பரோபகாரம் – தன்னார்வுலா

This entry is part 3 of 5 in the series பரோபகாரம்

பிறருக்கு உதவுவது என்றால், பணத்தை நன்கொடையாகக் கொடுப்பது மட்டும்தான் என்பதில்லை. சிரமதானம் என்று சொல்லப்படும் உழைப்பை நன்கொடையாகக் கொடுக்கும் வழக்கு, நாலு பேருக்கு இலவசமாகச் சாப்பாடு போடுவது, கிட்னி / ரத்தம் / கண் தானம், அறிவுரை / புத்திமதி போன்றவை வழியாகப் பிறருக்கு வாழ்வில் முன்னேறச் சரியான வழிகாட்டுதல் போன்றவையும் பரோபகாரச் செயல்கள்தாம். அந்த மாதிரியான உதவிகளைச் செய்ய முற்படும்போது உதவி பெறுபவர்களை மரியாதையுடன் நடத்துவது அவசியம். இந்தக் கொள்கை உலகெங்கிலும் சரிவரப் பின்பற்றப்படுகிறதா என்று கேட்டால், பல சமயங்களில் இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டிவரும். எதைச் செய்தாலும் அதை சமூக ஊடகங்களிலும், ரெஸ்யூமேயிலும் போட்டு பலன் பார்க்கத் துடிக்கும் காலம் இது. அந்த மாதிரியான விளம்பரப் பிரியர்களுக்கு நல்ல விதமாய்ச் சொல்லிப் இதைப் புரியவைக்க முடியாது என்று தீர்மானித்தது பார்பி சேவியர் (Barbie Saviour) என்கிற ஒரு இன்ஸ்டாக்ராம் தளம். 

சென்ற நூற்றாண்டுவரை உலகின் பல பகுதிகளைக் காலனிப்படுத்தி ஆண்டு வந்த ஐரோப்பிய வெள்ளையரிடையே, தங்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் காட்டுமிராண்டிகள், நாம்தான் அவர்களைக் காப்பாற்றி நாகரீக வாழ்க்கைக்கு அறிமுகப்படுத்தி, கல்வி, கலாசாரம் முதலியவற்றைக் கற்றுக் கொடுக்கவேண்டும் என்றோர் அபிப்பிராயம் உண்டு. இந்திய வரலாற்றைப் படித்தவர்களுக்கு இது நன்கு பரிச்சயமான ஒரு விஷயம்தான். அதற்கும் மேலாக இன்னும் கொஞ்சம் சரித்திரப் பக்கங்களைப் பின்னோக்கிப் புரட்டிப் பார்த்தால், இங்கிலாந்தின்மீது படையெடுத்த ரோமானியர்கள் இங்கிலாந்துக்காரர்களை நாகரீகமற்ற காட்டுமிராண்டிகள் என்று கருதியது தெரியவரும். இப்படிக் காலாகாலமாய்த் தொடரும் இந்த வெள்ளை ரட்சக (white savior complex) தத்துபித்துத் தனத்தை இன்றும் ஆப்பிரிக்காவைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று ஓரிரு வருடங்கள் தொண்டுசெய்யக் கிளம்புபவர்களிடம் காண முடிகிறது. இதில் குறிப்பாகப் பல இளம் வெண்ணினப் பெண்கள் ஈடுபடுவதால், அதைக் கிண்டல் செய்கிறது இந்தத் தளம். இதை ஆரம்பித்தவர்களே இதே வேலையை முன்பு செய்து தங்கள் கருத்துக்களில் உள்ள தவறுகளை அறிந்த (தங்கள் பெயர்களை வெளியிட விரும்பாத) இரண்டு பெண்மணிகள்தான் என்பது ஒரு விதத்தில் சிறப்பு. 

அருகிலுள்ள படத்திற்கான இன்ஸ்டாக்ராம் குறிப்பு இது: தொண்டுப் பணிக்காக வெகுநாட்களாய் இங்கே நான் வசித்து வரும்போது நான் தினந்தோறும் சிந்தும் எனது கண்ணீர்த் துளிகள் என் குற்ற உணர்வை அதிகரித்து வருகின்றன. எனவே என் கண்ணீரை வீணாகவிடாமல் துளித்துளியாய் இப்போது சேகரித்து வருகிறேன். ஒவ்வொரு துளிக்கும் ஓர் அர்த்தம் இருக்கிறது. ஒவ்வொரு துளிக்கும் ஒரு காரணம் மலர்கிறது. கடவுள் எனக்கு வாழ்வின் மிகப்பெரிய உண்மைகளைச் சமீப காலமாக காட்ட ஆரம்பித்திருக்கிறார். வெகு விரைவில் அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளக் காத்திருக்கிறேன்.  

இந்தப் படத்திற்கான குறிப்பு இப்படிப் போகிறது: உங்களுக்குத் தெரியுமா? ஆப்பிரிக்கா என்ற நாட்டில் வாழும் மக்களில் 112% பேருக்கு உபயோகிக்க கழிப்பறைகள் கிடையாது. என் பல்வேறு சேவை அலுவல்களுக்கிடையே எனக்கு நேரமே இல்லை என்றாலும், நிலைமை இவ்வளவு மோசமாக இருப்பதால், Porcelain Promise என்று புதிதாக ஒரு சேவையைத் தொடங்கி எல்லோருக்கும் கழிப்பறைகள் அமைத்துத் தரவிருக்கிறேன். 

இப்படி ஒவ்வொரு படத்துக்கும் செண்டிமெண்டல் குறிப்புகளுடன், தவறாமல் பத்துப் பனிரெண்டு ஹேஷ்டேக்குகளும் உண்டு! இந்தக் கிண்டல் தளம் அமைக்கப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன என்றாலும், தேடினால் இன்றும் இப்படிச் சேவைசெய்து செல்ஃபி படங்களைப் போட்டுத்தள்ளும் இளைஞிகளை நிறையப் பார்க்க முடிகிறது. “அந்தக் கருப்புக் குழந்தையின் வாழ்க்கையிலேயே அதற்கு மிகவும் சந்தோஷம் கிடைத்த அனுபவம் அது என் கையிலிருந்து கொக்கோ கோலா குடித்ததுதான் என்று புரிந்தபோது எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது” என்ற குறிப்புடன் அவர்கள் போடும் செல்ஃபி படங்களைப் பார்த்துவிட்டு அமெரிக்காவிலோ ஐரோப்பிலோ இருக்கும் அவர்களின் மாமாக்களும், அத்தைகளும் “நீ இந்த உலகுக்காற்றும் சேவை இன்றியமையாதது, நமது குடும்பத்திற்கு உன் தியாகங்கள் பெருமை சேர்க்கின்றன” என்று கமெண்ட்போட்டு லைக் செய்து தள்ளுவார்கள். 

இந்த வழக்கு இன்னும் இருக்கிறது என்றாலும், இந்த அணுகுமுறை தவறு என்ற புரிதல் பார்பி சேவியர் போன்ற சில வலைத்தளங்களில் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. கிண்டல் கேலிகளுக்கு அப்புறம், செய்யும் சேவையை முறையாகச் செய்வது எப்படி, என்ன செய்யலாம், செய்யக்கூடாது (உதாரணம்:  https://humanitariansoftinder.com/ மாதிரியான படங்களைச் சுய விளம்பரத்திற்காக இணைய தளங்களில் வெளியிடக்கூடாது) என்ற வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கின்றன. 

சில வருடங்களுக்குப் பிறகு அந்த பார்பி சேவியர் இன்ஸ்டாக்ராம் பெண்மணிகள் இருவரும் தாங்கள் யார் என்பதை வெளிக்காட்டி ஓரிரு நேர்காணல்களில் கலந்துகொண்டு இருக்கிறார்கள். முதலில் அவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாததற்குக் காரணம் தங்கள் தளம் “இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளே” என்று விடைகள் வழங்கும், எல்லாம் தெரிந்த தளமாக இல்லாமல், “இது என்ன கண்றாவி?” என்று கேட்கும் தளமாக மட்டுமே இருந்ததுதான் என்கிறார்கள். தளத்தை ஆரம்பித்த புதிதில் பலர் இவர்கள் பிரசுரித்த படங்களின் பின்னூட்டங்களில் “நாங்கள் இப்படிச் செய்கிறோம். இது சரியா?” என்பது போன்ற கேள்விகளைக் கேட்க முற்பட்டதைக் குறிப்பிட்டு, தாங்கள் யார் என்று வெளிப்படையகச் சொல்லியிருந்தால், அந்தக் கேள்விகளுக்கு சரியான விடைகள் தெரியாதிருந்தாலும் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி இருப்போம். வெளிக்காட்டிக் கொள்ளாததால், தங்களுக்குச் சரியாக விடை தெரியாத கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தப்பித்ததோடு, அப்படிக் கேள்வி கேட்பவர்களே சற்றுக்கழித்து தங்கள் உள்ளுணர்வு வழியே விடைகளைப் புரிந்துகொண்டிருக்க தங்கள் வலைத்தளம் உதவி இருக்கலாம் என்கிறார்கள்.  நார்வேயைச் சேர்ந்த SAIH என்ற அமைப்பு இந்த கிண்டல் கலந்த அலசலை அமர்க்களமாய் இன்னும் தொடர்கிறது. முடிந்தபோது இரண்டொரு நிமிடங்களே ஓடும் இந்த மற்றும் இந்த காணொளிகளைப் பார்த்து விடுங்கள். இவர்களெல்லாம் சொல்வதைப் போல் சொல்வனம் வாசகர்கள் அனைவரும் ஆப்பிரிக்காவைக் காப்பாற்ற ஓடாவிட்டாலும், அடிப்படையில் இந்தத் தளங்கள் சொல்லவரும் கருத்துகள் உலகின் பல இடங்களில் சேவைசெய்ய விழையும் எல்லோருக்கும் பொருந்தும் என்பதில் சந்தேகமில்லை. நம்மூர் மாரியம்மன் கோவிலுக்கு ட்யூப்லைட் போடுகிறேன் என்று போட்டுவிட்டு அதன் வெளிச்சமே வெளியே வர வழியில்லாத அளவுக்குப் பெரிய எழுத்துக்களில் “உபயம்: சிவகாம சுந்தரி சவுண்ட் சர்வீஸ்” என்று எழுதி வைப்பதை நாம் எல்லோரும் பார்த்துச் சிரித்திருக்கலாம். ஒருவிதத்தில் அதே கதைதான் இதுவும். 

  • நாம் எங்கே யாருக்கு உதவ முற்படுகிறோமோ அவர்களைப் பற்றி நிறையப் படித்து, கேட்டு, கற்றுக்கொண்டபின் உதவிகள் செய்ய முயல்வது நல்லது. 
  • செய்யும் உதவியின் முக்கியக் குறிக்கோள், உதவி சரியாக அவர்களைச் சென்றடைவதாகவும், சுயவிளம்பரம் குறிக்கோளாக இல்லாமல் இருப்பதும் நல்லது. சில சமயங்களில் சிறிதளவு விளம்பரம் மற்றவர்களையும் உதவிசெய்ய ஊக்குவிக்கவும், நாம் செய்யும் உதவி சரியானதா, அளவு போதுமானதா என்று முடிவு செய்யவும் உதவலாம். ஒருவரின் சொந்தப் பணம் அல்லது உழைப்பாக இல்லாமல், பொதுப் பணம்/பொருள் உபயோகப் படுத்தப்படும்போது, கணக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுவது மிகவும் அவசியம். அந்தச் சமயங்களில் விளம்பரம் சரிதான் என்றாலும், உதவியின் பயன் சரியான காரணத்தைச் சென்றடைவதைவிட விளம்பரம் பெரிதாகும் தருணங்கள் எதுவுமே சரி என்று தோன்றவில்லை. 
  • பெரும்பாலும் எனக்குத்தான் தெரியும் என்று நாமாய் ஏதாவது செய்ய முயல்வதைவிட, என்ன உதவி தேவை என்று கேட்டு தேவைப்படும் உதவிகளை அளிப்பது பயனுள்ள அணுகுமுறையாக இருக்கும்.
  • உண்மையான பணிவுடன் செய்ய முயலும் உபகாரத்தில் நம்மை ஆழ ஈடுபடுத்திக்கொண்டு ஒரு காரியத்தை நன்றாகச் செய்து முடிப்பது, பல்வேறு உபகாரங்களில் மேலெழுந்தவாரியாக ஏதோ செய்து வைப்பதைவிட மேலான அணுகுமுறை.  

மகாபாரதத்தில் இருந்து ஆரம்பித்து, நமது புராணங்கள் பலவற்றிலும் செய்யும் தானம் பற்றிக் கர்வம் கொள்வது எவ்வளவு தவறு என்று நிறைய விளக்கங்களும், குட்டிக் கதைகளும் விரவிக்கிடக்கும். இடது கை கொடுப்பது வலது கைக்குத் தெரியக் கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்த உலகில், இப்போது “நீங்கள் ஃபோனை எப்போதும் கையில் வைத்திருக்கக்கூடாது, செல்ஃபி எடுக்கக்கூடாது, உங்கள் சேவையைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று கட்டுப்பாடுகள் இருந்தால், அதே பணியை செய்வீர்களா?” என்ற கேள்வி, உண்மையான சேவையில் தன்னார்வலர்களுக்கு இருக்கும் ஈடுபாட்டை வெளிச்சமிட்டுக் காட்ட உதவும் என்று நினைக்கிறேன். 

விடுமுறை, அந்த சமயத்தில் சுற்றுலா என்று போவதைச் சேவைப் பயணங்களுடன் சேர்த்து தன்னார்வுலா (Voluntourism) என்று ஒரு பார்சலாக்கி விற்பதற்காக ஒரு பெரிய வியாபார உலகே உருவாகி இருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முந்தைய ஆய்வு ஒன்று வருடம் சுமார் 1,400 கோடி ரூபாய் புரளும் சந்தை இது என்கிறது. இன்று இது இன்னும் எவ்வளவு பெரிதாகி இருக்கிறது என்று மிகச் சரியாகத் தெரியாவிட்டாலும், இதற்கு சம்பந்தப்பட்ட மற்ற எண்கள், இது இன்னும் பல மடங்கு பெருகி இருக்கக்கூடும் என்றே கைகாட்டுகின்றன.   இது இவ்வளவு பெரிய துறை என்பதால், அடிமனதில் நல்லெண்ணத்துடன் ஆரம்பித்தாலும், செய்வதை முறையாகச் செய்யாவிட்டால் நிகழ்வது தவறுகள்தான் என்று பலருக்கும் எடுத்துரைத்து இத்துறையை முறைப்படுத்துவது அவசியமாகிறது.

அமெரிக்கா 1940களிலேயே அனாதை ஆசிரமங்களுக்குத் தலைமுழுக்கு போட்டுவிட்டது. அமெரிக்கா மட்டுமின்றி கனடா, UK, ஐக்கிய ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றிலும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அனாதை விடுதிகளை நடத்தும் வழக்கு ஒழிக்கப்பட்டுவிட்டது. அதன் காரணம் அனாதைக் குழந்தைகளை ஆசிரமங்களில் இட்டு வளர்ப்பதைவிட, முறையான குடும்பங்களுக்கு அவர்களைத் தத்துக்கொடுத்து, ஒரு குடும்பச் சூழலில் அவர்கள் வளர வழிவகுப்பதே நல்லது என்ற புரிதல்தான். எண்பது வருடங்களுக்கும் மேலாக மேலை நாடுகளில் இந்த முறை வழக்கிலிருந்தாலும், உலகெங்கிலும் உள்ள ஏழை நாடுகளில் அனாதை விடுதிகள் நடத்துகிறோம் என்று நன்கொடையாளர்களிடம் உதவிகோரும்‌ வழக்கம் இன்றும் தொடர்ந்து வருகிறது. 

படத்திலிருக்கும் ஹோப் ஆஃப் லைஃப் அமைப்பின் குவாண்டமாலா என்ற தென்அமெரிக்க நாட்டு அனாதை விடுதியைப்போல் பல ஹைத்தி, கம்போடியா, கென்யா, என்று உலகின் பல ஏழை நாடுகளில் செயலபட்டு வருகின்றன. எப்போதோ இருந்த ஒரு நிஜமான தேவைக்காகத் திறக்கப்பட்ட சில விடுதிகள், தேவைகள் தீர்ந்துவிட்டபோதும் நன்கொடைகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் மூடப்படாமல் தொடரும் பொருளாதார வக்கிரங்களாக மாறியிருக்கின்றன. மிகுந்த நல்லெண்ணத்துடன், மேற்கத்திய தன்னார்வலர்கள் பலர், இந்த விடுதிகளில் ஒரு வாரம் தங்கித் தொண்டுசெய்ய $1,000 வரை பணம் கட்டுகிறார்கள். பல மேல்நாட்டு நிறுவனங்கள் தங்கள் பட்ஜெட்டிலிருந்து பணம் ஒதுக்கித் தங்கள் ஊழியர்களைத் தொண்டுசெய்ய இம்மாதிரி விடுதிகளுக்கு அனுப்புவதால், இவ்விடுதிகள் ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட தொண்டர்கள் அறை, கான்ஃபரன்ஸ் ரூம், நல்ல ஹோட்டல் எல்லாம் அமைத்துத் தொண்டர்களை இழுக்கின்றன. நீங்கள் $1,500 கட்டினால் ஏதாவதோர் அனாதைக் குழந்தையை அதன் குக்கிராமத்திலிருந்து அவர்கள் “காப்பாற்றி” அழைத்து வரப் போகும்போது நீங்களும் ஜீப்பில் உடன்சென்று காப்பாற்றுவதில் பங்கேற்கலாம்!

இந்த குவாண்டமாலா விடுதிக்கு மட்டும் கோடை மாதங்களில் வாரத்திற்குச் சுமார் 400 தன்னார்வலர்களும் மற்ற சமயங்களில் 150 பேரும் வருகிறார்களாம். இதிலிருந்து மட்டும் அவர்கள் வருவாய் சுமார் $90 லட்சம், அல்லது 65 கோடி ரூபாய். இந்தக் குழந்தைகளெல்லாம் நிஜமாகவே அனாதைகளா என்று பல்வேறு அமைப்புகள் ஆராய்ந்தபோது கிடைத்த விவரங்கள் வினோதமானவை. உதாரணமாக 15 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீலங்கா உள்நாட்டுச் சண்டையினால் தடுமாறிக்கொண்டிருந்த சமயத்தில்கூட அங்கிருந்த விடுதிகளில் இருந்த குழந்தைகளில் 92%க்கு குறைந்தது ஒரு பெற்றோரும், லைபீரியாவில் UNICEF நடத்திய ஓர் ஆய்வில் 98% குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் இருப்பதும் தெரியவந்தது! அந்தப் பெற்றோர்கள் எல்லோரும் உலகை ஏமாற்றுகிறார்களா என்றால் அதுவும் இல்லை. “குழந்தைகளை வளர்க்க ஏழைப் பெற்றோர்கள் கஷ்டப்படுகிறார்கள், நன்கொடை கொடுத்து அவர்களுக்கு உதவுங்கள்” என்று கேட்டால் நம்மில் பலர் உதவ முன்வருவதில்லை. பஞ்ச சூழ்நிலையில் சோற்றுக்கு வழியில்லாமல் குழந்தைகளை சில காலம் உறவினர்களிடம் விட்டுவைக்கும் வழக்கம் முன்நாட்களில் நமது சமுதாயத்திலும் உண்டு என்றாலும், நமக்கு முன்பின் தெரியாத குழந்தைகளை ஓரிரு வருடங்கள் (Foster Care முறையில்) தற்காலிகமாக எடுத்து வளர்ப்பதோ, அதற்காக அரசாங்கம் மானியங்கள் கொடுப்பதோ பல சமூகங்களில் வழக்கமில்லை. எனவே அதற்குப்பதில், “இந்த அனாதைக் குழந்தைகளை நாங்கள் அவர்களின் நாதியில்லா கிராமங்களில் இருந்து காப்பாற்றி எங்கள் விடுதியில் உயிர்வாழ வைத்திருக்கிறோம். எங்களுக்குப் பணம் கொடுங்கள்” என்றால் மனம் நெகிழ்ந்து நாங்களே அங்கே வந்து ஒரு வாரம் சேவையும் செய்து, அந்த வாய்ப்புக்காக ஒரு லட்ச ரூபாய் பணமும் தருகிறோம் என்று மக்கள் வரிசையாக நிற்கிறார்கள்! கிடைத்ததடா நல்ல பிசினஸ் என்று இந்த அமைப்புகள் “குழந்தை பிடிப்பாளர்களுக்கு” ஒரு குழந்தைக்கு இவ்வளவு என்று பணம்கொடுக்க, அவர்களும் ஏழைப் பெற்றோர்களிடம், “நீங்கள் சிரமப்படுவதற்குப் பதிலாககக் குழந்தையை விடுதியில் விட்டுவையுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். சனி, ஞாயிறு சமயங்களில் நீங்கள் குழந்தையை வந்து பார்க்கலாம்” என்று சொல்லி இங்கே கூட்டி வந்துவிடுகிறார்கள்.

இந்தோனேஷியாவின் பாண்டா ஆச்சே பகுதி 2004ஆம் ஆண்டு சுனாமியில் பட்டபாடு எல்லோருக்கும் தெரிந்ததே. அதன்பின் அங்கே முளைத்த பல்வேறு அமைப்புகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளில் 97% பேர், பெற்றோர்கள் இருந்தும், ஏதோ சோறும், படிப்பும் கிடைக்கிறது என்று அவர்களின் குடும்பத்தினராலேயே கொண்டுவந்து சேர்க்கப்பட்டவர்கள். அவர்களில் பெரும்பாலானோர்  சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள்கூட இல்லை. இருந்தாலும் “என்னமோ சுற்றி வளைத்துப் பார்த்தால், குழந்தைகளுக்கு நல்லதுதானே? விடுங்கள்,” என்கிறீர்களா? இப்படி ஓரிரு வாரங்கள் வந்து தொண்டுசெய்துவிட்டுக் காணாமல் போய்விடும் தன்னார்வலர்களால் சின்னஞ்சிறுசுகளின் மனநிலை பாதிக்கப்படும் (Abandonment Syndrome) என்பதால் இந்த முறையே சரியில்லை என்கிறார்கள் மனோதத்துவ மருத்துவர்கள்.

உலகில் உள்ள அனாதை விடுதிகள் எல்லாம் மோசம் என்றெல்லாம் சொல்லவில்லை. நல்ல திறமையும், நெகிழ்ந்த இதயங்களும் கொண்ட மேலாளர்களால் நன்கு நடத்தப்படும் விடுதிகள் இருக்கலாம். இருந்தாலும் அருகே சென்று ஆய்ந்தால் பல்வேறு சிக்கல்கள் தெரியவருவதும், குடும்பங்களுடன் வாழும் குழந்தைகளுக்குக் கிடைக்கும் அன்பும் அரவணைப்பும் பெரிய விடுதிகளில் கிடைப்பது கடினம் என்பதும் நிதர்சனம். இதே மாதிரி குழப்பங்கள் பள்ளிக்கூடம், வீடு போன்றவைக் கட்டித்தரவும், கிணறு வெட்டிக் கொடுக்கவும் ஓரிரு வாரங்களுக்குப் போய்ச் சேவை செய்துவிட்டுவரும் தன்னார்வலர்களாலும் வருகின்றன. 1998இல் அடித்த ஒரு புயலுக்குப் பிறகு குவாண்டமாலாவில் ஏழைகளுக்கு வீடு கட்டித்தரச் சென்ற 162 அமெரிக்கர்களை ஓர் ஆய்வு தொடர்ந்திருக்கிறது. அவர்கள் சொந்தச் செலவில் அங்கே போக வாங்கிய விமான டிக்கெட்டில் இருந்து எல்லா செலவுகளையும் சேர்த்துப் பார்த்தால், அவர்கள் கட்டி முடித்த ஒவ்வொரு வீட்டின் அடக்க விலையும் சுமார் 22 லட்சம் ரூபாய். அதற்கு பதிலாக அந்த ஊர் சித்தாள்களும், மேஸ்த்ரிகளும் சேர்ந்து கட்டிமுடிக்கும் அதே மாதிரியான வீடுகளின் அடக்க விலை வெறும் ஒன்றரை லட்சம் ரூபாய்தான்! இவர்கள் அங்கே போகாமல் அதே பணத்தை நன்கொடையாகக் கொடுத்திருந்தால், இவர்கள் கட்டிக் கொடுத்த ஒரு வீட்டிற்கு பதில் அவர்கள் 15 வீடுகள் கட்டுவதோடு, உள்ளூர் மக்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருப்பார்கள்.

இப்படி வீடு கட்டும், கிணறு வெட்டும் அனுபவம் ஏதுமில்லா தன்னார்வலர்கள் எங்கேயாவது போய் இத்தகைய பணிகளைச் செய்யும்போது, உள்ளூரில் இருக்கும் கட்டிட ஊழியர்களுக்கு இருந்த வேலையும்போய் அவர்கள் தடுமாறுவதுதான் மிச்சம். வீடாவது பரவாயில்லை, ஒரு வழியாக கட்டி முடிக்கப்பட்டு விட்டால் ஏதாவது ஒரு குடும்பத்திற்கு உதவும். ஒரு பள்ளியோ, மருத்துவமனையோ கட்டும்போது, அவற்றைப் பின்னாட்களில் நடத்தத் தேவையான ஊழியர்களும், பணமும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருப்பது மிக அவசியம். இல்லாவிடில் அவை வெகு விரைவில் புல் முளைத்த பாழடைந்த பங்களாக்களாக ஆகிவிடும். பெரும்பாலான தன்னார்வலர்களும், அவர்களை ஊக்குவிக்கும் அமைப்புகளும் இந்தப் பின்னாளைய தேவைகளைப் பற்றி அவ்வளவு யோசிப்பதில்லை. எனவே கட்டிமுடித்து, புகைப்படங்களை அமைப்பின் வலைதளத்தில் வெளியிட்டுவிட்டு அவர்கள் அடுத்த கட்டிட ப்ராஜக்ட் எது என்று தேடிக்கொண்டு போய் விட்டபின், முந்தைய கட்டிடங்கள் காரை பெயர்ந்து கறை பாடிய ஆரம்பித்து விடுகின்றன.

இப்படிப்பட்ட சுற்றுலாக்களை விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள், இவற்றின் பயன்கள் என்று பார்க்கும்போது கட்டப்பட்ட கட்டடத்தின் விலையை மட்டும் பார்க்கக்கூடாது. இந்தத் தன்னார்வலர்களுக்கு இந்தப் பயணம் வாழ்வில் ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமையும். அதனால் பின்னாட்களில் அவர்கள் கொடுக்கும் நன்கொடைகள் அதிகரிக்கும், அவர்கள் இன்னும் நிறைய தொண்டுகள் செய்ய முற்படுவார்கள் என்று வாதிடுகின்றன. ஆனால் அந்த 162 அமெரிக்கர்களைச் சில வருடங்கள் தொடர்ந்து பார்த்த ஆய்வுகள், அவர்கள் எல்லோரும் மனதளவில் முன்பே மிகவும் நல்லவர்கள்தான், இந்தப் பயணத்தினால் அவர்களின் எண்ணங்களோ, செய்கைகளோ, நன்கொடையின் அளவுகளோ பெரிதாக ஒன்றும் மாறவில்லை என்கின்றன.

இதுவாவது பரவாயில்லை. மருத்துவத் தகுதிகள் ஒன்றும் இல்லாத ரெனெ பாக் என்ற ஓர் அமெரிக்கப் பெண், உகண்டாவில் நோயுற்று அவதிப்படும் சின்னஞ்சிறு குழந்தைகளைக் காப்பாற்ற என்று ஓர் அமைப்பை நிறுவி, நூற்றுக்கணக்கில் குழந்தைகளை வருவித்துத் தனக்குத் தெரிந்த ஏதோ வைத்தியங்களைச் செய்ததில், நூற்றுக்கும் மேற்பட்ட சிசுக்கள் சென்ற சில வருடங்களில் அவர் காப்பில் இருந்தபோது இறந்துவிட்டதாக இறந்த குழந்தைகளின் பெற்றோர்களின் சார்பாக வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்! வலையில் தேடினால் இந்த கேஸ் பற்றிய  இது போன்ற செய்திகளை நிறையப் பார்க்கலாம்.

பொதுவாக வெள்ளையினத் தன்னார்வலர்களை அதிகம் தாக்கும் வியாதி இது என்று தோன்றினாலும், இதே குழப்பங்களை வெள்ளையரல்லாத மற்ற இனத்தவர்களாலும் நிச்சயம் விளைவிக்க முடியும். தப்பான விளைவுகள் உருவாவது எவரொருவரின் சரும நிறத்தால் அன்று, அவர்களின் அணுகுமுறையால்தான் என்று சொல்ல வேண்டியதில்லை. இந்தியா, சீனா போன்ற பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுகளின் இளைய தலைமுறையினர் இதே மாதிரியான உலகுக்கு உதவும் செயல்களில் உற்சாகத்துடன் குதிக்கிறார்கள், குதிப்பார்கள் என்பதால், மற்றவர்களைப் பார்த்து ஏளனச் சிரிப்பு சிரிப்பதோடு நின்றுவிடாமல் இந்தப் புதைகுழியில் எப்படிச் சிக்காமல் இருப்பது என்று நாமும் யோசிக்க வேண்டியதிருக்கிறது.

“என்னடா இது? நல்ல மனதுடன் யாரோ செய்யும் எல்லா பரோபகார செயல்களிலும் குற்றம் கண்டு பிடித்துக்கொண்டிருக்கிறானே! இப்படி தன்னார்வலர்கள் செய்யும் எல்லா உபகாரங்களுமே தப்புதானா?” என்று யோசிக்கிறீர்களா? அப்படி ஒன்றும் இல்லை. என்னுடைய நண்பர் ஒருவர் கண் மருத்துவர். ஓரிரு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு தன்னார்வக் குழுவுடன் சேர்ந்துகொண்டு இரண்டு வாரங்கள் உலகின் ஏதோ ஒரு மூலையில்போய் கேட்ராக்ட் கண் அறுவை சிகிச்சையை நூறு நூற்றைம்பது பேர்களுக்குச் செய்துவிட்டு வருகிறார். அந்தப் பயணங்களின் வழியே தரப்படும் உதவியைக் கொடுக்க அந்தக் குழு குறிப்பான பல தகுதிகளைப் பெற்றிருக்கிறது. அதை உள்ளூர்க்காரார்‌களால் எளிதில் கொடுத்துவிட முடியாது. இவர்கள் புரியும் சேவையால் உள்ளூர் வேலை வாய்ப்புகள் காணாமல் போவதில்லை. சிகிச்சை பெற்றபின் பயனாளர்களுக்குக் கிடைக்கும் பலன் நிரந்தரமானது. அந்தப் பயனைத் தக்க வைத்துக்கொள்ள ஊரில் நிரந்தர ஊழியர்களை (பள்ளி நடத்த தேவையான ஆசிரியர்களைப்போல) நியமிக்கும் அவசியம் ஏதும் இல்லை. ஆகையால் இத்தகைய வாலன்டூரிசம் அல்லது தன்னார்வுலா யார் செய்வதிலும் அர்த்தம் இருக்கிறது. இப்படிச் சீர்தூக்கிப் பார்த்து நம்மால் உறுதி செய்துகொள்ள முடியாத வாய்ப்புகளில், நமக்குச் சரியாகப் புரியாத ஏதோ ஒன்றில் தலையைவிட்டு உள்ளூர் வாழ்வு முறையைக் குலைப்பதற்கு / குழப்புவதற்குப்பதில், எங்கே எந்தப் பொருட்களை / சேவைகளை வாங்கி ஆதரித்தால், அல்லது யாரிடம் பணத்தைக் கொடுத்தால் நாம் உதவ விரும்புபவர்களுக்குச் சிறந்த பலன் கிடைக்கும் என்று தேடுவதுதான் சாலச் சிறந்த அணுகுமுறை. நான் சரியாகப் புரிந்துகொள்ளாத வேறு கோணங்களோ, அணுகுமுறைகளோ உங்களுக்குத் தெரிந்திருந்தால், நிச்சயம் பின்னூட்டங்கள் வழியே உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கற்றுக்கொள்ளக் காத்திருக்கிறேன்.

அடுத்த இதழில் இப்படிக் கடைநிலைத் தன்னார்வலர்களில்லாமல் பெரிய நிறுவனங்களும், மகா கோடீஸ்வரர்களும் செய்யும் பரோபகாரங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

(தொடரும்)

முகப்பிலிருக்கும் ஓவியத்திற்கு தொடர்புள்ள ஒரு‌ சுட்டி: https://vridar.org/2014/10/16/the-origin-of-the-good-samaritan-parable-and-other-lucan-favourites/

Series Navigation<< பரோபகாரம் – நம்பகத்தன்மைபரோபகாரம் – மஹா உதவல்கள் >>

4 Replies to “பரோபகாரம் – தன்னார்வுலா”

  1. பகுத்தாய்ந்து எழுதப்பட்ட ஆர்வமூட்டும் கட்டுரை. பெரும்பான்மை தன்னார்வவுலாக்காரர்கள் ,அதீத ஆர்வத்தினாலும்,, தாங்கள் வாழும் வகைமையே மேம்பட்டதாகவும், தேவன் அவர்களிடத்திலே கருணையை அதிகமாகக் கொடுத்து பணி செய்யப் பணித்திருப்பதாகவும் எண்ணுகிறார்கள் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னர் அனாதைச் சிறுவர் இல்லம் ஒன்று, சமூகத்தில் பெரும் மதிப்பு பெற்ற ஒன்று,,சிறுவர்களை வன் கொடுமை முதல், பல வகை வதைகளுக்கு உள்ளாக்கியதாக, தப்பித்து வந்த சிறுவன் அளித்த புகாரின் பேரில் அதற்கு எதிரான வழக்கு நடந்தது. நிறுவனமயமாக்குதலின் தவிர்க்க முடியாத விளைவென்பது அதில் அனைவரும் சீரான அற நோக்கோடு செயலாற்றுவார்கள் என எதிர்பார்ப்பதே.வீடுகளில் வளரும் அனாதைக் குழந்தைகள் ஒப்பு நோக்கில் நன்றாக வளர்க்கப்படுகிறார்கள் என்றாலும், இப்போது வெளியாகும் பல செய்திகள் அதிக அளவில் குடும்ப வன்முறையைப் பேசுகின்றன.நானறிந்த ஒருவர் ‘ட்ரஸ்ட்’ மூலம். அவரது சக்திகேற்ப உதவ முன்வந்தார் ஒரு மருத்துவ நிறுவனத்திற்கு.. இந்த இடத்திலே மிகக் குறைந்த வருவாய் உள்ள கீழ் மத்தியத்தர மக்களுக்கும், ஏழைகளுக்கும் மருத்துவம் செய்யும் நிறுவனம் அது; பல பத்தாண்டுகளாக சேவை நோக்கோடு இயங்கி வருகிறது. இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்த,’ ட்ரஸ்ட்’ தனக்கு விளம்பர வெளிச்சம் வேண்டும் என்று ஏங்கியது..அந்த மருத்துவ மனை ஆண்டறிக்கையில் எல்லாவற்றையும் குறிப்பிடும், உதவி செய்தவர்களுக்கு நன்றி பாராட்டும், அவ்வளவுதான்; தனிப்பட்ட முறையில் கௌரவித்துக்கொண்டே இருக்காது. புகழும் ஒரு போதை அல்லவா? நம்மை முன்னிறுத்தாமல், நமக்குத் தெரிந்த குடும்பங்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்தாலே ஆத்ம திருப்தி வரும்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.