யோகம் இந்துக்களுடையதா எனும் கேள்வியின் முகமதிப்பு என்ன?

கடலூர் வாசு

கோன்ராட் எல்ஸ்ட்டின் ஹிந்து தர்மமும் அதன் கலாச்சாரப் போர்களும் – 6ஆம் அத்தியாயம்

முன்னுரை:

மதச்சார்பற்றவர்களின் திட்டத்தில் ஒரு முக்கியப் பகுதி இந்து மதத்தைக் கீழ்மைப்படுத்துவதாகும். இந்து சமுதாயத்தில் காணப்படும் தீமைகளுக்கும் தீமைகளாக எண்ணப்படுவதற்காக இந்து மதத்தைப் பழித்தலும் நல்லவைகளையும் நல்லவைகளாக எண்ணப்படுபவைகளின் சம்பந்தத்தை உடனடியாக இந்து மதத்திலிருந்து கழித்துவிடுதலும் இவர்களின் தொழிலாகும். யோகம் மேற்கத்திய நாடுகளால் அணைத்துக் கொள்ளப்பட்டதனால் அது இந்து மதத்திற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துவிடுமோ என்ற பயத்தினால் இவ்விரண்டிற்குமுள்ள உறவை முறிப்பதில் நிறைய முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கலாசாரப் பறிமுதல் எனும் விவாதத்தில் முக்கியமான அம்சம், யோகம் இந்துக்களுடையதா என்பதாகும். இந்த விவாதம் சூடேறியதற்குக் காரணம் மேற்கத்தியர்கள், யோகத்திற்கும் இந்து மதத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை; அதனால் இந்துக்கள் பாத்தியதை கொண்டாடுவதோ யோகத்தை மாற்றியமைப்பதை தடுப்பதோ கூடாது என்ற அழிச்சாட்டியம்தான். இதற்குப் பதிலடியாக, அமெரிக்க இந்துக்கள் அமைப்பு “யோகத்தை நம்மிடம் மறுபடி பிடுங்கிக் கொள்ளுங்கள்” என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளது.

இந்த விவாதத்தில் யோக சம்பந்தமான வரலாறு பற்றிய பெருநடைக்கு முக்கியக் காரணம் யோகம் எக்காலத்திலும் இந்துக்களுடையதே அன்று என்று நிரூபித்துவிட வேண்டும் என்ற மேற்கத்தியர்கள் பிடிவாதம்தான். திருமலை கிருஷ்ணமாச்சாரியாரால் உருவாக்கப்பட்ட நவீன தோரணை யோகம், டேவிட் கார்டன் ஒயிட், மார்க் சிங்கிள்டன் என்ற இருவரால் இந்து சம்பிரதாயத்தைவிட ஆங்கிலேயப் பட்டாளக்காரர்களின் தினசரிப் பயிற்சியையே அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று அடித்துக் கூறியுள்ளனர். ஆனால், தோரணை யோகம் 11ம் நூற்றாண்டுக் காலத்திலிருந்தே உள்ள ஹத யோகத்தின் தொகுதிகளைக்கொண்டே அமைக்கப்பட்டுள்ளது. ஹத யோகமும் 4ஆம் நூற்றாண்டு முதல் புழங்கிவரும் குண்டலினி சக்தித் தடுப்பை முதுகெலும்புப் பகுதியிலிருந்து விலக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட தோரணைப் பயிற்சியும் மூச்சுப் பயிற்சியாகும். இப்பயிற்சிகளுமே, ஜோசப் நீதாம் என்பவரின் ஆராய்ச்சியின் பிரகாரம், 2,500 வருடங்களாக வழக்கத்திலுள்ள சீன மருத்துவத்தைச் சார்ந்த “உட்புற ரசவாதம்” (Internal alchemy) பயிற்சிகளை ஒட்டியே அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது. ஆகவே குண்டலினியும் இந்துக்கள் சீனர்களிடமிருந்து பறித்த கலாசாரம்தான் எனச் சுட்டிக்காட்டுகின்றனர்

இதுபோன்ற, தலைப்புகளுக்கு உகந்த வண்ணமயமான செய்திகள் எல்லாம் கி. மு. 2,500 ஹரப்பா காலத்திலிருந்தே இருந்துவரும் யோகத்தின் பிற்சேர்க்கைகள் என்பதை நாம் மறக்கலாகாது. ஹரப்ப காலத்து முத்திரைகள் யோகிகள் தியானத்தில் ஆழ்ந்திருப்பதைச் சித்திரிக்கின்றன. ஹத யோகப் பயிற்சிகள் இம்முத்திரைகளில் தென்படாவிட்டாலும் தியானத்தைப் பற்றிய குறிப்புகள் ஹரப்பா காலத்திற்கும் முந்திய பகவத் கீதையிலும் கதோபநிடத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. யோகத்தின் அடிப்படைப் பயிற்சியான தியானம் வேறெந்தக் கலாசாரத்திலும் காணமுடியாத ஒன்று அவ்வாறு இருந்தாலும் இந்துக்களுடையதுபோல் தொன்மை வாய்ந்ததன்று என்பது உறுதி.

இதை மழுப்புவர்கள் எழுப்பும் வாதம், தொன்மையான தியானம் இந்து கலாசாரத்தை சேர்ந்ததன்று; ஏனென்றால், இந்து என்ற சொல்லே அச்சமயம் இல்லை என்பதுதான். இது ஓரளவு உண்மையே. முகம்மதிய படையெடுப்புக்குப்பின், இந்தியர்களைக் குறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டப் பாரசீகச் சொல்லே இந்து என்பதாகும். அச்சொல், முகம்மதிய கலாசாரத்திலிருந்தும் பிற நாட்டினரின் கலாசாரத்திலிருந்தும் வேறுபட்ட, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் ஒரு கலாசாரத்தைத் தனிப்படுத்துவதற்காக ஒரு பிற்காலத்திய கலாச்சாரம் உண்டுபண்ணியதாகும். இச்சமயம், நிக் ஆலன் என்பவர், இந்திய – கிரேக்க இலக்கியங்களுக்கிடையே உள்ள நெருங்கிய உறவையும் மையக் கருத்துகளையும் பற்றிய நீண்டகாலக் கட்டுக் கதைகளை உடைத்தெறியும் கட்டுரையில் குறிப்பிடுவதை வெளிச்சப்படுத்துவது அவசியமாகிறது. அது என்னவென்றால், யோகப் பகுதிகள் இந்துக் காவியங்களில்தான் உள்ளன; கிரேக்க காவியங்களில் இல்லவே இல்லை என்பதாகும். (Indo-European origins of Yoga; International Journal of Hindu Studies 2(1) 1-20;1998.)

இந்து கலாசாரத்திற்கும் யோகத்திற்கும் உள்ள இணைப்பு மறுக்கமுடியாத உண்மையாகும். ஆனால் அது பிற கலாசாரங்களைச் சேர்ந்தவர்கள் உபயோகிக்கக் கூடாது என்ற பொருளுடையதன்று. மறுபிறவிக் கோட்பாடு, யோகத்தில் ஊறித் திளைத்தவர்கள் தங்களது மறுபிறவியில் மற்றொரு கலாசாரத்தில் பிறந்தாலும் யோக வழிகளையே பின்பற்றுவார்கள் என்கிறது. இதனால்தான் இந்து, புத்த ,சீக்கிய, லிங்காயத் வகுப்புகளைச் சார்ந்த யோக ஆசிரியர்கள் எவ்விதத் தயக்கமுமுமின்றி வெளிநாட்டினரைச் சீடர்களாக ஏற்றுக்கொள்வதுடன் வெளிநாடுகளுக்கும் சென்று அந்நாட்டினரின் உணர்வுகளுக்கேற்றவாறு யோகத்தை மாற்றியமைத்து அதனை பயில்விக்கிறார்கள். இச்சீடர்களில் பலர் சிறந்த ஆசான்களாகவும் விளங்குகின்றனர். பல நாடுகளில் யோகத்தை உள்நாட்டுப் பயிற்சியாக மாற்றுவது மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது யோக ஆசிரியர்களின் மனதிற்கு மேற்கத்திய யோகம் ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடையேயும் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த இந்தியர்களிடையேயும் இது பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது.

இதன் காரணம், மேற்கத்தியர்களின் “யோக ஜீரணத்தால்” (ராஜிவ் மல்ஹோத்ரா இட்ட பெயர் ) யோகமும் அது வளர்ந்த இந்திய சூழலும் மதிப்பையும் மரியாதையையும் இழந்துவிட்டன என்ற எண்ணம்தான். மதிப்பிழந்ததின் காரணங்களில் சில; விழிப்புணர்வைத் தூண்டும் யோகத்தை மனோவியாதி சிகிச்சைக்கும் (கடன் வாங்கிய இந்திய யுக்திகளையும் நுண்ணறிவு மார்க்கங்களையும் உருமாற்றிக் கையாளுதல்), சிற்றின்பத்துடன் சேர்ப்பதும் (நிர்வாண கோல யோகம்), ரத்த அழுத்தம், தளர்வு, கவன அதிகரிப்பு போன்ற சாதாரண விஷயங்களுக்கு உபயோகப்படுத்தலும் ஆகும். யோகத்தின் இந்துப் பாரம்பரியத்தை அவமதிப்பது எவ்வாறென்றால் யோகத்தின் சம்ஸ்க்ருதப் பெயர்களை மாற்றியமைத்தல், தத்துவப் பின்னணியைப் புறக்கணித்து இந்துக்களல்லாதவர்களின் உலக நோக்கை யோகத்திற்கு அர்ப்பணித்தல். (கிருத்துவ யோகம்.) யோகத்தின் உரிமையைக் கோரும் இந்துக்கள், யோகம் எங்களுடையதன்று என்று கோரும் கிருத்துவர்களுடனும் முஸ்லீம்களுடனும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.

யார் வேண்டுமானாலும் விமானத்தில் பறக்கலாம். விமானப் பயணம் ரைட் சகோதரர்களின் நாடான அமெரிக்காவின் தனியுரிமை அன்று. ஆனால் விமானம் அமெரிக்காவின் கண்டுபிடிப்பு என்பதை மாற்ற இயலாது. மீண்டும் மீண்டும் கூறவேண்டிய ஒன்றில்லை. ஆனால் மறுக்கக்கூடியதுமில்லை. யோகம் இந்துக்களின் பாரம்பரியம் அன்று என்று மீண்டும் மீண்டும் மறுப்பதுதான் யோகத்தின் தற்போதைய நிலை என பல இந்துக்கள் எண்ணுகின்றனர். யோகம் இந்துக்களுடையது என்று கூறுவது நியூட்டனின் புவியீர்ப்பு விதி கிருத்துவர்களுடையது என்பதைப் போன்றது என்ற முதன்மையான யோகி, ஜக்கி வாசுதேவின் உறுதியான சொற்கள் யோகத்தின் ஜீரணத்திற்கான ஒரு சறுக்குச் சரிவு என்றே கருத வேண்டியுள்ளது. இந்த ஒப்பீடு ஓர் அடிப்படை வித்தியாசத்தைக் காணத் தவறுகிறது. இயற்பியல் விதிகளின் கண்டுபிடிப்பிற்கும் கிருத்துவப் பின்னணிக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. உதாரணமாக ஆர்க்கிமிடிஸ் விதி, யூக்ளிட் தேற்றங்கள், இந்திய எண்கள், சீனாவின் காந்தக் கண்டுபிடிப்பு ஆகியவற்றைக் கூறலாம். ஆனால், யோகத்தின் கண்டுபிடிப்பு ஒரு சில கலாசாரங்களுக்கே உரியது. கிருத்துவ மதத்திற்கு முரண்பட்டதுமாகும். ஹத யோகத்தை ஒரு உடற்பயிற்சியாக வேண்டுமானால் அம்மதம் ஒப்புக்கொள்ளுமே தவிர, முக்தியை ஞான ஸ்நானம், இயேசுவின்மேல் நம்பிக்கை ஆகியவற்றின் மூலம்தான் பெறமுடியும். அது யோகப் பயிற்சியினால் புலப்படும் ஒருவித உணர்வினால் அன்று என்று அடித்துக்கூறும்.

எனவே, யோகத்தின் தற்போதைய நிலைமை இதுதான்: மூட சுவாமிகள், மேற்கத்தியப் புலி, யோகம் என்னும் இந்துக்களின் ஆட்டைக் கொன்று தின்று தன்னை வலிமைப்படுத்திக்கொள்ளும் ஜீரண முயற்சியை வரவேற்கிறார்கள். இதன் காரணம், பிரித்தறியும் திறமையற்ற இவர்கள், மேலைநாட்டினர் தங்களது பொருட்களின்மேல் காட்டும் ஆர்வத்தினால் மகிழ்ச்சியுறுவதே ஆகும். சில இந்துக்கள் யோகத்தின் கலாசாரப் பறிமுதலைக் கண்டித்தால் உடனே பல சக இந்துக்கள் மேலை நாட்டினரை ஆதரிக்கவும் அவர்களுடன் ஒத்துழைக்கவும் செய்கின்றனர்.

எனது முடிவு திட்டவட்டமானதன்று. வரலாற்றுக் கண்ணோட்டத்தில் யோகத்தின் மூலம், தற்சமயம் இந்துக்களாகக் கருதப்படுவர்களுடையதே என்பதை மறுக்க முடியாது ஆனால், இந்த உண்மை மட்டுமே உலகளாவிய பரிணாமத்தைக்கொண்ட யோகத்தை மேற்கத்திய நாடுகளிலும் பிற கலாசாரங்களிலும் பரவுவதைத் தடுத்து நிறுத்த இயலாது. யோகத்தின் உண்மையான நோக்கத்தை மேலை நாட்டினர் புரிந்துகொண்டு, யோகத்தின் மூல வேர்களில் கவனத்தைச் செலுத்தினால் அதன் இந்துப் பாரம்பரியத்தை அறிவர். இப்பிரச்சினையும் முடிவுறும்.

(Talk by the author in Ghent, Belgium on the occasion of the first UN yoga day, celebrated worldwide on 21 June 2014.)

Series Navigation<< சர்வதேச யோகா நாளில் ‘ஓம்’ சின்னம் இடம்பெற்றதா? வெளியேற்றப்பட்டதா?கோன்ராட் எல்ஸ்ட்டின் இந்து மதமும் அதன் கலாசாரப் போர்களும் – ஏழாம் அத்தியாயம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.