கா. சிவா

உலகப் பேரிலக்கியங்களுக்கு இணையாக வைக்கக்கூடிய இந்திய நாவல் என எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் கூறப்பட்ட நூல் தாராசங்கர் பந்த்யோபாத்யாய அவர்களின் ஆரோக்கிய நிகேதனம் நாவல். இந்நூல் வங்காள மொழியில் எழுதப்பட்டு த.ந. குமாரசாமி அவர்களால் சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டது, அவரின் பிற மொழி பெயர்ப்புகள் போலவே. நுண்ணிய மருத்துவ விவரங்களுடன் இருந்த இந்நூலை முதலில் படிக்கும்போது இது ஒரு ஆயுர்வேத மருத்தவரின் தன் வரலாற்று நூல் என்றே கருதத் தோன்றும். பின்னட்டையில் பார்க்கும்போதுதான் தெரியும் இவர் 65 நாவல்கள் எழுதியுள்ளார் என்பது. இந்த ஒரு நாவலைப் படித்து உணரவே பெரும் மெனக்கடல் தேவைப்படும்போது 65 நாவல்கள் மட்டுமல்லாமல் 53 சிறுகதைத் தொகுப்புகள் மேலும் கட்டுரை, பிரயாணக் கட்டுரைத் தொகுப்புகள் இவருடைய ஆக்கங்கள் என்பது நம் மனதில் ஏற்படுத்தும் பெரும் திகைப்பு எப்போதும் தீராது.
முதலில் வாசிக்கும்போது இரு மருத்துவ முறைகளுக்கான போட்டியும் அவை ஒன்றுக்கொன்று கொடுத்தும் கொள்வதும்தான் மையக்கரு என்றே தோன்றக்கூடும். சற்று விலகிப் பார்க்கும்போதுதான் இந்நாவல் வாழ்வின் நித்யமான மரணத்தைப் பற்றி எந்த உணர்வெழுச்சியும் இல்லாமல் பேசுகிறது என்பது புரியும்.
பிறப்பு என்பதே மரணத்தோடுதான் பிறக்கிறது என்பதை அறிந்தாலும் அந்த எண்ணத்தை மனதிற்குள் அழுத்தியபடி இல்லையில்லை தன் வாழ்வு நித்யமானது என்று வீறிட்டபடியே ஓடுகிறார்கள் மனிதர்கள். மரணம் என்பது பயப்பட வேண்டியதல்ல, இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டியது என்பதை பல்வேறு மரணங்களின் மூலமாக காட்டுகிறது இந்நாவல்.

எவருடைய மரணத்தைப் பற்றியும் கேள்வியுற்றவுடனயே அவரின் நினைவுகள் மனதில் வரிசையாக தோன்ற ஆரம்பித்து, அவர் இனி பூமியில் காணக்கிடைக்க மாட்டார் என்ற உண்மை மனதில் அறைவதால் கலங்கி துக்கம் ஏற்படுவதும், அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதும் நடக்கிறது. ஆனால், அந்த அளவிற்கு வருந்தவோ வேதனைப்படவோ பெரிதாக ஒன்றுமில்லை என்பதை தத்துவார்த்தமாக விளக்காமல் காட்சிகளாக விவரிக்கிறது இந்நாவல்.
எதிர்த்தரப்பிலும் ஏற்கத்தக்க சிறந்தவை இருக்கலாம், கால மாற்றத்தில் எல்லாமே புதிதாக உருமாறும் போன்றவற்றையும் இந்நாவல் விவரித்தாலும் மரணத்தினைப் பற்றிய தெளிவான புரிதலை உண்டாக்குவதுதான் இதன் முக்கியக் கூறெனக் கருதுகிறேன்.
எவ்வளவு அழுது புரண்டாலும் தவிர்க்க முடியாது என்பதை அறிந்தும் வனவிகாரி, தாந்து கோசல், மதியின் அம்மா போன்றவர்கள் மரணத்தை எண்ணி அஞ்சி அல்லலுறுகிறார்கள். அஞ்சுவதனால்தான் அது அத்தனை வேதனையளிக்கிறது என்பதை உணராமல்தான் அவர்கள் ஜீவன் மசாயை தூற்றிப் பழிக்கிறார்கள். இவ்வுலக வாழ்வு முடியப்போகிறது என்று தெரிவிப்பதன் மூலம் அவர்களுக்கென எஞ்சியிருக்கும் மிகச்சிறிய காலத்தில் அவர்களுக்கு விருப்பமானதை, முடிக்க வேண்டிய கடமைகளை செய்து கொள்வதற்கு ஏதுவாக இருக்குமென்பதற்காக ஜீவனால் கூறப்படும் தகவலை ஏற்று, போற்றுவதற்குப் பதிலாக, காலக்கெடு விதித்து விட்டதாக இவர்களும் ஊராரும் பிரத்யோத் டாக்டரும் இவர் மீது கடும் வெறுப்பு கொண்டு தூற்றுகிறார்கள்.
நாடி பிடித்துப் பார்க்கும் ஜீவன் மசாய், மிருத்ய தேவியின் வரவு இருக்கிறதா, எவ்வளவு தூரத்தில் அவள் உள்ளாள், எதன் மூலம் அவளின் வருகையை தடை செய்யலாம் அல்லது தள்ளிப் போடலாம் என்பதை தன் அனுபவத்தின் மூலமாகவும் மன ஓர்மையின் மூலமாகவும் உணர்ந்து நோயாளிகளுக்கு உரைக்கிறார். பயமில்லை எனக் கூறும்போது மகிழ்ந்து ஏற்பவர்கள், தப்ப முடியாது எனக் கூறும்போது இவர் மேல் விரோதம் கொள்கிறார்கள். இவர், தாமரை இலைபோல இரண்டையுமே மனதில் ஏற்றாமல், பற்றற்ற யோகியின் மனநிலையுடன் அடுத்த நோயாளியைப் பார்க்க விரைகிறார்.
பலப்பல மருத்துவர்களின் வெவ்வேறு விதமான மருத்துவ முறைகளை விவரிக்கிறது இந்நாவல். ஜகத் மசாயின் ஆத்மார்த்தமான முறை, ரங்கலாலின் அதிரடி முறை, ஹரேன் மற்றும் பிரக்யோத் போன்றோரின் யோசித்து தீர்மானமின்றி ஒவ்வொன்றாக சோதித்துப் பார்க்கும் முறை என எதையும் குறைவாகவோ உயர்த்தியோ பிடிக்காமல் கூறிச் செல்கிறார் ஆசிரியர்.
மரத்திலிருந்து கனி உதிர்வதுபோல மனித வாழ்வு நிறைவடைகிறது என உணவினாலோ நடத்தைகளினாலோ நோயுறும் முதியவர்களுக்கு வலியுறுத்தும் ஜீவன் மசாய், இளம் பிராயத்தில் நோய்வாய்ப்படும் பிள்ளைகளுக்காக வருந்தி வேதனையுறுகிறார். இவர்கள் இவ்வாழ்வில் பாவமோ பிழைகளோ இயற்றாதபோது ஏன் துன்பப்பட வேண்டுமென துடிக்கிறார். காலத்தின், பிறவிகளின் கணக்குகளைப் பற்றி யாரால் முழுதுணர முடியும். ஜீவன் மசாய் திகைத்து நிற்கும் இடம் இதுவே.
மூன்று பெருத்தவங்களை இயற்றி, கொடுக்கப்பட்ட பணியிலிருத்து விலகும் வரம் கேட்டாலும் மறுக்கப்பட்டு, பிரம்மனால் விதிக்கப்பட்ட பணியை இயற்றும் செவியும் விழியும் செயல்படாத மரணதேவதை, ஜீவன் மசாயின் உள்ளமெங்கும் நிறைந்துள்ளாள். இளவயதுக் காதலியாய் இருந்து, இவர் மனதில் ஆறாத ரணமாய் இம்சிக்கும் மஞ்சரி மற்றும் அத்தரின் மணம் போல இனிமையானவளாய் இல்லத்தில் நுழைந்து மனதின் உள்ளிருக்கும் ரணத்தைக் குத்தி வேதனையை கிளறிக் கொண்டேயிருக்கும் மனைவி ஆத்தர் பௌவின் குணங்களையும் நடத்தையின் பொருளையும் முழுதுணர முடியாத ஜீவனால் இந்த பிங்கல கேசத்துடன் உலவும் மரணதேவதையின் செயல்களை சரியாக கணித்து உணரவும் உரைக்கவும் முடிகிறது.

காது கேளாத, கண் தெரியாத பிங்கல கேசினி நாவல் முழுக்க வியாபித்துள்ளாள். மரணமென்பது அவள் இயற்றும் ஆடலல்ல. அவளைக் கொண்டு இயற்றப்படுவது என்பதை ஜீவன் மசாய் உணர்ந்தே உள்ளார். எனவேதான் அவள் நுழைய முயற்சிக்கும் இடத்தில் இவர் நுழைந்து அவளை நுழையவிடாமல் தடுக்கிறார். ஆனால், அவள் நுழைந்து விட்ட இடத்தில் காலத்தை உரைத்துவிட்டு இவர் விலகிவிடுகிறார். நாவல் முழுக்கவே பிங்கல கேசனிக்கும் ஜீவன் மசாயிக்குமான போட்டியையே காண்கிறோம். பிங்கல கேசினியின் புதுப்புது நோய் ஆயுதங்களுக்கு எதிராக ஆயுர்வேதம், கை வைத்தியத்தோடு அலோபதியையும் எதிர் ஆயுதங்களாக கையாளுகிறார். எதிராளியை மதிக்கத் தெரிந்தவர்களுக்கான இப்போட்டியில் இருவருமே சமபலத்துடனேயே உள்ளார்கள்.
ஸாது போல மரணத்தை இனிமையோடு எதிர் கொள்பவர்களையும் பார்க்கிறோம். அது வந்தே தீரும் எனும்போது பதட்டமின்றி அச்சமின்றி அமைதியாக மகிழ்வாக ஏற்பதைக் காண்பது மனதிற்கு இதமளிக்கிறது. இப்படி இலகுவாக ஏற்றுக் கொள்வதை விடுத்து அழுது ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மீது கோபத்தோடு பரிதாபமும் தோன்றுகிறது.
ஆயுர்வேதம், கைவைத்தியம், அலோபதி என்றழைக்கப்படும் ஆங்கில மருத்துவம் மூன்றும் செயல்படும் விதத்தையும் அவற்றின் எல்லைகளையும், போதாமைகளையும் கூறும்போது எந்தவொரு முறையையும் தாழ்த்தாமல், எதையும் உயர்த்தாமல் துலாமுள்ளென கூர்மையுடன் நின்று மிக நுணுக்கமாகவும் விளக்கமாகவும் விவரித்துள்ளதுடன், நாடி பார்க்கும்போது, அந்த துடிப்பின் ஒலியையும் அதன் தன்மைகளையும் அனாயசமாக வர்ணித்துள்ளார் ஆசிரியர்.
விதவிதமான மனிதர்கள். அவர்களுக்கு உண்டாகும் வெவ்வேறு விதமான நோய்கள். அவற்றை மட்டுப்படுத்தவும் தீர்க்கவும் போராடும் மருத்துவர்கள். நோயாளிக்கும் நோய்க்குமான போட்டி, மருத்துவர் உள்ளே வந்தவுடன் மருத்துவருக்கும் நோய்க்குமான போராக மாறுகிறது. இருவரில் யார் தீரரோ அவர் வெல்கிறார். மருத்துவர்களின் தீரத்தையும் அர்ப்பணிப்பையும் உவத்தலும் காய்தலுமின்றி காட்டியுள்ளார் தாராசங்கர்.
தான் வஞ்சம் கொண்டுள்ள மஞ்சரிக்கும், தன் மேல் வஞ்சம் கொண்டுள்ள ஆத்தர் பௌவுக்கும் இடையே சிக்கி அல்லாடியபடியே வாழ் நாள் முழுக்க பிங்கல கேசனியுடன் போராடியவர், அவளுக்கு தன்னை நிறைவோடு ஒப்புக் கொடுப்பதில் முடிகிறது நாவல்.
மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல, அதுவும் வாழ்வின் ஓர் அங்கம்தான் என்பதை உணரவைக்கும் இந்நாவலை வாசித்து முடிக்கும்போது மரணத்தைப் பற்றிய இதுவரையிருந்த பார்வை மாறி வாழ்க்கையே புதிதாகத் தெளிந்து வண்ணமயமானதாக ஒளிர்கிறது.
ஒளிரும் பட்டை தீட்டிய வைரம் போல பல்வேறு விதங்களில் வாசிக்கத் தக்க இந்நாவலில் இக்கோணம் இப்போது கண்ணில் தெரிகிறது. சிறிது இடைவெளிக்குப் பிறகு மற்றொரு கோணத்தில் வாசிக்க முடியும். எத்தனை முறை வாசித்தாலும் திரும்ப வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் எழும் என்று தோன்றுகிறது. வாசித்து முடிக்கும்போது மனதில் பெரும் நிறைவை உண்டாக்கும் நூல்களில் இது முதன்மையானது என்று ஐயமின்றி உறுதியாகக் கூறலாம். இந்நூலை அறிமுகப்படுத்திய என் ஆசிரியர் ஜெயமோகனுக்கு நன்றி.
முந்தைய பதிவுகள்:
One Reply to “மரணத்தின் பல வண்ணம்”