சுனீல் கங்கோபாத்யாய்
(தமிழில்: உத்ரா)

குரு தேவர் நிறுவிய விஸ்வ பாரதி பல்கலையின் நூறாம் ஆண்டு தொடங்கியுள்ளது. இத் தருணத்தில் அவரது நாவல்களைப் பற்றி சுனீல் கங்கோபாத்யாய் எழுதிய விமர்சனத்தைப் படிப்பது நமக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தும். 1991-ல் தாகூரின் 50ஆம் ஆண்டு இறந்த நாள் நினைவாக தேஷ் பத்திரிகையில் வங்காள மொழியில் எழுதப்பட்ட கட்டுரை இது. ஆங்கில மொழியாக்கம்: சந்தா சட்டோபாத்யாய் போத்ரா.
நான் ‘சோக்கேர் பாலியை’ (1901 Chokher Bali- Eye sore- Binodini,- A grain of Sand) கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மூன்றாம் முறையாகப் படிக்கிறேன். நான் நடு நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன் அப்போது; அது நாவல்களைப் படிக்க உகந்த சமயமில்லை, ஆனால், என் கண்கள் அனைத்தையும் உண்ண ஆசை கொண்டிருந்தன. என் மாமாவின் அலமாரியில் தாகூரின் சிதைந்த சில புத்தகங்களைக் கண்டெடுத்தேன்.
அந்த நாட்களில் சிறுவர்களுக்கான புத்தகங்கள் குறைவு, படிக்கவும் அதிக நேரம் வேண்டியதில்லை. ஆனால், பெரியவர்களுக்கான நூல்கள், சிறுவர்களுக்கு… மூச்.!. இள மனதைக் கெடுத்துவிடும் என்று பெரியவர்கள் எங்களைக் கடிவார்கள். ஆனால், நல்ல பையனாக வளரும் நோக்கமெல்லாம் என்னிடமில்லை! ‘சேஷர் கபிதா’ (1929 Shesher Kobita- The Last Poem-Farewell- My Friend) என்ற தாகூரின் நாவல்தான் நான் முதலில் படித்தது. அப்போது எனக்கு 13 வயதுதான்; எந்த விதத்திலும் புரியாத ஒரு கதையாக அது இருந்த போதிலும் முழுவதுமாக, அதன் வியத்தகு விரக்தியில் எப்படியோ ஈர்க்கப்பட்டு படித்தேன். அப்போது அதை எத்தனை தூரம் உள்வாங்கினேன் என்று சொல்ல முடியாத நிலையிலும், அது என்னைக் கவர்ந்து சூழ்ந்து கொண்டது. அழகிய எழுத்தின் மாயத் தன்மையால் வசீகரிக்கப்பட்டேன். ஒவ்வொரு வரியும் ஒரு புதுக் கண்டுபிடிப்பு. காதலின் கம்பீரம் அறியாமலே நான் ‘லாபண்யா’ (Labanya)வைக் காதலிக்கத் தொடங்கினேன். அந்த ‘இறுதிக் கவிதை’ நான் வாலிபனானதின் தொடக்கம்.
தாகூரின் அனைத்து நாவல்களையும் படித்துள்ளேன் என்பதில் எனக்குப் பயங்கரப் பெருமிதம். ‘கோரா’ (1909- Gora), ‘கொரே பாய்ரே (1916- Ghare- Baire- The Home and the World)) போன்ற நாவல்களைப் படிக்காதவர்களைக் கிண்டல் செய்வேன். சிறு வயதில் படிப்பதைக் காட்டிலும், வாலிப வயதில் அவற்றைப் படிப்பது சிறப்பு என்று பின்னர் உணர்ந்தேன். முதலிலிருந்து தொடங்கினேன்- இம்முறை நான் மயக்கத்திலுள்ள வாசகன் மட்டுமல்ல, விவேகம் கூடிய விமர்சகனும் கூட. இருந்தும், தாகூரின் எழுத்துக்களை விரும்பும் மனிதனாகையால் மிகுந்த இரசனையுடன் படித்தேன். அவருடைய அருமை பெருமைகளுக்குத் தலைவணங்கினாலும், பொதுவில், அவரது படைப்புகளைச் சற்று உதாசீனப்படுத்திப் பேசுவேன். இது போலி வேடமோ, இரட்டை நிலையோ அல்ல. அறுபதுகள் வரை அவரது விசிறிகள் அவரை பீடத்தில் ஏற்றி கடவுளைப் போலக் கொண்டாடியதை என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களால் ஏற்க முடியவில்லை. அக்காலத்தின் சிறந்த எழுத்தாளர்களான சுனிதி குமார் சட்டோபாத்யாய் முதல் சையத் முஸ்தபா அலி வரை ‘ரவீந்திரரின் படைப்புக்களுக்குப் பிறகு வேறெதுவுமே படிக்கும் தகுதியற்றவை, அவருக்கு ஈடாக எவருமில்லை’ என்று சொன்னார்கள். தாகூருடையது இறுதிச் சொல். இந்த விதந்தோதலைக் கண்டிக்கும் விதமாக நாங்கள் அவரது எழுத்தைப் பகடி செய்வோம். நாங்கள், உள்ளூர அவரது கவிதைகளில் மயங்கினோம், அவரது எழுத்துக்களில் மகிழ்ந்தோம், ஆனால், எங்கள் எழுத்து மேஜைகளில் அவரது புத்தகங்கள் இருக்காது. எழுதுகோளை எடுக்கும் போதே அவரை எண்ணத்திலிருந்து நீக்கி விடுவோம்.
‘மூன்று ஜோடி உதைகள் தாகூரின் மொத்த படைப்புகளையும் மிதியடியில் சிதறடித்து விடும்’ – என் ஒரு கவிதையில் வரும் வரி அது. பல வசைகள் என்னை நோக்கிப் பொழிந்தன. ஆனால் அதே சமயத்தில், எங்களுடைய உரையாடல் குழுவில் உரைநடை எழுத்தாளர் ஒருவர் தான் தாகூரைப் படித்ததில்லை என்றும், படிக்கும் தேவையில்லையென்றும் தற்பெருமையுடன் மீண்டும் மீண்டும் சொல்கையில் நான் அவரை அடிக்கும் அளவிற்குத் தூண்டப்பட்டேன்.

பல வருடங்களுக்குப் பிறகு தாகூரை மீண்டும் படிப்பது பதட்டமாகத்தானிருந்தது. என்னால் அதை அணுகிப் படிக்க முடியுமா? என்னை அது ஈர்த்தால் மட்டுமே படிக்க வேண்டுமென்று எனக்கு நானே நிபந்தனை விதித்துக் கொண்டேன். முடிக்க வேண்டிய அவசியத்திற்காகப் படிப்பது என்பது எனக்கு ஒத்து வராதது. என்னிடம் அந்தளவு பொறுமை மீதமில்லை. சாதாரணப் படிப்பை மீறிய ஒரு பொறுப்பு இப்போது வந்திருக்கிறது. இன்றைய கால கட்டத்தில் தாகூரின் எழுத்துக்கள் எந்த அளவிற்குத் தேவை என்றும் அதன் தாக்கங்களைக் குறித்தும் எழுதச் சொல்லி ‘தேஷ்’ இதழின் ஆசிரியர், தாகூர் இறந்த ஐம்பதாவது ஆண்டு நினைவு மலருக்காகக் கேட்டிருந்தார். ஒரு நூற்றாண்டிற்குப் பின்னர் தன் கவிதைகளைப் படிக்கும் எதிர்கால வாசகன் அதை எவ்விதம் ஒத்துக் கொள்வான் எனத் தாகூரே கற்பனை செய்திருக்கிறார். அந்த நூற்றாண்டும் நெருங்கி வருகிறது. அவருடைய ஆவல் நிறைவேறாமலில்லை. இன்றும் அவரது கவிதைகளைப் படிக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். வேறேதும் எஞ்சாவிடினும், தன் பாடல்கள் காலத்தை வெல்லும் என்ற ஆசை அவருக்கிருந்தது. ஆம், அவை வென்றன. இன்றளவும், உலகம் முழுதும் வங்காளிகளும், மற்றும் சிலரும் அவரது பாடல்களால் கவரப்பட்டுள்ளனர். ஆனால், அவர் தன் நாவல்களின் ஆயுளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.
மேற்கு வங்க அரசின் வெளியீடான ரொபீந்த்ர ரொச்னாபோலி’ (Rabindra Rachnaboli) யின் 7-ம் தொகுதி என்னிடமுள்ளது. வங்காள மொழியில் வந்துள்ள அவரது படைப்புக்களின் முழுத் தொகுப்பு அது. அதில் ஆறு நாவல்கள் உள்ளன; உண்மையில் ஐந்து தான்-‘ப்ரஜ்பொதிர் நிர்பொந்தோ’
(Projapotir Nirbondho) வும், ‘சிர் குமார் சபா’வும் (1926- Chira Kumar Sabha-ப்ரும்மச்சாரிகள் சபை) இரண்டும் ஒன்றே. அரசின் பதிப்பு அதை நாவல் எனத் தனியாகக் கணக்கிட்டாலும், விஷ்வ பாரதி பதிப்பு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. விஷ்வ பாரதி தாகூரின் மொத்த நாவல்களையும் தொகுத்து வெளியிட்டுள்ளது. அதில் 12 நாவல்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், அதில் ‘ப்ரஜாபதிர் நிர்பந்தோ’ இடம் பெறவில்லை.
‘பௌ டாக்குரனீர் ஹாத்’(1883- Bou Thakuranir Haat-The Young Queen’s Market) என்ற நாவலில் தொடங்கினேன். இது தன் 22-ஆம் வயதில் அவர் எழுதிய முதல் நாவல். அத்தனை இளம் வயதில் இது எழுதப்பட்டது என்பதே அபூர்வமான ஒன்று; என்ற போதிலும், இப்போது படிப்பதற்கு அதை முக்கியத்துவம் கொண்டதாக நினைக்க முடியவில்லை. தன் முதல் நாவலைப் பற்றி ஒரு எழுத்தாளர் கொள்ளும் வலுவான உணர்ச்சிகள் அவருக்கும் இருந்தது. ஆனால், கதைமாந்தர்கள் ‘பொம்மை விளையாட்டுப்’ பருவத்தைத் தாண்டவில்லை. தன் எண்பதுகளில், அவரே சொன்னார்: ‘இதை மறுபார்வையிடலாம்.’ நல்லெண்ணத்துடன் தொடங்கினேன் என்றாலும் என்னால் இந்த நாவலில் மேலே செல்ல முடியவில்லை. உதயாதித்யா, பசந்த் ராய், அவரது ‘முக்தோதாரா’ (1992- Muktadhara-அருவி) நாடகத்தில் மீண்டும் வருகிறார்கள். ஆனால், இவர்கள் வலுவுடன் அதில் படைக்கப்படவில்லை. தாகூரின் வழக்கமான அருமையான மொழியுமில்லை. இரு தொடர் வாக்கியங்கள் ஒரே வினைச் சொல்லில் முடியக்கூடாதென்பது உரை நடையின் அடிப்படை விதி. தன்னுடைய முதல் நாவலில் அவர் இதைப் பற்றி அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. ஒரு வாக்கியத்தின் முடிவில் ‘ஓடிக் கொண்டிருந்தான்’ என்று எழுதுபவர், இரண்டாம் வாக்கியத்தின் முடிவில் ‘வேகமாக ஓடிக் கொண்டிருந்தான்’ என எழுதுகிறார். மிகுந்த சிரமத்துடன் பாதி புத்தகம் படித்த நான், இது என் கோப்பைத் தேநீர் இல்லை, ஆய்வாளருக்கானது என விட்டு விட்டேன்.
26-ஆம் வயதில் இரண்டாவது நாவலான ‘ராஜரிஷி’ (1887 Rajarshi) வந்தது. முதல் முறை படித்த போது எனக்கு ஏற்பட்ட குழப்பம் இன்னமும் நினைவிலிருக்கிறது. 1923-ல் ‘பிஷோர்ஜோன்’ (Bisarjan) என்ற பெயரில் மேடை நாடகமாக இது நடிக்கப்பட்டது. அரசன் கோபிந்த மாணிக்யாவிற்கும், அந்த அழகான ஹாசி(Hasi), டாடா(Tata) என்ற இரு குழந்தைகளுக்கும் நாவலின் தொடக்கத்தில் நிலவும் அருமையான உறவு எத்தனை அற்புதம்! ஹாசி கேட்கும் ‘ஏன் இவ்வளவு இரத்தம்?’ என்ற கேள்வி இன்னமும் என் இதயத்தைத் துளைக்கிறது. மிகச் சிறந்த எழுத்தாளனின் முத்திரைப் படைப்பு ராஜரிஷி. துன்பத்தில் இருக்கும் பதான்களுக்கு சிகிச்சை அளிக்கும் துறவி பில்வன்(Bilwan) சொல்வதாக தாகூர் எழுதுகிறார்: ‘ஜாதி இல்லாத ஒரு துறவி நான்; நான் மனிதன்; மனிதர்கள் இறந்து கொண்டிருக்கையில் ஜாதியைப் பற்றிய சிந்தை ஏன்? கடவுளால் படைக்கப்பட்ட மனிதன், சக மனிதனிடம் அன்பைக் கோருகையில், ஜாதியைப் பற்றி கேள்விகளில்லை.’ இது 1887-ல், நம் சமுதாயம், ஜாதி மற்றும் மூட நம்பிக்கைகளால் சூழப்பட்ட சந்தர்ப்பத்தில் எழுதிய ஒன்று என்பது மெய்சிலிர்க்க வைக்கிறது. பின்னாளில் இதையே சுவாமி விவேகானந்தரும் சொன்னார் அல்லவா?
மாத இதழ்களில் தன்னை எழுதச் சொல்லிக் கேட்கும் ஆசிரியர்களின் தேவைகளுக்கு அவர் செவிசாய்த்தார். இப்போது நடப்பது போலவே துர்கா பூஜைக்கு முன் எழுத்தாளர்கள் அவசர கதியில் எழுதுவார்கள்; இதனால், சில தவறுகள் கண்டு கொள்ளப்படாமல் போகும், தொடர் கதைகள் தேவைக்கு அதிகமாக நீளும். இத்தகைய அவமரியாதைகளுக்கு(!) தாகூரும் உட்படுத்தப்பட்டார். கவனக்குறைவால் ஏற்படும் தவறுகளை ‘சோக்கேர் பாலி’யில் பார்க்கலாம், குறிப்பாக ‘நீங்கள்’ என்பதை சாதாரணமாகவும், முறையாகவும் அவர் குழப்பத்துடன் பயன்படுத்தியது; ‘ராஜரிஷி’ யில் தேவையற்ற மீள் கூறல்கள். இதழாளர் கேட்டுக் கொண்டதற்கேற்ப கதையை வளர்த்தியதாகத் தாகூரே ஒத்துக் கொண்டுள்ளார். 15-வது பகுதியில் முடிய வேண்டிய கதையை, 34 வது பகுதி வரை நீட்டிக்க நேர்ந்தது என்று அவர் சொன்னார். குமார சம்பவத்தில் காளிதாசர் எழுதியது முதல் ஏழு பகுதிகள் மட்டும் தான். மற்றவையெல்லாம் பின்னர் புலவர்கள் சேர்த்தவை. இப்போதெல்லாம், அவரவர்களே, தாகூர் உட்பட, தாங்களே மற்றவரைச் சாராமல், இணைத்து விடுகிறார்கள்.
ராஜரிஷியில் ‘ஜெய்சிங்கா’ இறந்த பிறகு, கதை சுற்றிச் சுற்றி நொண்டியடிக்கிறது. கதையின் முக்கியக் கருவிற்குத் தொடர்பில்லாமல், முகலாய சிப்பாய்கள் பற்றிய வர்ணனையும், தப்பியோடிய ஷா சுஜா (Shah Suja)வைப் பற்றியும் அவர் எழுதிக் கொண்டே போகிறார். வரலாற்றுக் காலத்தின் கம்பீரத்தையும், விவரங்களையும் தாகூரால் வெளிப்படுத்த முடிந்ததில்லை. இந்த விஷயத்தில் பங்கிம் சந்திரர் மேலானவர். மாறுபட்ட பத்திகளில் ‘இங்கே ஷா சுஜா’, ‘அங்கே ஔரங்கசீப்’ என்று எழுதுவதைத் தவிர வேறெந்த முனைப்புமில்லை. இந்த நாவலின் கடைசி இரண்டு பத்திகளில் தன் பாணியை விட்டுவிட்டு, வேறொரு புத்தகத்திலிருந்து அப்பகுதிகளை நிரப்புகிறார். ஒரு நாவலை இப்படி முடிக்க முடியும் என்பதைக் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை!
இளவயதில் எழுதிய இந்த இரு நாவல்களிலிருந்து வரலாறு தனக்கு ஒத்து வராது என அவர் புரிந்து கொண்டிருக்கக்கூடும்; பின்னர் எழுதிய எதிலும் வரலாறு வரவில்லை.
எனினும், பழைய வரலாறு வந்தாலும், வராவிட்டாலும், சம கால வரலாறுகளை இலக்கியம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விவரங்கள் பின்னாளில் வரலாறுகள் அல்லவா? தன்னுடைய எந்த ஒரு நாவலிலும் இத்தகைய பின்னணிகளைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. துல்லியமாக இத்தகைய நிகழ்வுகள் எப்போது ஏற்பட்டன, அதற்கு அவரின் கதாபாத்திரங்கள் சமூகத்திலோ, தேசத்திலோ எவ்வகையில் தொடர்புறுகிறார்கள் போன்றவை அவருக்குப் பொருட்டில்லை. அனைத்துக் காலங்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய விவரணைகளை அவர் தவிர்த்தார் என்று சொல்ல முடியாது. அவரே சொன்னது இது ‘ நித்தியத்துவத்தை அடைவதற்கு சமகாலப் படகில் பயணிக்க வேண்டும். இல்லையெனில் தெளிவற்றும், குறிக்கோளற்றும் அப்பயணம் அமைந்து விடும்.’ ‘சோக்கேர் பாலி’யில் வெள்ளை இராணுவ வீரர்களைப் பற்றி ஒரிரு இடங்களில் மட்டுமே குறிப்பிடுகிறார்- அந்தக் காலகட்டத்தில் எந்த அரசு இருந்தது, செழுமையான ஒன்றா, அல்லது இலஞ்சம் கோலோச்சியதா, சட்டம் ஒழுங்கின் நிலை என்ன என்ற வாசகனின் கேள்விகளுக்குப் பதிலில்லை. காதல் நெருக்கடிகளைத் தவிர அச்சமயத்தில் நிலவிய வேறெந்த சிக்கல்களையும் பற்றி வாசகன் அறிய முடிவதில்லை.
ஒரு எழுத்தாளர், தன் வாழ்வைப் பற்றி மறதி உள்ளவர், தன் குடும்ப நடப்புகளை அறிந்திராதவர், வீட்டுக் கூரையிலிருந்து ஒரு செங்கல் விழுந்தாலும் அதைப் பற்றி அலட்சியமாக இருப்பவர் போன்ற இலட்சணங்களுடன் இருந்தாலும், தான் எழுத்தில் உருவாக்கும் குடும்பம், அல்லது குழு, அல்லது ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே என்றாலும் கூட, அவர்களின் சமூகப், பொருளாதார நிலைகளைப் பற்றிய அறிதலுடன் எழுத வேண்டும். ஒரு கதையில் ஒரு பள்ளி ஆசிரியருக்கு மூன்று மகள்கள் என வந்தால், அவர்களது திருமணத்திற்காக அவர் கடன் வாங்கியிருக்க வேண்டும். அவருக்கு மூன்று மகன்கள் என்றால், அவர்களின் கல்வியைப் பற்றிய கவலை அவருக்கு இருக்க வேண்டும். வாசகனுக்கு அந்த பள்ளி ஆசிரியரின் வருமானம், அவரது வங்கிக் கடன் அல்லது அடகுக் கடையில் அவர் வாங்கிய கடன் போன்றவற்றை எழுத்தாளர் சொல்ல வேண்டும். புனைவில் இவைகளைச் சொல்லும் கடமை எழுத்தாளருக்கு உள்ளது. கடவுள் தன் சில குழந்தைகளிடம் விட்டேற்றியாக இருப்பதைப் போல, எழுத்தாளன் இருக்கக் கூடாது. கதை மாந்தர்களின் வயது, வாழ்க்கைத் தரம், உறவு போன்றவற்றில் சிறு வித்தியாசங்கள் படைப்பில் வந்து விட்டால், அது இசைக்கேடாகிவிடும். நல்ல இலக்கியம் இவற்றைப் பொறுப்பதில்லை. கவிஞர்கள், கடவுளைப் போல செயல்படலாம், ஆனால், நாவல் எழுதுபவர்கள் உலகுடன் இயங்க வேண்டும். பிற்காலத்திய நாவலாசிரியர்கள்- காஃப்கா, காம்யு போன்றவர்கள் எழுதும் பாணியை மாற்றினார்கள் என்பது உண்மைதான். தாகூர் தன் கவிதைப் பாணியை நாவலிலும் பயன்படுத்தியுள்ளார் என்பதையும் அதன் போதாமையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சோக்கேர் பாலியில் நாம் முதலில் மஹேந்த்ரா, பிஹாரி என்ற இரு நண்பர்களையும், மர்மமானப் பெண்ணான பினோதினியையும் சந்திக்கிறோம். அவருடைய பல படைப்புகளில் நாம் இரு நண்பர்களை மீள மீளப் பார்க்கிறோம். அவர்கள் நண்பர்கள் என்ற போதிலும் ஒருவர் ஆளுமை நிறைந்தவராக இருப்பார்; மற்றவர் அவரைப் பின்பற்றுபவராக, கிட்டத்தட்ட சீடராக இருப்பார். ஒருவர் பெற்றோருடன் வசிப்பவராக இருப்பார், மற்றவர் தனியாக, பெற்றோர் இல்லாதவராகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பார். இந்த மஹேந்த்ரா, பிஹாரி இணையர்கள் சில மாறுதல்களுடன், நூகாடூபியில் யோகேந்த்ரா-ரொமேஷ் என்றும், கோரா-பினய் என்று கோராவிலும், நிகிலேஷ்-சந்தீப் என்று கொரே பாய்ரேவிலும், சஷீஷ்- ஸ்ரீபிலாஸ் என்று சதுரங்காவிலும் வருகிறார்கள். எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கும். சோக்கேர் பாலியில் அந்த இரு நண்பர்களின் தொழில், வருமானம் எதுவும் சொல்லப்படுவதில்லை; தேவையான பணியாட்கள், சமையல் செய்பவர், வீட்டை நிர்வகிப்பவர் என்று செழுமையாக வாழ்கிறார்கள்; விரும்பிய இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்துக் கொள்கிறார்கள், நினைத்த போதெல்லாம் உல்லாசப் பயணம் செய்கிறார்கள்.(படிக்கும் போதே காதில் புகை வருகிறது) அவர்கள் தாராளமாகச் செலவு செய்கிறார்கள்-ஆனால் பணம் எங்கிருந்து வருகிறது? அந்தக் கதை மாந்தர்களுக்கும் அதைப் பற்றிய அக்கறையில்லை. நாம் முதலில் அறிவது அவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள் என்று; பிஹாரி பொறியியலும் படிப்பதாகத் தோன்றுகிறது. அத்துறைகளில் தங்களது பயிற்சி குறித்தோ, தங்கள் அறிவைச் செயல்படுத்தும் ஆர்வத்துடனோ அவர்கள் உரையாடுவதில்லை; நாவலில் அப்படி ஒரு காட்சி கூட இல்லை; பிறகென்ன அவர்கள் தொழில் செய்து சம்பாதிப்பதைப் பற்றிப் பேசுவது?
வங்காள மொழியின் முதல் உளவியல் நாவல் என்று சோக்கேர் பாலியை விமர்சகர்கள் சொல்கிறார்கள். இது ஒன்றும் அசல் கூற்றல்ல, தாகூரே இதைப் பற்றி குறிப்பு கொடுத்துள்ளார். இந்த நாவல் தனித்த புது நடை கொண்டது, கதை மாந்தர்களின் உள்மனப் போராட்டம் தான் நாம் கவனிக்க வேண்டியது, பின்னணி நிகழ்வுகள் அவ்வளவு முக்கியமல்ல என்று அவர் சொன்னார். தன் படைப்புகளைப் பற்றி எழுத்தாளர் சொல்வதை அப்படியே ஏற்கும் கடமை வாசகர்களாகிய நமக்கு உள்ளதா என்ன?
தனது படைப்புகளின் முதல் தொகுப்பின் முன்னுரையில்தான் சோக்கேர் பாலியை எழுதுவதற்கு மிக ஆழ்ந்து சிந்தித்ததாகவும், பங்கிம் சந்த்ர சட்டோபாத்யாயாவை மனதில் எண்ணித் தொடங்கியதாகவும் அவரே சொல்கிறார். தாகூரின் நண்பரான ஸ்ரீஷாஸந்த்ரா (Shreeshachandra), தாகூரின் பெயரை இணைத்து பங்கதர்ஷன் என்ற இதழில் புதுப் பிரிவைத் தொடங்கி அதை வெளியிட்டார். அவர் நாற்பது வயது நிரம்பியவர். பங்கதர்ஷனின் முதன்மை இதழில் பங்கிம் ஒன்றிற்குப் பின் ஒன்றாக நாவல்கள் எழுதி வந்தார். புதுப் பிரிவின் ஆசிரியரும் அதையே செய்ய வேண்டி வந்தது. ஆம், அதில் மறைமுக சவாலும் இருந்தது. தொடராக சோக்கேர் பாலியை எழுதுகையில் பங்கிமின் ‘விஷ விருக்ஷா’ அத்தியாயங்களை வெல்லும் ஆவல் தாகூருக்கு இருந்தது. பங்கிம் வெளி நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். தாகூர் அதை முயற்சிக்கவில்லை. காதலால் அவதியுறும் மூன்று கதைமாந்தர்களின் உள் மனப் போராட்டங்களில் அவர் கவனம் செலுத்தினார்.
ஒரு நாவலாசிரியராக தன் நாற்பதாவது வயதில் அவர் பரிமளித்தார். முன்னரே பல சிறுகதைகள எழுதி அனுபவமும் பெற்றிருந்தார். உலக இலக்கியத்தின் நவீன எழுத்து முறையையும் அறிந்திருந்தார். சோக்கேர் பாலி அவரது இலட்சியப் படைப்பு.
தாகூரின் இந்த மூன்றாவது நாவலைப் படித்துக் கொண்டிருக்கையில் நான் தில்லிக்குச் செல்ல நேரிட்டது. அங்கிருந்து ரயிலில் ராஜஸ்தானில் ஊர் சுற்றும் போதும், விருந்தினர் விடுதிகளிலும் நேரம் கிடைக்கையிலும் நான் தாகூரில் ஆழ்ந்தேன். என்னதான் என் திட்டம் என்று நண்பர்களும், அறிமுகம் உள்ளவர்களும் ஆச்சர்யப்பட்டனர். நான் புன்னகைத்தேன். விருந்தாளிகள் போன உடனேயே நான் நாவலை எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டேன். இந்த நாவலை முழுதும் படிக்க வேண்டுமா, படிப்பது எனக்கு இன்பமாக இருக்கிறதா, அது என்னை ஈர்க்கிறதா என்ற சிந்தனைகள் அவ்வப்போது வந்து செல்லும். ஈனஸ்வரத்தில் ‘இல்லை’ நான் இன்பம் காணவில்லை, ஒருக்கால், நான் முழுதாக இதை படிக்க வேண்டியிருக்காது.’ இன்னமும் எத்தனை பக்கங்கள் மீதமிருக்கிறது என்பதற்காகப் புத்தகத்தைப் புரட்டிப் பார்ப்பேன். ஒவ்வொரு அத்தியாயமும் முடியும் போது ‘இத்துடன் முடிந்தது’ என நினைக்கையில் தேவையற்ற மற்றொன்று முளைக்கும். மாத இதழ்த் தொடருக்கென இடம் நிரப்புவதற்காக தாகூர் இப்படிச் செய்தாரோ? பூஜை நேரத்து சிறப்புப் பதிப்புகளைப் போல இதுவும் சிறிதாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பினோதினி தான் சோக்கேர் பாலியின் வெற்றிக்குக் காரணம்; அதன் இரண்டு ஆண் கதா பாத்திரங்கள் அதன் தோல்விக்குக் காரணம் எனச் சொல்லலாம். பேராசையும், தூய்மை உணர்வும், கருணையும், கொடூரமுமான அவள் வங்க இலக்கியத்தின் தனித்துவமுள்ள படைப்பு. இளமை, அழகு, அறிவு இணைந்த இந்த விதவை தன் அறிவு மற்றும் உடல் பசியை வெளிப்படக் காட்டுகிறாள். வாழ்க்கை தன்னை வஞ்சித்துவிட்டதாக நினைப்பவள், பழி வாங்கும் உணர்ச்சி மேலிட்டாலும், தன் உள்ளார்ந்த தூய்மையால் கேடுகளை ஏற்படுத்துவதில்லை. அவளுடன் ஒப்பிடுகையில் அந்த இரு ஆராதனையாளர்களும் உபயோகமற்றவர்கள்; நோக்கமற்று அலைகிறார்கள். அவள் அவர்களை வைத்து பொம்மலாட்டம் போடுகிறாள். அந்த ஆண்கள் இருவருக்கும் சுய சிந்தனை, செயல் என எதுவுமில்லை, தங்கள் மூக்கைத் தொடுவதற்குத் தங்கள் கைகளைக் கூடத் தூக்காதவர்கள்!
சுருக்கமாகச் சொல்லப் போனால், கடைசி வரை படித்தும் திருப்தி ஏற்படவில்லை. அந்த இரு பொம்மைகளையும் சுவர் சட்டத்தில் தொங்கவிட்ட தாகூர், சினம் நிறைந்த அவளுக்கு விபூதி பூசி காசிக்கு அனுப்பி விடுகிறார். இறுதியில் மகேந்த்ரா திடீரென்று அவளது கால்களில் பணிகையில் வாசகன் கடுஞ்சுவையைத் தான் உணர்கிறான். இது ஒன்றும் ‘புது வகை இலக்கியமல்ல.’
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 1906-ல் அவர் தன் அடுத்த நாவல் நூகாடூபி (Noukadubi- The Wreck)) யை முடித்தார். அது பெயர் பெற்ற ஒன்றல்ல. இது சாதாரணக் கதை என்றும், அவருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் பல விமர்சகர்கள் சொன்னார்கள். நான் இதை முன்னரே படித்திருந்தாலும் நினைவில் அது இல்லை. ராஜரிஷி, சோக்கேர் பாலி அளவிற்கு இது மனதில் நிற்காததால் முக்கியமற்ற ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். ஆனாலும் தொடங்கியவுடன் கதை பிடித்துப் போனது. ஹீரோ ரொமேஷ் ஏற்கெனவே அறிமுகமானவர் போல் தெரிந்தான். அழகன், படித்தவன், வசதியுள்ளவன், கொல்கத்தாவில் வாடகை வீட்டில் வசிப்பவன். சோக்கேர் பாலியின் பிஹாரியைப் போல, கோராவின் பினயைப் போலவே இதிலும் தன் முக்கிய கதைமாந்தர்களின் பெற்றோரை அவர் களத்தில் கொண்டுவரவில்ல. ஒன்று அவர்களை விரைவில் கொன்று விடுவார், அல்லது அறியாத பிணியில் அவர்கள் வாடிக் கொண்டிருப்பார்கள். (அந்தப் பிணியைப் பற்றியும் எதுவும் வராது.) இதிலும் ரொமேஷின் அப்பாவைச் சுருங்கக் காட்டிவிட்டு அவரைக் காணாமல் அடித்து விடுகிறார். எந்த வில்லங்கங்களுமற்று இரு பெண்களின் காதல் வலையில் ரொமேஷ் சிக்குகிறான். ரொமேஷின் அடுத்த வீட்டுக்காரனும், கூடப் படிப்பவனுமான ஜோகேந்த்ரா ப்ரும்மசமாஜத்தைச் சேர்ந்தவன். அவனுக்கு அழகும் அறிவுமுள்ள ஹேம்நளினி (Hemnalini) என்ற சகோதரி இருக்கிறாள். எண்பது, தொன்னூறு வருடங்களுக்கு முன்னர் கல்யாணத்திற்கு முந்தைய காதல் என்பது ப்ரும்மோ பெண்களுடன் தான் சாத்தியமுள்ள ஒன்று; ஏனெனில் அவர்கள் ஆண்களைச் சுதந்திரமாக சந்திக்கலாம். ஒரு ப்ரும்மோ குடும்பம் இப்படியாகக் கதைக்குத் தேவையான ஒன்றுதான். இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்குகையில், ரொமேஷின் தந்தை எங்கிருந்தோ வந்து அவனை வலுக்கட்டயமாக இழுத்துச் சென்று கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறு பெண்ணுடன் அவன் திருமணத்தை நடத்தி விடுகிறார். படகுகள் இதன் பின்னர் தான் மூழ்குகின்றன.
ஆம், இங்கேயும் சில விஷயங்கள் சமமாக இல்லை. ரொமேஷிற்கு அம்மா இல்லை, மணப்பெண்ணிற்கு அப்பா இல்லை. புது தம்பதியுடன் மகளின் புகுந்த வீட்டிற்கு பெண்ணின் அன்னை செல்லும் வழக்கம் அந்த நாட்களில் கிடையாது. கதையின் பொருட்டு, அவர் புயலைக் கொண்டு வந்து, இந்த மணமக்களைத் தவிர பயணம் செய்த அனைவரையும் மூழ்கடித்துவிடுகிறார். ஒரு மணல் மேட்டைப் பற்றிக் கொண்டு மணமக்கள் மட்டும் உயிர் பிழைக்கிறார்கள். அவசரக் கோலம் அள்ளித் தெளித்தத் திருமணம் என்பதால் இருவரும் ஒருவரை ஒருவர் அறியவில்லை. ரொமேஷ் கொல்கத்தா திரும்பிய மூன்று மாதங்களுக்குப் பிறகு அந்தப் பெண் இன்னொருவரின் மனைவி என அறிகிறான். அந்தப் பெண்ணிற்கோ இது இரண்டுமே தெரியாது. ரொமேஷைக் கணவனாக எண்ணி மனதில் அவனைப் போற்றுகிறாள். அவனால் அவளை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை, ஒதுக்கவும் இயலவில்லை. கடைசியில், தங்கிப் படிக்கும் பள்ளி ஒன்றில் அவளைச் சேர்த்துவிட்டு அவன் ஹேம்நளினியின் வீட்டில் தேநீர் அருந்தச் செல்கிறான். குறைந்தது 25 தேநீர் வகைகள், அருந்தும் வகைமை போன்றவை இந்த நாவலில் வருகின்றன. உலக இலக்கியத்தில் இது ஒரு அரும் பதிவு! ரொமேஷ், ஹேம்நளினி காதல் வளர்ந்து கல்யாண நிலையை எட்டப் பார்க்கிறது. ஆனால், அந்த இளைய மணப்பெண் கமலா, பள்ளியிலேயே இருக்கப் போவதில்லை-அவள் கோடை விடுமுறைக்கு வீட்டிற்கு வருகிறாள்.
இது சிறந்த முடிச்சு கதையில். தாகூரின் ஹீரோக்கள் ஏமாற்றுபவர்களோ, சுருட்டுபவர்களோ இல்லை என்பது நமக்குத் தெரியும். ஹேம்நளினியைக் கல்யாணம் செய்து கொள்வதற்காக அவன் அவளிடம் பொய் சொல்ல மாட்டான். ஆனால், உதவியற்ற கமலாவை என்ன செய்வது? பலதார மணம் என்பது அந்தக் காலத்தில் பொது வழக்கில் இருந்த போதும் தாகூர் அதைத் தன் நாவல்களில் கொணர்ந்ததில்லை. ஹேம்நளினியின் தந்தை அன்னதா பாபு ஒரு புனித ப்ரும்மோ, நேரடியான மனிதர். அவருக்கு ரொமேஷை பிடித்திருக்கிறது, அவன் மேல் நம்பிக்கையும் இருக்கிறது. ஆர்வம் ஏற்படுத்தும் இத் தருணத்தில் ரொமேஷும், கமலாவும் கொல்கத்தாவிலிருந்து காசிப்பூர் செல்கிறார்கள். அவள் பருவமடைந்த போதிலும் அவன் அவளை நெருங்கவில்லை. மறுபக்கத்தில், ஹேம்நளினி வீட்டில் அக்ஷய் என்ற குட்டி வில்லன் தொந்தரவுகள் கொடுக்கிறான். இப்போது நளினாக்ஷா என்ற மருத்துவர் உள்ளே வருகிறார். சொல்லத் தேவையேயில்லை, அவர் சம்ஸ்க்ருதம், இலக்கியம், மருத்துவம் படித்தத் திறமையாளர். தன் இந்து அன்னையை வழிபாடு செய்பவர், அதனால், ப்ரும்மோ வீட்டில் தேநீர் கூட அருந்த மாட்டார். ஆனாலும், ப்ரும்மோவான ஹேம்நளினியின் பால் ஈர்க்கப்படுவதில் அவருக்குத் தயக்கம் ஏதுமில்லை. நாடகத்தனமான இடம் இப்போது வருகிறது-அந்த நளினாக்ஷாதான் கமலாவை மணந்தவர். அதே புயலில் மற்றொரு படகு கவிழ்ந்த விபத்தில் அவர்கள் பிரிக்கப்பட்டு விட்டனர். இறுதியில் ரொமேஷும், ஹேம்நளினியும் நளினாக்ஷாவும் கமலாவும் இணைவார்கள் என்பது நமக்குத் தெரியும், ஆனால் இந்த நாலு பாத்திரங்களின் கண்ணாமூச்சியுடன், நம்ப இயலாத நிகழ்ச்சிகளுடன் இடையில் பல பக்கங்கள் இடம் பெற்று நம்மைச் சோதிக்கின்றன. இது விளையாட்டைத் தவிர வேறொன்றுமில்லை; அதனாலேயே மனதில் நிலைக்கவில்லை.
இந்த நாவலைக் குறித்து அவருக்கு ஆர்வம் ஒன்றுமில்லை. ‘துயரங்களிலும், வர்ணனைகளிலும் இடம் பெறும் கவித்துவம்’ தன்னை ஒரு எழுத்தாளர் என இனம் காட்டும் என அவர் பின்னர் எழுதினார். ஆம் அது உண்மையே. அவர் வார்த்தைச் சித்தர், வலுவற்ற கதை சொல்லி.
ராஜஸ்தானின் மற்றொரு முனையான ஜெய்சால்மரில் நான் நூகாடூபியை முடித்தேன். இரயிலில் திரும்புகையில் அடுத்த நாவலான கோராவைப் படிக்கத் தொடங்கலாமா என்பது குறித்துத் தயங்கினேன். முன்னர் படித்தபோது கோரா எனக்கு அவ்வளவு பிடித்தமாக இல்லை. பெரும் பேச்சுக்கள் எனக்குப் பெரும் தடைகள். அவ்வளவு பெரிய நாவலில் எளிதான நிகழ்வுகள், கேலி, நகைச்சுவை என எதுவும் இடம் பெறவில்லை. பயணங்களில் படிக்கும் நாவல்கள் எளிதானவையாக இருக்க வேண்டும். கோராவை விடுத்து வேறு எளிய நாவலை எடுத்துக் கொள்ளலாமா என்று யோசித்தவன் இறுதியில் கோராவையே தேர்ந்தெடுத்தேன். எழுதப்பட்ட கால வரிசையில் நான் அவரை படித்து வருவதால், ஒரு எழுத்தாளராக அவர் உருவெடுக்கும் பருவ நிலைகளை அறிவதும் தேவையான ஒன்று.
தில்லி புகைவண்டி நிலையத்தில் கொல்கத்தா செல்லும் இரயிலுக்காக மூன்று மணி நேரம் காத்திருந்தேன். காத்திருக்கும் அறையில் படிக்கத் தொடங்கிய எனக்கு நாவல் தடங்கலற்றுச் சென்றது. அந்தப் பெரும் பெரும் பேச்சுக்கள் தடையாகவே இல்லை. நான் இத்தனையா மாறியுள்ளேன்? வயதாவதால் வரும் மாற்றமோ? நான் கட்டுரைகள் படிப்பவன்தான், ஆனால் கட்டுரைப் போன்ற நாவல்கள் என்னை முன்னர் வசீகரித்ததில்லை.
ப்ரபாசியில் கதை எழுதச் சொல்லி ராமானந்த் சட்டோபாத்யாய் தாகூருக்கு ரூ 300/ அனுப்பினார். இரண்டரை ஆண்டுகள் கோராவை எழுதி அதை மாதத் தொடராக தாகூர் அனுப்பி வைத்தார். நவீன எழுத்தாளர்கள் எழுதித்தான் வாழ முடிகிறது என பலர் நினைக்கிறார்கள். தாகூரும்கூட ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்க நேர்ந்தது; எழுத்தின் மூலம் சம்பாதிக்கவும் நேர்ந்தது. சிறுகதைக்கான தன்னுடைய சன்மானத்தை ரூ 80-லிருந்து ரூ 100 ஆக உயர்த்தும்படி, அனேகமாக, மணிலால் கங்கோபாத்யாய் என்ற ஆசிரியர் என நினைக்கிறேன், தாகூர் கடிதம் எழுதினார். கோராவிற்காக அவர் ரூ 300/ மட்டும் தான் பெற்றாரா அல்லது அது அதிகரிக்கப்பட்டதா என்பதை அறிய எனக்கு ஆவலாக இருக்கிறது. ஒருக்கால், ப்ரபாத் குமார் முகோபாத்யாவின் சிறந்த வழித்தோன்றலான ப்ரசந்தா குமார் பால் இதைப் பற்றிச் சொல்லலாம்.
நூகாடூபியில் வரும் ரொமேஷைப்போல, கோராவிலும் பினய் என்பவரைப் பார்க்கிறோம். அவன் படித்தவன், வளம் மிக்கவன், கொல்கத்தாவில் வாடகை வீட்டில் தனியாகத் தங்கியிருக்கிறான். அவனுடைய பெற்றோர்கள் உயிருடனில்லை. ஒரு உறவினர் பற்றிச் சொல்லப்பட்டாலும் அவரைக் கதையில் காணவில்லை. அவனுடைய விட்டின் அருகில் ப்ரும்மோ குடும்பம் ஒன்று வசிக்கிறது. பரேஷ் பாபு, முந்தைய நாவலின் அன்னதா பாபுவை ஒத்திருக்கிறார். ஆனால், அன்னதா பாபு ஒரு குறுஞ்சித்திரம்- பரேஷ் அறிமுகம் சற்று விரிவானது. அவருக்கு வல்லமையுள்ள மனைவி மற்றும் நான்கு மகள்கள். இந்த நால்வரில் இருவரான லலிதா, சுசரிதா இருவரும் கதாநாயகியர்; மற்ற இருவருக்கும் முக்கியத்துவமில்லை. லாபண்யா லலிதாவிற்கு மூத்தவள்; ஆனாலும், லலிதாவின் திருமணக் குழப்பங்களின் போது லாபண்யாவைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. பல கதைமாந்தர்களிருந்தால், அவரால் கையாள முடிவதில்லை. கோரா போன்ற பெரும் நாவல்களில் கூட திடமான பாத்திரங்கள் குறைவே. இந்து மற்றும் ப்ரும்மோ தத்துவ விவாதங்களைக் கையாளும் இந்த நாவலில், ப்ரும்மோவான பனு பாபு வலுவாகப் படைக்கப்படவில்லை. தீவிர இந்துவான கோராவின் எதிர்ப்பாளரான இவருக்கும் சிறந்த சித்தாந்தத் தெளிவும், ஆளுமையும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். பரேஷ் பாபு திறந்த மனத்துடன் இந்துவையும், ப்ரும்மோவையும் ஒன்றிணைக்கப் பார்க்கிறார்.
முன்னுதாரணமற்ற நூதனமான பாத்திரங்கள், கோராவும் அவனது தாயான ஆனந்தமயியும். நாவலின் ஆரம்பத்திலேயே கோரா ஆனந்தமயிக்குப் பிறக்கவில்லை என அறிகிறோம். இந்த அந்தண இந்துக் குடும்பத்தினர் தத்தெடுத்து வளர்க்கும் யூரோப்பிய வெள்ளைக் குழந்தை அவன். ஆனந்தமயி அவனுக்கு அன்னைக்கும் மேலே. கோராவிற்குத் தன் கடந்த கால வரலாறு தெரியாது. சிப்பாய் கலகத்தின் போது அவன் பிறந்திருக்கிறான்- எனவே 19-ம் நூற்றாண்டின் இறுதிக் காலாண்டு என எடுத்துக் கொள்ளலாம். அக்காலத்தில் இந்துவாகப் பிறந்தவர்கள் தான் இந்து என ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். எனவே, இந்துத்துவம் பற்றி கோரா தற்பெருமை கொள்வதில் பொருளேயில்லை. அவன் மூச்சைப் பிடித்துக் கொண்டு நீள நீள விவாதிப்பதில் பயனொன்றுமில்லை. ஒரு கால கட்டத்தில் அவனைப் பற்றிய உண்மை வெளியாகும். இந்த நாடக முடிச்சை தாகூர் நீண்ட நேரத்திற்குத் தக்க வைக்கிறார்.
கோராவில் இடம் பெறும் மதங்களைப் பற்றிய கருத்துக்களும், விவாதங்களும் இன்றளவும் பொருந்திப் போவதால் நான் கோராவை ஆவலுடன் படித்தேன். ஜாதிகளும் மூட நம்பிக்கைகளும் இருந்த போதிலும் இந்துத்வத்தின் மகிமையை கோரா வலுவாக ஆதரிக்கிறான். மிகத் தர்க்கபூர்வமான விவாதங்களை கோரா மூலம் அவர் முன்வைக்கிறார்; இறுதியில் கோராவிற்கு உண்மை புலப்படுகிறது, அவனுடன் வாசகர்களாகிய நாமும் உண்மையைத் தரிசிக்கிறோம். குறுகிய கோணங்களை விடுத்து, இந்த தேசம் முழுவதற்குமான அருமையான படைப்பு என்று இதைச் சொல்லலாம். இதில் காட்டப்படும் தேசப்பற்று வெற்று கோஷமில்லை. ஒவ்வொரு இந்தியனின் சுய மரியாதையின் மீள் கூற்று. வங்காள இலக்கியத்தில், கோராவிற்கு முன்னால், நம் தேசத்திற்கான பார்வையுடன், நாவல்கள் வந்ததில்லை.
கோராவைக் காட்டிலும் வியப்பிற்குரியவர் அவரது தாய் ஆன்ந்தமயி. அவர் சாதாரணப் பெண்கள் போலில்லை, சிறப்புக்குரிய கோட்பாடுகள் கொண்டவர். பேச்சு வெள்ளம் புரண்டோடும் இந்த நாவலில், தன்னுடைய கடந்த காலத்தை உணர்வு பூர்வமாக கோரா எதிர் கொள்ளும் இறுதிப் பகுதியில், மிகுந்த சுயக்கட்டுப்பாட்டோடு செயல்படுகிறார் தாகூர்; ஆன்ந்தமயியின் சுருக்கமான எதிர் வினை நம்மைக் கண்ணீர் விடச் செய்கிறது. கடைசி பக்கத்தைப் படித்த பிறகு நிச்சலனமாகச் சிறிது உட்கார்ந்து விட்டேன்; கண்களில் கசிந்த நீரைத் துடைத்துக் கொண்டு வெளியில் நடக்கச் சென்றேன்.
கோராவும், கொரே-பாய்ரேவும் தாகூரின் சிறந்த இரண்டு நாவல்கள். இதற்கிடையில் சதுரங்கா என்ற நாவலையும் அவர் எழுதினார். எனக்கு அது எப்போதுமே பிடித்ததில்லை. சரியாகக் கவனம் செலுத்தப்படாமலும், ஒழுங்கற்றும் எழுதிய ஒன்று என எனக்குத் தோன்றும். தொடக்கத்தில் அந்தப் பெரிய மாமாவின் பாத்திரம் சற்று திடுக்கிடும் வண்ணம் இருக்கும். அனைத்து மதங்களுக்கும் மேல், மனிதத்தை வலியுறுத்தும் ஒரு நாத்திகரை தாகூர் இதில் முதல் முறையாக அறிமுகப்படுத்துகிறார். அதனால் தான் அவரால் ஒரு வேசியை வெறுக்க முடியவில்லை; தீண்டத்தகாத ஒரு தோல் பதினிடுபவருக்கு மருத்துவ உதவி செய்ய முடிகிறது. தன் மருமகனுக்கு அந்த வேசியைத் திருமணம் செய்து வைக்கவும் முயற்சிக்கிறார். இத்தனை புரட்சிக் கருத்துகள் இருந்தும் தாகூரால் அவற்றைக் கதையில் சரியாகக் கொண்டு வர முடியவில்லை. அந்த வேசியை தற்கொலை செய்து கொள்ள வைத்து, அந்த நாத்திகரையும் கொன்றுவிடுகிறார் தாகூர். கதையின் மற்ற பகுதிகள் செறிவானவை அல்ல. சோக்கேர் பாலியின் நகல், மற்றும் மறு ஆக்கம் போல இருக்கிறது. மீண்டும் இரு நண்பர்கள், சச்சின், ஸ்ரீபிலாஸ், ஒருவன் வலிமையான ஆளுமை உள்ளவன், மற்றவன் அமைதி காப்பவன், தெளிவற்றவன். பினோதினியின் சாயலில், இவர்களுக்கு இடையிலும் ஒரு விதவைப் பெண்-துடிப்பான தாமினி. மேலும் தேவையற்ற, முக்கியமில்லாத, சுயமாகச் சிந்திக்காத லீலான்ந்த ஸ்வாமி என்று ஒரு பாத்திரம்.
எனக்கு மிகவும் பிடித்த நாவல் கொரே-பாய்ரே. ஷம்பூ மித்ரா அதை நாடகமாகப் போடுவதற்கு முன்பாகவே அதைப் படித்திருந்தேன். திரைப்படமாக சத்யஜித் ரே அதை எடுத்திருந்ததைப் பார்க்கும் முன்னரும் மீண்டும் படித்தேன். அதனால்தான் இந்த நாவல் தெளிவாக நினைவில் இருக்கிறது. அதில் இருக்கும் அரசியல் பார்வைகளை ஒருவர் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அதன் நடையழகு அற்புதம். அந்த மந்தரித்த (!) நிலையிலும் சில கேள்விகள் எழாமலில்லை. இங்கேயும் நிகிலேஷ், சந்தீப் என்ற இரு ஆண் நண்பர்களைப் பார்க்கிறோம். ஆனால், எழுத்தாளர் ஏன் நிகிலேஷிடம் பட்சம் காட்டுகிறார்? புரட்சியாளனான சந்தீப்பை ஏன் பேராசை உள்ளவனாக, தன் நலம் விழைபவனாகப் படைக்க வேண்டும்? ஒரு சிறந்த கொள்கையாளனாக சந்தீப்பைப் படைத்திருக்கும் பட்சத்தில் நிகிலேஷுடன் அவன் ஒப்பீடு என்ன? பிமலா இன்னமும் கூட சுய நிந்தனையில் தன்னை வதைத்துக் கொள்வாளா அல்லது சிக்கலான காதல் முக்கோணத்தில் சிக்குவாளா? சினிமாக்களிலும், நாடகங்களிலும் காட்டப்படும் வில்லன்களைப் போல கரடுமுரடான வில்லன்கள் தாகூரின் படைப்பிலில்லை. அவருடைய சந்தீப்பிற்குச் சில தடுமாற்றங்கள் உண்டு. அவன் வெறும் உல்லாசி அல்ல; அழிவின் வலுவான தத்துவத்தைப் புனைந்துள்ளவன். தாகூரின் இலக்கியத்தில் பிமலாவும் ஒரு மதிப்புள்ள இரத்தினம். இந்த நாவலைப் படிக்கச் செய்பவளே அவள்தான்.
கொரே-பாய்ரேவிற்குப் பிறகு 12 நீண்ட ஆண்டுகள் அவர் நாவல் ஏதும் எழுதவில்லை. அவரது 7-ஆம் தொகுப்பு கோராவுடன் முடிவடைகிறது. அவரது நாவல்கள், தூண்டிலில் என்னை மாட்டின. நான் அனைத்தையும்படிக்க ஆசை கொண்டேன். ஆனால், எங்கே அவற்றைக் கண்டு பிடிப்பது?
தில்லியிலிருந்து திரும்பிய பின்னர் சில நாட்களுக்குத் திரிபுராவிற்குச் செல்ல நேரிட்டது. ராஜரிஷி நாவலின் களம் இது. நான் முன்னமே ராஜரிஷியைப் படித்திருந்தேன். திரிபுராவில் கோராவை முடித்தேன். கொல்கத்தா திரும்பிய பிறகு என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. சில நாட்களுக்குப் பிறகு சாந்தி நிகேதன் சென்றேன். தாகூரின் அனைத்து நாவல்களையும் விஸ்வ பாரதி வெளியிட்டுள்ளர்கள் என் அங்கே அறிந்தேன். ரூ 140/-க்கு அங்கிருந்த புத்தகக் கடையில் எல்லா நாவல்களும் அடங்கிய தொகுப்பு ஒன்றை வாங்கினேன்.
ஆனால், ஏன் 12 வருடங்கள் அவர் நாவலே எழுதவில்லை? அது குறித்து அறிய ஆவலாக இருந்தேன். நோபல் பரிசிற்குப் பின்னான உலகப் புகழ் நாட்களில் அவர் பரபரப்பாக இருந்தாரா? நிறையப் பயணம் செய்ய வேண்டியிருந்ததால் தேவையான நேரம் கிட்டவில்லையா? பத்திரிகை ஆசிரியர்கள் முன்னைப் போல் பெருமையுறவில்லையா? எனக்கு இதற்கான விடை தேவையாக இருந்தது; ஆனால். அவருடைய வாழ்க்கைச் சரிதம் என்னிடமில்லை. நான் நூலகங்களில் தேடியிருக்கலாம்; ஆனால், நாவல்கள் படிப்பதை விரும்புபவன் நான், ஆய்வாளன் அல்ல. இந்த வாழ் நாளில் என்னால் ஆகக்கூடிய ஒன்றல்ல அது. சிறந்த அறிவாளிகளின் களம் அது.
கொரே-பாய்ரே வெளியான பிறகு பல விமர்சனங்கள் எழுந்தன என்று எனக்குத் தெரியும். அதனால் அவர் கோபமடைந்திருந்தாரா? ஒரு இதழின் விமர்சனத்திற்குப் பதிலளிக்கையில் அவர் எழுதினார்: ‘பலருக்கு என் எழுத்து பிடிப்பதில்லை. நான் புரிந்து கொள்ள முடியாத மொழியில் என்னிடம் சொல்வதற்கு முயல்கிறார்கள்.’
பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பின் அவர் ‘ஜோகா ஜோக்’ (1929-Jogajog-The Relationship-Liaisons) நாவலை எழுதினார். முதலில் அதன் பெயர் தீன் புருஷ், மூன்று தலைமுறைகள். பெயர் மாற்றத்தைப் பற்றி நான் கேள்வியுற்றவை ருசிகரமாக இருந்தன. பிசித்ரா இதழின் ஆசிரியர் தாகூரை ஒரு நாவல் நிச்சயமாக எழுத வேண்டும் எனக் கேட்டிருந்தார். ஆனால், இவரோ தொடங்கவேயில்லை. கவலையடைந்த ஆசிரியர் ‘விளம்பரம் செய்வதற்காவது தலைப்பைக் கொடுத்து விடுங்கள், கதையைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்’ என்றார். தாகூர் இதழிலிருந்து வந்தவரிடம் அவசரத்தில் தீன் புருஷ் என்று எழுதிக் கொடுத்து விட்டார். நாவல் தொடங்கும் முன்பே தலைப்பா? எங்களைப் போன்றவர்களுக்கு இப்படியெல்லாம் நடக்கும், தாகூருக்குக் கூடவா?
தலைப்பை உறுதி செய்தபிறகு தாகூருக்கு ஒரு சிக்கல். இரு பகுதிகள் எழுதிய பிறகு அவர் தலைப்பை ஜோகாஜோக் என்று மாற்றிவிட்டார். முன்னர் சொன்ன தலைப்பிற்கு அவர் பெரும் நாவலாக எழுத வேண்டும்; அவர் அதற்குத் தயாராக இல்லை. நிச்சயமாக வங்காள இலக்கியத்திற்கு இது ஓர் இழப்பு. என் கருத்தில் தீன் புருஷ் தலைப்பே பொருந்திப் போயிருக்கும். கடைசிப் பக்கத்தைப் படிக்கையில் ‘என்னது, இவ்வளவுதானா, மேலும் இல்லையா?’ என வியந்தேன். இந்த நாவல் இங்கே எப்படி முடிய முடியும்? முரண்பாடுகள் உச்ச கட்டத்தை நோக்கிச் செல்கையில் புத்தகம் முடிந்துவிட்டது அதிர்ச்சிதான்! நம் எல்லோரையும் தாகூர் இங்கே ஏமாற்றிவிட்டார்.
ஜோகாஜோக் இவ்வாறு ஆரம்பிக்கிறது. இன்று ஏழாம் ஆஷாதம் (Asharh) அபினாஷ் கோஷலின் 32-ம் பிறந்த தினம். காலையிலிருந்து பூங்கொத்துக்களும், வாழ்த்துத் தந்திகளும் வந்த வண்ணமாக இருக்கின்றன. இந்த நாவலை இரண்டு மூன்று முறை படித்திருந்த சிலரிடம் ‘யார் இந்த அபினாஷ் கோஷல்?’ என்று கேட்டேன். ‘இவன் தான் நாவலைத் தொடங்குகிறான்; நாவலில் அவன் இடமென்ன?’ என்று கேட்டேன்; தலையைப் பிய்த்துக் கொண்டார்கள். யாருமே இதைக் கவனிக்கவில்லை. எப்படி கவனிப்பார்கள்? இந்த நாவலில் வேறெங்குமே அவன் வரவில்லை. கதையைத் தொடங்குபவன் காணாமல் போய்விட்டான்! அவர் எழுதாமல்விட்டுவிட்ட மூன்றாம் தலைமுறை இந்த அபினாஷ் கோஷல். ஆனால், அவர் இதில் எழுதியுள்ளது வலிமை மிக்கது, மாறுபாடுள்ளது. மதமோ, தேசப்பற்றோ இதில் இடம் பெறவில்லை. நவீனக் கருவான பொருளாதார முரண்கள் இதில் இடம் பெறுகிறது. பழைய தலைமுறையைச் சேர்ந்த செல்வந்தர்களான நில உடைமையாளர்களின் வீழ்ச்சியும், புதுப் பணக்காரர்களான வணிகர்களின் வளர்ச்சியும் இதில் காட்டப்படுகிறது. இம்முறை இரு நண்பர்களில்லை, இரு போட்டியாளர்கள், எதிரிகளான பிப்ரதாஸ், மதுசூதன். தற்பெருமை, ஆணவம், கஞ்சத்தனம் கொண்ட மதுசூதன் வெல்கிறான். காலம் அவன் பக்கம். ஆனால், தாகூரோ பிப்ரதாஸின் அனுதாபி. அவன் வீழ்ச்சியுறும் தலைமுறை மட்டுமல்ல, மறைந்து கொண்டிருக்கும் பிரபுத்துவத்தின் கடைசிப் பிரதிநிதி. கொரே- பாய்ரேவின் நிகிலேஷின் சில சாயல்களை இவனில் பார்க்கிறோம். நில உடைமையாளர் சந்தர்ப்பவாதியாக, கொடுமைக்காரனாக, சிற்றின்பத்தில் நாட்டம் உடையவராக இருந்தாலும், ஒரு பிரபுவாக அவருடைய அந்தஸ்தும் மதிப்பும் தனிதான். அவர் தாராள மனதுடையவர், பண்பட்டவர், கலை போன்ற நுண்ணியங்களின் இரசிகர். அத்தகைய மனிதரின் வீழ்ச்சியில் ஒரு கம்பீர சோகம் இருக்கிறது. அவர்களுக்காக வங்காளிகள் வெளிப்படையாக துக்கம் அனுஷ்டிப்பார்கள். ஒரு காலத்தில் தாகூரின் தாத்தா த்வாரகாநாத் டாகூர் இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்கார வணிகர். சில தலைமுறைகளில் வணிகத்திலிருந்து விலகி, கலை, கலாசாரம், மதம் போன்றவைகளில் தாகூரின் குடும்பத்தினர் ஈடுபடலாயினர். மதுசூதனனை தாகூர் படைத்திருக்கும் விதம், வெற்றி பெற்ற அனைத்து வணிகர்களும் கொடுமையானவர்கள், கடின மனப்பாங்கு உடையவர்கள், இதயமற்றவர்கள், கலை மற்றும் கலாசார உணர்வற்றவர்கள் என்று வாசகர்களை நம்ப வைத்துவிடும். இன்னும் ஒரு படி மேலே போய் மதுசூதனனின் பிறப்பைத் தாழ்த்தும் ஒரு குறிப்பையும் அவர் தருகிறார். இது நீதி அல்ல; எந்த எழுத்தாளனும் தன் கதைமாந்தர்களின் குலம் மற்றும் குடும்பத்தை அவதூறாக எழுதக்கூடாது. நிலக்கிழார்களைப் பற்றிய தாகூரின் சார்பெண்ணங்களை ஒருக்கால் இதில் நாம் பார்க்கிறோமோ? இத்தனை இருந்தும் மதுசூதனன் இரத்தமும், சதையுமான வலுவான பாத்திரமாக வருகிறான். பிப்ரதாசிற்கும், மதுசூதனனுக்கும் இடையில் வருபவள் குமு. ஒளிரும் அழகி. மது கூட அவள் முன்பு மீண்டும் மீண்டும் வலிமையற்றுப் போகிறான். மறுக்க முடியாத உண்மை என்ற போதிலும், வரவேற்க முடியாத அந்த கர்ப்பம் வாசகனின் உணர்திறனில் மீது விழும் அதிர்ச்சி அடி. இந்த இடத்தில் நாவல் திடீரென்று முடிந்து விடுவது நம் மனதில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
ஜோகாஜோக் எழுதும் போதே வங்காள இலக்கியத்தில் தாகூருக்கு பின்னான இலக்கியத்தின் காலம் தொடங்கி விட்டது. கவிதைகளிலும், கதைகளிலும் புது விதிகளையும், பாணிகளையும் தொடங்குவதாக இளைய எழுத்தாளர்கள் ஆரவாரத்தோடு கூச்சலிட்டார்கள். தாகூர் அவர்களுடன் விளையாட நினைத்தார். நவீன மாற்று எழுத்தாளர் என்ற முகமூடி அணிந்து அவர் சேஷர் கபிதா என்ற கவிதையைப் படைத்தார். இந்தப் படைப்பின் மூலம், தன்னை நவீனனாக, இளமைச் சிந்தனை வீச்சு நிரம்பியவராக அவர் நிரூபித்தார். இந்த ‘கடைசிக் கவிதை’ இன்றளவும் புதியது, படிக்கும் இன்பம் தரக்கூடியது. ஒரே அமர்வில் படித்துவிடலாம். கவிதைகள் இங்கே நவீனமடையவில்லை.
கொரே பாய்ரேவிற்குப் பிறகு, முடிவுறாத ஜோகாஜோக்கைக் கணக்கில் கொள்ளாமல், முழு அளவு நாவலை அவர் எழுதவில்லை. தற்போதைய வழக்கில் அவற்றை நாவலைப் போன்ற நெடுங்கதை எனச் சொல்லலாம். அவர் ‘தூயீ போன்’ ( Dui Bon-இரு சகோதரிகள்) என்ற கதையை பெண்களில் இரு வகை என்ற கருத்தோடு தொடங்குகிறார். ஒரு வகையினர் அன்னையின் பேரன்பு கொண்டவர்கள், மற்றவர்கள் காதலில்; இது புதுக் கருத்து அல்ல. மனிதனின் வாழ்வில் இரண்டுமே தேவை. இந்தக் கருத்தை நிறுவ இரு சகோதரிகள் கதையில் அவர் முயற்சிக்கிறார். சுவாரசியமான கதை இல்லை இது. இமாலயத்திலிருந்து வரும் ஒரு துறவி கொடுக்கும் வேர்கள், மற்றும் மூலிகைகளால், அதிசயத்தக்க வகையில் ஷர்மிளா குணமடைகிறாள். இரு சகோதரிகளும் பிரிகிறார்கள். சமூக நெறிகளுக்குக் கட்டுப்பட்டு இந்தக் கதையை தாகூர் மேலெடுத்துச் செல்லாமல் விட்டு விட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதை உணர்ந்த தாகூர் 1934-லில் மாலோன்சோ (Melancha-தோட்டம்) என்று அதே கருவைக் கொண்டு புதிதாக எழுதினார். இதை தனிப் புத்தகமாகக் கருதாமல் இரு சகோதரிகளின் மேம்பட்ட பதிப்பு என்றே கொள்ளலாம். இதில் தீராத நோயால் நீரஜா ஆரம்பத்திலிருந்தே அவதியுறுகிறாள். அவள் குணமடைய வாய்ப்பில்லை. நீரஜாவின் கணவன் ஆதித்யாவின் வாழ்வில் சரளா தவிர்க்க இயலாமல் நுழைகிறாள். அவள் தோட்டம் முழுதும் நிரம்பிப் பரவ விரும்புகிறாள். இங்கே சுடும் உண்மையைத் தாகூர் தவிர்க்கவில்லை. இறக்கும் மனைவியின் ஆபத்தான பொறாமையை அவர் எழுதியுள்ள விதம் வாசகன் மனதில் எதிரொலிக்கும். கலை, சக்தி வாய்ந்த உண்மையை புறக்கணிக்க முடியாதென்பதை கமீஸ் அணிந்துள்ள, வெளுத்த, மெலிந்த, நீரஜாவின் நிலைத்த இலக்கிய உருவம் நிதர்சனமாக்குகிறது.
என் பதின்ம வயதிலிருந்தே சார் அத்யாய் ( நான்கு அத்யாயங்கள்) எனக்கு மிகவும் பிடிக்கும். பக்கம் பக்கமாக ஒரு காலத்தில் மனனம் செய்திருக்கிறேன். அந்தப் பகுதிகள் இன்னமும் நினைவில் இருக்கிறதா என்று என்னை நானே பரிசோதிக்க நினைத்தேன். என்னால் சிலப் பகுதிகளை நினைவு கூற முடிந்தது. ‘என் இருப்பை இனிய அதிர்வுறும் வண்ணம் அசைத்தது உன் குரல்; திடுமெனத் தோன்றும் ஒளியாக அந்த இசை என் இதயத்தைத் துளைத்தது. வானிலிருந்து இறங்கி வரும் பெருமையுள்ள பறவை என்றைக்குமாக என்னைப் பறித்தெடுத்துச் சென்றது.’ ‘என்னை மறதியில் ஆழ்த்தும் அதீத சக்தி உன்னிடமுள்ளது. இல்லையெனில் மறதியின் பொருட்டு நான் வெட்கமடைவேன். என்னை மறக்கச் செய்கிறாய் என்பதை நான் ஆயிரம் முறை ஒத்துக் கொள்வேன். அப்படி நான் மறக்கவில்லை என்றால் என் ஆண்மையை நான் சந்தேகிப்பேன்.’ ‘என் வார்த்தைகளால் உன் மெலிந்த உடலை அணி செய்கிறேன். முறுக்கிப் படரும் கொடி நீ எனக்கு; என் மகிழ்ச்சியின், துயரத்தின் எல்லை நீ; பிறர் காண இயலா கவசம் அணிந்திருக்கிறேன்; இலக்கியச் சொர்க்கத்திலிருந்து இறங்கி வரும் வார்த்தைகளின் கவசம் இது; கூட்டத்தை நெருங்க விடாது செய்வது இது.’
நாலு அத்தியாயம் என்ற நாவலும் பல குழப்பங்களை ஏற்படுத்தியது. தாகூர் ஆயுதப் போராளிகளை எப்போதுமே முழுவதும் அங்கீகரித்ததில்லை. அந்தச் செயல்களை நிராகரிக்கிறார். அறியாமைகளும் தவறுகளும் இருந்தாலும் அந்தக் கோபக்கார இளைஞர்களின் தியாகங்களைச் சிறுமைபடுத்தக்கூடாது. அவர்களின் செயல்பாடுகள் பற்றிய புரிதல் அவருக்கு இல்லை என நான் கருதுகிறேன்- அமெச்சூர்தனமாக தேநீர் கடையையும், மறைந்துள்ள இரகசிய இடங்களையும் வர்ணிக்கிறார். ஆயுதப் புரட்சியாளர்களின் முக்கிய ஆதரவாளரான ப்ரும்மபந்தாப் உபாத்யாயாவின் தோல்வியைப் பற்றி சிறு வயதில் நான் படித்த இந்த நாவலின் முன்னுரையில் கூறப்பட்டிருந்தது. அந்த வயதிலேயே எனக்கு அது பிடிக்கவில்லை. பின்னர் பல விமர்சகர்கள் அதன் வரலாற்று உண்மையைக் கேள்வி கேட்கவே, பிற்பதிப்புக்களில் அது நீக்கப்பட்டது.
இலா, அந்து வின் காதல் கதையாக மட்டுமே நான்கு அத்யாயங்கள் பார்க்கப்பட வேண்டுமென்றும், அதன் பின்னணிக்கு அவ்வளவு முக்கியம் கொடுக்க வேண்டாமென்றும் தாகூர் மீள மீளக் கூறி வந்தார். இம்முறை நான் அதைத்தான் செய்தேன். இத்தகைய உணர்வாழமானக் காதல் உரையாடல்களை நான் வங்காள இலக்கியம் எதிலும் படிக்கவில்லை. இன்றைய எழுத்தாளர்கள் எவரும் அந்த மொழியைக் கடக்கவில்லை.
நான்கு அத்யாயம் நாவலை முடித்த பிறகு ‘இதுதானா? இன்னும் இல்லையா?’ என்று தோன்றியது. தொடர்ந்து படித்த 12 நாவல்கள் என்னை தியான நிலைக்கு இட்டுச் சென்றன. நான்கு அத்யாயம் நாவலுக்குப் பிறகு அவர் ஏன் வேறு நாவல்கள் எழுதவில்லை என்ற கேள்வி என்னைக் குடைந்தது.
அவருடைய முதல் இரண்டு நாவல்களிலும் பிற்காலத்திய செழுமை நடை இல்லை.
மூன்றாவது நாவலான சோக்கேர் பாலியை அவர் வேண்டுமென்றே சாதாரண நடையில் எழுதினார் எனத் தோன்றுகிறது; அதிக அலங்கார நடையும், வீர்யமிக்க சொற்களும் கொண்டு எழுதிய பங்கிம் சந்திரரின் பாணிக்கு மாற்றாக இப்படி எழுதியிருக்கலாம். இந்தச் சாதாரணம் சில இடங்களில் சிறப்பாக, சில வர்ணனைகளில் தட்டையாக இருக்கிறது. சம்ஸ்க்ருத சொற்களைத் தவிர்த்து முறை சார்ந்த வங்காளப் பாணியில் எழுதினார். இந்த முறைச் சார்பு, உரையாடலில் வரும் வினைச் சொற்களிலும் வந்து விடுகிறது. ‘உன் காலடியில் பணிகிறேன்; அந்தக் கடிதங்களைக் கிழித்தெறிந்து விடு’ என்பது பேச்சு வழக்கிற்கு நெருக்கமாகத் தென்பட்டாலும், கிழித்தெறி என்ற வினைச் சொல் என்னவோ ‘சின்னர்யா’ எனத்தான் வந்துள்ளது, ‘சின்ரி’ என வரவில்லை. ‘நூகாடூபி’க்குப் பின் ‘கோரா’வில் பேச்சு மொழி, உரையாடல்களில் இடம் பெற்றுள்ளது. ஆனால், வியக்கும் விதமாக, மீண்டும் முறைசார் மொழி சதுரங்காவில்! இந்த மொழிப் பின்வாங்குதல் ஏனோ? இதற்குப் பிறகு, ப்ரமதா சௌத்ரியின் தாக்கத்தினால் தாகூர் முழுவதுமாக முறையான வங்காள மொழியைக் கைவிட்டார். கொரே- பாய்ரே பேச்சு மொழியில் முதலில் சபூஜ் பத்ரா இதழில் வெளியிடப்பட்டது. அவரின் அனைத்து நாவல்களிலும் உரையாடல்கள் அதிகமாக இடம் பெறும். முதல் நாவல்களில் அவை நீண்டதாக இருக்கும். முடிவில் சார் அத்யாய் மற்றும் சேஷர் கபிதாவில் அதிக வர்ணனையற்ற சுருக்கமான உரையாடல்கள் வந்தன.
தன் நீண்ட வாழ் நாளில் தாகூர் 12 நாவல்கள் தான் எழுதினார். ஒவ்வொன்றிலும் அதிகக் கவனம் செலுத்தி, தீவிரமாகச் சிந்தித்து, வேறுபட்ட கருக்களில் எழுதினார் எனச் சொல்வதற்கில்லை. தன்னைத் தானே படிமமெடுத்து சிற்சில மாறுதல்களுடன் அவரது மாந்தர்களை மீண்டும் மீண்டும் நாவல்களில் அவர் கொண்டு வந்தார். சிறுகதைகளில் ஒப்பீடு அற்றவர், நாவல்களில் அப்படியல்ல. அவர் ஒரு கவிஞர். பக்கம் பக்கமாக உரை நடை எழுத அவருக்குப் பொறுமை இல்லை. பெரும்பான்மையான நாவல்கள் முடிவில் விரைந்தோடும். ராஜரிஷியின் முடிவைத் தான் எழுதாமல், மற்றொன்றிலிருந்து எடுத்துக் கையாண்டார் அவர். சோக்கேர் பாலியில் முன்னும் பின்னுமான நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பினோதினியின் எதிர்காலத்தை அவர் சட்டென்று நிரந்தரமாக முடிக்கிறார். கோராவின் முடிவும் சிறியதுதான், ஆனால் போதுமானது. சதுரங்காவில் ஹேம்லெட்டைப் போலவே பல பாத்திரங்களை அவர் இறுதியில் கொல்கிறார்; ஆனால், தாமினியையும் கொல்வதில் ஏன் இத்தனை ஆர்வம் அவருக்கு? இறுதி பத்து வரிகளில் நல்ல உடல் நலத்தோடு இருந்த அவளுக்கு இதயத்தில் ஏதோ கோளாறு என்று எழுதி அவளை இறக்க வைத்து நாவலை முடித்து விடுகிறார். என் கருத்தின் படி கொரே-பாய்ரேவின் முடிவு கூட சுமையை இறக்கும் முயற்சி தான். நிகிலேஷிற்கு அடிபட்டு விட்டது; அமூல்யா? அவனது நிலையைப் பற்றி ஒரு முழு வாக்கியம் கூட இல்லை. ‘அவனை மார்பில் சுட்டார்கள்; அவன் இனி இல்லை.’ தத்துவம் மேலோங்கி இருக்கும் இந்த நாவலுக்கு இப்படி ஒரு இறுதி வரியா? ‘அவன் முடிந்து விட்டான்’ என்று எழுதி தன் ஆயாசத்தை ‘அப்பாடி, நாவல் முடிந்தது’ என்று அவர் போக்கிக் கொண்டாரோ? ஜோகாஜோக் ஒரு முழுமையடையாத நாவல் என்று பல விமர்சகர்கள் நம்பினார்கள். சார் அத்யாய் நாவலின் இறுதியில் இன்னும் சில பக்கங்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆமாம், எல்லா நாவல்களும் ஏன் யாரோ ஒருவரின் இறப்பில் முடிய வேண்டும்?
விந்தையானது, ஆம் உண்மையிலே விந்தையானது இது- தாகூரின் பல நாவல்களில் வரும் தம்பதிகளுக்கு குழந்தை கிடையாது. சோக்கேர் பாலியில் ஆஷா- மஹேந்த்ரா, கோராவில் ஆனந்தமயீ (அவள் கணவனின் முதல் மனைவியின் மகன் இருக்கிறான் என்ற போதிலும்), கொரே-பாய்ரேவில் நிகிலேஷ்-பிமலா, தூயீ போன், மாலோன்சோவிலும் இதே நிலைதான். சதுரங்காவில் ஸ்ரீபிலாஸ் தாமினியைத் திருமணம் செய்து கொள்கிறான்; இரு வசந்தங்கள் வருகின்றன; இல்லற சுகமோ, குழந்தைகளோ இல்லை. ஜோடாசாங்கோவில் பெரும் குடும்பத்தைச் சேர்ந்த தாகூர், குழந்தையின்மையை ஏன் கையாண்டர் என்ற வியப்பு ஏற்படுகிறது.
முன்பு படிக்கும் இன்பத்திற்காக நாவல்களைப் படித்தவன் இப்போது விமர்சனக் கோணத்தில் அவற்றைப் படித்தேன். ஆனால், அடிப்படையில் நான் விமர்சகன் அல்ல, வார்த்தைகளின் காதலன். இப்போது எனக்கு கடப்பாடுகள் அதிகம். நான் 12 நாவல்களையும் தொடர்ந்து படிப்பேன் என்பதையே நான் நம்பவில்லை. ஆனால், கொல்கத்தா, தில்லி, ராஜஸ்தான், சாந்தி நிகேதன் என்று செல்லும் இடமெல்லாம் இப்புத்தகங்களை தூக்கிச் சென்றேன். சில இடங்களில் செய்தித்தாள்களில்லை. இரவு தூங்கும் வரை படிப்பேன்; காலை விழித்தவுடன் தொடர்வேன். முடிக்காத நாவலின் சில பக்கங்களைப் படிப்பதற்காக, சில இடங்களில் கூடுகையிலிருந்து எழுந்து சென்று விடுவேன். அனைத்துக் கதைகளை அறிந்திருந்த போதிலும், ஒரு பக்கத்தைக் கூட தவறவிடவில்லை நான். உண்மையாகவே கதைகளால் ஈர்க்கப்பட்டு என்னுடைய மகிழ்ச்சிக்காகவே நான் அவற்றைப் படித்தேன். சாந்தி நிகேதனில் அமர்ந்து படிக்கும் சமயத்தில் இந்த வீதியில் அவர் நடந்திருப்பாரா, அந்த மூலையில் அமர்ந்து அத்யாயங்களை எழுதியிருப்பாரா என்று நான் வெளியே உற்றுப் பார்ப்பேன். அவரது விரிந்த மனித நேயம் ஒவ்வொரு பக்கத்திலும் ஒளிர்கிறது. அனைத்தையும் ஒருங்கே படிக்கையில் அவர் முதன்மையாக ஒரு அழகியலாளர், அன்பு உபாசகர் என உணர்ந்தேன். காதலின் இன்பமும், துன்பமும் அவர் எழுத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. ஆனால், அவருக்கு உலகளாவிய கோணமும் இருந்திருக்கிறது. ஒவ்வொருவரும் சுய மரியாதையுடனும், கௌரவத்துடனும் வாழும் மதச் சார்பற்ற இந்தியாவை விழைந்தார் அவர். முஸ்லீம்களைப் பற்றி தன் பல நாவல்களில் அவர் எழுதினார். கோராவிலும், கொரே-பாய்ரேவிலும், சதுரங்காவிலும் எளிய நட்பின் வழியாக மனிதனை இணைக்க முயற்சித்தார். அவருடைய தேச மக்கள் நாம். இன்றைய தலைமுறையைச் சேர்ந்த நாம் அவரது விருப்பங்களைப் பின்பற்றவில்லை, அவரது கோட்பாட்டை ஏற்கவில்லை. ஜாதி, சமய வன்முறைகளும், கீழ்மையும், பொறாமைகளும் கொண்ட சமூகமாகத் தான் இருக்கிறோம். எனினும், அவரது நாவல்களைப் படிக்கும் போது சில நேரங்களில் சுய அறிதல் வருகிறது. சில நாட்களுக்கு வேறு எதையும் படிக்க வேண்டாமெனத் தோன்றுகிறது.
https://www.parabaas.com/rabindranath/articles/pSunil_novels.html மே 7, 2020.