அம்பை

மும்பாயில் தாகூர் பற்றிய சிறப்பு நிகழ்வு ஒன்றிற்குத் தாகூர் பற்றிப் பேச வங்காளியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ள ஒரு நபரின் பெயரைத் தரும்படி என்னை அணுகினர். மொழிபெயர்ப்பின் பொற்காலம் என்று கருதப்பட்ட இரு தசாப்தங்கள் முப்பதுகளும், நாற்பதுகளும். அந்த இரு தசாப்தங்களில் மொழிபெயர்க்கப்பட்ட வங்காளம், மராட்டி, குஜராத்தி நாவல்களும் சிறுகதைகளுமே அதன்பின் வந்த மொழிபெயர்ப்புப் பாலைவனத்தில் வளர்ந்த என் போன்றோர்களைச் சரத் சந்திர சாட்டர்ஜி, காண்டேகர், தாகூர் இவர்களை எங்கள் இலக்கிய உலகின் அங்கமாகப் பார்க்க உதவின. த.நா. குமாரசாமி, த. நா. சேனாபதி, கா.ஸ்ரீ.ஸ்ரீ இவர்கள்தான் அந்தப் பொற்காலத்தைக் குறிப்பவர்களாக என் மனத்தில் இருந்தார்கள். அறுபதுகளின் இறுதியிலிருந்து தன் மொழிபெயர்ப்புப் பணியைச் செய்திருந்த சு. கிருஷ்ணமூர்த்தி பற்றியோ, மற்ற மொழி ஆக்கங்களை ஹிந்தி மூலம் தமிழுக்குக் கொண்டு வந்த வேறு சிலரைப் பற்றியோ நான் அறிந்திருக்கவில்லை. நண்பர்கள் மூலம் சு. கிருஷ்ணமூர்த்தி பற்றிக் கேள்விப்பட்டு இந்த நிகழ்வுக்கு அவரை அழைக்க, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும், “உங்களை நான் படிச்சிருக்கேன்” என்றார். ”படிச்சிருக்கீங்க சரி. என் கதைகள் பிடிச்சிருக்கா?” என்று குறும்புக்குக் கேட்டவுடன், “எல்லாம் பிடிச்சிருக்குன்னுட்டு சொல்ல முடியாது” என்றார் உடனே! அவருடைய அந்த நேரிடையான பேச்சு எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தது. அதன் பிறகுதான் தான் செய்த மொழிபெயர்ப்பு பற்றி அவர் விரிவாகக் கூறினார். அவர் கொடுத்த பட்டியல் என்னைப் பிரமிக்க வைத்தது.
அவருடைய சுயசரிதையின் முன்னுரையில் ஆர். நடராஜன் அவர்கள் கூறியிருப்பதுபோல் ‘இதற்கு முன் பழகாமல் போனோமே என்ற உணர்வை’ ஏற்படுத்தும் வெகு சிலரில் ஒருவர் சு. கிருஷ்ணமூர்த்தி. அவருடைய சில மொழிபெயர்ப்புகளையும் சுயசரிதையையும் அதன்பிறகுதான் படித்தேன். பிறகு கொல்கத்தாவிலும், டில்லியிலும் அவருடன் பேசவும், அவருடன் பழகவும் வாய்ப்புக் கிட்டியது. இது வரை வங்காளத்திலிருந்து தமிழில் 36 புத்தகங்களையும், ஜவேர் சந்த் மேகாணியின் குஜராத்தி நாவலை ஹிந்தி மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் ஐந்து புத்தகங்களையும் சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்திலும் தமிழிலிருந்து வங்காளியில் திருக்குறள், இ.பாவின் குருதிப் புனல், ஆதவன் சிறுகதைகள், தமிழ்ப் பழமொழிகள், கு. சின்னப்ப பாரதியின் இரு நாவல்கள் இவற்றையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார். தி.ஜா உட்பட பலரின் சிறுகதைகளை வங்காளத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழிலும், வங்காளத்திலும், ஆங்கிலத்திலும் வெளிவர இருக்கும் மொழிபெயர்ப்புகள் இன்னும் எட்டு. இது தவிர சொந்தக் கதைகளும் எழுதியிருக்கிறார். கட்டுரைகளும் பல எழுதியிருக்கிறார். இலக்கிய சிந்தனை, சாகித்திய அகாடமி உட்பட பல விருதுகளும் பெற்றிருக்கிறார்.

வங்காளத்திலிருந்து தமிழில் இவர் மொழிபெயர்க்கத் தொடங்கிய காலம் மஞ்சரி தவிர மற்றத் தமிழ்ப் பத்திரிகைகள் மொழிபெயர்ப்புக் கதைகளை அதிகமாக வரவேற்காத காலம் என்று சொல்லலாம். 1961-62இல் ஆனந்த விகடனில் விறுவிறுப்பாக நடந்த கேள்வி-பதில் பகுதிக்கு ஆனந்த விகடன் ஏன் மொழிபெயர்ப்புக் கதைகளை வெளியிடுவதில்லை என்ற இவர் கேள்விக்குத் தமிழிலேயே நிறையப் படைப்புகள் கிடைக்கும்போது மொழிபெயர்ப்புக்கு என்ன தேவை என்று பதில் வந்தது. இதே அனுபவம் இவருக்குக் கொல்கத்தாவிலும் ஏற்பட்டது. ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை மொழிபெயர்த்த விஷ்ணுபத பட்டாசார்யாவுக்குப் பிறகு தமிழிலிருந்து வங்காளத்துக்கு நேரிடையாக மொழிபெயர்ப்பவர்கள் யாரும் இருக்கவில்லை. கிருஷ்ணமூர்த்தி தேஷ் பத்திரிகையை இது பற்றி அணுகியபோது அதற்கு வாசகர் வரவேற்பு இல்லை என்ற பதிலே கிடைத்தது. மிகப் பிரபலமான ‘தே’ பதிப்பு நிறுவனமும் மொழிபெயர்ப்புகள் புத்தகச் சந்தையில் விலை போகாது என்றே கூறியது.
இந்தச் சூழ்நிலையில் மொழிபெயர்ப்பைத் தன் மனத்துக்கு உகந்த ஒன்றாக இவர் எடுத்துக்கொண்டது சாதாரண விஷயமன்று. அதீன் பந்தோபாத்யாயின் நீல்கண்ட பாக்கீர் கொஞ்சே என்ற நாட்டுப் பிரிவினைக்கு முற்பட்ட பத்தாண்டுக் காலத்தில் ஏழைகளின் வாழ்க்கை பற்றிச் சொல்லும் 500 பக்கங்களுக்கும் மேற்பட்ட நாவலின் நீலகண்டப் பறவையைத் தேடி என்ற மொழிபெயர்ப்புத்தான் கிருஷ்ணமூர்த்தியின் பெயரைத் தமிழ் நாட்டில் பலரும் அறிய வைத்தது எனலாம். Blue Jay என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பறவைக்கு, பாற்குருவி என்ற தமிழ்ப் பெயரை உபயோகிக்காமல் அதன் நீலத்தைச் சுட்டிக்காட்ட நீலகண்ட என்ற பெயரையே தேர்வு செய்தார் கிருஷ்ணமூர்த்தி. ஒரு மொழிபெயர்ப்பாளரின் இத்தகைய தேர்வுகள்தான் மொழியாக்கத்தைச் செழுமைப்படுத்துபவை. இயற்கை வர்ணனை அதிகம் உள்ள அந்த நாவலில் வந்த செடி, கொடி, மரங்களைப் பார்த்தே இராத போது அவற்றை அறிய இந்தியத் தாவரங்களின் ஹிந்தி அகராதியில் விளக்கங்களும் மற்ற மொழிப் பெயர்களும் தேடி பெரு முயற்சி எடுத்து நான்கு மாதங்களில் செய்த மொழியாக்கம் அது. கிருஷ்ணமூர்த்தியின் ஒவ்வொரு மொழிபெயர்ப்பு முயற்சியிலும் இத்தகைய உழைப்பைக் காண முடியும்.

மூளை நோயால் பாதிக்கப்பட்டு இறந்த மகன், பண முடை, அலைச்சல்கள், தன் உடல் ஊனம் இத்தனை இன்னல்களையும் மீறி ஈடுபாட்டுடனும், முனைப்புடனும், அர்ப்பணிப்புடனும் கிருஷ்ணமூர்த்தி தன் வாழ்நாளின் பெரும் பகுதியை வங்காளியிலிருந்து தமிழுக்குச் சிறந்த படைப்புகளைக் கொண்டு வருவதிலும் தமிழ் படைப்புகளை வங்காளத்துக்கு அறிமுகம் செய்வதிலும் செலவிட்டிருக்கிறார். நல்லி திசை எட்டும் அமைப்பின் முதல் மொழியாக்க விருது இவருக்கு வங்காளியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த ஜயா மித்ராவின் கொல்லப்படுகிறது என்ற தன் வரலாற்றுக்காக 2004இல் கிட்டியது. நல்லி திசை எட்டும் வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த ஆண்டு (2012) அக்டோபரில் இவருக்கு வழங்கப் பட்டது. இப்போது வங்காள சாகித்திய அகாடமி இவருக்கு மொழிபெயர்ப்புக்கான லீலா ராய் ஸ்மாரக் புரஸ்கார் விருதை இந்த ஆண்டு தந்து கௌரவித்திருக்கிறது. 84வது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் கிருஷ்ணமூர்த்திக்கு உரிய அங்கீகாரத்தை இவ்வளவு காலம் கடந்த பின்தான் தரவேண்டுமா என்று தோன்றினாலும் ஆங்கிலத்தில் கூறுவதுபோல செய்யாமல் இருப்பதைவிட காலம் கடந்து செய்வது மேல் இல்லையா?
கிருஷ்ணமூர்த்திக்கு விருதுகளும் பட்டங்களும் எந்தப் பொருட்டுமில்லை. இருந்தாலும் அவருக்கு இது கிடைத்தது இலக்கிய உலகில் அவர் நண்பர்கள் பலருக்குப் பெருத்த மகிழ்ச்சியை அளிக்கும். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மொழிபெயர்ப்பாளர்களுக்கு உரிய அங்கீகாரமும் வரவேற்பும் கிடைக்க வேண்டும் என்று விரும்பும் அன்பான அம்பை மேடத்திற்கு என் நன்றிகள்.