பனபூல்
(தமிழில்: மாது)

“ஏம்மா”
“என்ன”
“டெய்லர் என் புது சூட்ட கொண்டுவந்து கொடுத்தானா?”
“இல்ல. அவன்கிட்ட மூணு தடவ ஞாபகப்படுத்திட்டேன்,” என்று படுக்கையிலிருந்தபடியே சலிப்புடன் பதிலளித்தாள் அவனது மனைவி.
“சரியாப் போச்சு. இப்ப நான் எதைப் போட்டுக்கறது.”
“பழச போட்டுக்கோங்க, யாருக்கும் தெரியாது.”
“அதத்தான் தினமும் போட்டுக்கிட்டிருக்கேனே, இன்னிக்கு புதுசு போடலாம்னு நெனச்சேன். டெய்லர் ஏன் தரல?”
“தெரியல. ஏதோ போராட்டத்துல கலந்துக்கறானாம். நாம வேலைக்கு ஏத்த கூலி தரதில்லையாம்,” என்று சற்றே ஓருக்களித்தவாறு பதிலளித்தாள்.
“என்னோட கோட் எங்க?”
“துணி ஸ்டாண்ட்ல இருக்கு”
“ஹூம்.., கோட்ல ரெண்டு பட்டன காணோம்…..எக்ஸ்ட்ரா பட்டன் இருக்கா?”
அவளிடமிருந்து பதிலில்லை.
“ஏம்மா…”
“ஏன் இப்படி காலங்காத்தால பாடா படுத்துறீங்க! நைட் பூரா கொஞ்சம் கூட கண்ண மூடல,” முனகியவாறு படுக்கையை விட்டு எழுந்து, ஒரு டின்னிலிருந்து இரண்டு பொத்தான்கள், ஊசி, நூல் ஆகியவற்றை எடுத்தாள்.
“கலர் மாட்ச் ஆகலையே”
“ஒரே கலர்ல ரெண்டு பட்டன் இல்ல…சரி கோட்ட கொடுங்க,”
“பாக்க கேவலமா இருக்காதா?”
“யாருக்கும் தெரியாது”
“டீ போட்டாச்சா?”
“நைட்டே ப்ளாஸ்க்ல போட்டு வெச்சுட்டேன். நான் இவ்வளவு சீக்கிரம் எழுந்துக்கறதாயில்ல…உங்க புண்ணியத்துல இதோ எழுந்தாச்சு.”
“அஞ்சேகால்! சீக்கிரம் டீய கொண்டா”
“அவசரப்படுத்தாதீங்க…அவள மாதிரி எனக்கென்ன பத்து கையா இருக்கு?”
ஒருவழியாக பொத்தான்கள் தைக்கப்பட்டன. ஆறிப்போன டீயை குடித்துவிட்டு, அவனது பழைய சூட்டுடன் சூரியன் கிழக்கில் உதித்தான்.
சஞ்சனா, அவனது மனைவி, மறுபடியும் தூங்கப் போய்விட்டாள்.