ஒரு கொலை பற்றிய செய்தி

தமிழில் : முத்து காளிமுத்து

பிபா, நிர்மல் ஆங்கிலப்பத்திரிகை சந்தாதாரர்கள். பிபா செய்தித்தாளில் தலைப்புச்செய்திகள், புகைப்படங்கள்  தவிர வேறெதுவும் பெரும்பாலும் வாசிக்கமாட்டாள். எனவே, அவளுக்கு இந்த செய்தியைப் பற்றி எதுவும் தெரியவில்லை. ஒரு மதியநேரம் பக்கத்து வீட்டுக்காரப்பெண் மானஷி, அவர்களது பால்கனியிலிருந்து, ‘அடக்கடவுளே, நீங்க இந்த செய்தியை இன்னும் படிக்கலையா? பரவாயில்ல, எங்க வீட்டுச் செய்தித்தாளை உங்களுக்குத் தர்றேன். உங்க பேர் உள்ள ஒரு பெண் கொலை செய்யப்பட்டிருக்காங்க. என்ன பொருத்தம் பார்த்தீங்களா! வடக்கு கல்கத்தாவில் ஷியாம்புகூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு இல்லத்தரசி, அவருக்கு ஒரு மகன். எனக்கு ஆச்சரியமா போச்சு. முதல்ல, என் கணவர்தான் இந்த செய்தியைப் படிச்சாரு. அப்புறம், என்னை படிக்கச் சொன்னாரு. பக்கத்து வீட்டுக்காரம்மா உயிரோட இருக்காங்களா, இல்லையானு போயி பார்த்திட்டு வான்னு சொன்னாரு. நான் ஜன்னலில் இருந்து பார்த்தால் உங்க வீட்டுக்காரர் கழிப்பறையிலிருந்து வெளியே வர்ராரு. நீங்க என்னடான்னா முற்றத்துல நின்னுகிட்டு எதுக்கோ பாலாயைத்  திட்டிகிட்டு இருந்தீங்க. நாங்க ரெண்டு பேரும் இதைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டோம்’.

பிபாவுக்கு ஆச்சரியமாயிருந்தது ‘அப்படியா, கொண்டாங்க. நானும் அந்த செய்தித்தாளைப் படிச்சுப் பார்க்கிறேன்’, என்றாள்.

மானஷி செய்தித்தாளைக் கொடுக்கும்போதே ‘என் கணவர் இன்னும் படிச்சு முடிக்கவில்லை,’ என்றாள்.

‘நான் ஒரு நிமிசத்துல, படிச்சிட்டு தந்திடுறேன்’ என்றாள்  பிபா.

பெரிய கொட்டை எழுத்துக்களில் இருந்தது: ‘இல்லத்தரசி பிபா தாஸ் கொலை செய்யப்பட்டார். கொலையாளி பணம், நகைகளைத் திருடவில்லை. வேலைக்காரன் தலைமறைவு.’

இது ஒரு சின்ன செய்திதான். ஆனால் வாசகர்களுக்கு பரபரப்பை அளிக்க நீட்டி முழக்கப்பட்டிருந்தது. பிபாவுக்குத் தோளில் முட்கள் குத்தினார் போல் இருந்தது. அவளுடைய இதயத்துடிப்பே ஒரு விநாடி நின்று போயிற்று. 

அவளுடைய இறுதித் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்த 17 வயது மகன், அந்நேரம் பள்ளியில் இருந்தான். பிபா தாஸ் மதிய வேளையில் வீட்டில் தனியாக இருந்தாள். யாரோ அல்லது சிலபேர் சேர்ந்து அவளை கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவளுடைய உடலை சமையலறையில் கிடத்தியிருந்தனர். இறந்த பெண்மணியின் உடலில் எந்தக் காயமும் இல்லை. அலமாரிக்கான சாவிகள் அவளது தலையணைக்கு அடியில் இருந்தன, ஆனால் அலமாரி திறக்கப்படவில்லை. பணமோ, நகைகளோ திருடப்படவில்லை. பள்ளியிலிருந்து திரும்பிய அவரது மகன், வீட்டுக்குள் நுழைந்தவுடன் முன்கதவு அகலமாகத் திறந்திருப்பதைப் பார்த்தான். உள்ளே நுழைந்தவுடன் வேலைக்காரனை அழைத்தான். மேலே சென்று  பார்த்தபொழுது, அவனது அம்மா குப்புறக் கவிழ்ந்து கிடந்தார். அவர் ரவிக்கை அணிந்திருக்கவில்லை. அணிந்திருந்த சேலை முழங்கால்களுக்கு மேல் உயர்ந்திருந்தது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசாருக்கு உறுதியாகத் தெரியவில்லை. வேலைக்காரனுக்கு இருபத்து நான்கு வயது, அங்கேயே இரண்டு வருடங்கள் வேலை பார்த்து வந்தான். இப்போது தலைமறைவாகிவிட்டான்.

‘இந்த சம்பவம் எங்கு நடந்துச்சுன்னு தெரியல’ செய்தித்தாளைத் திருப்பி கொடுக்கும்போது பிபா சொன்னாள். ‘எங்காவது பக்கத்திலதான் நடந்திருக்க வேண்டும்.’

‘ஷியாம்புகூர் நம்ம போலீஸ் ஸ்டேஷன்தான். எளிதா கண்டுபிடிச்சிடலாம்.’ மானஷி பிபாவிடம் தானும் விசாரிப்பதாகச் சொன்னாள்.

கொஞ்ச நேரம் கழிச்சு பிபாவின் கணவர் நிர்மல் போனில் அவளை அழைத்து ‘இன்னிக்கு பத்திரிகையில் ஒரு கொலைச்செய்தி வந்திருக்கு’ என்றார்.

‘நம்ம பக்கத்து வீட்டு மானஷி கூட இப்போதான் எனக்கு இந்த செய்தியைக் காண்பித்தார்.’

‘பாலாய் எங்கே?’ 

‘கீழே தூங்கிக்கிட்டு இருப்பான் இந்நேரம்.’

‘மேல்மாடி கதவை பூட்டிக்கோ.’

‘நானும் அதைத்தான் செய்யனும்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.’

‘ஆபீஸ்ல உன் பெயர் சிலருக்குத் தெரியும். சுகுமார்கூட என்கிட்ட இன்னிக்கு விசாரிக்க வந்தாரு. காலையில் பேப்பரை படிச்சப் பிறகு கவலையாயிருந்தாரு.  பிற்பகலில் ஆண் ஊழியரைத் தவிர பொதுவா யாரும் வீட்டில் இருப்பதில்லை, திருமதி தாஸ் வேற ரொம்ப அழகானவங்கன்னு சொன்னார்.’

‘அய்யோ, பாலாய் நல்ல பையன். மூன்று வருஷமா எங்ககூட இருக்கான்’ என்றேன்.

‘இன்று நியூஸ் பேப்பரில் ஏதோ செய்தி இருந்தது…’ பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடனே சௌமித்ரா சொன்னான்.

‘ஆமா, நானும் படிச்சேன். என்ன அதுக்கு?’

‘செய்தித்தாளில் எப்படியெல்லாம் மோசமா எழுதுறாங்க!. ஒரு  பெண்மணியின் ரவிக்கை அகற்றப்பட்டது அப்படின்னு இப்படியெல்லாமா எழுதுவாங்க? என் நண்பர்கள் சிலரிட்ட கொஞ்ச நேரம் வாக்குவாதம் செஞ்சேன் இதைப்பத்தி. பல பெண்கள் புழுக்கமான பிற்பகல்களில் அவங்க ரவிக்கைகளைக் கழற்றி வைத்துவிடுவாங்கன்னு சொன்னேன். அவங்க என்னை நம்ப மாட்டேங்குறாங்க… சரி, அதை விடுங்க.’

‘இதைப்பற்றியெல்லாம் நீங்க ஏன் பேசுறீங்க??’

‘அப்போ, அவர்கள் ஏன் இப்படி செய்தித்தாளில்  எழுதுறாங்க? என் கூடப்படிக்கிற  சிலர் உங்களைப் பாத்திருக்காங்க. அவங்கதான் கவலைப்படுறாங்க.’

‘எதைப் பத்தி?’

‘மதியம் முழுவதும் நீங்கள் வீட்டில் தனியாக இருப்பதைப் பற்றி… சரி எனக்குப் பசிக்குது.’

நிர்மல் யோசனையில் மாலையில் அலுவலகத்திலிருந்து திரும்பியபோது, ‘நீ வீட்டைப் பூட்டிவிட்டு, பக்கத்து வீட்டுக்கு தினமும் மதியமாவது போயிட்டு வா. அதுதான் நல்லது. வீட்டில் தனியாக இருப்பது புத்திசாலித்தனமாகத் தெரியல. கல்கத்தாவில் இப்போ இந்த மாதிரி கொலைகள் அதிகமாகிட்டு வருகிறது. பலியானவங்கள்ல பெரும்பாலோர் அழகான பெண்கள்தான்.’

‘நீங்க சொல்லுறதக்  கேட்டா எனக்குப் பயமாயிருக்கு.’ பிபா நிதானமாக இருக்கப் பார்த்தாள், ஆனால் முடியவில்லை. உள்ளுக்குள் பயந்தாள் அவள்.

‘அண்ணி, அண்ணி,’ பாலாய் கீழே இருந்து பிபாவை கூப்பிட்டுக் கொண்டிருந்தான் . அவள் படிக்கட்டுகளை நோக்கி திரும்பும்போது, ​​நிர்மல், ‘நம்மகிட்ட பாலாயின் சொந்த ஊரு முகவரி இருக்கிறதா?’ என்றான்.

‘நம்மகிட்ட இல்லைன்னுதான் நினைக்கிறேன்.’

‘அப்போ உடனே வாங்கு’ என்றான் நிர்மல்.

அடுத்த நாள் மானஷி அவளாகவே செய்தித்தாளைக் கையில் எடுத்துக் கொண்டு பிபாவிடம் கொடுக்க வந்து  சொன்னாள், ‘கொஞ்சம் நினைச்சுப் பாருங்க! எவ்வளவு கொடூரமா இருக்கும், இந்த வயதில், பள்ளிக்குச் செல்லும் வயதில் ஒரு பையன் இருக்கும்போதே, வேலைக்காரனுடன் உறவு என்பதெல்லாம்!’

முந்தைய நாள் போலவே தலைப்பு பெரிதாக இருந்தது: பிபா தாஸ் வேலைக்காரனுடன் ரகசிய உறவு கொண்டிருந்தார்.

‘உங்களுக்குத் தெரிஞ்சவங்க இதப் படிக்கும்போது உங்களைப் பத்திதான் உடனே நினைப்பாங்க… எல்லாத்துக்கும் மேலாக உங்க ரெண்டுபேருக்கும் நிறைய ஒற்றுமைகள் வேற. எங்க வீட்டுக்குப் பின்னாடி இருக்கும் பள்ளிக்கூட ஆசிரியை கூட என்கிட்டப் பேசிக்கிட்டு இருந்தாங்க.’

‘என்ன சொன்னாங்க அவங்க?’ பிபாவின் கைகால்கள் எல்லாம் மரத்துப் போயின. மக்கள் எப்படி கொலை செய்தியையெல்லாம் எல்லோரிடமும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்!

மோசமா ஒண்ணும் சொல்லல. தலைப்புச் செய்தியைப் பார்த்தவுடன் உங்க ஞாபகம் வந்துச்சுனு சொன்னாங்க. இரண்டு பிபா தாஸ்களுக்கும் பெயரைத் தவிர நிறைய ஒற்றுமைகள் வேற இருக்கு.’

‘நிறையவா? என்ன சொல்றீங்க?’

‘உங்க ரெண்டு பேருக்கும் உள்ள வேற ஒற்றுமைகள்னா – ஒரே வயசு, வீட்டில ஒரே பையன், வேலைக்கார இளைஞன் அந்த மாதிரி. என் கணவர் கூட இததான் சொன்னாரு. இந்த செய்திகள எல்லாம் படிக்க, கேட்க உங்களுக்கு தர்மசங்கடமா, அசிங்கமா இருக்குமில்லையா?’

‘ஆமாங்க, நிஜம்தான் நீங்க சொல்லுறது.’

‘நீங்க முழுசா படிச்சிட்டு கொடுங்க, நான் அதுக்குப் பிறகு உங்ககிட்ட இருந்து பொறுமையா வாங்கிக்கிறேன்.’

நான் என்ன தப்பு செஞ்சேன். கையில் செய்திதாளோடு படுக்கையில் கவலையோடு உட்கார்ந்திருந்தாள். பிபா தாஸ் என்ற பேரில்  ஏதோ ஒரு ஆவி அவளை நிலைகுலையச் செய்தது. மானஷி, பின் வீட்டுக்காரர்கள், ஏன் கிட்டத்தட்ட அக்கம்பக்கத்தில் இருக்கும் எல்லோரும்தான் அவள் மனதைக் காயப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவளைப் பற்றி இப்போது எல்லோர் வீட்டிலும் ரகசியம்தான் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அவளுக்கு ஒரு குழந்தைக்கு பதிலாக இரண்டு, மூன்று, இல்லை நான்கு குழந்தைகள் இருந்திருந்தால்?  நிர்மலின் மோசமான ஆலோசனைதான் இப்போது என்னுடைய இந்த நிலைமைக்கு  – நாம நல்லமுறையில வளர்த்து ஆளாக்க நமக்கு ஒரு குழந்தை போதும் என்று சொல்லிவிட்டார்.

பிபா அங்குமிங்கும் பொறுமை இழந்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரிந்தவர்கள்  எல்லோரும் பெயரைப் பார்த்தவுடன் அவளைத்தான் நினைப்பார்கள். நினைத்துப் பார்த்தால் எல்லா மதிய வேளையிலும் அவள் தனியாகத்தான் இருந்திருக்கிறாள். பாலாய் இளைஞன் வேறே, அவனுடன் ரகசிய உறவு என்பதுகின்றது கேட்க எவ்வளவு நாராசமாக இருக்கிறது.

தொலைபேசி மணி ஒலித்தது.  எடுக்க பிபா ஓடினாள். யார்கிட்டேயாவது போனில் பேசிக்கொண்டு இருந்தால்  தனிமையை உணரமாட்டாள் .

‘பிபாவா?  நான் அத்தை பேசுறேன், நீ எப்படி இருக்கே?  நிமு எப்படி இருக்கான்?’

‘நான் நல்லா இருக்கேன், அத்தை.  நாங்க எல்லோரும் நல்லா இருக்கிறோம்.’

‘நான் இன்னைக்கு ஒரு செய்தியைப் படிச்சவுடன் எனக்கு  ஈரக்கொலையே  நடுங்கிப்போச்சு. நீ அந்த செய்தியைப் படிச்சியா?’

‘கொலைன்னு செய்தி வந்திருந்ததே. அதைச் சொல்றீங்களா?’

‘ஆமா, ஒரு கொலை செய்தி மட்டுமில்ல, இன்னும் நிறைய எழுதியிருந்தாங்க.’

‘அத்தை நீங்க நினைக்கிற மாதிரி இங்கே அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல, தவறா எதுவும் நினைக்காதீங்க…’

‘நான் உங்க வீட்டில ஒரு வேலைக்கார பையனப் பார்த்தேனே?  அவன் இன்னும் இருக்கானா?’

‘ஓ அவனா. பாலாயை  ரொம்ப நாளைக்கு முன்பே வேலையிலிருந்து தூக்கியாச்சு.  கிட்டத்தட்ட ஆறு மாதங்கள்…இல்லை, ஒரு வருடம் இருக்கும். இப்போ ஒரு வேலைக்காரிதான் இருக்கா.’

‘நல்ல காரியம் பண்ணீங்க, புத்திசாலிங்க நீங்க  ரெண்டுபேரும். வாலிபவயசு வேலைகார பசங்கள எப்பவும் நம்ப முடியாது.  இந்த ஆண்டு சௌமித்ரா மேல்நிலைத் தேர்வு எழுதப் போறானா? ’

‘ஆமா.’

‘நான் உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சு, கூடிய சீக்கிரம் வந்து பார்க்கிறேன்.’

‘கண்டிப்பா வாங்க அத்தை.’

ரிசீவரை வைத்தவுடன் பிபாவின் கைகள் நடுங்கின. அத்தை இங்கே வந்தால் பாலாயைப் பார்த்து விடுவார்.. பிபா படுக்கையில் உட்கார்ந்துகொண்டு, தலைமீது கை வைத்துக்கொண்டாள். அவளுக்கு உடம்பு சுகவீனமாக இருந்தது.

போன் மறுபடியும் ஒலித்தது. பிபா போனை எடுக்க  ஓடினாள்.

‘நிர்மல் பேசுறேன். கதவைப் பூட்டியிருக்கத்தானே? ’

‘ஆமா.’

‘கிராமத்தில் பாலாயின் அட்ரஸ் வாங்கச் சொல்லியிருந்தேனே.’

‘சரி, நான் இப்போ போயி அவன்கிட்ட கேட்டு வாங்கிட்டு வந்திடுறேன்.’

‘கண்டிப்பா இப்போ போகாதே.  அவன் இப்போ கீழேத்  தனியாக இருப்பான்… இந்த மாதிரி முக்கியமான விஷயங்களை எல்லாம் நீ மறக்கக்கூடாதுன்னு நான் உனக்கு ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல!’ நிர்மலின் குரலில் எரிச்சல் இருந்தது.

பிபாவுக்கு நிம்மதியே போய்விட்டது. ‘நான் இப்போ கீழே போனால் என் தலைவிதி எப்படி மாறிப்போகுமோ?’ அவள் தனக்குத் தானே சொல்லிக்கொண்டே சென்றாள்.  ‘பாலாய் ஒரு நல்ல இளைஞன்.’

‘பிபா தாஸும் தனது கொலைகாரன் ஒரு நல்ல இளைஞன் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.’

ரிசீவரின் அறைதல் சத்தம் பிபாவின் காதுகளில் ஒலித்தது.  அவள் கண்களை மூடிக்கொண்டு நின்றாள்.  படுக்கையின் பக்கவாட்டைப் பிடிக்க ஒரிரு அடிகள் எடுத்து வைத்து, செய்தித்தாளின் தலைப்பை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பள்ளியிலிருந்து திரும்பி வந்தவுடன், ​​சௌமித்ரா வழக்கம் போல், ‘எனக்குப் பசிக்கிறது’ என்று தனது அம்மாவிடம் மேலே வராமல் கீழிருந்து சொன்னான். ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த பிபா, ‘உனக்கு  சாப்பாடைக் கொடுக்கச் சொல்லி  பாலாயிகிட்டப் போயி சொல்லு…பரவாயில்லை, நானே போயி உனக்கு வாங்கிட்டு வர்றேன்.’ என்றாள்.

‘இல்லை’ சௌமித்ரா கத்தினான்.  ‘நீங்க கீழே போகாதீங்க, நானே போயி வாங்கிக்கிறேன்.’ என்றான்.

பிபாவின் உதடுகள் நடுங்க ஆரம்பித்தன. அவள் வெளியே சென்று பால்கனியில் இருந்து சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அக்கம்பக்கத்தினரும், தெருவில் உள்ளவர்களும் அவளைப் பார்க்கட்டும்.  அவள் கொலை செய்யப்படவில்லை, அவளுக்கு யாருடனும் எந்த உறவும் இல்லை. அவளுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.  ‘நீங்கள் நல்லா என்னைப் பார்க்க முடியும், முழுசா நான் இங்குதான் இருக்கிறேன்,’ என்று முணுமுணுத்தாள் அவள்.

அலுவலகத்திலிருந்து திரும்பி, ஒவ்வொரு நாளும் செய்ததைப் போல மாடிக்கு வருவதற்கு பதிலாக, நிர்மல் பாலாயுடன் பேசத் தொடங்கினார்.  கீழே செல்லவிருந்தபோது, ​​அவர்களின் குரல்களைக் கேட்டதும் பிபா படிக்கட்டில் நின்றுவிட்டாள்.

‘நீங்கள் என்னை வேலையிலிருந்து தூக்க, நான் என்ன தப்பு செய்தேன் இந்த வீட்டுல?  எனக்கு திடீரென்று இப்போ எங்கே வேலை கிடைக்கும்?  இந்த மாதக் கடைசி வரைக்குமாவது எனக்கு வேலை கொடுங்கள்.’

‘அப்படியெல்லாம் செய்யமுடியாது, நீ நாளைக்கே வீட்டை விட்டுப் போகவேண்டும்.  உன்னைப்பற்றி எனக்கு ஒரு பிரச்சினை இருப்பதாக நான் முன்பே சொன்னேன்ல?  நான்தான் முழு மாத சம்பளத்தையும் உனக்கு தர்றேன்னு சொன்னேனே, அப்புறம் என்ன பிரச்சினை உனக்கு? ’

நிர்மலின் காலடி சத்தம் படிக்கட்டு பக்கத்தில் கேட்டவுடன் பிபா அறைக்குள் திரும்பினாள்.

பிபா பால்கனியில் தனிமையில் அமர்ந்திருந்தாள் ஒரு நாள்.  இரண்டு வேலைக்காரிகள் வேலைக்குச் செல்லும் வழியில் கீழே சென்று கொண்டிருந்தனர்.  குழாய்களில்  தண்ணீர் வரும் நேரம் இது.  ‘ஒரு நிமிடம் காத்திருங்க’ என்று பிபா மேல்மாடியிலிருந்து அவர்களிடம் கத்திச் சொன்னாள்.

ஒரு நிமிடம் தயங்கி யோசித்த பின், அவர்கள் மீண்டும் நடையைக் கட்டினார்கள்.

‘போகாதீங்க.  எங்க வீட்டுல வேலை செய்ய உங்களுக்கு விருப்பமா? ஓடாதீங்க, நில்லுங்க.’ என்று மேலிருந்து கத்தினாள் பிபா. 

பணிப்பெண்கள் நடையை நிறுத்தவில்லை.  ஆனால் ஒரு பெண் கூட வந்த இன்னொரு பெண்ணிடம், சொல்லிக் கொண்டு போனாள் ‘அந்த அம்மா வீட்டுல ஆறு மாதங்கள்ல அஞ்சு பேரு வேலைப்பார்த்தாங்க, யாருமே பதினைஞ்சு நாட்களுக்கு மேல் நிலைக்கல. அந்தம்மா ஒரு பைத்தியம் பிடித்த பொம்பள. யாரு அவங்க வீட்டுல வேலை செய்வாங்க!’.

  • ஆங்கிலத்தில்: அருணவ சின்ஹா
  • தமிழில் : முத்து காளிமுத்து

4 Replies to “ஒரு கொலை பற்றிய செய்தி”

  1. ஆசிரியர் முத்து காளிமுத்து அவர்கள் நன்றாக மொழிபெயர்த்திருக்கிறார். செரிவான நடை நல்ல சொற்பிரயோகம்.. என்ன கொஞ்சம் பத்திகளை சிறியதாக பிரித்திருக்கலாம். நீண்ட பத்தி துவக்கத்தில் கொஞ்சம் குழப்பத்தைத் தருகிறது. மற்றபடி மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.