ஜெயந்தா டே
ஆங்கில மொழிபெயர்ப்பு: திபென் பட்டாசார்யா
தமிழில்: குரு. சாமிநாதன்

என் மொபைலுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. ”நான் காத்துக்கொண்டு இருக்கிறேன். உங்களால் வரமுடியுமா?
ஒருமுறை இல்லை, பலமுறை அந்தச் செய்தியைப் பார்த்தேன். புட்டியிலிருந்து கொஞ்சம் தண்ணீர் குடித்தேன், பாஸுவிடம் ஒரு கோப்பை டீ கேட்டேன். டீதான் கேட்டேன். பாஸு புருவத்தைச் சுருக்கிப் பார்த்தான். டீ கோப்பையை ணங் என்று மேசைமீது வைத்தான். குறுஞ்செய்தியை மீண்டும் மீண்டும் பல தடவைகள் குதூகலத்துடன் பார்த்தேன். அதில் வேறு எதுவுமே சொல்லப்படவில்லை. என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன் – இடைவேளைக்கு இன்னும் ஐம்பது நிமிடங்கள் இருந்தன.
நான் திரும்பத் திரும்பக் குறுஞ்செய்தியையே பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பதைக் கிரிந்த்ராவால் ஊகிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியுமா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். கிரிந்த்ரபிரஸாத் லஹிரி. அவன் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். குடித்துவிட்டுச் சூதாடியதில் இருந்த எல்லாவற்றையும் இழந்தவன். கீழ்மாடியில் இருந்த என் வீட்டில் முன்பு குடியிருந்தவன். நான்கு மாத வாடகையைப் பாக்கி வைத்ததோடு, என் மனைவியையும் அவனுடன் இழுத்துக்கொண்டு போய்விட்டான். அதுவும் சகல நகை நட்டுகளுடன். போதாக்குறைக்கு, அலமாரியில் இருந்த நாற்பதாயிரம் ரொக்கத்தையும் வழிச் செலவுக்காக எடுத்துக்கொண்டான். அந்த கிரிந்த்ராதான் இப்போது எனக்குச் செய்தி அனுப்பியிருக்கிறான். நான் மட்டும் நினைத்திருந்தால் உடனேயே போலிஸ்காரர்களைக் கூப்பிட்டிருக்க முடியும். முறை தவறிய உறவு, பெண்ணைக் கடத்தியது, வாடகை கொடுக்காதது, நகைகளைத் திருடியது, பணத்தை ஆட்டை போட்டது – இதில் எதற்காக வேண்டுமானாலும் அவனை மாட்டிவிட்டிருக்கலாம். போலிஸாரை விட்டு அவனை நையப் புடைத்திருக்கலாம். சிறையில் தள்ளி லாடம் கட்டியிருக்கலாம். ஆனால் இந்த எதையுமே நான் செய்யவில்லை. அந்தச் செய்தியையே பார்த்தபடி இருந்தேன். கொஞ்சம் டீ குடித்தேன். ஒரு சிகரெட்டையும் பற்ற வைத்திருக்கலாம்.
போன வாரம், செவ்வாய்க் கிழமையும் கிரிந்த்ரா இப்படித்தான் செய்தான். “முன்னால் இருக்கும் டீக் கடையில்தான் இருக்கிறேன். வர முடிந்தால் நல்லது” என்று குறுஞ்செய்தி அனுப்பினான்.
என் மனைவியையும் இழுத்துக்கொண்டு தலைமறைவானபோது அந்த ராட்சசன் தன் மொபைல் நம்பரை மாற்றியிருந்தான். அதனால், அந்தச் செய்தியை அனுப்பியது கிரிந்தர்தான் என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. அவனுடைய பழைய நம்பர்தான் என்னிடம் இருந்தது. எப்போதாவது அந்த நம்பரைக் கூப்பிட்டுப் பார்ப்பேன். அந்த மொபைல் அடிக்கிறதா என்று சோதிப்பேன்.
இப்போது வேறு ஒரு நம்பரிலிருந்து கிரிந்த்ரா செய்தி அனுப்பியிருந்தான். அது அவனிடமிருந்துதான் வந்திருக்கிறது என்பதை என்னால் உணரமுடியவில்லை. அந்தச் செய்தி வந்ததுமே நான் அந்த டீக்கடைக்குப் போய்விட்டேன். அங்கு எவரையும் காணவில்லை. விசித்திரம்! யாரும் சோதனை செய்கிறார்களோ என்று தோன்றியது. எவரேனும் புகார் செய்திருக்க வேண்டும். சேர வேண்டிய தொகை ஒப்பந்தக்காரர்களுக்குக் கிடைக்கும்படி வழிசெய்வதற்காக இந்த டீக் கடைக்கு வரச்சொல்லி அவர்கள் பல நேரங்களிலும் செய்தி அனுப்புவதுண்டு. இங்குதான் பேரம் பேசிப் பணம் கைமாறும். டீக் கடைக்குப் போனபோது இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். அந்தக் கடை என் அலுவலகத்துக்கு முன்னாலேயே இருந்தது.

என்னை அழைத்திருக்கக் கூடியவர்கள் எவரும் அங்கே இல்லை. எனக்குக் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. யார் என்னைக் கூப்பிட்டது? ஏன்? – இப்படியெல்லாம் யோசித்தபடி திரும்பி நடக்க ஆரம்பித்தேன். திடீரென்று அங்கு வந்த கிரிந்த்ரா, “நான்தான், உங்களுடன் பேச வேண்டும்” என்றான் என் காதுக்கு அருகில்.
கிரிந்த்ராவைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் என் வாய் பிளந்தது. கிரிந்த்ரா இங்கே எப்படி? அதுவும் எனக்கு முன்னாலேயே? என்ன அராஜகம்! அயோக்கியப் பயல்!
ஆத்திரத்தில் என் உடம்பு நடுங்கியது. தலை வெடித்துச் சுக்கு நூறாகிவிடும் போலிருந்தது. “ஐயா, நான் சொல்ல வேண்டியது கொஞ்சம் இருக்கிறது. கேளுங்களேன்!” என்றான் கிரிந்த்ரா.
நான் அவனையே முறைத்துப் பார்த்தேன். “வாங்க, அங்கே உக்காந்து பேசலாம்,” என்றான் கிரிந்த்ரா.
என் உடம்பு கல்லாகச் சமைந்துவிட்டது. நான் கூடவே வருவேன் என்ற சர்வ நிச்சயத்துடன் கிரிந்த்ரா முன்னால் நடந்தான். கட்டுப்பட்டவன் போலவே நானும் அவனைப் பின்தொடர்ந்தேன். இன்னும் கொஞ்ச தூரம் போனவன் நின்றான். குப்பைக் கூளங்களுக்கு நடுவில் ஒரு சிமுட்டிப் பலகை இருந்தது. அதில் பலர் உட்கார்வது வழக்கம். நான் அதில் என்றுமே உட்கார்ந்ததில்லை. இன்று அதில் யாரும் உட்கார்ந்து இருக்கவில்லை. அதற்குப் பக்கத்தில் கிரிந்த்ரா நின்றான்.
நான் அதை நோக்கி நடந்தேன். கிரிந்தரா அதில் அவசரமாக உட்கார்ந்துகொண்டான். என்னைப் பார்த்து, “உக்காருங்களேன்” என்றான்.
மதியப் பொழுது கடந்திருந்தது. குளிர்காலம். எல்லா இடமும் காய்ந்து கிடந்தது. புழுதி அப்பியிருந்தது. நான் கிரிந்த்ராவைப் பார்த்தேன். சுருங்கிய தோலுடன் கரடுமுரடாக இருந்தான். அவன் அப்படி இருக்க இருக்கக்கூடாது. பண்ணையார் ஒருவரின் பேரன் அவன். நான் அவனைப் பற்றிப் பல கதைகளைக் கேட்டிருக்கிறேன். தங்கக் காசுகளைப் பார்த்தவன் அவன். அவனுடைய அப்பாவும் தாத்தாவும் கவர்ச்சி நடனமாடும் பெண்களை வேலைக்கு வைத்திருந்தவர்கள். இருந்த அனைத்தையும் அவர்கள் இழந்ததற்கும் அதுதான் காரணம். கிரிந்த்ரா திரிபுராவிலிருந்து வந்தவன். பாரா பஜாரிலிருந்து துணிமணிகளை வாங்கித் திரிபுராவுக்கு அனுப்ப அவன் திட்டமிட்டிருந்தான். அவன் என்னிடம் சொன்ன கணக்கின்படி அது மிக லாபகரமாக இருந்திருக்க வேண்டியது. அவன் விலை மலிவாக வாங்கிய அருமையான புடவைகளைக் கிருஷ்ணாவுக்குக் கொடுப்பது வழக்கம். நாதாரிப் பயல்!
அவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. கிருஷ்ணாவின் கடிதம் கிடைத்தபோதுதான் எனக்கு அதைப் பற்றித் தெரியவந்தது. அதற்குள் கிருஷ்ணா கிரிந்த்ராவுடன் போய்விட்டாள். அலமாரியில் இருந்து பணத்தையும் நகைகளையும் சுத்தமாகத் துடைத்து எடுத்துக்கொண்டுதான்.
கிரிந்த்ரா ஒரு சுரண்டல் மோசடிப் பேர்வழி என்பது கிருஷ்ணாவுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. நான் அவர்களைத் தேடி பாரா பஜாரில் இருக்கும் பீம்ஷங்கர் உதயஷங்கர் கடையில் விசாரித்தபோதுதான், அவன் எப்பேர்பட்டவன் என்பது தெரிந்தது. அவன் அவர்களிடமிருந்தும் பணத்தைச் சுருட்டிக்கொண்டு ஓடியிருந்தான்.
இதற்குள்ளாகவே என் உற்றார் உறவினர்களுக்கு இந்த விஷயம் தெரிந்துவிட்டிருந்தது. மனைவி ஓடிப்போன விஷயம் என் அலுவலகத்தில் இருப்பவர்களின் காதுகளையும் எட்டியிருந்தது. ஒரு நாள், நரஹரி பட்டாச்சார்ஜி சிரித்தபடியே சொன்னான், “அதிஷ்டக்காரனோட பொண்டாட்டி செத்துப் போறா, ஆனால் ஓடுகாலியோட புருஷனுக்கோ விடிவே கிடையாது. ஓடிப்போனவ திரும்ப வந்துட்டான்னா என்ன செய்யிறது, அவன் இன்னொரு கல்யாணமும் செஞ்சுக்க முடியாது.”
என் மனைவியைத் திரும்ப ஒப்படைப்பது பற்றிப் பேசவே கிரிந்த்ரா வந்திருந்தான். அவனுக்கு என் அனுமதி வேண்டியிருந்தது. நான் ஒப்புக்கொண்டால் அவன் கிருஷ்ணாவை என்னிடம் ஒப்படைத்துவிடுவான். குழப்பமான கண்களுடன் அவனை நான் முறைத்துப் பார்த்தேன். அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றான் அவன். ஏழு மாதங்கள் சேர்ந்து இருந்திருக்கின்றனர். அதனால் நான் கிருஷ்ணாவை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தடையும் கிடையாது. என் மனைவியைத் திரும்பக் கொடுப்பதில் கிரிந்த்ரா எந்தத் தேவையில்லாத பிரச்சனையும் செய்யமாட்டான். அவன் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.
“வேறு எதையும் எதிர்பார்க்கலை அப்படீன்னா என்ன அர்த்தம்? இருவத்தஞ்சு சவரன் தங்கத்தையும் நாப்பதாயிரம் ரூபாவையும்தான் எடுத்துகிட்டியே?” என்றேன் அவனிடம்.
என் வார்த்தைகளைக் கேட்டதும் அவன் சொல்ல வந்ததை அப்படியே விழுங்கியபடி, “என்ன சொல்றிங்க? அதையெல்லாம் நான் எடுக்கலை. எடுத்தது உங்க பொண்டாட்டி. நான் எடுத்துகிட்டது உங்க பொண்டாட்டியை மட்டும்தான். இப்போ அவளைத் திரும்பக் குடுத்துடறேன். நான் குடுக்க வேண்டிய மூன்று மாத வாடகை பாக்கி அப்படியே இருக்குதான். அதையும் குடுத்துருவேன். ஆனால் இப்ப இல்லை. அப்புறம்.”
நான் தணிந்த குரலில் கிரிந்த்ராவிடம் சொன்னேன், “போயிரு. திரும்ப இங்க நீ வந்தா செருப்பால அடிப்பேன். எங்கிட்ட கேட்டுகிட்டா கிருஷ்ணாவை இழுத்துட்டுப் போன? இப்ப அவ திரும்பி வர்ரதுக்கு மட்டும் என்கிட்ட அனுமதி கேக்குறியா?”
வெளிறிப்போன முகத்துடன் கிரிந்த்ரா பதில் சொன்னான், “உங்க வீட்டுக்குத் திரும்பிவர கிருஷ்ணாவுக்கு விருப்பமில்லை. கிழிச்ச கோட்டைத் தாண்டாம இருக்கவும் அவளால முடியாது. அதனாலதான் அவ உங்ககிட்ட அனுமதி கேக்கறா. அவளுக்கு நீங்க அனுமதி குடுக்க வேண்டாம். அவளை உங்ககிட்ட திருப்பிக் குடுக்கறேன், உங்க குடும்ப வாழ்க்கையை அவளோட தொடருங்க.”
“குடும்ப வாழ்க்கையா! அவ ஒரு கேடுகெட்ட பொம்பளை.“ நான் கிரிந்த்ராவின் சட்டைக் காலரைப் பிடித்தேன். “அவளை செத்துப் போகச் சொல்லு.”
“அவளை நீங்க தற்கொலைக்குத் தூண்டுறிங்க. அது நல்லதுக்கில்லை. ஏதாவது ஆச்சுன்னா உங்களுக்குத்தான் பிரச்சனை. அவ சாதாரணமான பொம்பளை இல்லை.“
“இங்கேந்து போயிரு!“
சட்டையைச் சரி செய்தபடியே கிரிந்த்ரா சொன்னான், “தொலைஞ்சு போனது திரும்பக் கெடச்சதுக்காக கோவப்படுற ஒருத்தரை இப்போதான் மொத மொதல்ல பாக்கறேன். பாக்கலாம்.”
கிரிந்த்ரா போய்விட்டாலும் அன்றிலிருந்தே ஏதோ ஒன்று என் மண்டையைக் குடைந்தது – கிருஷ்ணாவுக்கு தேவைப்பட்டது எது? அவள் வீடு திரும்ப விரும்பவில்லை என்றுதானே அவன் சொன்னான். இருக்கட்டுமே? சாகட்டும். அவள் செத்துத் தொலையட்டும்.
இன்று அதே நம்பரிலிருந்து மீண்டும் இந்தச் செய்தி. நாள் முழுவதும் வேலை பார்த்தேன். நான் வெளியே வரும்போது இருட்டிவிட்டது. இருளில் அந்தச் சிமுட்டிப் பலகையில் கிரிந்த்ரா உட்கார்ந்திருந்தான். என்னைப் பார்த்ததுமே எழுந்து நின்றான். அருகில் வந்து, “உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டியிருக்குங்க. ரொம்ப முக்கியம். உங்ககிட்ட பேசணும். வாங்க போகலாம்,” என்றான்.
“அப்படி என்ன முக்கியம்னு இங்கேயே சொல்லலாமே.”
“இங்கேயே எல்லாத்தையும் சொல்ல முடியாதுங்க. வாங்க குளத்துப் பக்கம் போயிரலாம். அங்க உக்காந்து பேசுவோம்.” அந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்ததும் நடக்க ஆரம்பித்துவிட்டான். முன்பொரு நாள் செய்ததைப் போலவே நான் அவன் பின்னால் போவேன் என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது. குளக் கரை. இருவருமே உட்கார்ந்தோம். அது ஒரு குளிர்கால மாலைப்பொழுது. வேறு எவருமே பக்கத்தில் இல்லை.
தொண்டையைச் செருமிக்கொண்டு கிரிந்த்ரா ஆரம்பித்தான், “நீங்க கிருஷ்ணாவை இன்னமும் விரும்புறீங்களா? ஆனா, கிருஷ்ணா உங்களை விரும்பலைங்க. அவ என்னையும்கூட விரும்பலை.”
“இதைச் சொல்லத்தான் இங்க வந்தியா?“ என்று மெல்லிய குரலில் கேட்டேன்.
“ஆமாங்க. நான் உங்ககிட்ட சொல்றது எல்லாமே நூத்துக்கு நூறு உண்மை. மனசுக்குள்ள அவள் உங்களை வெறுத்தா. ஏன்னா, நீங்க வேலையில ரொம்ப லஞ்சம் வாங்கினீங்க. கல்யாணத்துக்கு முன்னால அவ அப்படி இருந்தா. கல்யாண ஏற்பாடு நடந்தப்பவும் அப்படித்தான். அப்பத்தான் மாப்பிள்ளைக்கு வேற வருமானம் வருதுன்னு அவளுக்குத் தெரிஞ்சுது. உங்க சம்பளப் பணத்தைத் தொட வேண்டிய அவசியமே இல்லைங்கிறதை உங்க அத்தை புருஷன் கிருஷ்ணாவோட அப்பாகிட்ட சொல்லிட்டாரு. வேற சில பேர்கிட்டயும் இதை அவர் சொல்லி இருக்காரு. அந்த விஷயம் கிருஷ்ணா காதுக்கும் போயிடுச்சு. அதனால் அவளுக்குக் கல்யாணத்துல விருப்பம் இல்லை. ஆனா, வேற வழி இல்லாம ஒத்துக்க வேண்டியதாயிடுச்சு. அவ ரொம்ப மன உளைச்சல்லதான் இருந்தா. அப்பதான் நான் உங்க வீட்டுக்கு வந்தேன்.” கிரிந்த்ரா தன் தலையைத் தாழ்த்திக்கொண்டான்.
“மூணரை வருஷமா இருந்த என் குடும்பம். எங்கிட்டேந்து எல்லாத்தையும் லவட்டிகிட்டுப் போகத்தானே நீ வந்த?”
“எனக்குத் தெரியலங்க. எல்லாத்தையும் இழந்தது யாரு, நீங்களா இல்லை நானா? நான் எப்படி வேலை செய்வேன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். நான் நேர் வழில போறவன் இல்லை. பொய்யும் பித்தலாட்டமும்தான் என்னோட வழி. ஆனா, ஒண்ணை மட்டும் சொல்லுங்க, எப்பப் பாத்தாலும் உங்க பொண்டாட்டி உங்களைப் பாத்து ஏமாத்துறவன், சுரண்டுறவன், பொய்யன் அப்படின்னு பொருமிகிட்டே இருந்தா உங்களுக்கு எப்படி இருக்குங்க? அதுதான் எனக்கு நடந்திச்சு. அவளால என்னை ஏத்துக்க முடியல. இப்போ என்னை எனக்கே புடிக்காத மாதிரி, என்னைப் பத்தி தெரிஞ்சதுமே அவளுக்கும் என்னைப் புடிக்காம போச்சு. ஆனா ஒண்ணு, நான் கிருஷ்ணா விஷயத்தில பொய் சொல்லலை. அவளை உண்மையாவே விரும்புறேன். அப்படி இல்லேன்னா அவளைத் திரும்பிக் குடுக்குறதுக்கு நான் வந்திருக்க மாட்டேன். அன்னிக்கு என் சட்டையைப் பிடிச்சு, அவமானப்படுத்தினீங்க, செருப்பால அடிப்பேன்னு என்னைப் பயமுறுத்தினிங்க. ஆனா பாருங்க, நான் வந்திருக்கேன். நான் ஏன் வந்தேன்?. நான் கிருஷ்ணாவை விரும்புறேன்னாலும், அவ என்னை விரும்பல. அவ தன்னோட தப்பைப் புரிஞ்சுக்கறா. அவ செஞ்ச தப்பை சரி பண்ணனுமாம்.”
“அவ செஞ்ச தப்பை சரி பண்ணப் போறாளா? அதெல்லாம் நடக்குற காரியமே இல்லை. மறுபடியும் அவ எனக்குச் சுமையாதான் இருப்பா. வேணவே வேணாம்!”
“இல்லைங்க. உங்களோடயோ என்னோடயோ சேர்ந்து இருக்குறதை அவ விரும்பல. தானாவே வாழணும்னுதான் அவ விரும்பறா, சுதந்திரமா.”
“அப்டீன்னா?”
“அதத்தான் உங்ககிட்ட சொல்ல வந்தேன். அவ தனியா வாழ்ந்துக்குவா. உனக்கு என்னைப் புடிக்கல. உன்னை உன் புருஷன் கிட்ட கொண்டுபோய் விட்டுர்றேன் வான்னு அவகிட்ட சொன்னேன். ஆனா, உங்ககிட்ட மறுபடியும் போக மாட்டேன்னு அவ ரொம்ப பிடிவாதமா இருந்தா. தனியாவே வாழணும்கிறதுதா அவளோட ஆசை. படிச்சிருக்கிறதுனால அவளுக்கு ஒரு வேலை கிடைச்சிடும். அவ கிட்ட 25 சவரன் நகை இருக்கு. ஏதாவது வியாபாரம் செஞ்சாவது பிழைப்பாளே தவிர உங்களோடயோ இல்லை என்னோடயோ சேர்ந்து வாழவே மாட்டா. பெரிய பிரச்சனைதான் இல்லையா? ‘உனக்கு ஆம்பளைங்களைப் பத்தி சரியாத் தெரியாது. அவங்க குள்ள நரிகளையும் நாய்களையும் விட ரொம்ப மோசமானவங்க. நீ தனியாவே இருந்தா, உன்னை வாழவே விடமாட்டாங்க’ அப்படீன்னு சொல்லிப் பாத்தேன். அந்த வார்த்தையைக் கேட்டப்பல்லாம் அவ சிரிச்சா. ‘இல்லை. எனக்கு எந்த ஆம்பளையும் கெடுதல் செய்யல. யாரும் குள்ள நரியோ நாயோ கிடையாதுன்னு’ பதில் சொல்றா. நான் அவகிட்ட வாதாடிப் பாத்தேன். ‘உங்கப்பா உனக்கு லஞ்சம் வாங்குற ஒருத்தனைக் கட்டி வெச்சாரே. உன் புருஷன் ஒரு ஊழல் பேர்வழி. தப்பான வழில சம்பாதிச்ச பணத்தைத்தான அவர் உங்கிட்ட குடுத்தாரு. நான் மட்டும் யோக்கியமா? நானும் ஏமாத்தி சூதாடுறவன்தானே? நாங்க மூணு ஆம்பளைங்களும் – பஞ்ச பூதத்துல மூணு பூதமும் – உன்னை ஏமாத்திட்டோம்ல?’”
கிரிந்த்ரா பேச்சை நிறுத்தினான். பலமாக மூச்சு வாங்கினான். “அவ என்ன சொல்றான்னா, ‘என்னை யாருமே ஏமாத்தலை. நீங்க எல்லாருமே என்னை விரும்பறிங்க. ஆனா, நான்தான் தப்பு செஞ்சுட்டேன். அதையெல்லாம் சரி பண்ணனும். நான் தனியாவே இருந்துக்கறேன். எனக்கு அப்படி இருக்கத்தான் புடிச்சிருக்கு’ அப்படின்னு சொல்றா. ‘இந்த உலகம் ரொம்பப் பெரிசு. அதுல எப்படி நீ தனியா இருக்க முடியும்?’னு நான் கேட்டேன். ‘உலகம் ரொம்ப பெரிசுங்குறதாலதான் என்னால தனியா இருக்க முடியும்’ன்னு அவள் பதில் சொன்னா. அவளுக்கு அனுமதி குடுக்காதிங்க. சட்டப்படி அவ உங்க பொண்டாட்டி. சட்டம் உங்க பக்கம்தான் இருக்கு. அவளைத் தடுத்து நிறுத்திடுங்க. பொம்பள ஒருத்தி வியாபாரம் பண்ணித் தனியா சொந்தக் கால்ல நின்னுருவா – அப்படில்லாம் விட்டுற முடியுமா. நகையைத் திருடிட்டான்னு ஒரு புகார் குடுங்க. உங்க அலமாரிலதான அவளோட பள்ளிக்கூட, காலேஜ் சான்றிதழ் எல்லாம் இருக்கு. அதையெல்லாம் ஒளிச்சி வச்சிருங்க இல்லேன்னா எரிச்சுருங்க. அவ வேலை செஞ்சு தனியா இருந்துருவா. அப்படி நடந்துரக் கூடாது. அவளோட அப்பாவும் இதைத்தான் சொன்னாரு, நானும் சொல்றேன். நீங்களும் அதையே சொல்லுங்க. அவ பயந்து நடுங்கணும். உங்க காலடிலயே அவ விழுந்து கிடக்கணும். கிழிச்ச கோட்டைத் தாண்ட பொம்பளைங்களை விடக்கூடாது. நம்ப அன்புக்குக் கட்டுப்பட்டே அவங்க வாழணும். இதை அவங்களுக்குப் புரிய வெக்க வேண்டியது நம்ம கையிலதான் இருக்கு.“
நான் கிரிந்த்ராவின் தோளில் கையைப் போட்டுக்கொண்டேன். எனக்கு ஆத்திரமாக வந்தது. “நீ சொல்றது எல்லாம் சரிதான் கிரிந்த்ரா. அவங்க கோட்டைத் தாண்ட விட்டுரக்கூடாது.”
கிரிந்த்ரா புன்னகைத்தான். அவனிடம் ஆசுவாசம் தெரிந்தது. “என்னைக் காப்பாத்திட்டிங்க, ரொம்பவே காப்பாத்திட்டிங்க. உங்களையும் காப்பாத்திகிட்டிங்க. இல்லேன்ன தேவையில்லாம ஒரு கொலைக் குத்தத்துல நீங்களும் மாட்டி இருப்பிங்க.”
“கொலையா! ஏன்?” என்று கேட்டேன்.
“ஆமாம். நீங்க மட்டும் அனுமதி குடுத்திருந்திங்கன்ன கிருஷ்ணா தன் கால்லயே நின்னிருப்பா, நம்ம கண்ணு முன்னாலயே அவ தனியா வாழ்ந்து காட்டியிருப்பா, நீங்க அவளுக்குத் துணை போயிருந்திங்கன்னா, நான் சும்மா இருந்திருக்க மாட்டேன். கத்தியை வச்சு அவ சங்கை அறுத்திருப்பேன். என்னைப் புடிச்சிருப்பாங்க. நான் கிருஷ்ணாவோட காதலன்னு சொல்லியிருப்பேன். அவளோட புருஷன் சொன்னபடிதான் அவளைக் கொலை பண்ணினேன்னும் சொல்லியிருப்பேன். அது போதாதா! கிருஷ்ணாவும் தனியா வாழ்ந்திருக்க முடியாது. நம்ப ரெண்டு பேருமே ஒரே இடத்துல இருந்திருப்போம், ஜெயில்ல! அவளால தனியா இருந்திருக்கவே முடியாது. ஹ்ம்! நீங்க, நான் ரெண்டு பேருமே இன்னிக்குத் தப்பிச்சோம். ஐயா, நான் சொல்றது கேக்குதுங்களா?”