாலும் அதிகம் கவரப்பட்டதால் அவரவர் தங்கள் மொழியிலே மொழிபெயர்க்க முனைந்தனர். தாகூர் அவர்கள் “கீதாஞ்சலியை” ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கு காரணமாக அமைந்தது வங்கமொழியில் எழுதப்பட்ட கவி அந்தப் பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பிரபல்யமடையாமையே என சில குறிப்புகளிலிருந்து அறியக்கிடைக்கிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட “கீதாஞ்சலி” நோபல் பரிசு பெற்ற ஆசியாவின் முதல் மனிதர் என்ற பெருமையை இவருக்கு பெற்றுத்தந்தது. இப்பரிசை வென்ற ஆசியர் என்பதற்கும் அப்பால் ஐரோப்பியர் தவிர்ந்த வேறு நபர் ஒருவர் இப்பரிசை வென்ற முதல் சந்தர்ப்பம் இது என்ற பெருமையையும் பெற்றுத்தந்தது.
ஆங்கிலத்தில் “கீதாஞ்சலி” வெளிவந்த பின்னர் அதற்கு உலக அரங்கில் கிடைத்த வரவேற்பு வேறு மொழியைச் சார்ந்தவர்களையும் அதனை மொழிபெயர்த்து அந்தக் கவியின் உணர்வுகளை அனுபவிக்கத் தூண்டியது. இக்கவி மேல் கொண்ட காதல் சிலரை வங்கமொழியை கற்று அதனை வங்காள மொழியிலேயே படித்து அனுபவிக்கவும் தூண்டியது எனவும் இவர் சார்ந்த பல ஆக்கங்களின் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

இக்கவிப்படைப்பின் மீது கொண்ட ஆர்வமேலீட்டினாலும் காதலினாலும் அதனை தமிழிலும் மொழிபெயர்க்க சிலர் முனைந்தனர். அதன் பயனாக “கீதாஞ்சலி” தமிழ் மொழிபேசுபவர்களும் படித்து அதன் ஆழமான கருத்துக்களையும் உணர்வுகளையும் அனுபவிக்கக் கிடைத்தது. அண்மையில் இப்படைப்பை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டு வெற்றி கண்டவர்களுள் ஒருவர்தான் கனடா நாட்டில் வசிக்கும் எழுத்தாளர் சி. ஜெயபாரதன். இவர் கீதாஞ்சலியை மொழிபெயர்த்து அவரது வலைப்பூ மற்றும் சில இணையத்தளங்கள் மூலமாக மக்கள் ரசனைக்கு தந்ததோடு நின்றுவிடாது அச்சுப் பதிப்பு செய்தும் வெளியிட்டிருககிறார். இவருடைய இந்த முயற்சி தமிழ் இலக்கிய உலகிற்கு ஓர் மிகச்சிறந்த கொடை என்றால் அது மிகையாகாது. ஒரு சிலர் மட்டுமே கவியோகி ரவீந்திரநாத் தாகூர் அவர்களுடைய “கீதாஞ்சலி” தொகுப்பை முழுமையாக வெளியிட்டிருப்பதாக நான் அறிகிறேன். மற்றைய சிலர் தேவை கருதி சில பாடல்களை மட்டும் மொழிபெயர்த்துள்ளமையை சில கட்டுரைகளின் மூலமாக அறியக்கூடியதாக இருக்கிறது.
மொழி பெயர்ப்பு என்று வரும்போது ஒருவர் தன்னுடைய படைப்பை தானே வெவ்வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பதற்கும் ஒருவருடைய படைப்பை பிறிதொரு நபர் மொழிபெயர்ப்பதற்கும் இடையில் பெரிய அளவிலான வேறுபாடு உருவாகுவது தவிர்க்க முடியாதது. அதுமட்டுமன்றி அப்படி மொழி பெயர்க்கும் போது பல்வேறு விதமான சாதக பாதக கருத்து பரிமாற்றங்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலைமை தோன்றுவதும் தவிர்க்க முடியாதது. ஒருவர் தான் உருவாக்கிய ஒரு ஆக்கத்தை தானே மொழி பெயர்க்கின்ற போது தனது உள்ளார்ந்த உணர்வுகளையும் படைப்புத்திறனையும் ஒன்று படுத்தி அதனை படிப்பவர்கள் எவ்வாறான உணர்வுகளுக்கு ஆட்படவேண்டும் எவ்வளவு தூரம் ரசனையோடு படிக்கவேண்டும் அதனை படிப்பதன் மூலம் அவரிடத்து எவ்வாறான மாறுதல்களும் பிரதிபலிப்புகளும் ஏற்படவேண்டும் என்பதை யெல்லாம் மனக்கண்முன் வைத்துக்கொண்டே அதனை மொழி பெயர்ப்பார். அவர் அவ்வாக்கத்தை தனது சொந்த மொழியில் படைக்கும்போது வாசகர்களிடம் எவ்வாறான உணர்வலைகளை எதிர்பார்த்துப் படைத்தாரோ அதே எதிர்பார்ப்புகளுடனேயேதான் வேறு மொழியில் அவரே மொழிபெயர்க்கும் போதும் அதனை மொழிபெயர்ப்பார்.
ஒரு ஆக்கத்தை அதை எழுதியவர் தவிர்ந்த வேறு ஒருவர் மொழி பெயர்க்கும்போது இந்த நிலைமையில் பாரிய மாறுதல்கள் இருக்கும். தாகூர் போன்ற உலகம் போற்றும் மேதாவிக் கவிகளின் கவிப்படைப்புக்களை அவ்வளவு இலகுவில் சிறப்பாக மொழிபெயர்ப்பது என்பது மிகவும் கடினமான காரியமே. மூலத்திலுள்ள இசை, நயம், கீதம், சொல், பொருள் என்பனவற்றுள் பல விடயங்கள் மொழிபெயர்ப்பில் சிதைந்து ஒழுகிவிடும் என்பதே யதார்த்தம். நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போன்று “கீதாஞ்சலி” பற்றி அறிந்து அதன் மீது ஆர்வம் கொண்ட சிலர் அந்த கவியை உணர்வுபூர்வமாக எந்தவிதமான சிதைவுகளுமின்றி படிக்கவேண்டும் என்ற ஆதங்கத்தினால்தான் அதை படிப்பதற்கு முன்னரே அக்கவி உருவாக்கப்பட்ட வங்காள மொழியை முதலில் ஆர்வத்துடன் கற்றனர். இதன் மூலம் ஒரு ஆக்கத்தின் மூலப்படைப்பை நாம் அந்த மொழியில் படிக்கும்போது கிடைக்கும் பயனுக்கு ஈடானதாக மொழிபெயர்ப்பு அமையாது என்பதை மிகத் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.
எழுத்தாளர் சி. ஜெயபாரதன் அவர்களின் மொழிபெயர்பில் தரப்பட்டுள்ள கீதாஞ்சலியின் முதல் பாடல் இவ்வாறு அமைகிறது.
உடையும் பாண்டம் – கீதாஞ்சலி 1
அந்திமக் கால மின்றி என்னை ஆக்கியுள்ளாய் நீ! உவகை அளிப்ப தல்லவா அது உனக்கு?
மூலம் கவியோகி இரவீந்திரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
உடையும் இப்பாண்டத்தை மீண்டும், மீண்டும் வெறுமை ஆக்குவாய் நீ!
புத்துயிர் அளித்து, மறுபடியும் அதை நிரப்புவாய் நீ! குன்றின் மீதும், பள்ளம் மீதும் நீ
ஏந்தி வந்த புல்லின் இலையான இச்சிறு புல்லாங்குழல் விடும் மூச்சுக் காற்றில்
கால மெல்லாம் புதிய கீதங்கள் பொழிய வைப்பாய் நீ! உந்தன் தெய்வீகக் கரங்கள்
என்மேல் படும்போது, எந்தன் நெஞ்சம் உவகையின் எல்லை மீறிச் செல்லும்! மேலும்
அதில் ஊகிக்க முடியா உரைமொழிகள் உதிக்கும்! அளவின்றி அள்ளி அள்ளிப் பெய்த
உந்தன் கொடைப் பரிசுகள் எனது இச்சிறு கைகளில் மட்டுமே கிடைத்துள்ளன!
கடந்து போயின யுகங்கள்! ஆயினும் இன்னும் நீ இப்பாண்டத்தில் பொழிந்து
பொழிந்து கொட்டுகிறாய்! அங்கே காலியிடம் உள்ளது இன்னும், மேலும் நீ நிரப்பிட!
ஜெயபாரதன் அவர்கள் கீதாஞ்சலி மொழிபெயர்ப்பை மேற்கொள்வதற்கு தனது முழுமையான பிரயத்தனத்தை பிரயோகித்துள்ளார் என்பது ஒவ்வொரு பாடலாக பார்க்கும்போது புரிகிறது. பெருமளவிலான தனது நேரத்தையும் இதற்கென்று ஒதுக்கி இதனை மேற்கொண்டிருக்கின்றார். அதற்காக அவர் பாராட்டப்பட வேண்டியவர். மொழி பெயர்ப்பு என்று வந்துவிட்டாலே அது சாதாரண விடயமாக கருத முடியாது. கீதாஞ்சலி இந்த ஒரு எழுத்தாளரால் மட்டும் மொழி பெயர்க்கப் பட்டிருந்தால் தாகூரின் உளக்கிடக்கைகளின் உணர்வுகளை தமிழ் மொழி பேசுவோரும் அனுபவிப்பதற்கு இப்படி ஒருவராவது முயற்சிசெய்திருக்கின்றார் என்று மகிழ்ச்சியோடு கடந்து போய்க்கொண்டிருக்கலாம். ஆனால் இவரை விட வேறு பல எழுத்தாளர்களும் இதனை மொழிபெயர்த்தமையால் ஒப்பிடுகின்ற போது எதை சரியான மொழிபெயர்ப்பாக எடுத்துக்கொண்டு அதனை அனுபவித்து படிப்பது என்ற குழப்பம் ஏற்பகிறது, அது தவிர்க்க முடியாததும் கூட.
ஒரு எழுத்தாளரின் படைப்பிலே மாற்றங்கள் செய்வதோ அல்லது மேலதிகமாக கருத்துக்களை உள் நுழைப்பதோ சரியான விடயமாக கருதுதல் தகுமா? கவியோகி அவர்களின் கீதாஞ்சலியில் எந்த ஒரு பாடலுக்கும் அவர் தலையங்கம் இடவில்லை ஆனால் இந்த படைப்பில் ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பு சேர்க்கப் பட்டிருக்கிறது. பாடல் தலைப்புகள் இடப்பட்டமையானது பாடல்களினூடாக கவியோகி தாகூர் அவர்கள் வெளிப்படுத்தும் பாடல்களின் தொடர்ச்சி சிதைந்தது போலவும் ஒன்றுக்கொன்று இருந்த பிணைப்பு உடைபட்டது போன்றும் உணர்வு ஏற்படுகின்றது. அது மட்டுமன்றி இடப்பட்டிருக்கக்கூடிய தலைப்பை மையப்படுத்தியே பாடல் உருவாக்கப்பட்டுள்ளது போன்ற தோற்றப்பாடும் ஏற்படுகிறது. பாடலைப் படிக்கின்றபோது ஆச்சரியப்படும்படியான உணர்வு ஏற்படுமாக இருந்தால் அது உள்ளார ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும், ஆனால் இங்கு நீங்கள் வாசிக்கும்போது ஆச்சரியப்பட வேண்டும் என்பது போல் வரிக்கு வரி பாடல்களில் ஆச்சரியக் குறிகள் நிரம்பி வழிகிறது இது ஏன் எனப் புரியவில்லை. கவியின் ஆங்கில மூலப்பிரதியில் இங்கு காட்டப்பட்டிருப்பதுபோல் ஆச்சரியக் குறிகள் காணப்படவில்லை. அதே போலவே தாகூர் அவர்கள் பாடல்களை கேள்விகளாகவும் படைக்கவில்லை ஆனால் மொழிபெயர்ப்பில் பல இடங்களில் கேள்விகளாக கேட்கப்படுவதுபோல் கேள்விக்குறிகள் நிரம்பி வழிகிறது..
ஆங்கிலப்பாடலின் முதல் பாடலின் முதல் வரியை பார்க்கும் போது அது இப்படி அமைந்திருக்கிறது
அந்தமில்தவனாய் எனை நீ ஆக்கினாய், அது உனக் கின்பம்.
(இன்பம் என்பதற்கு பதில் உவகை என்றும் சேர்த்துப்பார்க்கலாம்).
இப்படியாக வரக்கூடிய பாடல் வரிக்குள் எதற்கு ஆச்சரியக்குறியீடும் கேள்விக்குறியும் என்பதுதான் எனக்குள் எழுகின்ற கேள்வியாக இருக்கின்றது.
இந்த மொழி பெயர்ப்பின் ரசனை பற்றி பார்க்கும்போது எனக்கு எழுத்தாளர் டாக்டர் மு. வரதராசன் அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. அவருடைய நண்பர் ஒருவர், தான் மொழி பெயர்த்த 6 பக்கங்களையுடைய ஒரு ஆக்கத்தை கருத்தறியும் பொருட்டு மு.வ. அவர்களிடம் கொடுத்திருக்கிறார் மு. வ. அவர்களும் அதனைப் படித்துவிட்டு மறுநாள் கருத்தை பகிரும்போது கட்டுரை நன்று முதலாவது பாடல் சிறப்பாக இருக்கிறது மற்றொரு பாடலில் பாட்டின்பமே காணேன் என்று குறிப்பிட்டு பாடலையும் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார். அப்போது அந்த ஆக்கத்தை பார்க்கும்படி கொடுத்தவர் ஆச்சரியத்தோடு அந்தப் பாடல்தானே மிகச்சிறப்பாக இருக்கிறது என்று நண்பர்கள் சிலர் வியந்து பாராட்டினர் ஆனால் நீங்கள் இப்படிக் கூறுகின்றீர்கள் என்று குழப்பத்துடன் கூறியிருக்கிறார். அதன் பின்னர் டாக்டர் மு.வ. அவர்கள் அந்தப்பாடலின் ஆங்கில மூலத்தை தேடிப் படித்திருக்கிறார். ஆங்கில மூலத்தில் பாடல் சிறந்த மொழி நடையுடன் கூடியதாகவும் உணர்வு ததும்பும் படியாகவும் அமைந்திருந்தது, ஆனால் நண்பர் மொழி பெயர்த்ததில் உணர்வு துளியளவும் இல்லையே என வியந்து அதற்கு காரணத்தையும் தேடத் தொடங்கியிருக்கிறார். இங்கு அவர் குறிப்பிட்ட உணர்வேதும் இல்லையே என்பதும் பாட்டின்பம் காணவில்லையே என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. இதே நிலைமையைத்தான் எழுத்தாளர் ஜெயபாரதனின் “கீதாஞ்சலி” மொழி பெயர்ப்பிலும் நாம் காணக்கூடியதாக இருக்கிறது. மொழி பெயர்ப்பு உணர்வு ததும்பும்படியாகவோ பாட்டின்பம் போதுமானதாகவுடையதாகவோ தெரிய வில்லை என்றே கூறக்கூடியதாக இருக்கின்றது.

இதே பாடலை ஈழத்தின் மூத்த கவிஞர்களுள் ஒருவராகிய யாழ்ப்பாணத்தின் நவாலியூரைச் சேர்ந்த இரு மொழிப் புலவர் என அழைக்கப்படும் திரு. சோ. நடராசன் அவர்களும் தமிழிலே மொழிபெயர்த்து வழங்கியிருக்கிறார். அவர் இலங்கை கல்விப்பகுதி வித்தியாதரிசகராக இருந்த காலப்பகுதியாகிய 1950ஆம் ஆண்டில் இந்நூலை வெளியிட்டிருக்கிறார். இதற்கு அண்ணாமலை சர்வகலாசாலை தமிழ் பேராசிரியராகவிருந்த இளசைக்கிழார் ச. சோமசுந்தர பாரதியார் அணிந்துரை வழங்கியிருக்கிறார். இனிய எளிய தமிழில் கனியும் தேனும் கலந்த பஞ்சாமிர்த பாகுபோன்றது இவரது பாக்கள் என அவர் இந்தப் படைப்பைப்பற்றி குறிப்பிடுகின்றார். இவரது மொழிபெயர்ப்பில் வந்த முதல் பாடல் இவ்வாறு அமைகிறது.
கீதாஞ்சலி 1
அந்தமில் வாழ்வெனக் கருளினை ஐயனே
தமிழாக்கம்: இருமொழிப் புலவர் சோ. நடராஜன் – இலங்கை
அதுவுமுன் றிருவுள்ளமோ
அழிகாய மாமிக் கலங்கவிழ்த் துக்கவிழ்த்
தரியபுது வாழ்வுபெய்தாய்
சந்ததமு மிச்சிறிய சுந்தரப் புற்குழல்
தாரணியெல் லாங்கொண்டுபோய்
சாசுவத மாகவே புதுமையின் னினிமையுள
சங்கீத கானமருள்வாய்
எந்தையுன் கரகமல சஞ்சீவி பட்டதும்
என்மனம தெல்லைமீறி
எட்டாத வானந்த சாகரத் தாழுவேன்
என்னென்ன வோவலறுவேன்
சிந்தையுஞ் செய்வதற் கரியநின் கொடைகளென்
சிறியகை கொள்ளுமாலோ
தெண்கடல் மடைதிறந் தென்னநீ யுகமெலாஞ்
சொரிகுவை நிறைவதெப்போ?
சோ. நடராசன் அவர்கள் மொழிபெயர்த்த கீதாஞ்சலியின் முதலாவது பாடலாகிய இந்தப்பாடலைப் பார்க்கும் போது முன்னையதையும் விட இந்தப் பாடலில் கவியின்பம் மேலோங்கியிருப்பதை காணமுடிகிறது. இவரது சொற்பிரயோகமும் சொற்களின் கோர்ப்பும் வசன அமைப்பும் அவற்றின் தொடர்ச்சியும் பாட்டின் ஊடே வாசகரை ஆழமாக அழைத்து செல்லும் பாங்கை உருவாக்குகிறது. அனேகமான மூத்த எழுத்தாளர்கள் கவி படைக்கையில் பாரம்பரிய கவி முறையில் பாட்டின்பம் கலந்த, அதேவேளை உணர்வுகளை தூண்டிவிடக்கூடிய சொற்பிரயோகங்களை பயன்படுத்தியதான கவிநடைகளை பின்பற்றியே தமது கவிகளை படைத்துள்ளமையை காணலாம். இந்த நிலைமை பிற்காலத்தில் புதுக்கவிதையின் பாதிப்பு ஏற்படத்தொடங்கியது முதல் புதிய கவிஞர் களிடையே புதுக்கவிதை நடையை பின்பற்றி கவிபடைக்கும் ஆர்வத்தை அதிகமாக ஏற்படுத்திவிட்டிருந்தது.
கவிசொல்லும் முறையில் புதுக்கவிதை கவிநடை பிரயோகம் நடைமுறையில் ஆளுமை செலுத்தத் தொடங்கிய பின்னர் பல கவிஞர்கள் தமது கவிப்படைப்பில் வசனநடை முறைமைகளையும் புகுத்தத் தொடங்கியிருந்தனர். கவியோகி தாகுர் அவர்களும் கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது வசனநடைக் கவிதை முறைமையையே பின்பற்றியிருக்கிறார் என குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆயின் அவருடைய வங்காள மொழி மூலப் படைப்புக்கும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கும் இடையில் கவிதை மொழிநடை வேறுபாடுகள் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கருதுவதற்கும் இடமுண்டு. அதனுடைய பாதிப்புத்தான் ஜெயபாரதனின் மொழிபெயர்ப்பிலும் ஏற்பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. கவியோகி அவர்களின் ஆங்கில மொழிபெயர்பில் அவர் கையாண்ட எளிமை, அழகு, ஆன்மீகத்தேடல் இவற்றை வெளிப்படுத்தியிருந்த முறையை உணர்வதற்கும் போற்றுவதற்கும் வசனம் ஒரு தடையாக அமையவில்லை என்று பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார் அவர்கள் குறிப்பிடுகிறார். கவிதையின் உள்ளத் தீயை இம்சையின்றி வசன காவிய நடையில்தான் பிரதிபலிக்கச் செய்ய முடியும்… பாரதியாரின் ‘ஞானரதம்’‘காட்சிகள்’ போன்ற படைப்புகளும் வசன காவிய நடையில் தான் அமைந்திருக்கின்றன என்பது கீதாஞ்சலியின் மற்றொரு மொழிபெயர்ப்பாளராகிய வீ. ஆர் எம். செட்டியார் அவர்களின் கருத்து. மேற்படி கருத்துக்களோடு ஒப்பிடுகையில் ஜெயபாரதன் அவர்களின் மொழிபெயர்ப்பும் வசன நடையையொத்ததைப் போன்று இருப்பது ஏற்புடையதே அத்தோடு விளங்கிக்கொள்வதற்கும் இலகுவானதே. ஆயினும் கவியின்பக் குறைபாடு முயன்று ஈடுசெய்யப்பட்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ரவிந்திரநாத் தாகூர் அவர்களின் கவிதைகளை மிகவும் குறிப்பாக ‘கீதாஞ்சலி’ தொகுப்பை மொழியெர்த்தவர்களுள் எனது தேடலில் கிடைத்த சிலர் விபரங்களையும் கலையார்வம் மிக்கவர்களினதும், எழுத்தாளர்களினதும், ஆய்வு நோக்கங்களுக்காக பயன்படுத்தவிளையும் மாணவர்களினதும் பயன்கருதி இங்கு குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன். அசிரா என அழைக்கப் படுகின்ற அ. சீனிவாசராகவன் என்ற பிரபல எழுத்தாளர் கவியோகி தாகூர் கவிதைகளை ‘கவியரசர் கண்ட கவிதை’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். இது கவியோகியின் 120 பாடல்கள் அடங்கிய தொகுப்பாக வெளிவந்துள்ளது. இந்த நூலின் பிரதி இலங்கை யாழ்ப்பாணம் சர்வகலாசாலை நூலகத்தில் இருப்பதாக தெரியவருகிறது. அதேவேளை இப்படைப்பில் ‘கீதாஞ்சலி’ கவிகள் உள்ளடக்கப்பட்டதா அல்லது தாகூரின் வேறு கவிகள் மட்டுமே உள்ளடக்கப்பட்ட வெளியீடா என்பதை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.
மேலும் மற்றொரு கவிஞராகிய அமரன் என்பவர் ‘அமராஞ்சலி’ என்ற பெயரில் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் அறியக் கிடைக்கிறது மரினாபுக்ஸ்.காம் என்ற இணையத்தளத்தில் இந்த வெளியீடு விற்பனைக்கிருக்கிறது. பிரபலமான மற்றொரு எழுத்தாளராகிய அரங்க சீனிவாசன் அவர்கள் தாகூரின் கவிதைகளை மூலத்தில் இருந்து மொழிபெயர்த்து ‘தாகூரஞ்சலி’-கவிதைகள் என பெயரிட்டு வெளியிட்டுள் ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. இதே போல் வீ. ஆர். எம். செட்டியார் அவர்கள் ‘தாகூரின் கீதாஞ்சலி’ என்ற பெயரில் 1945 இல் மொழிபெயர்த்து வழங்கியிருக்கிறார் (இந்த வெளியீடும் மரீனாபுக்ஸ்.காம் இல் கிடைக்கிறது). ‘தாகூரின் கீதாஞ்சலி’ என்ற பெயரில் டாக்டர் இல. செ. கந்தசாமி என்ற மற்றொரு எழுத்தாளரும் மொழிபெயர்த்து வெளியீடு ஒன்றை செய்திருக்கிறார். இந்த நூலை உடனடியாக பெறக்கூடிய நிலை அமையாததால் இது கீதாஞ்சலி பாடல்களின் மொழிபெயர்ப்பா அல்லது கீதாஞ்சலியைப்பற்றியதாக இவர் எழுதியிருக்கும் நூலா என்பதை என்னால் ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள முடியவில்லை. இந்த வெளியீடு 1993இல் வெளியிடப்பட்டிருக்கிறது அத்தோடு இந்த வெளியீடு நூல்உலகம். காம் என்ற இணையத்தளத்தில் விற்பனைக் கிருக்கிறது. இவர்கள் மட்டுமல்லாது பல்வேறு சிறந்த படைப்புகளை தந்த இளங்கம்பன் என்ற பிரபலமான மூத்த எழுத்தாளரும் தாகூரின் பாடல்களை ‘கீதாஞ்சலி கீர்த்தனைகள்’ என்ற பெயரில் உருவாக்கி வெளியிட்டதாகவும் அது சிறப்பான மொழிபெயர்ப்பு என்ற வரவேற்பை பெற்றதாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது.
தாகூர் கவிதைகளை முழுமையாக மொழிபெயர்த்து வெளியிட்டவர்கள் தவிர்த்து வேறு சில எழுத்தாளர்கள் கீதாஞ்சலி கவிகளை படித்து தாம் கண்ட இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கிணங்க அதன் சில பாடல்களை தாமே மொழிபெயர்த்து தங்கள் இணையப்பக்கத்தில் அல்லது வலைப்பூக்களில் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுள் ஒருவராகிய என். வீ. எஸ். சுப்பராமன் என்பவர் தனது இணைய பக்கத்தில் கீதாஞ்சலியின் சில பாடல்களை மொழிபெயர்த்து வழங்கியிருக்கிறார். அவரது மொழிபெயர்ப்பில் முதல் பாடலின் ஒரு பகுதியை இங்கு தருகிறேன்:
நிறப்பிட இருக்கும் இன்னும் இடம்!
https://nvsr.wordpress.com/2018/01/08/tagores-gitanjali-poem-1/
அந்தமற்றவன் ஆக்கியே என்னை
அதிலோர் இன்பம் அடைந்தாய் நீ!
இந்த உடலெனும் குடத்தை இனிதாய்
நிறப்பினாய் காலிசெய்தாய்
காலிசெய்தாய் நிறப்பினாய்!
இவ்வாறு அமைகிறது அவரது முதல் பாடலின் சில வரிகள். இதே போல் மேலும் சில பாடல்களை அவர் மொழிபெயர்த்து பதிவிட்டிருக்கிறார். இந்தப் பாடலையும் நான் ஏற்கனவே தந்திருந்த இருவருடைய பாடலையும் ஒப்பிடுகின்றபோது பாடல்களை மொழிபெயர்க்கும்போது அவரவர் தமது ரசனைக்கேற்ப வடிவமைப்பு, வாக்கிய அமைப்பு, பாட்டின்ப இசை வடிவ அமைப்பு போன்ற வற்றை ஒழுங்குபடுத்தி தருகின்றமையை விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. எது சரியாக இருக்கிறது எது தவறாக இருக்கின்றது என வியாக்கியானம் செய்வது எனது நோக்கம் கிடையாது. அப்படி ஒன்றை செய்வதாயின் அது மொழிபெயர்த்தவர்கள் ஒன்றாக இருந்து அவர்கள் பாடல்களை மொழிபெயர்த்து உருவாக்கிய முறை, நோக்கம், எதிர்பார்ப்பு போன்ற பல்வேறு விடயங்களை அவர்கள் முன்வைத்த பின்னர்தான் முடியும். ஒரு விடயத்தை நான் பார்க்கும் முறை வேறு மற்றொருவர் பார்க்கும் முறை வேறாக இருக்கும் ஆகவே நான் எப்படி பார்க்கறேனோ அப்படியே மற்றவரும் பார்க்கவேண்டும் என்று வாதிடுவது பொருத்தமற்றது.
இராய. செல்லப்பா என்ற எழுத்தாளர் செல்லப்பா தமிழ் டயறி என்ற அவரது வலைப்பூ பக்கத்தில் கீதாஞ்சலியை பற்றிய தனது கட்டுரை ஒன்றில் கீதாஞ்சலியின் 31ஆம் மற்றும் 32ஆம் பாடல்களை மொழிபெயர்த்து வழங்கியிருக்கிறார். ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியாகிய அவர் ஒரு மொழி பெயர்ப்பாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளரும் ஆவார். இவர் மொழிபெயர்த்த பாடல்களில் 31ஆவது பாடலின் சில வரிகள்
“கைதியே, உன்னை விலங்கிட்டது யார், சொல்?”
https://chellappatamildiary.blogspot.com/2013/07/blog-post_30.html
“என் தலைவன்” என்றான் கைதி.
“ஆஸ்தியிலும் அதிகாரத்திலும் எவரையும் வென்றுவிட எண்ணினேன்.
அரசனுக்குரிய பொன்னையெல்லாம் என் பொக்கிஷத்தில் ஒளித்தேன்.
உறக்கம் என்னை ஆட்கொண்டபோது ஓடி விழுந்தேன் என்
தலைவனின் கட்டிலில். எழுந்து பார்க்கையில் கைதியாகிக் கிடந்தேன்
எனது பொக்கிஷ அறையிலேயே”
இவருடைய மொழிபெயர்ப்பும் ஜெயபாரதன் அவர்களுடைய மொழிபெயர்ப்பும் சில மாறுதல்கள் தவிர அனேகமாக ஒரே பாங்கினதாகவே அமைகின்றன. பெரிய அளவிலான வேறுபாடுகளை காணமுடியவில்லை. அதேவேளை இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமானதாகவே எனக்குப்படுகிறது. இங்கு பாட்டமைப்பு முறை பற்றியதன்றி உணர்வுச் சுவை பற்றியதே எனது கருத்து. இவருடைய பாடலை புலவர் நடராசன் அவற்களது 31வது பாடலுக்கான மொழிபெயர்புடன் பார்க்கையில் பாடலின் சுவையில் பாரிய மாறுதல் தென்படுகிறது. கட்டுரையின் நீட்சியை கட்டுப்படுத்தும்வகையில் அவருடைய பாடலில் சிலவரிகள் மட்டும் இங்கு தருகிறேன்.
கைதி யேயுனைக் கைகட்டி வைத்தவன்
செய்தி யாதெனச் சொல்லுதி மற்றெனக்
கைய னென்னுடை யண்ணலென் றான்கைதி
வைய கத்திலெல் லாரையும் வெல்வன்யான்
எல்லை யற்ற நிதியொடு வல்லமை
எல்லை யற்ற வகையினி லெய்துவேன்
எல்லை யாயெதற் குந்தலை யாகுவேன்
எல்லை யில்லை யெனக்கென வெண்ணினேன்
இவ்வாறு ஒவ்வொருவருடைய மொழிபெயர்ப்பும் வித்தியாசப்படுவது தவிர்க்கமுடியாததே. மொழி பெயர்ப்பு மேற்கொள்ளப்படுகின்றபோது சட்டம் சார் ஆவணங்கள் அதன் கருத்து சற்றும் மாறுபடாமல் மொழிபெயர்க்கப்படவேண்டும் என்பது நியதி. அதே போல கதைகள் மொழி பெயர்க்கப்படுகின்றபோது கதைசொல்லும் நடையும் கதையின் வரிக்குவரி வருகின்ற விடயங்களும் மூலத்திலிருந்து சற்றும் மாறுபடாது அதனுடைய போக்கிலே மொழி பெயர்க்கப்படுகின்றபோது தான் அந்த மொழிபெயர்ப்பு சிறப்பாக அமையும். பாட்டுக்கள் மற்றும் கவிதைகளில் கருத்தும் பாட்டை சொல்லும் போது ஏற்படுகின்ற ரசமும் மிகவும் முக்கியமாக கவனத்தில் எழுக்கப்படவேண்டும். இவை மொழிபெயர்ப்பில் கடைப்பிடிக்கப்படவேண்டிய பொதுவான நடைமுறைகள். மொழிபெயர்ப்பு, சொற்பெயர்ப்பு இந்த இரண்டும் வித்தியாசமானவை என்பது யாம் அறியாததல்ல. ஆகவே இதனை மொழி பெயர்ப்பின்போது மொழிபெயர்ப்பாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பது ஏற்புடையதே. அப்போதுதான் அந்த மொழிபெயர்ப்பு படைப்புக்கள் சிறப்புப்பெறும்.
அண்மையில் எனது நண்பர் ஒருவர் ஆக்கம் ஒன்றின் சிலபகுதிகளை மொழிபெயர்த்திருந்தார். அதனை மெய்ப்புப் பார்த்து தரும்படி என்னிடம் அனுப்பியிருந்தார். அதில் ஒரு இடத்திலே “ஊழியர்கள் வேலையிலிருந்து விலகும் வீதம் அதிகரித்திருந்தது” என்பதற்குப்பதிலாக “ஊழியர்களால் ஏற்படும் வருமானம் அதிகரித்திருந்தது” எனக்குறிப்பிட்டிருந்தார். இது அவரது மொழி பெயர்ப்பில் ஏற்படவிருந்த மிகப்பெரிய கருத்து தவறு. ஆங்கில மூலத்தில் குறிப்பிட்ட விடயம் வந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருந்த Turnover என்ற சொல்லே இந்த கருத்து குழப்பத்திற்கு காரணமாயிற்று. பின்னர் அதனை தெளிவுபடுத்தி திருத்தி அனுப்பியிருந்தேன். இவ்வாறு வெவ்வேறு தவறுகளும் அதில் அடையாளம் காணப்பட்டு திருத்தப்பட்டது. இதை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் காற்புள்ளி ஒன்றை போடவேண்டிய குறிப்பிட்ட இடத்திலல்லாது இடம் மாறி வேறொரு இடத்தில் போட்டுவிடுவதே மிகவும் ஆபத்தான கருத்து மாற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடும்.
ஆகவே கீதாஞ்சலி போன்ற சிறந்த அதேவேளை முக்கியத்துவம் வாய்ந்த படைப்புக்கள் மொழிபெயர்ப்பு செய்யப்படும்போது தேர்ச்சிபெற்ற அதேவேளை அனுபவம் வாய்ந்தவர்கள் அதனை மேற்கொண்டால் கருத்து, ரசனை, பாட்டின்பம், வசன அமைப்பு போன்றவற்றில் சிதைவுகளற்ற மொழிபெயர்ப்பை பெறலாம். நகை, அழுகை, இழிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை மற்றும் சாந்தம் என்ற ஒன்பது ரசங்கள் பற்றி நாம் அறிந்திருக்கின்றோம். ஏடுகளில் எழுத்தாணிகொண்டு எழுத்தறிவித்த காலப்பகுதியில் அனேகமான விடயங்கள் பாடல்களாகவே பதிவுசெய்யப்பட்டன. அந்தப்பாடல்கள் எவ்வாறான உணர்வை வெளிப்படுத்தும் வகையில் படைக்கப்பட்டனவோ அதற்கமைவாக மேற்கூறிய ரசங்களில் அந்த உணர்வை வெளிப்படுத்தும் ரசத்தை ஊட்டியே படைக்கப்பட்டன. மொழிபெயர்ப்பு கவிகளிலும், பாடல்களிலும் கூட அதுவே பின்பற்றப்பட்டது. அதுவே கவியின்பம் மேலோங்கி அனைவரும் ஆர்வத்துடன் கவிதைகளையோ அல்லது பாடல்களையோ படிக்க தூண்டுவதாயமைந்தது. தற்போது பல்வேறு வகையான கட்புல சாதன ஆழுமைகள் காரணமாக ரசங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு கவிகளில் ஊடுபுகுத்தப்படும் அவசியம் குறைவடைந்தே வருகிறது. ஆகவே கவிகளிலும் பாடல்களிலும் எதிர் பார்க்கப்படும் உணர்வுகளை உருவாக்கத்தக்க ரசங்களை உட்படுத்தியதாக மொழிபெயர்ப்புக்கள் மேற்கொள்ளப்படுவதே சிறந்த பெறுபேற்றைத்தரும். கீதாஞ்சலியின் ஏனைய மொழி பெயர்ப்புகள் கிடைக்கப்பெற்றதும் அவை பற்றிய எனது பதிவுகளையும் தர எண்ணுகிறேன். மொழிபெயர்ப்பு நூலினை தேர்வு செய்வதில் அது வாசகர்களுக்கு பெரிதும் துணையாக இருக்கும் என்பதையும் பதிவு செய்து இந்த ஆக்கத்தை முடிவுறுத்துகிறேன்.
***
இது போன்ற மேலும் பல ஆக்கங்களை வழங்கவும்
Great analysis. Amazing. We are waiting for many articles from writer.