பக்கிம் + பாரதி = பரவசம்

புறவயத்தே சம்பந்தமற்றதாய்க் கருதப்படும் இரு நிகழ்வுகள், ஒத்த சமயத்தில் நடந்தேறினால் அதைத் “தற்செயல்” என்போம் . இதையே சற்று ஆழப்படுத்தி நீட்டித்துப் பார்த்தால்… புறவயத்தே தொடர்பற்ற இரு உணர்வுகள் அகவயத்தே இணைந்தால் அதுவும் தற்செயலா? அத்தகைய ஓர் ஆச்சரிய நிகழ்வு 1882ஆம் ஆண்டு அரங்கேறியது. பக்கிம் சந்திர உபாத்தியாயா காலத்தால் அழியாத “ஆநந்த‌ மடம்” நாவலை அந்த ஆண்டு வெளியிடுகிறார். அதற்கு ஒரு தினம் முன்னர் “யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்” என்ற பெருங்கவி தமிழ் மண்ணில் தோன்றுகிறார். ஆநந்த‌ மடத்தை வங்கத்தில் வாசித்து மகிழ்ந்த பாரத தேவி தன் நாளங்களின் வழியே அந்த உணர்வைக் கடத்தி தென்கோடியில்,  அதற்கு ஒரு தினம் முன் பிறந்த பாரதிக்கு ஊட்டியிருப்பாள் போலும்…

“வந்தே மாதரம்” இருபதாண்டுகள் பாரதத் தாயின் வழியே பாரதிக்குள் திரண்டு கெட்டித்துக்கொண்டே வந்திருக்க வேண்டும். எனவேதான் 1905ஆம் ஆண்டு சக்ரவர்த்தினியில் தாம் எழுதிய கட்டுரையில், “பக்கிம் சந்திர பாபுவின் சொற்களைத் தமிழ்ப்படுத்த எனக்குப் போதிய வன்மை இல்லாவிடினும், தமிழ் நாட்டாருக்கு அச்செய்யுளின் பொருளுணர்த்த வேண்டுமென்ற ஆசைப் பெருக்காலேயே யான் இதனைத் துணிந்திருக்கிறேன்” என்கிறார். இது மட்டுமா? “தெய்வப் புலவர்” என்றால் நாம் அனைவரும் திருவள்ளுவர் என்போம். ஆனால் பாரதி தனது கட்டுரையில் “தெய்வப் புலவராகிய பக்கிம் பாபு” என்று அழைக்கிறார்.

அப்படி என்ன இருக்கிறது ஆநந்த‌ மடம் நாவலில் இயற்றப்பட்ட வந்தே மாதரம் பாடலில்? ஆகாஷவாணியில் அதிகாலை ஒலிக்கக் கேட்டிருப்போம்… பள்ளியில் பாடியிருப்போம்… எவரேனும் சுருங்கச் சொல்லிய அர்த்தம் கொண்டும் அந்த ராகத்தின் வழியே தேசத்தாயின் கருணையும் அவள்பால் நாம் கொண்டிருக்கும் அன்பையும் மெல்ல உணர்ந்திருபோம். பொருள் முழுதும் புரியாமலேயே இப்படி என்றால் பாரதியின் எழுதுகோல் முனையிலிருந்து வழியும் தமிழ் மூலம் அதன் பொருள் புரியும்போது எப்படியிருக்கும்? கபிலரின் பாட்டொன்றை உவமைக்கு உபயோகப்படுத்தத் தோன்றுகிறது. “…பலாஅம் பழுத்த பசும்புண்ணரியல் வாடை துரக்கு…” என்பது அவர் வரி. அதாவது பழுத்த பலா வெடித்து அந்த வெடிப்புகளிலிருந்து வழியும் தேனின் வாசத்தைக் காற்று தொலை தூரங்களிலும் தெளித்துச் செல்லும் என்பது பொருள். வங்கத்துப் பலா, நேரடியாகத் தொட முடியாத மொழியில் வெடித்து, அதன் கவித்தேன் வாசம் தென்னாடு வரை வீசி, தமிழ் வழியே நுகர்கையில் அது தேனூறிய பலாவை உண்ட உணர்வுக்குச் சமமன்றோ?

“ஆநந்த‌ மடம்” பாரத தேசத்தில் எழுதப்பட்ட முதல் அரசியல் / விடுதலைக் கிளர்ச்சி பற்றிய நாவல் எனலாம். மிகச் சுருக்கமாக இதன் கதையை சொல்ல வேண்டுமெனில், சந்நியாசிகள் ஒரு குழுவினர் ரகசியமாக அடர்ந்த காட்டினுள் ஒரு மடத்தில் வசிக்கின்றனர். பாரதத் தாய் தவிர்த்து வேறொன்றும் அவர்களுக்கு பொருட்டன்று. தேச விரோதிகளைத் தீரத்துடன் எதிர்த்து மடிகின்றனர். “வந்தே மாதரம்” என்பது அவர்களுக்குத் தாய்ப்பால் போல… உயிர்ப்பும் உத்வேகமும் கொள்ள அதைப் பாடுகின்றனர். “பக்தி” என்பதே இந்த நாவலின் கரு. எதன் மீது? அதையறிய இந்நாவலின் முதல் பதிப்புக்கென எழுதப்பட்ட மிக வித்தியாசமான முன்னுரையை நாம் வாசித்தாக வேண்டும். ஒரு கவிதை வாசித்த உணர்வு இந்த முன்னுரை வாசிக்கையில் கிட்டும். இந்த நாவல் சொல்ல வருவது என்ன என்பதும் விளங்கும்.

ஓர் அடர்ந்த காடு. அங்கு நெருங்கி ஓங்கி வளர்ந்திருக்கும் பல்வகை மரங்களால் எப்போதும் அந்தகாரம் சூழ்ந்திருக்கும். “இந்தப் பிரபஞ்சத்தில் இப்படியொரு நிசப்தம் பற்றி நினைக்க முடியாது.” அப்படியோர் அமைதி. அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு “என் ஆசை ஈடேறுமா” என்று ஒரு குரல் கேட்கிறது. மீண்டும் நிசப்தம். மீண்டும் முன்னரைவிட மேலெழுந்து அதே குரல்… அப்போது அதற்குப் பதிலாகக் காட்டினுள் “அதற்கு நீ சமர்ப்பிக்கும் காணிக்கை யாது?” என்றொரு குரல் கேட்கிறது. “என் உயிரையே கொடுப்பேன்” என்று வருகிறது பதில். அதற்குக் காட்டின் குரல் “உயிர் கேவலம் அற்பமானது. அதை அனைவரும் விடக்கூடியவர்களே” என்கிறது. பிறகு வேறு எதைத்தான் கொடுப்பது என்று ஆசை யோசிக்கையில், “பக்தி” என்று வருகிறது பதில்.

ஆம். பக்தியின் வெவ்வேறு நிலைகள், அந்த வெவ்வேறு நிலைகள் மானுடம் வழியே உரையாடும் பொழுதுகள், அது வெளிப்படும் சூழ்நிலைகள், அதன் எதிர்நிலைகள் என அதன் ஸ்வரத்திலேயே நகர்கிறது நாவல். “வந்தே மாதரம்” தோன்றுவதும் அத்தகைய ஒரு காலத்துளியினுள்ளேயே… மகேந்திரனும் கல்யாணியும் தங்களின் குழந்தையுடன் 1770களில் ஏற்பட்ட பெரும்பஞ்சத்தில் தாக்குப்பிடிக்கத் தங்கள் கிராமத்திலிருந்து நகரம் நோக்கிப் பயணிக்கின்றனர். இடையில் ஒரு பெருங்காட்டில் சூழ்நிலையால் மகேந்திரன் பிரிகிறான். கல்யாணியைக் கண்டுபிடிக்க பெருமுயற்சி செய்கிறான். அவளோ ஒரு சந்நியாசியின் உதவியால் “ஆநந்த மடம்” அடைகிறாள். சந்நியாசி, பவாநந்தன் என்னும் சிஷ்யனை மகேந்திரனைக் கண்டுபிடிக்க அனுப்புகிறார். மகேந்திரனும் பவாநந்தனும் சந்திக்கின்றனர். கல்யாணி ஆநந்த மடத்தில் இருப்பதைத் தெரிவித்த பவாநந்தன், மகேந்திரனை அழைத்துக்கொண்டு நிலவொளியில் காட்டின் வழியே இருவரும் பயணிக்கின்றனர். பவாநந்தன் வந்தே மாதரம் பாடலை பாடத் துவங்குகிறான்.

“இனிய நீர்ப்பெருக்கினை இன்கனி வளத்தினை
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை
பைந்நிற பழனம் பரவிய வடிவினை”

என்று பாடியவுடன் “இவை வாய்க்கப் பெற்ற தாய் யார்?” என்று மகேந்திரன் கேட்கிறான். அதற்குப் பதில் சொல்லாமல் பாடலைத் தொடரும் பவாநந்தன்,

“வெண்ணிலாக்கதிர் மகிழ்விரித்திடு மிரவினை
மலர்மணி பூத்திகழ் மரன்பல செறிந்தனை
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை
நல்குவை இன்பம் வரம்பல நல்குவை”

என்று மேலும் பாடுகிறான்… இது தேசத்தைப் பற்றியதன்றோ? தாய் என்பதற்கு ஒரு தொடர்பும் இல்லையே என்கிறான் மகேந்திரன். “பிறந்த பூமியே எங்கள் தாய். நாங்கள் அனைவருமே அவளின் சந்தானங்கள். எங்களுக்குத் தாயில்லை தந்தையில்லை. உடன்பிறந்தோர் இல்லை. மனைவி இல்லை மக்கள் இல்லை. வீடில்லை வாசலில்லை. எங்களுக்கு இருப்பது இந்த பூமி மட்டுமே” என்று பவாநந்தன் விளக்கியபின் மகேந்திரனுக்குப் பாடலின் பொருள் புரியத்துவங்குகிறது. மீண்டும் பாடும்படி வேண்டுகிறான். முதலிலிருந்து மீண்டும் பாடிய பவாநந்தன் தொடர்ந்து,

“முப்பது கோடிவாய் நின்னிசை முழங்கவும்
அறுபது கோடி தோளுயர்ந் துனக்காற்றவும்
திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்
அருந்திறலுடையாய் அருளினை, போற்றி
பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை

நீயே வித்தை நீயே தர்மம்
நீயே இதயம் நீயே மருமம்
உடலகத்திருக்கும் முயிருமன்னீயே

தடந்தொ ளகலாச்சத்தி நீ! யம்மே,
சித்தநீங்கா துறுபத்தியு நீயே
ஆலயந்தோறு மணிபெற விளங்கும்
தெய்வீக வடிவமுந் தேவியிங்குனதே!

ஒரு பது படைகொளு முமைய வணீயே
கமல மெல்லிதழ்களிற் களித்திடுங் கமலை நீ!
வித்தை நன்கருளும் வெண்மலர்த் தேவி நீ!

போற்றி! வான் செல்வீ, புரையிலை நிகரிலை
இனிய நீர்ப்பெருக்கினை இன்கனி வளத்தினை
சாமள நிறத்தினை சரளமாந் தகையினை
இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை
தரித்தெமக் காப்பாய்! தாயே, போற்றி!”

என்று பாடுகிறான். கண்ணீர் சொரியப் பாடலை நிறைவு செய்கிறான்.

மிக எளிய, படித்தால் கரு உணர்ந்து கொள்ளும்படியான வரிகள். ஆனால் சில மந்திர வார்த்தைகள் உண்டு. தமிழில் வாசிக்கையில், சொல்லின் அமைப்பால் அது தரும் பொருளால் வங்கத்தைத் தாண்டி நம் நாடு முழுமைக்கும் பொருள் பதியும் வகையில் பாரதியால் கோர்க்கப்பட்ட வரிகள் அவை. மலயம் என்பதற்கு சந்தனம் என்று அர்த்தம் என்பதால் “நறு மலய” என்பதைச் சந்தன மணம் என்று கொண்டாலும், மலயம் என்பது பொதிகை மலையையும் குறிக்கும் என்பதால் நாட்டின் தெற்கு வரை பாடல் பொருந்தச் செய்வதாகவும் கொள்ளலாம். “பழனம்” என்றால் மருத நிலம். வயலும் வயல் சார்ந்த இடமும்… இந்திய வரைபடம் முழுவதையும் பசுமை போர்த்திய வயல்வெளிகளாய் நினைத்துப் பார்ப்போம்… நேரடியாய்க் கற்பனை செய்யக் கடினமாய் இருந்தால், பாரதி “பைந்நிற பழனம் பரவிய வடிவினை” என்பதை இன்னும் எளிமையாக்கி “வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்” என்று பாடியதைக் கற்பனையில் கொள்ளலாம்.

“சப்த கோடி” என்பது பக்கிம் எழுதிய மூலவரி. அதாவது வங்கத்து மக்களைக் குறிக்கும் வகையில் எழுதியது. பாரதியோ, வந்தே மாதரம் வங்கத்துக்கு மட்டும் உரித்தானது இல்லை, பாரத தேசம் முழுமைக்கும் உத்வேகம் அளிப்பது என்ற பொருளிலோ, பாரத தேவியின் பிள்ளைகள் அனைவரும் உச்சரிக்கப் வேண்டும் என்ற அவாவிலோ “முப்பது கோடி” என்று மாற்றிப் பாடியிருக்கிறார்!

“துமி மர்ம” என்னும் பக்கிம் சந்திரரின் வரியைப் பாருங்கள். இப்பாடலின் அடிநாதத்தைச் சுட்டும் வரி இது. இதைத் தமிழில் அப்படியே “நீயே மருமம்” என்று பாரதி பாடியுள்ளார். சித்தன் பாடியதன்றோ? எனவே சித்தனின் சிந்தனைக் கோணத்திலேயே இதன் பொருளறிய முயல வேண்டும்! “மருமம்” என்பது பல பொருள் கொண்டது! அது ஒரு விந்தை என்றால், இப்பாடலில் அதன் அத்தனை அர்த்தங்களுடன் பொருந்தியிருப்பது இன்னொரு விந்தை! ஒவ்வொன்றாய் பார்க்கலாம்… முதலில், உறைவிடம் என்ற பொருள். நீயே எனது உறைவிடம் எனக் கொள்ளலாம். கோசம் அல்லது உயிர் (அணுக்கள்) தாங்கும் உறுப்பு என்றும் பொருள். அதாவது நீயே அனைத்துப் பிறப்புகளுக்கான காரணி. ஒரு பொருள் மீதேறி இன்னொரு பொருளில் இறங்கும் சாத்தியமும் இச்சொல்லுக்கு உண்டு. மருமம் என்பது அண்ட கோசம் என்றானால், அண்ட கோசத்திற்குப் பீசப்பை என்றொரு மற்றொரு சொல்லும் உண்டு. பீசப்பை என்பதற்கு மூலவிதை என்ற மற்றொரு பொருளும் வரும். அதாவது நீயே அனைத்திற்கும் விதை என்ற அர்த்தம் வரை நம்மால் எடுத்துச்செல்ல இயலும். இதையே வேறொரு பார்வையில் பார்த்தால், பீசப்பையின் அடிச்சொல் பீசம். பீசம் என்பதற்கு பீசாட்சரம் என்றும் பொருள். பீசாட்சரம் என்றால் மந்திர எழுத்து! அதாவது “நீயே என் மந்திரம்”! பக்கிம் சந்திரரும் பாரதியும் வடித்த மந்திர எழுத்து இது!

இப்படிப்பட்ட பாடலைத் தமிழ்நாட்டில் அனைவரும் கேட்க வேண்டும் என்று பாரதி ஆசை கொண்டதில் வியப்பென்ன? பாரதியின் ஏக்கம் எப்படி நடந்தேறியது? அதற்கு மகேச குமார சர்மா என்பவரை நாம் அறிய வேண்டும். இவர் வங்கத்தின் முதல் நூல் என்று அறியப்படும் “பக்தி யோகம்” என்பதைத் தமிழில் கொண்டுவந்தவர். சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் சுதேச மித்திரன், விவேக போதினி, லோகோபகாரி போன்ற சிறந்த இதழ்களில் அற்புதமான கட்டுரைகள் பல எழுதியவர் என்று அறியப்பட்டவர். மகேச குமார சர்மாவே ஆனந்த மடம் நாவலைத் தமிழ்ப்படுத்தித் தந்தவர். இவரும் பாரதியும் நெருங்கிய நண்பர்கள். இவ்வாறே ஆனந்த மடத்தில் வரும் வந்தே மாதரம் பாடலை மட்டுமின்றிப் பிற பாடல்களையும் தமிழில் இயற்றும் அரிய நிகழ்வு பாரதிக்கு அமைந்தது. 

சுதேசமித்திரன் நடத்திய சுப்பிரமணிய ஐயர் ஆநந்த மடம் நாவலுக்கும் பாயிரம் எழுதியுள்ளார். “இந்திய ஜனங்களுக்குத் தேச அபிமானம் என்பதே தற்காலத்தில் உருவான புது உணர்ச்சி. ஆதிகால எழுத்தாளர்கள் அருமையான கருத்துகளையும் அறிவையும் ஊட்டியபோதும் ஆரிய தேசம் தனி தேசம். அதில் வசிப்பவர் தங்கள் ஜன்மபூமியை அன்னைபோல் கருதி அவள் பெருமைக்கும் செல்வத்துக்கும் உழைக்கக் கடவர் என்னும் பெரும் பாடத்தைப் படிப்பித்தவர்கள் அல்லர்” என்கிறார்! மேலும், “வங்காளத்தில் வங்காளிகள் அபிமானமும் பக்தியும் வைக்க எவை காரணங்களோ அவைகளே இந்தியாவில் இந்தியர்கள் அபிமானமும் பக்தியும் வைக்கக் காரணங்களாம். ஆநந்த மடத்தை வாசிக்கும் தமிழர்களுக்குத் தமிழுலகத்தை மட்டும் தழுவிய அபிமானம் உண்டாகாமல் தேசம் முழுவதும் வியாபித்த அபிமானமே உண்டாக வேண்டும்” என்று நிறைவு செய்கிறார்! பாயிரத்திற்கும் நாவலுக்கும் அற்புதமாய்ப் பொருந்திப்போகிறது பாரதி தமிழ்ப்படுத்திய வந்தே மாதரம்!

கலை பல செழித்தோங்கிய காலத்திலிருந்து கணிப்பொறிக் காலத்திற்கு வந்துவிட்ட பாரதத்தில் பல்வகை “பொருந்திலர்”  நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு உருவில் நம் அன்னையின் பண்புகளுக்குப் பங்கம் விளைவிக்க முயல்வதைத் தடுக்கவும் ஒடுக்கவும், இன்றும் என்றும் நாம் ஒவ்வொருவரும் உச்சரித்து உச்சரித்து உள்ளேற்ற வேண்டிய மந்திரம் ‍ “வந்தே மாதரம்!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.