நவநீதா தேவ் சென்: ஐந்து கவிதைகள்

(தமிழில்: வேணுகோபால் தயாநிதி)

வனவாசம் (அல்லது காட்டின் கதை)

என் வனவாசம்
முடிந்துவிட்டது, அம்மா.
நான் காட்டில் வாழப்போவதில்லை
வா தாயே, சிக்குப்பிடித்த
இந்த தாடிக்கு கீழே
வாஞ்சையான
உன் குழந்தையின் கன்னத்திற்கு
உணவிடு
மார்பகங்களை திற, தாயே,
பார், ஏழு ஓடைகளின் பால்
என் உலர்ந்த நாக்கை நோக்கி
எப்படி பீச்சுகிறது

இந்த பாதங்களை பார் தாயே,
குட்டிக்கால்கள்
உன் கழுத்துமணி ஒலித்தவை
நான் பிறந்தபோது
உங்களின் தாயத்தை முடிச்சிட்டீர்களே
இந்த கையை பாருங்கள்
மரக்கன்றின் இதயத்தை நட்டீர்களே
அந்த மார்புக்கூட்டை பாருங்கள்
ஒளி ஊடுருவ முடியாதபடி
இருள் வலை
மூடிய கானகத்துள்
இளம்பச்சை நிறம் மிளிர
பசியுள்ள மரமாகி
நிற்பதை

பற்கள் கொண்ட இலைகள்
கூரிய நகங்கள் கொண்ட மலர்கள், மற்றும்
பிற இதயங்களின் இறைச்சியை மெல்லும்
தேர்ந்த ஊன் உண்ணியாக

என் வனவாசம் முடிந்துவிட்டது, தாயே
வனம்
இப்போது
எனக்குள் வாழ்கிறது.

(Translated into English by Nabneeta Dev Sen from the original Bengali Aranyak, Seshta Kavita, Kolkata, Deys, 1996. Translation published in The Little Magazine: The Other, New Delhi. Vol 1, Issue 1, 2000)

வீடு

ஒரு உப்பரிகையிலிருந்து
இன்னொன்றிற்கு
இந்த அறையிலிருந்து
அடுத்த அறைக்கு என
தப்பி ஓடுகிறேன்

இந்த ஒரு வீடுதான்
ஒரு சில அறைகள்தான்
கைவிரல்களால் எண்ணிவிட முடியும்.

சில முறைகள் எண்ணியபின்
களைப்படைந்து
ஆரம்பித்த
அதே இடத்திற்கு வருகிறேன்
சுவரில் தொங்கும் புகைப்படங்கள்
எவ்வளவுதான் பாசாங்குடன் புன்னகைத்தாலும்
தரையில் விழும் நிழல்
அதையும் இல்லாமல் ஆக்கும்
வீடு முழுக்க சலசலப்புகள்
கொடிய கூச்சல்கள்

கண்ணாடிப்பாத்திரங்களின் கிணுங்கல்கள்
சட்டி பாத்திரங்கள் உரசி மோதும் ஒலிகள்
குடிபோதையின் சச்சரவுகளில்
களைத்து
கதவுகள், சன்னல்கள் தாழ்வாரங்கள் கூரை
அனைத்தையும் துறந்து
தப்பி ஓடி வந்த
அயர்ச்சியில்
முந்தானையை விரித்து
இந்தப் பைத்தியக்கார தரையில்
படுக்கிறேன்.

(Dated May 3rd, 1966, Kolkata; Translated by Carolyne Wright and Sunil B. Ray with the author. Published in Bengali in Swāgata Devdūt (Welcome, Angel). Kolkata: Krittibas Prakashani, 1971)

நினைவின் மர்மங்கள்

பருவகாலத்தின்
ஒலியற்ற
தாளமற்ற
இடைவிடாத பனி.
உலகை மூடுகிறது
சடலத்தைப்போல,
வெண் மலர்களால்.
உன்னை எங்குமே
காணவில்லை

உன் பெயர் ஒலிக்கும்
எல்லா திசையிலும்
ஆழ்ந்து செல்லும் மர்மமாக
வெண்மையில் தோன்றும்
தேடிச்செல்லும்
பாதங்களின் தடம்.

ஒரு பசும்புதர்
படிப்படியே
வெண் கல் மலையாகிறது
அதன் திசை பார்க்கும்போது
புரிகிறது, உன்னை
பார்க்கமுடியாது
என்பது.

ஓய்வின்றி
முடிவற்று பெய்கிறது
காலத்தின் பனி.
நாம் மூழ்கிக்கொண்டிருக்கிறோம்
நம்மை இழந்துகொண்டிருக்கிறோம்.
நனவின் சடலத்தை
நினைவின் மர்மங்களால்
ஒற்றி எடுத்து

(Dated December 30th 1960, Cambridge Massachusetts; Translated by Carolyne Wright and Sunil B. Ray with the author. Published in Bengali in Swāgata Devdūt (Welcome, Angel). Kolkata: Krittibas Prakashani, 1971)

ஒரு கடிகார மலரின் நினைவுகள்

பெயரற்ற சாலையில்
அசையாமல் நிற்கையில்
இருளும் கண்ணாடிகளின் மீது
வன்முறையாய்
சட சடக்கும்
மழையின் ஒலி

எந்திரத்தை நிறுத்துவது
நினைவுகளை நிறுத்தாது
மழையையும் மீறி
உன் கண்கள்
மலர்க் கடிகாரம்
உன் நாக்கு
கண்ணுக்குத் தெரியாத ஊசல்
ஒலித்து எண்ணும் நேரத்தை
என்னுள்
நிலத்தின் ஆழத்தில்

(கவிஞரின் ஆங்கில மூலத்திலிருந்து)

மழை பொழியும்போது

மழை பொழியும்போது
நீல நிறமாக மாறி
நடுங்குகிறது
இந்த அறை
முடிவற்ற காலம் ஒன்று
எங்கிருந்தோ வந்து
நிறைந்துகொள்கிறது
நிற்காமல் வீசும் காற்று
அறையை ஆற்றங்கரைக்கு
கொண்டு செல்கிறது

படகாய் மாறி
மிதக்கிறேன்
நனைகிறேன்
அசைந்தாடி நடுங்கி
சென்று கொண்டிருக்கிறேன்
ஆறு கடலைத்தொடும் எல்லையை
காணமுடிகிற தூரத்தில்
அலைகள் ஆர்ப்பரிப்பதுபோல
யாருமே எங்குமே இல்லாததுபோல
ஆழமான அழுகை தொண்டையை அடைப்பதுபோல
கடுமையான துக்கம் இந்த அறையை நெறிப்பதுபோல
என்ன விசித்திரமான ஜாலம்,
பத்து திசைகளும் ஒரே கணத்தில் பிரகாசிக்கின்றன
அனைத்தும் அதன் வடிவுக்கே திரும்பிவிடும் என்பது போல
எல்லாமே ஒரு நடனம் ஒருதாளம் என்பது போல
சகலமும் ஒளிமயம்

நினைவு திரும்பி
மழையை காணும்போது
சில சமயம் இப்படித்தான்
பிரார்த்திப்பேன்
வானமே!
இந்த அறையை உடைத்து
இன்னும் அதிகமாக
மழை கொடு!

(Translated in English by Sunil B. Ray, Nandana Dev Sen, and Carolyne Wright with the poet)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.