வங்கச் சிறப்பிதழ்: அறிமுகம்

கலைச் செல்வங்கள் எங்கிருப்பினும் அவற்றைக் கொணர்ந்திங்கு சேர்ப்பது என்ற பணியில் சொல்வனம் எடுத்திருக்கும் முக்கிய அடுத்த படி இந்த வங்கமொழிச் சிறப்பிதழ். பிறமொழிப் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு வரும்போதிலும் ஒரே மொழிக்காக ஓர் இதழைக் கொண்டுவருவது இதுவே முதல் முறை. தொடக்கத்தில் வங்காள மொழியைத் தேர்ந்தெடுத்த காரணத்தை இன்னொரு அறிவிப்பில் விளக்கி இருக்கிறோம். அந்தக் காரணம் தவிர, அம்மொழியின் உலகத்தரம் வாய்ந்த இலக்கியம், இசை, கலை சார்ந்த படைப்புகள் இத்தேர்வின் பொருத்தத்தை உறுதிப்படுத்தி உள்ளன.

1800களிலிருந்தே அரசியலிலும் சமூகக் களத்திலும் கொந்தளிப்புகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்ட வங்காளம் பல துறைகளில் முன்னோடியாக விளங்க இவையே ஒரு உந்துதலாகவும் இருந்துள்ளன. ராஜா ராம்மோஹன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் போன்றவர்கள் அரசியல், சமூகம் போன்றவற்றில் மாற்றத்துக்காகப் போராடி பல சமூக சீர்திருத்தங்களுக்குக் காரணமாக இருந்துள்ளனர். இச் சீர்திருத்தக் கருத்துக்கள் அக்கால வங்காள இலக்கியத்திலும் பிரதிபலித்தன. ரவீந்திரநாத் தாகூர்,  சத்யஜித் ராய் போன்றவர்களின் படைப்புகள் சர்வதேச அளவில் பேசப்படுவதன் காரணம் அவர்களது படைப்பில் உள்ள பாசாங்கின்மையும் மானுட ஆன்மாவைக் குறித்த ஆழ்ந்த புரிதலுமே. மற்றைய இந்திய மொழிகளில் நாவல்கள் வெளியாவதற்குப் பல வருடங்கள் முன்பாகவே வங்காளத்தில்  நாவலிலக்கியம் தொடங்கிவிட்டது. பங்கிம் சந்திர சாட்டர்ஜி யின் துர்கேசநந்தினி 1865ல் வெளிவந்தது. அவரைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டின் திருப்பத்தில் ரபீந்திரநாத் தாகூர், மானிக் பந்தோபாத்யாய், தாராசங்க்கர் பந்தோபாத்யாய், சரத் சந்திர சாட்டர்ஜி போன்றவர்களின் எழுத்தில் அதன் வடிவம் முதிர்ச்சி அடைந்தது. வங்காள நாவல்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சம்பவங்களின் கோர்வையாக வருவதை விட்டு விலகி மனஓட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்தன.   பிபூதி பூஷன் பந்தோபாத்யாயின் பதேர் பாஞ்சலி (1929), அபராஜிதா (1933)  போன்றவை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் உருவாகிய நாவல்களே. ஆஷாபூர்ணா தேவி, மஹாஸ்வேதா தேவி போன்றோரின் படைப்புகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமன்றி எவ்வகையான சமத்துவமின்மைக்கும் எதிரான குரல் ஒலிக்கிறது. இலக்கிய வடிவங்களிலும் பலவகை புதுப் பாணிகளை முயற்சிக்கவும் இப்படைப்பாளிகள் தயங்கவில்லை . எதுகையில்லாத செய்யுள் (Blank Verse) நடையை மைக்கேல் மதுசூதன் தத் 1859லிலேயே முதன் முதலில் தன் கவிதைகளில் உபயோகித்தார். பிமல் கார் (1921-2003), சந்தோஷ் குமார் கோஷ் (1920-1985) போன்றோர் தம் புதினங்களின் உரைநடையில் பலவகைப் புது யுத்திகளைக் கையாண்டுள்ளனர். சுனில் கங்கோபாத்யாய் தொடங்கிய க்ரித்திபாஸ் என்ற இதழ் புதுத் தலைமுறை கவிஞர்கள் கவிதையின் கருக்கள், தாளங்கள் மற்றும் சொற்களில் புது வடிவங்களில் பரிசோதனைகள் செய்வதற்கான களமாகவே செயல்பட்டது.

1960களிலும் 70களிலும் பல தமிழ்ப் பத்திரிகைகளில் சரத்சந்திரர், ரவீந்திரநாத் தாகூர் போன்றவர்களின் கதைகள் மொழிபெயர்த்துத் தொடர்களாய் வெளியிடப்பட்டுப் பெரும் வாசக வரவேற்பைப் பெற்றிருந்தன என அறிகிறோம். இவ்விருவரின் அனைத்துப் படைப்புகளுமே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள போதிலும், பிபூதிபூஷன் பந்தோபாத்யாய், பங்கிம் சந்திரர் போன்றவர்களது பல படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த போதிலும் அதன்பின் வந்த வங்காள எழுத்தாளர்களைப் பற்றித் தமிழ் வாசகர்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லை. இவ்விதழில் அத்தகைய பல எழுத்தாளர்களின் சிறுகதைகளை வெளியிட்டுள்ளோம். இன்னும் சிலரது படைப்புகள் பற்றிய இலக்கிய விமரிசனங்களையும் நேர்காணல்களையும் பதித்திருக்கிறோம். முக்கிய சரித்திரப் போக்குகள் மற்றும் நிகழ்வுகள், சமூக அமைப்புகள், கலாசார அடையாளங்கள் மற்றும் பலதுறை சார்ந்த முக்கிய ஆளுமைகளைப் பற்றிய கதை, கட்டுரைகளை வெளியிட முயன்றுள்ளோம். வெளியிடுவது முதல் இதழில் என்பதால் பதிவுகளைக் கவனமாய்த் தேர்ந்தெடுத்துள்ளோம். இவை பனிப்பாறையின் முனைதான் எனினும் வாசகர்கள் இவர்களைத் தேடிப் படிக்க ஓர் ஆர்வத் தூண்டுகோலாக அமைவதே இதன் நோக்கம். தமிழைக் காட்டிலும் அதிக அளவில் மலையாளத்தில் வங்க இலக்கிய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாய் அறிகிறோம். மலையாளமும் தமிழும் வங்காளமும் தமிழும் அறிந்த வாசகர்கள் அவற்றை மொழிபெயர்ப்பார்களாயின் இப்பணியை அடுத்த தளத்துக்கு எடுத்துச்செல்ல அவை எங்களுக்கு உதவும்.

இவ்விதழில் வெளியிட்டுள்ள பல படைப்புகள், நேர்காணல்களின் மூலங்களை எங்களுக்குத் தந்து உதவிய மூத்த எழுத்தாளர் அம்பை அவர்களுக்கும் அவரது SPARROW  நிர்வாகத்துக்கும் எங்களது ஆழ்ந்த நன்றி. இவ்விதழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பல படைப்புகளை எங்களுக்குச் சுட்டிக்காட்டிய எழுத்தாளர் சுநீல் கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி. குறிப்பாக நம்பி கிருஷ்ணன் பல எழுத்தாளர்களை அடையாளம் காட்டியதோடு, வங்க மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்புகள் செய்வதில் பிரபலமாகி இருக்கும் அருணவ் சின்ஹாவைப் பேட்டிகண்டு அதை இந்த இதழுக்கு அளித்துள்ளார். இந்த இதழை வழிநடத்துவதில் இதர பதிப்பாசிரியர்களுக்கு உதவுவதோடு பல மொழிபெயர்ப்புகளைத் திருத்தி அமைக்கவும் நிறைய உழைத்திருக்கிறார். அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

இவர்களைத்தவிர, குறுகிய காலக்கெடுவில் படைப்புகளை மொழிபெயர்த்து உதவிய அனைத்துப் பங்களிப்பாளர்களின் அர்ப்பணிப்பால் இவ்விதழ் சாத்தியமாகி உள்ளது. நன்றி.

மூத்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களிடம் இந்தச் சிறப்பிதழ் தயாராவதைத் தெரிவித்தோம். உடனடியாக எங்களை ஊக்குவிக்கும் விதமாகத் தன் கட்டுரையைப் பகிர்ந்தார். அது தவிரத் தன் வலையகத்திலும் இந்த இதழுக்கான அறிவிப்பை வெளியிட்டு, அவரது வாசகர்களை எங்களுக்கு எழுதவைத்துள்ளார். அவருக்கு எங்கள் நன்றிகள்.

ஒரு முக்கிய அறிவிப்பு இந்த இடத்தில் அவசியமாகிறது. இதழுக்குப் போதிய படைப்புகள் கிட்டுமா என்ற கவலையோடு துவங்கினோம். ஆனால் வெகு சீக்கிரத்திலேயே பல நபர்கள் ஆர்வத்தோடு தாமாகவே எழுதி அனுப்பியவற்றோடு, நாங்கள் தொடர்புகொண்டு கேட்டவர்களும் துரிதமாகத் தம் பங்களிப்புகளை அனுப்பிவிட்டதால் கை நிறையப் பொக்கிஷங்களோடு இதழ் தயாரிப்பைத் துவங்கினோம். கடைசியில் இந்த 240ஆம் இதழை இதற்கு மேல் நீளமாகவோ, காத்திரமாகவோ ஆக்கினால் வாசகர்களுக்குப் படிக்கப் பொறுமை இராது என்று தோன்றியதால், நிறைய உருப்படிகளை அடுத்த இதழுக்கு ஒத்திவைத்திருக்கிறோம்.

ஆம், 241ஆம் இதழ் இன்னும் இரண்டு வாரங்களில் வெளிவரும். அதுவும் வங்க மொழிச் சிறப்பிதழாக, கிட்டத்தட்ட இதே அளவு விரிவானதாக வெளிவரும் என்று தெரிவிக்கிறோம். இதைத் தெரிவிப்பதில் எங்களுக்கு எத்தனை மகிழ்ச்சி என்று எளிதில் சொல்லிவிட முடியாது.

இறுதியாக, இத்தனை பேர்களும் தாமாகவே ஊர்கூடித் தேர் இழுப்பார்கள் என்பது தமிழ்நாட்டு எழுத்தாளர் / வாசகர்கள் நடுவே வங்க இலக்கியத்தின்மீது நிறையப் பற்று இருப்பதையே காட்டுகிறது. இதன் விளைவாக, இதழைத் தயாரிக்க எத்தனை வேலை, எத்தனை உழைப்பு – ஆனால் அவை எல்லாம் பளுவாகத் தெரியவில்லை, பாடாகத் தோன்றவில்லை. மாறாக உற்சாகமாக இருக்கிறது. இறுதி உணர்ச்சியாக அதிசயிப்புதான் எங்கள் அனைவருக்கும் கிட்டி இருக்கிறது.

இவ்விதழ் பற்றிய உங்கள் மறுவினைகளையும் வங்காள மொழியில் இன்னும் நாம் அறிய வேண்டியவர்கள் பற்றிய உங்கள் ஆலோசனைகளையும் மொழிபெயர்ப்புகளையும் பெற ஆவலாக உள்ளோம். இது ஒரு தொடரும் பணியின் முதல் அடியே. தொடர்ந்து இந்திய மொழிகளின் சிறந்த படைப்புகளையும் படைப்புகள் பற்றிய எழுத்துகளையும் வெளியிட சொல்வனம் ஆர்வமாக உள்ளது.

**

இந்த இதழில்:

கட்டுரைகள் 

  1. சிற்றடி: ஏன் இந்த முயற்சி? – மைத்ரேயன்
  2. தாகூரின் கூப்பிய கரங்கள் – எஸ். ராமகிருஷ்ணன்
  3. நீலகண்டப் பறவையைத் தேடியவர் – அம்பை
  4. இலக்கியமும் ரசகுல்லாக்களும் – நம்பி கிருஷ்ணன்
  5. பொன்னுலகின் வேடிக்கைகள் – கோகுல் பிரசாத்
  6. கனன்றெரியும் நீர்வெளி – எம். நரேந்திரன்
  7. மரணத்தின் பல வண்ணம் – கா. சிவா
  8. நான்கு சுவர்களுக்குள் விரியும் அகாலம் – நரேன்
  9. சத்யஜித் ரே இயக்க நினைத்த ரவிஷங்கர் – இரு கலைஞர்கள்: ரா. கிரிதரன்
  10. மகாஸ்வேதா தேவியின் படைப்புலகம் – சரவணன் மாணிக்கவாசகம்
  11. காளியின் குழந்தை ராம்பிரசாத் – ஜடாயு
  12. பக்கிம் + பாரதி = பரவசம் – குமரன் கிருஷ்ணன்
  13. அபத்த நாடகத்தின் கதை – கமல தேவி
  14. வங்க இலக்கியத்தின் சிலமுகங்கள் – மீனாக்ஷி பாலகணேஷ்

கதைகள் 

  1. தொலைந்துபோன புயல் – ஜகதீஷ் சந்திர போஸ்
  2. ரத்தப் பாசம் – மாணிக் பந்தோபாத்யாய
  3. ஹீங்க் கொச்சூரி – பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய்
  4. ரூபா – ஹுமாயுன் அஹமத்
  5. பத்து ரூபாய் மட்டும் – பனபூல்
  6. காதலும் அந்தப் பைத்தியக்காரனும் – நபரூன் பட்டாச்சார்யா
  7. ஆத்மஜன் – சுசித்ரா பட்டாச்சாரியா
  8. தன்னிரங்கல் – ஆஷாபூர்ணா தேவி
  9. நான் கிருஷ்ணாவின் காதலன் – ஜெயந்தா டே
  10. படகோட்டி தரிணி – தாராசங்கர் பந்த்யோபாத்யாய்
  11. மின்னல் சங்கேதம் – பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய்

நேர்காணல்கள் 

  1. மல்லிகா சென்குப்தா
  2. ஏ நொதிர் துய் கினாரே துய் தொரொனி: நதியின் இருகரைகளில் இருபடகுகள் (அருனவா சின்ஹா நேர்காணல்) – நம்பி கிருஷ்ணன்
  3. வி. ராமஸ்வாமி
  4. மேதையுடன் ஒரு நேர்காணல் (ரித்விக் கடக் அவர்களைப் பிரபீர் சென் எடுத்த பேட்டியின் தமிழாக்கம்.)

முன்னுரைகள்

  1. நீலகண்டப் பறவையைத் தேடி முன்னுரை – நிகிலேஷ் குஹா
  2. தன் வெளிப்பாடு முன்னுரை – சரோஜ் பந்த்யோபாத்தியாய்

மொழிபெயர்ப்பு கட்டுரைகள் 

  1. புத்தெழுச்சி இயக்கத்தின் ஆவணக்காப்பகங்கள்: வங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும் – தீபேஷ் சக்ரபர்த்தி
  2. என்றும் புதிய புதுமையான தாகூரின் நித்திய ஒளி! – எம்.என். குண்டு
  3. விஷ்வ சாந்தி – சுனீல் கங்கோபாத்யாய்
  4. சத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட ஒப்பு முப்படத் தொகுப்பு – எரிக் நெஹர்
  5. கம்யூனிஸப் பொன்னுலகில் அகதிகளுக்கு இடமில்லை – தீப் ஹல்தர்

கவிதைகள் 

  1. ஜீபனானந்த தாஸ் கவிதைகள்
  2. ஐந்து கவிதைகள் – நவநீதா தேவ் சென்
  3. கிருஷ்ண பாசு கவிதைகள்
  4. காஜி நசருல் இஸ்லாம் கவிதை

பொது

  1. கல்கத்தா புத்தகக் கண்காட்சி 2020 – கண்ணன் சுந்தரம்
  2. 20ஆம் நூற்றாண்டின் வங்காளப் பத்திரிகைகள்: புகைப்படத் தொகுப்பு
  3. சர்ச்சில் இந்தியாவை எப்படிப் பட்டினிபோட்டார்! – சௌதிக் பிஸ்வாஸ்
  4. தமிழில் வங்க எழுத்துகள்
  5. பதிப்பாசிரியர் குறிப்பு (வங்க மலருக்கான அறிமுகம்)

வழக்கமான தொடர் கட்டுரைகள்

  1. பரோபகாரம் – சுந்தர் வேதாந்தம்
  2. யோகம் இந்துக்களுடையதா? – கடலூர் வாசு
  3. சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – ரவி நடராஜன்

5 Replies to “வங்கச் சிறப்பிதழ்: அறிமுகம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.