பனபூல்
ஆங்கிலத்தில்: நீதா தாஸ்
தமிழில்: கே.ஜே. அசோக்குமார்

“இருக்கட்டும், இருக்கட்டும், அது ஒரு விஷயமில்லை. உங்களுக்கு எப்போது கைக்கு வருகிறதோ அப்போது திருப்பி தரலாம். என்ன அவசரம்” என்று பிதுபாபு விகாரமாகக் கூறினார்.
அதனினினும் விகாரமாக உணர்ந்தார் நிகில்பாபு, “உண்மையில் இது வருத்தமளிக்கிறது. உன்னை மூன்று முறை திரும்பி அனுப்பியிருக்கிறேன். இன்று, நிச்சயமாக உனக்குப் பணம் கொடுத்திருக்க வேண்டும். உண்மையில் நேற்றிரவு பணத்தைப் பக்கத்தில் வைத்துப் படுத்திருந்தேன். ஆனால் இன்று காலை திரு போஸ் சோகமா இருந்தார். பெனாரசில் அவன் மகன் உடல்நலமில்லாமல் இருக்கிறான்; அவனுக்கு அவசியம் பணம் தேவையென்று தந்தி ஒன்று வந்திருக்கிறது.”
பிதுபாபு, “அவருக்கு பணம் கொடுத்தது சரியான செயல்தான். இது ஒரு விஷயமில்லை. அவர் திரும்பிக் கொடுத்ததும் எனக்குக் கொடுக்கலாம். பிபின் எனக்குக் கொஞ்சம் கடன் கொடுக்கிறாரா என பார்க்கணும்….” என்றான்.
இன்றைக்கு எனக்கும் பணம் தேவை என்று சொல்லியபடி எழுந்துநின்று, வெளியேறினார் பிதுபாபு. அவர் வெளியேறியது, குழப்பமான பார்வையுடன் கலங்கடித்த முகத்துடன் நிகில்பாபு தனக்குள் சொல்லிக் கொண்டார். “என்ன ஒரு இழிமனிதன்! அற்பமான சின்னப் பணத்திற்குத் தூக்கத்தை இழக்க வைக்கிறான்.”
வெளியே நின்ற பிதுபாபுவின் மனநிலையும் மாற்றமேற்பட்டது. “இந்த முட்டாளால் எனக்கு கஷ்டம்தான் வரும் எனத் தெரிகிறது” குறைந்த ஒலியில் முனுமுனுப்புடன் கூறிக்கொண்டார்.
2

எப்போதும்போல நாள்கள் ஒடின. ஒரு வாரம் கழிந்தது. பிதுபாபு ஒருநாள் காலை மீண்டும் நிகில்பாபுவின் வரவேற்பறையில் தலைகாட்டினார். மூன்று மாதங்களுக்குமுன், பிதுபாபு பத்து ரூபாய் அவனுக்குக் கடன் கொடுத்தார், “நாளை பணத்தைத் திருப்பித் தருகிறேன்” என்று அவர் வாக்குக் கொடுத்திருந்தார். வெட்டியான பிதுசரண் போஸ் மாதிரியான ஆளிடம் பெரிய கம்பெனியின் ஹெட்கிளார்கான நிகில்நாத் மித்ரா அதுவும் ஒரு பத்துரூபாய் கடன்பட்டது விதியின் விளையாட்டுதான். அட விதியே, நான் உன்னை தலைவணங்குகிறேன். நல்ராஜாவைப் போன்ற ஒரு புத்திசாலித்தனமான ராஜா உங்கள் கைகளில் அவமானத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது; நான் ஒரு எளிய எழுத்தர் மட்டுமே.” இது நிகில்பாபுவின் சமாதானம். நிகில்பாபு தனது குழந்தை பருவத்தில் மகாபாரதத்தின் கதைகளைக் கேட்பதை மிகவும் விரும்பினார் என்று வதந்தி ஒன்று இருக்கிறது.
நிகில்பாபு தன் கவலைதோய்ந்த முகத்துடன் பிதுபாபுவின் வருகையை எதிர்பார்த்தார், ஆனால் பிதுபாபுவின் வருகை நிகில்பாபுவின் கவலையைப் போக்கிவிட்டது.
“நான் காப்பாற்றப்பட்டேன்! வாங்க பிதுபாபுவே. நான் ஒவ்வொரு நாளும் உங்களை நினைக்கிறேன். இன்று பக்கத்தில் உள்ளூர் நாடக நிகழ்ச்சி ‘கணேஷ்-ஓபரா’ இருக்கும். நீங்கள் வரவிரும்புகிறீர்களா? சினேகமான நண்பன் இல்லாமல் இதுபோன்ற விஷயங்களில் மகிழ்ச்சி இல்லை! தயவுசெய்து வாருங்கள்.”
பிதுசரணின் முழுமுகமும் ஏற்றிவைத்த முழுநிலவுபோல மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது. ஒளிரும் கண்களை தூக்கி, “நிச்சயமாக நிச்சயமாக, என்ன நேரம்” என்றார்.
“எட்டு, இன்று மாலை எட்டு.”
“சரி வருகிறேன்.”
அப்போது நிகில்பாபுவின் ஆறு வயது மகள் மிண்டு வந்து, “அப்பா, அம்மா சொன்னாங்க சர்க்கரை தீர்ந்துபோச்சாம்” என்றாள். பிதுபாபு, மிண்டுவுடன் உரையாடத் தொடங்கினார். அவர் தனது சொந்த மகளுடன்கூட இவ்வளவு பேசியதில்லை. “வாவ்! பொண்ணே, உன் ஃபிராக் மிகவும் அழகாக இருக்கிறது! ரிப்பனும் அழகாக இருக்கிறது!” மற்றொரு பத்து நிமிடங்கள் கடந்துவிட்டன. இதுபோன்ற அரட்டையிலேயே கழிந்தது.
பிதுசரண் இங்குவருவதன் முதன்மை நோக்கமே பத்து ரூபாயைப் பெறுவதற்குதான். அழுத்தம்கொடுத்துக் கேட்க அவரால் முடியவில்லை. பல சாக்குப்போக்குகளில் காலதாமதம் செய்வதை நிகில்பாபுவே பேச்சைத் தொடங்கினார். பிதுபாபு உறுதியான கண்ணிய உணர்வுடன் இருந்தார்.
மேலும் நிகில்நாத்பாபு நீதியுணர்ச்சியுடன் இருந்தார். அவர் இந்த விஷயத்தை எழுப்பியவர் அல்லர்.
இந்த ஆண்டு ஃபதேபூர் சிக்ரியில் கடுமையான குளிர் அதனால் ஏழை மக்கள்மீது பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நிகில் பாபு இது குறித்துத் தனது கவலைகளைப் பல வழிகளில் தெரிவித்தார்.
கடிகாரம் ஒன்பது முறை ஒலித்தது, நிகிக்நாத்பாபு, “நான் வேலைக்குச் செல்லத் தயாராக வேண்டும்” என்றார்.
இந்த முறை பிதுச்சரண்பாபுவால் இதை அதிக நேரம் நீடிக்க விடமுடியவில்லை. விரக்தியில் அவர் கேட்டார், “திரு. போஸிடமிருந்து பணத்தை நீங்கள் திரும்பப் பெற்றீர்களா?”
நிகில்நாத் வானத்திலிருந்து விழுந்ததைப்போலச் செயல்பட்டார், “சரி, சரி, நான் மறந்துவிட்டேன். உங்கள் பணம் என்னிடம் உள்ளது” அவன் சட்டைப் பையில் தூளாவ ஆரம்பித்தான்.
“ஓ கடவுளே, எங்கே என் சாவி” அவர் தனது அனைத்துப் பைகளிலும் தேடினார். மேசையின்கீழ், அலமாரிக்குமேல், அவர் எல்லா இடங்களிலும் தேடினார். விசித்திரம், அவர் சாவியைத் தேடிப்பிடிக்க முடியவில்லை. பிதுச்சரணும் தேடலுக்கு உதவினார், இறுதியாக, “அது இருக்கட்டும்; என்ன அவசரம்?” என்றார்.
3
மாலையில் சரியான நேரத்திற்கு வந்த பித்துச்சரண், நிகில்நாத் அந்த நிகழ்ச்சியில் இல்லை என்பதைக் கண்டார். விசாரித்தபோது, நிகில்நாத் சில முக்கியமான வேலைக்காக வெளியே சென்றுவிட்டதை அறிந்தார்; அவர் எப்போது திரும்புவார் என்பது நிச்சயமற்றிருந்தது.
பிதுச்சரண் தனியாக அந்நிகழ்ச்சியைப் பார்த்தார். அவர் உத்தராவின் நடிப்பை மிகவும் விரும்பினார்.
உடலுக்கும் மனதுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதை மறுக்க முடியாது. அதற்கான சான்றுகள் இருந்தன – அவர் உத்தராவின் வலியைக் கண்டு கண்ணீர் சிந்தினார். அடுத்த நாள் காலையில் இதயத்தின் வலி அவரது தொண்டையில் தஞ்சம் அடைவதை உணர்ந்தார். விழுங்குவது கடினம், அவருக்கு இரண்டு வீங்கிய டான்சில்கள் இருந்தன. அவர் தனது வெப்பநிலையை அளந்தார், அவருக்கும் லேசான காய்ச்சல் இருப்பதைக் கண்டார்.
லேசான காய்ச்சல் படிப்படியாக அதிகரித்தது; பின்னர், படுக்கையில் இருந்த பித்துச்சரண், நிகில்நாத்தை அவர் சந்திக்காவிட்டால், அவர் ஒருபோதும் தியேட்டருக்குப் போயிருக்கப் போவதில்லை என்று யோசித்தார். அந்த பத்து ரூபாய் மூலகாரணமாக இல்லாதிருந்தால், அவர் தனது நட்பின்மீதான விருப்பத்தின்பேரில் நிகில்நாத்தைச் சந்திக்கச் சென்றிருக்க மாட்டார் என்பதும் உண்மை. இவ்வாறு யோசித்த பிதுச்சரண், “அந்த ராஸ்கல் என்னை பணரீதியாகவும், உடல்ரீதியாகவும் கொல்வான்” என்று முணுமுணுத்தார். பிதுச்சரண் ஒரு வாரம் படுக்கையில் கிடந்தார். கூடுதலாக, அவர் தன் சிகிச்சைக்காக பதினேழு ரூபாயும் 87 பைசாவும் செலவிட வேண்டியிருந்தது.
4
மேற்கூறிய சம்பவத்திற்குப் பிறகு, ஒரு மாதம் கடந்துவிட்டது. பூமி ஒரு பெங்கால் அல்ல என்பதால், அது மதரீதியாக அதன் சுற்றுப்பாதையில் சுழல்கிறது; இயற்கையின்படி பகல், இரவு மாற்றங்கள்.
அது மாதத்தின் ஆறாவது நாள். கீழே ஒரு அறையில் அமர்ந்து, நிகில்நாத் மனக்கணக்கீட்டில் ஈடுபட்டார். நாளை அவரது சம்பள நாள். நிகர ஊதியம் ஐம்பத்தைந்து ரூபாய் மற்றும் 47 பைசா. வீட்டின் வாடகை பதினைந்து ரூபாயும், உள்ளூர் மளிகைக்காரருக்கு இருபது ரூபாயும் செலுத்தப்பட வேண்டும். அது இருபது ரூபாயும் 47 பைசாவும் மிச்சம். 47 பைசா – இருபது ரூபாயை என்று கணக்கிடவில்லை. அதிலிருந்து, முழுமாத மளிகை செலவுகள், குழந்தைகளின் பள்ளி கட்டணம், பால், மண்ணெண்ணெய், உடைகள் மற்றும் சலவை செலவுகள். அதனால் பிதுச்சாரணுக்கு பத்து ரூபாய் திருப்பித் தருவது சாத்தியமில்லை.
ஆனால் அவரது மனைவியிடம் கொஞ்சம் பணம் இருந்தது. வீட்டுச் செலவினங்களிலிருந்து அவள் கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தியிருந்தாள், ஆனால் நிகில் சரியான தொகை தெரியவில்லை; மேலும், இந்த சிறிய தொகைக்காக ஷோபாவிடம் பணத்தைப் பறிக்க அவர் விரும்பவில்லை. அதை அவர் எப்படி கேட்க முடியும்?
அவர் ஒரு பந்தயத்தில் பணம் கட்டும் பொருட்டுப் பிதுச்சாரணிடம் கடன் வாங்கியிருந்தார். அதில் அவர் தோற்றார் என்பதை சொல்லத் தேவையில்லை. அவர் தனது மனைவியிடம் குற்றமின்றி இதை வெளிப்படுத்த முடியவில்லை. அவர் எப்படியாவது தொகையைத் திருப்பிச் செலுத்திவிடமுடியும் என்று நினைத்திருந்தார். ஆனால் ஒவ்வொரு மாதமும் – மனக்கணக்கு செய்து – கொடுக்க இயலாது என்பதை அவர் உணர்ந்தார். நீண்ட நாட்கள் பொய்யான சாக்குப்போக்குகளில் பிதுபாபுவை இனி ஒதுக்குவது கடினம்.
எல்லாவற்றிற்கும் ஓர் எல்லை உண்டு. நிகில்நாத் அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தார்; அந்த நேரத்தில் அவர் சந்து திரும்பியதிலிருந்து பிதுவின் குரலைக் கேட்டார், “ஆம், நான் நிகில்பாபுவைப் பார்க்கும் வழியில் இருக்கிறேன்.”
தாமதிக்காமல், நிகில்நாத் அவசரமாக எழுந்து பக்கத்து ரகசிய அறைக்குள் நுழைந்து உடனே பூட்டிக்கொண்டார்.
5
“நிகில்பாபு”
மிந்து வெளிவந்தாள், “பாபா இங்கேதான் அமர்ந்திருந்தார். ஒருவேளை அவர் வெளியே போயிருக்கலாம்.”
“சரி, அவர் திரும்பி வரும்போது நான் வந்தேன் என்று அவரிடம் சொல்லுங்கள்.”
“சரி.”
பிதுபாபு வெளியேறினார். நிகில்நாத் தனது மறைவிடத்திலிருந்து வெளியேறி, “ஓ! ஓ! என் கடவுளே!” அலறினார். மூலையில் ஒரு குளவியின் கூடு இருந்தது. அதன் கொடுக்கால் காயமடைந்த நிகில்பாபு, திசைதிருப்பப்பட்டு, நோக்கமின்றி நகர்ந்தார்.
அவர் ஜாடியிலிருந்து சிறிது தண்ணீரை எடுத்துக் கண்களிலும் முகத்திலும் தெளிக்க ஆரம்பித்தார். உடனடியாக, அவரது வீங்கிய இடதுகண் ரப்பை மூடிக்கொண்டது, மற்றும் அவரது வலது கன்னவீக்கம் மிண்டுக்கு சிரிப்பை வரவழைத்தது. நிகில்நாத் மாடிக்குச் சென்று படுத்துக்கொண்டார். அதேநேரத்தில், இரண்டு பேர் பிதுபாபுவுக்கு உதவி செய்தார்கள். நிகில்பாபுவிடமிருந்து தன் பணத்தை எப்படி மீட்பது என்ற யோசனையில் மூழ்கி, வீதியில் தன்னைமறந்து நடந்து சென்றவிதத்தில் அவர் ஒரு வாழைப்பழத் தோல் வழுக்கி விழுந்தார். அவர் தலை உடைந்தது, அத்தோடு அவர் கையையும் உடைத்துக்கொண்டார்.
அந்த இரண்டு வழிப்போக்கர்களின் உதவியால் மிகுந்த வேதனையைத் தாங்கிக் கொண்டிருந்த அவர், சொந்த வீடு வெகு தொலைவில் இருந்ததால், நிகில்நாத்தின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
நிகில்நாத் மாடியில் கட்டிலில் படித்திருந்தார். பலமுறை அழைப்பு விடுத்தபின்னே அவர் கீழே வந்து பிதுசரண் திரும்பி வந்திருப்பதை வலது கண்ணால் பார்த்தார்.
ஒருவருக்கொருவர் பார்த்த மாத்திரத்தில் ஒரே நேரத்தில் அவர்கள் “என்னைக் காப்பாற்று” என்றார்கள்.
***
அதன்பின், மேலும் மூன்று மாதங்கள் கடந்துவிட்டன.
நிகில்நாத் இதுவரை அவருக்குப் பணத்தைத் திருப்பிச் செலுத்தவில்லை.
பிதுசரண் தொடர்ந்து தனது சுற்றுகளைச் செய்து வருகிறார்.
குறிப்பு: பனபூல் (வங்கமொழியில் “காட்டு மலர்”) என்ற புனைப்பெயரில் எழுதிய பலாய் சந்த் முகோபாத்யாய் (1899-1979) எழுத்தாளர் மட்டுமல்லர், மருத்துவரும்கூட, அவரது சிறுகதைகள் சோமர்செட் மாம் மற்றும் செக்கோவ் உள்ளிட்ட உலகின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுடன் ஒப்பிடப்பட்டன. 60 நாவல்கள், 500க்கு மேற்பட்ட சிறுகதைகள், 5 நாடகங்கள், ஒரு சுயசரிதை, பல்வேறு கட்டுரைகள் என்று எழுதியிருக்கிறார்.