சுநீல் கங்கோபாத்தியாயின் ‘தன் வெளிப்பாடு’

மனித குணாதிசியங்களின் பரிபாலனங்கள் விசேஷமானவை. சில சமயங்களில் விபரீதமானவையும்கூட. பிறந்ததிலிருந்து அவன் தன்னுடைய குணங்களுடன் சமராடிக்கொண்டேயிருக்கிறான். அவற்றுடன் பிணைக்கப்படுவதும் துவேஷம் கொள்வதும் சுயத்தைக் கண்டடைதல் எனும் நேரீடு நோக்கிலேயே தீரம் கொள்கின்றன. சுயம் என்பதே தனக்கும் பிறருக்குமான ஒப்புமையில்தான் உருவாகிறது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தான் (சிறியது) – பிறர் (பெரியது) என்கிற வெவ்வேறு அளவிலான இரண்டு வட்டங்கள் வெட்டிக்கொள்ளும் போது தோன்றும் சிறிய மையப்பகுதியை சுயம் எனச் சொல்லலாம். இருவேறு நிலப்பரப்புகள் மோதுகையில் மலை எழுந்துவிடுவதைப் போல சுயம் பேருருக்கொண்டு நிற்கிறது. தன்னைப் பரிசீலனை செய்து தனித்தன்மையைப் பேண முற்பட்டவனுக்கு சுயத்தின் குணநலன்களிலுள்ள பொதுத்தன்மைகள் திடுக்கிடச் செய்கின்றன. அவனுடைய அகங்காரம் வதைபடத் தொடங்குகிறது. தனக்குக் கிடைக்கக்கூடியதும், தான் மட்டுமே பெறக்கூடியதுமான உண்மைகள் குறித்து அவனுக்குச் சந்தேகங்கள் எழுகின்றன. கடந்தகால வாழ்வின் கொதிநிலையிலிருந்து மீட்பே இல்லையா எனச் சோர்வடைகிறான். கணந்தோறும் தொடர்ந்துவருகிற இழிவை எண்ணித் துயருறுகிறான். இறுதியில், தன்னுடைய மன நீட்டத்தின் வரையறைகளுக்குப் பணிந்து போகின்றான். விரிந்து பரந்திருக்கும் வாழ்வின் மாயச் சுழலில் அப்போது இன்னொரு வட்டம் சேர்ந்திணைகிறது ‘மலையுச்சியில் அலைய ஆசைப்பட்டாலும் உன் கவனம் தரையில் இருக்கட்டும்’ என்கிற பாடத்தைப் புகட்டிவிட்ட களிப்பில் வாழ்க்கை நிறைவுகொள்கிறது.

இதற்கு இன்னொரு பக்கம் உண்டு. தம்மை சிறுமை செய்யும் வாழ்வை எள்ளலுடன் அணுகும் மனப்பான்மை. ஒருவிதமான நிராகரிப்புடனும் பொறுப்பின்மையுடனும் கேட்பாரற்றுத் திரியும் மனமறுந்த நிலை. சமூகம் நிலைநிறுத்தியுள்ள அடுக்குகளைக் கொஞ்சம் கலைத்துப் பார்க்கிற ஆர்வமும் விளையாட்டுத்தனமும் ஊடாடும் எக்காள அறைகூவல். கட்டற்ற சுதந்திரம் ஒன்றே அதன் இலக்கு. அதனை நோக்கி வீறுநடை போட வேண்டுமெனில் மற்ற மனிதர்களின் சம்பிரதாயப் பழக்கவழக்கங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். சமூக விதிகள் அளிக்கிற பாதுகாப்பை நெட்டித்தள்ளும் நெஞ்சுரம் வேண்டும். தனது ஆழ்மனம் உண்மையிலேயே வேண்டுவது சமரசமற்ற தேடலா அல்லது தனக்கு ஒவ்வாத விதிகள் மீது உண்டாகும் எதிர்ப்புணர்வின் பாசாங்கா என்பதைப் பிரித்தறியும் தெளிந்த நல்லுள்ளம் வேண்டும். எதற்காக இத்தனை முன்னெச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டுமென்றால் எதிர்ப்படும் யாவற்றையும் உடைத்தெறியும் போது நேர்கிற மனநடுக்கம் சாமானியர்க்கு உரியதல்ல. ‘நான் யார்?’ என்பதை முன்னிறுத்தி ஈடுபடுகிற காரியங்கள் அனைத்திலும் நம் நோற்றனை கொல்லும் சத்தியம் வீற்றிருக்கப் போகிறது. அதை கண்ணுக்குக் கண் சந்திக்கும் துணிச்சல் இங்கே யாருக்கேனும் இருப்பது போலத் தெரியவில்லை. இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. இவ்வுலகில் விடுதலைக்கான யத்தனம் என்பது சபிக்கப்பட்ட ஒற்றை வழிப்பாதை. ஏதோவோர் ஏகாந்தப் பகற்கனவின் இலயிப்பில் வாழ்க்கையைப் பணயம் வைத்து விளையாடிவிட்டு திரும்பிவர முடியாது. ஏனெனில், இவ்வாழ்வும் உலகமும் கொஞ்சம் சிடுமூஞ்சித்தனமானது. அவை நமது மடத்தனங்களை சற்றும் பொறுத்துக்கொள்வதில்லை.
தனக்கும் சமூகத்திற்கும் பொருந்தாத குணங்களைக் களைந்து புத்தழகை அலங்கரிக்க முயலும் செயல்பாட்டின் இலட்சியமும் துடுக்குத்தனம் நிரம்பிய களியாட்டங்களின் இச்சையும், வழிமுறைகள் எதுவாகினும், விடுதலையடைவதற்காகத்தான். இவ்விடத்தில் ‘எது விடுதலை?’ என்கிற அடிப்படைக் கேள்வியைக் கேட்டுக்கொள்வது அவசியமானது. இந்தக் கேள்விக்குப் பன்னெடுங்காலமாக பலவிதமான விளக்கங்கள் எடுத்தியம்பப்பட்டிருப்பினும் இதுவொரு நவீன புதினத்தைப் பற்றிய விமர்சனக் குறிப்பு என்பதால் ‘பீட்’ கலாச்சாரப் பார்வையே இதற்கு நெருக்கமானதாக இருக்கும். ஓர் எதிர்கலாச்சாரமாகவும் வெறுமையை வெல்வதற்கான முன்னெடுப்பாகவும் 1960களில் தோன்றிய ஹிப்பி இயக்கத்தின் முதன்மை நோக்கங்கள் காலப்போக்கில் சிதைவுற்றன. அதன் குறைபட்ட வடிவங்களுக்கே உலகெங்கும் மவுசு கூடியது. இதுவொன்றும் புதிய விஷயமல்ல. மனிதகுல வரலாற்றில் எங்கும் எப்போதும் இப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது. மூலக்காரணிகள் சிக்கலானவை என்பதால் அவை சிறிய ‘எலைட்’ வட்டத்துக்குள் அடங்கிவிடுகின்றன. ஒரு மக்கள் இயக்கமாக அதனை முன்னெடுக்கும் போது நீர்த்துப்போன கோட்பாடுகளின் துணையுடனேயே பெருவாரியான ஆதரவைத் திரட்ட முடியும். காரணம் எளிமையானது. கடினமான விஷயங்களில் தங்களது தலையை முட்டிக்கொள்ள மக்கள் தயாராக இல்லை. அவர்களுக்கு எல்லாமே அருளப்பட வேண்டும், எந்தவிதமான மெனக்கெடலுமின்றி புரிந்துகொள்ளப்பட வேண்டும். வெல்லக்கட்டியைக் கொடுத்தாலும் மருந்தைத் திணித்தாற்போல தேமே என்றிருப்பார்கள். யாரேனும் அதைப் பொடிப்பொடியாகத் தூளாக்கி வாயில் ஊட்டிவிட மாட்டார்களா என எதிர்பார்ப்பார்கள். அனைத்திற்கும் மேலாக, எல்லாவற்றிலும் மக்களுக்குக் கொண்டாட்டம் வேண்டும். கொண்டாட்டம் தீர்ந்ததும் அவர்கள் அடுத்த பொழுதுபோக்கை நோக்கிச் செல்வார்கள். ஹிப்பி இயக்கத்திற்கும் அங்ஙனமே நேர்ந்தது. வேறு வழியின்றி, அது தன்னுடைய அத்தியாவசியச் சுமைகளை உதறியது. ‘பொறுப்புகளைத் துறப்பதையே’ தனது கோஷமாகப் பின்னாளில் வரித்துக்கொண்டது.
ஆங்கிலேயக் காலனியாதிக்கத்திற்குப் பிறகான சுதந்திர இந்தியாவிலும் ஹிப்பி இயக்கத்தின் மிதமான தாக்கம் எதிரொலித்தது. மிக எளிய வடிவில் அது நம்மை வந்தடைந்தது எனலாம். அதன் தீர்க்கமான தர்க்கங்களும் ஏட்டளவில் தேங்கிவிட்ட வாழ்க்கைக் கோட்பாடுகளும் நமது சூழலுக்கேற்ப வேறு முகமூடிகளை அணிந்துகொண்டன. படித்த நடுத்தர வர்க்கத்து இளைஞர்களிடையே அவை மோஸ்தராக விளங்கின. இக்காலகட்டத்தில் எழுதப்பட்ட நகர்ப்புறத்தை மையமாகக் கொண்ட இந்திய நாவல்களில் இத்தகைய இளைஞர்களின் சித்தரிப்புகள் மீண்டும் மீண்டும் இடம்பெறுவதைக் காணலாம். அவற்றில் இந்திய உளவியலின் பொதுப்போக்குகள் விரவியிருப்பதையும் துலக்கமாக உணர முடிகிறது. இவர்கள் அனைவருமே அறமீறலைக் கலகமாகக் கருதும் இளைஞர்கள். சின்னச் சின்ன சாகசங்களில் திளைப்பவர்கள். விட்டேற்றித்தனத்தைத் தங்களது சுபாவமாக முன்வைப்பவர்கள். கபடத்தனங்களுக்கு அஞ்சாதவர்கள். சமூக ஒழுங்குகளுடன் பிணக்கும் குடும்ப பாரங்களைச் சுமப்பதில் சலிப்பும் கொண்டவர்கள். ‘சமரசம் உலாவும் இடமே’ என்று சமூக அமைப்பைப் பற்றி கீழான எண்ணமுடையவர்கள். அப்படியென்ன பெரிய கலகத்தைச் செய்து சமூகத்தைத் துவம்சம் பண்ணிவிட்டார்கள் எனப் பார்த்தால் சிகரெட் புகைப்பதும் கஞ்சா இழுப்பதும் எவனையாவது வம்பிழுத்து தெருவில் கட்டிப்புரள்வதும் எவளையாவது ஒதுக்குப்புறமாகத் தள்ளிக்கொண்டுபோய் அவளது மார்பைத் தடவுவதும்தான் இவர்கள் ஈடுபடுகிற புரட்சிகரமான விஷயங்கள். இந்தச் சில்லறைக் காரியங்களைச் செய்ததற்கே சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு இறுமாப்புடன் திரிகிறவர்கள். பொதுப்பண்புகளை இடித்துரைக்கிற போர்வையில் எது போலி, எது பித்துநிலை எனத் தெரியாமல் சிக்கித்தவிக்கும் அனுதாபத்திற்குரியவர்கள்.

இதுபோன்ற இந்திய நாவல்களை வயதடைவு (coming of age) வகைமையென வகுப்பதற்கு எனக்குத் தயக்கமாக உள்ளது. முதற்காரணம், இதன் நாயகர்கள் எவரும் பதின்ம வயதினர் அல்லர். கல்லூரிப் பருவத்தைக் கடந்துவிட்டவர்கள். அன்றைய பொருளாதாரச் சூழலைப் பொறுத்து வேலை தேடிக்கொண்டோ, உறவினர்களின் வீட்டில் தஞ்சமடைந்து அவர்களது உபயத்தில் கைக்காசைப் புரட்டி ஊர் சுற்றிக்கொண்டோ, ஏதோவொரு கோஷ்டியில் சேர்ந்திசைந்து வெற்றுக் கோஷங்களை முழங்கிக்கொண்டோ, அனுதினமும் சோரம் போகிற வாழ்விலிருந்து தப்பித்துக்கொள்ள ஏங்குகிறவர்கள். மிக முக்கியமாக, மேற்குலகில் பதின்வயதின் நிறைவை வயதடைவுக்கான அளவுகோலாகக் கொள்கிறார்கள் எனில் நம்மூரில் அது இருபதுகளின் மத்தியாகவோ முப்பதுகளின் தொடக்கமாகவோ இருக்கிறது. இரண்டாவது காரணம், அந்த வயதை நெருங்கும்போது நமது பரிசுத்தங்களும் அப்பாவித்தனங்களும் பாழ்பட்டுவிடுகின்றன. அவற்றின் இடத்தை அர்த்தமற்ற குழப்பங்களும் நமது கனவுகளைப் பரிகாசம் செய்கிற நடைமுறைச் சாத்தியக்கூறுகளின் போதாமைகளும் ஆக்கிரமித்து ஆட்டுவிக்கின்றன. காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் நாணக்காதல் நிறைவணையாது கல்பொரு சிறுநுரை போன்ற காமம் எரிபுகத் தயாராகிறது. பதின்மத்தின் இரகசிய குறுகுறுப்புகளின் மீதான ஆர்வங்களை எத்தனையாண்டு காலம்தான் நீட்டித்து வைப்பது? வாழ்வின் ஊற்றுக்கண் திறப்பதற்கே முப்பது வயதுவரை காத்திருக்க வேண்டுமெனில் எப்படிப்பட்ட அவமானகரமான வாழ்க்கையை அவன் வாழ்ந்துகொண்டிருக்கிறான்? மெல்ல மெல்ல இந்த வாழ்வின்மீது ஏளனம் படியத் தொடங்குகிறது. உச்சிதங்கள்மேல் அவன் அவநம்பிக்கை கொள்கிறான். மங்கலான வெளிச்சத்தில் நிழலின் பிரம்மாண்டம் கவிகின்றது.
மேற்கூறியுள்ள எண்ணத் தொகுப்பை சு.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்த வங்க நாவலை வாசித்ததன் விளைவு என்பேன். வங்கத்தின் இலக்கியப் பரப்பில் சுநீல் கங்கோபாத்தியாயின் ‘தன் வெளிப்பாடு’ நாவலுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. தாகூரிலிருந்து தொடங்கும் வலிமைமிக்க எழுத்தாளர்களின் வரிசையில் விபூதிபூஷண், தாராசங்கர் பானர்ஜி போன்றோர் அதுகாறும் எழுதிவந்த மரபார்ந்த கதையாடல்களிலிருந்தும் நெஞ்சை உருக்கும் காவிய சோகங்களிலிருந்தும் அது தன்னை விடுவித்துக்கொண்டது. எல்லா வகையிலும் நவீனத்துவத்தின் மலர்ச்சியைத் தீண்டியது. பின்புலச் சுமைகளைக் கொஞ்சம் இறக்கிவைத்துவிட்டு புதுமையை நோக்கி தன் பார்வையைப் பதித்தது. அது கடந்தகால காலிப் பாத்திரங்களைத் தேவையின்றி உருட்டிக்கொண்டிருந்து டமாரம் அடிக்கவில்லை. துயரைக் கடைந்தெடுத்து சவச்சவக்கவில்லை. அதன் விவரிப்பில் கிஞ்சித்தும் புலம்பல் இல்லை. அங்கொரு கால், இங்கொரு கால் என அலைபாயாமல் மிகுந்த கட்டுக்கோப்பான முதிர்ச்சியைக் கொண்டிருந்தது. நவீன மனங்களின் நூதனங்களைக் கடைவிரித்தபடி புத்துணர்ச்சியைப் பேணியிருந்தது. குறிப்பாக, இதில் இடம்பெற்றிருக்கும் மனிதர்களது கோணல் விநோதங்களையும் உணர்ச்சிப்பூர்வமான தடுமாற்றங்களையும் அணுகுவதில் செயற்கையான தீவிரம் ஏதுமில்லை. மாறாக, உயிர்த்துடிப்புள்ள இளமை விளையாடுகிறது. இந்த நாவலின் கதாபாத்திரங்களுடைய உள்ளக்கிடக்கையை வாசிக்கும்போதெல்லாம் எழுத்தாளர் ஆதவன் நினைவுக்கு வந்தவாறு இருந்தார். கசப்பை கேலியாக்கும் வித்தையில் கைதேர்ந்தவரல்லவா அவர்? ஒவ்வொரு பக்கத்தையும் முகம் மலர்ந்த விரிந்த புன்னகையுடன் கடந்துகொண்டிருந்தேன். சில இடங்களில் ‘அப்படியா?’ எனப் புருவம் உயர்த்தி முகஞ்சுழித்தேன். சில இடங்களில் என்னை நானே துக்கத்துடன் விசாரித்துக்கொண்டேன். சில இடங்களில் எனது அற்பத்தனங்களை எண்ணி வெட்கப்பட்டேன். எனது கோமாளித்தனங்களுக்கு நானே சிரித்துக்கொண்டேன். நான் என்னைக் கண்ணாடியில் கவலையுடன் நோக்கிக்கொண்டிருக்கையில் என் ஆடிப்பிம்பம் வெவ்வேறு கொணஷ்டைகளை மேற்கொண்டவாறு எனக்குப் பழிப்புக் காட்டிக்கொண்டிருந்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது. நான் சோர்வுற்று என் முகத்தை விலக்கிக்கொண்டேன். சர்க்கஸ் கூடாரத்தின் தனிமையில் ஒரு கேவல் ஒலி எழுந்தது. அது என்னுடையதா அல்லது என்னுடைய வேடங்களுள் ஒன்றினுடையதா? மருட்சியுடன் என் உள்ளக் குமுறல்கள் மோதிக்கொண்டன. வேடங்களைத் தரித்த மன வெளிப்பாட்டில் தகாதன வெருண்டன.

சுநீலின் நண்பன் சேகர் காணாமல் போய்விட்டான் என்கிற செய்தியுடன் இந்நாவல் தொடங்குகிறது. அந்தத் தகவலையும் சேகரின் தம்பி பரிதோஷ்தான் சுநீலிடம் தெரியப்படுத்துகிறான். அதைக் கேட்டு அவன் பதற்றப்படுவதில்லை. பரபரப்படைவதில்லை. விடிந்தும் விடியாத பொழுதில் மற்றவர் பிரச்சினையெல்லாம் தன்னிடம் வந்து சேர்கிறதே என்பதே அவனது முதல் கவலையாக இருக்கிறது. மழை தூறிக்கொண்டிருக்கும் இளங்காலை வேளையில் இரண்டாவது தேநீரைக்கூட நிம்மதியாகக் குடிக்க முடியாத வாழ்வை எண்ணி அவன் விசனப்படுகிறான். மேலும், சேகரைப் பற்றி சுநீலுக்கு நன்றாகத் தெரியும். தன் வாழ்க்கையை வெறுத்து எங்கேயாவது சன்னியாசம் சென்றுவிடக்கூடிய இயல்பினன் அல்ல அவன். இருவரும் சேர்ந்து கல்கத்தாவின் இருண்ட மூலைகளில் புழங்கியிருக்கிறார்கள். கண்ணியமான ஆட்கள் செய்யத் தயங்குவதையெல்லாம் அப்பியாசமாகப் பழக்கியிருக்கிறார்கள். அதனால், சர்வ நிச்சயமாக ஏதாவதொரு வேசியின் வீட்டில்தான் சேகர் பதுங்கியிருப்பான் என்று சுநீல் திடமாக நம்புகிறான். தனக்குரிய இடத்தைத் தேடிக் கண்டுபிடித்துக்கொள்வது சுநீலின் பிரச்சினை என்றால் தன்னுடைய இடத்திலிருந்து வெளியேறி வேறு எங்காவது தப்பித்துச் செல்லவேண்டிய நிர்பந்தம்தான் சேகரின் பிரச்சினை என்கிறார் ஆசிரியர். சுநீல் உத்தேசித்ததைப் போலவே வீட்டிலிருந்து சில நாட்கள் ‘லீவு எடுத்துக்கொண்டு’ வீணாவின் அரவணைப்பில் சேகர் கட்டுண்டு கிடக்கிறான் என்பதை நாம் பின்னால் அறிந்துகொள்கிறோம். இவர்கள் இருவரைத் தவிர அவினாஷ், சுவிமல் போன்ற சுநீலின் நண்பர்களது வாழ்வும் இந்த நாவலில் அவ்வப்போது மினுக்காட்டம் போடுகின்றது. காயத்ரி, மனீஷா, யமுனா, சரஸ்வதி, நூர்ஜஹான் ஆகிய பெண்களின் வாழ்வோட்டத்தை உரசிச் செல்கிறது.
கொஞ்சம் அறிவுஜீவிக் களையைக் கட்டமைத்துக்கொண்டு விதண்டாவாதங்கள் புரிந்தவாறு எல்லா மதிப்பீடுகளையும் தூக்கிக் கடாசுகிற சுநீலின் மனோநிலைக்குக் காரணமாயுள்ள பின்னணியை நாவலாசிரியர் விரிவாகவே எடுத்துரைத்து சுவை கூட்டுகிறார். அவன் கிழக்கு வங்காளத்தின் குக்கிராமத்திலிருந்து கல்கத்தாவிற்கு இடம்பெயர்ந்தவன். புதிய நகரத்தின் அச்சுறுத்துகிற முரட்டு இயல்புகளுக்கு அவன் தன்னை முழுமூச்சுடன் ஒப்புக்கொடுத்ததே ஒருவிதமான தாழ்வுணர்ச்சியின் வெளிப்பாடுதான். மேலும் மேலும் அமிழ்ந்து போவதன் வழியாக சிந்தையும் ஜீவனும் ஒன்றென ஆகி பிடிபடாத மர்ம சங்கதிகளைக் கைக்கொள்ளுதல். இதற்கான எதிர்விளைவு ஒன்றுண்டு. மிதத்தல் இலகுவானது. அமிழ்தல் நம்மை மூழ்கடிப்பது. அமிழுந்தோறும் நமது இருப்பின் சுமை அதிகரிக்கிறது. அந்தத் தாளவொண்ணா திரிபுநிலையில் எதன்மீதும் சட்டென விலக்கம் உண்டாகிவிடுகிறது. ஆனால், இந்த மன விலக்கம் தற்காலிகமானது. வெகுவிரைவில், கொண்டாட்டங்களுக்கும் உல்லாசங்களுக்கும் பிடிமானமாக அறியப்பட்டு வந்த நகரத்தின் ஜொலிஜொலிப்புகள் யாவும் நம்பிக்கையிழப்பின் அடையாளமாக உருமாறுகின்றன. நாம் அறியாததும் நமக்குப் புலப்படாததுமான மெய்ப்பாடுகளின் புதிர்த்தன்மை சினமூட்டுகிறது. அவற்றைப் பற்றி ஓயாமல் சிந்திக்கிறோம். விவாதிக்கிறோம். வேண்டுவனவற்றின் பட்டியல் பெருகிப் பெருகி இன்னும் இன்னும் கிட்டாதா என்று நாம் உக்கிரம் கொள்கிறோம். ஆழத்தைத் தொட்டு மீளும் தீர்மானத்தை எடுத்தபின் அத்தகைய மனப்பிளவிலிருந்து விடுதலையே இல்லை. ஆதலால், தெளிவின்மை மட்டுமின்றி தெளிவும்கூட சில சமயங்களில் குறிப்பிட்ட வரையறைக்குள் இருந்தால் நல்லது எனத் தோன்றுகிறது. அதீதமாக விவாதிக்கப்படுபவை அத்தனையும் அரைகுறையாகப் புரிந்துகொள்ளப்பட்டவையே. அவை தோற்றுவிக்கக்கூடிய பறட்டைத்தனமான குழப்பங்கள் பலவும் பலவீனமான அமைதியை எளிதில் குலைத்துவிடுகின்றன. ‘Peace is a fragile thing’ என்பதை நினைவில் இருத்திக்கொண்டே வாழ வேண்டியிருக்கிறது. அதுவே பின்னர் நம்மை சமாதானப்படுத்திக்கொண்டு நம்முடைய செயல்களுக்கு நியாயம் கற்பிக்க வழிவகுக்கும் நொண்டிச்சாக்காக மாறிவிடுகிறது.
சுநீலுக்குக் குற்றவுணர்ச்சி இல்லை என்பதே அவனது தடாலடிச் செயல்களுக்கும் முடிவுகளுக்கும் காரணம் என்பதை மீள் வாசிப்பில் கண்டுகொள்ள முடிந்தது. எத்தனையோ காலத்திற்குப் பிறகும் உள்ளூர மாசற்றவனாகவே அவன் வலம் வருகிறான். களவும் கற்று மறக்கும் மாண்பினன். அவனுடைய மனக்குரலின் ஏவல்கள் அனைத்துமே நடிப்பின் பாவனை வெளிப்பாடுகளே. விதவிதமான ஒப்பனைகளுடன் வாழ்வதென்பது ஒருகட்டத்தில் அவனுக்குச் சலித்துவிடுகிறது. கனவு, நம்பிக்கை, பற்று, கட்டுப்பாடு, காதல் என ஒவ்வொன்றாக இழந்துகொண்டிருக்கையில் இழப்பதற்கான வெறி மென்மேலும் அதிகரிக்கிறதே ஒழிய மட்டுப்படுவதில்லை என்பதைக் கண்டு அரண்டுபோகிறான். திரையை விலக்கி நிஜத்தை சந்திக்கத் தலைப்படுகிறான். தூய அன்பு ஒன்றே தன்னை நல்வழிப்படுத்தும் என்றெண்ணி சின்னப் பெண்ணான யமுனாவை காதலிக்கத் தொடங்குகிறான். குற்றவுணர்ச்சி இல்லாத இடத்தில் அன்புக்கும் ஆதரவுக்கும் என்ன வேலை? சுவர் இருந்தால்தானே சித்திரம்? அவளுக்கு அவன் தன்னிடம் எதிர்பார்ப்பதென்ன என்பதே புரிபடவில்லை. விளக்கிச் சொல்லி புரியவைக்க அவனுக்கு விருப்பமில்லை. பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் ஒரு காதல். ஏதேதோ நவீன கலகக் குரல்களைப் போஷித்துப் பிரதியெடுத்தவனுக்கு தூய்மை, புனிதம் போன்றவற்றை காமத்துடன் தொடர்புறுத்தும் மரபான மனம்தான் வாய்த்திருந்திருக்கிறது. ‘உன் பாய்ஃபிரெண்டுடன் நீ ஊர் சுற்றலாம், டென்னிஸ் விளையாடலாம். ஆனால், எனக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி என்னுடன் பேசிக்கொண்டிரு’ என்பவனை பதினாறு வயதுப் பெண்ணால் எப்படி விளங்கிக்கொள்ள இயலும்? அவள் அவனை ஒரு விசித்திர ஜந்துவாகவே கருதியிருப்பாள். கையாலாகாதவனாக எண்ணியிருப்பாள். ஆனால், தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயங்களிலிருந்து மேலெழுந்து விட்டதாகவே சுநீல் நம்பிக்கொண்டிருந்தான். ஆத்ம சுத்தியைப் பேணுவதே போதுமானது அல்லவா? அப்படியிருந்தும் தன்னுடைய இலட்சியவாத காதலை அவள் இவ்வளவு அசிரத்தையாக கையாள்வதை நினைத்து சுநீல் மனம் வெதும்பியதென்னவோ உண்மை. தான் ‘திருந்திவிட்டதாக’ நினைத்துக்கொண்டிருப்பவனுக்கு இது வேறு வகையான நடிப்பு என்பதை உணர்ந்துகொள்ள கூடுதல் காலமெடுக்கும். அவ்வளவுதான்.
இவற்றையெல்லாம் பரிவோ பரிதாபமோ கோருகின்ற தொனியில் நாவலாசிரியர் எழுதவில்லை. எல்லாவற்றிலும் சிடுசிடுப்பான கிண்டல்தான் மேலோங்கியிருந்தது. ‘நான் மட்டும் பழைய ஆளாக இருந்திருந்தால் இந்தப் பெண்ணை எப்போதோ வீழ்த்தியிருப்பேன்’ என ‘மனம் திருந்திய’ சுநீல் தன் மனத்துக்குள் கறுவிக்கொள்ளும் போது அவன் ஒன்றும் அப்பேர்ப்பட்ட வீர பராக்கிரமசாலி அல்ல என்பது நமக்கு முன்னமே தெரிந்துவிட்டிருக்கிறது. சீட்டாடச் சென்ற இடத்தில் ஒரு குள்ளனின் அடிக்கு பயந்து அவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டு வருகிறான். அவனை அநாதரவாக கைவிட்டுவிட்டு ஓடிப்போன நண்பர்களிடம் கோபப்படக்கூட இயலாத பயந்தாங்கொள்ளி. ‘இதில ஒரு நல்ல விஷயம் இருக்கு கவனிச்சியா? இனிமே நாம சீட்டாட மாட்டோம்’ என்று சமாளிக்க முயலும் அவினாஷிடம் ‘ஆமாடா.. நான் அதுக்காகத்தான் அடி வாங்கிட்டு வந்திருக்கேன்’ என்று மட்டுமே அவனால் சொல்ல முடிகிறது. காவல் நிலையத்தில் அடி வாங்கும்போதும் தன் கவலைக்குரிய நிலையை எண்ணி சிரித்துக்கொண்டுதான் இருக்கிறான். ஒரு திடீர் உந்துதலில் பேப்பர் வெயிட்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டு காவலதிகாரியின் மண்டையைப் பிளந்துவிடுவதாக சவடால் விடும்போதுகூட தன்னால் அப்படிச் செய்ய முடியாது என்பதை உணர்ந்ததும் அதைக் கீழே வைத்துவிடுகிறான். இந்நாவலின் உச்சகட்ட பகடி அதன் இறுதிப் பகுதியில்தான் நிகழ்கிறது. நண்பர்கள் எல்லோரும் மிதமான போதையில் தள்ளாடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த போதையின் சுறுசுறுப்பு போதவில்லை. ஆனால், மேற்கொண்டு குடிப்பதற்கு காசும் இல்லை. போக்குவரத்து சிக்னலில் நிற்கும் கார்க்காரர்களிடம் முறைவைத்து பிச்சையெடுப்பது என முடிவெடுக்கிறார்கள். பர்ஸ் தொலைந்து விட்டதென்றும் பேருந்தில் செல்வதற்கு காசில்லை என்றும் ஆங்கிலத்தில் மன்றாடி ஒவ்வொரு கார்க்காரரிடமும் ஐந்து ரூபாய் பிடுங்க வேண்டும். ஆரம்பகட்ட விளையாட்டான வெற்றிகளுக்குப் பிறகு நண்பர்களுக்கிடையே இதுவொரு போட்டியாக மாறுகிறது. யார் சிறந்த பிச்சைக்காரன் எனும் போட்டி மனப்பான்மையில் ஆளாளுக்கு கங்கணம் கட்டிக்கொண்டு கோதாவில் இறங்குகிறார்கள். இவர்கள் செய்கிற கலாட்டாவை மூன்று அசல் பிச்சைக்காரர்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கைப் பார்க்கிறார்கள்.
இந்த விளையாட்டிலும் சுநீலுக்குத் தோல்வியே எஞ்சுகிறது. ஒவ்வொரு முயற்சியிலும் மிகக் குறைவான காசுடன் அல்லது வெறுங்கையுடன் திரும்பி வருகிறான். ‘பிச்சை எடுக்கக்கூட நீ லாயக்கு இல்லியா?’ என மற்ற நண்பர்கள் அவனைச் சீண்டுகிறார்கள். கடைசி முயற்சியாக ஒரு காரின் முன்னே போய் விழுகிறான். காரில் யமுனா. அந்தக் கோலத்தில் அவனைப் பார்த்த அதிர்ச்சியில், ‘சுநீல் அண்ணா…’ என்கிறாள். அவனுக்கு வெட்கக்கேடாகப் போய்விடுகிறது. அவமானத்தை மறைத்துக்கொண்டு ‘ஐந்து ரூபாய் இருக்கிறதா?’ எனக் கேட்கிறான். அவளிடம் ஒரு ரூபாய்தான் இருக்கிறது. ‘சரி, அதையாவது கொடு’ என்கிறான். சிக்னல் விழுந்துவிட்ட அவசரத்தில் அந்தக் காசு ஜன்னல் வழியே சுண்டி எறியப்படுகிறது. அது உருண்டோடி காணாமற் போகிறது. வாசித்துக்கொண்டிருக்கிற நமக்கு உற்சாகம் பீறிடுகிறது. ஆசிரியரின் தன்வெளிப்பாட்டை பூர்த்திசெய்யும் நோக்கிலேயே இதன் உத்திகள் செயல்பட்டிருக்கின்றன என்பதில் ஐயமில்லை. எனவே, பரிகாசங்கள் மூலமாக இப்படைப்பின் தீவிர கணங்கள் சற்று மழுங்கடிக்கப்பட்டு இளக்கம் கொண்டிருப்பதை இரசிக்கவும் செய்தேன். இதுவே இதன் பலமும் பலவீனமும். இந்த நாவலை வாசித்து முடித்த பிறகு சில தினங்களுக்கு ‘ஜாலியான’ மனநிலையில்தான் திரிந்தழிந்து கொண்டிருந்தேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தகைய வேடிக்கைகளில் பங்கெடுத்தவன் என்பதால், பிறரது வேடிக்கைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவன் என்பதால், நாவலில் குறிப்பிடப்படும் சுநீலின் வயதை நெருங்கிக்கொண்டிருக்கிறேன் என்பதால். மனிதர்கள் நடித்துக்கொண்டிருப்பது குறித்து எனக்குப் புகார் ஏதும் இல்லை. ஆனால், நடிப்பது குறித்த பிரக்ஞையுடன் வாழ்வதென்பது மிகுந்த அவஸ்தை தரக்கூடியது. அதைத் தாண்டிச்செல்லக் கொஞ்சம் குற்றவுணர்ச்சியும் பரிசுத்தமும் மனிதர்களுக்குத் துணை நிற்கட்டும். அதை உணர்த்தும் விதமாக ஆதவனின் சிறுகதைத் தலைப்புடன் இக்கட்டுரையை முடிப்பது பொருத்தமாக இருக்கும்.
லைட்ஸ் ஆன், ரெடி ஃபார் த டேக்…