ஹீங்க் கொச்சூரி

பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய்

ஹீங்க் கொச்சூரி1

ஆங்கில மொழிபெயர்ப்பு: அருணவா சின்ஹா
தமிழில் : சிஜோ அட்லாண்டா

நாங்கள் ஹரி-பாபுவின் மூங்கிலும்-ஓடும் வேய்ந்த வீட்டின் ஒற்றை அறையில் தங்கி இருந்தோம். அதே கட்டிடத்தில் பல குடும்பங்கள் வாழ்ந்தனர். ஒரு அறையில் வளையல் விற்பனையாளர் ஒருவர் அவரது மனைவியுடன் வசித்து வந்தார். அவர் பெயர் கெஷாப். எனக்கு அவர் கெஷாப்-காக்கா2.

தினமும் காலையில் குழாயில் தண்ணீர் வரும்போது, அனைவரும் அவரவர் அண்டா, குண்டா, பக்கெட்டுகளுடன் குழாயடியில் வரிசையில் நிற்பர். அப்போது வாடகைக்காரர்களுக்கிடையில் குழாயடிச் சண்டை நடப்பதுண்டு.

அப்பா அம்மாவிடம் சொல்வார்: ”நம்மால இங்கே இருக்க முடியாது. காட்டுமிராண்டிகளாட்டமில்ல நடந்துக்கிறாங்க? சீக்கிரம் கிளம்பனும் இங்க இருந்து”

ஆனால் நாங்கள் அங்கிருந்து ஏனோ கிளம்பவே இல்லை. நாங்கள் ஏழைகளாக இருந்ததும் அப்பாவிடம் காசில்லாததும் காரணமாக இருக்கலாம்.

வீட்டிற்க்கு எதிரே, சாலையின் மறுபக்கம், ஒரு அரிசி மண்டி இருந்தது. அதற்கு பக்கத்தில் ஒரு குர் 3மண்டி, முன்னால் ஒரு நகராட்சி குழாய். தினமும் இந்த குழாயில் தண்ணீர் பிடிக்க வாய்ச்சண்டையும் தள்ளுமுள்ளும் நடக்கும். பெண்கள் கூட தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதை நான் கண்டிருக்கிறேன்.

இப்படியாக ஒரு ஜூனிலிருந்து அடுத்த ஜூன் வரை அந்த வீட்டில் ஒரு வருடம் தங்கினோம்.

ஜூன் மாதம்தான் நாங்கள் கிராமத்திலிருந்த எங்கள் இல்லத்தை விட்டுக் கிளம்பினோம். கிராமத்தில், காளியும் நானும் மூங்கில் தோப்பின் எல்லையில் ஊமத்தை செடிகளுக்கருகே ஒரு குடிலைக் கட்டி இருந்தோம். என்னை விட பலசாலியான காளி ஏகப்பட்ட பெரி மரக் கிளைகளையும் இலை தழைகளையும் சுமந்தான். நாங்கள் இருவரும் உண்மையிலேயே வீடு என்று தோற்றமளிக்கத்தக்க அருமையான குடிசை ஒன்றை அமைத்தோம். அப்படித்தான் காளி சொல்வான். பழைய பறவை கூடொன்றை அவன் ஒரு மரத்தின் தடிமனான கிளையில் பொருத்தி வைத்தான். ஆகஸ்ட மாதத்தின் நடுவிலோ, நிலா காயும் செப்டம்பர் மாத இரவிலோ இராப்பறவைகளான மரங்கொத்திகளோ அல்லது நீர்க்குருவிகளோ அந்தக் கூட்டில் முட்டையிடும் என்றான்.

ஜூன் மாதத்தில் கிராமத்திலிருந்து இந்த மூங்கிலும் ஓடும் வேய்ந்த வீட்டுக்கு வந்து விட்டதால் என்னால் அதை சரிபார்க்க முடியவில்லை.

கிராமத்தில் மூங்கில்காட்டின் விளிம்பில் காளியும் நானும் சிரத்தையுடன் கட்டிய குடிலும், மரக்கிளையில் பொருத்திய பறவைக் கூடும் என் நினைவில் பலமுறை வந்து செல்லும். நிலா காய்ந்த ஒரு செப்டம்பர் இரவில் மரங்கொத்தி அதில் முட்டை இட்டிருக்குமா?

கல்கத்தா வீடு நெரிசலாக இடம் போதாமல் இருந்தது. நான் காலை நேரம் முழுவதும் தகரம் வேய்ந்த தாழ்வாரத்தில் உட்கார்ந்தபடி, தண்ணீருக்காக வரிசையில் நிற்கும் அயல்வாசிகளையும், மாட்டு வண்டியிலிருந்து மண்டிக்குச் சுமந்து செல்லப்பட்ட குர்ரையும், மூலையில் இருந்த இரண்டு மாடி வீட்டின் ஜன்னலிலிருந்து என்னைப் போலவே சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இளம் மனைவியையும் பார்த்துக் கொண்டிருப்பேன். சில சமயம், மெயின் ரோட்டில் எங்கள் சந்து தொடங்குமிடத்தில் இருந்த ஒரு பிஹாரியின் கடையிலிருந்து ‘சாட்டு’ 4வாங்கிச் சாப்பிடுவேன். பிரதான சாலையில் எப்போதும் வண்டிகள் நிறைந்திருக்கும். எங்கள் கிராமத்தில் ஒரு குதிரை வண்டியைக்கூட நான் பார்த்ததில்லை. எனக்கு அவற்றை எவ்வளவு பார்த்தாலும் சலிக்காது, ஆனால் எனக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டுவிடுமென்று பயந்து அம்மா என்னை மெயின் ரோட்டுக்குப் போக விடுவதில்லை.

எங்கள் சந்தின் மறுஎல்லையில் சற்றுத் தள்ளி எங்களுடையதைப் போன்றே மூங்கிலும் ஓடும் வேய்ந்த வீடுகளின் ஒரு வரிசை இருந்தது. நான் சில சமயம் அங்கு போவதுண்டு. அவை சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு, கண்ணாடிகளையும், பொம்மைகளையும், கண்ணாடி அல்மீராக்களையும், சுவரில் தொங்கவிடப்பட்ட சித்திரங்களையும் கொண்டிருந்தன. ஒவ்வொரு அறையிலும் ஒரு பெண் தங்கி இருந்தாள். . நான் அங்கு எல்லாருடைய அறைக்கும் செல்வேன். வழக்கமாக முன்மாலையில், சில சமயம் காலை நேரத்தில் கூட.

அங்கிருந்த பெண்களில் ஒருத்தியின் பெயர் குஸும். அவளுக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும், எனக்கு அவளையும். நான் பெரும்பாலான நேரம் குஸுமின் அறையில்தான் இருப்பேன். அவள் என்னுடன் அரட்டை அடிப்பாள்;என் கிராமத்தைப் பற்றிக் கேட்பாள். அவள் வர்த்தமான் என்னும் இடத்தைச் சேர்ந்தவள். ஆனால் இப்போது இந்த அறையில் வசித்து வருகிறாள்.

குஸும் என்னிடம் – எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு. நீ தினமும் வருவயில்ல?

– எனக்கும் உன்ன பிடிச்சிருக்கு. நான் தினம் வரேன்.

– உனக்கு எந்த ஊரு?

– ஆஷின்கிரி, ஜெஸ்ஸூர் பக்கத்துல

– கல்கத்தாவுல இது தான் முதல் தடவயா?

– ஆமா

குஸும் தினம் மாலையில் அழகாக உடுத்து, நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு, முகத்தில் மாவு போன்ற ஏதோ பொடியையும் பூசிக் கொள்வாள். சிகையலங்காரமும் அவளுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் என்னை அறையில் இருக்க அனுமதிக்கமாட்டாள். ’வீட்டுக்குப் போ.. என் பாபு5 வர நேரம் இது’ என்பாள்.

முதல் தடவை அதைக் கேட்ட போது நான் ‘பாபு யாரு?’ என்று கேட்டேன்.

–அது ஒரு ஆள். உனக்கு புரியாது. நீ இப்ப வீட்டுக்குப் போ.

எனக்கு வருத்தம் தோன்றியது. ‘பாபு வரட்டும், நான் இங்கேயே இருக்கேன். பாபு என்னை என்ன பண்ணுவாரு?’

–இல்ல, நீ போ. நீ இங்க இருக்கக் கூடாது. என் கண்ணுல்ல?

–இந்த பாபு யாரு? உன் அண்ணனா?

–உனக்குப் புரியாது. நீ இப்ப வீட்டுக்குப் போ.

எனக்கு குஸுமின் பாபு யார் என்று பார்க்க ஆர்வம் மிகுந்தது. ஏன் அவள் என்னைப் போகச் சொல்ல வேண்டும்?

ஒரு நாள் அவரைப் பார்க்கவும் செய்தேன். நீண்ட முடியுடன் கட்டையாக இருந்தார். கையில் ஏதோ உணவுப் பொட்டலம் வைத்திருந்தார். கடைகளில் வாங்கும் உணவை இது போல காய்ந்த இலைகளில் பொதிந்து தருவார்கள். கிராமத்தில் இது போன்ற இலைகள் இல்லை – ஹரியின் கடையில் முறுக்கோ, ஜிலேபியோ வாங்கினால் அவன் அதைத் தாமரை இலையில் பொதிந்து தருவான்.

பொட்டலத்தைப் பிரித்து, குஸும் பெரிய கொச்சூரியொன்றை என் கையில் கொடுத்து, ‘இந்தா, வீட்டுக்குப் போறப்ப சாப்டுகிட்டுப் போ’ என்றாள்.

ஒரு கடி கடித்தேன், சுவையாக இருந்தது. அது போன்ற கொச்சூரியை நான் கிராமத்தில் சாப்பிட்டதில்லை. எண்ணையில் பொரித்த ஹரி கடையின் கொச்சூரிகளுக்கு ஒருபோதும் இவ்வளவு சுவை இருந்ததில்லை.

பரவசத்துடன், ‘அருமையா இருக்கு! இதில என்ன கலந்திருக்கு?’ என்றேன்.

’ஹீங்க். இது ஹீங்க் கோச்சுரி. சரி, இப்ப நீ வீட்டுக்குப் போ’ என்றாள் குஸும்.

குஸுமின் பாபு – ‘யார் இது?’

– குழாய்க்கு எதிர்ல இருக்கற வீட்டில இருக்கறவங்களோட பையன். அவங்க பிராம்மணங்க.

குஸுமின் பாபு என் பக்கம் திரும்பி – ’வீட்டுக்குப் போ, கோகா6, இப்ப நீ வீட்டுக்குப் போ.’ என்றார்.

’நான் ஏன் இங்கே இருக்கக் கூடாது? இருந்தா என்ன தப்பு?’ என்று கேட்க நினைத்தேன். ஆனால் குஸுமின் பாபுவைப் பார்த்த போது தைரியம் வரவில்லை. ஆள் பார்க்க கோபக்காரராக இருந்ததால் அடி கிடைக்க வாய்ப்பு உண்டு என்று தோன்றியது. ஆனால் அன்று முதல், நான் குஸுமின் பாபு வரும் வரை என் ஹீங்க் கோச்சூரிக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன். ஆனால் தினமும் குஸும் ‘வீட்டுக்கு போற வழியில சாப்பிடுகிட்டுப் போ’ என்று சொல்லி இரண்டு கொச்சுரி கொடுப்பாளா?

குஸுமின் பாபு சொல்வார் – ஓ, அவனுக்கு ரெண்டு ‘கஸ்தா கோஜா’7 வாங்கிட்டு வரணும்னு நெனச்சு மறந்துட்டேன்! நாளைக்குக் கொண்டு வரேன், சத்தியமா!

இதற்குள் என் பயம் போய்விட்டிருந்தது. நான் சொன்னேன் – ‘மறந்துடாதீங்க, சரியா?’

சிரித்துக் கொண்டே ‘மாட்டேன், மாட்டேன்’ என்றார் குஸுமின் பாபு.

‘வீட்டுக்குப் போ கோக்கா’ என்றாள் குஸும்.

‘நான் போக மாட்டேன். நான் இங்க இருந்தா என்ன?’

குஸுமின் பாபு பதிலுக்கு ஏதோ சொன்னது எனக்குப் புரியவில்லை. குஸும் அவரிடம் கோபமாக ‘குழந்தை கிட்ட இப்படியா பேசறது!’ என்றாள்.

நான் வீட்டிற்குச் சென்றதும் அம்மாவிடம் – ’நீ எப்பவாவது ஹீங்க் கோச்சுரி சாப்பிட்டிருக்கியாம்மா?’ என்று கேட்டேன்.

-’ஏன்?’

-’நான் சாப்பிடிருக்கேன். ரொம்ப பெருசு. ஹீங்க் வாசன அடிக்கும்’

-’உனக்கு எங்க கெடச்சது அது?’

-குஸுமோட பாபு கொண்டாந்தார். எனக்கு ஒன்னு கொடுத்தார்.

-குறும்பு பயலே, உங்கிட்ட அங்க போகாதேனு சொல்லி இருக்கேன் இல்ல.

-ஏன் போகக் கூடாது?

-ஏன்னா நீ அங்க போகக் கூடாது. அவ்ளோதான். அவங்கெல்லாம் நல்ல ஆளுங்க இல்ல.

-இல்லம்மா.. குஸும் ரொம்ப நல்லவ. அவளுக்கு என்ன ரொம்ப பிடிக்கும். எனக்கு தினம் பெருங்காய் கோச்சுரி தருவா.

-அதெ எடுத்துகிட்டு இங்க வராத. உனக்கு சாப்பிடறதுக்குத் தேவையானது இங்க இல்ல? இனிமே அங்கே எல்லாம் போற வேல வச்சுக்காத, ஆமாம்.

அதற்கடுத்த இரண்டு மூன்று நாட்கள் நான் குஸுமின் அறைக்குச் செல்லவில்லை. ஆனால் ஒரேயடியாகப் போகாமலும் இருக்க முடியவில்லை. அம்மாவுக்குத் தெரியாமல் நான் மீண்டும் அங்கே சென்றேன். குஸும் கேட்டாள் – நீ ஏன் வரல?

-எங்க அம்மா கூடாதுன்னுட்டா

-அப்படினா நீ வராத.. உங்கம்மா திட்டப் போறாங்க

– அதான் நான் ரண்டு நாளா வரல

-ஆனா திரும்பவும் வந்துட்டியே

-ஏன்னா, எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்

– என் செல்லமே… எனக்கும் உன்னப் பாக்கலேன்னா கஷ்டமாத்தான் இருக்கு. உன்ன பாக்காம இருக்க முடியல

– எனக்கும் தான்.

– எல்லாம் என் தலவிதி. உங்கம்மா உன்னத் திட்டுமேனு தான் என் கவல.

– நான் அவகிட்ட சொல்ல மாட்டேன். உன்ன பாக்கலேனா எனக்கு கஷ்டமா இருக்கும். சரி, நான் இப்போ கிளம்பறேன்.

– சாயந்தரம் வா.

– சரி.

வாக்களித்தது போல மாலையில் நான் குஸுமிடம் சென்றேன். குஸுமின் பாபு வந்தவுடன், ‘வந்துட்டியா, சோக்ரா8. எங்க ரெண்டு நாளா காணோம்? உனக்கு நான் ‘கஸ்தா கோஜா’ வாங்கிட்டு வந்தேன். ஆனா, அது உனக்குக் கிடைக்கக் கூடாதுனு விதி போல. அவனுக்கு ரெண்டு கோச்சுரி கொடு’ என்றார்.

-நாளைக்கு கோஜா கொண்டாங்க.

– கொண்டு வரேன், பிராம்மண முதலாளி, பெருந்தீனி பிராம்மணா! நான் அம்ரிதியும், ஜிலிபியும்9 கூட கொண்டு வரேன். அமிரிதி சாப்டிருக்கியா?

– இல்ல

-நாளைக்கு கொஞ்சம் கொண்டு வரேன். நீ கண்டிப்பா வரணும்

-ஆனா யாருகிட்டயும் சொல்லிடாதீங்க. எங்க அம்மாவுக்குத் தெரிஞ்சா அப்புறம் என்ன வர வுடமாட்டா

-உங்க அம்மா இங்க வந்தா திட்டுமா?

-ம்.

குஸும் அவசரமாக இடைமறித்தாள்- ‘அவன் கிடக்கறான் விடுங்க. சின்னப் பையன், அவன் சொல்றதெல்லாம் கேட்டுக்கிட்டு. நீ வீட்டுக்குப் போ, கோக்கா. இந்தா உன் கோச்சுரி, வீட்டுக்குப் போற வழியில சாப்பிடு.

-இல்ல, நான் இங்கேயே சாப்பிட்டுட்டு ஒரு கிளாஸ் தண்ணி குடிச்சுட்டு போறேன், இல்லேனா எங்க அம்மா கண்டு பிடிச்சுருவா

-நான் உனக்குத் தண்ணி கொடுக்கக் கூடாது. நீ போற வழியில ரோட்டுல இருக்கற பைப்ல குடிச்சுக்கோ.

குஸுமின் பாபு சொன்னார் – ஏன் நீ அவனுக்குத் தண்ணி கொடுக்க மாட்டேங்கற? என்ன கெட்டுப் போயிடும் கொடுத்தா?

குஸும் அவரிடம் கோபமாக – சும்மாருங்க. நான் ஐயர் வூட்டுப் புள்ளைக்குத் தண்ணி கொடுக்கக் கூடாது. அப்புறம் இந்த ஜென்மத்துல பாவம் தீராது. நான் என் கையால அவனுக்கு தின்னக் கொடுக்கறதே மொதல்ல தப்பு.

எனக்கு குஸும் மேல் கோபமாக வந்தது. எனக்கு அவள் கையிலிருந்து ஒரு கிளாஸ் தண்ணீர் வாங்கிக் குடிக்கக் கூட அருகதை இல்லையா? நான் கிளம்பும் போது குஸும் மீண்டும் மீண்டும் ‘நாள காலையில வா, சரியா?’ என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

அடுத்த நாள் காலையில் நான் குஸுமை சந்தித்த போது காய்கறி அரிந்து கொண்டிருந்தாள். ‘வா கோக்கா’ என்றாள்.

-நான் உன்கிட்ட பேச மாட்டேன், போ!

-என்னது? ஏன்? நான் என்ன செஞ்சேன்?

-நீ எனக்கு ஒரு கிளாஸ் தண்ணி தர மாட்டேனு சொன்ன. தரவும் இல்ல, நேத்திக்கு,

-அவ்ளோ தானா? உக்காரு கோக்கா. உனக்குப் புரியாது. நீ பிராம்மண வீட்டுப் பையன். உனக்கு நாங்க தண்ணி கொடுக்கக் கூடாது. புரிஞ்சுதா? நான் அச்சார்10 செஞ்சுகிட்டு இருக்கேன், வேணுமா? இன்னும் ரெடி ஆகல. இப்ப தான் குல்11-இல குர் சேத்துருக்கேன்..

அப்படியாக நானும் குஸுமும் மறுபடியும் நண்பர்களானோம். என் கையில் குல்-அச்சார் கிடைத்தமுமே, என் கோபமும் வருத்தமும் மறந்து விட்டது. நாங்கள் வெகுநேரம் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். அதன் பிறகு நான் குஸுமின் அடுத்த அறையான மக்கனின் அறைக்குச் சென்றேன். அவளுடைய அறையை நூற்றுக்கணக்கான பொம்மைகள் அலங்கரித்தன. ஒரு மர அலமாரியில், களிமண் கொண்டு செய்த ஆப்பிள்கள், மாங்காய்கள், லிட்சிகள் மற்றும் ஏராளமான பல அற்புதமான பொருட்கள் இருந்தன. அசல் ஆப்பிள் போல! அசல் மாங்காய் போல!

மக்கன் என்னிடம் – வா, கோக்கா. அந்த களிமண் பொம்மையெல்லாம் தொடாத. இங்க உட்கார். அது ஒடஞ்சிரப் போகுது – என்றாள்.

-நீ ஏன் பீடி பிடிக்கற?

மக்கன் சிரித்துக் கொண்டே – இந்த பையன் சொல்றத கேளேன்! ஆளுங்க யாரும் செய்யாததா என்ன? – என்றாள்.

-பொம்பளைங்க பீடி பிடிப்பாங்களா? எங்க அம்மா பிடிக்க மாட்டா. அப்பா பிடிப்பாரு.

-இங்க பார்றா இவன! பிடிக்கறவங்க பிடிப்பாங்க, அவ்ளோ தான்

– குஸுமோட பாபு எனக்கு கஸ்தா கோஜா கொடுத்தாரு.

-அப்படியா?! பரவால்லையே!

– உன் பாபு எங்கே?

மக்கன் தன் சேலைத் தலைப்பால் வாயை மறைத்துக் கொண்டு இளித்தாள்.

-ஹி..ஹி.. இந்த பையன் பேசறதப் பாரேன், இந்த வயசுலேயே என்னல்லாம் தெரியனும் இவனுக்கு! ஹி..ஹி.. குஸுமி, இங்க வந்து உன் பையன் என்ன சொல்றானு கேளு..

மக்கன் குஸுமியை விட வயது கூடியவளாகத் தோன்றினாள். அங்கு இருப்பவர்களிலேயே குஸும் தான் அழகு. அவள் மக்கனை ‘தீதி’12 என்று கூப்பிடுவாள்.

குஸும் உள்ளே வந்து என்னை அவள் அறைக்கு கூட்டிச் சென்றாள். அங்கு தங்கியிருந்த மற்றவர்களின் அறைகளுக்குச் செல்லக் கூடாது என்று அவள் என்னிடம் சொல்லி இருந்தாள். உண்மையில், எனக்கு தின்பதற்கு ஏதாவது கிடைக்கக்கூடும் என்ற ஆர்வத்தில்தான் நான் சென்றேன். ஆனால் எனக்கு மற்ற பெண்களின் ‘பாபு’க்கள் எப்போது வருவார்கள் என்று தெரியாது. அதனால் எனக்கு அந்த முயற்சியில் ஏமாற்றம் தான் காத்திருந்தது. அவளது அறைக்குக் கொண்டு சென்ற பின் குஸும் என்னைத் திட்டினாள். ‘உனக்கென்ன அவங்க கூட எல்லாம் பேச்சு? நீ சின்ன பையன், மத்த ரூமுக்குள்ள எல்லாம் நீ போகக் கூடாது. இங்கயே இரு’ என்றாள்.

-எனக்கு பிரபா கிட்டப் போகணும்

-ஏன்? எதுக்கு? அங்கப் போய் இனி என்ன சொல்லப் போறியோ! அசடு. சாப்பாட்டு ராமா! இப்பத் தானே உனக்கு குல்சூர் தந்தேன்?

நான் வலிய உருவாக்கிய திகைப்புடன், ’நான் ஒன்னும் கேக்கல. வேணும்னா பிரபா கிட்டக் கேட்டுப் பாரு’ என்றேன்.

-சரி, பிரபா கிட்டப் போக வேண்டாம்.

-ஒரே ஒரு தர மட்டும் போறனே? ஒடனே வந்துடுவேன்.

உண்மையில், பிரபாவின் அறையின் பிரதான ஈர்ப்பு உணவை விட, அங்கிருந்த கிளி தான்.

அந்த கிளி சொல்லும் – ராம ராமா! தூரப் போ, காகிமா, காகிமா.13

நான் உள்ளே நுழையும் போதெல்லாம் ‘யார் அங்க? யார் அங்க?’ என்று கத்தும்.

-என் பேரு பாசுதேப்14

-யார் அங்க? யார் அங்க?

எனக்கு சிரிப்பு வரும். அந்த பறவை பேசுவதைக் கேட்பது அவ்வளவு வேடிக்கையாக இருக்கும். அச்சு அசலாக மனிதக் குரல் போலவே தோன்றும். யார் அங்க? யார் அங்க?

அறைக்கு வெளியிலிருந்து பிரபா கேட்டாள் – ‘யாரது என் ரூமுக்குள்ளே?’

அவள் சமைத்துக் கொண்டிருந்தாள். பருப்பு கரண்டியோடு ஓடி வந்தாள். நான் சிரித்து கொண்டே கேட்டேன் – என்ன அடிக்கப் போறியா?

-ஓ, நம்ம கிறுக்கு குட்டி ஐயரா! இந்த மத்தியான நேரத்துல யாரா இருக்கும்னு நெனச்சேன்!

-உன்கிட்ட குல்சூர் இல்ல? குஸும் எனக்கு கொஞ்சம் கொடுத்தா.. ருசியா இருந்தது.

-குஸுமுக்கு பணக்கார பாபு இருக்காரு. எனக்கு இல்ல, இல்லியா? அப்புறம் எப்படி ஆம்சூரும் குல்சூரும் என்கிட்ட இருக்கும்னு நெனக்கற?

-குஸுமோட பாபு எனக்கு கோஜா சாப்புடக் கொடுப்பாரு

-ஏன் கொடுக்க மாட்டாரு? அந்த முக்குல இருக்கற அவரோட பெரிய கடையவே குஸுமுக்கு வார்த்துக் கொடுத்துட்டாரே. அவங்கள விடு. எல்லாம் என் தலை எழுத்து..

நான் கவலையுடன் – கோவிச்சுக்காத, பிரபா – என்றேன்.

-நான் ஏன் கோவிச்சுக்கப் போறேன். கொஞ்சம் வருத்தம், அவ்ளோதான். நானும் ஒரு ஆளுக்கு மட்டும் பாய் விரிக்கற வேசிதான். நாங்கல்லாம் ஒண்ணும் வானத்துல இருந்து இங்க குதிச்சிரல்ல. பதினஞ்சு வயசுல வீட்ட விட்டு வந்தேன் வேற வழி இல்லாம.

-ஏன் வீட விட்டு வந்த?

-அந்த சோகக் கதை எல்லாம் இப்ப சொல்லி என்ன ஆகப் போகுது? உனக்கு மட்டும் என்ன புரிஞ்சிடப் போகுது? இரு, என் பருப்பு கரிய ஆரம்பிஞ்சிடுச்சு. பேசிகிட்டே இருந்தா அப்புறம் பட்டினிதான் கிடக்கனும்.

– நான் போவுட்டுமா?

-சமையக்கட்டுக்குள்ள வா

பிரபா கருப்பாக, கொழுக்கு மொழுக்கென்று இருப்பாள். அவள் மூக்கில் கருவண்டு போன்ற ஒரு மருகு இருந்தது. ஒரு நாள் எனக்கு சூடான ஜிலேபியும், முரி15யும் சாப்பிடக் கொடுத்தாள். கூண்டில் இருந்த கிளியைத் தவிர அவளது அறையில் அவ்வளவாகப் பொருட்கள் இல்லை.

பிரபா சல்தா16 பழக் குழம்பு சமைத்துக் கொண்டிருந்தாள். சல்தா துண்டுகள் ஒரு பளிங்குக் குவளையில் ஊறிக் கொண்டிருந்தன. நான் சல்தா சாப்பிட்டு வெகுகாலம் ஆகி இருந்தது, கிராமத்தில் சாப்பிட்டதுதான் கடைசி. வயலில் உள்ள குளத்தின் கரையில் உள்ள மரங்களில் சல்தா பழுத்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில்.

நான் கேட்டேன் – உனக்கு எங்க இருந்து சல்தா கிடைச்சது பிரபா?

-சந்தையில தான். வேறெங்க கிடைக்கும்னு நெனக்கற?

-பாக்க அருமையா இருக்கு.

பிரபாவிடமிருந்து பதில் இல்லை. அவள் சமையலைத் தொடர்ந்தாள்.

நான் கேட்டேன் – உங்க அப்பா அம்மா எல்லாம் எங்க இருக்காங்க?

-இந்த பாவி கிட்ட அதுக்கு பதில் இல்ல

– நீ வீட்டுக்குப் போக மாட்டியா?

– எந்த வீட்டுக்கு?

-கிராமத்துல இருக்கற உங்க வீட்டுக்கு.

-இனி நரகத்துக்கு மட்டும்தான் என்னால போக முடியும்

-உங்க கிராமத்துல குல் கிடைக்குமா? எங்க கிட்ட நிறைய குல் மரம் இருக்கு.

பிரபா பதில் சொல்லவில்லை. அவள் சமையலைத் தொடர்ந்தாள். சற்று நேரத்திற்குப் பின், அவள் சமைத்துக் கொண்டிருந்த மண்சட்டியை ஒரு கோப்பையால் மூடி வைத்து விட்டு, தேநீர் சுட வைத்து, சேலைத் தலைப்பில் போர்த்திப் பிடித்த குவளையிலிருந்து குடிக்கத் தொடங்கினாள். எனக்கு வேண்டுமா என்று கூடக் கேட்கவில்லை. கேட்டிருந்தாலும் எனக்குக் குடிக்க முடியாது. தேநீர் மேலே இருக்கும் பாலாடையைச் சாப்பிட மட்டும்தான் எனக்கு அனுமதி.

பிரபா அவளது கிராமத்தில் இருக்கும் பசுக்களைப் பற்றியும், அவை எவ்வளவு பால் கொடுக்கும் என்பதையும், அவள் வீட்டருகில் இருந்த குளத்தில் மீன் நிறைந்திருப்பதையும் சொல்லத் துவங்கினாள். அவை ஒன்றையும் அவள் இனி ஒருபோதும் பார்க்கப் போவதில்லை.

அதன் பின் அவள் ஒரு அசாதாரணமான காரியம் செய்தாள். என்னிடம் ‘கொஞ்சம் சோறும் சல்தாவும் வேணுமா?’ என்று கேட்டாள்.

நான் அச்சத்துடன் – வேணும். ஆனால் குஸுமுக்குத் தெரியக் கூடாது – என்றேன்

பிரபா சிரித்து கொண்டே – ஏன் குஸும்னா அவ்ளோ பயம் உனக்கு? அவளுக்குத் தெரிஞ்சா என்ன இப்போ? நீ சாப்பிடு’ என்றாள்.

நான் சல்தா குழம்பை சோற்றுடன் குழைக்கத் தொடங்கியதும், குஸும் -அந்த ஐயர் குட்டி இங்க இருக்கானா, பிரபாக்கா? அவன வீட்டுக்கு அனுப்பனும், ரொம்ப நேரமாச்சு இங்க வந்து, இங்கேயே தங்க வைக்க முடியாதுல்ல?’ என்று சொல்வது கேட்டது.

நான் கையில் அப்பிய சோற்றுப் பருக்கைகளுடன் சமையலறையின் ஒரு மூலையில் ஒளிந்து கொள்ள ஓடினேன். பிரபா பதில் சொல்வதற்குள் குஸும் உள்ளே வந்து என்னைக் கண்டு விட்டாள். ‘என்ன இது? ஏன் மூலையில போய் நிக்கற? ஒளிஞ்சிகிட்டிருக்கியா? இந்த சோறு யாருக்கு?’ என்றாள்.

திகைப்புடன் பிரபாவின் பக்கம் திரும்பி, ‘அவன்தான் கொழந்த, பிரபாக்கா, புத்தி இல்ல. உனக்குக் கூடவா புத்தி கெட்டுப் போச்சு? நீ எப்படி அவனுக்கு சோறு போடலாம்?’ என்றாள்.

பிரபா மெல்லிய குரலில் ‘இல்ல, சல்தாவைப் பத்திக் கேட்டுகிட்டே இருந்தான், அதான் நான் நெனச்சேன், கொஞ்சம் சோறு கூட..’

-அய்யோ, கருமம்! வா என் கூட, கோக்கா. ஏற்கனவே இந்த ஜென்மத்துல தீராத பாவம் இருக்கு, அதுல ஒரு பிராமண பையனுக்குச் சோறு போட்டு நான் இன்னும் பாவத்த வளக்கப் போறதில்ல. வா இங்க.. இதென்ன விரல்ல சாப்பாடு? நீ முன்னமே சாப்பிட ஆரம்பிச்சிட்டியா?

நான் வெட்கத்துடன் ‘இல்ல’ என்றேன்.

வா என் கூட, உன் கையக் கழுவி விடறேன்.

குஸும் என்னை இழுத்துக் கொண்டு போகத் துவங்க, பிரபா ‘பாவம் புள்ள.. அவன சாப்புடக் கூட விடல நீ. ஒரு வாய் கூட வாயில வக்கல…’ என்றாள்.

-வேணாம். ஒன்னும் சாப்பிடத் தேவையில்ல.. வா.

குஸும் என் அம்மாவை விட கண்டிப்பானவளாகிவிட்டாள். நான் சோற்றை அப்படியே வைத்துவிட்டு வரவேண்டியதாயிற்று. முற்றத்தின் மூலையில் கொண்டு சென்று, என் கையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டே – ‘நீ ஏன் இப்படி சாப்பாட்டு ராமனா இருக்க, கோக்கா? இங்க இருந்து சாப்பாடு வாங்கித் திங்கக் கூடாதுன்னு உனக்கு மறந்து போச்சா? வெட்கக்கேடு! நான் உனக்கு சாயந்தரம் கோச்சுரி தரேன். இனிமே அங்க எப்பவும் போயி சாப்பிடாதே. நீயாவது குழந்தை, அவளுக்குத் தெரிய வேண்டாமா? அதெப்படி ஒரு பிராமணப் பையனுக்கு அவ பரிமாறலாம்.. நெஜமா.. இந்த ஆளுங்கள நெனச்சா…’ என்றாள்.

இவை ஏதும் பிரபாவின் காதில் விழ வாய்ப்பே இல்லை. அவள் அக்கம்பக்கத்திலேயே இல்லை.

நான் ‘என் அம்மாகிட்ட சொல்ல மாட்ட தானே?’ என்றேன்.

-நான் போய் உங்க அம்மா கிட்டச் சொல்வேன்னு நீ நெனக்கிறையா? எனக்கு வேற வேல இல்ல?

-நீ சொன்னா என்ன அடிச்சு தொவச்சுடுவா அவ.

-உனக்கு தேவதான் அது. அப்படியாவது உன் பேராசை தீர்ந்தாலும் தீரும்.

நான் வீட்டுக்குச் சென்ற போது அம்மா ‘நீ எங்க போயிருந்த?’ என்றாள்.

-தோ… அந்த ரோட்டுகிட்ட

-நீ வேற எங்கயும் போகலியா?

-இல்ல

ஆனால் ஒரு நாள் நான் மாட்டிக் கொண்டேன். குஸும் மேல் தான் தவறு. அவள் என்னிடம் ‘வா கோக்கா. சும்மா நடந்துட்டு வருவோமா?’ என்றாள்.

அது பின் மதியம். வெயிலும் அவ்வளவாக இல்லை. நாங்கள் டிராம் தடங்களைக் கடக்கத் தொடங்கிய போது பயத்துடன் ‘அம்மா மெயின் ரோட்டக் கடக்க விட மாட்டா. என்ன ரோட்டக் கிராஸ் பண்ணக் கூடாதுனு சொல்லி இருக்கா’ என்றேன்.

-நான் கூட இருக்கேன் இல்ல, பயப்படாத.

பிரதான சாலையைக் கடந்ததும், இன்னும் சற்று தூரம் சென்று குடிசைகள் நிறைந்த ஒரு சேரியை அடைந்தோம். ஒரு குறுகிய தெருவின் இருபக்கமும் வீடுகள் நிறைந்திருந்தன. நாங்கள் நுழைந்த கட்டிடத்தின் உள்ளும் பெண்கள் மட்டும் தான் இருந்தனர். அதில் ஒரு பெண் – ‘வா குஸுமி, ரொம்ப நாளாச்சே பாத்து. அடக் கடவுளே, எங்களுக்கும்தான் கிராக்கிங்க இருக்காங்க, அதுக்காக எங்கள எல்லாம் மறந்துடறதா?’ என்றாள்.

என்னை ஒரு பார்வை பார்த்தபின், ‘யார் இந்த பையன்? சூட்டிகையா இருக்கானே’ என்றாள்.

-இவன் ஒரு ஐயரு வீட்டுப் பையன். எங்க சந்துல தான் தங்கி இருக்கான். எப்பவும் என் பின்னாலேயே சுத்துவான்.

-பரவால்லையே! உக்காரு, கோக்கா.

-சரியான சாப்பாட்டு ராமன். தின்ன ஏதாவது கொடுத்தா குஷியாயிடுவான்

-அட, உனக்கு என்ன கொடுக்கறது? என் கிட்ட குல்-அச்சார் இருக்கு, வேணுமா?

சற்றும் யோசிக்காமல் திடுமென- ’எனக்கு குல்-அச்சார்னா உயிரு’ என்று கூறினேன்.

குஸும் என்னைப் பார்த்து உறுமினாள். உனக்கு உசிரில்லாதது ஏதாவது இருக்கா? சாப்புடற விஷயமா இருந்தா போதும் இல்ல, அவனுக்கு ஜலதோஷம், அச்சார் எல்லாம் சாப்பிடக் கூடாது. இருக்கட்டும், விடு.

நான் மனம் உடைந்தேன். குஸும் என்னைக் குல்சூர் சாப்பிடவிடவில்லை. எனக்கேது ஜலதோஷம். குல்சூர் என்றால் எனக்கு அவ்வளவு பிரியம்.

அந்த வீட்டில் சற்று நேரம் இருந்த பின், நாங்கள் வேறொரு வீட்டுக்குச் சென்றோம். அவர்களும் என்னைப் பற்றி பல கேள்விகள் கேட்டார்கள். வீட்டில் செய்த அல்வாவை ஒரு கிண்ணத்தில் கொடுத்தார்கள். குஸும் அதையும் சாப்பிடவிடவில்லை. அதாவது எனக்கு வயிறு சரியில்லையாம்.

மாலை ஆவதற்குள் குஸும் என்னை டிராம் லைன்களைக் கடந்து கூட்டி வந்தாள். அப்போது ஒரு டிராம் வந்து கொண்டிருந்தது. நான் ‘குஸும், இரு. எனக்கு டிராம் பாக்கணும்’ என்றேன்.

-இருட்டாயிட்டிருக்கு. உங்க அம்மா திட்டப் போறாங்க

-திட்டட்டும்

-அட, பையன் தைரியசாலி ஆயிட்டானே.

-நீ ஏன் அப்படிச் சொன்ன குஸும்? என்ன ஏன் குல்சூர் சாப்பிட விட மாட்டேனுட்ட? அவங்க தான் சாப்பிடச் சொன்னாங்களே?

-நீ சின்னப் பையன், உனக்கு ஒன்னும் தெரியாது. இந்த குப்பத்து ஆளுங்களுக்கு பயங்கரமான வியாதி எல்லாம் இருக்கும். யாரு வேணா உனக்கு எது வேணா தரதுக்கு நான் விடுவேனு நெனச்சியா? நீ எங்க வேணா சாப்பிடலாமுனு நெனக்கிறியா? உனக்கு விவரம் போதாது. அவங்கள்ள சில பேருக்கு என்னலாம் வியாதி இருக்குனு தெரியுமா உனக்கு?

-கிராக்கினா என்ன குஸும்?

-ஒன்னும் இல்லை. நீ எங்க இதெல்லாம் கேட்ட?

-உங்கிட்ட அவங்க சொன்னாங்களே?

-அவங்க சொல்லிட்டுப் போறாங்க. உனக்கென்ன? குறும்புப் பயலா இருக்கியே.

என்னை வீட்டுக்கு அனுப்புவதற்கு முன், ‘வா, இந்நேரம் அவர் கோச்சுரி கொண்டு வந்திருப்பாரு. உனக்கும் கொஞ்சம் கொடுக்கறேன் என்றாள்.

-ஆமா, எனக்கு பசிக்குது.

-உனக்கு எப்பவாவது பசிக்காம இருந்திருக்கா? உங்க அம்மாவ எப்பவாவது பாத்தா, உன் பையன் ஏன் இப்படி சாப்பாட்டுக்கு அலையறான்னு கேக்கனும்!

-அதனால என்ன இப்ப? எனக்கு கோச்சுரி தருவ தானே?

-என் கூட வா

-அவர் கோஜா கொண்டு வந்திருப்பாரா?

-தெரியல

-எனக்கு நாளைக்கு கோஜா தருவியா?

-கடவுளே! இந்த சந்து எவ்ளோ அழுக்கா இருக்கு

-எனக்கு கோஜா தருவியா?

-தரேன். தரேன். இப்போ கோச்சுரி எடுத்துகிட்டு என்ன ஆள விடு.

அன்று மாலை குஸும் என்னை நகராட்சி குழாய் வரை கொண்டு வந்து விட்டுப் போனாள். நான் அம்மாவிடம் உண்மையைச் சொன்னேன். நான் குஸும் வீட்டுக்குச் சென்றதும், அவள் எனக்கு கோச்சுரி கொடுத்ததும். அம்மா நிறைய திட்டினாள்; வீட்டுக்குள் கட்டிப் போடப் போவதாக மிரட்டினாள். அன்றிரவு அப்பாவிடமும் சொன்னாள், ஆனால் அவர் அதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

அடுத்த நாள் காலை எனக்கு காய்ச்சல் வந்தது. நான்கைந்து நாட்கள் படுக்கையில் கிடக்க நேர்ந்தது. ஒரு பாரம்பரிய வைத்தியர் என்னைப் பரிசோதனை செய்து மருந்து எழுதிக் கொடுத்தார்.

என் கட்டில் ஜன்னலுக்கருகில் இருந்தது. ஒரு மதியம் குஸும் எங்கள் வீட்டு எதிர் வீட்டிற்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். கூட மக்கனும் இருந்தாள். இரண்டு வீடு தள்ளி அவள் நின்றிருந்தாள்.

’குஸும்’ என்று கூப்பிட்டேன்.

குஸும் திரும்பி என்னைக் கண்டு கொண்டாள். மக்கனைக் கூப்பிட்டு, ‘இந்த வீடு தான் தீதி, இதோ…’ என்றாள்.

அம்மா நகராட்சிக் குழாயடிக்குச் சென்றிருந்தாள். குஸுமும் மக்கனும் ஜன்னலருகே வந்தனர்.

குஸும் ‘உனக்கு என்ன ஆச்சு? ஏன் வரல’ என்றாள்.

மக்கன் ‘குஸுமுக்கு கையும் காலும் ஓடல. அந்த பையனுக்கு என்ன ஆச்சோனு பதறிக்கிட்டே இருந்தா. அதான், வா போய் பாத்துடுவோம்னு சொன்னேன்’ என்றாள்.

’எனக்கு அஞ்சு நாளா காயச்சல்’ என்றேன்.

’உங்க அம்மா எங்க?’ என்றாள் குஸும்

-நீ போ குஸும். அம்மா பாத்துட்டா அப்புறம் உன்ன வந்து பாக்க விடமாட்டா. நான் நல்லா ஆன உடனே வரேன். நீ இப்ப போ

அவர்கள் சென்று விட்டனர். ஆனால் குஸும் அடுத்த நாளே சாலையில் நின்றிருந்தாள். மிக மெதுவாக, ‘நான் வரட்டுமா?’ என்றாள்.

அம்மா வீட்டீல் இல்லை. அவள் பைத்யநாத்தின் கடையில் பருப்பு வாங்கப் போனாள் என்று எனக்குத் தெரியும். என்னிடம் ‘சோட்டோ-கோகா17வோட பால பூன குடிக்காம பாத்துக்கோ. நான் பைத்யநாத் கடையில இருந்து கொஞ்சம் பருப்பு வாங்கிட்டு வந்துடறேன்’ என்று சொல்லிவிட்டு, சற்று முன் தான் கிளம்பினாள்.

சைகை காண்பித்து அவளை ‘வா’ என்றேன்.

ஜன்னலுக்கு வெளியே நின்று கொண்டு, ‘எப்படி இருக்கு இப்ப?’ என்றாள்.

-ரொம்பவே பரவால்ல. நாளைக்கு நான் சாதம் சாப்பிடலாம்

-நான் இரண்டு ஆரஞ்சு கொண்டாந்தேன். வேணுமா?

-சீக்கிரம் தா

-சாப்ட மறந்துடாத.

-மாட்டேன்.

-குணமானப்புறம் வா.

-வரேன்

-நாளைக்குச் சாதமா?

-அப்பா சாப்பிடலாம்னுதான் சொன்னாரு.

-நான் நாளைக்கு மறுபடியும் வரேன். சரியா?

– சரி. ஆனா நான் சொல்ற வரைக்கும் ஜன்னல் கிட்ட வராதே.

-சரி. நான் ரோட்டுகிட்டயே சத்தம் போடாம நிக்கறேன். உனக்கு சீட்டி அடிக்கத் தெரியுமா?

-தெரியாது. நான் கை அசைக்கும் போது வா.

குஸும் அடுத்த இரண்டு நாட்களும் மதியத்தில் குறித்த நேரம் தவறாமல் வந்தாள். ஒரு நாள் என்னைப் பார்க்க வேண்டுமென விரும்பியதால் கூட பிரபாவையும் அழைத்து வந்திருந்தாள். பிரபாவும் எனக்கு இரண்டு ஆரஞ்சு கொடுத்தாள் என்பதை மறைக்க விரும்பவில்லை. நான் அவற்றை என் தலையணைக்கடியில் ஒளித்து வைத்து, அம்மா பார்க்காத போது சாப்பிட்டுவிட்டு, மிச்சத் தோலை ஜன்னல் வழியாக வெளியே எறிந்து விடுவேன்.

நலம் அடைந்த பின் இரண்டு முறை குஸுமின் வீட்டுக்குச் சென்றேன்.

அதன் பிறகு, நாங்கள் கல்கத்தாவில் இருந்த வீட்டை விட்டு, திரும்ப எங்கள் கிராமத்துக்குப் போகக் காரணமான ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள் அம்மா ஒரு சோடா குப்பியை திறக்க முயற்சித்தபோது கண்ணாடி சில்லொன்றுஅவள் கையை அறுத்து விட்டது. அவள் மணிக்கட்டிலிருந்து தெறித்த ரத்தம் எங்கும் சிதறியது. அனைவரும் ஓடி வந்தனர். மூலை அறையில் வசித்த பிபின்-பாபு அவள் கையில் ஏதோ மருந்து வைத்து கட்டு போட்டு விட்டார். ஆனால் அவள் கை குணமாவதற்கு பதில், நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வந்தது. அவளால் சமைக்கமுடியவில்லை என்பதோடு, தினமும் இரவில் வலி தாங்காமல் அழுது கொண்டிருந்தாள். மருத்துவர் தவறாமல் வந்து பார்த்துக் கொண்டிருந்தார். என் மாமன்மார்கள் சற்று வசதியானவர்கள். அம்மாவின் இந்த நிலையை கடிதம் மூலம் அறிந்ததும், அவர்களில் ஒருவர் வந்து எங்களனைவரையும் அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

ஜூலை பாதி நிறைவடைந்திருந்தது.. மரங்களில் டால்18 பழுக்கத் தொடங்கி இருந்தது. என் மாமன்கள் வசித்த கிராமத்தில், வயலுக்கு அருகிலிருந்த ஒரு பெரிய ஏரியின் வரப்பில் நிறைய மரங்கள் இருந்தன. முதல் நாளே தரையிலிருந்து ஒரு பழத்தை பொறுக்கி எடுத்தது நினைவிருக்கிறது.

என் அம்மாவின் கை அங்கிருந்த போது குணமானது. செப்டம்பர் பாதியில் நாங்கள் எங்கள் சொந்த கிராமத்துக்கே சென்று விட்டோம். அதன் பிறகு எங்களால் கல்கத்தா செல்ல முடியவில்லை. அப்பாவும் அங்கிருந்த வியாபரத்தை எல்லாம் மூட்டை கட்டி விட்டு வீட்டிற்கு வந்து விட்டார்.

முப்பது வருடங்கள் கழிந்தன.

நான் கல்கத்தாவில் ஒரு எழுத்தராக வேலை செய்து கொண்டு, ஒரு வாடகை விடுதியில் தங்கி இருந்தேன். மனைவியும் பிள்ளைகளும் கிராமத்து வீட்டில் இருந்தனர். ஒரு விடுமுறை நாளில், என் கல்லூரி நண்பன் ஸ்ரீபாடியுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது, அவன் சொன்னான் – நேத்து சாயந்தரம் பிரேம்சந்த் போரால் தெரு வழியா போகும் போது – பெய்ண்ட் அடிச்ச மூஞ்சிங்க, இரண்டு பக்கமும் – கொடும!

-நானும் பாத்திருக்கேன். நானும் அந்த வழியாத் தான் போகனும். ஆனா நான் அவங்கள வேற மாதிரி பாக்கறேன். ஏன்னா அவங்கள எனக்கு நல்லா தெரியும். ஒரு காலத்துல அவங்க வீட்டுக்கெல்லாம் அடிக்கடி போயிருக்கேன்.

என் நண்பன் திடுக்கிட்டு – நீயா – என்றான்.

-ஆமா, நானே தான். உண்மையாத் தான் சொல்றேன்.

-காதுல பூ சுத்தாத.. என்னால நம்ப முடியல!

-சரி, என் கூட வா. நான் உனக்கு நிரூபிச்சுக் காட்டறேன்.

கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன் நந்தாராம் சென் சந்தைக் கண்டுபிடித்து மக்கனை அவள் வீட்டில் போய் சந்தித்தேன். குஸுமோ பிரபாவோ அங்கு இருக்கவில்லை. அன்று அங்கு குடியிருந்தவர்களில் மக்கன் மட்டும் தான் இன்னமும் அங்கேயே தங்கி இருந்தாள்.

ஸ்ரீபாடியுடன் நந்தாராம் சென் சந்திற்குச் சென்றேன். மக்கன் இப்போதும் அங்கு தான் இருந்தாள். முடி எல்லாம் நரைத்து, பற்கள் விழுந்து, ஒரு சூனியக்காரியைப் போல் இருந்தாள்.

மக்கன் என்னைக் கண்ட போது, ‘உள்ள வா, எப்படி இருக்க?’ என்றாள்.

-என்ன அடையாளம் தெரியுதா?

-அடக் கடவுளே, அதெப்படி தெரியாம இருக்கும். என் கண்ணு முன்னாடியே இல்ல நீ வளந்த. அது இருக்கட்டும், நான் குஸும் எங்கா இருக்கானு கண்டு பிடிச்சுட்டேன்.

-எங்க? எங்க இருக்கா அவ?

-அவ ஷோபா பஜார் தெருவுல ஒரு ஹாஸ்டல்ல ஆயாவா இருக்கா. எடது பக்கம் மொத கட்டடம். கோயிலுக்குப் பக்கத்துல ஒரு பாழடஞ்ச ரண்டு மாடி வீடு. என்ன ஒரு நாள் கோயிலுக்கு கொண்டு போனாங்க, அப்படித் தான் நான் கண்டுபிடிச்சேன்.

ஸ்ரீபாடி கூட வர, நான் அந்த விடுதியைக் கண்டுபிடித்தேன். இன்னும் மாலை ஆகி இருக்கவில்லை. நான் கீழே அடுக்களையில் இருந்த குசினிக்காரரிடம் ‘உங்க ஆயா எங்க?’என்றேன்.

-அது சந்தைக்குப் போயிருக்கு சார், இப்ப வந்துரும். ஏன் சார்?

-எனக்கு அவங்க கிட்ட பேசணும். அவங்க பேரு குஸும் தானே?

-ஆமா சார்.

சற்று நேரத்துக்குப் பிறகு ஒரு மெலிந்த உயரமான பெண் – ஆயா என்று பார்த்தாலே தெரியும் உருவம் – முன் வாசல் வழியாக வந்து அடுக்களைக்குள் நுழைந்தாள். குசினிக்காரர் அவளிடம், ’இவங்க உன்னத் தான் தேடிக்கிட்டிருந்தாங்க குஸும்’ என்றார்.

நான் அந்த ஆயாவை மலைப்போடு பார்த்தேன். என் சிறுபிராயத்தில் பார்த்த அழகி குஸுமா இவள்? மக்கன் அளவுக்கு வயதாகவில்லை என்றாலும், குஸும் இப்போது ஒரு கிழவிதான். அவளை வேறெப்படியும் வர்ணிக்க முடியாது. என் நினைவில் இருந்த குஸுமின் முகத்துக்கும் இந்த முதியவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குசினிக்காரர் சொல்லி இருக்கவில்லை என்றால் எனக்கு அது குஸும் என்றே தெரிந்திருக்காது.

குஸும் எங்களை ஆச்சரியத்தோடு பார்த்து, ‘என்னையா தேடுனீங்க? உங்கள யாரு அனுப்புனா?’ என்றாள்.

-மக்கன் அனுப்புனா.

-எந்த மக்கன்?

-நந்தாராம் தெருவுல இருக்கற ஹவுஸ் ஓனரு மக்கன்.

-அப்படியா. ஆனா என்ன ஏன் தேடறீங்க நீங்க?

-இங்க வா. எனக்கு உங்கிட்ட ஒண்ணு சொல்லனும்.

-நாம சாப்பாட்டு ரூமுக்கு போயிடுவோம்.

சாப்பாட்டு அறைக்குள் சென்றதும், நான் ‘என்ன அடையாளம் தெரியுதா குஸும்?’ என்றேன்.

-இல்ல சார்.

-நாம எல்லாம் நந்தாராம் சென் சந்துல குடி இருந்தோம். அப்போ எனக்கு எட்டு வயசு. எங்க அப்பா அம்மா சலூன்காரர் வீட்டுல குடி இருந்தாங்க. ஞாபகம் இருக்கா?

சிரித்துக் கொண்டே, குஸும் சொன்னாள் – எனக்கு ஞாபகம் இருக்கு. நீ தானே அந்த கிருக்கு ஐயர் பையன்? எப்படி வளந்துட்ட? உங்க அப்பா அம்மா எல்லாம் இன்னும் இருக்காங்களா?

-யாரும் இல்ல.

-எத்தன புள்ளங்க?

-அஞ்சு

-உக்காரு கண்ணா, உக்காரு.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின், குஸும் எங்களைக் காத்திருக்கச் சொல்லி விட்டு எங்கோ போனாள். சற்று கழிந்து, இரண்டு உணவுப் பொட்டலங்களைக் கொண்டு வந்து எங்கள் கையில் கொடுத்தாள்.

எனக்கு அப்போது ஞாபகம் வரவில்லை. ஆனால் சாப்பிடத் தொடங்கும் போது வந்தது. நான்கு பெரிய ஹீங்க் கோச்சுரிகள். அந்தக் கணமே எனக்கு குஸுமின் பாபுவும், ஹீங்க் கோச்சுரியும் ஞாபகம் வந்தது. எனக்கு முப்பது வருடங்களுக்கு முந்தைய அந்த பையனும், ஹீங்க் கோச்சுரி மேல் அவனுக்கு இருந்த பேராசையும் ஞாபகம் வந்தது. குஸும் அதை இன்னும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாமலும் இருக்கலாம் – தெரியவில்லை. நான் கோச்சுரியைத் தின்று கொண்டிருந்த போது, என் மனம் என்னை முப்பது வருடங்களுக்கு முந்தைய அந்த புழுதி நிறைந்த நந்தாராம் சந்தில், சாலையோர நகராட்சிக் குழாயின் அருகில், குர் மண்டிக்கு முன், இருபத்தைந்து வயது இளம் பெண்ணான குஸுமும், தவறாமல் ஹீங்க் கோச்சுரி கொண்டு வந்த பாபுவும் இருந்த இடத்துக்கு இட்டுச் சென்றது.

(ஆங்கில மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: ‘அமர் ப்ரேம்’ என்ற ஹிந்தி திரைப்படமும், ‘நிஷிபாவ்தோ’ என்ற வங்காள மொழிப் படமும் இந்த கதையின் பாதிப்பில் உருவாக்கப்பட்டவை.)

அடிக்குறிப்புகள்:

1ஹீங்க் – பெருங்காயம்; ஹீங்க் கோச்சுரி – பெருங்காயம் சேர்த்து செய்யப்படும் பூரி போன்ற பலகாரம்.

2காக்கா – மாமா

3குர் – வெல்லம்

4சாட்டு – சாட் (chaat) பலகாரம்

5பாபு – வங்காளத்தில் ‘சார்’ என்று பொருள்படும் மரியாதைச் சொல்

6கோகா – குழந்தை

7கஸ்தா கோஜா – ஒருவகைஇனிப்பு பலகாரம் – https://worldfood.guide/dish/khasta_goja/

8சோக்ரா – சின்னப் பையன்

9அம்ரிதி, ஜிலிபி – ஜிலேபி பலகாரங்கள்

10அச்சார் – ஊறுகாய்

11குல் – இலந்தைப் பழம்

12தீதி – அக்கா

13காகிமா – அத்தை

14வாசுதேவ் என்பதன் வங்காள உச்சரிப்பு

15முரி – பொரி

16சல்தா – உவா மரம் https://en.wikipedia.org/wiki/Dillenia_indica

17சோட்டோ-கோகா – சிறு குழந்தையைக் குறிக்கும் செல்லப் பெயர்.

18டால் – பனம்பழம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.