சி.எஸ். லக்ஷ்மி
தமிழில்: சு. அருண் பிரசாத்

1960-இல் கொல்கத்தாவில் பிறந்த மல்லிகா சென்குப்தா, வங்காளத்தின் முன்னணிக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். பன்னிரெண்டு கவிதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், பாலினம் சார்ந்த இரண்டு கட்டுரைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல், வங்கப் பெண்களின் கவிதை தொகுப்பாசிரியர் என பதினேழு நூல்களை வெளியிட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள மகாராணி காசிஸ்வரி கல்லூரியின் சமூகவியல் துறையின் தலைவராக இருந்தார். அபர்ணா ஸென்னை பதிப்பாசிரியராகக் கொண்டிருக்கும், மாதம் இருமுறை வெளிவரும் சனந்தா
என்ற வங்க இதழின் கவிதைப் பகுதிக்கு ஆசிரியராகப் பனிரெண்டு ஆண்டுகள் இருந்தார். சுகந்தோ புரோஷ்கர் (1998), மேற்கு வங்க அரசு வழங்கும் பாங்ளா அகாதெமி விருது (2004), இந்திய அரசு கலாச்சாரத் துறையின் இலக்கியத்துக்கான ஜூனியர் ஃபெல்லோஷிப் (1997-99) ஆகியவற்றை சென்குப்தா பெற்றுள்ளார். இந்தியா, ஸ்வீடன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு பல்வேறு கவிதைத் திருவிழாக்கள், கூட்டங்கள், கருத்தரங்கங்கள் ஆகியவற்றுக்காக அழைக்கப்பட்டுள்ளார். இவரது படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பல்வேறு தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. கற்பித்தல், எழுத்து, எடிட்டிங் ஆகியவற்றோடு, பாலின நீதி மற்றும் மற்ற சமூகப் பிரச்சினைகளின் தீர்வுகளுக்காக இவர் செயலாற்றியுள்ளார்.
ஆங்கிலத்தில் நிகழ்ந்த உரையாடலில் இருந்து தொகுக்கப்பட்ட பகுதிகள் இவை.
மல்லிகா சென்குப்தா சி.எஸ். லக்ஷ்மியுடன் உரையாடல், கொல்கத்தா, செப்டெம்பர் 26, 2005.
[[இந்த உரையாடல் நிகழ்ந்தபோது மல்லிகா சென்குப்தா புற்று நோய் பாதிப்பின் ஆரம்ப கட்டத்திலிருந்தார். வருந்தத் தக்க விதமாக, 28 மே, 2011 அன்று காலமானார்.]
*** ***
மல்லிகா சென்குப்தா: என் தந்தை அரசு வேலையில் இருந்ததால், மேற்கு வங்கத்தின் பல்வேறு புறநகர்களிலும் கொல்கத்தாவிலும் நான் வளர்ந்தேன்…
சி.எஸ். லக்ஷ்மி: பணியிடமாற்றல்…

ப: ஆம், மாற்றலுக்குட்பட்ட அரசுப் பணி, மாநில அரசுப் பணி. எனவே நான் பல புறநகர்களில் வசிக்க நேர்ந்தது, உண்மையில் அது எனக்கு மிகவும் உதவியது. ஏனென்றால், நகர்களில் மட்டுமே வளர்ந்தவர்களுக்கு உடன் குடியிருக்கும் சமூகக் குழுவின் சில நுணுக்கமான அம்சங்களை அறிவது, சில [சமூக] உணர்வுகள் இவை கட்டாயம் தேவை; எனக்கு அவை கிட்டின. ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு மொத்தமாக மாறிக் கொண்டே இருந்ததால், சமயங்களில் நான் பெரும்பாலும் தனியாகவே வளர்ந்துவந்தேன், என்னுடைய நண்பர்கள் எல்லோரையும் விட்டுப்பிரிவதால், புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு எப்போதுமே இருந்தது. எனவே சில நேரங்களில் நான் மிகவும் தனிமையில் இருந்தேன், ஆனால் அது நான் கொஞ்சம் கற்பனை உடையவளாவதற்கு உதவியது.
கே: உங்களுடன் கூடப் பிறந்தவர்கள் இருக்கிறார்களா?
ப: ஆம், என்னைவிட இளையவனான சகோதரர் ஒருவர், ஆக நாங்கள் இருவர்; நாங்கள் இருவரும் ஏராளமான கதைப் புத்தகங்கள், பெரும்பாலும் வங்கமொழியில், வாசித்திருக்கிறோம். கதாபாத்திரங்கள் எனக்குப் பின்னால் ஓடுவதைப் போல் கற்பனை [செய்திருக்கிறேன்], இதைப் போல் ஏராளமான விஷயங்கள் குறித்து [கற்பனை செய்திருக்கிறோம்].
கே: சாகசங்கள்…
ப: ஆம், ஒருவேளை பிற்காலத்தில் என் வாழ்க்கையில் கற்பனைத் திறனுடன் எழுதுவதற்கு அது உதவியிருக்கலாம், எனவே, அது எனக்கு உதவியது என்று நினைக்கிறேன்.
கே: அந்த இதழின் பெயரென்ன?
ப: ஷடோபிஷா என்று அது பெயரிடப்பட்டிருந்தது. ஷடோபிஷா என்பது ஒரு நட்சத்திரம். நட்சத்திரத்தின் பெயர் அது. [தமிழ் மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு: பெங்காலி உச்சரிப்பில் ஷடோபிஷா என்று குறிப்பிடப்படுவது ஷடபிஷா என்று கூறப்படும் நட்சத்திரம். தமிழில் சதயம்] அதன் பிறகு தேஷ் இதழில் எழுதினேன். தேஷ் பிரபலமான இதழ், இலக்கிய இதழ். ஒரு கவிதை தேஷ் இதழிலும் வெளியானது, அதன் பிறகு…
கே: அந்தக் கவிதைகள் எதைப் பற்றியவை?
ப: தேஷில் வெளியான கவிதை வீடு. ஒரு நாடோடியாகத் தன்னை நினைத்துக் கொண்டு அவளுக்கு உரிமையான ஆணிடம், அடுத்த பனிக்காலத்துக்கு முன்பு, நாம் நம்முடைய சொந்த மூங்கில் வீட்டைக் கட்டுவோம், அப்போதுதான் நான் குழந்தை பெற்றுக் கொள்ளமுடியும், அவனை எடுத்துக் கொண்டு நாம் அடுத்த வீட்டுக்குச் செல்வோம் என்று ஒரு பெண் பேசிக் கொண்டிருக்கிறாள். மிகவும் சிறியதான வீடு என்ற அந்தக் கவிதையில், வரலாற்று நதியான த்ரிஷத்வதி பற்றிய குறிப்பு வருகிறது. சரஸ்வதி, த்ரிஷத்வதி ஆகிய இரண்டு நதிகளின் கரைகளில்தான் ஆரியர்கள் பிற்பாடு பரவினர். ஆகவே அவை இரு ஆரிய நதிகள். இந்த ஆதி நதியின் அருகில் வாழும் பெண்ணாக, என்னுடைய மூங்கில் வீடு, என்னுடைய பண்ணை இத்யாதிகளைப் பற்றி எனக்கானவனிடம் பேசுபவளாக என்னைக் கற்பனை செய்துகொண்டேன். அதுதான் அந்தக் கவிதை. நான் இப்படித்தான் [கவிதை எழுதத்] தொடங்கினேன், ஒரு வகையில், மக்கள் என் கவிதைகளை விரும்பினர், அந்தக் காலகட்டத்தில் அவர்கள் என் கவிதைகளை விரும்பினர், ஏனென்றால் எழுத்தில் நான் பெண்ணியப் பாங்கை நோக்கிச் செல்வதைப் புரிந்துகொள்ள அவர்களுக்குக் காலம் பிடித்தது. (சிரிப்பு) அதன் பிறகு, கவிதை எழுத்தின், வங்கக் கவிதையின் மையநீரோட்டத்துக்குள் நான் நுழைந்தபிறகு, என்னுடைய கருத்தாக்கங்கள் வடிவம் பெற்று, ஒருமுகப்படுத்தப்பட்டு, நான் ஒரு பெண்ணிய எழுத்தாளராக வெளிப்படத் தொடங்கினேன்.
கே: ஆக நீங்கள் ஒரு பெண்ணிய எழுத்தாளராக வரப்போகிறீர்கள் என்பதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை என்று சொல்கிறீர்கள்?
ப: மெதுவாக அவர்கள் எல்லோரும் புரிந்துகொள்ளத் தொடங்கினர்.
கே: நீங்கள் எப்படி ஒரு பெண்ணிய எழுத்தாளராக ஆனீர்கள்?
ப: உண்மையில், தொடக்கக் காலத்தில் அந்தத் தொனி என்னுடைய எழுத்தில் இருந்தது, ஆனால் சற்று மறைந்திருந்தது, ஒருவேளை என்னுடைய ஆரம்பக் காலக் கவிதைகள்…
கே: கொஞ்சம் கற்பனாவாதமாக இருந்தனவா?
ப: இல்லை, அதை அப்படி வரையறுக்க முடியாது, அவற்றில் கற்பனை இருந்தது ஆனால் அதே நேரம் வழக்கத்திற்கு மாறான சொற்களையும் மொழியையும் அவை கொண்டிருந்தன. அது என்னைக் கவர்ந்தது. ஆனால் படிப்படியாக எண்ணங்கள் ஒருமுகப்பட்டுப்போனபின் கொஞ்சம் நேரடியாகச் சொல்வதில் கவனம் செலுத்தினேன். அப்போது இது ஒரு வித்தியாசமான வகை என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆகவே அது அவர்கள் பாராட்டும் விதத்தையும் மாற்றியது…. [என் கவிதைகள்] ஒரு வகை கருப்பொருளால் கட்டப்பட்டவை. பார்க்கப்போனால் கவிதா ஷிங்ஹோவைப்போல் மற்றப் பெண்ணிய எழுத்தாளர்கள், ஐம்பதுகளில் இருந்தார்கள், அவர்கள் பெண்ணியக் கவிதைகள் மற்றும் உரைநடை எழுதினர். அவர் காலமாகிவிட்டார், ஆனால் அவர் ஒரு பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார், ஆனால் அந்தக் காலகட்டத்தில் பெண்ணியம் என்பது பேசாப் பொருளாகக் கருதப்பட்டது. அவர் குறைவாக மதிப்பிடப்பட்டார், ஒரு வகையில் ஒதுக்கப்பட்டார். ஆக [பெண்ணிய எழுத்தாளராக] அறிவித்துக் கொண்ட முதல் நபர் நான்தான் என்று நினைக்கிறேன்; பெண்ணிய எழுத்தாளர் என்று அறிவித்துக் கொள்வதில் நான் கவலைகொள்ளவில்லை, ஆனால் பெரும்பாலான மூத்த எழுத்தாளர்கள்-அவர்கள் எழுத்தில் ஓரளவு பெண்ணியக் கூறுகள் இருந்தபோதிலும், “நான் இதை எழுதுகிறேன் ஆனால் நான் பெண்ணியவாதி அல்ல,” என்று கூறுபவர்களை நான் பார்த்திருக்கிறேன். எனவே பலர் அதனால் வரும் இழுக்கை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனால் நான் அப்படி எல்லாம் மறுக்கவில்லை. மாறாக, நான் அப்படி அழைக்கப்பட வேண்டும் என்றே நினைத்தேன். ஒரு நபராக நான் ஒரு பெண்ணியவாதி, ஒரு பெண்ணிய எழுத்தாளர் அல்லது பெண்ணியக் கவிஞர் என்று அவர்கள் என்னை அழைத்தால் எனக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை. அப்படிக் கூறப்படுவதை நான் மறுக்கக் கூடாது. ஆகவே, ஒரு வகையில், அரசியல் நிலைப்பாட்டைப் பற்றிய நேரடியான அணுகுமுறையைக் கொண்டிருந்ததால், நான் சில தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அது இன்னும் இருக்கிறது. ஏராளமானோர், “என் மனைவி அவரது கவிதைகளை வாசிக்கிறார்,” என்பார்கள். என்னுடைய கவிதைகளை வாசிக்கிறோம் என்று சொல்வதை அவர்கள் விரும்பவில்லை, அதாவது ஆண்களைச் சொல்கிறேன்.
கே: மனைவி மட்டும்…
ப: மனைவி மட்டுமே வாசிக்கிறார். அல்லது [அவர்கள் இப்படிச் சொல்வார்கள்], “நீங்கள் ஏன் இப்படியான விஷயங்களை எழுதுகிறீர்கள்?” … அவர்கள் உண்மையில் நீங்கள் ஏன் இவற்றையெல்லாம் எழுதுகிறீர்கள் என்று சொல்கிறார்கள், ஏன்? இந்த உலகில் ஏராளமான பெரிய பிரச்சினைகள் உள்ளன, ஆனால் நீங்கள் ஏன் இதைப் பற்றி எழுதுகிறீர்கள்? இது ஒரு பரவலான குற்றச்சாட்டு, இன்றுவரை நான் இந்த மாதிரியான குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கிறேன், ஆனால் கடந்த இருபது, இருபத்து மூன்று ஆண்டுகளாக நான் எழுதிக் கொண்டிருக்கிறேன், இந்தக் காலகட்டத்தில் உண்மையான வாசகர்கள் சிலரையும் பெற்றிருக்கிறேன். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் — அவர்கள் பெண்கள்தான் என்பது வெளிப்படை — ஒத்த உணர்வுகள் அல்லது கருத்துக்களைக் கொண்டவர்கள்… ஆனால் சில ஆண்களும்கூட என்னுடைய எழுத்தைப் பாராட்டுகிறார்கள். ஆக, நான் இவை எல்லாவற்றுக்கும் பழகிக் கொண்டேன், அதாவது, பாராட்டுபவர்களையும் தூற்றுபவர்களையும் சமாளிக்க.
கே: மூத்த ஆண் எழுத்தாளர்கள் எப்படிப் பட்டவர்கள்? அவர்கள் இதற்கு எப்படி எதிர்வினையாற்றினார்கள்?
ப: உண்மையில் அவர்கள் என்னுடைய எழுத்து போன்றவற்றை விரும்புவதில்லை, ஆனால் அவர்கள் அரசியல் சரிநிலையோடு இருக்கிறனர் என்பது கண்கூடு. வெளிப்படையாக அவர்கள் அதைக் கூற மாட்டார்கள்…
கே: அதாவது தங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை…
ப: தங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை; ஆனால் நீங்கள் காதல் கவிதைகள் எழுதலாம், மற்ற விஷயங்களைப் பற்றி எழுதலாம் என்றும் அவர்கள் கூறுவார்கள். அல்லது, விருது பற்றிய கேள்வி எழும்போது, அவருக்கு அப்புறமாகத் தரலாமே என்பார்கள். இது எப்போதும் நடக்கிறது. எனவே என் கவிதை குறித்து அவர்களுக்குத் திருப்தி இல்லை அல்லது அது அவர்களைச் சங்க்கடப்படுத்துகிறது என்பது எனக்குப் புரிகிறது; மாறாகக் காதல் பற்றியும் கலவி பற்றியும் எழுதும் பெண் எழுத்தாளர்களை அவர்கள் பாராட்டுகின்றனர் — நான் சொல்லவருவது வெகு இயல்பாக எழுதுவதுபோல உணர்ச்சிகளைக் கிளறும் வகையில் காதல், கலவி பற்றி எழுதுவதை. அவர்கள் அதை மிகவும் ரசிக்கிறார்கள். எனவே அந்த எழுத்தாளர்களுக்கு அதிகமாகச் சலுகை காட்டுவார்கள். இது கவிதை சார்ந்து நிகழ்கிறது, உரைநடை சார்ந்தும் நிகழ்கிறது. இப்படியெல்லாம் நடக்கிறது என்பது இந்த வகை எழுத்துக்களுக்கு ஒரு வகையான எதிர்ப்பு இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆனால் இவை எல்லாமே எனக்கு இப்போது பழகிப் போய்விட்டன.
கே: மூத்த பெண் எழுத்தாளர்களும் மற்றவர்களும் எப்படி இருக்கிறார்கள்? நீங்கள் எழுதும் கவிதை காரணமாக பெண் எழுத்தாளர்களிடையே ஒரு வகையான நட்புறவு இருக்கிறதா?
ப: இல்லை, அதிகமாக இல்லை. ஏனென்றால் மூத்த எழுத்தாளர்கள், நான் சொன்னதுபோல், தங்களைப் பெண்ணியவாதிகளாக அழைத்துக் கொள்ள விரும்பவில்லை.
கே: கிருஷ்ணா பாஸு நிச்சயமாக ஒரு பெண்ணிய எழுத்தாளர்.
ப: ஆம், அவர் ஒரு பெண்ணியக் கவிஞர் மேலும் தன்னை ஒரு பெண்ணியக் கவிஞராக அறிவித்துக்கொள்ளத் தயாராகவும் இருப்பவர். ஆனால், பொதுவாக… இப்போது நிறையப் பெண்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள், இது மிகவும் நல்ல அறிகுறி.
கே: பெண்கள் இப்போது புனைகதைக்குப் பதில் அதிகம் கவிதைகள் எழுதுகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா…ப: இல்லை, சமீபத்திய ஆண்டுகளில் தான் பெண்கள் புனைகதைகளையும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அந்தப் புனைகதைகள் ஏறக்குறைய, ஒரு வகையில், பெரும்பாலும் வழக்கமான காதல் உறவுகள், காதல் மற்றும் உடலுறவுகள் இவற்றை மையப்படுத்துவதாக இருக்கின்றன. ஆக, பையன் பெண்ணொருத்தியைச் சந்திக்கிறான், உடலுறவு கொள்கிறார்கள், இம்மாதிரியான சரக்குகள் பாராட்டப்படுகின்றன, விருதுகள் பெறுகின்றன. அதாவது ஐந்து இலட்சம் மதிப்புள்ள பெரிய விருதுகள் இவற்றுக்கு வழங்கப்படுகின்றன. அதனால்தான் என்னவோ மூத்த எழுத்தாளர்கள் அவர்களுடைய எழுத்து குறித்து மகிழ்ச்சியடைகிறார்கள். ஆகவேதான் அவர்களுடைய முதல் நாவலுக்கே இப்படி விருது வழங்கப்படுகிறது. அவர்களும் பெரிய ஆட்களாகிவிட்டார்கள்.
கே: நீங்கள் கவிதைகள் எழுதும்போது, அவற்றை முதலில் இதழ்களில் பிரசுரித்து அதன் பிறகு நூல்களாகக் கொண்டுவருவீர்களா? எம்மாதிரியான இதழ்களில் நீங்கள் வெளியிடுகிறீர்கள்?
ப: உண்மையில் பெரும்பாலானவை சிற்றிதழ்களே; அதாவது சாதாரண நிலைமையில் இருப்பவர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து கொண்டுவருபவை. மேற்கு வங்கத்தில் மிக வளமான சிற்றிதழ் பாரம்பரியத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம். ஆண்டு முழுவதும் வெளிவரும் ஆயிரக்கணக்கான சிற்றிதழ்களும் அரசாங்கமும் ஒன்றிணைந்து நடத்தும் சிற்றிதழ் கண்காட்சி இங்குண்டு. ஆக எங்கள் எழுத்துக்களில் பெரும்பாலானவை… நாங்கள் எல்லோரும், எல்லாக் கவிஞர்களும் பெரும்பாலும் சிற்றிதழ்களில்தாம் எழுதுகிறோம், ஐந்தாறு அல்லது எட்டு பத்து கவிதைகள் மட்டுமே பெரிய இதழ்களில் ஆண்டுதோறும் வெளியாகும். ஆக பெரிய இதழ்கள் என்று பார்த்தால் வெகு சில இதழ்கள்தாம் உண்டு. ஒரு வகையில் தேஷ் ஏகபோகமாகச் செயல்படுகிறது. பெரிய இதழ்களுக்கும் அவர்களுக்கேயான அரசியல் உண்டு. [படைப்புகளை வெளியிட] உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம். ஆக, நான் சொல்ல வருவது என்னவென்றால், கவிதை சிற்றிதழ்கள் மூலம் வாழ்கிறது; இது மோசம் இல்லை. அதற்கு அதற்கேயான விநியோக வட்டம் இருக்கிறது; அதற்கேயான நிர்வாக ஒருங்கிணைப்பும் கொண்டிருக்கிறது.
கே: மேலும் நீங்கள் எழுத விரும்புவதை எழுதுவதற்கான மேலதிகச் சுதந்திரமும் இங்கு உண்டு; ஏனென்றால் பெரிய இதழ்கள், குறிப்பிட்ட வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம், என்று உங்களுக்குச் சொல்லும், ஆனால் சிறுபத்திரிகைகள் அப்படிச் சொல்லமாட்டா…
ப: ஆம், ஆம், ஆனால் நான் எழுதுவது பரவலாக வாசிக்கப்பட வேண்டும் என்பதும் ஒரு விஷயம்; ஏனென்றால் எழுத்து உணர்வூட்டவும் செய்கிறது.
எனவே சில நேரங்களில் பெரிய இதழ்களில் வெளியிடுவதும் தேவையாகிறது; இல்லாவிட்டால் உங்களால் மக்களைச் சென்றடைய முடியாது. சிற்றிதழ்கள் மிகச் சிறிய குழுக்களையே சென்றடையும்… என்ன நிகழ்கிறது என்றால் நான் என்னுடைய பெண்ணிய அரசியல் மற்றும் எழுத்துக்காக ஓரங்கட்டப்படுகிறேன், இருந்தபோதிலும் நிறைய பேர் எங்களைப் பாராட்டுகின்றனர், குறைந்தபட்சம் எங்களுக்கான முக்கியத்துவத்தை அளிக்கின்றனர். மேலும் அச்சு ஊடகத்தைத் தாண்டி இன்றைக்குப் பல்வேறு ஊடகங்கள் இருக்கின்றன, உதாரணமாக ஒலி-ஒளி ஊடகம். ஏழு, எட்டு அல்லது ஒன்பது வங்கமொழி தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளன, பெண்கள் பிரச்சினை சார்ந்த ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்தும்போது, அவர்கள் என்னை அழைப்பார்கள், அந்த வகையில் என்னுடைய குரல் பரவலான நேயர்களைச் சென்றடைகிறது, இது நடக்கிறது.
கே: உங்களுடைய சமகால எழுத்தாளர்கள் மற்றும் பழைய எழுத்தாளர்களில் உங்களை உந்தியவர் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
ப: சுபாஷ் முகோபாத்யாயிடமிருந்து அதிக உத்வேகம் கிட்டியது. அவர் இப்போது இல்லை. மற்றும் நிரேந்திரநாத் சக்ரவொர்த்தி, ஷங்க கோஷ் இவர்களிடமிருந்தும்…
கே: நிரேந்திரநாத் சக்ரவொர்த்தி?
ப: ஆம், நிரேந்திரநாத் சக்ரவொர்த்தி, ஷங்க கோஷ், ஸுனீல் கங்கோபாத்யாய், மேலும் ஷக்தி சட்டோபாத்யாய் — வங்கக் கவிதையின் ஜாம்பவான்கள். அவர்கள் இளம் எழுத்தாளர்களை வெகுவாகப் பாராட்டுவார்கள். நான் அவர்களிடமிருந்து உந்துதல் பெற்றேன், எல்லா ஆதரவையும் அவர்களிடம் இருந்து பெற்றேன், ஆனால் அவர்களில் சிலர், நான் எழுதியதை உள்ளார்ந்து விரும்பாமல் இருந்தபோதிலும், என்னுடைய எழுத்துக்களைப் பாராட்டுவார்கள்… பாலினப் பிரச்சினைகளைப் பற்றி இரண்டு நூல்கள் எழுதியிருக்கிறேன். ஸ்திரீலிங்கோ நிர்மாண் என்ற என்னுடைய நூல் பரவலாக வாசிக்கப்பட்டது. இது பெண் பாலினத்தின் கட்டமைப்பு என்ற பொருளைக் கொண்டிருப்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். இதுவே பாலினம் சார்ந்த முதல் வங்க நூல்…
கே: உங்கள் கவிதை நூல்கள் பற்றி என்ன சொல்வீர்கள்? குறிப்பிட்ட கவிதை நூல்கள் ஏதாவது பெரிய சர்ச்சையைக் கிளப்பியதா, பெரும் கவனம் பெற்றதா…
ப: ஆம், ஏராளமான தனிக் கவிதைகள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கடல் பற்றிய என்னுடைய அனுபவம் சார்ந்து வெகுகாலம் முன்பு நான் எழுதிய ஒரு கவிதை. நாங்கள் திகா நகரத்திலுள்ள கடலுக்குச் சென்ற அந்த மாலை மிக மோசமாக இருந்தது, அந்தச் சூழலில் அச்சம் நிலவியது. நாங்கள் இருட்டில் உலவிக் கொண்டிருந்தோம், அமைதியாக இருந்தது, எனவே நான் கடலுக்குள் நுழைந்துகொண்டிருப்பதாகவும் கடல் என்னை வன்புணர்வு செய்வதாகவும் உணர்ந்தேன். ஆக நான் இதை எழுதவும் ஒருவித பரபரப்பு உருவானது, ஏனென்றால் மக்கள் [இந்த மாதிரியான எழுத்தை] விரும்பவில்லை, ஏனென்றால் மக்கள், அதாவது பெரும்பாலும் ஆண்கள், காதலியாகவே கடலைப் பார்க்க விரும்புகிறார்கள். ஆகவே அவர்களுக்குப் புரியவில்லை. கடலோடு ஒன்றிவரும் இத்தகைய பிம்பத் தொடார்புகள் உள்ளன. ஆனால் பிறகு சமீபத்தில் ஒரு கவிதை தன்னிச்சையாக அமைந்துவிட்டது. நான் என்னுடைய மகனுக்கு வரலாற்றுப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது, ஆதி மனிதன் என்பவன் க்ரோ-மாக்னன் ஆண் ஜாவா ஆண் என்று சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தேன்; இந்த ஆண் அந்த ஆண் என்றே அது போயிற்று. அதற்கு எதிர்வினையாக, இது ஆண் உருவாக்கிய நாகரிகம் என்று சொல்லும் கவிதையை எழுதினேன். அப்போது பெண்களே இல்லை என்று கவிதையை முடித்தேன்; அதைத்தான் வரலாறு நமக்குக் கற்பிக்கிறது. அதன் கடைசி வரி ஆண்தான் இறைவன், ஆண்தான் இறைவி, ஆண்தான் யோனி, ஆண்தான் ஆண்குறி என்றிருந்தது. இறுதியில் வரலாற்றாசிரியன் நபும்சகன் என்று கூறினேன். (சிரிப்பு.) ஆக அதுவொரு களேபரத்தை உருவாக்கியது — ஓராண்டுக்குமுன்பு நான் எழுதிய சமீபத்திய கவிதை அது. ஆனால் இந்தக் கவிதை கேலிக்குரிய கூறுகளைக் கொண்டிருந்தது, எனவே மக்களும்கூட இதை விரும்பினர். என்னுடைய மற்றக் கவிதைகளால் எரிச்சலுற்றாலும் இந்தக் கவிதையை அவர்கள் சிரித்து ரசித்ததை என்னால் காணமுடிந்தது. அவர்களுக்குப் பெண்ணிய உண்மைகளைக் கற்பிக்கும் வழிமுறைகளில் இதுவும் ஒன்றாகலாம்.
கே: அதுவொரு நீண்ட பாதை …
ப: நீண்ட பாதை, ஆம்… ஆனால் நான் ஒரு புத்தகத்தைக் குறிப்பிட முடியும்—என்னுடைய கவிதை நூல்களில் ஒன்று, எனக்கு விருப்பமானவற்றுள் ஒன்று, கதா மானபி
அதன் பெயர்; எட்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்ட நீண்ட நாட்டுக் கதைப்பாடல் அது. கதா மானபிதான் கதைசொல்லி; திரௌபதி, கங்கை, ஷா பானோ, மேதா பட்கர் அல்லது மேற்கு வங்கத்தின் கிராமம் ஒன்றில் கற்பழித்துக் கொலைசெய்யப்பட்ட பழங்குடியினப் பெண் என்று தன் பல பிறப்புகளைக் கதையாகச் சொல்லும் பெண். ஆக அவள் தன்னைப் பற்றி எட்டு கதாபாத்திரங்கள் வழியாகப் பேசுகிறாள்; அந்தக் கதாபாத்திரங்கள் அனைத்து இந்தியப் பெண்களையும் உள்ளடக்கியவர்கள். அது பரவலாக விவாதிக்கப்பட்டது, பிரபல சொற்பொழிவாளரான பிரததி பந்தோபாத்யாய், மொத்த நூலையும் வாசித்து ஒலிநாடாவில் பதிவுசெய்திருந்தார்…
கே: கவிஞருக்கு வாழ்க்கைப்பட்டிருப்பது சிரமமானதா?
என் விஷயத்தில் கடினமான ஒன்றாக அது இல்லை. ஆரம்பத்தில் எழுதக்கூடிய இடத்தைப் பகிர்ந்துகொள்வது போன்ற சில நடைமுறை வாழ்க்கைக்குரிய பிரச்சனைகள் இருக்கத்தானே செய்யும். காரணம் ஒரு படுக்கையறைதான் இருந்தது, அங்குதான் இருவரும் எழுதினோம். சில நேரங்களில்… காலையில் நான் கல்லூரி சென்றபிறகு அவர் எழுதுவார். கல்லூரி விடுப்பின்போது நான் வீட்டில் இருக்க நேர்கையில், ஒன்றிரண்டு நாட்களில் அவருக்கு அது எரிச்சலூட்டிவிடும்! “ஒன்று கடைக்குச் செல், இல்லையென்றால் அம்மா வீட்டிற்குச் செல், இல்லை மகனுக்குப் பாடம் சொல்லிக்கொடு” என்று சொல்வார். நான் அறையை விட்டு வெளியேறியதும் அவர் எழுதத் தொடங்குவார். நாங்கள் அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டியிருந்தது. நானும் அவர் இல்லாத நேரத்திலேயே எழுத விரும்பினேன், காரணம் எங்களுடையது சிறிய வீடென்பதால் நாங்கள் அவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டியதாயிற்று. இவற்றைத் தாண்டி அவர் எனக்குப் பெரிய உறுதுணை, அது எனக்கு உதவியது. என்னால் இவ்வளவு எழுத முடிந்ததற்குக் காரணம் என் குடும்பத்திடமிருந்தும் கணவரிடமிருந்தும் கிடைத்த ஒத்துழைப்புதான். எங்கள் முதன்மையான வேலை எழுத்துதான் என்பது. எங்கள் இருவருக்குமே தெரியும். எழுத்திற்காகப் பல வேளைகளில் வீட்டு வேலைகளையும் வீட்டை நடத்துவதற்கான அதிகப்படியான வேலைகளையும் நாங்கள் கண்டுகொள்ளாமல் கடந்துவிடுவோம். குறிப்பிட்ட எழுத்து வேலை ஏதாவது இருக்கும்போது, அது என் வேலை, அதை முடிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். அப்போது நான் கல்லூரியிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டோ சமையலறையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டோ அந்த வேலையை முடித்தாக வேண்டும். அந்த வகையில் எங்களுக்குள் ஒரு நல்ல புரிதல் இருந்தது, அதுதான் எங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று என்று நினைக்கிறேன். எங்களுக்குள் ஒரு தோழமை இருந்தது, ஆனால் நிதர்சன வாழ்க்கையில் அவர் அவ்வளவு உதவிகரமானவர் இல்லை. அவர் கவித்துவமானவர், ஆனால் நான் நடைமுறை வாழ்க்கையில் கவனம் செலுத்தக்கூடியவள். வங்கி வேலைகள், மகனின் படிப்புச் செலவு, மற்றச் செலவுகள் மற்றும் வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் அவருக்கு எதுவுமே தெரியாது. அவர் மிகவும் கவித்துவமானவராக இருக்கலாம், ஆனால் பார்க்கப்போனால் இறுதியில் நான் இவ்வளவு எழுதியதற்குக் காரணம் அவருடைய ஒத்துழைப்புதான்.
கே: பாலியல் துன்புறுத்தலுக்குப் பிறகு (After the Sexual Harassment) உங்களுடைய முதல் நாவலா?
ப: என்னுடைய முதல் நாவல் சீதாயன்.
இது ராமாயணத்தில் சீதையின் பயணம் பற்றியது.
கே: மறுவிளக்கம் போன்ற ஒன்று…
ப: அது ஒரு மறுவிளக்கம்தான்; ஏனென்றால் என்னுடைய சீதை அடக்கமாக எவரையும் பின்பற்றுபவள் இல்லை; மாறாக, என்னுடைய சீதா, முதல் ஒற்றைத் தாயாக லவ குசர்களை வளர்த்தவள், ராட்சசர்களை ராமன் வதை செய்யும்போது ஆயுதக் குறைப்பைப்பற்றிப் பேசிய முதல் பெண்மணி. அந்த வதைகளுக்கு எதிராகவும் ஆயுதக் குறைப்பை வலியுறுத்தியும் சீதா தொடர்ந்து பேசிவந்தாள். அவள்தான் முதல் இயற்கை ஆர்வலரும் அக்னிப் பரீட்சை வேண்டும் என்ற தன் கணவனை எதிர்த்த முதல் இந்தியப் பெண்மணியும்கூட. அவள் மறுத்துவிட்டுத் திரும்பிச் சென்றாள். ஆக, அவள் மிகவும் துணிச்சல் மிக்கவள். அவள் இதுவரை முற்றிலும் தவறாகவே விளக்கப்படுத்தப்பட்டிருக்கிறாள். எனவே கூறப்போனால் சீதாயன் நாவலில் நான் வால்மீகியின் சீதைக்கு மறுவிளக்கம் தந்திருக்கிறேன் அல்லது வேறு சீதையைக் கண்டடைந்திருக்கிறேன் எனலாம். நான் எங்குமே வால்மீகி கூறும் நிகழ்வுகளிலிருந்து விலகிவிடவில்லை; வால்மீகி எழுதியுள்ள நிகழ்வுகளே சீதையின் துணிச்சலைக் காட்டுகின்றன. ராமன் கொல்வதை சீதை தடுத்தாள், மேலும் குழந்தைகளை அவளே வளர்த்தெடுத்தாள். எனவே அவள் மிகுந்த தைரியசாலி.
கே: ராமாயணத்தை மறுவாசிப்பு செய்வதுபோன்று இது இருக்கிறது…
ப: ஆம்.
கே: உங்கள் இரண்டாவது நாவல்…
ப: இரண்டாவது நாவல் சமகாலப் பின்புலத்தில் அமைந்தது. அதன் பெயர் ஷ்லீலதாஹானிர் போரே (Shlilatahanir Pore). அதன் பொருள் “பாலியல் துன்புறுத்தலுக்குப் பிறகு” என்பதாகும். மிகுந்த பாதுகாப்பான சூழலில் உள்ள தற்காலப் பெண்ணொருத்தி— அவள் எழுத்தராகப் பணிபுரியும் வாழ்க்கையை மேற்கொண்டிருப்பவளாக இருக்கலாம் — தன்னுடைய முதலாளியால் அலுவலகத்துக்கு வெளியே உள்ள இடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறாள், அதை எதிர்த்துப் போராட முடிவு செய்கிறாள், போலீஸிடம் செல்கிறாள், நீதித் துறையிடம் செல்கிறாள், அவளுக்கு நெருக்கமான எல்லோரிடமும் செல்கிறாள்; அவளுடைய எல்லா உறவினர்கள், நண்பர்கள், சக பணியாளர்கள் அனைவருமே விட்டுத்தள்ளு, மறந்துவிடு என்று அவளைத் தடுக்கின்றனர்… ஆக எல்லோரும் அவளுக்கு எதிராக இருக்கின்றனர், ஆனால் அவளுடைய போராட்டம் தொடர்கிறது. அதைப் பற்றிய கதை இந்த நாவல்.
கே: அந்த நாவல் நல்ல முறையில் ஏற்கப்பட்டதா?
ப: ஆம், அதைத் திரைப்படமாக்குவதற்கான வாய்ப்புகள்கூட வந்தன, ஆனால் அது உருப்பெறாமல் போயிற்று. [தமிழ் மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: 2020ல் ரேஷ்மி மித்ராவால் நெறியாள்கை செய்யப்பட்டு ஷ்லீலதாஹானிர் போரே என்ற பெயரிலேயே சௌமித்ர சாட்டர்ஜி, ராஹுல் பானர்ஜி, மௌபனி ஸொர்கார் நடித்த இந்தத் திரைப்படம் வெளிவந்தது]. என்னுடைய முதல் படைப்பான சீதாயன் நாவலை அபர்ணா சென் படமாக எடுப்பேன் என்றார், திரைக்கதைகூட தயாரித்துக் கொண்டிருந்தார். ஆனால் அது மிகப் பெரிய பட்ஜெட் கொண்ட படமாகப் போயிருக்கும். அவரோ சிறு பட்ஜெட் படங்களை நோக்கிச் சென்றுவிட்டார்; இதை அவர் இனிமேல்தான் செய்ய வேண்டும்.
கே: எழுத்து உங்கள் வாழ்க்கையில் என்ன பாத்திரத்தை வகித்தது? எழுதுவது உங்கள் வாழ்வின் மிக முக்கியமான பகுதி என்று நீங்கள் உணர்கிறீர்களா?
ப: ஆம், நான் என்ன உணர்கிறேனோ, எதைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேனோ, என்ன சொல்ல விரும்புகிறேனோ, என் மகனுக்கு என்ன கற்பிக்க விரும்புகிறேனோ அவற்றை என்னுடைய எழுத்தின் மூலமாகவே வெளிப்படுத்துகிறேன். நான் எதில் நம்பிக்கை வைத்திருக்கிறேனோ, எப்படி வாழ்கிறேனோ அவையும்கூட என் எழுத்தில் பிரதிபலிக்கப்படுகின்றன.
கே: அவை தனித்தனியாகப் பிரிக்கப்படவில்லை, இல்லையா?
ப: நிச்சயமாக அவை பிரிக்கப்பட்டதாக இல்லை…
கே: அவை ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன…
ப: ஆம், அவை ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன, அதனால்தான் மெட்ரோ ரயிலில் அல்லது சந்தையில் என்னுடைய வாசகர்கள் சிலரைச் சந்திக்கும்போது… ஒரு வயதான பெண்மணி என்னிடம் வந்து, அவளுடைய கையை என் தலையில் வைத்து ஆசீர்வதித்துக் கூறினார்: நீ நிறைய உண்மைகளை எழுதுகிறாய், எவ்வளவு எதார்த்தமானவை அவை! அரிய ஒரு கணம் அது எனக்கு. அல்லது இளம் பெண்ணொருத்தி வந்து — இதுவும் பலமுறை நடந்திருக்கிறது — இளம் பெண்ணொருத்தி, அவளுடைய நெருக்கடியான கணம் ஒன்றில் உதவிய என்னுடைய கவிதை ஒன்றைப்பற்றிப் பேச, என்னை நோக்கி வருவாள். ஒருவேளை அவள் கணவனிடம் அடி, உதை பட்ட மனைவியாக இருக்கலாம் அல்லது இக்கட்டான நிலைமை ஒன்றில் வேறு ஏதோ காரணங்களுக்காக சிக்கவைக்கப்பட்டவளாக இருக்கலாம். அந்தக் கணத்தில் என்னுடைய கவிதைகள் சிலவற்றிலிருந்து அவள் வலிமை பெற்றிருக்கலாம். ஆக என்னுடைய எழுத்து வாழ்க்கையில், தனிப்பட்ட வாழ்க்கையில், என் வாழ்வில் மிகவும் நிறைவான கணம் அது. என்னுடைய விரோதிகள் எல்லோரிடமிருந்தும் இது என்னைக் காக்கும்…
***
பதிப்பாசிரியர் குறிப்பு
இந்த உரையாடல் மும்பையில் உள்ள ஸ்பாரோ அமைப்பின் வெளியீடான, ‘Being Carried Away’ (ed. by Shoba Venkatesh Ghosh) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த உரையாடலைத் தமிழாக்கம் செய்யவும், அதை இங்கு பிரசுரம் செய்யவும் அனுமதி கொடுத்த ஸ்பாரோ அமைப்புக்கு சொல்வனம் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்.
இந்தப் புத்தகம் ஸ்பாரோவின் ஐந்து புத்தகத் தொகுப்பில் இரண்டாவது. இந்தியாவின் பல மொழிக் குழுக்களில் சிறந்த பெண் எழுத்தாளர்களாக அறியப்பட்டுள்ள பலரை இந்த ஐந்து புத்தகத் தொகுப்பு இந்திய வாசகர்களுக்கு அறியக் கொடுக்கிறது. ஒவ்வொரு புத்தகமும் ஒரு பொக்கிஷம் என்பதைச் சொல்லவும் வேண்டியதில்லை.
இந்தப் புத்தகத்தில் கதைகள், கவிதைகள், மற்றும் நேர்காணல்கள் உண்டு. ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு நேர்காணலில் தன் வாழ்வு பற்றியும், தன் மொழியில் உள்ள இலக்கியச் சூழல் பற்றியும், அந்தச் சூழலில் தன் படைப்பு வாழ்வு நடந்த விதம் பற்றியும் பேசுகிறார். பிறகு கவிதைகளோ, கதைகளோ இங்கிலிஷில் மொழி பெயர்த்துக் கொடுக்கப்படுகின்றன. இந்நூலில் அஸ்ஸாமிய மொழி, வங்காள மொழி, காரோ, மணிபுரி மற்றும் மிஜோ மொழிகளிலிருந்து எழுத்தாளர்களின் உலகங்கள் நமக்கு அறியக் கொடுக்கப்படுகின்றன. 383 பக்கங்கள், தடி அட்டை. இது இந்திய வாழ்வு, மக்கள் மீதுள்ள தீராத நேசத்தால் உருவான ஒரு படைப்பு.
இந்த ஐந்து புத்தகத் தொகுப்பு பற்றிய மேல் விவரங்களுக்கு இங்கே செல்லவும். https://sparrowonline.org/publication-books.html
இவை ஒவ்வொன்றும் ஒரு கலைப்படைப்பு. இருப்பினும் மேற்படி வலைப் பக்கத்தில் பார்த்தால் இவற்றுக்கு நீங்கள் கொடுக்கக் கூடிய விலை மிகவும் சரசமானதொன்று என்று காண்பீர்கள்.
ஸ்பாரோ ஒரு தன்னார்வலர் அமைப்பு. 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த அமைப்பு சிறப்பானதோர் ஆவணக் காப்பகத்தையும் பராமரித்து வருகிறது. ஸ்பாரோ பற்றிய பல அறிவிப்புகளை சொல்வனத்தில் பல இதழ்களில் முன்பு பிரசுரித்திருக்கிறோம். ஸ்பாரோவிற்கு நன்கொடை வழங்க வழிகள் பற்றியும் அந்த அறிவிப்புகளில் காணலாம்.
[கீழுள்ள படம் அந்தப் புத்தகத்தின் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.]

***