வி. ராமஸ்வாமி: நேர்காணல்

This entry is part 2 of 13 in the series வங்கம்

1. உங்கள் பின்னணி பற்றி கொஞ்சம் பகிர்ந்துகொள்ள முடியுமா? நீங்கள் எப்போது வங்க இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கினீர்கள்?

நான் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றேன், அதன் பிறகு கல்கத்தாவின் வீடற்றவர்களின் வீட்டு உரிமைகளுக்காக சமூக செயற்பாட்டில் என்னை நான் அமிழ்த்திக் கொண்டேன். உயர்நிலை வகுப்பு, கல்லூரி, பட்ட மேற்படிப்பு நிலைகளில் பொருளாதாரமும், நகர சமூகவியலும் பயிற்றுவித்திருக்கிறேன். மத்திய, மாநில அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச முகமைகளுக்காகப் பயன்பாட்டு சமூக-பொருளாதார ஆய்வுகளில் பங்கெடுத்திருக்கிறேன். ஹவுராவில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த சணல் தொழிலாளர்கள் சேரியில் அடிமட்ட அமைப்பு ஒன்றை நிறுவியுள்ளேன். இறுதியாக, மருத்துவ, தொழில்சார் மற்றும் அறிவியல் பயன்பாட்டுக்கான நீர் அளக்கும் கருவியைத் தயாரிக்கும் எங்கள் குடும்ப சிறிய உற்பத்தி நிறுவனத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டேன். [நான்] தமிழாக இருந்தபோதும் (என்னுடைய தாத்தா 1930-இல் கல்கத்தாவுக்கு வேலை தேடிவந்து, இங்கேயே தங்கிவிட்டார்), நான் என் வாழ்க்கை முழுவதும் கொல்கத்தாவில் தான் வாழ்ந்தேன், ஒரு வங்காளியையே மணம் முடித்திருக்கிறேன். நான் ஒரு இலக்கியக் காதலன், என் வாழ்க்கை முழுவதும் வாசித்து வந்திருக்கிறேன், ஆனால் எதிர்-ஸ்தாபன எழுத்தாளரான சுபிமல் மிஸ்ராவின் படைப்புகளில் தொடங்கி 2005-இல் தான் வங்க இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கினேன்.

2. புத்தகங்களின் மீதான உங்கள் ரசனையை எவ்வாறு விவரிப்பீர்கள்? புனைவில் உங்கள் தேர்வுகள் குறித்து எவ்வாறு விவரிப்பீர்கள்?

என்னுடைய ரசனை பல ஆண்டுகளாக வளர்ந்துவந்திருக்கிறது, கண்டறிதல்கள் மற்றும் நண்பர்களின் பரிந்துரைகளால் அது தாக்கம் பெற்றிருக்கிறது. படைப்பின் உண்மைத்தன்மை, எழுத்தின் ஆற்றல், மனித ஆன்மா மற்றும் மனித நிலையின் ஆழம் குறித்த ஆய்வு ஆகியவை என்னை ஈர்க்கும் விஷயங்களில் சில. 

3. குழந்தை பருவத்தில் நீங்கள் என்ன மாதிரியான வாசகராக இருந்தீர்கள்? இலக்கியத்துக்குள் வருவதற்கு என்ன பாதையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

என்னுடைய குழந்தை பருவ வாசிப்பு என்பது வழக்கமான, பின்-காலனிய, ஆங்கில-வழிக் கல்வி அனுபவமே. என்றபோதிலும், புத்தகங்களால் நிறைந்த ஒரு வீட்டில் வாழ்வதும், பள்ளியில் நல்ல நூலகங்களுக்கான அணுகலும்கூட தாக்கம் செலுத்தின. என்னுடைய கல்லூரிக் காலங்களில் இருந்து, கொல்கத்தாவில் உள்ள அமெரிக்கன் நூலகத்துக்குச் சென்றேன். உயர் கல்விக்காக லண்டனில் வசித்தபோது, உலகம் முழுவதும் உள்ள எழுத்தைப் பற்றிய அறிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டது. நான் தீவிரப் படிப்பில் ஈடுபட்டிருந்ததால், இலக்கிய வாசிப்பை சில ஆண்டுகளாகக் கைவிட்டிருந்தேன். ஆனால், கல்விப்புல ஆய்வுகளின் எல்லைகளில் நின்ற பிரச்சினைகள் மற்றும் பாடங்கள் குறித்து படைப்பிலக்கியங்கள் பேசுகின்றன என்பதை 1990-இல் மீண்டும் இலக்கியத்திற்குத் திரும்பியபோது கண்டறிந்தேன். 

4. உங்களுக்கு முக்கியமான புத்தகங்கள் என்று எவற்றைச் சொல்வீர்கள்? எந்தெந்த புத்தகங்கள் உங்களைச் சிறைபிடித்தன? எவையெல்லாம் உங்களுக்கு மிகவும் அடிப்படையான புத்தகங்கள்?

ஏராளமாக இருக்கின்றன. சிலவற்றைச் சொல்வதென்றால்,

 • The Count of Monte Cristo, by Alexander Dumas;
 • The Tin Drum, by Gunter Grass;
 • The Magic Mountain, by Thomas Mann;
 • The Grapes of Wrath by John Steinbeck;
 • So Many Hungers, by Bhawani Bhattacharya;
 • The Puppet’s Tale, by Manik Bandopadhyay;
 • Memed My Hawk, by Yasser Kemal;
 • Crime and Punishment by Dostoevsky;
 • the short stories of Sadat Hasan Manto;
 • The Book of Memory and Forgetting, by Milan Kundera;
 • The Day Lasts More Than a Hundred Years, by Chinghiz Aitmatov;
 • In the Skin of a Lion, by Michael Ondaatje;
 • The Famished Road, by Ben Okri;
 • many books by Jose Saramago;
 • Kenzaburo Oe, Japan
 • 2666 by Roberto Bolano;
 • Barren Lives, by Graciliano Ramos.

5. அல்புனைவு வாசிப்பில் உங்களுக்குப் பிடித்தமானவை யாவை?

மீண்டும், சிலவற்றைச் சொல்வதென்றால், மார்டின் லூதர் கிங் மற்றும் லாங்க்ஸ்டன் ஹ்யூஸின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்,

 • Nature’s Metropolis by William Cronon;
 • Dust Bowl by Donald Worster;
 • A Miracle, A Universe: Settling Accounts with Torturers, by Lawrence Weschler;
 • The Secrets of the Temple, by William Greider;
 • The Worlds of Patrick Geddes by Philip Boardman;
 • several books by Lewis Mumford;
 • The Sufis by Idries Shah;
 • Woodsmoke and Leafcups, by Madhu Ramnath.

6. நீங்கள் வாசிக்க விரும்பாத நூல் வகை என்ற ஒன்று உண்டா?

ஹா ஹா, குப்பை நூல்களுக்கு என்னிடம் தனி விளக்கம் உண்டு, எனவே, அவற்றை நான் தேர்வு செய்ய மாட்டேன். எனது விருப்பங்கள் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவை, நுணுக்கமானவை.

7. நீங்கள் எப்போது வாசகனாக ஆனீர்கள்? ஏன் வாசிக்கிறீர்கள்?

நான் எப்போதும் புத்தகங்கள் வாசித்திருக்கிறேன், ஒருவர் உணவை எடுத்துக் கொள்வதைப் போல், நான் புத்தகங்களை ஒரு கட்டத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் கற்றுக் கொள்வதற்காக வாசிக்கிறேன், எனக்காக சிந்திப்பதற்கும் என்னை வெளிப்படுத்திக் கொள்வதற்குமான திறனைப் பெற்று, என்னைச் சுற்றி உள்ள உலகைப் புரிந்துக் கொள்வதற்காக வாசிக்கிறேன். ஆக, வாசிப்பு என்பது என்னுடைய வாழ்க்கையில் ஓர் அத்தியாவசியப் பகுதி. தவிரவும் நான் விழிப்புடன் இருப்பதை என் வேலை வேண்டுகிறது. மேலும் என்னுடைய உள் சுயத்துடன் இணைவதற்காகவும், சுய மேம்பாட்டின் பயணத்துக்காகவும் நான் வாசிக்கிறேன். 

8. என்ன வாசித்துக் கொண்டிருந்தீர்கள்? உங்கள் வாசிப்புக் குவியலில் அடுத்து என்ன இருக்கிறது? தற்சமயம் என்ன வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

நான் கடந்த சில ஆண்டுகளாக வாசிப்பதை நிறுத்திவிட்டிருந்தேன், ஏனென்றால் என்னுடைய மொழிபெயர்ப்புப் பணிகளுக்காக நான் நேரத்தை ஒதுக்குகிறேன். வசிலி கிராஸ்மெனின் Forever Flowing மற்றும் ரொபொர்தோ பொலானோவின் Savage Detectives ஆகியவை நான் வாசித்த இரண்டு குறிப்பிடத்தக்க புத்தகங்கள்.

9. உங்கள் வாசிப்புப் பழக்கங்கள் யாவை? எப்படி நேரம் கிடைக்கிறது? எப்போது, என்ன மாதிரியான புத்தகத்தை வாசிப்பீர்கள்? மேலும் சில புத்தகங்கள் ஒலி வடிவில் கேட்பதற்கும், சில மின்நூல் வடிவில் அணுகுவதற்கும் வசதியாக இருக்கும்? உங்களுடைய விருப்பத்தேர்வுகள் யாவை?

நான் தொட்டறியக்கூடிய புத்தகங்களை மட்டுமே வாசிப்பேன். ஒருவர் வாசிப்பதற்கான நேரத்தை உருவாக்க வேண்டும். எனக்குப் பலவிதமான ஈடுபாடுகளும் அக்கறைகளும் உண்டு, எனவே அதுவும்கூட என் வாசிப்புப் பழக்கங்களை மேம்படுத்தியிருக்கிறது. 

10. வங்க எழுத்துக்களை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பணிக்குள் எப்படி வந்தீர்கள்? உங்கள் மொழிபெயர்ப்பு சார்ந்த சவால்கள் பற்றி எங்களுக்குச் சொல்ல முடியுமா?

அது ஒரு விபத்தாகவே நடந்தது, அதன் பிறகு சுபிமல் மிஸ்ராவின் சிறு புனைவு ஒன்றை மொழிபெயர்க்கும் குறிப்பிட்ட திட்டம் ஒன்றில் இருந்து நான் அதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டேன். அதன் முடிவை நான் நெருங்கிக் கொண்டிருந்தபோது, மொழிபெயர்ப்புக்கு மற்ற எழுத்தாளர்களைத் தேடினேன். நான் மனோரஞ்சன் பியாபரியைப் பற்றி கேள்விப்பட்டேன், அவரை அணுகினேன், அவர் தன்னுடைய மிகச் சிறந்த நாவலான சந்தல் ஜிபோன்-ஐ மொழிபெயர்க்கக் கொடுத்தார். சுவாதி குஹா என்ற தோழி அவருடைய முதல் நாவலான சோமுத்ரோ-வை மொழிபெயர்க்கக் கொடுத்தார். எழுத்தாளரும் பதிப்பாளருமான ஆதிர் பிஸ்வாஸ், அவருடைய நான்கு-பாகங்கள் கொண்டு அகதி நினைவுக்குறிப்பை மொழிபெயர்க்க என்னிடம் வழங்கினார். ராக்ஹப் பங்தோபாத்யாய்-இன் எழுத்தைப் பற்றி அறிந்து, அவருடைய மனைவியைத் தொடர்புகொண்டேன், சைல்ட்ஹுட் என்ற அவரது நாவலை மொழிபெயர்க்கக் கொடுத்தார். கொல்கத்தாவில் மக்கள் இலக்கியத் திருவிழாவில் அன்சாருதீன் பேசுவதாக அறிந்து, அவரை அணுகினேன், சாங் ஆஃப் தி ஃபாராவே வில்லேஜ் என்ற அவருடைய நாவலை மொழிபெயர்க்கக் கொடுத்தார். வங்கதேசத்தைச் சேர்ந்த சஹிதுல் சஹிர் என்ற பெயரை 2019-ஆம் ஆண்டு அறிந்தேன். இரண்டு வாரங்கள் அவருடைய படைப்புகளை வாசிப்பதில் மூழ்கினேன். அவருடைய நாவல்களில் இரண்டையும், சிறுகதைத் தொகுப்பையும் மொழிபெயர்க்க முடிவெடுத்துள்ளேன். ஆக, எல்லாமே என்னுடைய தீவிரமான, சுறுசுறுப்புமிக்க வாழ்க்கையில் இருந்து எழுகிறது! ஆனால் நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும், நான் இலக்கியத்தை விரும்பினாலும், என்னுடைய மொழிபெயர்ப்புப் பணியில், நான் மொழியையே கையாண்டு கொண்டிருக்கிறேன். மூல வங்க மொழியைப் புரிந்துகொண்டு, அதையே ஆங்கிலத்தில் வெளிப்படுத்த முயல்கிறேன். ஒருவேளை இலக்கிய அம்சம் என்பது எழுந்தால், அது இரண்டாம் பட்சம் அல்லது முக்கியமற்றது. 

வங்க இலக்கியம் சார்ந்து

1. பல தரப்பு வாசகர்களைக் கவரும் எழுத்தாளர்களையும் புத்தகங்களையும் நீங்கள் பரிந்துரைக்க முடியுமா? தமிழ் வாசகர்கள் சமகால வங்க இலக்கியப் பற்றி மேலாக அறிந்துகொள்ள உதவும் படைப்புகள் யாவை?

நான் வங்க இலக்கியத்தின் வாசகன் அல்லன், ஒருபோதும் அப்படி இருந்தது இல்லை. வங்க இலக்கியம் பற்றி எனக்கு மிகக் குறைவாகவே தெரியும். ஆனால், சுபிமல் மிஸ்ரா ஒரு வித்தியாசமான வகை எழுத்தாளர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன், எனவே அவரது படைப்பை மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அது சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வங்க இலக்கியத்தில் இணையாகப் பயணிக்கும் முழு துறை ஒன்றுக்கு என்னை இட்டுச் சென்றது. ஜகதிஷ் குப்தா, கமல்குமார் மஜும்தார், அமியபூஷன் மஜும்தார் ஆகியோரின் படைப்புகள்; இவர்கள் சுபிமல் மிஸ்ராவின் இலக்கிய முன்னோடிகள். கொல்கத்தாவிலும் மேற்கு வங்கத்திலும் சிறு பத்திரிகை உலகையும் உதயன் கோஷ் போன்ற எழுத்தாளர்களைப் பற்றியும் அறிந்தேன். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதில் திரோய்லோகியோநாத் முகோபாத்யாய் ஒரு தனித்துவமான எழுத்தாளர். சதிநாத் பதுரியின் தொராய் சரித் மனஸ், அத்வைத மல்லபர்மனின் திதஸ் ஏக்தி நோதிர் நாம், தேபேஷ் ராயின் திஷ்த பரேர் பிரிடன்டோ போன்ற மகத்தான படைப்புகளும் உண்டு. இவையெல்லாம் மையநீரோட்ட, வெகுஜன இலக்கியத்துக்கு வெளியே இருக்கின்றன. ஆனால் வங்க மொழியின் படைப்பூக்கம் மிக்க எழுத்துக்கள் இன்றைக்கு வங்கதேசத்தில் இருந்து வருகின்றன என்று நான் நினைக்கிறேன், வங்க மொழி மற்றும் வங்க இலக்கியத்தின் பாதுகாவலர்களாக வங்கதேசத்தின் மக்கள் உள்ளனர். தற்செயலாக, 2019 நாவலான ஆங்கிலத்தில் எழுத்தப்பட்ட பாபு பங்களாதேஷ்-ஐ எழுதியவர் ஒரு வங்கதேச எழுத்தாளர், நுமெய்ர் அதிஃப் சவுத்ரி.

2. உங்களுடைய சமீபத்திய கண்டுபிடிப்புகள் யாவை?

அன்சாருதீன் மற்றும் ஷஹைதுல் சாஹிர்.

3. உங்கள் புத்தகங்கள் வாங்கும் பழக்கம் இன்றைக்கு எப்படி இருக்கிறது? வங்க எழுத்துக்கள் எவ்வாறு இருக்கின்றன? ஒலிப்புத்தகங்கள் நிறைய கேட்கிறீர்களா மற்றும்/அல்லது கிண்டில் வாசிக்கிறீர்களா?

வாழ்க்கை முழுக்க புத்தகங்கள் வாங்கிய பிறகு, இப்போது முற்றிலுமாக நிறுத்திவிட்டேன். வங்க மொழி பதிப்பகங்கள் கொல்கத்தாவைச் சார்ந்து இருக்கின்றன. வணிகமும் விளம்பரமும் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது, ஆதிக்கம் செலுத்துகிறது. சில பதிப்பக நிறுவனங்களும், நாளிதழ்களும், இதழ்களும் பதிப்புத்துறை மற்றும் வாசிப்பு ரசனை மீது இறுக்கமான பிடியைக் கொண்டிருக்கின்றன. மையநீரோட்டத்துக்கு இணையாகப் பயணித்த சிறு பத்திரிகை உலகம் இன்றைக்கு பலவீனமான நிலையில் இருக்கிறது. கொல்கத்தாவின் மிகப்பெரிய புத்தகச் சந்தை குறிப்பிட்ட சில பதிப்பாளர்களின் மகத்தான மோசடி அன்றி வேறில்லை. ஒலிப்புத்தகங்களும், கிண்டில் வாசிப்பும் சிறு பகுதியைத் தாண்டி பெரிய தாக்கத்தைக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. 

4. நாவல், அல்புனைவு, சிறுகதை போன்ற பல்வேறு வகைமைகளில் உங்களுக்கு விருப்பமான புத்தகங்கள் / எழுத்தாளர்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள முடியுமா?

நான் வங்க இலக்கியத்தின் வாசகன் அல்ல என்று ஏற்கெனவே கூறிவிட்டேன். இருந்தபோதிலும், என்னுடைய எல்லைக்குட்பட்ட அறிமுகத்தில், புனைவில் சுபிமல் மிஸ்ரா, ராக்ஹப் பங்தோபாத்யாய் மற்றும் ஷஹிதுல் சஹீர், அல்புனைவில் அதிர் பிஸ்வாஸ் மற்றும் அன்சாருதீன் ஆகியோரின் பெயர்களை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். 

5. நினைவுக் குறிப்பு, வாழ்க்கை வரலாறு சார்ந்த பரிந்துரைகள் என்னென்ன? இவற்றில் தமிழில் அறிமுகப்படுத்தப்பட வேண்டியவை எவை?

மைக்கேல் மதுசூதன் தட் பற்றிய மகத்தான வாழ்க்கை வரலாற்று நாவல் ஒன்றை நண்பர் சமிரன் தாஸ் சமீபத்தில் எழுதி முடித்துள்ளார். அதுதான் உடனடியாக என் நினைவுக்கு வருகிறது.

6. எல்லோருக்குமான ஒரு எழுத்தாளர் அல்லது புத்தகம் என்று ஏதும் உண்டா? வெவ்வேறு காரணிகளுக்கான புறக்கணிக்கத்தக்க அல்லது கவனம்பெறத்தக்கவர்கள்?

நான் சுபிமல் மிஸ்ராவைப் பற்றி மட்டுமே பேச முடியும், அவர் ‘எல்லோருக்கும்’ எழுதவில்லை, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு. அவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் சவாலை நான் எடுத்துக் கொண்டேன். மிஸ்ராவிடமிருந்து பெருமளவில் வேறுபட்டிருக்கும்போதிலும், ஷஹிதுல் சஹிர், அவரது மொழி, வடிவம், கதை சொல்லல், நினைவு மற்றும் சாட்சியாய் இருத்தல் உள்ளிட்ட அணுகுமுறை ஆகியவற்றை விரும்பும் தனக்கே உரிய வாசகர்களைக் கொண்டிருக்கிறார். 

7. கவிதை, நகைச்சுவை, நாடகம் போன்ற மற்ற இலக்கிய வடிவங்கள் பற்றி? இதில் கவனிக்கத்தக்கவர்கள் யார்? இந்த வகைமைகளை சராசரி வாசகர் ஒருவர் எங்கிருந்து தொடங்க வேண்டும்?

எனக்குத் தெரியாது.

8. மேலெழுந்து வரும் புதிய முகங்கள் யார்?

எனக்குத் தெரியாது. 

9. புனைவு மற்றும் கட்டுரைகளில் விவாதிக்கப்படும் பற்றியெறியும் கேள்விகளும் விவாதிக்கத்தக்கப் பிரச்சினைகளும் யாவை? உதாரணங்கள் அல்லது சுட்டுதல் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

எனக்குத் தெரியாது. ஆனால் வர்த்தக மற்றும் சந்தை மாசுபாட்டிலிருந்து விடுபட்டுள்ள கலை படைப்பாற்றல் மற்றும் நேர்மை என்பது ஓர் அருகிய இனம் என்று என்னால் கூற முடியும். நான் குறிப்பிட்டுள்ள பெயர்கள் இந்தச் சூழலுக்கு எதிராகப் பயணிப்பவை. 

10. உங்களுடைய அடுத்த திட்டங்கள் என்ன? எந்தப் படைப்புகளை அடுத்ததாக நீங்கள் எடுக்கவிருக்கிறீர்கள்?

சுபிமல் மிஸ்ராவின் இருபது எதிர்-கதைகளின் தொகுதியோடு சுபிமல் மிஸ்ராவின் நான்காவது மற்றும் கடைசி புத்தகத்தை முடிக்கிறேன். மனோரன் பியபரியின் சந்தல் ஜிபோன் முத்தொகை நாவல்களில் மூன்றாம் பாகத்தை மொழிபெயர்க்க வேண்டும். அன்சாருதீனின் சாங்க் ஆஃப் ஃபாரவே வில்லேஜ் மற்றும் பந்தோபாத்யாயின் நாவல் சைல்ஹுட்-ஐ மொழிபெயர்த்து முடிக்க வேண்டும். ஷஹிதுல் சஹிரின் நாவல், ஐ லுக் அட் யுவர் ஃபேஸ்-ஐ முடிக்க வேண்டும் மற்றும் பத்து சிறுகதை அடங்கிய தொகுப்பையும். ஒட்டுமொத்தமாக, நிறைய வேலை இருக்கிறது.

தமிழில்: சு. அருண் பிரசாத்

Series Navigation<< ஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனிமேதையுடன் ஒரு நேர்காணல் >>

One Reply to “வி. ராமஸ்வாமி: நேர்காணல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.